• கவிதையும் குறியீடும் ஓர் உரையாடல் – பாகம் 1

  கவிதை ஏன் சத்தமாக மாறியது?

  புதுக்கவிதையின் எழுச்சியே கவிதையைச் சத்தமிக்கதாக மாற்றியது. ஓங்கி ஒலிக்கக்கூடிய கருவியாக, அடித்தால் எட்டுத் திசைக்கும் எதிரொலிக்கக்கூடிய தம்பட்டமாகக் கவிதை, புதுக்கவிதையின் எழுச்சிமிக்க காலக்கட்டத்தில் தோற்றம் கண்டது. கவிதை மொழியின் மிகவும் மௌனமான குரல் என்பதையும், மொழியின் நுட்பமான நாட்டியம் என்பதைப் பற்றியும் மக்கள் மறந்து கவிதையை மேடையேற்றினார்கள். கொள்கைவாதிகளின் எழுச்சிமிக்க உரைகளில் கவிதை சத்தமாக ஒலிக்கத் துவங்கியது. பின்னர், வானம்பாடி கவிஞர்கள் காலக்கட்டத்தில் அந்த வரிசையைச் சேர்ந்த கவிஞர்கள் புதுக்கவிதைக்கு ஒரு சமூகப் பொறுப்பைச் சுமக்கும் வேலையை ஏற்றினார்கள். சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் குமுறல்களையும் புகார்களையும் ஒரு பெரும் பிரச்சார மூட்டையாகக் கட்டி கவிதை சுமக்கத் துவங்கியது. விடுதலை, உரிமை, சுதந்திரம், போராட்டம் எனப் பலத்தரப்பட்ட சமூக அடுக்குகளிலிருந்து எழும் பிரச்சாரக் குரலாகப் புதுக்கவிதை பாவிக்கப்பட்டது.

  இருப்பினும், மூ.மேத்தா, அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்கள் மொழி அழகியல்களைச் செம்மையாகப் பயன்படுத்தியவர்கள் என்பதால் மக்கள் அவர்களின் கவிதை மொழியில் மயக்கம் கொண்டார்கள்; அவர்களின் கவிதையில் வெட்ட வெளிச்சமாக வெளிப்படும் சமூகப் பொறுப்பின் மீது பற்று கொண்டார்கள். கவிதை காலக்கட்டத்தின் கொண்டாட்ட நாயகர்களாக மூ.மேத்தா வரிசயைச் சேர்ந்த வானம்பாடி கவிஞர்கள் சமூகத்தில் உருக்கொண்டார்கள். கவிதை ஓங்கிச் சத்தமாக சொற்களின் கூட்டமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

  புதுக்கவிதையின் குறீயீடுகள்

  புதுக்கவிதையின் வழக்கமான சில படிமங்கள் காலம் காலமாக கவிஞர்களின் மொழிக்குள் தொடர்ந்து பாவிக்கப்பட்டு வந்திருந்திருக்கிறன. கவிதை நேரடியாகப் பேசும் மொழியல்ல. மொழிக்குள் மொழி என்கிற வகையில் குறியீடுகளையும் படிமங்களையும் தன்னகத்தே உருவாக்கிக் கொண்டு நகரக் கூடியவை ஆகும். கவிதை மனத்திலிருந்து பிசிறடிக்கக்கூடியது என்றும் சொல்லலாம். ஆனால், புதுக்கவிதைகள் பெரும்பாலும் அறிவிலிருந்து சமூகத்தின் பிரச்சனைகளையொட்டி எழும் பிரக்ஞைமிக்க குரலாகவே எழுதப்பட்டு வந்தன.

  ஒரு கவிஞன் அல்லது ஒரு சமூகம் தனது கவிதைக்கான குறியீடுகளையும் படிமங்களையும் எங்கிருந்து பெறுகிறது? அல்லது உருவாக்குகிறது எனப் பார்க்கும்போது இயற்கையே மனிதனின் வாழ்வில் நெருங்கிய தொடர்பில் இருப்பதைக் கண்டறிய முடிகிறது. இயற்கை பிடிவாதமாக வைராக்கியம் நிரம்பிய ஒரு தனிமைக்குள் இருக்கிறது. அதிலிருந்து அதன் மௌனத்திலிருந்து தன் வாழ்க்கையைப் பார்க்கும் கவிஞன் இயற்கையையே தனது குறியீடாக எடுத்துக் கொள்கிறான். ஒரு சமயம் மரம், மலைகளைத் தனிமைக்கான குறியீடாக ஆக்கிக் கொள்கிறான். ஜென் கவிதைகள் மலைகளைத் தியானத்தில் இருக்கும் துறவி எனச் சொல்கின்றன. தத்துவப்பூர்வமான பார்வையிலிருந்து தோன்றிய கவிதைக்கான குறியீடுகள் பின்னர், எழுச்சிமிக்க குரல்களுக்கு வெகுவாகப் பயன்பட்டன.

