மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 5

சரவணன் மெலாந்தி பள்ளத்தாக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன். தனசேகரைச் சந்தித்துவிட்டு குச்சிமிட்டாய் தன் மெலாந்தி அத்தாஸ் கம்பத்திற்குள் வருகிறான்.

பாகம் 5

ஆர்.சீ மோட்டாரை வீட்டிற்குப் பக்கத்திலுள்ள தனது வைப்பறையில் வைத்துவிட்டுக் குச்சிமிட்டாய் உள்ளே நுழைந்தான். வீடு இருண்டிருந்தது. வரவேற்பறையில் ஒரேயொரு ரோத்தான் நாற்காலி, ஒரு பழைய தொலைக்காட்சி பெட்டி, காலி பியர் போத்தல்கள், ஒரு தலையணை அதுவும் மெலிந்து இளைத்துவிட்ட நிலையில் பழுப்பேறியிருந்தது.

கொசுவத்தி எரிந்து பாதியிலேயே நின்றிருந்தது. குச்சிமிட்டாய் எப்பொழுதும் வீட்டைச் சுத்தம் செய்ய நினைப்பதில்லை. வீடு சுத்தப்படுத்துவதற்கும் பெரியதாக பொருள்களும் இல்லை. சிகரெட் துண்டுகள் பெருக்கப்படாமல் ஆங்காங்கே ஒருவித வீச்சத்துடன் விழுந்து கிடந்தன.

இன்னும் இரண்டு வாரங்களில் சமைக்கத் தேவையான பொருள்களை வாங்கி வைக்க வேண்டும். கையில் இருந்த ஆறாயிரம் அவனை நடனமாட வைத்தது. சமையலறையிலிருந்த வானொலியில் யேசுதாஸ் பாடலை ஒலிக்கவிட்டுக் கொண்டே மிக மோசமான ஒரு நடனத்தை ஆடத் துவங்கினான். அத்தனைக்கும் அப்பாடல் ஆடுவதற்குரியதல்ல; இருப்பினும் பணம் அவனை ஆட வைத்துக் கொண்டிருந்தது.

ஏழாண்டுகளுக்கு முன் மெலாந்தி அத்தாஸ் கம்பத்திலேயே இரும்பு கடை வைத்திருந்த குமாரைய்யா மகள் சுப்பம்மாவைத் திருமணம் செய்து கொண்டான். கம்பத்தில் வரும்போதும் போகும்போதும் சுப்பம்மாவின் மீது குச்சிமிட்டாய்க்கு ஒரு தனி ஈடுபாடும் இருந்தது. சாடை பார்வையில் அவளுடன் பேசுவதுண்டு. குச்சிமிட்டாயை விட அவளுக்கு ஐந்து வயது மூப்பு. சாதியிலேயே மாப்பிள்ளை பார்த்துச் சரிவராமல் திருமண வயதைத் தாண்டி நின்ற சுப்பம்மாவை அதற்குமேல் வைத்துக்கொள்ள குமாரைய்யாவின் மனம் ஒவ்வவில்லை.

மெலாந்தி அத்தாஸில் சாதிவெறியன் என்று ஒருவன் ஆகக் கடைசியாக இருந்தான் என்றால் அது குமாரைய்யாத்தான். அவனும் தன் மகளைக் குச்சிமிட்டாய்க்குத் திருமணம் செய்து வைத்தப் பின் சாதி புராணங்களை விட்டு விலகினான்.

“என்னடா சாதி? கடைசி காலத்துல நம்மள தூக்கிப் போடும்போது ஒன்னும் நிலைக்காது. நாளு மனசாளுங்கள சேர்த்துக்கோ. அவ்வளவுத்தான்!”

தன் கொள்கைகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் சாதி உணர்வே அற்ற சாதாரண ஆள்களிடம் தத்துவம் பேசி நாள்களைக் கடத்திக் கொண்டிருந்துவிட்டு மறுவருடமே மாரடைப்பில் இறந்துபோனான். சுப்பம்மாவிற்கு இருந்த ஒரே சொந்தம். அதன் பின் குச்சிமிட்டாய் மட்டுமே சகல சொந்தம் என்று வாழ்ந்தாள்.

இரவில் குடித்துவிட்டு வந்து சுப்பம்மாவை அடித்து வீட்டைவிட்டு நான்குமுறை குச்சிமிட்டாய் துரத்தியடித்தான். மெலாந்தி மலைக்குப் போகும் பெரிய சாலையில் இருக்கும் டத்தோ கோவிலிடம் நின்றுவிட்டு இரவெல்லாம் அழுது தீர்ப்பாள். அதிகாலை ஐந்து மணிக்குப் போதை தெளிந்ததும் விழுந்தடித்துக் கொண்டு அவளைத் தேடி வருவான் குச்சிமிட்டாய்.

“இப்ப ஏதுக்கு வந்த? எனக்குக் கொல்லிப் போடவா?” என்று வாய் கிழிய கத்துவது மட்டுமே அவள் காட்டும் அதிகப்படியான வெறுப்பு. குச்சிமிட்டாய்க்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் அடங்கி வீட்டிற்குப் போய்விடுவாள். இதைக் குச்சிமிட்டாய் சாதகமாகப் பயன்படுத்தி அன்று அவளையும் பியர் அருந்த வற்புறுத்தி துன்புறுத்தினான்.

அன்றோடு வீட்டை விட்டு வெளியே ஓடியவள்தான். இன்றுவரை அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. மெலாந்தி காடு, மலை என்று தேடியலைந்து பித்துப் பிடித்துப் போனான் குச்சிமிட்டாய்.

