முடி திருத்தம் நிலையம் ‘லோரோங் 68’ – பாகம் 1 (ஜல்லிக்கட்டு)

அரசியல், சமூகம், சினிமா, வெட்டிப் பேச்சு என அனைத்திற்கும் பேர்போன மிகச் சிறந்த இடம் ‘முடி திருத்தம் நிலையம்’ ஆகும். ஆண்களின் வம்புப் பேச்சுக் கூடாரம். வயதானவர்கள், வேலை இல்லாதவர்கள், பொழுதைக் கழிப்பவர்கள், வெட்டிப் பேச்சுக்கென்று எழுதி வைக்கப்பட்டவர்கள், சமூகத்தின் ஆழ்மனத்தில் கரைந்தவர்கள், மேலெழுந்து தூக்கிவீசப்பட்டவர்கள், மேலே எழாமலேயே தோல்வியுற்றவர்கள், வீட்டை விட்டு ஒதுக்கப்பட்டவர்கள், வீட்டிற்குள்ளேயே மதிப்பை இழந்தவர்கள் என ஒவ்வொருநாளும் முடி திருத்தம் நிலையங்கள் பார்க்காத மனிதர்களே கிடையாது. பலரின் மனக் காயங்களுக்கு பணம் கொடுக்காமலேயே மருந்திட்ட முடி திருத்தம் நிலையங்கள் நம் அப்பாக்கள், தாத்தாக்களின் வாழ்வின் ஓர் ஓரத்தில் இன்னமும் ஜீவித்துக் கொண்டிருக்கலாம்.

1990களின் இறுதியில் இந்தியர்கள் வைத்திருந்த முடி திருத்தம் நிலையங்கள் ஒட்டுமொத்த வெட்டிப் பேச்சின் மையங்களாகவும், பலரின் மனக் கொதிப்புகளுக்கான கூடாரங்களாகவும் இருந்ததை யாராலும் மறந்திருக்க முடியாது. உன்னிப்பாத அதனைக் கேட்டிருக்காமல் நாம் கடந்து போயிருக்கக்கூடும். என் அப்பாவின் நண்பர் எம்.ஜி.ஆர் குமார் முன்பு என்னை அடிக்கடி பத்து டுவாவில் இருக்கும் ஒரு பழைய முடி திருத்தம் நிலையத்திற்கு அழைத்துப் போவார். அவரும் முன்பு ஒரு கடை வைத்திருந்து பின்னர் வேலையாளிடம் ஏமாந்து அக்கடை நஷ்டத்தில் போய் முடிந்தது. அதனை அடைத்துவிட்டு எம்.ஜி.ஆர் குமார் மீண்டும் சுங்கைப்பட்டாணிக்கே வந்துவிட்டார். (என்னுடைய சில சிறுகதைகளில் இந்த எம்.ஜி.ஆர் குமாரைப் பற்றி எழுதியுள்ளேன்; புனைந்துள்ளேன்)

என்னைக் கடையின் ஒரு நீண்ட இருக்கையில் அமர வைத்துவிட்டு அவர் அந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அக்கடைக்கு முதலாளியைப் போல முடி திருத்துபவரிடம் பேசிக் கொண்டே இருப்பார். தன் மனக்கிடங்கில் ஒதுக்கி வைத்திருந்த அத்தனை ஆற்றாமைகளையும் கொட்டிக் கொண்டே இருப்பார். அங்கு வெட்டித் திருத்தப்படுவது வெறும் முடி மட்டும் அல்ல மனத்தினுள் அடர்ந்து வளர்ந்திருக்கும் கசப்புகளையும்தான் என நினைக்க முடிகிறது. அதற்கு அக்கடையாளர்கள் எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதும் இல்லை. அதனாலேயே நம் வீட்டுப் பெரியவர்கள், ஆண்கள் முடி திருத்தம் நிலையம் சென்று வெட்டிப் பேச்சு பேசிவிட்டு வருவதாக நம்மில் பலர் புலம்பியிருக்கக்கூடும். அது ஒரு வடிக்காலாக மட்டுமே இருந்திருக்கிறது.

அத்தகைய முடி திருத்தம் நிலையம் ஒன்றனை எனது புனைவுலகத்தின் லோரோங் 68-இல் ஆரம்பித்துள்ளேன். இங்கு நம் மனக் கொதிப்புகளை ஆற்றித் தரும் சேவையை மட்டுமே எனது புனைவுலக கதாபாத்திரமான எம்.ஜி.ஆர் குமார் செய்யவிருக்கிறார். யார் வேண்டுமென்றாலும் கதைக்க மட்டுமே இம்முடி திருத்தம் நிலையத்திற்கு வரலாம். அதன் முகவரி: http://balamurugan.org லோரோங்  68.

இன்றுத்தான் எம்.ஜி.ஆர் குமார் தன் முடி திருத்தம் நிலையத்தைத் திறக்கிறார். முதல் நாளே கூட்டம் நிறைந்து தன் அகத்தைத் திருத்த முட்டி மோதுகிறது. அவர் டோக்கன் எல்லாம் கொடுக்க மாட்டார். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கதைக்கலாம்; திட்டலாம்; கருத்துரைக்கலாம்; விமர்சிக்கலாம்; புறம் பேசலாம்; அறிவுரைக் கூறலாம்; லாம் லாம் லாம்.

எம்.ஜி.ஆர் குமார் ஒரு தீவிர எம்.ஜி ஆர். இரசிகர். 1980களில் எல்லோர் வீடுகளின் சுவர்களிலும் எம்.ஜி.ஆர் போஸ்டரை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். என் அப்பாவும் வீட்டின் நடு வரவேற்பறையிலேயே எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை மாட்டியிருந்தார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான எம்.ஜி.ஆர் குமாரும் தன் முடி திருத்தம் நிலையத்தில் எல்லா இடங்களிலும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முதற்கொண்டு ‘அன்பே வா’ வரை  எம்.ஜி.ஆரின் படங்களை ஒட்டி வைத்திருந்தார். இப்பொழுது உங்கள் நினைவுகள் மீண்டும் ஒரு 20 வருடத்திற்கு முன்னே சென்று நீங்கள் முடி திருத்திய நிலையங்களில் இருந்த எம்.ஜி.ஆர் புகைப்படங்களை நினைவுப்படுத்தக்கூடும்.

‘தாய் மேல் ஆணை…தமிழ் மேன் ஆணை…’

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’

இப்படி எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிக்கொண்டு உங்கள் முடியைத் திருத்திய யாரேனும் உங்கள் நினைவடுக்கில் இருந்தால் அவர்தான் இந்த ‘எம்.ஜி.ஆர்’ குமார். அவரை அப்படியே உங்களுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர் பேசாத அரசியல் கிடையாது, பேசாத சமூகக் கருத்துகள் கிடையாது. அவர் நம் அறிவுக்கும் புரிதலுக்கும் சவால்விடக் கூடியவர்.

அவருடைய இந்த ‘லோரோங் 68’ கடையில் ஒரு பழைய வானொலியும் வைத்திருக்கிறார். ஓங்கி அடித்தால்தான் பாடும். நிலையத்தைத் திருப்ப ஒரு வட்டமான திருகியும் இருக்கும். அது ஓர் இடத்தில் நிற்காது. இலேசாகக் காற்று அடித்தாலும் சட்டென நிலையம் இரையும். ஆகவே, அதனை தமிழ் வானொலி நிலையத்திலேயே நிறுத்த எம்.ஜி.ஆர் குமார் ஒரு நெகிழி கயிற்றைக் கொண்டு அந்தத் திருகியை வானொலியின் ஒரு மூலையோடு சேர்த்துக் கட்டியிருப்பார். கட்டம் போட்ட ஒரு சட்டையும் தூக்கி மேலே போடப்பட்டிருக்கும் ஒரு வெளுத்த சிலுவாரும் என எம்.ஜி.ஆர் குமார் இதோ தன் வேலையைத் தொடங்குகிறார்.

 

ஜல்லிக்கட்டு

“ஏங்க, நேத்துத் தமிழ்நாட்டுல நடந்த ஜல்லிக்கட்டுல ஒருத்தர் இறந்துட்டாராம். கேள்விப் பட்டீங்களா? என்னங்க இது? உயிரை விட்டுத்தான் ஜல்லிக்கட்டு விளையாடணுமா? இது மனசோட உயிருக்கு ஆபத்து இல்லையா?”

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர் குமார் தன் இரண்டு விரல்களைக் குவித்து மூக்குக்குக் கீழ் வைத்துத் தேய்த்து ‘ஹா…..”  என்று சொல்லிவிட்டு மூக்கில் விரலை அடித்து வெளியேற்றினார். அப்படியென்றால் அவர் கருத்து சொல்ல தயார் என்று அர்த்தம். தனக்குள் ஒரு எம்.ஜி.ஆர் வாழ்வதாகவே அவர் நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட பலரை நாம் பார்த்திருக்கக்கூடும்.

“என்னப்பா! கார் ரேஸ் நடத்துறாங்க. அதுலயும்தான் நிறைய பேர் காடி கவுந்து கால் கைய உடைச்சிக்கறான். செத்தும் போறானுங்க. அதை நிப்பாட்டிட்டாங்களா? இல்ல உலகத்துல அதிகாரப்பூர்வமா மோட்டர் ரேஸ் நடக்கறது இல்லயா? அதுலாம் வீர விளையாட்டோ? அப்ப ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுனு சொன்னா உடனே வெட்டி நியாயம் பேச வந்துர்றீங்க?”

எம்.ஜி.ஆர் குமார் சட்டென கொதித்து எழுந்தார்.

“நம்ம வீட்டுல அண்ணன் தம்பிக்கூட ஓடிப் பிடிச்சி விளையாடறது இல்லயா? அப்படி விளையாடும்போது கைல காலுல காயம் வர்றது இல்லயா? அந்த மாதிரித்தான். மாடுன்னா தமிழனோட வாழ்க்கையில ஒன்றிவிட்ட ஒன்று. அதை நீக்கிட்டு வாழ்க்கைய வாழ முடியாத அளவுக்கு விவசாய்ங்களோட கலந்துருக்கு. ஜல்லிக்கட்டுன்னா எங்க அண்ணன் தம்பிக்கூட விளையாடும் ஒரு வீர விளையாட்டு மாதிரி…”

“இருந்தாலும்… அதை அடக்க முடியுமா?”

எம்.ஜி.ஆர் குமார் மீண்டும் தன் மூக்கைத் தடவுகிறார்.

“ஜல்லிக்கட்டுன்னா என்னா போறவன் வர்றவன், வேடிக்கைப் பார்க்க வந்தவன் எல்லாம் விளையாடலாம்னு நினைக்கிறீங்களோ? அப்படி நினைச்சா அது தப்பு. ஜல்லிக்கட்டு விளையாடறதுக்கு ஒருத்தனுக்கு உடலில் தெம்பும் சக்தியும், நல்ல உயரமும், திடமும் வேண்டும். அதைப் பரிசோதிச்சிட்டுத்தான் ஒருத்தன ஜல்லிக்கட்டு விளையாடவே அனுமதிப்பாங்க… டாக்டர் பரிசோதனை செஞ்சிட்டுத்தான் ஒருத்தன் ஆரோக்கியமா இருக்கான், விளையாடத் தகுதி இருக்கும் அப்படின்னு பார்த்து சொல்லிட்டுத்தான் வாடிவாசல் பக்கமே போக முடியும் தம்பி, புரியுதா? அதோட தேர்வானங்களுக்குப் பயிற்சியும் இருக்கு…”

“அப்படின்னா மலேசியாவிலும் ஜல்லிக்கட்டுக்குப் பயிற்சிக் கொடுத்து இங்கயும் ஆரம்பிக்கலாமே?”

“அதை நான் மட்டும் சொல்ல முடியாது. இப்ப இதைக் கேட்டுக்கிட்டு இருக்காங்களே அவுங்களாம் யோசிச்சி இதைப் பத்தி சாதகம் பாதகம் எல்லாத்தயும் பேச முன் வந்தால்தான் சாத்தியம் ஆகும்…ஆனால் ஜல்லிக்கட்டைத் தமிழனோட வரலாற்றுலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் நீக்கவே முடியாது. அதை வேணானு சொல்றவன் ஒவ்வொருத்தனும் தன் தமிழ் அடையாளங்கள இழக்கத் தயாரா இருக்கும் ஆபத்தானவங்கன்னு மட்டும் நினைச்சிக்குங்க…”

என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் குமார் தன் முதல் நாள் வியாபாரத்தை முடித்துவிட்டு நிலையத்தை அடைத்தார்.

 

– கே.பாலமுருகன்

 

Share Button

About The Author

Comments are closed.