சிறுவர் சிறுகதை: மேடை

இன்னும் சற்று நேரத்தில் சபைக்கூடல் தொடங்கப்படவிருந்தது. முரளிக்குச் சபையின் முன்னே பேசுவதெல்லாம் பெரிய சவால் இல்லை. அவனுடைய பேச்சுத் திறமையினாலே தலைமை மாணவன் பொறுப்பு அவனுக்குத்தான் என உறுதியாக நம்பினான். ஆயினும், கடந்த வாரம் சிற்றுண்டியில் முறையாகக் கண்காணிப்பு செய்யவில்லை எனக் கட்டொழுங்கு ஆசிரியரிடம் மாட்டிவிட்ட கலைமதியின் மீது வெறுப்பாக இருந்தான்.

‘என்னயே மாட்டிவிட்டல… இரு… உன்ன என்ன பண்றேன்னு பாரு…’ என மனத்தில் புலம்பிக் கொண்டே மயக்கம் வருவது போல் அப்படியே மேடையின் ஓரத்தில் கவனமாகச் சரிந்தான். உடன் நின்றிருந்த சில மாணவர்களும் வாரப் பொறுப்பாசிரியரும் சட்டென அதிர்ந்து போயினர்.

“முரளி விழுந்துட்டான் டீச்சர்!”

கலைமதிதான் முதலில் பதறிக் கொண்டு வந்தாள். மயக்கமடைந்தது போல நடித்தாலும் கலையின் குரல் அவனுக்குக் கேட்காமலில்லை. இலேசாக மனம் குறுகுறுத்தது அவனுக்கு. இனி ஒன்றும் செய்ய இயலாது. அவன் போட்ட திட்டம் நிறைவேறப் போகிறது. அவன் சபைக்கூடலில் பேச முடியவில்லை என்றால் அவனுக்குப் பதிலாகக் கலைமதியே பேசியாக வேண்டும். அவள் தயாரில்லாமல் தடுமாறி சபையில் அவமானப்படுவதைப் பார்க்கவே முரளி மயங்கிக் கீழே விழுந்தான்.

அவனைத் தூக்கி ஓரமாக அமர வைத்து கோபு ஆசிரியர் தண்ணீர் கொடுத்தார்.

“எப்படி க்ளினிக் கூட்டிட்டுப் போய்டலாமா…?” என்கிற தலைமை ஆசிரியரின் குரல் கேட்டதும்தான் போதும் முரளி கண்களைத் திறந்து முனகியவாறு மயக்கம் தெளிந்துவிட்டதைப் போன்று பாவனை செய்தான்.

“சரி, சாப்டீயா இல்லையா?” எனக் கேட்டுக் கொண்டே ஆசிரியர் கோபு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து கொடுத்தார். கலைமதிதான் பேசுவதென முடிவாகிவிட்டது. சற்றுமுன் அவள் பதறியது மட்டும்தான் முரளியின் மனத்தில் கேட்டுக் கொண்டிருந்தது. தவறு செய்துவிட்டோம் என வருந்தினான்.

கலைமதி கைகளைப் பிசைந்து கொண்டே மேடை ஏறினாள். உடன் எந்தத் தாளும் இல்லை. தயாரிப்பும் இல்லை. 600 மாணவர்கள் மேடையையே கவனித்தனர். அத்தனை கண்களும் கலைமதியின் மீதிருந்தன. இறை வணக்கத்துடன் தொடங்கி பொறுப்பாசிரியர் நன்றி உரை ஆற்றும்வரை ஒரு வழியாகச் சமாளித்துச் சபைக்கூடலை முடித்து வைத்தாள்.

ஆசிரியர்கள் அனைவரும் கலைமதியைப் பாராட்டினர்.

“கலை, நீ இவ்ள நல்லா பேசுவேன்னு நெனைச்சி பார்க்கலமா, அருமை!” குமுதவள்ளி ஆசிரியை அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

பூரிப்புடன் மேடையிலிருந்து இறங்கியதும் முரளியிடம்தான் ஓடி வந்தாள். அவன் இன்னுமும் மயக்கமடைந்த பாவனையிலிருந்து வெளியேற முடியாமல் நடித்துக் கொண்டிருப்பதை அவமானமாகக் கருதினான்.

“டேய், முரளி. இப்ப எப்படி இருக்குடா? ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் பேசிட்டன்டா…”

முரளி அவளுடைய கண்களைப் பார்க்க முடியாமல் தடுமாறினான்.

“ஒன்னும் இல்ல எல்லாம் ஓகே ஆய்டும்டா…” எனத் தேற்றிவிட்டு வகுப்பிற்குச் சென்றுவிட்டாள்.

குற்றம் செய்த மனம் குறுகுறுக்கும் என்பார்கள். மனவேதனையுடன் நாற்காலியைவிட்டு எழுந்து நேரே கட்டொழுங்கு ஆசிரியர் அறைக்கு விரைந்தான்.

நம் பள்ளிக்கு இனி தலைமை மாணவன் வேண்டாம்; அது தலைமை மாணவியாக இருக்கட்டும் எனச் சொல்லிவிட வேண்டுமென்ற துணிச்சல் அவனுக்கு எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை. இவ்வளவு நாள் ஏறிப் பழகிய மேடை இப்பொழுது அவனுக்கு வேறொன்றாகக் காட்சியளித்தது.

– கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.