• சிறார் குற்றச் செயல்களும் அதன் மீதான பக்குவமற்ற விசாரணையின் விளைவுகளும்

  ‘குற்றவாளிகள்  உருவாவதில்லை; நாம் உருவாக்கி வைத்திருக்கும் தண்டனைகளைப் பெறுவதற்குத் தொடர்ச்சியாக நமக்கு ஆட்கள் தேவை. அதனாலேயே, தீர விசாரிக்காமல்  அவர்களுக்கு உடனடியாக ‘குற்றவாளி’ என்கிற பட்டத்தைச் சுமத்தி கூண்டில் ஏற்றி வசைப்பாடுகிறோம்.

  பின்னர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு மீண்டும் வாழ்க்கைக்குள் திரும்பிவிடுவோம். ஒருபோதும் அக்குற்றம் நிகழ்ந்ததற்கான காரணத்தைப் பற்றியும் குற்றங்களின் ஆழத்தில் கிடக்கும் வேர்கள் பற்றியும் அறிவார்ந்த கலந்துரையாடலுக்கு நாம் முன்வருவதே இல்லை. மீண்டும் ஒரு குற்றம் நிகழும்போது எல்லோரும் கிளம்பி  வந்துவிடுவோம். நமக்குத் தேவை அவ்வப்போது எங்காவது ஏதாவது நடந்து யாராவது மாட்டிக் கொள்ள வேண்டும். நம் பொழுதிற்கு அவர்கள் சிறுது நேரத் தீனி. அவ்வளவுத்தான் நமக்கும் சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்குமிடையே  இருக்கும் தார்மீகமான உறவு.

  சமூகத்தில் இருக்கும் ஆய்வாளர்கள், சட்ட நிபுணர்கள், உளவியாளர்கள், கல்வியாளர்கள் என ஒரு விரிவான ஆளுமை கலந்துரையாடல் மட்டுமே ஒரு சமூகத்தில் நிகழும் குற்றங்களை அதன் அடிநுனிவரை சென்று விவாதித்து அதன் சாத்தியப்பாடுகளையும் உண்மை நிலவரங்களையும் திறந்து காட்ட முடியும் என நினைக்கிறேன். அதுவரை எல்லோரும் மாறி மாறி கூச்சல் போட்டாலும் அதற்குரிய நிவாரணம் நிரந்தரமானது கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  ஒருமுறை 1996ஆம் ஆண்டில் நூலகப் புத்தகம் ஒன்றை எடுத்ததற்காக என் வகுப்பு நண்பன் ஒருவன் அன்றைய சிறப்பு சபைக்கூடலில் வெளியே அழைக்கப்பட்டு 15  நிமிடங்கள் நிற்க வைக்கப்பட்டு அப்பொழுது இருந்த நிர்வாகத் தலைவரால்  கடுமையாக அறிவுரைக்கப்பட்டான். அவமானத்தால் கூனி குறுகி அவன் நின்றிருந்ததையும் எங்கள் யாரையும் அவனால் பார்க்க முடியாமல் தடுமாறியதையும் அந்த 15 நிமிடங்களும் நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். வகுப்பிலேயே கொஞ்சம் சுட்டியானவனும் கெட்டிக்காரனுமான அந்நண்பன் ஏன் இப்படிச் செய்திருக்கிறான் என்கிற குழப்பம் மட்டுமே எனக்குள் பூதாகரமாய் எழுந்தபடி இருந்தது.  அப்பொழுதுதான் இடைநிலைப்பள்ளிக்கு வந்து முதல் ஆண்டு.

  அன்றைய நாளுக்குப் பின் அவன் பள்ளிக்கே வரவில்லை. வகுப்பாசிரியரிடமும் கேட்டுப் பார்த்தோம். அவருக்கும் தெரியவில்லை என்றே சொன்னார். பின்னர், அவன் வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாக இன்னொரு நண்பரின் மூலம் தெரிந்து கொண்டோம். அவமானம் என்பதைப் பற்றி அப்போதுவரை என்னால் உள்ளூர உணர முடியாவிட்டாலும் ஒரு வகுப்பு நண்பனின் இழப்பும் பிரிவும் அதனைக் கனமாக உணர்த்திச் சென்றது. அவனுடைய காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் எடுத்தது ஒரு கதைப் புத்தகம்தானே  என்கிற உண்மை மனத்தில் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சியை உசுப்பிக் கொண்டிருந்தன.

