சிறுவர் நாவல் பயணம் – கேள்வி பதில்

2014ஆம் ஆண்டு, மலேசிய சிறுவர்களுக்காக அவர்களின் வாழ்வைக் கற்பனைவளத்துடன் சொல்லும் மர்மமும் விருவிருப்பான கதையோட்டமும் கொண்ட ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற தமிழில் முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவலை எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதி வெளியிட்டார்.  அவர் அதனைத் தொடர் நாவல் என்றும் அறிமுகப்படுத்தினார். அதுவே ஒரு முதல் முயற்சியாகவும் எல்லோரினாலும் கருதப்பட்டது.  அந்நாவல் பயணம் பத்தாம் பாகம் வரை செல்லும் என்று அவரே தன்னுடைய ஆஸ்ட்ரோ விழுதுகள் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அதே போல ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடைய சிறுவர்  தொடர் மர்ம நாவல் பாகம் 3 வெளியீடு கண்டுள்ளதையொட்டி அவரிடம் கலந்துரையாடல் நிகழ்த்தவுள்ளோம்.

கேள்வி: மர்மக் குகை, மோகினி மலை முடிந்து  இம்முறை மர்மமான அடுக்குமாடி போல?

கே.பாலமுருகன்: இம்முறை என் வாழ்நாளில் நான் அனுபவித்த ஓர் அடுக்குமாடியைக் கற்பனையில் வைத்துக் கொண்டுத்தான் இந்நாவலை எழுதினேன். இதில் வரும் 50% வாழ்க்கை முறை நான் நேரில் கண்டவையாகும்.  அடுக்குமாடியில் வசிக்கும் சிறுவர்களுக்கென்றே ஒரு மனோபாவத்தை நான் கண்டுள்ளேன். அவர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்களாக அதனை அதீதமாக நேசிப்பவர்களாக இருப்பார்கள். எப்பொழுது வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனத் தவிப்பார்கள். அடுக்குமாடி வாழ்க்கை  இருப்பைச் சுருக்கிவிட்டதைப் போல உணர்வதாலோ என்னவோ சிறுவர்கள் அத்தனையை மனநிலைக்கு ஆளாகுகிறார்கள். அதனை இந்நாவலின் உளவியல் அம்சங்களாக சேர்த்துள்ளேன்.  மேலும், அடுக்குமாடியில் எவ்வளவு ஆட்கள் இருந்தாலும்  ஒரு வெறுமை எப்பொழுதும் உலாவிக் கொண்டே இருக்கும். அதனையும் இந்நாவலின் ஓர் அம்சமாகச் சேர்த்திருக்கிறேன்.

 

கேள்வி: இரண்டாம் பாகம் வெளிவந்ததற்குப் பின் இரண்டாண்டுகள் கழித்துதான் மூன்றாம் பாகம் வெளியீடுகிறீர்களே?

கே.பாலமுருகன்: அந்த இரண்டு ஆண்டுகளும் இரண்டாம் பாகத்தை மாணவர்களிடையே கொண்டு போக நான் மேற்கொண்ட சோதனைகள் அவ்வாறான ஒரு தொய்வை ஏற்படுத்தியது என்றுத்தான் சொல்ல வேண்டும். முதல் நாவல் உருவாக்கிய தாக்கத்தை இன்றளவும் என்னால் மறக்கவியலாது. ஆசிரியர்கள் முன்வந்து மர்மக் குகை நாவலை மலேசியா முழுவதும் கொண்டு போக துணை நின்றார்கள். ஆகவே, ஒரு நூல் யாருக்கு எழுதப்பட்டுள்ளதோ அவர்களைச் சென்றடைய நமக்கு நடுவர்களின் பங்களிப்புத் தேவை. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அவர்களைச் சென்றடைய  ஆரோக்கியமான சூழல் இருக்குமாயின், பாலமுருகன் மட்டும் அல்ல இன்னும் நிறைய புதிய எழுத்தாளர்கள் தோன்றி இடைவெளியில்லாமல் பல நல்ல தமிழ் நூல்களை நமக்கு அளிப்பார்கள்.

