தொடர்க்கதை: தேவதையின் குறிப்புகள்: பாகம் 3

18 ஜூன் 2018: காலை 10.45

இரவு அத்தையைச் சமாதானப்படுத்தி உறங்க வைப்பதற்குள் எனது உறக்கத்திற்கான நேரம் தாண்டி மாயமானது. இரவெல்லாம் வாசகர் கடிதங்களை மீண்டும் படித்துப் பார்த்தேன். வகுப்பறையில் என் அப்பாவின் பெயரைச் சொல்லி கிண்டலடித்த காந்தராவை என்ன செய்தேன் என்று சட்டென்று ஒரு நினைவு.

“அப்பு உன்மேல அடிக்குது கப்பு…”

கோபத்தின் உச்சம் சென்று நான் அவனைத் திட்டும்போது பதிலுக்கும் அவன் கிண்டலடித்து இந்த வசனத்தைச் சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அன்றென்னவோ நிர்மலா ஆசிரியை வரத் தாமதமாகிவிட்டதால் அவன் வகுப்பைத் தாண்டி ஓடுவதற்குள் சட்டையைப் பிடித்துப் பின்னால் இழுத்ததில் மேசையில் மோதி கீழே விழுந்தான். அப்பொழுதும் ஆத்திரம் அடங்கவில்லை. கையில் கிடைத்த பென்சில் பெட்டியை அவன் மீது ஓங்கியடித்தேன். அது வலது புருவத்தில் பட்டுக் கிழித்து விட்டது.

“அப்பாவ விடைக்கறதுலாம் ஒரு பெரிய கேஸா? அப்படியென்ன ஒனக்கு ஆத்தரம்?” என நிர்மலா ஆசிரியைக் கேட்கும்போது அவரது அப்பாவின் பெயர் சுப்பையா என்பது என் மண்டைக்குள் உரைத்துக் கொண்டேயிருந்தது. “சுப்பையா குப்பையா!!!” என்று கத்திவிட்டு ஓடிவிடலாம் என்று தோன்றிய எதையுமே நான் அன்று செய்யவில்லை. முறைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.

“இந்தா பசியாறு… ரொட்டி சானாய்… இங்க பக்கத்துல புதுசா மாமாக் கட தொறந்துருக்காங்க. அங்க வாங்கிட்டு வந்தது…”

அத்தை கொண்டு வந்து வைத்த தட்டையே பார்த்தேன். சாம்பார் கறி கலந்து அதில் ரொட்டி பிய்க்கப்பட்டு மிதந்து கொண்டிருந்தன. “ரொட்டி சானாய் பஞ்சிர்… சத்து…” அப்பா எப்பொழுது எந்தக் கடைக்குப் பசியாற சென்றாலும் சொல்லும் ஒரே வசனம் அது. பிரிவேக்கச் சுழற்சியில் மாட்டிக் கொண்டால் அதிலிருந்து மீள முடியாது என்பதை ஓரளவிற்குச் சுதாரித்துக் கொள்ள முடிந்தது. இனி என்ன செய்ய வேண்டும்?

“அத்த அப்பா கதைங்க அனுப்பன பத்திரிகைக்குக் கூப்டா அப்பாவோட கதைங்கள தருவாங்களா?”

“அது யேண்டி என்கிட்ட கேட்கற? நான் என்ன எழுத்தாளரா? போன் போட்டு நீயே கேளு…”

தினமலர் பத்திரிகையின் அழைப்பேசி எண்களை அப்பத்திரிகையின் பின்பக்கத்திலேயே தேடி எடுத்துக் கொண்டேன். பசியாறிவிட்டு வீட்டுக்கு வெளியில் வந்து நின்றேன். வீட்டு முகப்பிலேயே பெருத்து வளர்ந்திருந்த மாமர நிழலில் ஒதுங்கியவாறு கைப்பேசியில் தினமலர் பத்திரிகைக்குத் தொடர்பு கொண்டேன்.

“வணக்கங்க… நான் எழுத்தாளர் அப்புராஜோட மகள் பேசறன். பேரு நந்தினி… ஞாயிறு பொறுப்பாசிரியர் கிட்ட பேச முடியுமா?”

