ஹைக்கூ: கலை வடிவத்தை நோக்கிய ஒரு தொடக்க நிலை

‘ஒரு மொழியின் கவிதை வடிவம் உலகளவில் புகழ் பெறுவது வியப்பிற்குரியது. இப்புகழுக்கு ஒரு காரணம் உண்டு. உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவிற்கு யாரையும் மயக்கக்கூடிய சக்தி உண்டு’

  • டாக்டர் தி.லீலாவதி (ஜப்பானிய ஹைக்கூ, 1987)

தமிழ்க் கவிதை வரலாற்றில் புதுக்கவிதைக்குப் பின்னர் வருகையளித்துத் தமிழ் எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்த இலக்கிய வடிவமாகவே ஹைக்கூ பார்க்கப்படுகிறது. ஜப்பானில் 16ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த ஹைக்கூ வடிவம் தமிழிலும் செல்வாக்கு பெற்று இன்று வரையில் எழுதப்பட்டு வருகிறது. மகாகவி பாரதியாரால் ஹைக்கூ தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு 1980களில் பிரபலமானதாக ஹைக்கூவை விரிவாக ஆராய்ந்த எழுத்தாளர் ந.பச்சைபாலன் குறிப்பிடுகிறார்.

ஹைக்கூ மூன்று சின்னஞ்சிறு அடிகளால் அமைந்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களின் காட்சிகளை அழுத்தமாய், விரிவாய், ஆழமாய் தொட்டு விரிந்து செல்லும் கலை விடிவம் எனலாம். ஒரு சிலர் ஹைக்கூவை தத்துவ வடிவம் என்றும் போற்றுகிறார்கள். ஆனாலும் ஒவ்வொருவரின் இரசனைக்கும் தேடலுக்குமேற்ப ஹைக்கூ மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது. ஜப்பானியக் கவிதைகளில் ‘ரெங்கா’, ‘டங்கா’ போன்ற மரபுக்கவிதைகளின் இறுக்கமான வடிவங்களிலிருந்து விடுப்பட்டு உருவானதுதான் ஹைக்கூ என டாக்டர் லீலாவதி குறிப்பிடுகிறார்.  இந்தக்  குறும்பாட்டிலிருந்து மேலும் இறுகியும் குறுகியும் ஆன வடிவம்தான் ‘ஹைக்கூ’ எனக் கவிஞர் பச்சைபாலன் மேலும் குறிப்பிடுகிறார். 1600-1850 காலப்பகுதியில்தான் ஜப்பானிய கவிதை உலகம் ஹைக்கூவின் உன்னதத்தை முழுமையாகத் தரிசித்தது எனலாம்.

நவீன இலக்கிய சூழலில் சிலர் ஹைக்கூவைக் கொண்டாடியும் வருகிறார்கள். அதே சமயம் ஹைக்கூவைக் கேள்விக்குட்படுத்துபவர்களும் அதன் வடிவத்தன்மையையும் ஆழத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி வருபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கலை, இலக்கியங்களின் இன்னொரு திறப்பு தத்துவம் என்பதோடு உடன்பாடு உள்ளவர்கள் ஹைக்கூவை முக்கியமான இலக்கிய வடிவமாகவே கருதுகிறார்கள். ஹைக்கூ பருவநிலை மாற்றங்களையும் அவை உண்டாக்கும் காட்சிகளையும் தமது பிரதானமான உள்ளடக்கங்களாக எடுத்துக் கொண்டு உருவானது எனலாம். தன் உள்ளத்தில் திடீரென ஒளியேற்றிய ஒரு காட்சியைக் கவிஞன் அப்படியே சித்தரிக்கிறான். தனக்கு உண்டான உணர்வெழுச்சிகளைக் கவிஞன் அதனுள் நுழைப்பதில்லை. ஹைக்கூ இந்த அடிப்படையான புரிதலிலிருந்துதான் பிறக்கிறது.

ஹைக்கூவின் சில பொதுவான இலக்கணங்கள்:

  1. 5,7,5 என்று அசை அமைப்பை உடைய மூன்று அடிகளால் ஆன கவிதை வடிவம்
  2. பெரும்பாலும் பருவங்களின் மாற்றங்களை, அவை மனித மனத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சித்தரிக்கும்
  3. ஜென் தத்துவப் பார்வையைக் கொண்டது
  4. ஹைக்கூ கவிஞன் வாசகனையும் தன்னைப்போல் பக்குவம் உடையவனாக மதித்து தன் உணர்வு அனுபவத்தில் பங்குக்கொள்ளச் செய்கிறான்
  5. ஹைக்கூவின் மொழியமைப்பு தந்தியைப் போன்றது
  6. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் அதன் ஈற்றடியில் உள்ளது; அஃது உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக்கவிதையையும் வெளிச்சப்படுத்தும்
  7. ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச்சொல்லையே பயன்படுத்தும்
  8. ஹைக்கூ கவிதைக்குத் தலைப்பு தேவையில்லை

மேற்கண்ட இலக்கணங்கள் யாவும் ஹைக்கூவைப் பற்றிய முதல் புரிதலை உருவாக்கிக் கொள்ள உதவும்; ஆனால், இவையாவும் மீறப்பட்டும் ஹைக்கூ கவிதைகள் இயற்றப்படுவதன் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜப்பானிய கவிஞர் பாஷோதான் புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞராவார். ஹைக்கூவை முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்த்தவர் சி.மணி ஆவார். நடை என்கிற இதழில் ஹைக்கூ மொழிப்பெயர்ப்புகள் முதன்முதலில் பிரசுரமானது குறிப்பிடத்தக்கதாகும்.

