• சிறுகதை: சுருட்டு

  Hay-noi-khong-voi-thuoc-la

  1

  பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டியப்படி கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டிக் கொண்டு மேலே வந்தார். அன்றுத்தான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. பெரியப்பா அண்ணனைத் தூக்கி வரந்தாவில் வீசும்போது அம்மாவும் அங்கு வந்துவிட்டார். அண்ணன் அலறிக் கொண்டு எழ முயன்று மீண்டும் விழுந்தான்.

  “என் சுருட்டெ தொட்டனா…நீ செத்தடா,” எனக் கத்திவிட்டு பெரியம்மா அலறுவதைக்கூட பொருட்படுத்தாமல் பெரியப்பா தன் கையில் வைத்திருந்த சுருட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார்.

  2

  வீரமாணிக்கம் பெரியப்பா எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எப்பொழுதும் சுருட்டும் கையுமாகத்தான்  இருப்பார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கம்போங் ராஜாவில் வாடகை வீட்டில் இருந்த பெரியப்பாவையும் பெரியம்மாவையும் அம்மாத்தான் அழைத்து வந்தார். பெரியப்பா பன்றி வேட்டைக்கும் உடும்பு வேட்டைக்கும் பேர் போனவர். நாய்களைப் பிடித்து அதனை வெறியேற்றும் வித்தையும் தெரிந்தவர். அவருடைய கம்பத்து வீட்டில் பின்புறம் ஒரு நாய் கொட்டாயைக் கட்டிவிட்டு பல சமயங்களில் அங்கேத்தான் இருப்பார். உடும்பின் பித்தப்பையைக் கொண்டு நாயின் மூக்கில் அதை வைத்து அதன் நுகர்வுத்தன்மையை உசுப்பேத்துவார். அப்படித்தான் நாயின் வெறியை ஏற்ற முடியும்.

  பெரியப்பா வழக்கமாக சாயங்காலம்வரை கம்போங் ராஜா காட்டில் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார். காட்டில் மூலை முடுக்கெல்லாம் பெரியப்பாவிற்குப் பழக்கம். எங்குப் பன்றி இருக்கும்; எங்கு உடும்பு அலையும் என அவருக்குத் தெரியும். காட்டிலேயே கம்புகளைச் செருகி, தீ வைத்து பன்றியைக் கவிழ்த்துப் போட்டு ஒரு பதம் பார்த்துவிட்டுத்தான் அவரும் பெரியப்பாவின் நண்பர்களும் மீண்டும் கம்பத்துக்கு வருவார்கள். இப்படிப் போனபோக்கில் இருந்த பெரியப்பாவினால் கடன் தொல்லைத்தான் அதிகமானது. வேலைக்கு ஏதும் போகாமல் கடன் தொல்லையில் இருந்த அவர்களுக்கு அம்மா வீட்டோடு வந்து இருக்கும்படி சொன்னதும் வசதியாகவே இருந்தது. என்ன ஏது எனக் கேட்காமல் அப்போதைக்குப் பெரியம்மாவுடன் கிளம்பி இங்கு வந்துவிட்டார். கொஞ்ச நாள் அவருக்கு இங்கு இருப்புக்கொள்ளவில்லை.

  நாயைக் கொண்டு வந்து வளர்க்கப் பார்த்தார். ஆனால், அங்கு நாய் வளர்க்க அனுமதி இல்லை. தெருவில் அலையும் நாய்களின் தொல்லைகளே பெரும்பாடாக இருந்ததால் நாய் வளர்ப்பதற்கு அங்குக் கடுமையான மறுப்பிருந்தது. ஆகவே, அங்குத் திரியும் நாய்களை நோட்டமிட்டுக் கொண்டும் அதனுடன் விளையாடிக் கொண்டும் இருப்பார். பெரியப்பாவிற்குச் சாதாரணமாகவே எச்சில் நிறைய ஊறும். எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பார். வாயிலுள்ள சுருட்டும் நனைந்து நஞ்சிவிடும். பாதி நேரம் நெருப்பில்லாமல் வெறுமனே வாயில் வைத்திருப்பார். மேல் மாடிக்கும் கீழ் மாடிக்கும் சதா உலாவிக் கொண்டிருப்பார். அவருடைய சுருட்டு வாடை எல்லோருக்கும் பரிச்சயம்.