அழைப்பு அவருக்குத் தொடர்புப்படுத்தப்பட்டது. இரண்டே ஒலிப்பில் எடுத்துவிட்டார்.

“சார், வணக்கம். நான் எழுத்தாளர் அப்புராஜோட மகள் பேசறன். பேரு நந்தினி. அப்பாவோட கடந்த காலங்கள உங்க பத்திரிகைக்கு அனுப்பன கதைங்க எனக்குக் கிடைக்குமா?”

“வணக்கம். அவரோட இமேயில்ல பாருங்க… அனுப்பன லிஸ்ட்ல இருக்குமே?”

அப்பாவின் பெயரைச் சொன்னதும் அவர் குரலில் தொனி மாற்றம் ஏற்படும் என்னைக் கலகலப்பாக வரவேற்பார் என்றெல்லாம் நினைத்து ஏமாந்தேன். அவர் வெகு இயல்பாக பேசிக் கொண்டிருந்தார்.

“இல்ல சார். அவருக்கு டைப் செஞ்சி அனுப்பற பழக்கம் இல்ல. கதைங்கள முகவரிக்கே அனுப்பி வைப்பாரு…”

“அப்படின்னா வீட்டுல தேடி பாருங்கமா… இங்க கேட்டா எப்படி? ஆயிரம் கதைங்க வருது… டைப் செஞ்சிட்டு பைல்ல வைப்பாங்க… சில சமயம் மிஸ் ஆயிரும். இப்ப தேடச் சொன்னா எப்படி? எந்த வருசம் எந்த திகதிலன்னு ஞாபகம் இருக்கா?”

அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் விடை என்னிடமும் இல்லை வீட்டிலும் இல்லை. அப்பாவின் அலமாரி முழுவதும் தேடியும் எதுவுமே கிடைக்காத ஆச்சரியத்திலிருந்தே இன்னும் நான் மீளவில்லை.

“இல்ல சார்… அப்பா இங்க எதையுமே வைக்கல…”

“அவருகிட்டயே கேட்டுப் பாருங்கமா…”

“அவரு செத்துட்டாரு சார்… அப்புராஜ்… எழுத்தாளர்… தெரியாதா?”

அப்பாவை ஞாபகப்படுத்த முயன்றேன். இம்முறையாவது அப்பாவை அவருக்குத் தெரிய வாய்ப்புண்டு என்று நம்பினேன்.

“ஓ! மன்னிச்சிருங்க. எனக்குத் தெரில. நான் ஞாயிறு பொறுப்புக்கு வந்து இப்பத்தான் நாலு மாசம் ஆகுது. இதுக்கு முன்ன இருந்தவரு பத்து வருசம் இருந்த அனுபவம் உள்ளவரு… அவருக்கும் வயசாச்சி. உடம்பு சரியில்லாமத்தான் இங்கேந்து வேலைய விட்டுட்டுப் போனாரு… அவருக்கிட்ட கேட்டா தெரியலாம்…”

மௌனமாக இருந்தேன். சந்தேகங்கள் கிளைகள் விடத் துவங்கியிருந்தன. மீண்டும் அவரே பேசினார்.

“கதைங்க அனுப்பனா நம்ம ஒரு பிரதிய வெச்சிக்கிட்டுத்தான பத்திரிகைக்கு அனுப்பணும்? அம்மாகிட்ட கேட்டுப் பாருங்க. ஒருவேள யாருகிட்டயாவது கொடுத்து வச்சிருக்கலாம்ல…”

“அம்மாவும் இல்ல சார். அத்த மட்டும்தான். அவுங்களுக்கும் ஒன்னும் தெரில… உங்களுக்கு மணிமாறன்னு யாராவது தெரியுமா சார்?”

அவர் சற்று நேரம் ஏதோ யோசித்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் பேசினார்.

“மா… இவுங்கள தெரியுமா அவுங்கள தெரியுமான்னு என் நேரத்த வீணடிக்காதீங்க. நீங்க வேணுகோபால் சார பார்க்க முடிஞ்சிச்சின்னா அப்பாவோட கதைங்க பத்தி பேசிப்பாருங்க…”

“என்ன சார் பேசறீங்க? நாட்டுல ஒரு எழுத்தாளர் செத்துருக்காரு. பத்திரிகைல இருக்கீங்க உங்களுக்கு அவர் பேர் கூட தெரில…”

குரலை என்னையறிமாலேயே உயர்த்தினேன்.