‘இந்த வண்ணக் கிண்ணத்தில்

மலர்களை வைப்போம்

அரிசிதான் இல்லையே

  • பாஷோ

அனுபவப்பூர்வமாக ஹைக்கூவைப் பற்றிய புரிதலை மேம்படுத்த ஒரு ஹைக்கூ போட்டியொன்றும் கடந்த செம்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. முப்பது கவிஞர்கள் அப்போட்டியில் பங்கெடுத்தனர். அவர்களின் ஹைக்கூ படைப்புகளைப் படித்துவிட்டு அதிலிருந்து சில முக்கியமான ஹைக்கூவிற்கான தொடக்க நிலையென ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றை ந.பச்சைபாலன் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்.

ஹைக்கூவைப் பற்றிய ந.பச்சைபாலன் அவர்களின் சில விளக்கங்கள்:

  1. ஹைக்கூ பற்றிய புரிதல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுப்பட்டே வருகின்றது.
  2. ஹைக்கூவில் மிகைப்படக் கூறுதல், உவமை, உருவகம் போன்ற அழகியல்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
  3. ஒரு காட்சியைச் சொற்களில் அசலாக வடித்துக் கொடுக்க வேண்டும் என்பதே ஹைக்கூவின் ஒரு வெளிப்பாடு. அதைச் சுவைப்படக் கூறுகிறேன் என்கிற முயற்சி ஹைக்கூவின் வெளிப்பாட்டுத் தன்மையைப் பாதித்துவிடும்.
  4. ஹைக்கூவில் ஒரு காட்சியின் தரிசனம் என்பது வாசகனுக்குப் பலவகையான பல கோணங்களிலான புரிதலை உருவாக்க வேண்டும்.
  5. போட்டிக்கு வந்த ஹைக்கூ படைப்புகள் பொதுவான ஹைக்கூ விதிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன.
  6. ஹைக்கூவின் புரிதல் விரிவடையும்போது என்னுடைய சில பழைய ஹைக்கூ படைப்புகளையே நான் நீக்க வேண்டியதாகிறது. அத்தகைய கூர்மையான வடிவம் ஹைக்கூ.
  7. படத்திற்கு ஹைக்கூ எழுதுவது என்பது உண்மையில் மிகவும் சிரமமான பணியாகவே தோன்றுகிறது. ஆயினும், அதனை வார்த்தைகளாக வார்த்தெடுக்கக் கவிஞர்கள் முயன்றுள்ளனர். அதற்குப் பாராட்ட வேண்டும்.
  8. போட்டிக்கு வந்த ஹைக்கூ படைப்புகளில் நான்கு மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தன. ஆயினும், அவை யாவும் ஹைக்கூவா என்று கேட்டால் அதற்குப் பதிலளிப்பது சிரமமாக உள்ளது. ஹைக்கூவை நோக்கி முதற்கட்டம் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஹைக்கூவிற்குள் அடங்க மறுக்கின்றன.
  9. இதற்குமுன் முன்மொழியப்பட்ட ஹைக்கூவைப் பற்றிய பொதுவான விதிகளில் சிலவற்றை நாம் கவனத்திற்குட்படுத்த வேண்டும். ( இலக்கணங்கள்: 3-7 வரை)

ஹைக்கூவில் வெளிப்படையாக உணர்வுகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்; படிக்கும் வாசகன்தான் பல்வேறான உணர்வு நிலைகளை எட்ட வேண்டும். ஹைக்கூ கவிஞன் காட்சியை மட்டுமே தன் சொற்களால் கட்டமைக்க வேண்டும். அத்துடன் அவன் வேலை முடிந்துவிட்டது. இனி அக்காட்சி சித்தரிக்கப்பட்டதன் இடைவெளிக்குள் வாசகன் தனக்கான கண்டடைதலைத் தேடிக் கொள்கிறான். ஹைக்கூ இவ்வாறுதான் தனது வாசகர்களைக் கண்டடைந்து கொள்கிறது.

எடுத்துக்காட்டு:

மலர்கள் குவிந்தன

நண்பர்கள் கூடினார்கள்

ஓர் இறுதி ஊர்வலம்.