  மாடிப்படிகளில் எப்பொழுதும் சிறுநீர் வாடை வீசும். இங்கிருப்பவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்த வாடை அது. இரவு முழுவதும் நாய்கள் படிகளில்தான் படுத்துக் கிடக்கும். அதைத் தாண்டி போவதும் சிறுநீர் வாடை மூக்கில் ஏறி ஒரு கட்டத்தில் சட்டென சகஜமாவதும் அங்கு எல்லோருக்கும் பழக்கம். எவ்வளவு கழுவினாலும் அது தொலையாது. எச்சிலும் வெற்றிலையும் துப்பி துப்பி கரைப்படிந்து போன வெளிச்சுவர்கள். புதிதாக அவ்விடம் வருபவர்களுக்கு குமட்டலை உண்டாக்கிவிடும். அங்கிருக்கும் கிழவிகளின் கூட்டு சதி அது. மேலும், இரண்டாவது மாடியின் மூலையில் பீர் போத்தல்கள் கிடக்கும். அது ‘டத்தோ’ சாமிக்கு வைத்துவிட்டுப் பின்னர் யாரோ எடுத்துக் குடித்துப் போட்ட போத்தலா அல்லது கொசு மருந்து பற்ற வைக்கப்பட்டு பின்னர் இங்கேயே விடப்பட்ட போத்தலா எனத் தெரியாது. பெரியப்பா அதை எடுத்து வெளியில் வீசுவதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். அவர் வேறு எந்த வேலைக்கும் போகவும் இல்லை. வேறு எந்த வேலையும் அவருக்குத் தெரியாது எனப் பெரியம்மா சொல்லிவிட்டார். அம்மாவும் பெரியப்பா வேலைக்குப் போவதை விரும்பவில்லை.

  பெரியப்பா அப்பாவின் குடும்பத்தில் மூத்தவர். இரண்டே பேர் கொண்ட குடும்பம் அது. அப்பாவும் பெரியப்பாவும் இரண்டாடுகள்தான் வித்தியாசம். இருவரும் ஒரே மாதிரி முரட்டுடல் கொண்டவர்கள். 70 வயது என எப்பொழுது சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். அந்தந்த வயதிற்கு எல்லோரும் ஓர் உடலைக் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். தளர்வு முதுமையின் நீக்க முடியாத அடையாளம். ஆனால், வீரமாணிக்கம் பெரியப்பா பெயருக்கு ஏற்றதைப் போல உடலில் சோர்வு இல்லாமல் விறைப்புடன் மட்டுமே இருப்பார். ஓர் உடும்பு பளபளப்பு மிளிர திடத்துடன் நகர்வதைப் போல காலையும் மாலையும் இரவும் பார்க்கும் அனைத்துப் பார்வைகளிலும் பெரியப்பா திடமாகத் தெரிந்தார்.

  பெரியப்பாவிற்குக் கோபம் வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது பொருள் உடையும், அடுத்து வீடே உப்பி வெடித்துவிடும் அளவிற்கு அவருடைய சத்தம் அடுக்குமாடிக்கே கேட்கும். பெரியப்பாவின் அலறலும் குரலும் சாதாரணமானதல்ல. ரொம்பவும் கறாரான குரல். பெரும்பாலும் அங்கு வசிப்பவர்கள் சீனர்கள் என்பதால் பலமுறை சொல்லிப் பார்த்தும் பெரியப்பா அடங்கவில்லை என்பதால் அவர்களும் விட்டுவிட்டார்கள். சுருட்டு வாசம் வீசும் பெரியப்பாவை அங்கு யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். பெரியபாவின் முகத்தில் ஒரு கொடூரமான தணியாத கோபம் அப்படியே இருக்கும்.

  “செத்தடி மவளே!” எனப் பல சமயங்களில் பெரியம்மாவைத் துரத்திக் கொண்டு வீட்டுக்கு வெளியேயும் பெரியப்பா வீட்டுச் சண்டையைக் கொண்டு வந்ததுண்டு. பெரியம்மா மேல்மாடிக்கு ஓடுவார். அங்குச் சில இந்தியர்களின் வீடு இருப்பதால் யாராவது ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்வார். பெரியப்பா அருள் உடல் முழுவதும் பிரவாகமெடுக்க மேலேயும் கீழேயும் ஒரு பன்றியை வேட்டையாடுவதைப் போல ஓடிக் கொண்டிருப்பார்.

  அப்பா இருந்தபோது வருடத்திற்கு இரண்டுமுறைகூட பெரியப்பா இங்கு வருவது ஆச்சர்யம்தான். இன்று அப்பா இல்லாத வீட்டில் அவருடைய சத்தம் ஓங்கியிருந்தது. பெரியப்பாவிற்குப் பிள்ளைகளே இல்லை. எங்களுக்கும் ஆசைக்காக ஒரு பொருள்கூட அவர் வாங்கிக் கொடுத்ததும் இல்லை. வீட்டில் இருக்கும் எங்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர் பிள்ளைகளிடம் அன்புடன் பேசியும் நான் பார்த்ததே இல்லை. ஒரு வரட்டு பூச்சியைப் போல பெரியப்பா. அம்மா எங்களுக்காக வாங்கி வைக்கும் உணவு பொருள்களைக்கூட பெரியப்பா எடுத்து சாப்பிட்டுவிடுவார்.