“உங்கப்பா என்னா ஜெயகாந்தனா மா? ஊர்ல கொசுறு எழுதறவணும் சமையல் துணுக்கு எழுதறவனும்தான் தன்ன எழுத்தாளன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க… உங்கப்பா என்ன தமிழ்நாட்டோட சாகித்ய அகாடெமி விருது வாங்கிருக்காரா? பெயர ஞாபகம் வெச்சு சொல்ல…?”

அவரும் பதிலுக்குக் குரலை என்னைவிட வேகமாக உயர்த்தினார். இனி தொடர்ந்தால் இருக்கும் சில வாய்ப்புகளையும் இழந்துவிட நேரிடும் எனச் சட்டென மனம் நிதானித்தது.

“சரிங்க சார், மன்னிச்சிருங்க. அப்பாவ இழந்து நிக்கறோம். அதான் கொஞ்சம் கோபம் வந்துருச்சி. எதுக்கும் உங்க ஆபிஸ்ல பழைய ஆளுங்க… டைப் செய்யறவங்க இருந்தா கேட்டுப் பார்த்து எனக்கு நாளைக்குச் சொன்னாலும் ஓகேதான் சார்…”

மறுமுனையிலிருந்து பதில் இல்லை. அவரும் கோபத்தை நிதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார் என்று தெரிந்தது.

“சரி மா… நான் கேட்டுப் பார்த்துச் சொல்றன். உங்க போன் நம்பர் கொடுங்க…”

அவர் கட்டாயம் மீண்டும் அழைக்க மாட்டார் என்பது அவரது பேச்சிலே தெரிந்தது. இருப்பினும் ஒரு நம்பிக்கை. அழைப்பைத் துண்டித்துவிட்டு உள்ளே வந்தேன். வெயில் வாசல்வரை வந்து முனகிக் கொண்டிருந்தது. ஆஸ்ட்ரோலியாவில் டிசம்பரில் எழும் 50 செல்சியஸ்க்கும் மேற்பட்ட வெயிலின் காட்டத்தை இங்குச் சாதாரண ஒரு காலைப் பொழுதிலேயே உணர முடிந்தது.

அப்பாவின் அறைக்குள் நுழைந்து மீண்டும் எல்லா இடங்களையும் அலசினேன். வாசகர் கடிதங்கள் இன்னும் சில பத்திரிகைகள் என மட்டுமே அவரது சேமிப்பில் இருந்தன. நிச்சயம் அப்பா அவரது கதைகளைத் தனியாக வெட்டி ஒரு புத்தகத்தில் ஒட்டி சேகரித்திருப்பார். ஆனால், அப்புத்தகத்தை அறையில் எங்கேயும் காணவில்லை.

“என்னடி இன்னுமா தேடற? எப்பக் கெளம்புற? உடனே போய்றாத… அப்பனோட கருமாதி வரைக்குமாவது இரு…”

அத்தைத்தான் மீண்டும் உள்ளே வந்தார். எட்டாம் நாள் தூக்கம் இருப்பதாகவும் அதற்குச் சமைப்பது பற்றியும் சொல்லிவிட்டு பினாங்கு சித்தி என்னிடம் பேச நேற்று காத்திருந்ததையும் சொல்லிக் கொண்டே கட்டிலில் சாய்ந்தார்.

“அத்த! நான் எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. அது அப்ப நடந்துச்சி. முடிஞ்சிருச்சி. இப்ப கேட்டு என்ன சாதிக்கப் போறாங்க…?”

“கோபம் இருக்காதாடி? உன் அம்மாகூட பொறந்தவ. அவளுக்கும் குடும்பத்து மேல அக்கற இல்லாமலா போய்ரும். உன்னயே ரொம்ப பிடிக்கும். தூக்கி எறிஞ்சிட்டு ஓடிட்ட…”

“இப்ப நான் என்ன நாசமாவா போய்ட்டன்? நல்லாதானே இருக்கன்?”

