மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 8

குச்சிமிட்டாய் பெரியசாமியிடம் மகிழுந்தை இரவல் கேட்கக் கம்பத்திற்குள் செல்கிறான்.

 

 

பாகம் 8

 

மெலாந்தி அத்தாஸ் கம்பத்தில் பெரியசாமி என்றால் எல்லோருக்கும் மதிப்பும் பயமும் அதிகம். முன்பு கோலாலம்பூரில் ‘தெனாகா ரக்யாட்’ குழுவில் இருந்துகொண்டு தொழிலாளர்களுக்காகப் போராடியவர். தெரு ஆர்பாட்டத்தில் கைதாகி சில ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு மீண்டும் கம்பத்திற்கே வந்து அப்பாவின் மளிகை பொருள் தொழிலைக் கவனிக்க ஆரபித்துவிட்டார்.

90களில் பெரியசாமி என்றால் எல்லோருக்கும் தெரியும். யாருக்கும் பயப்படாமல் போராடக்கூடியவர் என்கிற எண்ணம் அவர் மீது எப்பொழுதும் ஒட்டிக் கொண்டே இருந்தது.

“தவுக்கே! தவுக்கே!”

குச்சிமிட்டாய் மட்டும் எல்லோரையும் போல அவரையும் கிண்டலடிக்கவே செய்வான். பெரியசாமி மளிகை கடை மட்டுமே ஐயாவு ஓரக்கடைக்கு அடுத்து மிகவும் பிரபலமானது. மெலாந்தி மலையிலுள்ளவர்கள்கூட கீழே இறங்கி பெரியசாமி கடையில்தான் மாதப் பொருள்களைக் கட்டிக் கொண்டு போவார்கள்.

“என்னடா குச்சி? இந்த நேரத்துல?”

பெரியசாமியின் வீடு அவருடைய மளிகை கடையோடு இணைந்தே இருந்தது. வலதுபக்கம் கடை என்றால் இடது பக்கத்தின் உள்ளே சென்றால் வீடு. சிறிய வரவேற்பறை அதன் பின்பக்கம் சமைக்கும் அறையும் இரண்டு சிறிய அறைகளும் இருக்கும். ஐந்து நிமிடம் உள்ளே இருந்தால் மூச்சுமுட்டும் அளவிற்கு மளிகை கடையே பிரதான இடத்தை அபக்கறித்திருந்தது.

“தவுக்கே. காடி கொஞ்ச நேரம் தர்றீங்களா? அவசரம். லோரி கெட்டுப் போச்சாம். அவங்கள மலையில ஏத்திப் போய் விட்டுட்டு வரணும்…”

குச்சிமிட்டாய் மேலே மலையிலுள்ள பிரிட்டிஷ் வீடு பற்றி எதையுமே வாயைத் திறக்கவில்லை. தனசேகரின் உத்தரவின்படி அதைப் பற்றி யாருக்கும் தெரிவிக்கக்கூடாது என்பதை அவன் கடைப்பிடித்தே வந்தான்.

பழைய ஹொண்டா மகிழுந்து. மலை ஏறி பழக்கமானதால் எந்த முக்கலுமின்றி மெலாந்தி மலையை ஏறிக் கொண்டிருந்தது. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி வெளியில் தெரியும் இருண்ட மலைத்தொடரைப் பார்த்துப் பூரிப்புடன் தன் அம்மாவிடம் ஏதேதோ கூறிக் கொண்டே வந்தாள்.

“நீங்க இங்க பழைய ஆளா தம்பி?”

பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அதுவரை மகிழுந்திற்குள் நிலவிய அமைதியை முதலில் களைத்தார்.