  அவன் ஏன் கதைப் புத்தகத்தை எடுத்தான் என்று யாருமே கேட்கவில்லை. அவனுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்பதிலேயே எல்லோரின் கவனமும் இருந்தது. ஒருவேளை அவனை மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவன் நூலகத்திலிருந்து எடுத்த அந்தக் கதைப் புத்தகத்தின் தலைப்பை மட்டுமே கேட்க ஆவலாக இருந்தேன். நூலகம் சென்று பொறுப்பாளரிடமும் விசாரித்தும் பார்த்தேன். அவர்களுக்கும் அவன் நூலகத்திலிருந்து எடுத்தக் கதைப் புத்தகம் பற்றி வேறேதும் தெரியவில்லை. நூலகத்தில் குவிந்து கிடந்த ஏதோ ஒரு கதைப் புத்தகம் என் நண்பனின் ஆசையைத் தூண்டியிருக்கிறது. அல்லது தன் ஆயிரம் வார்த்தைக் கரங்களால் அவன் மனத்தைச் சீண்டியிருக்கிறது. எது அந்தப் புத்தகம் என்று கண்கள் அலைந்தன.

  ஒருவகையில் அச்சம்பத்திற்குப் பிறகே நான் அடிக்கடி நூலகம் செல்ல ஆரம்பித்தேன். கதைப் புத்தகங்களின் தலைப்புகளைப் படிக்க மட்டும் செய்தேன். பிறகு மீண்டும் ஓய்வு மணி முடிந்ததும் வகுப்பிற்கு வந்துவிடுவேன். சிலர் ஏன் நான் அடிக்கடி நூலகம் போகிறேன் என்று கிண்டலாகக் கேட்டார்கள். என் வகுப்பு நண்பனைப் போல நானும் புத்தகம் எடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் கேலிச் செய்தார்கள். ஏனோ ஒருநாள் அந்தக் கதைப்புத்தகமே தன்னைக் காட்டிக்  கொடுக்கும் என்று நம்பியிருந்தேன்.

  அவனுடைய அம்மா ஓர் இந்தியர் அப்பா ஒரு சீனர். ஆகவே,பள்ளியில் சீன மொழியும் தமிழ் மொழியும் பேசத் தெரிந்த ஒரே ஒருத்தன் அவன் தான். அவனுக்கு நண்பர்களும் அதிகம். எல்லாம் வகுப்பிற்குள்ளும் நுழைந்து யாரிடமாவது கதையடித்துவிட்டு வரும் நெருக்கம் கொண்டவன். மனத்திற்கு ஏதும் ஒவ்வவில்லை என்றால் சட்டென கேட்டும் விடுவான். அப்படிப்பட்ட அவன் தான் அன்று சபைக்கூடலில் தலைக் குனிந்து நின்றிருந்தான். ஒருவேளை அவனைத் தனியறையில் வைத்து அன்பாக விசாரித்திருந்தால் அவன் அவனுக்குள் தகித்துக் கொண்டிருக்கும் உண்மையைச் சொல்லியிருப்பான். தண்டனை கடுமையாக வேண்டும் என நாம் இன்னமும் பள்ளிகளிலும் எளிய மக்களிடமும்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தண்டனைகள் சீர்த்திருத்தப்பட்டு மறு ஆலோசனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவை என நினைக்கத் தோன்றுகிறது.

  ஏழு வயது சிறுவன் தன் நண்பனின் பென்சிலை எடுத்துவிட்டால் அதற்கும் ‘திருட்டு’ என்றுத்தான் பெயர் வைக்கிறோம். ஏழு ஆட்கள் கொண்ட பெரிய திருட்டுக் கும்பல் ஒன்றாக இணைந்து வங்கியிலுள்ள பணத்தை எடுத்துவிட்டால் அதையும் ‘திருட்டு’ என்றுத்தான்  அழைக்கிறோம். ஆனால்,   உளவியல் ரீதியிலும்  சமூக ரீதியிலும்  ஏன் நாம் மறுபரிசீலனை செய்து நம் குற்றங்களை அணுகும் விதங்களை சீரமைக்கக்கூடாது? ஏழு வயது சிறுவனையும் ஒரு பெரிய திருட்டுக் கும்பலையும் நான் அணுகும் விதம் ஒரே மாதிரி இருப்பதில் இருக்கக்கூடிய பின்விளைவுகளை நாம் அறியாமலேயே இரண்டிற்கும் ஒரேவிதமான உணர்வெழுச்சியையும் கோபத்தையும் காட்டுகிறோம்.