மேற்கண்ட ஹைக்கூவில் எந்த உருவகமும் உவமையும் உணர்ச்சி கொந்தளிப்புகளும் இல்லை. ஒரு காட்சியை மட்டுமே விட்டுச் செல்கிறது. ஆனால், அக்காட்சியைத் தரிசிக்கும் வாசகன் பல்வேறான உணர்வு நிலைக்குள் ஆளாகின்றான்; பல புரிதல்கள் உண்டாகின்றன. மூன்றாவது வரியைக் கவனிக்கவும். அதில்தான் மொத்த வெளிப்பாட்டுக் கோணங்களும் அடங்கியுள்ளன. ஒரு தத்துவத் திறப்பிற்கு வித்திடும் பகுதியே மூன்றாவது வரி. சிறுகதைக்கு முடிவு முக்கியம் என்பதுபோல் ஹைக்கூவிற்கு மூன்றாவது வரி முக்கியமாகும். முதல் இரு வரிகளைத் தாண்டி மூன்றாவது வரியை எட்டும் வாசகன் அங்குத்தான் ஹைக்கூவிற்கான தரிசனத்தைப் பெறுகிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

எடுத்துக்காட்டு 2:

கொசுக்களுக்கு நன்றி

ஜன்னல் வழியே

எனக்கு முழு நிலா.

  • ந.பச்சைபாலன்

மேலே உள்ள ஹைக்கூவைப் படிக்கும்போது நாம் எதை அடைகிறோம்? கருத்தையோ படிப்பினையோ அல்ல. ஓர் ஏகாந்த அனுபவத்தை அடைகிறோம். மேற்கண்ட காட்சியில் ஒருவன் கொசு தொல்லையால் உறக்கமின்றி விழிக்கிறான். ஜன்னல் வழியாக முழு நிலைவைக் காண்கிறான். இந்தச் சொற்கூட்டம் உணர்த்தும் காட்சி இவ்வளவுதான். ஆனால், இதனை விரிவாக்கிப் பார்க்கும்போது ஓர் அனுபவத்தைத் தொட முடிகிறது. அதைக் கவிஞர் பூடகமாக ‘கொசுக்களுக்கு நன்றி’ எனக் கூறித் தொடங்குகிறார்.

எடுத்துக்காட்டு 3:

உதிர்ந்த இலை

நகருகிறது

தன் நிழலோடு.

  • ராஜகுமாரன்

மேற்கண்ட ஹைக்கூவும் ஒரு சாதாரணக் காட்சியை மட்டுமே சொல்லி செல்கிறது. அதனூடாக ஒரு வாசகன் எட்டும் அனுபவம் விரிவானதாக இருக்கக்கூடும். இங்கு எதும் நிரந்திரமல்ல; அனைத்தும் நம்மோடு பிறந்து நம்மோடு நகர்கின்றன என உணர முடியுமா? அல்லது மரணத்தைச் சுட்டுகிறதா அல்லது அதனையும் தாண்டி விரிகிறதா என வாசகன் மனமும் இக்கவிதையோடு நகரக்கூடும். இத்தகையதொரு அனுபவத்திற்கு நம்மை சுதந்திரமாகத் தள்ளிச் செல்வதே ஹைக்கூவின் நகர்தலிலுள்ள கலை அம்சம்.

ஹைக்கூவை நோக்கி ஒரு தொடக்க நிலைக்காக ஏற்படுத்தப்பட்ட போட்டியில் தேர்வான படைப்புகள்:

புணராத இதயங்களின்

அரவணைப்பில்

திணரும் தலைமுறை

(ஏ.கே ரமேஷ்)

நீ பாதி நான் பாதி

கலந்து பிரிந்தோம்

கலையாமல் பிரிந்தது மகவு

(தேவி ராமசாமி)

ஒரு கரத்தில்

இரு குழந்தையை ஏந்துகிறது

ஆண் மனம்.

(நவீன் கணேசன்)

நம் காதல் இடைவெளியில்

நயந்த முரண்

கரு.

(லோகேந்தினி சுப்ரமணியம்)

மேலே கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ள அனைத்து அலசல்களையும் மீள்வாசிப்புக்குட்படுத்தி தேர்வான ஹைக்கூவிலுள்ள நிறைகளையும் குறைகளையும் கவிஞர்கள் திறந்த மனத்துடன் ஆராய்வுக்குட்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மிகச் சிறந்த ஒரு ஹைக்கூவிற்கு நம்மை தயார் செய்யும் பொருட்டே இந்தப் போட்டி நடத்தப்பட்டது. நடுவர் ந.பச்சைபாலன் அவர்களின் பகிர்தலுக்கும் தேர்வுக்கு நன்றி. அவருடைய கருத்துகளைக் கவிஞர்கள் கவனத்திற்குள்ளாக்க வேண்டும். தேர்வுப் பெறாத படைப்பாளர்களும் தங்களின் ஹைக்கூ அனுபவத்தை மேலும் ஆழப்படுத்திக் கொள்ள இப்போட்டி வாய்ப்பாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.

ஆக்கம்

கே.பாலமுருகன்

(ந.பச்சைபாலன் – கருத்துகளை உட்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை)

மேற்கோள்

ஹைக்கூ அறிமுகம் – டாக்டர் தி.லீலாவதி

ந.பச்சைபாலன் கட்டுரை

Share Button

About The Author

Comments are closed.