“எங்க அப்பா காலத்துலேந்து இங்கதான் இருக்கோம். அப்பா இருபந்தைஞ்சி வருசத்துக்கு முன்னால இங்க ஒரு லோரி எக்ஸிடண்டுல செத்துட்டாரு. இங்கத்தான் கீழ கம்பத்துக்குப் பக்கத்துல லோரி ஒன்னு அப்பா வந்த மோட்டர அப்படியே சாத்திருச்சி. லோரியும் பள்ளத்துல கவுந்துருச்சி… லோரிக்காரன் தப்பிச்சிட்டான். கூட இருந்த ஒரு பையன் செத்துட்டான்…”

அருகில் இருந்தவர் அந்த மெலாந்தி வளைவு சாலையைப் பயத்துடன் கவனித்தார். சாலை விளக்குகள் ஏதும் முறையாக எரியாமல் கம்மியான மகிழுந்து வெளிச்சத்தைத் தவிர இருள் மட்டும் ஒரு நிழலைப் போல அவர்களைச் சுற்றி நகர்ந்து கொண்டிருந்தது.

“என்னா பாக்கற? பயங்கரமா இருக்கா? எவனும் தைரியமா நைட்டுல வர மாட்டான் தெரியுமா? நெறைய லோரி அங்கன பள்ளத்துல விழுந்துருக்கு. நெறைய சாவு பார்த்த பள்ளத்தாக்கு இது…”

கண்ணுக்கே தெரியாமல் பாதை இரு மடங்கிலும் வளர்ந்திருந்த காட்டிற்குள் ஓர் இருளைத் தின்று தீர்த்த களைப்பில் இருந்த பள்ளத்தாக்கை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

“நான் இன்னும் சில பேரு. எங்களுக்கு மெலாந்தி அத்துப்பிடி. எங்க விட்டாலும் காடா இருந்தாலும் சரி மலையா இருந்தாலும் சரி… அதனால உங்களுக்கு உதவி செய்றன்…”

“நீங்க வரலைனா இந்நேரம் நாங்க பூத்தாவா ஆய்ருப்போம் தம்பி. நல்ல வேள அந்தக் கடவுள்தான் காரணம்…”

குச்சிமிட்டாய் சிரித்துக் கொண்டே வானொலியை முடுக்கினான். இனிமை கீதங்கள் என்கிற பெயரில் பழைய பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே வந்தன. குச்சிமிட்டாய் மகிழுந்தின் கண்ணாடியைத் திறந்துவிட்டு வெண்சுருட்டைப் பற்ற வைத்தான். இடது கை முட்டியை மகிழுந்து கதவுக்கு வெளியில் தெரியும்படி வசதியாக வைத்துக் கொண்டு பெருமூச்சிழுத்தான்.

“மா… அருவி! சத்தம் கேட்குதா…?”

திறந்த கதவின் வழியாக தூரத்தில் கேட்ட அருவியின் சத்தத்ததைப் பல இரைச்சல்களையும் தாண்டி சிறுமி செவிமடுத்தாள். இருண்ட காட்டின் ஊடாகத் தெரிந்த காண்டா மரங்களைத் தாண்டி அருவியின் நிதானமான சத்தம் மகிழுந்தில் இருந்த மற்றவர்களால் அறிய முடியவில்லை.

“என்ன பாப்பா… அருவியில குளிக்குறதுன்னா பிடிக்குமா?”

சிறுமி கவனத்தை வெளியிலிந்து முன்னே அமர்ந்திருந்த குச்சிமிட்டாயிடம் திருப்பினாள்.

“ஆமாம் அங்கள். சின்ன வயசுல அப்பா கூட்டிட்டுப் போனாரு… அதோட இன்னும் போகல…”

“அங்கள் கூட்டிட்டுப் போறேன் வர்றீங்களா?”

சிறுமி பதிலேதும் சொல்லாமல் சிரித்தாள். பக்கத்தில் இருந்த சிறுமியின் பாட்டி அவளை இழுத்து உட்கார வைத்துவிட்டுத் தலையைத் தடவிவிட்டார்.