  எடுத்துக்காட்டாகப் பின்வரும் இரண்டு கவிதைகளில் மரம் பாவிக்கப்பட்ட விதத்தைக் கவனிக்கலாம்:

  1. மரம்

  மரங்கள்

  நிலத்தின்

  மிகப் பழைய

  குடிமக்கள்.

   

  2. மரம்

  ஒரு கதவைப் பாருங்கள்

  அதற்குள் ஒரு மரம் தெரிகிறதா?

  ஒரு நாற்காலியைப் பாருங்கள்

  ஒரு மரம் கதறி செத்த

  ஒலி கேட்கிறதா?

  மேற்கண்ட இரண்டு கவிதைகளுமே மரத்தின் இருப்பைப் பற்றி பேசும் கவிதைகள்தான். ஆனால், என்ன வித்தியாசம் என அறிய முடிகிறதா?  முதல் கவிதை சத்தம் குறைவாக மரத்தை ஓர் ஆழமான அர்த்தத்திற்குள் மறைமுகமாகச் சத்தமில்லாமல் நிறுவுகிறது. இரண்டாவது கவிதை ஒரு புதுக்கவிதைக்கான எழுச்சியுடன் மரம் என்பதன் தியாகத்தைச் சத்தமாக ஓங்கி ஒலிக்கிறது. இக்கவிதையைப் படிக்கும் யாவரும் குழப்பமில்லாமல் பேசும் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற நிதானமும் திட்டமும் இக்கவிதையில் தெரிகிறது. இரண்டாவது கவிதையின் வெளிப்பாடும் மரத்தைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே. ஆனால், முந்தைய கவிதை ஒரு தத்துவார்த்தமான பார்வைக்குள்ளிருந்து எழும் குரல். அதைத் தியானிக்க வேண்டும்; அசைப்போட வேண்டும். அதிலிருந்து மேலும் சில கருத்துகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

  இயற்கையிலிருந்து குறியீடுகளைப் பெற்றுக் கொள்ளும் கவிஞன் மரம் என மட்டுமல்லாமல், பறவைகள், வானம், மேகம், தாவரங்கள், மண், நிலம், மழை எனத் தன் கவிதை பரப்பை மேலும் விரிவாக்கிக் கொண்டான். சமீபத்தில் எழுதப்பட்டு வரும் நவீன கவிதைகள் புதுக்கவிதை கொடுத்த சத்தங்களின் சலிப்புத் தாளாமல் மீண்டும் மௌனத்திற்குத் திரும்புகின்றன. பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு மௌனமாக உரையாடுகின்றன. முந்தைய தத்துவார்த்தமான சூழலிலிருந்து மாறுப்பட்டு தனிமையின் குரலாக ஒலிக்கின்றன. நவீன மனிதன் சந்திக்கும் நெருக்கடிகளைப் பிரதிபலிக்கும் தனிமனித, தனி மனத்தின் நினைவோட்டங்களாக நவீன கவிதை மாறுகிறது. பெருநகர் வாழ்வின் பரப்பரப்பில் இயந்திரத்தனமான செயல்பாடுகளின் சிக்கிச் சிதைந்திருக்கும் நவீன மனிதனின் குரலாகக் கவிதை மாறுகிறது.

   

  1. மரம்

  பெரும் கழுகுகள்

  கொத்திச் சென்ற

  மனக்காட்டிலிருந்து

  வெறுமை தாளாமல்

  இசைக்கும் ஒற்றை கருவி.

   

  இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்ட்த்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மனிதன் ஒரு கொடூரமான தனிமைக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் துயரத்தை ஒரு மரத்தின் வழி மனப்பதிவுகளாக உக்கிரமாகச் சொல்ல முடியுமென்றால் அது நவீன கவிதையில் செயல்பாடாகும். சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்த கவிதை பின்னர், சிதைந்துபோன சமூகத்தில் வாழும் தனிமனிதர்களின் மன இயக்கமாக மாறுகிறது. நகுலன் பூனையை மரணத்தின் குறியீடாகப் பாவிப்பதை நான் வாசித்திருப்போம். அது அவருடைய அனுபவத்திலிருந்து உதிர்க்கும் குறியீடு. அதே காலக்கட்டத்தின் பெருநகர் தனிமையைத் தரிசிக்கும் இன்னொரு கவிஞனான ஆத்மாநாம் அவர்களும் மிகுந்த வரட்சியான அன்பும் உறவுகளும் அற்ற நகர் வாழ்வின் எச்சங்களை தன் கவிதையின் வழி சொல்லிச் செல்கிறார்.

   

  உரையாடல் தொடரும்-

  கே.பாலமுருகன், ( 2010ஆம் ஆண்டில் ஒரு கவிதை நிகழ்ச்சியில் ஆற்றிய உரை)

   

   

   

   

  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *