யார் கொலையாளி? – பாகம் 3 (ஒரு விசாரணைத் தொடர்)

 

கொல்லப்பட்டவரைப் பற்றிய விபரங்கள்:

பெயர்: மணிமாறன் த/பெ கந்தசாமி

வயது: 34

கொல்லப்பட்ட இடம்: செனாய், ஜொகூர் (அவருடைய வீடு)

கொல்லப்பட்டதற்கான காரணம்: ‘கேங்’ சண்டை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட விதம்: உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம், தலையின் இடது பக்கத்தில் ஓர் ஆழமான வெட்டில் மரணம் ஏற்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நாள்: 14.12.2018

நேரம்: மாலை 5.00லிருந்து இரவு 8.30க்குள் இருக்கலாம்.

கொல்லப்பட்டவரின் விவரங்கள்:

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக புக்கிட் காயூ ஹீத்தாம் (தாய்லாந்து மலேசியா எல்லை)-யில் பிடிப்பட்டு நான்காண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்தவர். பின்னர், ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாகவும் அதே சமயம் அங்கும் போதைப்பொருள் கைமாற்றம் செய்து வேலையை விட்டு நீக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கொலைக்கு முன்பு நான்கு மாதங்கள் வேலை ஏதும் இல்லாமல் செனாயில் சுற்றிக் கொண்டு அடித்தடியில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல் பெறப்பட்டன. எப்பொழுதும் அவன் வீட்டைத் தேடி பலர் சந்தேகப்படும்படி வந்ததால் அக்கம் பக்கத்தில் காவல்துறையில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அவனுடைய வீடு இருந்த அதே வரிசையில் குடியிருந்த திரு.கணேசன் முதலில் காவல்துறையில் புகார் கொடுத்த போதே இக்கொலை கண்டறியப்பட்டது.

 

வாக்குமூலம் 1:

திரு.கணேசன் (அண்டை வீட்டார்)

மணிமாறன் என்பவனை எனக்கு ஒரு வருடம் மட்டுமே பழக்கம். ஆரம்பத்தில் இங்குள்ளவர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருந்தபோது எனக்கும் வீட்டில் சாயம் பூச ஒருமுறை உதவியிருக்கிறான். அப்பொழுதிலிருந்துதான் பழக்கம். ஆனால், முதலில் அவனுடைய பின்புலம் எனக்குத் தெரியாமல்தான் பழகினேன். பின்னர், அங்கு அவனுக்குக் குண்டல் கும்பல் ஆட்களுடன் தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்டுத்தான் அவனிடமிருந்து விலகினேன். அதன் பிறகு அவனுடன் பேச்சு வார்த்தை இல்லை. ஒருமுறை குடித்துவிட்டு என் வீட்டின் முன் நின்று கத்திக் கொண்டிருந்தான். அப்பொழுதும் அவன் மீது ஒரு புகார் கொடுத்த தகவல் இருக்கும்.

அன்றைய இரவு மணிமாறனின் வீட்டிலிருந்து எனக்குத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அதிர்ந்துபோனேன். அவன் வீட்டிலிருந்து ஒரு நான்கு வீடு தள்ளியே என் வீடாக இருந்தாலும் அச்சத்தம் என் உடலையே ஒருமுறை நடுங்கச் செய்துவிட்டது. உடனே, நான் தான் முதலில் காவல்நிலையம் சென்று அவன் மீது புகார் கொடுத்தேன்.

 

 

காவல்துறை திரு.கணேசனிடம் எழுப்பியக் கேள்விகள்:

1.உங்களுக்கும் மணிமாறனுக்கும் இருந்த நட்பு அங்குள்ள அனைவருக்கும் தெரியுமா?

கணேசன்: அந்த வீட்டு வரிசையில் இருந்த சிலருக்கும் மட்டும் தெரியும். அவன் அங்கும் சிலரிடம் என்னைப் போலவே பழகி வந்தான். ஆனால், என்னைப் போல அவனிடம் நெருங்கி யாரும் பழகியது பற்றி எனக்குத் தெரியவில்லை.

 

2.அவன் வீட்டுக்கு வந்தவர்களில் யார் மிகவும் சந்தேகப்படக்கூடிய அளவில் இருந்தது?

கணேசன்: எனக்கு அது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அந்தத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அவன் வீட்டை விட்டு ஒரு வயதான பெண்மணி மட்டும் வெளியில் போனதை நான் பார்த்தேன். ஆனால், யார் என்று தெரியவில்லை.

 

3. அவரை இதற்கு முன் வேறு எங்காவது பார்த்த ஞாபகம்?

கணேசன்: இல்லை. அந்த முகம் அவ்விடத்திற்கு முற்றிலும் புதிது என்று நினைக்கிறேன்.

 

4.இதற்கு முன் அப்படி யாரும் பெண்கள் அவர் வீட்டிற்கு வந்ததாக ஏதும் தகவல் உண்டா? நீங்கள் பார்த்த அப்பெண்மணியின் முகத்தை அடையாளம் காட்ட இயலுமா?

கணேசன்: அவன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தான். அவளைச் சில நேரங்களில் வீட்டிற்கு அழைத்து வருவதாக ஆட்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் வீட்டில் பார்த்தது இல்லை. ஆனால், நான் பார்த்த அவ்வயதான பெண்மணியின் முகம் இருட்டில் தெளிவாகத் தெரியவில்லை.

 

5.அவருடைய காதலியை உங்களுக்குத் தெரியுமா?

கணேசன்: சிலமுறை அவனோடு மோட்டாரில் செல்வதைப் பார்த்துள்ளேன்.

 

6.துப்பாக்கி சுடும் சத்தம் என்று சொல்கிறீர்கள் ஆனால் இறந்தவர் வெட்டுக் காயங்கள் பட்டுத்தான் மரணம் அடைந்துள்ளார். இதில் உள்ள முரண் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கணேசன்: எனக்கும் அது புரியவில்லை. அவன் நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் இந்த நியாமெல்லாம் சிந்திக்கத் தூண்டியிருக்கும். இப்போதைக்கு இதுதான் என் எண்ணம்.

 

 

 வாக்குமூலம் 2:

 மணிமாறனின் காதலி சங்கீத்தா

 

எனக்கும் அவனுக்கும் இருந்த உறவு இவ்வருடம் ஜூன் மாதத்திலேயே இல்லாமல் போய்விட்டது. நான் தான் அவனை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அவனுடைய நடத்தையில் எனக்குச் சந்தேகம் இருந்தது. அவனுக்கு இருந்த போதைப்பொருள் பழக்கம்தான் என்னை அவனிடமிருந்து தூரமாக விலக்கியது. மேலும், ஒருமுறை அவன் நண்பன் முரளியை அழைத்து வந்து என்னிடம் தகாத வார்த்தைகளில் பேசினான். அப்பொழுதுதான் என்னால் தொடர்ந்து அவனுடன் காதலில் இருக்க முடியவில்லை. அவன் மரணம்கூட பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

 

காவல்துறை சங்கீத்தாவிடம் எழுப்பியக் கேள்விகள்:

 

1.ஜூன் மாதத்திற்குப் பின்னர் மணிமாறனை நீங்கள் வேறு எங்கும் சந்திக்கவில்லையா?

 

சங்கீத்தா: இல்லை. நான் மலாக்காவிலுள்ள என் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆதலால், அவன் தொல்லை கைப்பேசியின் வழியாகக் கொஞ்ச நாள் இருந்தது. கைப்பேசி எண்ணையும் மாற்றிவிட்டதால் அதன் பின்னர் அவனை நான் முற்றிலும் மறந்துவிட்டேன்.

 

2.நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்? இப்பொழுது என்ன வேலை?

சங்கீத்தா: எனக்குப் படிப்பு அவ்வளவாக இல்லை. பி.எம்.ஆர் வரைத்தான் படித்தேன். இப்பொழுது அக்காவின் சிபாரிசில் ஒரு பேரங்காடியில் வேலை செய்கிறேன்.

 

3.மணிமாறனின் நண்பன் முரளி எப்படிப்பட்டவர்? இருவரின் நட்பு எந்த அளவில் இருந்தது?

 

சங்கீத்தா: அவரைப் போல முரளியும் போதைப்பொருள் கடத்தலில் இருந்தவன் தான். ஆனால், அவன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் தீயப்பழக்கங்கள் உள்ளவன். மணி அவனுடன் சில நேரங்களில் மட்டும்தான் இருந்திருக்கிறார். மணிக்கு இன்னொரு நெருங்கிய நண்பர் இருப்பதாகவும் அவர்தான் சிறையில் மணிக்கு உதவியதாகவும் சொல்வார். ஆனால், பெயர் விபரமெல்லாம் எனக்குத் தெரியாது.

