சிறுகதை: துள்ளல்

“மகமாயி…”

நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கம்போங் பாரு அம்மன் கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது அங்கு வரும் வயதானவர்கள் வீட்டுக்கு வெளியில் போடப்பட்டிருக்கும் மாரியாயி பாட்டியின் பழைய பலகை வாங்கில் வந்தமர்ந்துவிட்டுப் போவார்கள். பாட்டி இறந்த பிறகு அதைத் தூக்கி வீச மனமில்லாமல் அப்பா அப்படியே விட்டுவிட்டார். அதன் ஓரத்தில் இரும்புப் பொருள்களையெல்லாம் குவித்து ஒரு வெள்ளைச் சாக்கில் கட்டி வைத்திருப்பார். கணேசனும் தம்பியும் வாங்கில் ஏறி குதித்துத் தினமும் விளையாடுவார்கள். இரண்டடி உயரத்திலிருந்து குதிப்பதுதான் அவர்களின் உல்லாச விளையாட்டு. மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வாங்கில் படுத்துக் கொண்டே வானத்தைப் பார்த்தவாறு அம்மா வந்து முதுகில் பளாரென அறைந்து எழுப்பிவிடும்வரைக் கணேசன் தூங்கிக் கொண்டிருப்பான்.

“அம்மா, தாயே நீதான் காப்பாத்தணும்…”

பாட்டி கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். வீட்டிலிருந்து கோபுரத்தை நன்றாகப் பார்க்க முடியும். எழுந்து நிமிர்ந்து குடைப்போன்று நிழலைப் பரப்பிக் கொண்டிருக்கும். வயதானவர்கள் கோவிலுக்கு உள்ளே புலம்புவதைக் காட்டிலும் கோவிலை விட்டுச் சிறிது தூரம் வந்ததும் திரும்பிப் பார்த்துச் சத்தமாகப் புலம்புவதைத்தான் கணேசன் அதிகம் கேட்டிருக்கிறான். விட்டு விட்டுக் கேட்கும் அவர்களின் முனகல் கோர்வையில்லாமல் அவன் மனத்தில் கிடந்தன.

“எல்லாத்தயும் மன்னிச்சிரும்மா… எல்லா பாவக்கார கழுதைங்க…”

நெற்றியோரத்தில் திரண்டு வடியக் காத்திருந்த வியர்வைத்துளியை வழித்து முடியோடு தேய்த்துக் கொண்டார். பாட்டி தனித்து ஜொலிப்பதாக உருவகித்துக் கொண்டான். முகத்தை நன்றாக உற்றுப் பார்த்ததும் எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது. கோவிலில் பஜனை பாடும் பாட்டி எனக் கணேசன் சட்டென அறிந்து கொண்டான். கடந்த வருடம் நவராத்திரியின்போது கோவிலில் பார்த்த நினைவு. கணீரென்ற பக்தி ததும்பும் அந்தக் குரலைக் கணேசனால் மறக்க முடியாது. கூட்டத்தின் முன்னே அமர்ந்து சிறிய சாமிப் பாடல் புத்தகத்தை மடியில் கவனமாக வைத்துக் கொண்டு இரு கைகளையும் தட்டியவாறு அவர் பாடிய பாடல் இன்னுமும் அவனுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கோவில் பக்கத்திலேயே வளர்ந்ததால் அவனுக்குச் சாமிப் பாடல்களின் மீது அதீதமான விருப்பம். பஜனை கூட்டத்தைப் பரவசத்துடன் பார்த்து மகிழ்வான். காலையில் மாலையில் பெரிய பூசாரி கோவிந்தன் போடும் பாடல்கள் ஒவ்வொன்றையும் சொல் பிசகாமல் ஒப்புவிப்பான். அதுவும் இராம நவமியில் சுங்கை பட்டாணியிலிருந்து வந்த ஹரே கிருஷ்ண பக்தி இயக்கம் மிருதங்கத்தைக் கொண்டு ஆடிப் பாடி பஜனை செய்ததைக் கண்கொட்டாமல் திகைப்புடன் பார்த்தான். குதித்துக் குதித்து அவர்கள் ஆடியபோது இவன் உடலும் சேர்ந்து குலுங்கியது.

