குறுங்கதை – 3 : கொரோனாவும் மணிகண்டனும்

 

“மச்சான்! வீட்டுல இருக்க கடுப்பா இருக்கு. வெளில பாக்கலாமா?”

“அதான் வீட்டை விட்டு வெளில வரக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்காங்களே… இப்ப எப்படிடா?”

“மச்சி! சட்டம் போடறவங்க போடுவாங்க. நம்ம வேலைய நம்ம பார்க்க வேண்டியதுதான். வெளில வா நம்ம அப்போய் கடைக்குப் பின்னால. நம்ம ராஜன்கிட்டயும் அப்புக்கிட்டயும் சொல்லிரு. ரவுண்டு போடறம் இன்னிக்கு…”

மணிகண்டகன் வீட்டைவிட்டு வெளியே வரும்போது ஓர் ஒற்றைக் காகம் மட்டும் கரைந்து கொண்டே மின்சாரக் கம்பத்திலிருந்து பறந்து சென்றது. ஆள் அரவமற்ற சாலை. மோட்டாரை முடுக்கிய பின் சுற்றிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டே அப்போய் கடையின் பின்பக்கம் வந்து சேர்ந்தான்.

அம்மாவிடமிருந்து அழைப்பு இருமுறை வந்து ஓய்ந்திருந்தது. மணிகண்டன் மீண்டும் அழைத்தான்.

“டேய்! உன்னை யாருடா இந்த நேரத்துல வீட்டுலேந்து வெளில போக சொன்னது? அடக்கமா வீட்டுல இருக்க முடிலத்தானே?” அம்மாவின் கோபக்குரல் அழைப்பேசிக்கும் வெளியே சத்தமுடன் ஒலித்தது.

“அப்புறம் உன் மூஞ்சயும் அப்பா மூஞ்சயும் எத்தன தடவ வீட்டுல உட்கார்ந்து பார்த்துக்கிட்டு இருக்கறது?” மணிகண்டன் பதிலுக்கு எரிந்து விழுந்தான்.

“பேசுவடா நீ… அந்தச் சீக்கு வந்தா அப்புறம் தெரியும்டா… நம்மத்தானே கவனமா இருக்கணும்?”

“ம்மா… நீ எந்தக் காலத்துல இருக்க? தமிழனுக்குக் கொரோனா வராதாம். வாட்சாப் பார்க்கலயா? போதிதர்மரோட இரத்தம் நம்ம உடம்புல ஓடுதாம்…” ஒருவித பெருமித குரலுடன் மணிகண்டன் சிரித்தான்.

“டேய்! உன் உடம்புல ஓடறது உங்க அப்பா இரத்தம்டா. கண்டதைப் படிச்சிட்டு உளறிக்கிட்டு இருக்காத. நாட்டுல என்ன சொல்றாங்களோ அதை மதிச்சி நடக்கறதுதான் நல்ல குடிமகனுக்கு அழகு. அப்புறம் பட்டாதான் தெரியும்!”

கடைகள் அடைத்துக் கிடந்ததால் இருள் மட்டும் ஒரு கருப்புப் பூனையைப் போல சுற்றியலைந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் ராஜன் தன் மோட்டாரில் பரப்பரப்புடன் வந்து சேர்ந்தான்.

“டேய் மச்சான் வீட்டுக்கு ஓடிரு! சீக்கிரம் கெளம்புடா!” ராஜனின் வார்த்தைகள் தடுமாறின.

“என்னடா ஆச்சு?”

“போலிஸ் இந்த இடத்தைச் சுத்திருச்சிடா. நீ மோட்டர ரேம் செஞ்சிக்கிட்ட வந்தீயா? சீக்கிரம் ஓடு…”

மணிகண்டன் கொஞ்சம் தடுமாற்றத்துடன் மோட்டாரை எடுத்துக் கொண்டு வெளியேறவும் கடைத்தெருவின் ஓரக்கல்லில் மோதவும் மோட்டாருடன் சாலையில் தேய்த்துக் கொண்டு விழும்போது காவல்துறை வாகனம் அவனைச் சுற்றி வளைக்கவும் மிகச் சரியாக அனைத்துமே நிகழ்ந்தன.

************************

“ஹலோ மா! போலிஸ் பிடிச்சிருச்சிமா… அப்பா எங்க?” நடுக்கத்துடன் மணிகண்டன்.

“போதி தர்மரை வரச் சொல்லட்டாடா?” என்றது அம்மாவின் குரல்.

-கே.பாலமுருகன்

(வீட்டில் இருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு)

Share Button

About The Author

2 Responses so far.

  1. Shalini says:

    Nice story.

  2. Vikneswari says:

    Very interesting story to read.