“இதோட அப்பன் காணாம போய்ட்டான். என் மருமகன்தான்… ம்ம்ம்… அது பெரிய கத தம்பி…”

குச்சிமிட்டாய் அவர் கூற வரும் கதைக்குச் செவிமடுக்காமல் வாயிலிருந்து புகையை வெளியே விடுவதில் கவனமாய் இருந்தான். அவரும் அதற்குமேல் ஏதோ முணுமுணுத்துவிட்டு மெலாந்தி மலைப்பாதையின் மீது கவனத்தைச் செலுத்தினார்.

ஐந்து நிமிடத்தில் மலையை வந்தடைந்து குறுக்குப் பாதையில் இரப்பர் மரங்கள் இருக்கும் பகுதியைக் கடந்து குச்சிமிட்டாய் உள்ளே போய்க்கொண்டிருந்தான். பாதை எப்பொழுதுமே ஈரமாகவே இருக்கும் என்பதால் சில இடங்களில் வாகனச் சக்கரங்கள் சுழன்று முக்கின.

“தம்பி இதுக்குள்ள வீடு இருக்கா? இவ பயப்படுறா…”

குச்சிமிட்டாய் மகிழுந்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தான்.

“யோ! நான் என் வேலைய விட்டுட்டு அடுத்தவங்க காடிய கொண்டாந்து உங்களுக்கு உதவி செஞ்சிக்கிட்டு இருக்கன்… என்னா இப்டி கேக்குறீங்க? அப்படின்னா திரும்ப கீழ எறக்கி விட்டுர்றன்…”

“ஐயோ! தம்பி மன்னிச்சிருங்க. இவத்தான் பயந்துட்டா…”

சிறுமி ஏதும் நடவாததைப் போல இருளுக்குள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் இரப்பர் மரங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இது மெலாந்தி மல. இங்க உள்ளுக்கு ரெண்டு நிமுசம்தான். நம்ம வீடு ஒன்னு இருக்கு. பயப்படாதீங்க. வாங்க…”

குச்சிமிட்டாய் சொல்லி முடித்து அடுத்த சில நிமிடங்களில் மெலாந்தி வீட்டை மகிழுந்து சென்றடைந்தது. அகலமான வீடு. ஒரேயொரு மஞ்சள் விளக்கு வெளியில் எரிந்து கொண்டிருந்தது.

“தம்பி இங்க யாரு இருக்கா?”

அருகில் இருந்தவரின் பார்வை வீட்டை முழுவதுமாக வட்டமிட்டுக் கொண்டிருந்தன. குச்சிக்கு அப்பொழுதுதான் உள்ளே தனசேகர் கொண்டு வந்த ஆளை அவன் பதுக்கி வைத்திருப்பதை அவர்களிடம் சொல்லாமல் விட்டது சட்டென மண்டைக்குள் உறைத்தது.

“உள்ள ஒருத்துவக தங்கிருக்காக. நமக்கு வேண்டியவரு. அவர் இன்னொரு ரூம்புல இருப்பாக…”

மூவரும் கீழே இறங்கி மகிழுந்தின் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டு வீட்டின் ஓர் அறைக்குள் விளக்குத் தட்டப்படுவதைச் சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்

ஆக்கம்: கே.பாலமுருகன் 

 

(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)

பாகம் 1-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/

பாகம் 2-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/

பாகம் 3-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/

பாகம் 4-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/

பாகம் 5-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/

பாகம் 6-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/10/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-6/

பாகம் 7-ஐ வாசிக்க:

http://balamurugan.org/2020/04/11/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-7/

 

Share Button

About The Author

5 Responses so far.

  1. சிந்துமதி says:

    அடுத்த பாகத்திற்கு ஆவலாய் காத்திருக்கிறேன்… அருமையான கதை…

  2. JANANI A/P KRISHNAN says:

    Very Interesting story I like this story👍

  3. JANANI A/P KRISHNAN says:

    Nice story

  4. Tina Letchumanan says:

    Very interesting👌👌👌

  5. Nirmala says:

    Nalla todar.. Sirappaage ullathu