  “ஏன்யா அந்தப் பையன சும்மா சும்மா அடிச்சிக்கிட்டு இருக்கெ?” எனப் பெரியம்மா கேட்கும்போதெல்லாம் மிகவும் அசட்டையாக இருப்பார். மேற்கொண்டு பெரியம்மா ஏதும் கேட்டால் கத்திக் கொண்டே வாளியையோ செருப்பையோ பெரியம்மாவின் மீது விட்டடிப்பார்.  பெரியப்பாவின் இரைச்சல் எப்பொழுதும் குறைந்ததேவில்லை. எல்லோரையும் திட்டிக் கொண்டே இருப்பார். அவருக்கு வாழ்க்கை திருப்தியளிக்கவே இல்லை. வீட்டில் எல்லாம் பக்கங்களிலும் கோபம் வந்துவிட்டால் வீட்டை உற்று கவனித்துவிட்டு உடும்பைப் போல நடந்து கொண்டிருப்பார். பின்னர், வீட்டுக்கு வெளியில் போய் கத்திக் கொண்டிருப்பார். எப்பொழுதும் அவர் கோபமாக இருக்கும்போது பெரியம்மா உணவைப் போட்டுவிட்டு பெரியப்பாவைச் சாப்பிட அழைக்கும் போராட்டம் கொடுமையானது.

  “நான் ஏண்டி சாப்டணும்? இப்படியே பட்டினிலெ சாவறேன். அல்சர் வந்து தொலையட்டும்”

  பெரியம்மா கேட்டு கேட்டு சலித்த வசனம். பெரியம்மா சாப்பிடச் சொல்லி கேட்கும்போதெல்லாம் பெரியப்பா தட்டை ஓங்கி சுவரில் அடித்துவிடுவார். சாம்பாரும் சோறும் ஒருவகையான வீச்சத்துடன் குலைந்து ஒழுகும். உடனே அம்மா வழக்கம்போல உள்ளே ஓடி துடைப்பத்தைக் கொண்டு வந்து துடைக்க ஆரம்பித்துவிடுவார். அம்மாவிற்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அங்கு நடப்பதைப் பற்றி கவலையில்லாமல் அம்மா சாம்பார் விழுந்து கொட்டிய இடத்தைத் துடைக்கத் துவங்கிடுவார்.

  “சாப்பாடு போட்டு கொல்றீயா? என்னா சோத்துக்கா பொறந்தேன்? வேட்டையாடின உடம்புடி…”

  பெரியம்மா ஒரு வாயில்லா பூச்சி. பெரும்பான்மையான சமயங்களில் அவர் வாயே திறப்பது இல்லை. வெறுமனே முனகுவார். அதையும் பெரியப்பாவினால் பொறுத்துக் கொள்ள முடியாது.

  “உன்னெ அடிச்சி வெளில தொரத்துனாதான் தெரியும்”

  பெரியம்மாவின் மீது பாய்வார். பெரியம்மா உதறியடித்துக் கொண்டு எங்காவது ஓடுவார். அவருக்கு வேறு எதுவும் தெரியாது. சண்டையெல்லாம் முடிந்து பெரியம்மா அழுகையுடனோ அல்லது உடலில் ஏதும் காயங்களுடனோ வீட்டில் வந்து அடங்குவார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு அம்மா பெரியம்மாவின் முதுகில் தடவிக் கொடுத்துவிடுவார்.

  3

  பாண்டியன் மாமா அம்மாவின் ஒரே தம்பி. மாதத்தில் இரண்டுமுறை வீட்டுக்கு வருவார். அவர்தான் வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் பணம் கொடுப்பார். அவருடைய தயவிலேயே வீடு ஓடிக் கொண்டிருந்தது. அப்பாவின் பணமும் மாதம் வந்து கொண்டிருக்கும். பெரியப்பா அங்கு இருப்பதால் மாமா வீட்டில் தங்கமாட்டார். பெரியப்பாவின் மீது அவருக்குக் கொஞ்சம் கோபம் உண்டு. சாப்பிட்டுவிட்டு வீட்டைவிட்டுப் போகும்வரை நிலைக்காத கோபம் அது. சட்டென பெரியப்பா வந்துவிட்டால் அது இன்னும் குறுகி வளைந்து இளைத்துவிடும்.

