கிளாஸ்டர் ஷீனா (Cluster Shina) (கோவிட் தொடர்க்கதைகள் ஒரு விசாரணை)

கற்பனையும் உண்மையும் கலந்த தொடர்

பாகம் 1

ஷீனா வெகுநேரம் சத்துன் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருந்தாள். அன்று பேருந்து சேவைகள் இரத்து என்று அவளுக்குத் தெரியும். பத்தாயா மூடுந்து ஒன்று வரும் என்று ஏஜேண்டு சொல்லிவிட்டான். வெயில் வானை எரித்து உருக்கிவிட்டப் பின் மிச்சமாய் சத்துன் நகரத்தின் அமைதியின் மீது ஒழுகிக் கொண்டிருந்தது. முகக்கவரி முகத்தின் பாதி அடையாளத்தை மறைத்திருந்தது அவளுக்கு வசதியாக இருந்தது. அவளுடைய உறவினர்கள் யாரும் அவளை அடையாளம் கண்டுவிட்டால் சிக்கல் பெரிதாகிவிடும் என அவளுக்குப் பயமும் உடனிருந்தது.  அனுராக் முகத்தை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்று ஆவலாய் காத்திருந்தாள். அனுராக் சொங்க்லாக்கிலிருந்து வரவழைக்கப்பட்டால் மட்டுமே ஷீனா அலோர் ஸ்டார் செல்ல ஒப்புக் கொண்டிருந்தாள்.

“Khuṇ t̂xngkār thī̀ ca xyū̀ rxd?” லமோன் கடந்த சனிக்கிழமை சத்துன் மார்க்கேட்டில் வைத்து ஷீனாவிடம் கத்தினான். அவளுக்குப் பலமுறை வேலைக்கு வழிப் பார்த்தும் அவள் பதில் சொல்லாமல் நாள்களைக் கடத்தியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏஜேண்டு பெயர் லமோன் ஆனால், டேவிட் என்றுத்தான் வெளியில் அழைப்பார்கள். மாறுவேடத்தில் திரிந்து கொண்டிருந்தான். இங்கிருந்து மலேசியாவிற்குப் பணிப்பெண்கள், தொழிற்சாலை கூலி, போதை பொட்டலம் மடிப்பது போன்ற வேலைகளுக்கு சட்டவிரோதமாக ஆள் அனுப்பும் வேலை அவனுக்கு.

“Khuṇ t̂xngkār ngān h̄ı̂ lūkchāy k̄hxng khuṇ…” அவள் எங்கு மாட்டிக் கொள்வாள் என்று ஷீனாவிற்கும் லமோனுக்கும் நன்றாகவே தெரியும். மகனைக் காட்டி அவன் அச்சுறுத்தினான். கருவாடுகளின் மீது மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களை விரட்டிவிட்டு நெற்றிவரை இறங்கிவிட்டிருந்த ஷங்காய் தொப்பியைக் கீழே இறக்கி அலோர் ஸ்டார் செல்ல ஒப்புக் கொண்டாள். ஆனால், அனுராக்கை ஒருமுறை பார்க்க அனுமதி வேண்டும் என்று கறாராகவே தெரிவித்துவிட்டாள். அலோர் ஸ்டார் போனால் எப்படியும் திரும்பி வர இரண்டு வருடங்கள் ஆகலாம். ஏற்கனவே மகனைப் பிரிந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.

அனுராக் வந்திறங்கும் நேரம் அவனில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். லமோனின் தூரத்து உறவுக்காரர் வீட்டில் அனுராக் வளர்கிறான். ஏற்கனவே அவரின் வீட்டில் இப்படி ஷீனா போன்ற பெண்களின் குழந்தைகள் ஐவர் உள்ளனர். பணத்தாசை பிடித்த தன் உறவுக்காரர்கள் மத்தியில் வளர்வதைக் காட்டிலும் அவ்வீடு அனுராக்கிற்குப் பாதுகாப்பானது. ஷீனா கடந்தமுறை லமோன் மூலம் பினாங்கில் நான்காண்டுகள் வேலை செய்ததால் அதற்கு நன்றி கடனாய் லமோன் செய்த கைமாறுத்தான் அனுராக் இப்பொழுது வாழும் சூழல். அதனால்தான் என்னவோ லமோன் வேலைக்குப் போகச் சொன்னால் அவளால் அதனை மறுக்கவியலவில்லை.

