நானும் எழுத்துப் பயணமும் பாகம் 3: உலக சினிமாவும் இளவேனிலும்

ஆறாம் படிவத்தில் பாரதியின் மீதும் கவிஞர் வாலியின் மீதும் ஏற்பட்ட வாசிப்பார்வத்துடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் நண்பர் காளிதாஸ் மூலமாக உலக சினிமாக்கள் குறித்து அறியத் துவங்கினேன். சிறுவயது முதல் நான் சினிமா இரசிகன் என்பதால் எளிதாக சினிமாவின் மீதான ஈர்ப்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தது. அகிரா குரோசோவா தொடங்கி சத்ய ஜித்ரே வரை பல உலக சினிமாக்களைப் பார்க்கத் துவங்கினேன். ஆரம்பத்தில் புரியவில்லை என்றாலும் நண்பர்களுடன் சேர்ந்து உரையாடும்போது அப்படங்கள் பற்றிய புரிதல் விரிவடையவே செய்தது. அப்பொழுது காளிதாஸின் அண்ணன் சு.யுவராஜன் அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அவரும் எங்களுடன் உலக சினிமா குறித்தும் ஜெயமோகனின் தம்பி சிறுகதை குறித்தும் பேசினார்.

நான் முதலில் வாசித்த நவீன சிறுகதையாக ஜெயமோகனின் தம்பி சிறுகதையைக் குறிப்பிடலாம். அப்பொழுது எனக்கு 19 வயதுதான். இரண்டு முறை வாசித்தும் தம்பி சிறுகதையின் அமானுடமும் உளவியலும் சற்றே வாசிப்புச் சவாலை உருவாக்கியது. ஆயினும், நண்பர்களுடனான (வினோத், சுந்தரேஸ், காளிதாஸ்) உரையாடலே அவற்றையும் புரிதலுக்குச் சாத்தியப்படுத்தின. அப்பொழுதுதான் நாம் அறியாத ஒரு திறப்பு ஒரு கதைக்குள் சூசகமாக ஒளிந்திருக்கும் என்றும் அதனைத் தேடி ஒரு வாசகன் கதைக்குள் பயணிக்க வேண்டும் என்கிற புரிதல் ஏற்பட்டது. அதுதான் வாசக இடைவெளி என்பதெல்லாம் அப்பொழுது விளங்கவில்லை; ஆனாலும் ஓர் உந்துதலை உருவாக்கிவிட்டது.

தேடல் விரிவாகிக் கொண்டிருந்த அக்காலக்கட்டத்தில்தான் பலகலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி கழகத்தில் இணையவும் வாய்ப்புக் கிட்டியது. அதுவரை ஆசிரியர் ஆக வேண்டும் என்கிற எந்த முன்முடிவுகளும் இல்லாமல் இருந்த எனக்கு வரும் வாய்ப்பினை மனம் திறந்து ஏற்றுக் கொள்ளவும் தோன்றியது. அதன்படி சுல்தான் அப்துல் அலீம் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் இணைந்தேன். தமிழ் அறிவியல் வகுப்பில் பயில வாய்ப்புக் கிடைத்தது. சேர்ந்த நான்கு மாதத்தில் மலேசிய சபா அரசு பல்கலைக்கழகத்தில் இராசாயணப் பொறியிலாளர் துறையில் படிக்கவும் அழைப்புக் கடிதம் வந்து சேர்ந்தது. எல்லோரும் பல்கலைக்கழகம் செல்லும்படி என்னை வற்புறுத்தினர். ஆனால், சில மாதங்களிலேயே ஆசிரியம் என் மனத்தில் ஒன்றிவிட்டதாக மாறிவிட்டிருந்தது. மேலும், அப்பாவும் அச்சமயத்தில் உடல்நலமில்லாமல் இருந்தார். போய்ப் படி என வாய் சொன்னாலும் என்னைத் தூரம் அனுப்ப மனமில்லாமல் தவித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளத் தீர்மானித்தேன்.

ஒருவேளை அன்று நான் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் இப்பொழுது எழுத்துலகில் இருந்திருப்பேனா என்பது எப்பொழுதும் ஒரு கேள்விக்குறித்தான். ஆக, அப்போதைய எனது முடிவு சரியானதே எனத் தோன்றுகிறது. தமிழோடு பயணம் தீவிரமானது. ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் ஒவ்வொரு பருவத்திலும் இளவேனில் விழாவும் இதழ் வெளியீடும் நடைபெறும். என்னைக் கலைஞனாக மாற்றிய மேடை அது. முதலில் யசோதா அக்கா பாடிய பஜனைக்குத் மிருதங்கம் வாசிக்க மேடை ஏறினேன். ஹரே கிருஷ்ணப் பக்தி இயக்கத்தில் இருந்தபோது மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டதன் விளைவை முதல் பருவத்திலேயே வெளிப்படுத்த முடிந்தது.

