தொடர்க்கதை: பாகம் 1: மெலாந்தி பள்ளத்தாக்கு

முன்குறிப்பு: இது சிறுவர்களுக்கான தொடர்க்கதை அல்ல. படிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் துணையோடு வழிகாட்டுதலோடு வாசிக்கலாம்.

 

 

தூரத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் வெறுமனே கொய்யா மரத்தினோரம் படர்ந்திருந்த மஞ்சள் பூக்களுள்ள குமிழ் செடியைப் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன். அப்பொழுதுதான் அவனுக்குத் தன் மரணத்தைப் பற்றிய ஒரு செய்தி சட்டென மனத்தில் உதித்தது. மரணம் தற்செயல் என்கிறது யதார்த்தம். ஆனால், இறப்பவர்களுக்கு ஓர் உள்ளுணர்வு தோன்றும் என்று இதுவரை இறந்தவர்கள் சொன்னதாக எந்தச் சாட்சியும் இல்லைத்தான். அன்று சரவணனுக்குக் கிடைத்த அந்த உள்ளுணர்வுக்குக் காரணம் மெலாந்தி பள்ளத்தாக்கு.

அவன் தங்கியிருந்த வீடு அப்பள்ளத்தாக்கைப் பார்த்த மாதிரியான அமைப்பில் மலைப்பாதையின் ஓரமாய் அமைந்திருந்தது. இதற்கு முன் பெந்தோங், ஈப்போ, கிள்ளான் போன்ற இடங்களிலிருந்து தப்பி வந்த ‘பப்பாக்கள்’ சில காலம் இங்குத் தங்கிச் சென்றதுண்டு. சரவணன் அங்குக் கொண்டு வரப்பட்டு அன்றோடு பத்தாவது நாள். பத்து நாளும் வீட்டிலேயே இருந்து அவன் பார்த்து பார்த்து ஊடுருவிக் கொண்டிருந்த மெலாந்தி பள்ளத்தாக்கு அன்று வழக்கத்திற்கு மாறாக விரிந்து கொண்டிருந்தது.

பூமியின் பெருத்த வாயொன்றுக்குள் சென்று கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டான். தூரத்தில் சோம்பேறித்தனத்துடன் வழிந்து கொண்டிருக்கும் சிறிய அருவியொன்றும் அதனூடே தெரியும் பெரும்பாறைகளும் பாறைகளைச் சுற்றி வளர்ந்து எதையோ எட்டிப் பிடிக்க மேலேறிக் கொண்டிருக்கும் பச்சைக் கொடிகளும் படர்ந்து பதுங்கிக் கொண்டிருக்கும் குட்டை மரங்களும் சரவணின் மனத்தை வடிவமைத்துக் கொண்டிருந்தன.

காலை, மாலை, இரவு என்று ஒவ்வொரு பொழுதையும் சரவணன் நிதானமாக கவனிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டான். தூரத்தில் குச்சிமிட்டாய் மோட்டாரின் சத்தம் கேட்கும்போது சரவணன் பள்ளத்தாக்கை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். குச்சிமிட்டாய் மெலாத்தி பள்ளத்தாக்கின் ஓரமுள்ள ஒரு கம்பத்தைச் சேர்ந்தவன். சரவணன் இங்கிருக்கும்வரை குச்சிமிட்டாய்தான் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் பேசக்கூடியவன் மட்டுமல்ல கேள்விகளை உதடுகளில் அதக்கி வைத்துத் தயாராகவே இருப்பான். சரவணன் இப்பொழுது அதிகம் பேச விரும்புவதில்லை. ஏனோ ஒரு அமைதியான மனநிலைக்குள் வந்துவிட்டான்.

குச்சிமிட்டாயின் கையில் மதிய உணவு. முன்கதவின் சாவி அவனிடம் மட்டுமே இருந்தது. திறந்து உள்ளே வந்துவிட்டு மீண்டும் உடனே பூட்டிவிடுவான். சரவணன் அங்கு வந்த பத்து நாள்களில் குச்சிமிட்டாய் தவிர அத்தனித்த வீட்டுப் பக்கம் வேறு ஆள் நடமாட்டத்தை அவன் பார்க்கவேயில்லை. எப்பொழுதாவது ஒரு மூசாங் பூனை மட்டும் வந்து வீட்டு ஓட்டின் மீதேறி ஓடி சிறு கலவரத்தை ஏற்படுத்திவிட்டு ஓடிவிடும். சுற்றி வளர்ந்திருக்கும் ஊசி இலை மரங்கள் இலாவகமாக வீட்டின் தோற்றத்தை வெளியாள்களிடமிருந்து தற்காத்து வைத்திருந்தது.

“பாங்… வாங்க சாப்டுங்க. நெத்திலி சம்பால் இன்னிக்கு,”

குச்சிமிட்டாய்க்கு எப்படியும் 30 வயது இருக்கும் ஆனால் குரல் மட்டும் இன்னமும் முதிர்ச்சிப்பெறாத ஒரு சிறுவனின் குரல். கேட்கும்போதெல்லாம் எரிச்சலை உண்டாக்கும். நம்மை இத்தனை கேள்விகள் கேட்டுத் துளைக்கும் ஒரு குரல் சிறுவனுடையது என்பதில் ஏன் இத்தனை ஆத்திரம் அவனுக்குப் பொங்கி வந்தது என்று சரவணனால் கணிக்க இயலவில்லை.