 

4.கொலை நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் மணிமாறனின் வீட்டிலிருந்து ஒரு வயதான பெண்மணி வெளியானதை திரு.கணேசன் பார்த்ததாகச் சொல்லியிருந்தார். அப்பெண்மணி யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

 

சங்கீத்தா: மணிமாறனுடைய உறவினர்கள் பற்றியோ குடும்பத்தைப் பற்றியோ என்னிடம் அவர் சொன்னதே இல்லை. அவர் சிறைக்குப் போனதும் அவர் குடும்பத்தினரை விட்டுத் தூரம் வந்துவிட்டதாக சொன்னார். அவருடைய பூர்வீகம் எல்லாம் பெர்லிஸ் என்றுத்தான் கேள்விப்பட்டேன். ஆனால், எது உண்மை என்று இப்பொழுது கணிக்க முடியவில்லை.

 

5.திரு.கணேசன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

சங்கீத்தா: அவர் கொஞ்சம் கோபக்காரர். மணிமாறன் மீது பலமுறை புகார் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கடைசியாக அவர் வீட்டின் முன் நின்று கத்தியதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன், அவர் புகார் கொடுத்துக் காவல்துறையில் மணிமாறனைப் பிடித்து இரண்டு நாட்கள் உள்ளே வைத்திருந்தார்கள். கணேசனின் வீட்டில் அவருடைய கடைசி மகளை மணிமாறன் சீண்டியிருக்கிறான். என்னுடன் மோட்டாரில் சுற்றும்போதே அவளைப் பார்த்தால் கிண்டல் செய்வான். ஒருவேளை கணேசனுக்கு இதனால்கூட மணியைப் பிடிக்காமல் போயிருக்கலாம்.

 

வாக்குமூலம் 3:  

முரளியின் அம்மா திருமதி செல்லம்மாள்

 

என் பையன் முரளி காணாமல் போய் எப்படியும் இரண்டு மாதங்கள் இருக்கலாம். கடந்த அக்டோபர் 21ஆம் திகதி அவன் கடைசியாக வீட்டிற்கு வந்தான். அதன் பின்னர் வெளியில் போனவன் வரவே இல்லை. இப்பொழுது வரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. மணிமாறனின் கொலை செய்தி கேள்விப்பட்டதும் எனக்கும் பயம் ஏற்பட்டுக் கொண்டது. ஒருவேளை முரளியையும் யாராவது கொன்று எங்காவது வீசியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

 

திருமதி செல்லம்மாளிடம் காவல்துறை எழுப்பியக் கேள்விகள்:

1.உங்கள் பையனுக்கும் மணிமாறனுக்கும் இடையே இருந்த உறவு எப்படிப்பட்டது?

செல்லம்மாள்: இந்த மணிமாறனால்தான் என் பையன் இப்படி ஆனான். அவனைச் சந்திக்கும் முன் முரளி அவன் உண்டு அவன் வேலை உண்டென இருந்தான். இருவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தார்கள். அப்பொழுதுதான் பழக்கம் ஏற்பட்டு இந்தப் போதைப்பொருளுக்கும் முரளி அடிமையானான். இரண்டு பேரும் அயோக்கியர்கள்தான். இதில் என் பையன் என்ன அவன் என்ன?

 

2.உங்கள் பையன் காணாமல் போகும் முன் ஏதாவது சந்தேகப்படும்படி நடந்ததா?

செல்லம்மாள்: ஓர் அழைப்பேசி அடிக்கடி வந்து கொண்டிருந்தது அவனும் கொஞ்சம் பரப்பரப்பாக இருந்தான். பின்னர் அன்றைய இரவில் வெளியாகிப் போனவன் மறுநாள் இரவுத்தான் வீட்டிற்கு வந்தான். எங்குப் போனான் என்றெல்லாம் என்னிடம் சொல்ல மாட்டான். வீட்டிற்கு அவனைத் தேடி யாரும் வந்ததில்லை.

 

3.முரளி காணாமல் போன பின் நீங்கள் அவரைப் பற்றி மணிமாறனிடம் கேட்டீர்களா?

செல்லம்மாள்; இரண்டு முறை அவனிடம் கெஞ்சிக் கேட்டேன். முகத்தில் அடித்ததைப் போல அவன் காட்டிய அலட்சியங்கள்தான் என்னைப் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. என் பையனின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு என்னை எட்டி உதைக்காத குறையாக துரத்தினான்.

 

4.முரளியைப் பற்றி எந்தத் தகவலையும் மணிமாறன் சொல்லவில்லையா?

செல்லம்மாள்: இல்லை. எனக்குத் தெரியாது என்று மட்டுமே சொன்னான்.

 

5.நீங்கள் மணிமாறனை எங்கு எப்பொழுது சந்தித்தீர்கள்?

