குறுங்கதை: தலைப்பு

ஆசிரியர் மனோகர் வகுப்பினுள் நுழைந்ததும் மாணவர்களிடம் நேற்று எழுதச் சொல்லியிருந்த சிறுகதையை வெளியில் எடுக்கச் சொன்னார். விக்கியைச் சிறுகதைக்கான தலைப்பை மட்டும் எழுதி வரச் சொல்லியிருந்தார். மறவாமல் கேட்கவும் செய்தார்.

“சொல்லுடா… கதைத்தான் எழுத முடியாது… தலைப்பாவது எழுதிட்டு வந்தீயா?”

விக்கி வழக்கம்போல் எழுந்து நின்று ஆசிரியரைப் பார்க்க முடியாமல் தடுமாறினான்.

“எழுதலதானே? யேன்டா பதிநாலு வயசாச்சு… எவ்ள க‌ஷ்டப்பட்டு வாசிக்கச் சொல்லிக் கொடுத்துருப்பன்… என்னாதான் படிச்ச?”

வேறு எங்கோ பார்ப்பது போல் பம்மாத்துச் செய்தான். மனோகர் உடனே விக்கியின் அப்பா முருகேசனுக்குத் தொடர்புக் கொண்டார்.

“என்னண்ணே? இங்க வந்து ரெண்டு வருசம் ஆச்சு… ஒழுங்காவே படிக்க மாட்றான்… நீங்க என்னா செஞ்சிங்க? ஆரம்பப்பள்ளியில நல்லா படிச்சானா? நீங்க அதுக்கப்பறம் அக்கறை எடுக்கலயா?” என முருகேசனிடம் கடிந்து கொண்டார்.

முருகேசன் வேலையிடத்தில் இருந்தார். வந்த கோபத்திற்கு விக்கியின் ‘டூய்ஸ்ஷன்’ வாத்தியாருக்கு அழைத்தார்.

“வணக்கம், என்ன சார் விக்கி மேல இவ்ள புகார் வருது? ஆரம்பப்பள்ளியிலத்தான் நல்ல பேரு எடுக்கல… இங்க பெரிய பள்ளிக்குப் போயும் நல்ல பேரு எடுக்க முடியுல… வாத்தியாருங்க என்ன ஏசுறாங்க… அவன் படிக்காறனா இல்லயான்னு பார்த்தீங்களா இல்லயா? காசு கட்டிப் படிக்க வைக்கறோம்…”

முருகேசன் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார். விக்கியின் ‘டுய்ஸ்ஷன்’ வாத்தியார் அதே ஆத்திரத்துடன் விக்கியின் அம்மா கோகிலாவிற்கு அழைத்தார்.

“வணக்கங்க! என்ன உங்க ‘ஹஸ்பண்ட்’ கண்ட மாதிரி பேசறாரு? உங்க பையனுக்கு இங்க என்ன சொல்லித் தரல? வீட்டுலயும் கொஞ்சம் கவனிக்கணும்… நீங்க வீட்டுலத்தான் இருக்கீங்க… கொஞ்சம் உக்கார வச்சு என்ன பெரச்சனன்னு கேக்கணும்… சும்மா எங்கள குறை சொல்லிக்கிட்டு இருக்காதீங்க…” எனச் சத்தம் போட்டுவிட்டுப் படக்கென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

கோகிலாவிற்கு உஷ்ணம் தலைக்கேறியது.

“இந்தப் பையனுக்கு எவ்ள சொன்னாலும் புத்தி வருதா… தேவ இல்லாமல் இவனால நான் திட்டு வாங்கறன்…வரட்டும்…”

கோகிலா, விக்கி வீட்டிற்கு வரட்டும் எனப் பிரம்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார்.

பள்ளி முடிந்து வரும் வழியில்தான் விக்கிக்குச் சிறுகதைக்கான ஒரு தலைப்பு கிடைத்தது.

‘பழி’

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.