சன்னலின் வழியாக வெளியில் அமர்ந்திருந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தோளில் ஒரு வெளுத்தத் துண்டு அணிந்திருந்தார். மாரியாயி பாட்டி அடிக்கடி கோபப்பட்டுத் திட்டிக் கொண்டிருக்கக்கூடியவர். ஆனால், இந்தப் பாட்டியின் முகம் சாந்தமாய்த் தெரிந்ததில் அவனுக்கொரு ஈர்ப்பு. நெல்லி மரத்திலிருந்து கீச்சிட்டுக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் கிளைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. பாட்டி அவற்றை கவனித்தார்.

“என்னம்மா அம்மாவ கூப்டுறீங்களா?”

யாரோ தெரிந்தவர்களிடம் பேசுவதாக ஒலித்த பாட்டியின் குரல் கணேசனுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. குருவியிடம் யாரும் பேசி அவன் கேட்டதில்லை. மாரியாயி பாட்டி ஒருநாளும் மரத்திற்கு வந்து கீச்சிடும் குருவிகளைப் பொருட்படுத்தியதில்லை. கணேசன்கூட மரத்தில் கல்லெறிந்து குருவிகளைத் துரத்தியிருக்கிறானே தவிர அவைகளிடம் பேசியதில்லை. இப்பொழுது பாட்டியின் நெற்றியில் இருக்கும் திருநீர் அவன் கண்களுக்கு இன்னும் அடர்ந்து தெரிந்தது.

பாட்டி வீட்டின் வாசலிலிருந்து வெளியேறி விருட்டென நடக்கத் துவங்கினார். அசதிக்கு உட்கார்ந்தவர் போல் தெரியவில்லை. உடனே கிடைத்துவிட்ட சுறுசுறுப்புடன் புடவையைச் சற்றே தூக்கிப்பிடித்தவாறு நடந்தார். அவர் புறப்படுவதைக் கணேசனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. யாராவது வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டுப் போகும்போதெல்லாம் அவர்களைக் கணேசன் கவனித்தபடியே இருப்பான். அவர்கள் அங்கிருந்து போகும்போது சற்றுக் கவலைப்படுவான். ஆனால், இந்தப் பாட்டி போகும்போது எதையோ எடுத்துச் செல்வதைப் போன்று உணர்ந்தான். அந்தி வெயில் மீந்திருந்த வெக்கையுடன் ஓய்ந்துபோகத் தயாராகிக் கொண்டிருந்தது. தம்பி உமிழ்நீர் ஒழுக இன்னமும் தரையின் குளிர்ச்சியை அனுபவித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான். அம்மா கடைசி தம்பி படுத்திருந்த ஸ்பிரிங் தொட்டிலை ஆட்டியாட்டி சோர்ந்து வெறுமனே கைவைத்தபடியே தூங்கிப் போயிருந்தார்.

கணேசன் வீட்டிலிருந்து சத்தம் போடாமல் வெளியேறி சற்றும் யோசிக்காமல் பாட்டியைப் பின் தொடர்ந்து நடந்தான். கம்பத்து முனைவரையாவது பாட்டியைப் பின் தொடரலாம் என யோசித்துக் கொண்டே நடந்தான். பாட்டி ஆங்காங்கே இருந்த சகதி தேக்கங்களைக் கவனமாகக் கடந்து சென்றார். ஈரத்தில் தோய்ந்துபோன அவரது சிலிப்பர் சதக் சதக் எனச் சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. கணேசனை விட வேகமாக அவர் நடந்ததை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான். சில இடங்களில் சகதி தெறிக்காமல் இருக்க துள்ளிக் குதித்து விலகி நடந்தார். அதைக் கண்டதும் இவனுக்கும் ஒரு துள்ளல். மாரியாயி பாட்டி இப்படி இருந்ததில்லை. அப்பா அவரைச் சதா திட்டிக் கொண்டே இருப்பதால் வாங்கில் அமர்ந்து கொண்டு அப்பாவைப் பதிலுக்குத் திட்ட முடியாத கோபத்தைக் கணேசனிடமும் தம்பியிடமும் காட்டிக் கொண்டிருப்பார்.

“வாங்குல கால வச்சிங்கன்னா அவ்ளத்தான்…உங்கப்பனோட திமிரு அப்படியே இருக்கு…!”