  வகுப்பறையில் நிகழும் அல்லது பள்ளியில் நடக்கும் அனைத்தையும் ஆலோசனைப் பிரிவுக்குக் கீழ் கொண்டு வந்து அக்கறையெடுத்து அதனை அணுகும் பக்குவமிக்க ‘கவுன்சலிங் ஆலோசகர்கள்’ ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் தீவிரப்படுத்தப்பட  வேண்டும். அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு தவறுகள் செய்யும் மாணவர்களை ‘உளவியல் ரீதியில்’ அணுகி அவர்களை மீட்டெடுக்கும் பணி துரிதப்படுத்த வேண்டும். வகுப்பில் நடக்கும் ‘நடத்தை சிக்கல்கள்’ தொடர்பான விழிப்புணர்ச்சியும் அதனை ‘கவுன்சிலிங்’ ஆலோசனைப்பிரிவிடம் கொண்டு போகும் நுட்பமும்  அறிந்தவர்களாக அக்குறிப்பிட்ட ஆலோசகர்கள் திகழப்   பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

  எல்லா சம்பங்களையும் மற்ற மாணவர்கள் முன்னிலையில் விசாரிப்பதை நாம் முதலில் தவிர்க்க வேண்டும். இதுவே  வீடாக இருந்தாலும் உங்கள் பிள்ளைகளை மற்றவர் முன்னிலையில் விசாரித்து அவர்களை அவமானத்திற்குள்ளாக்கும் செயலை நாம் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். தான் தவறு செய்துவிட்டேன் என்று உணர வைக்கும் பொருட்டு நாம் மேற்கொள்ளும் ‘திறந்த விசாரணை’ என்பது அவர்களுக்கு அவமானத்தையே தேடித் தருகிறது. குற்றத்தை அவர்களிடமிருந்து களையவதற்குப் பதிலாக நாம் அவர்களை மேலும் குரூரமான குற்றவாளியாக்கிக் கொண்டிருக்கிறோம். அல்லது தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கான அகத்தூண்டலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

  அதே போல வீட்டிலும் பெற்றோர்கள் ஒரு நல்ல ஆசிரியராக இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளை ஒரு தவறு செய்துவிட்டால் அவனை முதலில் பிறர் முன்னிலையில் தண்டிப்பதை நிறுத்தங்கள். அது காதைப் பிடித்துத் திருகும் எளிய கண்டிப்பாக இருந்தாலும் அதனைப் பொதுவில் செய்யாதீர்கள். எத்தனை வயதாக இருந்தாலும் சுயமரியாதை எல்லோருக்கும் உண்டு அதனைக் கற்பிக்கவும் நமக்குக் கடமை உண்டு என்பதை அறிய வேண்டும்.

  வீட்டிலும் பள்ளியிலும் நாம் சிறுவர்கள்/ இளையோர்கள் மீது பாவிக்கக்கூடாத வார்த்தைகளை உங்கள் மனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே சிறார் குற்றச் செயல்களை மாற்றுவழியில் குறைக்க முடியும் எனக் கருதுகிறேன்.

  – முட்டாள்

  -திருடா

  -உருப்படவே மாட்டாய்

  -நீயெல்லாம் படிக்கவில்லை என்று யார் அழுதது?

  -இவன் செய்திருப்பான்…

  -நீயெல்லாம் பெரியாளாகி என்ன செய்ய போகிறாய்?

  -உன் குடும்பமே  இப்படித்தானோ?

  -ஏன் உனக்கெல்லாம் அறிவே இல்லையா? 

  -ரொம்ப பேசாதே வாயை உடைச்சிருவேன்

  – வாயை மூடு

  – பொய் சொல்லாதே…

  இப்படியாகப் பல வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

  அவை வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. அவர்களின் உள்ளத்தைச் சீர்க்குழைக்கும் ஆயுதங்கள். நம் கையிலும் மனத்திலும் ஆயுதங்கள் ஏந்திக் கொண்டிருந்தால் நாம் தீவிரவாதிகள்தானே? ஒரேயொருமுறை ஆயுதங்களுக்குப் பதிலாக அன்பைக் கையிலெடுத்துப் பார்ப்போம். தோற்றாலும் பரவாயில்லை; முயலாமல் இருப்பதுதான் உண்மையான தோல்வி.

  -கே.பாலமுருகன் 

  Share Button

3 Responsesso far.

 1. ஜெயமோகன் says:

  சிறப்பு அண்ணா. நன்கு உரைத்தீர்கள்!

 2. ஜமிலா says:

  நாம் உருவாக்கி வைத்திருக்கும் தண்டனைக்கு ஆட்கள் தேவை என்ற வரிகள் சிந்திக்க வைத்தன.

 3. இரா.விஜயஸ்ரீ says:

  மிகச் சரியான ஆய்வு. அவரவர் வாழ்விலோ குடும்பத்திலோ நடக்கும்போது தான் இதன் உண்மை உறைக்கிறது. முதலில் ஆசிரியர்கள் பக்குவப்பட வேண்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *