சிறுகதை: ஆதியில் ஒரு மரமும் இருந்தது

 

காந்தம்மாள் வீட்டுக்கு எதிரே தெரியும் எரிந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். முதலிலிருந்து வயிற்றை குடைந்து கொண்டிருக்கும் பசியையும் அவர் பொருட்படுத்தவில்லை. கடந்த மழைக்காலத்தில் மின்னல் தாக்கி எதுவுமே மிஞ்சாமல் வெறும் கருத்தத் தண்டுடன் காட்சியளித்த மரத்தின் கிளை நுனியில் வந்தமர்ந்த சிட்டுக்குருவி ஒன்று தலையை எல்லாத் திசைகளுக்கும் திருப்பிக் கொண்டிருந்தது. வலுவில்லாத மரப்பட்டை ஒன்று சிட்டுக்குருவியின் காலசைவின் வலிமை தாளாமல் சட்டென்று கீழே சரிந்து விழுந்தது.

“மா… சொல்றத சொல்லிட்டன். இனிமேல நீ இங்க இருந்தன்னா உனக்கு மரியாதை இல்ல. சுந்தர் உன் பக்கம் நிக்க மாட்டான். பொண்டாட்டின்னு வந்துட்டா… அப்புறம் நீ நடுரோட்டுலத்தான் நிக்கணும், சொல்லிட்டன்…”

வீட்டுக்கு  வெளியில் நிலவியிருந்த எப்பொழுதாவது மட்டுமே காந்தம்மாளுக்குக் கிடைக்கும் கொஞ்சம் அமைதியும் அவளுடைய மூத்த மகள் சரசினால் பறிப்போனது. கோபத்துடன் அவள் காலில் அணிய எடுத்துதறிய சப்பாத்து சற்றுத் தூரம் தள்ளிப் போய் விழுந்தது. அது கவனக்குறைவு அல்ல; கவன் ஈர்ப்பிற்காக விழுந்திருக்கலாம் என்று காந்தம்மாளுக்குத் தெரியும். அவருடைய பார்வை எரிந்த மரத்தின் விளிம்பில் இன்னமும் நுனியை உராய்ந்து கொண்டிருந்த சிட்டுக்குருவியின் கால்களின் மீதே இருந்தன.

“அடுத்த தடவ உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டன்மா. இதுக்கப்பறம் நீயாச்சு உன் மகனாச்சு மருமகளாச்சு… ஒரு நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு நீதான சொல்லுவ…”

எழுபத்து ஐந்து வயது காந்தம்மாளுக்கு அவர் இதுவரை வாழ்வில் செலவலித்த வார்த்தைகள் பற்றி எதுமே ஞாபகத்தில் இல்லை. பேசத் துவங்கினால் ‘உளறு வாய்’ என்றோ ‘மறதி கேஸ்’ என்றோ  மருமகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ கேலி செய்வார்கள் என்று காந்தம்மாளுக்குத் தெரியும்.

“அவருக்கு எவ்ள நல்ல மனசுன்னு தெரியுமா? உங்கம்மா வந்தா நான் பாத்துக்கறன்னு எந்த மருமகனாவது சொல்லுவாங்களா? நான் எதுக்குமா ச்சீ படணும் இங்க வந்து… இனிமே உன் இஸ்டம்…”

காந்தம்மாளின் மூத்த மகள் அதற்கு மேல் பொறுமை இல்லாதவளைப் போல தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டுமென்ற பிடிவாதத்துடன் குரலை உயர்த்தியே பேசிக் கொண்டிருந்தாள். அவள் சீண்டுவது தன்னையல்ல உள்ளே இருக்கும் மருமகள் சீதனாவை என்று ஒருவேளை காந்தம்மாளுக்குத் தெரிந்திருக்கலாம். கொஞ்சமும் அசராமல் தொடர்ந்து எரிந்த மரத்தின் மீது விழும் அடங்காத வெயிலை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் மேலும் இரண்டு சிட்டுக்குருவிகள் ஏற்கனவே மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த குருவியின் அருகாமைக்கு வந்து சேர்ந்தன. சீனியர் குருவி அப்பொழுதுதான் வந்து சேர்ந்த குருவியிடம் அதன் ஆணவத்தைக் காட்டுவது போன்று எரிந்த மரக்கிளையை ஒருமுறை கொத்திக் காட்டியது.