மாரியாயி பாட்டியின் பஜனை இப்படித்தான் ஆரம்பிக்கும். கேளாங் லாமா தோட்டத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டு வரப்பட்ட வாங்கு அது. கணேசன் அந்த வாங்கில் ஏறாவிட்டாலும் பாட்டி திட்டுவதற்குக் காரணத்தை உருவாக்கிக் கொள்வார். அதுவும் விளையாட வேண்டும் என இருவரும் வீட்டுக்கு வெளியில் வந்தாலே கத்தத் துவங்கிவிடுவார். இவையெல்லாம் அப்பா வரும் வரைத்தான். அப்பா வந்த பின்னர் பாட்டியைச் சபித்துக் கொண்டிருப்பார்.

“வயசானா… கொரங்கு புத்தி வந்துரும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு… இங்க கஞ்சிக்கே வழியில்ல… அடிச்சி தொரத்திருவன்… ஒழுங்கா இருந்துக்கோ…” என அப்பா திட்டும்போதெல்லாம் ஒன்றும் பேச முடியாமல் கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் சாயம் அடிக்கப்பட்ட கோபுரத்தின் வண்ணங்கள் பளிச்சென்று தெரியும்.

முன்னே நடந்து கொண்டிருந்த பாட்டியின் பஜனை குரல் கேட்டது. வழக்கமாக அவர் பாடும் சாமிப் பாடல்களில் ஏதோ ஒன்றனை முணுமுணுத்துக் கொண்டே நடந்தார். இவர் நிச்சயம் சாமி பாட்டியாகத்தான் இருக்க வேண்டும் என உறுதியாக நினைத்துக் கொண்டான். அவனுடைய உரோமங்கள் சிலிர்த்து நிமிர்ந்து நின்றன. சாமியும் பேயும் நம்மைச் சுற்றி இருந்தால் மட்டுமே உரோமங்கள் உயரும் எனக் கணேசன் நினைத்தான். அவரிடம் ஓடிப்போய் முதுகில் ஏறிக் கொள்ள வேண்டும் எனக் கணேசனுக்குத் தோன்றியது. கம்பத்துப் பெரிய பாதைக்கு வந்துவிட்டார்கள். பாட்டியைப் பின் தொடர்ந்து அப்படியே சென்றுவிடலாம் என்று கணேசனுக்கு ஆசை மேலிட்டது. இரவெல்லாம் பெல்ட்டில் அடி வாங்கத் தேவையில்லை. சாப்பாடு போதாமல் கோவில் அன்னதான சாப்பாட்டைக் கேட்டுவரப் போக வேண்டியதில்லை. பாட்டியுடன் கோவில்களுக்குப் பஜனைக்குப் போய்விடலாம் எனக் கணேசனுக்குத் தோன்றி கொண்டிருந்தது. பொங்கல், கச்சானுக்குப் பாவ முகத்தைக் காட்டுவதைக் காட்டிலும் முன்வரிசையில் அமர்ந்து ஜம்மென்று கைகளைத் தட்டிக் கொண்டு பாடலாம். பாட்டியை இன்னும் வேகமாகப் பின் தொடர்ந்தான்.

‘பாட்டி என்னயும் கூட்டிட்டுப் போய்டுங்க…’

இப்படிக் கேட்டால் எந்தப் பாட்டியும் மறுக்கமாட்டார். அதுவும் இவர் சாமி பாட்டி. எப்படிப் பேசலாம்; கெஞ்சலாம் என ஓரிருமுறை சரிப்பார்த்துக் கொண்டான். எங்கிருந்து இந்தத் துணிச்சல் கிடைத்தது என அவனுக்குத் தெரியவில்லை. பாட்டியின் நெற்றி நிறைய இருந்த திருநீரும் அவரது சாந்தமான முகமும் அவனுக்குள் உந்துதலை ஏற்படுத்தியிருந்தன.

இந்நேரம் அம்மா அவனைத் தேடத் துவங்கியிருப்பார் என ஊகித்துக் கொண்டான். அதற்குள் பாட்டி இந்தக் கம்பத்தைவிட்டு வெளியேறி பெரிய சாலைக்குப் போய்விட்டால் அப்படியே அவரைப் பின் தொடர்ந்து போய்விடலாம் என நினைத்தான். சற்றுத் தொலைவு சென்றவுடன் பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டான். இதெல்லாம் அவனது அம்மா கொடுத்த பயிற்சி. வீட்டிற்கு அல்லது கோவிலுக்கு யாராவது வந்தால் அவர்களிடம் கெஞ்சி பணம் கேட்க அனுப்புவார். சில சமயங்களில் பணம் கிடைத்துவிடும். ஐந்து வெள்ளிவரை கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். கிடைக்காத சமயத்தில் அம்மா முதுகில் பளார் என்று வைப்பார். வலியில் நெளிந்தவாறு சுவரில் தேய்த்துக் கொள்வான்.