 

கேள்வி: தமிழில் மட்டும்தானே நூல் விற்பனைக்கு ஓர் எழுத்தாளன் சிரமத்தை எதிர்க்கொள்ள நேரிடுகிறது?

கே.பாலமுருகன்: மக்கள் புத்தகங்களுக்கு வற்றாத ஆதரவைக் கொடுத்தால்தான் தமிழில் நூல் வெற்றிப்பெறும். ஒரு கடை முதலாளி வெற்றிப்பெற்றால் நாம் அமைதியாக இருக்கிறோம்; ஒரு செல்வந்தர் புதிதாக இன்னொரு நிறுவனம் திறந்தால் நாம் அமைதியாக இருப்போம்; ஆனால், ஓர் எழுத்தாளனின் புத்தகம் வெற்றிப் பெற்றாலோ அல்லது அதிகம் விற்கப்பட்டாலோ உடனே அவன் தமிழை வியாபாரமாக்குகிறான்; தமிழுக்குச் சேவைத்தானே செய்ய வேண்டும் ஏன் அதனை விற்க வேண்டும் என்கிற பலவிதமான பழிச்சொல்லுக்கு ஆளாக நேர்கிறது. இத்தனைக்கும் அவனுடைய நூல் பத்து வெள்ளி இருபது வெள்ளி மட்டுமே அதுவும் அவனுடைய கடுமையான உழைப்பிற்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் மட்டுமே. இத்தகைய மனநிலையிலிருந்து நம் சமூகம் விடுபட்டால்தான் தொய்வில்லாமல் ஆரோக்கியத்துடன் எழுத்தாளர்கள் பல அரிய நல்ல நூல்களை மலேசியத் தமிழ்ச் சூழலுக்கும் இலக்கியத்திற்கும் வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். இது வியாபாரம் அல்ல; எழுதிய படைப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஒரு வழிமுறையே. வேறு எப்படித்தான் நூல் விற்பனையை மேற்கொள்ள முடியும்?

கேள்வி: இப்புதிய நாவல் எத்தனை நாளில் எழுதினீர்கள்?

கே.பாலமுருகன்: எத்தனை நாள் எழுதினேன் என்பதைவிட நன்கு சிந்தித்துத் திட்டமிட்டு இக்கதையைச் செதுக்கினேன். கதையோட்டம் நீண்டுவிட்டால் வாசிக்கும் மாணவர்களுக்குச் சலிப்பு உண்டாக்கிவிடும் எனக் கவனமாக இருந்தேன். கடந்த நாவல்களைவிட இந்நாவல் சுருக்கமாகவும் அதே சமயம் சுவாரஷ்யமாகவும் இருக்கும் என்று நம்பலாம்.