  பெரியப்பாவும் மாமாவும் பேசிக் கொள்ளமாட்டார்கள். ஆனாலும், மாமா வரும்போதெல்லாம் பெரியப்பா மீசையைக் கொஞ்சம் நீவிக் கொண்டே வரவேற்பறையில் விறைத்தவாறு அமர்ந்திருப்பார். மாமா எதுவும் நடக்காததைப் போல போய்விடுவார்.

  பெரியப்பாவும் அம்மாவும்கூட பேசிக்கொள்ளமாட்டார்கள். பெரியப்பா இருக்கும் இடத்திற்கு அம்மா வரமாட்டார். பெரியப்பாவை எதிர்க்கொள்ளும்போதெல்லாம் முகத்தைத் தொங்கவிட்டுக் கொள்வார். அடுக்குமாடி வீடு சிறியது. பத்தடி எடுத்து வைத்தால் வீடு முடிவடைந்துவிடும். சுற்றி சுற்றி வந்தாலும் சீக்கிரமே சலிப்படைய செய்யும் வீடு. மூன்று மகா சிறிய அறைகள். ஒன்றில் பாதிக்கும் மேற்பட்ட துணிமணிகள் குவித்து மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும். பெரியப்பாவும் பெரியம்மாவும் அந்த அறையில்தான் உறங்குவார்கள். அம்மா மட்டும் முதல் அறையில். நானும் என் அண்ணனும் சாமி அறையில் படுத்துக் கொள்வோம். ஒரு வரவேற்பறை அங்கிருந்து தலையை மட்டும் எக்கினால் சமையலறை. அவ்வளவு சிறிய வீடு.

  அம்மாவிற்குப் பக்தி அதிகம். சாமி காரியங்களுக்காக மட்டும்தான் வீட்டில் வாயைத் திறப்பார். மற்றப்படி வீட்டில் எல்லோரும் சாப்பிட்டிருக்க வேண்டும். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சாமி காரியங்களைத் தொடங்கிவிடுவார். அடுக்குமாடி வீடு என்றாலும் அம்மாவின் பக்திக்கு அளவே இல்லை. பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துதான் மணி அடிப்பார். ஒரு கட்டம் அது அதீதமான எல்லைக்குச் செல்லும்.

  பிறகு, வீடு முழுக்க மஞ்சள் தண்ணீர் தெளித்துவிட்டு சமையலறையிலுள்ள சன்னலுக்கு வெளியில் தொங்கும் ரோஜா செடிக்கு அபிஷேகம் செய்யத் துவங்குவார். அம்மாவின் அபிஷேகம் அங்குப் பிரசித்திப் பெற்றதாகும். அவர் செடிக்கு நீர் ஊற்றுவதைத்தான் எல்லோரும் ‘அபிஷேகம்’ என்பார்கள். காலை மணி 6.30க்கு அது தொடங்கும். வீட்டின் சலையறையில் உள்ள சன்னலுக்கு வெளியே இருக்கும் கம்பியில் நெகிழி பாசியில் ரோஜாவை அம்மா வைத்திருக்கிறார். மாதத்தில் ஒருமுறை அது செழிக்கும். பூக்களைப் பார்க்கலாம். அம்மா அச்செடிக்கு கைகளைக் சன்னல் கம்பிகளுக்கு நடுவே இருக்கும் பெரிய ஓட்டையில் விட்டு நீரை ஊற்றவோ அல்லது நீண்டு வளர்ந்துவிடும் தண்டை வெட்டவோ முடியும். அம்மா நீரை ஊற்றும்போது அது விலகி சுவரில் வடிந்து கீழ்மாடி சுவர்வரை ஒழுகும்.

  அம்மாவின் சமையலறைக்கு எப்பொழுது போனாலும் ஒருவகை சாம்பார் வாடையும் சமையல் பட்டை வாடையும் வீசிக் கொண்டே இருக்கும். அம்மா அன்று சமைக்கவில்லை என்றாலும் அந்த வாசம் அப்படியேத்தான் இருக்கும். குறுகலான அறை. சன்னலைத் திறக்கும்போது மட்டும் சட்டென ரோஜா செடியின் ஒரு சுகந்தமான வாசம் உள்ளே பரவும். அத்தனை நெடிக்கு மத்தியிலும் அதனை நுகர முடியும்.

