மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 6

மெலாந்தி வீடு

(குறிப்பு: இத்தொடர்க்கதை ஒவ்வொரு பாகத்திலும் முன்னும் பின்னும் நகர்கிறது)

மெலாந்தி வீட்டில் சரவணனும் குச்சிமிட்டாயும் இருக்கிறார்கள்

  

பாகம் 6

“என்ன பாங்! அப்படிப் பாக்குறீங்க? எனக்குப் பயமா இருக்கு…”

மெலாந்தி பள்ளத்தாக்கு ஒரு பசியுடன் காத்திருந்தது. காற்று ஓலமிட்டவாறே பாறை இடுக்குகளிலிருந்து எக்கிப் பார்த்துக் கொண்டிருந்த செடிகொடிகளை உராய்ந்துகொண்டே மேலெழுந்து ஒரு கிசுகிசுப்புடன் மறைந்து கொண்டிருந்தது.

“இந்தப் பிரிட்டிஷ் வீடு உனக்கு ரொம்ப பிடிக்கும்தானே குச்சி? ரொம்ப ஜோக்கா மாத்தி அமைச்சிருக்க?”

குச்சிமிட்டாயின் கண்கள் நிதானமற்று அல்லாடின. ஒருவித பதற்றம் அவனது உடல் முழுவதும் வியாபித்துக் கொண்டிருந்தது. அவனுக்கும் தனாவிற்கும் மட்டுமே தெரிந்த ஓர் இரகசியத்தைச் சரவணன் மிக இயல்பாகக் கூறிக் கொண்டிருந்தான்.

“குச்சி! காத்து எவ்ள இரம்மியா வீசிக்கிட்டு இருக்கு…? அதுக்கு எந்தக் கவலையும் இல்ல. நல்லவங்க கெட்டவங்க சாமியாருங்க… கொலைக்காரனுங்க உன்ன மாதிரி அயோக்கியனுங்க இப்படி யாரையும் பிரிச்சி பார்க்காம அது பாட்டுக்கு எல்லாத்தயும் வாழ வச்சிக்கிட்டு இருக்கு…”

குச்சி முன்வாசல் கதவைப் பார்த்தான். பூட்டியிருந்தது. சாவி முன்னே இருந்த மேசையின் விளிம்பில் தெரிந்தது. எழுந்து ஓடினாலும் எப்படியும் சாவியை எடுக்கும்போது சரவணன் தாக்கத் துவங்கிவிடுவான் என்பதைக் குச்சிமிட்டாய் மனத்திற்குள்ளே அசைப்போட்டுக் கொண்டிருந்தான்.

“குச்சி! நீ எப்படித் தப்பிக்கலாம்னு யோசிக்கற. நீ எழுந்து கதவுகிட்ட ஓட ஆரம்பிச்ச ரெண்டாவது வினாடியில உன் முதுகு பொளக்கும். இல்ல என்ன தள்ளிவிட்டுட்டு இந்தச் சன்னல் வழியா நீ குதிக்கறதுனாலும் ஜன்னல் மேல ஏறும்போதே கால் ரெண்டையும் அறுத்துருவன். அதனால…நான் சாவற வரைக்கும் இருந்துட்டு அப்புறம் போ…”

குச்சிமிட்டாய் அதிர்ச்சியில் உறைந்து அப்படியே சுவரில் முழுவதுமாகத் தன் முதுகை ஒப்படைத்தான். அதற்குமேல் சிந்திக்கவும் அவனிடம் தெம்பில்லை. கண்கள் சுருங்கிக் கொண்டிருந்தன. பார்வைக்குள் சரவணன் மெல்ல மறைந்து இப்பொழுது சுப்பம்மா அங்கு நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி ஓர் இருள்.

சட்டென கழுகொன்றின் தலையாக அவள் உருமாறுகிறாள். தன் கைகளை உயர்த்தி அதனைக் கொத்தி கொத்தி தின்கிறாள்.

“குச்சி! என்ன வெரட்டி அடிச்சல… ஒரு லோரிக்காரன நம்பி கேல்க்குப் போனன். அவன் என்ன சின்னம்பின்னமா ஆக்கிட்டான் குச்சி. யாரு யாருக்கோ… வாயால சொல்ல முடில குச்சி. வச்சி வாழ வழியில்லன்னா எதுக்கு என்ன கல்யாணம் பண்ண குச்சி? நீலாம் ஒரு ஆம்பளையா…?”

“அடியே! சுப்பு… எங்கடி போன… தவிச்சிப் போய்ட்டண்டி… நீ இல்லாம… எங்கலாம் தேடனன் தெரியுமா?”

மீண்டும் சுப்பம்மா வீட்டு வாசலிலிருந்து ஓடத் துவங்கினாள்.

“குச்சி! நீ நல்லாருப்படா. நல்லாரு. காசையும் பீயரையும் சாப்ட்டு நல்லாரு…”

குச்சி எழுந்து அவளைத் துரத்தினான். இருண்டிருந்த சாலையில் அவள் எங்குப் போய் மறைந்தாள் என்று அவனுக்குப் புலப்படவில்லை.

“சுப்பு! வந்துரு… எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும் போல…”

மெலாந்தி அத்தாஸ் கம்பத்துப் பாதையில் திக்கற்று நின்றிருந்தான் குச்சிமிட்டாய். மங்கிய மஞ்சள் வெளிச்சத்தைக் கக்கிக் கொண்டிருந்த வளைந்த சாலை விளக்கைத் தவிர கம்பத்துப் பாதை வெறிச்சோடியிருந்தது.

எதிரே மோட்டாரில் வந்து கொண்டிருந்த கிருஷ்ணமணி குச்சிமிட்டாய் நிற்கும் கோலத்தைக் கண்டு அரண்டு சட்டென நின்றான்.

“என்ன குச்சி இந்த நேரத்துல இங்க?”

“இது… சுப்பம்மா வந்தாடா. பாத்தீயா? எங்க ஓடனான்னு தெரில…”

கிருஷ்ணமணி குச்சிமிட்டாயைச் சற்றுப் பயத்துடன் பார்த்தவாறே மோட்டாரை மீண்டும் முடுக்கினான்.

“நீ குடிச்சிருக்கியா? வீட்டுக்குப் போ குச்சி…”

குச்சிமிட்டாய் அவன் பின்னே மோட்டாரில் ஏறிக் கொண்டு குழப்பத்துடன் வீட்டினருகே இறங்கிக் கொண்டான். வீட்டுக் கதவு திறந்தே கிடந்தது. உள்நுழைந்து “சுப்பம்மா!” என்று அழைத்துப் பார்த்தான். வெளிச்சம் குறைவாக இருந்த வீடு அவனுடைய அழைப்பை உள்ளிழுத்துக் கொண்டு அமைதியுடன் இருந்தது.

“வீட்டுல எதுமே இல்ல…”

முனகிக் கொண்டே திறந்திருந்த பீயரை எடுத்து ஒரு குவளையில் ஊற்றிவிட்டுச் சுவரோரம் அமர்ந்தான். மீண்டும் சுப்பம்மாவின் உருவம் வீட்டிற்கு வெளியில் தெரிகிறது. ஆச்சரியத்துடன் எக்கிப் பார்க்கிறான். வெறும் இருள். வீட்டிற்கு வெளியே உள்ள கம்பத்து இறக்கத்தில் யாரோ இறங்கிப் போய்க்கொண்டிருப்பதும் தூரமாகத் தெரிந்தது.

“குச்சி! குச்சி! தூங்கிட்டியா?”

சுவரோரம் அமர்ந்து கொண்டே கண்களைத் திறந்து பார்த்தான். சரவணன் சிவப்பாகியிருந்த கண்களுடன் எதிரே நின்றிருந்தான்.

“பாங்! என்ன மன்னிச்சிருங்க பாங்… நான் செஞ்சதெல்லாம் பாவம்தான்…”

குச்சிமிட்டாய் சட்டென சரவணனின் கால்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கதறினான்.

“டேய்! குச்சி. என்னா குடிச்சிட்டு வந்துருக்கியா? சாப்பாடு கொடுத்துட்டு விழுந்திட்ட? எவ்ள நேரம் எழுப்புறது?”

குச்சிமிட்டாய் எழுந்து நிதானிக்க முயன்றான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இரண்டு முறை தலையின் வலதுபக்கம் தட்டிக் கொண்டான்.

“பாங்! நீங்க சாகப் போறீங்கன்னு…”

“டேய்! வாயக் கழுவுடா. என்ன கெட்ட கனவா? பீரு வேணுமா?”

குச்சிமிட்டாய் சரவணனையே உற்றுக் கவனித்தான். சரவணன் சாப்பிட்டு வைத்திருந்த தட்டுகள் மேசையில் அப்படியே இருந்தன. சன்னல் திறந்திருந்து காற்று கவனமாக உள்நுழைந்து வீசிக் கொண்டிருந்தது.

“பாங்! இப்ப நீங்க என்ன கொல்றேன்னு சொன்னீங்க?”

சரவணன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கழிவறைக்குள் நுழைந்தான். குச்சிமிட்டாய்க்கு எதையுமே சுதாரித்துக் கொள்ள இயலவில்லை,

முன்கதவைத் திறந்து குச்சிமிட்டாய் அரக்கப்பரக்க வெளியேறும்போது அதே சிறுமி வெளிவரந்தாவில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தாள்.

  • தொடரும்

ஆக்கம்: கே.பாலமுருகன் 

(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)

பாகம் 1-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/

பாகம் 2-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/

பாகம் 3-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/

பாகம் 4-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/

பாகம் 5-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/

Share Button

About The Author

4 Responses so far.

  1. ஈஸ்வரி குணசேகரன் says:

    அடுத்த தொடர்?

  2. ஈஸ்வரி குணசேகரன் says:

    Really nice sir

  3. Punitha says:

    Arumai sir.
    Waiting for next episod sir..

  4. Nirmala says:

    Very nice