கேள்வி: சிறுவர்கள் ஏன் இந்நாவலை வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: இந்நாவல் சிறுவர்களை முன்னிலைப்படுத்தி கற்பனைவளத்துடன் எழுதப்பட்டதாகும். சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்களால் கட்டமைக்கப்படும் சிறுவர்களின் வாழ்வினைப் போற்றிப் பேசக்கூடியதாகத்தான் கடந்த காலங்களில் இருந்துள்ளன. ஆனால், இந்நாவல் சிறுவர்கள் புத்திசாலிகள், சிறுவர்கள் திறமையானவர்கள் என்று சிறுவர்களின் உலகைக் கற்பனையால்  உருவாக்கி அவர்களைச் சுயத்தன்மை உடையவர்களாக மாற்றுகிறது. சிறுவர்களின் உளவியல் குறித்து நிறைய வாசித்தும் உரையாடியும் அதன்வழியாக உருவாக்கப்பட்டதுதான் இச்சிறுவர் நாவல் தொடர்பான  முயற்சிகள்.  ஆகவே, சிறுவர்களின் மனங்களில் அடைத்துக் கிடக்கும் உணர்வலைகளுக்கு ஒரு வடிக்கால் அமைத்துக் கொடுத்து அவர்கள் வாழ்வின் உன்னதமான தருணங்களைக் கதையாக்கும் ஒரு கதைக்களமே இச்சிறுவர் நாவல். இந்நாவலைப் படித்துமுடித்துவிட்டு வெளியாகும் சிறுவன் தன் வாழ்வை மிகப் பெரிய வரமாக நினைக்கும் மன ஆற்றலை அவன் பெற்றிருப்பான். அத்தகைய நிலையில் தன்னுடைய சிறார் பருவத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டாடவும் முன்னெடுக்கவும் பழகிக் கொள்வான். அதோடுமட்டுமல்லாமல் கதைகள் வாசிக்கும் ஒரு தீவிரமான தேடலும் அவனுக்குள் உருவாகியிருக்கும். நாம் நாளெல்லாம் சிறுவனை எப்படி நல்வழிப்படுத்துவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தீராத சிக்கலுக்கு இலக்கியத்தின் வழியாக ஒரு தீர்வை நான் இந்நாவலில் முன்வைக்கிறேன். ஆகையால், சிறுவர்கள் இம்மர்ம நாவலை வாசித்தலின் வழியாக  தன் வாழ்க்கைக்குள் ஒரு மனமாற்றத்தை அடைவார்கள்.

கேள்வி: இந்நாவலின் வழியாக மாணவர்கள் வேறு என்ன கற்றுக் கொள்ள முடியும்?

கே.பாலமுருகன்: எழுதுதற்கான ஓர் அகத்தூண்டல் ஏற்படும் என்பதே மிகப் பெரிய கற்றல் ஆகும். சிறுகதை எழுத ஆர்வம் ஒருவனுக்குள் உருவானால் மட்டுமே அவனால் எழுத முடியும். ஆக, அந்த ஆர்வத்தைத் தரவல்லதாக இந்நாவலைக் கருதுகிறேன். அதோடுமட்டுமல்லாமல் மொழியில் வருணனை என்பது அக்கதையைக் கவரும்தன்மையுடன் நகர்த்த உதவக்கூடிய முக்கியமான கூறாகும். அதனை வாசிப்பதன் வழியே பெற முடியும். கதைக்கான மொழியைக் கட்டுரைகள் வாசிப்பதன் மூலம் பெற முடியாது. சிறுகதை எழுத சிறுகதைகள், நாவல்கள் வாசித்தே திறம்பட வருணனை மொழியைக் கற்றுக் கொள்ள இயலும்.  எல்லாவற்றையும்விட நீங்களும் நானும் பேசி உருவாக்க முடியாத ஓர் அகவெழுச்சியை இதுபோன்ற நாவல், இலக்கியம் வாசிப்பினூடாக உருவாக்கும்.

கேள்வி: நீங்கள் சிறுவர் நாவல் எழுத எது காரணமாக இருந்தது?

கே.பாலமுருகன்: நான் சிறுவர் இலக்கியம் தொடர்பாக சிந்திக்கத் துவங்கியது தேர்வு வாரியத்தின் மேனாள் துணை இயக்குனர் திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் தீராத துரத்தலால் மட்டுமே. சிறுவர் இலக்கியத்திற்கு நாம் உருவாக்கும் கவனம் மட்டுமே எதிர்காலத்தில் இந்நாட்டில் இலக்கியத்தை நிலைநிறுத்தும் என்று தன் நீண்ட உரையாடலின் வழியாக எனக்குள் நிறுவினார். அங்கிருந்தே சிறுவர் நாவல் எழுதும் எண்ணத்தைக்  கொண்டேன். ஆனால், அதனைத் தொடங்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். புதிய எழுத்து, புதிய உலகம், புதிய மொழி என்கிற தயக்கம் எழுதவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. ஆனால், திடீரென்று ஏற்பட்ட அப்பாவின் மரணம்தான் என்னைச் சிறுவர் நாவலை எழுதத் தூண்டியது எனலாம். மிகப் பெரிய மீளாத்துயரத்தில் சிக்கிக் கொண்ட என் மனத்தை இலக்கியத்தின் மீதான அதிரடியான கவனமும் ஈடுபாடும் மீட்டெடுத்தன என்று சொல்லலாம்.  எனது சிறுவர் நாவலில் குவிந்து கிடக்கும் தேடல், மகிழ்ச்சி, நகைச்சுவை, கற்பனைவளம், வருணனை என அனைத்துமே என் துயரத்தின் ஒரு தெறிப்பு. கலைஞன் தன்னை வருத்திக் கொண்டு பிறரை மகிழ்விப்பான் என்பதைப் போலத்தான் எனக்கும் இந்நாவலுக்குமான உறவின் இன்னொரு குரல்.