“ஆமாம்… இவுங்க வீட்டுல உங்கள தங்கத் தட்டுல வச்சு தாங்குவாங்க. போறதுன்னா அங்கய போய்ருங்க அத்த… எங்களுக்கு எதுக்குக் கெட்டப் பேரு…” நேற்றிரவில் அணிந்திருந்த நைட்டியை இன்னமும் மாற்றாமல் தலையில் போட்டிருந்த குண்டு கொண்டையுடன் வெளியில் வந்தாள் சீதனா.

“பேசுவீங்க… என் தம்பி வீட்டுல இல்லாதப்ப இங்க என்ன கூத்து நடக்குதுன்னு எங்களுக்கும் தெரியும்…”

“ஓ! ஏன் அத்த… எல்லாத்தையும் ‘கோல்’ போட்டு சொல்லிருவீங்களோ? இங்க என்ன அப்படிக் கொடுமை பண்றம் உங்கள?”

சட்டென்று அங்கிருந்து மூன்று குருவிகளும் பறந்துவிட எரிந்த மரக்கிளை இலேசாக அதிர்ந்தது. அதன் அசைவு அடங்க சில வினாடிகள் பிடித்தன. காந்தம்மாளின் பெரிய பொழுதுபோக்கே இந்த மரம்தான். இதற்கு முன் அடர்ந்து விரிந்து கிளைகளைப் பரப்பி நின்றிருக்கும் அதன் தோற்றத்திற்குள் மேலும் பல அர்த்தங்கள் கிடைப்பதாகவே தோன்றும். எங்கிருந்து இந்த மின்னல் வந்திருக்கும் என்று வானத்தைக் கோபத்துடன் பார்த்தார்.

“நியாயத்த கேளுங்க… அவுங்களுக்கு நிம்மதி இருக்கானு கேளுங்க… வாய்க்கிழிய பேசறீங்கள… எங்கம்மாவ என்கூட அனுப்பி வைக்க வேண்டியதுதான? என் தம்பிக்குத்தான் எதையுமே கேக்க வக்கில்ல…” மூத்த மகளுக்கே உள்ள வீரியமான குரலில் சரசு வெடித்தாள். அவளுடைய ஆவேசம் மூச்சிரைப்பில் கேட்டிருக்கலாம். சீதனா சற்று அமைதியானவளாய் குரல் தொனியை இறக்கினாள்.

“வேணும்னா கூட்டிட்டுப் போங்க… எங்களுக்கென்ன…? அவர ஒரு வார்த்தை கேட்டுட்டுக் கூட்டிட்டுப் போங்க. அதுக்காக நாங்க பெரிய கொடுமைக்காரவங்க மாதிரி பேசாதீங்க… அவங்கக்கிட்ட கேளுங்க இங்க என்ன குறைன்னு…”

“என்ன குறையா? உங்க பிள்ளைங்களுக்கு அவங்க செய்யாததா? பிள்ளைங்க போறதை எல்லாத்தையும்  அவுங்கத்தான அள்ளிப் போடறாங்க? வயசானவங்க… கொஞ்சம் ஓய்வு கொடுக்கறதுக்கு என்ன? அவங்களே கேட்பாங்கன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கீங்களா? வயசானவங்க எவ்ள கஷ்டப்பட்டாலும் அத வாய் தொறந்து சொல்ல மாட்டாங்க…”

சற்று நேரம் பதிலேதும் இல்லாமல் வெளிவரந்தா அமைதிக்குள் ஆழ்ந்தது. காந்தம்மாள் எரிந்த மரத்தின் மீதான தன் கவனத்தைக் கொஞ்சமும் நகர்த்தவில்லை; அல்லது யாருமே எந்தச் சலனமும் அதைக் களைக்கவும் முடியவில்லை.

“எங்க அம்மா இந்தக் குடும்பத்துல இருக்கற கடைசி பெரியவங்க… அவுங்களுக்கு ஒரு மரியாதை இருக்கு… நான் வரும்போது அம்மா இல்லாமல் வரமாட்டன்னு அவர்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்துருக்கன். நான் கூட்டிட்டுப் போறன்… அப்புறம் என் தம்பிய அவருக்கு அடிச்சி பேச சொல்லிக்குங்க…” என்று சரசு கூறிமுடித்துவிட்டு அம்மாவைப் பார்த்தாள்.

காந்தம்மாள் மரத்தின் காலுக்கடியில் முறிந்து விழுந்துகிடக்கும் ஆதி கிளையைக் கண்ணுற்றார். மரம் செழிப்பாக இருந்தபோது மிகவும் நேர்த்தியுடன் மரத்திற்கே பெரும் அழகுடன் இருந்த தடித்த கிளை அது. எப்படியும் நான்கைந்து குருவிக்கூடுகளைத் தாங்கியிருந்த கிளை. மரம் எரிந்தபோது அநேகமாக முதலில் விழுந்த கிளையும் அதுதான். விழுந்து பல நாள்கள் ஆகியிருக்கலாம் போல. பாதி உடல் இத்து மண்ணில் கரைந்திருந்தன. வெளுத்தக் கைலியுடன் தொங்கிப் போயிருந்த காந்தம்மாளின் கண்கள் அம்முறிந்த கிளையில் நிலைக்குத்தி நின்றன.