சொன்னதைப் போல அந்த வெள்ளை மூடுந்து சத்துன் பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. சுற்றிலும் கருப்புக் கண்ணாடியால் சூழப்பட்ட மூடுந்து. உள்ளே யார் இருக்கிறார்கள் என்று கணிக்க இயலாமல் மறைந்திருந்தது. கண்ணாடியைத் திறந்து லமோன் கைக்காட்டியதும் அவளுக்கு உயிரே வந்ததைப் போல இருந்தது. சத்துன் சிறுநகர் ஆள் நடமாட்டமே இல்லாமல் ஓய்ந்திருந்தது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தளர்த்தப்பட்டிருந்தாலும் உள்நாட்டுக் காவல்ப்படை முக்ககவரி இன்றி வெளியே திரிபவர்களையும் காரணமின்றி வெளியே சுற்றுபவர்களையும் கைது செய்து கொண்டுதான் இருந்தது.

ஷீனா மூடுந்திற்குள் ஓடி ஏறி உள்ளே இன்னும் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருந்த அனுராக்கைக் கட்டியணைத்துக் கொண்டாள். அம்மாவின் சூட்டை மாதங்கள் கடந்து உணரும் அனுராக் விம்மினான். அத்துனைச் சாதூர்யமாய் அழத்தெரியாத வயது. அதுபோன்ற அழுகையின் முன் மனமே உடைந்து சிதைந்துவிடுவது போல ஆகிவிடும். மூடுந்தின் ஓட்டுனர் புதிய முகம். தெரியாதவர்களின் முன் அழுவது ஷீனாவிற்குச் சங்கடத்தை உருவாக்கும். கண்ணீரைக் கண்களுக்குள்ளே இறுகப் பிடித்துக் கொண்டாள்.

சத்துனிலிருந்து கோலா பெர்லிஸ் வாயிலாகச் செல்லப் படகு தயாராக இருந்தது. லமோன் கனவுந்தில் அல்லது இப்படிப் படகில் ஆள்கடத்தல் செய்வதில் தேர்ந்தவன். அதற்கென்று பிரத்தியேக வழிகளும் ஆள்களும் இருந்தனர். நேரமாகிவிட்டதை லமோன் செய்கையில் அவளிடம் வெளிப்படுத்தினான். அதற்குள் அங்கொரு பழைய ஃபோர்ட் மகிழுந்து வந்து நின்றது. ஷீனா அனுராக்கை முத்த மழையில் நனைத்துவிட்டுக் கீழே இறங்கினாள். அவள் இறங்கி மூடுந்து கதவை அடைக்கும்வரை கலங்கிய கண்களுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சத்துனிலிருந்து விரைவு படகு கிளம்பியது. பெரிய படகு என்பதால் கீழே இன்னொரு தளத்திற்கு இறக்கப்பட்டாள். உடன் மேலும் இரண்டு பெண்கள் இருந்தார்கள். எல்லோரின் முகத்திலும் வறுமை மிச்சமாய் வடிந்து கொண்டிருந்தது. கண்கள் வீங்கியிருந்தன. எத்தனை நாள்கள் உறங்காத கண்கள் என யூகிக்க முடியவில்லை. அதுவும் கோவிட் பெருந்தொற்றில் வேலையிழந்தவர்களின் நிலையைப் பற்றி ஷீனாவிற்கு நன்றாகவே தெரியும். அவளும் மார்க்கேட்டில் கிடைத்த வேலைகளைச் செய்து சமாளித்து வந்தாள். ஷிராயா மட்டும் இல்லையென்றால் அந்த வேலையும் இல்லாமல் கடைசியாக டங்னோட் சென்றிருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும். ஏனோ ஷிராயாயைக் கடவுள்தான் அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