கேள்வி: இந்நாவலுக்கும் ஏன் ‘பதிமூன்றாவது மாடியும் இரகசியக் கதவுகளும்’ என்கிற பெயர் வைத்தீர்கள்?

கே.பாலமுருகன்: எப்பொழுதுமே கதைக்குள் மர்மத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் கருப்பொருளைக் கொண்டுத்தான் தலைப்பை முடிவு செய்வேன். இக்கதையில் பல இரகசியக் கதவுகள் வரும். ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல மர்ம முடிச்சுகளும் இருக்கும். ஆகவே, இத்தலைப்பு ஏற்புடையதாகவும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது.

கேள்வி: அடுத்த பாகம் எப்பொழுது வெளிவரும்?

கே.பாலமுருகன்: இம்முறை தாமதப்படுத்த மாட்டேன். சிறுவர் நாவல் பாகம் 4 இவ்வருடம் நவம்பர் மாதத்தில் வெளிவரும். அதற்கான ஆய்த்தங்களை முன்கூட்டியே தொடங்கிவிடுவேன்.

கேள்வி: இதுபோன்ற நாவல்களை எழுத ஏதும் பிரத்தியேகமான தகுதிகள் உண்டா?

கே.பாலமுருகன்: எழுதுவதற்கு இலக்கியத்தின் மீது தீராத காதல் இருக்க வேண்டும். எழுத்தாளன் என்பவன் வார்த்தைகளின் காதலன். அவனுக்கு வார்த்தைகள் மீது ஈர்ப்பும் காதலும் இல்லையென்றால் அவனிடமிருந்து எந்தச் சொல்லும் பிறக்காது; அது இலக்கியமாகவும் மாறாது. ஆக, இலக்கிய வாசிப்பும் இலக்கிய நேசிப்பும்தான் ஒருவனை எழுத்தாளனாக்குகிறது. மற்றொரு சூழலில் ஒருவனுக்கு வாய்த்த வாழ்க்கையும் அதனுள் மண்டிக் கிடக்கும் வாழ்க்கை நெருக்கடிகளும் எழுதத் தூண்டும். தன் அகச்சிடுக்குகளிலிருந்து விடுப்படவே அவர்கள் எழுதவும் செய்வார்கள்.  ஆகவே, இது  தகுதி தொடர்பான கேள்வியாகப் பாவிக்க இயலாது.  எனக்குத் தெரிந்து என் சிறுவர் நாவல்களை வாசித்துவிட்டு அதனால் தாக்கப்பட்டு இப்பொழுது வெவ்வேறு சிறுவர் நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கும் மூன்று சிறுவர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்கள் இப்பொழுது இடைநிலைப்பள்ளியில் பயின்று கொண்டிருக்கிறார்கள். வயது, அனுபவம், ஆற்றல் என்பதைத் தாண்டி விருப்பம் என்கிற ஒன்றும் ஓர் எழுத்துக்கு உந்துசக்தியாக அமைகிறது. அத்தகையதொரு விருப்பத்தை உருவாக்கவே நான் இந்நாவலை எழுதியுள்ளேன்.

– நேர்காணல்: சு.அர்ஷினி

Share Button

About The Author

Comments are closed.