அத்தை தோளில் போட்டிருந்த தோள் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். அவர் முகத்தில் களைப்பு இன்னும் அப்படியே இருந்தது. உடலை முறுக்குவதைப் போல செய்துவிட்டு என்னைப் பார்த்தார். அவர் கண்களை அப்பொழுதுதான் நேர் எதிர்கொண்டு பார்க்க இயன்றது. பல கேள்விகள் அவரிடத்தில் தொக்கிக் கிடந்தன.

“சரிடிமா… கோச்சிக்காத… இப்ப உள்ள பிள்ளைங்களுக்கு உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்துருது… பெருசுங்க மனச கல்லாக்கிக்கணும் போல. உங்கப்பன் நான் சொல்றத எங்கேயாச்சாம் கேட்டானா… நீ மட்டும் எப்படி இருப்ப…”

அத்தையைக் கட்டியணைத்துக் கொண்டு அப்படியே கட்டிலில் சரிந்தேன். அவர் மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதேன். அதுவரை உள்ளுக்குள் அடக்கப்பட்டிருந்த துயரம் சத்தங்களாக மாறி வெளிப்பட்டன. அழுகையை அடக்கும் வித்தையெல்லாம் எனக்குத் தெரிந்ததில்லை. ஆனால், இப்பொழுது வரை அழவில்லை என்றால் மனம் வெடித்துவிடும் என்பதைப் போலத்தான் தோன்றியது. அத்தை முதுகைத் தடவிக் கொடுத்தார்.

“சரிடி அழாத… கல் நெஞ்சக்காரின்னு நெனைச்சன்… பரவால அழுவலாம் வருது…”

முகத்தை இப்படிப் புதைத்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்கிற ஏக்கம் மனத்தினுள் ஆழ்ந்து துளையிட்டுச் சென்றது. மனம் இலேசாகிக் கொண்டிருந்தது. அப்பாவின் மொத்த நினைவுகளுக்கும் ஒரு வடிக்கால் கிடைத்துவிட்டது.

“அப்பா பாவம் அத்த… எவனெவனோ அவமானப்படுத்திருக்கான்… அவனுக்கெல்லாம் சொல்லுல கொஞ்சம்கூட ஈரம் இல்லயா அத்த?”

அவர் என் கேள்விகளைத் தாண்டி கண்களில் வடியும் ஈரத்தைத்தான் கவனித்துக் கொண்டிருந்தார். அத்தையைப் போன்றவர்கள் இப்படித்தான். அறிவுப்பூர்வமானதைவிட உணர்வுப்பூர்வமானவைகளுக்கு மட்டுமே இசைந்து வருவர். அத்தை முதலில் என் கண்களைத்தான் துடைத்துவிட்டார்.

“இப்படியே மாறி மாறி உங்கப்பனுக்குப் பாவம் பார்த்து என்ன செய்ய போறோம்? அவன் போய் சேர்ந்துட்டான்…இனி ஆவ வேண்டிய காரியத்த பார்த்துக்க வேண்டியதுதான்…”

மடியிலிருந்து எழுந்து நிதானித்துக் கொண்டேன். அழுகை நம்மை எதிலிருந்தோ விடுவித்து விடுகிறது. சட்டென உடைந்தொழுகும் ஊற்றாக மனம் மாறிக் கொள்கிறது. இப்பொழுது இறுக்கங்களிலிருந்து வெளியேறி சுத்தமான காற்றை சுவாசிப்பது போல உணர்ந்தேன். அத்தை தோள் துண்டைச் சரிசெய்துவிட்டு என் பின்னந்தலையில் தடவினார்.

“அடுத்து என்ன செய்ய போற?”

“அப்பாவோட கதைங்கல தேடி போகப் போறன்… அப்பாவோட கருமாதிக்குள்ள அவரோட பத்து கதைகளாவது எனக்கு வேணும்… அது எங்க இருக்கு எப்படி கிடைக்கும்னு எனக்குத் தெரில… ஆனா… கிடைக்கும்னு நம்பறன்…”

அத்தை கோபமும் ஆச்சரியமும் கலந்த பார்வையில் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

-தொடரும்

கே.பாலமுருகன்

Part 1: http://balamurugan.org/2021/01/12/தொடர்க்கதை-தேவதைகளின்-க/

Part 2: http://balamurugan.org/2021/01/18/2/

Share Button

About The Author

Comments are closed.