 

செல்லம்மாள்: முரளி காணாமல்போன அதே மாதத்தில்தான். திகதியெல்லாம் ஞாகபத்தில் இல்லை. அவனைத் தேடி ஒருமுறை வீட்டிற்குப் போனேன். ஆனால், அவன் அங்கு இல்லை. பின்னர், மதியத்தில் அவனை அங்கிருக்கும் ஒரு சீனக்கடையில் கண்டுவிட்டேன். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அவனை தெஸ்கோ பேரங்காடியில் தற்செயலாகப் பார்த்துக் கேட்டேன். அவ்வளவுத்தான் ஐயா.

 

**************

 

 

சந்தேகத்திற்குரிய தடயம் 1: துப்பாக்கி சத்தம் கேட்டதாக திரு.கணேசன் மட்டுமே புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த வரிசையில் இருக்கும் சிலர் அப்படிக் கேட்கவில்லை என்றும் அது பட்டாசு சத்தம் என்றும் தெரிவித்திருந்தார்கள். மேலும், திரு.கணேசன் அவருடைய கடைசி மகள் விவகாரம் குறித்து இதுவரை எந்தப் புகாரிலும் குறிப்பிட்டத்தில்லை.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 2: ஜூன் மாதத்திற்குப் பின்னர் தனக்கும் மணிமாறனுக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கும் சங்கீத்தா அதே வாக்குமூலத்தில் செப்டம்பர் மாதத்தில் நடந்த கணேசன் மகள் விவகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 3: கொலை நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் திருமதி செல்லம்மாள் செனாயில் இருக்கும் (மணிமாறனை அவள் சந்தித்த) சீனக்கடையில் வெகுநேரம் அமர்ந்திருந்ததைச் சிலர் தனிப்பட்டப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 4: திரு.கணேசன் அவர்களுக்கு இரண்டு முறை கண் சிகிச்சை செய்திருப்பதால் அவருடைய அருகாமை மற்றும் தூரப்பார்வையில் சிக்கல் இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் குறிப்பிடுகிறது.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 5: மணிமாறனின் வீட்டின் பின்பகுதியில் இருக்கும் சீனர் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன் மணிமாறனின் நண்பன் முரளி பின்பக்கமாக மணிமாறனின் வீட்டில் நுழைந்ததாக உறுதியாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 6: மணிமாறன் சிறையில் இருக்கும்போது ஒரு பெண்மணி பெயர் குறிப்பிட விரும்பாமல் அவனைப் பார்க்க 17 முறை வந்துள்ளார்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 7: பெர்லிஸில் மணிமாறனின் குடும்பத்தைப் பற்றி எந்தவொரு தகவலும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

யார் கொலையாளி?

 

சந்தேகத்திற்குரிய நபர் 1: திரு.கணேசன்

சந்தேகத்திற்குரிய நபர் 2: திருமதி செல்லம்மாள்

சந்தேகத்திற்குரிய நபர் 3: சங்கீத்தா

சந்தேகத்திற்குரிய நபர் 4: நண்பன் முரளி

சந்தேகத்திற்குரிய நபர் 5: இன்னமும் விசாரணையில் உள்ளது.

 

குறிப்பு: மணிமாறன் இறப்பதற்கு முந்தைய இரவு அவனுக்குச் சில கனவுகள் வருகின்றன.

கனவு 1: அவன் போதையில் ஒரு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறான். மண்ணிலிருந்து திடீரென பாலும் தண்ணீரும் இரத்தமும் கொந்தளித்து வெளிவருகின்றன.

கனவு 2: அவனை விடாமல் யாரோ துரத்துகிறார். அவனால் யாரென்று கணிக்க இயலவில்லை.

கனவு 3: ஒரு பளபளப்பான கத்தி அவன் முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது.

 

ஆக்கம்: கே.பாலமுருகன்

Share Button

About The Author

3 Responses so far.

  1. உமா says:

    கொலையாளி கணேசன்

  2. Robert says:

    சந்தேகத்திற்குரிய நபர் 5: இன்னமும் விசாரணையில் உள்ளது.

  3. பாலமுருகன் says:

    உமா@

    தவறான ஊகம். கொலையுண்டவனின் கனவில் இருக்கும் குறியீடுகளையும் கதையில் வரும் சம்பவங்களையும் கோர்த்துப் பாருங்கள்.

    ரோபர்ட்@

    சரியான ஊகம். ஆனால், யார் அந்தக் கதையில் இல்லாத மறைந்திருக்கும் மர்ம நபர்? கனவை ஆராயுங்கள்; பதில் கிடைக்கும்.