மரப்பலகையால் ஆன நாற்காலியில் அமர்ந்து கொண்டே குச்சிமிட்டாயைப் பார்த்தான்.

“உனக்கு ஏன்டா குச்சிமிட்டாய்ன்னு பேரு?”

“பாங்! இன்னிக்குத்தான் இதைக் கேட்குறீங்க. நான் ரொம்ப எதிர்பார்த்தன் கேட்பீங்கன்னு… அது ஒன்னும் பெரிய கதைலாம் இல்ல பாங். சின்ன வயசுல அம்மா எங்க போய் விட்டாலும் ஒரு குச்சிமிட்டாய் வாங்கிக் கொடுத்துட்டுப் போவாங்க. அப்பத்தான் நான் அழுகைய நிப்பாட்டுவனாம். அப்படியே எனக்கு அதே பேராச்சு…”

“அப்படின்னா உன் உண்மையான பேரு?”

“அதை விடுங்க பாங். நீங்க குச்சிமிட்டாய்ன்னே கூப்டுங்க. எனக்கும் அதான் பிடிக்கும்…” என்றவாறே உதடுகளைத் தாண்டி நீட்டிக் கொண்டிருந்த முன் பற்களைக் காட்டினான்.

“குச்சி! சாவறதைப் பத்தி என்ன நினைக்கற?”

“நேரம் வந்துருச்சின்னா எல்லா போய்த்தான் ஆகணும் பாங். வேணானு சொன்னா எமன் என்ன விடவா போறாக? சாவு ஒரு கொடூரமான மிருகம் மாதிரி. வெளிலத்தான் காத்திருக்கு. எப்ப நமக்குச் சந்தர்ப்பம் வருதோ மேல பாஞ்சிரும் பாங்… உங்களுக்குத் தெரியாததா? நீங்க பெரிய மண்டென்னு கேள்விப்பட்டன்… எத்தன கேஸ் பாங்?”

“8 கொலை. 42 ஜாமான் கேஸ்… பதினஞ்சி பெச்சா ரூமா…”

“பாங்… பெரிய கேங்தான் நீங்க…”

சரவணன் நாற்காலியில் சாய்ந்து தலைக்கீழாகத் தெரியும் பள்ளத்தாக்கை மீண்டும் பார்த்தான். காத்திரமாக இறங்கிக் கொண்டிருந்த வெய்யிலினால்கூட அதன் ஆழத்தில் நெளியும் இருளைச் சிறிதும் களைக்க இயலவில்லை.

“குச்சி! பயமா இருக்கா?”

“பாங். இந்த வீட்டுல இதுவரைக்கும் பதிமூனு மண்டைங்க, பப்பாங்க வந்து தங்கிருக்காங்க. போன மாசம் பெனாங்ல ஒருத்தன வீடு புகுந்து சுட்டாய்ங்களே…? அவக இங்க 2005ல வந்து ரெண்டு வாரம் தங்கிருந்தாக. நான் தான் பார்த்துக்கிட்டன்…”

“குச்சி! பாவத்துக்குப் பால் ஊத்தி வளர்க்கறது எவ்ள குரூரமான விசயம் தெரியுமா?”

சரவணனின் உதட்டினோரம் மறைந்திருந்த மௌனச் சிரிப்பு குச்சிமிட்டாய்க்கு ஒருவித பதற்றத்தை உண்டாக்கியிருக்கலாம்.

“பாங்! என்ன கவிதைலாம் சொல்றீங்க… தத்துவம்லாம் பேசறீங்க. சாப்ட்டுட்டு ஒரு பியர் இருக்கு ஐஸ் பெட்டியில. நல்லா தூங்கலாம்…”

“குச்சி! இன்னிக்கு ராத்திரி நான் செத்துருவன்னு நெனைக்கறன்!” என்று பதற்றமில்லாமல் சொல்லிவிட்டு சரவணன் சாப்பாட்டுப் புட்டியைத் திறந்தான்.

-தொடரும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்

Share Button

About The Author

9 Responses so far.

  1. Kayalvili says:

    Really waiting… for the story..

  2. K.Sri Devi says:

    Very interesting. I’m waiting…..

  3. Jey says:

    Very Intresting…
    Waiting for story part two

  4. ஈஸ்வரி குணசேகரன் says:

    வாசித்தேன். அடுத்த கட்ட நகர்விற்குக் காத்திருக்கிறேன்.

  5. S.Thulasi Devi says:

    அருமையான கதை ஐயா..அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்

  6. Rimardini says:

    ஐயா இந்த கதையை வாசிக்க வாசிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது….
    அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் ஐயா..

  7. Nirmala says:

    Arumaiyaane karpanai

  8. Arvin says:

    Very very interesting
    Sir

  9. Sudhan says:

    Arumaiyana kathai aiyah