அடுத்ததாக, மேடை நாடகத்திற்குள் களம் இறங்கினேன். சுயமாக நகைச்சுவை நாடகங்கள் எழுதி வகுப்பு சார்பில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றம் செய்தேன். என் வகுப்பு நண்பர்கள் (மதனராஜ், ஜெப்ரி, ஈஸ்வரி, சுபா, சுகந்தி, இன்னும் பலர்) அதற்குப் பெரிதும் துணையாக இருந்தார்கள். புராணக் கதைகளின் தெம்பளட்டைப் (Template) பயன்படுத்தி அதனை நவீனப்படுத்தி கதை எழுதி நாடகமாக்குவது போன்ற முயற்சிகளில் இறங்கினேன். எங்கள் வகுப்பு நாடகங்களுக்குப் பாராட்டுகளும் கைத்தட்டல்களும் கிடைத்தன. அதுவொருவிதமான மனநிறைவையும் கலை உணர்வையும் மனத்திற்குள் ஆழப்படுத்தின.

திரு.ப.தமிழ்மாறன் ஐயா

எனது நடிப்பாற்றலைப் பாராட்டி எனது மனத்திற்கு நெருக்கமானவர்தான் விரிவுரைஞர் திரு.ப.தமிழ்மாறன். வகுப்பில் நாங்கள் அரங்கேற்றிய நாடகத்தின் சிறப்புகளைக் கூறிப் பாராட்டுவார். அவரது ஊக்கமான வார்த்தைகள் மிகுந்த பலம் வாய்ந்தவையாகத் தெரிந்தன. அடுத்து, அவர் பாரதியைப் பற்றி மிகவும் ஆழமாகவும் தீராப்பற்றுடனும் பேசக்கூடியவர். எனக்கும் பாரதியின் மீது ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்ததால் அவருடன் இணைவதற்கான ஓர் ஊக்கம் தானாகவே உருவானது. பாரதி கவிதைகளை மீண்டும் நூலகம் சென்று தேடி வாசிக்கத் துவங்கினேன்.

திரு.தமிழ்மாறன் அவர்கள் வகுப்பில் தீவிரமாக நவீன எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைப் பற்றி சிலாகித்துப் பேசுவார். எம்.ஏ இளஞ்செல்வன், சீ.முத்துசாமி, புதுமைப்பித்தன், வண்ணதாசன் எனப் பல நவீன எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கத் தூண்டினார். நானும் நூலகம் சென்று இவர்களைத் தேடி வாசிக்கத் துவங்கினேன். சிறுவயது முதலே எனது வாசிப்பு மாயாஜாலக் கதைகளில் துவங்கி, நயனம் ஷோபியில் வளர்ந்து, பாரதி வாலியை எட்டிப் பிடித்து எனது 21ஆவது வயதில் புதுமைப்பித்தன், வண்ணதாசனை அடைந்து விரியத் துவங்கியது.

அதுவரை மேடைப் படைப்புகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருந்த நான் வாசிப்பின் ஆழத்தால் மெல்ல எழுதத் துவங்கினேன். இளவேனில் இதழ்களுக்குக் கவிதைகள், ஹைக்கூ, எண்ணச்சிதறல்கள் எழுதினேன். அது பிரசுரமானபோது அதைப் பார்த்து மகிழ்ந்தேன். பிறகு நான் எழுதிய முதல் சிறுகதை ‘மஞ்சள் துறவிகள்’ இளைவேனில் இதழ் விழாவில் பரிசுக்குத் தேர்வானது. விரிவுரைஞர் தமிழ்மாறன் அவர்கள் அச்சிறுகதையைப் பாராட்டி உன்னிடம் ஒரு சிறந்த எழுத்து உருவாவதற்கான ஒளித் தெரிகிறது என்றார். அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதன்பின் நம்பிக்கையுடன் எழுதத் துவங்கினேன். இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்பது தெரியாமல் சிறுகதைகள் எழுதி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.

தமிழின் நவீனப் படைப்பாளிகளின் தீவிர வாசகனானேன். நான் பார்த்து வியந்த அகிரா குரோசோவின் சினிமாக்களில் வரும் விசித்திரமான மனிதர்கள் வண்ணநிலவன், வண்ணதாசன் கதைகளிலும் தெரியத் துவங்கினார்கள். வாழ்க்கையை அதுவரை நான் பார்த்த கோணங்களிலிருந்து சற்றே நகரத் துவங்கியிருந்தேன். (ஆண்டு 2004-2005)தொடரும்-கே.பாலமுருகன்

பாகம் 1: http://balamurugan.org/2021/09/07/கட்டுரைத்-தொடர்-நானும்-எ/

பாகம் 2: http://balamurugan.org/2021/09/08/நானும்-என்-எழுத்துப்-பயண/

Share Button

About The Author

Comments are closed.