“எங்கம்மாவுக்கு யாரும் இல்லைன்னு மட்டும் நினைச்சிராதீங்க…கேக்கறதுக்கும் பேசறதுக்கும் மூத்த மக நான் இருக்கன்…ம்மா எழுந்துரு… துணிமணிலாம் எடுத்து வை… கெளம்பலாம்… இனி ஒருத்தன் பேச்சைக்கூட நான் கேக்கத் தயாரா இல்ல…”

சரசு அமைதியில் உறைந்திருந்த அம்மாவின் தோள்பட்டையை உலுக்கினாள். காந்தம்மாள் அதிர்ச்சியுடன் சரசைப் பார்த்துவிட்டு எழுந்தார். ஏதும் பேசாமல் வீட்டினுள்ளே நுழைந்து தன் துவைத்த துணிகளை எடுத்துப் பையில் வைக்கத் துவங்கினார்.

“ம்மா… எந்தத் துணியும் மிச்ச வைக்காத. இனிமேல் இங்க வர்றதைப் பத்தி நான் யோசிக்கணும்…”

சீதனா கொஞ்சம் பதற்றமாகி கைப்பேசியைத் தேடினாள். அந்நேரம் பார்த்து அதை எங்கு வைத்தாள் என்று ஞாபகப்படுத்த முடியாமல் காந்தம்மாள் கிளம்புவதையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். சீதனாவிற்குச் சரசைவிட சரசின் பேச்சின் மீது கொஞ்சம் கிளி பிடித்துக் கொண்டது. சரசு இவ்வளவுக்கு அதிகாரத்துடன் பேசி சீதனா கேட்டதில்லை என்பதால் ஏற்பட்ட பயத்தால் கொஞ்சம் ஸ்தம்பித்துவிட்டாள்.

“ம்மா… கெளம்பிட்டீயா?”

துணிப் பையுடன் வெளியே வந்த காந்தம்மாள்ளின் முகத்தில் சற்றும் சலனமில்லை. எதையோ இழந்து கொண்டிருக்கிறோம் என்கிற அளவில்கூட அவருடைய முகத்தில் துளியும் மாற்றமில்லை; பிசகலுமில்லை. இவையாவும் தான் திட்டமிட்டதைப் போன்று நடக்கிறது என்பதைப் போல எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்து கொண்டிருந்தார்.

இருவரும் வெளியில் வரும்போது சீதனாவின் மகன் அழும் குரல் தூரத்தில் கேட்டது. அவன் கடைசி அறையில் தூக்கத்திலிருந்து விழித்திருப்பான் போல. சீதனா அவனைத் தூக்குவதற்காக ஓடினாள்.

“வாம்மா போலாம்… உன் பேரனைக் கொண்டு வந்து சீன் போட்டு உன்னை இங்கயே இருக்க வச்சாலும் வைப்பா… நீ கெளம்பு…”

காந்தம்மாள் சரசின் வாகனத்தில் ஏறும் முன் அந்த எரிந்த மரத்தைப் பார்த்தாள். எரிவதற்கு முன்னும் பின்னும் எவ்வித மாற்றமுமில்லாத அதே சலனமற்றநிலையுடன் பொறுமையாக அசைந்து கொண்டிருந்தது. சரசு அம்மாவை நேராக வீட்டிற்கே கொண்டு சென்றாள். அடுக்குமாடி வீடு. ஆறாவது மாடிக்கு மின்தூக்கியில் ஏறி வீட்டை அடைந்தார்கள்.

“ம்மா… அவரு ராத்திரித்தான் வருவாரு. உன்னோட ரூம்பு அந்தச் சாமி ரூம்புத்தான். எதுத்தாப்புல படுத்துக்கலாம். நல்லா வசதியாத்தான் இருக்கும். நீ போய் குளிச்சிட்டுக் கொஞ்சம் சமைச்சிரு. எனக்கு வலது கைல பயங்கர வலி…” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தாள் சரசு.

அங்கிருந்து இனி பார்த்துக்கொள்ள ஏதேனும் மரம் இருக்கலாம் என்று காந்தம்மாள் சன்னலைப் பார்த்து மௌனித்தார்.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.