நேர்காணல் தொடர் பாகம் 2: ‘கதை எழுதும் திறமை என்னை அறியாமலே எனக்கு வந்தது’ – இளம் எழுத்தாளர் பூவிழி ஆனந்தன்

 

இளையோர் சிறுகதை போட்டியின் வெற்றியாளர்களின் நேர்காணல் தொடர்

கதை எழுதும் திறமை என்னை அறியாமலே எனக்கு வந்தது – பூவிழி ஆனந்தன்

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் நடத்திய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2019-இல் வெற்றிப்பெற்ற மாணவி பூவிழி ஆனந்தன். தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து இளையோர் சிறுகதைகளில் இவருடைய அவள் கண்ட மாற்றம்’ எனும் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. பினாங்கு, பெர்மாத்தாங் பாவ்வைச் சேர்ந்த இவர் சிறுகதை எழுதுவதில் அதிக நாட்டம் கொண்டதோடு பெரிய இலட்சியங்களோடு தென்படுகிறார்.

 

கேள்வி: உங்களுக்குச் சிறுகதை எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

பூவிழி: எனக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் அதிகம். ஆகையால், நான் பார்க்கும் படங்களின் கதையை என் சொந்த வடிவில் மாற்றி எழுத ஆரம்பித்தேன். பின்பு சுயமாகவே கதை எழுதினேன். கதை எழுதும் திறமை என்னை அறியாமலே எனக்கு வந்தது என்று கூறுவதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

கேள்வி: இச்சிறுகதை எழுதும்போட்டியில் பங்கெடுக்க யார் உங்களை ஊக்குவித்தவர்கள்?

பூவிழி: என்னுடன் படித்த என் பள்ளி்த் தோழி நிஷா. இடைநிலைப் பள்ளியின்போது அவளிடம் பகைமை கொண்டு  பேசாமல் இருந்தேன். பல மாதங்கள் கழித்து அவளிடமிருந்து வந்த இப்போட்டியின் அறிவிப்பு பற்றின குறுந்தகவல் என்னை இன்பத்தில் மூழ்க செய்தது. என்னதான் பகைமை கொண்டாலும் என் திறமையை நன்கு அறிந்து என்னை கலந்து கொள்ளும்படி ஊக்குவித்தாள். அதுவொரு மெய்சிலிர்த்துப் போன தருணம் என்றே வகைப்படுத்தலாம்.

 

 

கேள்வி: இதற்கு முன் ஏதேனும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?

பூவிழி: 13 வயதிலிருந்தே கதை எழுதும் பழக்கம் உண்டு. ஆனால், என் திறமைக்கான வெற்றி மகுடத்தை முதன் முதலில் 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ரீதியில் நடைபெற்ற வளர் தமிழ் விழாவில் “கடமை” என்ற கருப்பொருளுக்கினங்க , அப்பா மகள் உறவு சார்ந்த கதைக்கு முதல் பரிசை பெற்றேன். பல வருட அனுபவம் கொண்ட மாணவர்களின் மத்தியில் வெற்றியின்மீது நம்பிக்கை இல்லாதபோது கிடைத்த சாதனை அது. அதற்குப் பிறகு இப்பொழுது மீண்டும் ஒரு வெற்றி வாய்ப்பாக தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் என் திறமைக்கொரு வாசலைத் திறந்துவிட்டதென்றே சொல்லலாம்.

 

கேள்வி: இச்சிறுகதை போட்டியின் வாயிலாக என்ன எதிர்பார்த்தீர்கள்? அதனைப் பெற்றீர்களா?

பூவிழி: நான் எந்த இடத்தை பெற்றிருப்பேன் என்ற ஆர்வம் இருந்தாலும், ஒரே வட்டத்திற்குள் இருந்த என் கதை இப்பொழுது நிறைய பேரிடம் சேர போகிறது என்பதில் மிக மிக பெருமிதம் கொள்கிறேன்.

 

கேள்வி: இவ்வெற்றிக்காக யாருகென்னால் நன்றி சொல்ல விளைகிறீர்கள்?

பூவிழி: முதல் நன்றி என்னை பள்ளியில் ஊக்குவித்த என் தமிழ் ஆசிரியைத் திருமதி சாந்தி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து இக்கதைப் போட்டியைப் பற்றி எனக்குத் தெரியபடுத்திய என் தோழி நிஷாவிற்கு நன்றி. இறுதியில் மிக முக்கியமாக இக்கதை எழுதி முடிக்கும்வரை அவர்களின் வேலையை ஒதுக்கி எனக்கு உதவிய என் இரு தோழர்கள் இராஜா மற்றும் சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கேள்வி: போட்டியில் வெற்றிப் பெற்ற சிறுகதையை எழுதும் முன் ஏதேனும் பயிற்சிகளை மேற்கொண்டீர்களா?

பூவிழி: தனியாக அதற்குரிய எவ்வித பயிற்சியையும் நான் மேற்கொண்டதில்லை. ஆனால், ஒரு சிறுகதையை எழுதும் முன் கண்களை மூடி அக்கதைக்கான சம்பவங்களை வரிசையாக மனத்தில் ஓடவிட்டு இரசிப்பேன். பின்னர், அங்கிருந்து ஒரு வடிவம் மனத்தில் உண்டாகி சிறுகதையை எழுத துவங்கிவிடுவேன். இது எனக்கொரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்று அனுபவத்தைக் கொடுக்கும்.

கேள்வி: இப்போட்டியில் வெற்றிப் பெற்ற உங்களின் ‘அவள் கண்ட மாற்றம்’ சிறுகதையை எவ்வாறு திட்டமிட்டீர்கள்? அக்கதைக்கான கரு எப்படிக் கிடைத்தது?

பூவிழி: முன்பே சொன்னதைப் போல என் மனத்தில் நான் ஓடவிட்டுக் கண்டடைந்த ஒரு கதைத்தான் ‘அவள் கண்ட மாற்றம்’. இக்கதைக்கான கருவை நான் என் வாழ்க்கைக்குள்ளிருந்தே தேடிக் கண்டு கொண்டேன். அது பலநாள் மனத்தில் ஊறிக் கொண்டே இருந்தது. அதற்கொரு விடியற்காலம் பிறந்ததைப் போல இச்சிறுகதை போட்டி அமைந்திருந்தது. ஆகவே, முதலில் இச்சிறுகதை போட்டியை ஏற்பாடு செய்து என்னைப் போன்ற பல மாணவர்களின் உள்ளக்கிடங்கில் கிடக்கும் கதைகளை வெளிக்கொணரும் ஆசிரியர் திரு.கே.பாலமுருகன் அவர்களுக்கும் அவர்தம் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் சிறுகதையைப் புத்தகத்தில் வாசிக்க மறவாதீர்கள்.

நேர்காணல்: கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.