படக்கோட்டி ஒருவன் நல்ல வாட்டச்சாட்டமான உருவம். கீழே இருந்த நீல நிறத் தோம்புகள் அடுக்கப்பட்டிருந்த இடத்திற்குக் கொண்டு சென்றான். ஒரு தோம்பைத் திறந்து உள்ளே உட்காரச் சொன்னான். ஓர் ஆள் மட்டுமே உள்ளே நுழையும் சிறிய இடைவெளி. எப்படியும் கடந்த முறை கனவுந்தின் கீழே உள்ள பெட்டியில் அடைப்பட்டு இரண்டு மணி நேரம் தவித்தத் தவிப்புகளைவிட இது அத்தனை கொடூரமானதாக இருக்க வாய்ப்பில்லை என்று அவளால் ஊகித்து சமாதானம் அடைய முடிந்தது. மற்ற இரு பெண்களும் சற்றுக் கலவரமடைந்ததைப் போல பார்த்தார்கள். எதிரில் நின்றிருந்தவன் சற்றுக் கடுமையாகவே அவர்களை வழிநடத்தினான். ஷீனாவைப் பிடித்து உள்ளே செல்ல இழுத்தான். அவள் தடுமாறிக் கொண்டே அந்த நீல நிறத் தோம்பில் உட்கார்ந்ததும் உள்ளே சிறிய ஓட்டை இருப்பது தெரிந்தது. சற்றே இருளான இடம். சுவாசித்துப் பார்த்தாள். காற்று அவ்வோட்டையிலிருந்து வருவதை அவளால் உணர முடிந்தது. மனம் நிம்மதியடைந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். தலைக்கு மேல் கௌச்சி வாடை பெருகி வீசிக் கொண்டிருக்கும் மீன்களைக் கட்டி வைத்திருக்கும் நெகிழிப் பைகளை வைத்தான். அதிலிருந்து தண்ணீர் ஒழுகி ஷீனாவின் தலையை நனைத்தது. கைகள் இரண்டையும் மார்போடு அணைத்து மூடிக் கொண்டதால் தாடையை அதற்கிடையில் முட்டுக் கொடுத்து வைக்க வசதியாக இருந்தது. விரைவு படகு என்பதால் சீக்கிரமே போய்விடுவார்கள் என்கிற நம்பிக்கையும் இருந்தது.

படகு முடுக்கப்பட்டு மெல்ல நகரத் துவங்கியது. தோம்புகள் ஆடிக் குலுங்கினாலும் விழாதப்படிக்கு இரும்பு சங்கிலியால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. ஓர் இருளுக்குள் சற்றும் விரும்பாத சிறிய இடைவெளிக்குள் ஷீனா அமர்ந்திருந்தாள். தேசத்தை விட்டுப் படகு மெல்ல தூரம் சென்று கொண்டிருந்தது. அதைவிட தன் அன்பு மகன் அனுராக்கின் இரண்டு வருடங்களின் வளர்ச்சியை இனி காணவே முடியாத ஒரு தூரத்தை நோக்கி ஷீனா நகர்ந்து கொண்டிருந்தாள்.

ஆபத்து என்றால் அவர்கள் தூக்கிக் கடலில் வீசிவிடுவார்கள் என்பது ஷீனாவிற்குத் தெரியும். இது ஈவிரமற்ற தொழில். வேறு வழியில்லை. அப்படியேதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்று உயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே தூங்கியவளின் நினைவு தலையிலிருந்து நெகிழிப் பைகள் அகற்றப்பட்டதும் மீண்டும் திரும்பியது. அதிர்ந்து மிரட்சியான கண்களுடன் தோம்புக்கு வெளியில் நிற்கும் உருவத்தைப் பார்த்தாள். சட்டென பிடிப்படவில்லை. அந்த உருவம் அவளைப் பிடித்துத் தன் முரட்டுக் கைகளால் தூக்கியது. சட்டென நிதானிக்க இயலவில்லை. படகு நின்றும் அசைந்து கொண்டிருப்பதைப் போல தோன்றியது, தடுமாறி நடந்தவளைப் பின்னால் வந்த ஒரு பெண் பிடித்துக் கொண்டாள்.

அவர்கள் வந்திறங்கிய இடம் கோலா பெர்லிஸில் உள்ள ஒரு மீனவக் கிராமம். அங்கிருந்து காய்க்கறிகளை ஏற்றிச் செல்லும் கனவுந்தின் பின்புறம் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். ஷீனா காய்க்கறிக் கூடைகளுக்கு நடுவில் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு கம்பிகளின் இடுக்கில் தெரியும் கம்பத்தைப் பார்த்தாள். அங்கிருந்து கிளம்பி பழைய பாதையில் கனவுந்து அலோர் ஸ்டார் சென்றது. கெடாவில் கோவிட் தொற்றால் அலோர் ஸ்டார் நகரைப் பொது முடக்கம் செய்து அப்பொழுதுதான் விடுவித்திருந்தார்கள். ஆகையால், சாலை கெடுப்பிடிகள் அவ்வளவாக இருக்காது என்று ஓரளவிற்குக் கணிக்கப்பட்டிருந்தது.

அலோர் ஸ்டார் நகரைக் கனவுந்து கடந்து கொண்டிருந்தது. ஷீனா அப்பொழுதுதான் இனிய காற்றைச் சுவாசிக்க முடிந்ததைப் போல நிம்மதி பெருமூச்சை விட்டாள். கனவுந்து ஒரு லோரோங்கில் கனவுந்தை நிறுத்தியதும் ஷீனாவும் உடன் இருந்த இரண்டு பெண்களும் கீழே இறங்கினார்கள். மற்றுமொரு கருப்பு மகிழுந்து அங்கே அவர்களுக்காக காத்திருந்தது. உள்ளே ஏறி உட்கார்ந்ததும் கையில் உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார்கள். அப்பொழுதுதான் அவளுக்குப் பசியின் ஞாபகமே வந்தது. சட்டென பிரித்துச் சாப்பிடத் துவங்கினாள். மகிழுந்து அடுத்து எங்கோ புறப்படத் தயாரானது.

அன்று மாலை சத்துன் மார்க்கேட்டில் வேலை செய்த ஷிராயாவை மருத்துவப் பணியாளர்கள் பிடித்துச் செல்லும்போது ஷீனா தான் வேலை செய்ய வேண்டிய இடத்தை வந்தடைந்திருந்தாள். சத்துன் மார்க்கேட்டில் பலருக்கும் கோவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பட்டியலில் ஷீனாவின் பெயரும் இருந்தது.

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

7 Responses so far.

  1. Divashiniie jayabalan says:

    Nice

  2. Divashiniie jayabalan says:

    nice story

  3. Saanthi says:

    Super sir

  4. காந்தி முருகன் says:

    தோல்வியுற்ற ஓர் அரசாங்கத்தின் ஆட்சி நிலையைத் தான் இக்கதை படம் பிடித்துள்ளது.சட்டவிரோதமாக ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து அடுத்த நாட்டில் பிழைப்பைத் தேடும் அவலம் சர்வசாதரணமாக ஒன்றாகிவிட்டது. உள்நாட்டு பூசல்களும், அரசியல் சிக்கல்களும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் அடிமட்ட பிரச்சனையாகி விடுகிறது.தாய்லாந்து போன்ற நாடுகளில் பாமரனின் வாழ்க்கைச் சிக்கல் சட்டவிரோதமாக செயல்பட வைக்கிறது. தான் ஒரு கோறனி நச்சில் பெருந்தொற்று என்பதை உணர்ந்தும், வேலை இழப்பு, நன்றிக் கடன், அனுராக்கின் எதிர்கால வாழ்வு என பல்வேறு கோணங்களுக்கீக ஷீனா சட்டவிரோத செயலுக்குத் துணைபோவது கண்டிக்கத்தக்க ஒன்றே.அரசாங்கத்தின் சிறந்த ஆட்சியமைப்பு அடிமட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தில்தான் உள்ளது.வறுமைக் கோட்டில் வாழ்பவர்களின் நிலை சில தரப்பினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கோறனி நச்சில் பெருந்தொற்றை உலக நாடுகள் கையாளுவதில் இன்னமும் தோல்வி நிலைதான்.தாய்மையுணர்வாய் துவங்கிய கதையில் உலக சிக்கல்களையும் கலைய முற்பட்ட ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.