கம்போங் பாரு மாரியம்மன் கோவிலுக்கு முன்புறம் பெரிய வீடமைப்புத் திட்டங்கள் மெல்ல வளர்ந்துவிட்டன. கோவிலோடு ஒட்டியிருந்த இந்தக் கம்பம் இப்பொழுது கோவிலுக்குப் பின்புற வாசலாகிவிட்டது. முன்புற வாசலில் போய் நின்று கொண்டால் பெரிய கார்களில் வரும் சிலரிடம் பணம் கேட்கலாம் எனக் கணேசனும் தம்பியும் போய் நின்று கொள்வார்கள். கணேசனுக்குச் சில சமயம் காசு கேட்க வெட்கமாக இருக்கும். தம்பியை அழைத்துக் கொண்டு கால் கழுவும் பைப்படிக்குப் பின்னால் ஒளிந்து கொள்வான்.

அப்படியான நாள்களில் வீடு திரும்பும்போது, “வாயிருக்குல… மத்த நேரத்துல தொண்டக்கிழிய கத்தற?” என்று சொல்லி அம்மா வெளுப்பார்.

சாமி பாட்டி இன்னுமும் தனக்கு முன்னே வேகமாக நடந்து செல்வதைக் கணேசன் பார்த்துக் கொண்டான். இனி எல்லோரும் தன்னை மதித்து வழிவிடுவர். உடலெல்லாம் திருநீர் பூசிக் கொண்டு கோவிலில் நிமிர்ந்து வலம் வரலாம். ஒரு துள்ளல் மனத்தில். நினைத்தபடி பாட்டி பெரிய சாலையை நெருங்கிவிட்டார். அதன் பின்னர் ஒரே வளைவுத்தான். கம்பத்துப் பார்வையிலிருந்து முழுவதுமாக விடுப்பட்டுவிடலாம். அவனுக்குக் கால்கள் பரபரத்தன. ஒரு தெய்வம் அவனுக்கு முன்னே சென்று வழிகாட்டுவதாய் நினைத்துக் கொண்டான்.

“அதுவொரு கொடூரமான அரக்கனுங்க நெறைஞ்ச காடு… பக்தன் அதுக்குள்ள மாட்டிக்கிட்டான். கைய தூக்கி சாமிய வேண்டுனான்… காப்பாத்தும்மா தாயேன்னு… அந்தத் தாயும் அவன காப்பாத்த வந்தாங்கலாம்… பக்தன முன்னால நடக்கச் சொல்லிட்டு சாமி பின்னால நடந்து வந்தாங்கலாம்… திரும்பிப் பார்த்தா சாமி சிலையா ஆயிருவேன்னு சொல்லிட்டாங்கலாம்… சலங்க சத்தம் கேக்கறது நிண்டோன பக்தன், சாமி பின்னால வரலைன்னு நினைச்சி சட்டுன்னு திரும்பிப் பார்த்துட்டானாம்… அவ்ளத்தான் சாமி அப்படியே சிலையா ஆயிருச்சாம்…”

கோவில் திருவிழாவில் ஒருமுறை பெரிய பூசாரி பிள்ளைகளிடம் சொன்னதைக் கணேசன் நினைவுக்கூர்ந்து பார்த்தான். இம்முறை சாமி முன்னால் நடந்து சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்தான். ஒருவேளை இவரும் மறைந்துவிட்டால் என்கிற பயமும் கணேசனைத் தொற்றிக் கொண்டது. பாட்டியின் கால்களைக் கவனித்தான். அவை இன்னும் சிலிப்பர் சத்தத்துடன் முன்னகர்ந்து கொண்டிருந்தன.

அப்பா வரும் நேரம். இங்கிருந்து பத்து கிலோ மீட்டரில் இருக்கும் நாகா லீலீட், கூலிம் போன்ற இடங்களில் இரும்புகளைச் சேகரித்துவிட்டுக் கடுமையான வெறுப்புடன் வந்து கொண்டிருப்பார். எங்காவது வெளியில் பார்த்தால் துரத்தி வந்து உதைப்பார். கணேசன் கம்பத்துக்குள் நுழையும் பாதையை உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டே நடந்தான். ஒருவேளை அப்பா வந்துவிட்டால் பக்கத்தில் ஓடும் கால்வாயில் எகிறிக் குதித்துவிடலாம் என்றும் திட்டமிட்டுக் கொண்டான். பத்து தீகா தமிழ்ப்பள்ளிக்கு அப்பால் தெரியும் வானத்தில் சூரியன் மறைவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. மஞ்சள் வெளியில் பகல் சுருங்கியபடி இருந்தது. இரு மருங்கிலும் தெரிந்த கம்பத்து வீடுகளில் பாதிக்குப் பாதி காலியாகி இருந்தன. கதவுகள் திறந்துகிடக்க கொடிகள் ஊர்ந்து சுற்றியிருந்தன.

பாட்டி இன்னும் சத்தமாக அம்மன் பஜனையைப் பாடிக் கொண்டே நடந்தார். அவர் குரல் இப்பொழுது சற்றே நிதானத்திலிருந்து உச்சத்தொனிக்கு மாறிக் கொண்டிருந்தது. கணேசனுக்குக் கால்கள் துடித்தன. பாட்டியுடன் சேர்ந்து அவருக்கு ஒரு பக்தனாகிவிடலாம் என யோசித்துக் கொண்டான். வேட்டியை அணிந்து இடுப்பில் ஒரு வெள்ளைத் துண்டைக் கட்டிக் கொண்டால் அப்படியே கோவிலுக்கு வரும் வாசகி வாத்தியாரின் மகன்கள் மாதிரி காட்சியளிக்கலாம். எச்சிலில் ஊறிப்போயிருந்த சட்டை காலரை எடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டான்.

“அங்கள் ரெண்டு வெள்ளி தர்றீங்களா?” என்கிற வசனத்தை இனி யாரிடமும் கேட்க வாய்ப்பில்லை என ஊகித்துக் கொண்டான். “திருநீரு எடுத்துக்கங்க… இப்பப் பஜன பாட்டி அம்மன் பாட்டுப் பாடப்போறாங்க… எல்லாம் அமைதியா இருங்க…” என்பதை ஒருமுறை சொல்லிப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டான்.

பாட்டி பெரிய சாலையை அடைந்ததும் ஓரமாக நடக்கத் துவங்கினார். சில கார்கள் மட்டும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. இதுவரை பெரிய சாலைக்குக் கணேசன் தனியாக வந்ததில்லை. சில மாதங்களுக்கு முன் அப்பாவுடன் பொருள்களைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் அமர்ந்து இரும்புக் கடைக்குப் போனதுதான் கடைசி. பொருள்கள் குறைவாகக் கிடைத்த நாள்களில் அப்பா கணேசனை பின்சீட்டில் அமர்ந்து கொண்டு இரும்பு மூட்டையை அவன் மடியில் வைத்துப் பிடித்துக் கொள்ள அழைத்துச் செல்வார். சுப்பரமணி பெரிய இரும்புக் கடை பாயா பெசார் முற்சந்தியில் இருக்கும். அந்தக் கடைக்குத்தான் அப்பா இரும்புகளைக் கொண்டு செல்வார். அங்குச் சேரும்வரை மூட்டையின் கணம் அவன் கால் தொடையில் இறங்கி வலியையும் வடுவையும் உருவாக்கிவிடும். வலியைத் தாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்பா கத்திக் கொண்டே வருவார். சைக்கிள் சிறிய மேட்டில் ஏறி இறங்கும்போதெல்லாம் தொடை சதை பிய்ந்துகொண்டு வருவதாக நினைத்து அதிர்ந்து கொள்வான்.

“கெழட்டுப் பையன் மாதிரி யேன் முனகற?”

முடியவில்லை என முகத்தைக் காட்டினால் அப்பா கேட்கும் கேள்விகள் கணேசனின் மனத்தில் முள்ளாய் தைக்கும். வலது கையைப் பற்றி உடலை உலுக்கி “கெழட்டு மாடு” என்று கத்துவார். அப்பா கொடுக்கும் வேலையில் டின்களைக் காலில் நசுக்கிப் போடுவது மட்டும்தான் அவனுக்கு எளிதாக இருக்கும். சுவைப்பான டின்களைக் கீழே வைத்துவிட்டுக் கவனமாக அதன் மீது குதித்துத் தரையோடு நசுக்கி அமிழ்த்துவான். மற்ற சமயத்தில் மூட்டையைத் தூக்கும்போது அவனுக்கு ஏற்படும் தடுமாற்றத்தையும் தள்ளாட்டத்தையும் கண்டு “வயசாச்சா ஒனக்கு? ஒரு மூட்டய நவுத்தி வைக்க முடில…?” என அப்பா கத்துவார். கணேசன் மெலிந்து எலும்போடு ஒட்டிக் கிடக்கும் தன் உடலைப் பார்த்து அதற்கு வயதாகிவிட்டது என நினைத்து வேதனைப்படுவான்.

“யேன்டா நானும் நாளன்னைக்கு மாரியாயி பாட்டி மாதிரி வயசாய்டுவனா?”

கணேசன் தம்பியிடம் இரவெல்லாம் கேட்டு நச்சரிப்பான். என்ன சொல்வதென்று கேள்வியும் புரியாமல் தம்பி தூங்கிவிடுவான். அப்பாவின் வார்த்தைகள் கம்பத்து வாசல்முகடுவரை அவனைத் துரத்தி வந்தன. அதற்குள் பாட்டி விரைந்து நடப்பது தெரிந்தது. பாட்டிக்குக் கூன் இல்லை என்பதைக் கணேசன் கவனித்தான்.

“கூன்விழுந்த பாட்டி குட்ட கால நீட்டி வாயில பொயல கொட்டி ஊர்வம்ப தெரட்டி ஓடவோடத் தொரத்தி சாபம் விடுவா கத்தி…” பாட்டிகளுக்குக் கணேசன் பாடும் பாடல். நான்காம் ஆண்டு வரை பள்ளிக்கூடத்திற்குச் சென்றதால் கற்றுக் கொண்ட பாடல் வரி. மாரியாயி பாட்டி விட்ட சாபங்களையெல்லாம் சிறுக சிறுக கடந்து வந்துவிட்டான். வீடு தொலைவில் உள்ளதாக நினைத்துப் பூரித்தான். காற்று அவனைத் தூக்கி ஊஞ்சலாட்டுவது போல இரு கைகளையும் விரித்து அண்ணாந்து பார்த்தான்.

பாட்டி வேகமாக நடந்து சென்று சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த காரின் பக்கம் போய்க் கொண்டிருந்தார். கணேசன் பாட்டியை விட்டுவிடக்கூடாது என வேகத்தைக் கூட்டினான். பாட்டி அநேகமாக அந்தக் காரில் வந்திருப்பார் என அதனுள் அவர் ஏறுவதற்குள் அவரை அடைந்துவிட எண்ணினான். பாட்டியுடன் காரில் கம்பத்தை விட்டு விரைந்து பறந்திட முடியும் என நம்பினான். சாலையின் ஓரத்தில் இருந்த மண் வெதுவெதுப்பாக இருந்தது. அப்பொழுதுதான் வெறுங்கால்களோடு நடந்து வந்திருப்பதைக் கணேசன் பார்த்தான்.

பாட்டி அதற்குள் காரை நெருங்கிவிட்டார். அடுத்து ஓடலாம் எனக் கணேசன் முடிவெடுத்தான். அதற்குள் காரிலிருந்து இறங்கிய தடித்த உருவம் கொண்ட ஒருவன் பாட்டியிடம் கை நீட்டி அதட்டுவது போல பேசிக் கொண்டிருந்தான். ஆள்காட்டி விரலை அசைத்து மிரட்டினான். அவனுடைய கண்களில் கோபமும் எரிச்சலும் கொப்பளித்துப் போயிருந்தன. பாட்டி பயந்து குறுகினார். காரின் கதவைத் திறந்துவிட்டுப் பாட்டியின் பின்மண்டையைத் தட்டினான்.

அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை. பாட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பயந்தபடியே காருக்குள் ஏறினார். அவர் வாய் மட்டும் எதையோ முணுமுணுப்பதை நிறுத்தவில்லை. கார் சட்டென்று அங்கிருந்து புறப்பட்டது. வெயில் முழுவதும் அடங்கி இருளத் துவங்கியது. கடைசி தம்பி எழுந்து அழுவான் என்கிற நினைவு சட்டென எட்டியதும் கணேசன் திரும்பி வீட்டை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினான்.

-கே.பாலமுருகன்

(2015-இல் எழுதிய சிறுகதை)

Share Button

About The Author

Comments are closed.