குறுங்கதை: மூதாதையர்கள்

மின்விளக்குகள் கண்களுக்கு ஒவ்வாமையாக இருந்தன. வெளிச்சத்தைப் புதிதாகப் பார்ப்பது போல் ஒரு திணறல். நீள்தூக்கத்திலிருந்து ஏற்பட்ட திடீர் விழிப்பு. எதிரில் இருந்தவரிடம் இப்பொழுதாவது பேச்சுக் கொடுக்கலாம் எனத் தோன்றியது. அவரைப் பார்ப்பதற்குப் பயமாகவும் இருந்தது. முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார்.

“யாரப் பார்க்கப் போறேன்னு தெரியுமா?”

அவரிடமிருந்து பதில் இல்லை. எப்படியும் என்னைவிட முப்பதாண்டுகளாவது மூத்தவராக இருக்கக்கூடும் என ஊகித்தேன். இத்துடன் அவருடன் பலமுறை பேச்சுக் கொடுக்க முயன்றும் பலனில்லை.

“நான் என் தாத்தா பாட்டிங்கள பாக்கப் போறன்… அதான் ரொம்ப சந்தோசமா இருக்கன்…”

அப்பொழுதும் அவர் முகத்தில் அசைவில்லை. ஒருவர் தன் உணர்வுகளைச் சொல்லும்போது குறைந்தபட்சம் ஒரு தலையசத்தலாவது ஆறுதல் அளித்திருக்கும்.

“நீங்க இப்படித்தான் இருப்பீங்களா? பேச மாட்டீங்களா?”

அவருடைய கண்கள் செங்குத்தாக எதிரே தெரியும் கண்ணாடியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

“இப்படியும் ஒரு மனுசன் இருப்பானா? இதுக்குத்தான் யாரையும் பார்க்கப் போகாமலே இருந்திருக்கலாம் போல…”

செவ்வாய்க் கிரகத்திலிருந்து புறப்பட்டு இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அவற்றுள் நீள்தூக்கத்தில் இருந்த காலம் மட்டும் இருபது மாதங்கள். இப்பொழுது விழித்துவிட்டால் மீண்டும் நீள்தூக்கப் படுக்கைக்குள் போக ஒரு வாரம் ஆகும். பூமிக்கு என்னை அழைத்துச் செல்லும் பாதுகாவலர் என்றார்கள். பூமியிலிருந்து வந்திருக்கும் நபர் என்பதால் நிறைய கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என ஆவலுடன் வந்திருந்தேன்.

“இன்னும் ஒரு வருசம் உங்கக்கூடத்தான் பயணம்… எழுந்திருக்கும்போதாவது கொஞ்சம் பேசலாமே? இப்படியே போனா பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு… பேச்சுத் துணையா இருக்கலாம்னு நெனைச்சன்…”

மனத்திலிருந்ததைக் கொட்டித் தீர்த்தேன். ஒரு புன்னகை வரும் என எதிர்பார்த்து ஏமாந்தேன். ஆனால், அவருடைய கவனம் முழுவதும் பயணத்தைக் கண்காணிப்பதிலேயே குவிந்திருந்தது. நாங்கள் இருந்த படுக்கை பெட்டிக்குள் யாராவது புதிதாக நுழைந்தாலும் பரவாயில்லை என்பதைப் போல் தோன்றியது.

“பூமியில உங்களுக்கு எவ்ள சொந்தகாரவங்க இருக்காங்க?”

விசையை அழுத்தி நாங்கள் பயணிக்கும் பெட்டியின் வெப்பநிலையைப் பரிசோதித்தார். அவருடைய கவனமெல்லாம் கடமையில் மட்டுமே இருந்தது. என் அப்பா பூமியில் இருந்தால் அநேகமாக இவர் வயதுதான் இருக்கும் என ஊகித்துக் கொண்டேன்.

“நான் எப்படி செவ்வாய் கிரகம் வந்தேனு தெரியுமா? ஒரு களன்ல அடைச்சி கூட்டிட்டு வந்தாங்க… I’m just a sample test tube freezed baby…” எனச் சொல்லிச் சிரித்தேன். 500 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் மனித காலணித்துவத்தை உருவாக்கக் கொண்டு சென்ற பல்லாயிரத்தில் ஒரு துளி விந்தணு மட்டுமே நான். அவருக்குச் சிரிப்பை உண்டாக்கும் என நினைத்து அதையும் கேலியாகச் சொல்லிப் பார்த்தேன்.

“ஹலோ! என்னாங்க ஜோக் சொன்னாலும் சிரிக்க மாட்டுறீங்க? மனசாட்சி இருக்கா? நாங்கலாம் செவ்வாய்ல வாழ முடியலைன்னுத்தான் இப்பப் பூமிக்குப் போய்கிட்டு இருக்கோம்… பாவம் இல்லயா?”

என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை வேறு பக்கம் வைத்துக் கொண்டார். செவ்வாய் கிரகவாசி என்பதால் என்னை அவர் அசூசையாக நினைக்கிறார் எனத் தோன்றியது.

“இவ்ள வருசத்துல என்னோட மூதாதையர்கள் யார் இருக்கா யார் செத்துட்டா இதெல்லாம் எனக்குத் தெரியாது… யாருமே இல்லாமல் இத்தன வருசம் கடந்துருச்சி… இப்ப ரொம்ப ஆவலா இருக்கு… பூமி எப்படி இருக்கும்? செவ்வாய் கிரகம் மாதிரி ஒரே கட்டடம், ஆராய்ச்சி, ஐஸ்பெட்டி அப்படின்னு இருக்குமா?”

எதிரில் அமர்ந்திருந்தவரின் முகம் இப்பொழுது மெல்ல வாட்டமாகத் துவங்கியது. மெல்ல உணர்ச்சிகள் பொங்கும்போது வார்த்தைகள் வரும் என என்னால் ஊகிக்க முடிந்தது. அடுத்து அவர் மனத்திலுள்ளதைக் கொட்டுவார் என முடிவெடுத்தேன். எனது பேச்சுத் திறமையை நினைத்துப் பெருமிதம் கொண்டேன். அவருடைய உடலும் உதறியது. ஏதாவது நடந்துவிடுமோ எனத் தயங்கினேன். உணர்வு பெருக்கம் மிகுந்து அவரது கண்கள் சிவக்கத் துவங்கின.

சட்டென எழுந்தவர் பக்கத்தில் இருந்த மின்கதவைத் திறந்து வெள்ளி நிறத்தில் இருந்த மின்சாரக் கம்பியை எடுத்துத் தன் தலைக்குப் பின்னால் செருகிவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டார்.

“நாங்கள்தான் மூதாதையர்கள்,” எனச் சொல்வதைப் போல அவரது கண்களில் சுழல் சுழலாக விளக்குப் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

-கே.பாலமுருகன்  

Share Button

About The Author

Comments are closed.