காசில்லாமல் பலநாள் பசியைப் பொறுக்க முடியாமல் அன்று மெலாந்தி பெரிய சாலையினோரம் மயங்கிக் கிடந்த குச்சிமிட்டாயைத் தூக்கி குணமாக்கி காப்பாற்றியவன்தான் தனசேகர். யாருமில்லாமல் தனிமையில் இருந்த குச்சிமிட்டாய்த்தான் தனசேகரின் ஆள்கடத்தல் தொழிலுக்கு ஏற்ற ஒருவன் என்று தனசேகர் முடிவு செய்திருந்தான்.

“குச்சி! உனக்கு மறுஜென்மம் கொடுத்துருக்கன்னு வைச்சுக்கயன். உனக்குக் குடிக்கக் காசு, சாப்பாடு, கைல கொஞ்சம் காசு… கொடுத்தா எனக்கு வேலை செய்வீயா?”

“தனா! நீ என் அண்ணன் மாதிரி. சொல்லு என்ன வேணும்னாலும் செய்றன். எனக்குனு ஒருத்தி இருந்தா அவளையும் பாதுகாத்துக்க தெரியாம விட்டுட்டேன். இனி ஒன்னும் இல்ல. நீ சொல்லு…”

குச்சிமிட்டாய் சம்மதித்ததும் தனசேகருக்கு மெலாந்தி மலை சாதகமான இடமாகத் தெரிந்தது.

“குச்சி! எனக்குப் பெரிய பெரிய கேங் மண்டைங்ககூட தொடர்பு இருக்கு. எல்லாம் கட்டி பிசினஸ்தான். ஆனா, உன்கிட்ட கட்டி கொடுத்து விக்கச் சொல்ல மாட்டன். பயப்படாத. நம்மாளுங்க யாராச்சும் போலிஸ்ல மாட்டற மாதிரி இருந்துச்சின்னா பெரிய பப்பாங்க லின்க்ல வருவாங்க. யாருன்னு சொல்லிருவாங்க. நான் அவங்கள ஆள் கடத்தல் செஞ்சி கொஞ்ச நாளைக்கு வச்சிருப்பன்…”

“அடேயப்பா! இது பெரிய பிசினாஸல இருக்கு தனா?”

“ஆமாம், குச்சி. இது பெரிய லின்க். ஆயிரம் கணக்குல காசு. பெரிய தல சொல்ற வரைக்கும் அவுங்க கட்டி லின்க்ல உள்ளவங்கள கடத்தி பத்திரமா வச்சுருக்கணும். அப்புறம் அவுங்க சொற்ல நேரத்துல கொண்டு போய் சொல்ற இடத்துல விட்டுறணும். அவ்ளத்தான் நம்ம வேல… வர்றவன் யாரு அவன் ஊரு… இதெல்லாம் தெரியாது. வருவான்… நம்ம பாத்துக்கணும். அவன் நம்மக்கிட்ட இருக்காணு ஈ காக்காக்குக்கூட தெரியக்கூடாது…”

குச்சிமிட்டாய்க்கு இப்பொறுப்பு தன்னிடம் விடப்படுவது குறித்துப் பெரும் மகிழ்ச்சி. இருண்டு கிடந்த தன் தனித்த வாழ்க்கைக்குள் ஓர் ஒளி படர்வதை உணர்ந்தான்.

“குச்சி! உடனே இங்க யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி ஒரு வீடு வேணும். மெலாந்தி மலைக்கு மேல ஒரு பழைய மேனஜர் வீடு இருக்கே… அதை எஸ்டேட்டுல பேசி வாங்கலாம்னு கேட்டுட்டன். இன்னும் ஒரு நாளுல எடுத்துரலாம். நீ மேல வீட்டை ரெடி பண்ணிரு…”

“அந்த வீடா? அதுல… பேய் வீடுன்னுல சொல்றாங்க?”

“குச்சி! நம்ம வாழ்க்கைல நம்மத்தான் பேய். புரியுதா? வேற பேய்லாம் வராது. நான் பத்து வருசமா லோரி ஓட்டறவன். லோரி மட்டும் ஓட்டல. ஓகேவா… அந்த மேனஜர் வீடு பிரிட்டிஷ் காலத்து வீடு… இருபது வருசமா யாருமே இல்ல. ஆனா, நெறைய கட்டுக்கதைகள்தான் இருக்கு. இந்தா இதுல ஐயாயிரம் இருக்கு. வீட்டைச் சுத்தம் பண்ண, அப்புறம் உனக்கு. சரியா?”

இன்றும் அதை நினைக்கையில் குச்சிமிட்டாய்க்குப் பேரின்பமாக இருக்கிறது. அலமாரியின் அடியில் சேர்த்து வைத்திருந்த பல்லாயிரக் கணக்கான பணத்தோடு சேர்த்து இப்பொழுது கிடைத்த பணத்திலிருந்து இரண்டாயிரத்தை எடுத்து உள்ளே வைத்துவிட்டு ஒரு வெண்சுருட்டைப் பற்ற வைத்தான்.

மெலாந்தி அத்தாஸ் கம்பம் இருளில் குளிர்ந்து கொண்டிருந்தது. வீட்டு வாசலில் ஒரு பெண்ணின் உருவம். குச்சிமிட்டாய் உற்றுக் கவனித்தான்; ஏழு வருடங்களுக்கு முன் காணாமல்போன சுப்பம்மா நின்றிருந்தாள்.

  • தொடரும்

 ஆக்கம்: கே.பாலமுருகன்

 

குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்.

பாகம் 1-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/

பாகம் 2-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/

பாகம் 3-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/

பாகம் 4-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/

 

Share Button

About The Author

2 Responses so far.

  1. Nirmala says:

    Very eager to read it

  2. Santhi Gopalakrishnan says:

    Very interesting story.