இரண்டு விதைகளின் வரலாறு

எரிந்த மண்ணில்
தகிக்கும் வெய்யிலில்
இரண்டு விதைகள்
புதைக்கப்பட்டன.
இருள் சூழ்ந்து சூடு தாளாமல்
இறுகக் கவ்விப் பிடித்திருக்கும்
காலச்சுமையில் நெளிந்து புரண்டு
முட்டிமோதிப் போராடியக் களைப்பில்
இரண்டு விதைகளும்
இருவிதமான முடிவுகளுக்கு
வந்தன.
முதல் விதை
எப்படியும் வெளிச்சத்தைக் காணத்
துடியாய் இருக்க
மற்றுமொரு விதை
இருளுக்குள்ளே சோம்பிக் கிடக்க
ஆயாசமாய் மண்ணில் தலைச்சாய்த்துப்
படுத்துறங்கியது.
முதல் விதை
பூமியை எக்கிப் பார்த்ததும்
மிதிப்பட்டது.
மீண்டும் எழுகையில்
மீண்டும் மிதிப்பட்டது.
வெளிச்சத்தை நுகரும் வெறியில்
விடாமல் மீண்டும் தலைத் தூக்கியது.
அடுத்த முறையும் பாதியாகக்
கத்தரிக்கப்பட்டது.
மீண்டும் மண்ணுக்குள் புதைந்தபோது
மற்றொரு விதை
உள்ளேயே இருந்திருக்கலாமே என்று
எகத்தாளமாய் சிரித்தது.
முதல் விதை
தன்னுடைய கடமை
மண்ணிலிருந்து துளிர்த்தெழுவது என்று
மீண்டும் முயற்சித்து எழுந்தது.
மழையால் அலைக்கழிக்கப்பட்டது;
காற்றால் வேரதிர அசைக்கப்பட்டது.
பிடிவாதமாய் நின்று வளர்ந்தது.
மண்ணுள்ளே புதையுண்ட விதை
மெல்ல சக்தியை இழந்து
நகர முடியாமல்
இருள்பிடித்த மிச்சமாய்
புழுக்கள் தின்ன
குற்றுயிராய் தவித்துக் கொண்டிருக்க
சட்டென சில விதைகள் மண்ணுக்குள்
விழுந்தன.
திடீரென ஒரு வேர்
மண்ணைச் சூழ்ந்து கொண்டது.
மண்ணை மட்டும்
புசித்து வாழ்ந்து
வயதொடிந்த விதை
அந்த விதைகளை எங்கோ
பார்த்திருப்பதாக நினைத்தது.
கடைசியாக ஒருமுறை
மண்ணைவிட்டு வெளியாகி
பூமியைப் பார்க்க ஆசைப்பட
விதையை யாரோ தோண்டி
வெளியே வீசினார்கள்.
இங்கிருந்து சிரமப்பட்டு
மண்ணைப் பிளந்து சென்ற
விதை….
மரமாகி
உரமாகி
ஆயிரமாயிரம் விதைகளைத் தூவி
எரிந்து சாம்பலாகியிருந்த நிலத்தை
பூக்களும் பழங்களும் செழிப்பும்
நிறைந்த தோட்டமாக்கியிருந்தது.
மரங்களுக்கு நடுவே
தலை நிமிர்ந்து
கிளை விரித்து
தோட்டத்துக்கே நிழலாக
ஒய்யாரமாய் நின்று கொண்டிருந்தது
முன்பொரு சமயம்
மண்ணில் புதைக்கப்பட்ட
அச்சிறு விதை.
ஒவ்வொரு பிறப்பிலும்
புதைந்திருக்கும் அர்த்தங்களை முட்டு
 மண்ணை முட்டு
உன் சோம்பலை முட்டு
உன் கண்ணீரை முட்டு
உன் வீழ்ச்சியை முட்டு
உன் தோல்வியை முட்டு
முட்டும்வரை முட்டு.
ஒரேயொருமுறையாவது
வெளிச்சம் பிறக்கும்.
விதை
உன்னை விதை
உன் வீரத்தை விதை
உன் திறமையை விதை
உன் ஆர்வத்தை விதை
உன் முயற்சிகளை விதை
உன் விதைத்தலை விதை.
விதை வீணாகாது.
நிச்சயம் முட்டும்.
(இது கவிதை அல்ல)
– கே.பாலமுருகன் 
Share Button

About The Author

Comments are closed.