  அம்மா எழுந்து பசியாறை சமைத்துவிட்டு அதனைச் சாமிக்குப் படைக்கும்போது பெரியப்பா எழுந்திருப்பார். எழுந்து குளிக்காமலேயே சுருட்டைப் புகைக்கத் துவங்கிவிடுவார். அந்தச் சுருட்டு வாசம் அம்மாவுக்குப் பிடிக்காது. காலையில் பெரியப்பாவுக்கு அதுதான் தெம்பு. வெளிவாசலைத் திறந்துவிட்டு சுருட்டைப் புகைப்பார். வாயில் ஊறும் எச்சிலையும் துப்பிக் கொள்வார். வீட்டு வாசலில் பெரியப்பாவின் எச்சில் வீச்சம் அம்மாவுக்கு எரிச்சலை உண்டாக்கும். எல்லாம் வேலையும் முடிந்த பிறகு வாசலைச் சவர்க்காரத் தூளைப் போட்டுக் கழுவுவார். எவ்வளவு கழுவியும் எச்சில் வாடை அகன்றதே இல்லை. சவர்க்காரத் தூள் வாசனையுடன் அது கலந்து வீசும்.

  அம்மாவுக்கு எந்த வேலையும் இல்லாவிட்டால் உடனே வாளியைக் கொண்டு வந்து வீட்டைத் துடைக்கத் துவங்கிவிடுவார். பெரியப்பாவிற்கு அது பிடிக்காது. பெரியம்மாவிடம் திட்டிக் கொண்டிருப்பார்.

  “இப்படியே துடைச்சிக்கிட்டு இருந்தா சுத்தமா எல்லாம் போய்டும். எதுமே தங்காது,” எனக் கத்துவார்.

  அம்மா துடைப்பதை நிறுத்தவே மாட்டார். பெரியப்பா அப்படிக் கத்தும்போது இடத்தை மாற்றி துடைப்பாரே தவிர அவருக்கு வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். பெரியப்பா இல்லாதபோது அவருடைய அறையையும் துடைத்துவிடுவார். வீட்டின் ஒட்டுமொத்த அழுக்கே அங்குத்தான் இருக்கிறது என்பதைப் போல அம்மா அழுத்தித் துடைப்பார்.

  பெரியம்மா அங்குள்ள சீனர்களின் வீட்டுக்கு வீட்டு வேலைக்குச் செல்வதை வைத்துதான் பெரியப்பாவின் சில தேவைகள் நிறைவேறின. சுருட்டுப் புகைப்பதைத் தவிர அவருக்குக் கொஞ்சம் குடி பழக்கமும் உண்டு. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் படுத்து உறங்கிவிடுவார். குடிக்காத நாட்களிலேயே அவருடைய சத்தம் வீட்டில் ஓங்கி இருக்கும்.

  இருந்தாலும் அவருடைய விறைப்பு, பிடிவாதம், தோற்றம் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அவரிடமிருந்து எங்களை ஒதுக்கிவிட்டன. பெரியம்மா ஒரு மௌனி. அதிகம் பேசமாட்டார். ஒரு கலர் துண்டைத் தோளில் எப்பொழுதும் போட்டிருப்பார். அம்மாத்தான் அவருக்கு உலகம். பெரியப்பாவின் மீது எரிச்சலும் கோபமும் தலைக்கேறும் போதெல்லாம் அம்மாவின் கால்களைக் கட்டியணைத்துக் கொண்டு அழுவார். அவருக்கு அதற்கு மேல் தெரியாது. பெரியப்பா முன்பு மண்டையிலேயே அடித்து அடித்து பெரியம்மா பாதி சக்தியையும் நினைவுகளையும் இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

   

  4

  அன்றைய நாளில் அண்ணன் அவர் வைத்திருந்த சுருட்டுக் கட்டை எடுத்து மாடியிலிருந்து வீசிவிட்டான். அதனைப் பார்த்துவிட்டு பெரியப்பா தாண்டவம் ஆடினார். அண்ணனின் இரு கால்களையும் பிடித்து ஐந்தாவது மாடிக்கு வெளியே தொங்கவிட்டார். அன்று எனக்கும் அண்ணனுக்கும் மறக்க முடியாத நாள். அம்மாவும் பெரியம்மாவும் வெளியே போய்விட்டார்கள். பெரியப்பா வீட்டில் ஆள் இருக்கும்போதே திமிறாகத்தான் இருப்பார். அன்று யாரும் இல்லை என்பதால் அண்ணனைப் பிடித்து இரண்டு கால்களையும் கயிற்றில் கட்டி ஐந்தாவது மாடியிலிருந்து கீழே இறக்கி பயம் காட்டும்போது எனக்கு பாதி உயிர் போய்விட்டது.

  அம்மா வந்ததும் பெரியப்பா அண்ணனைத் தூக்கி வரந்தாவில் போட்டார். அப்பொழுது அம்மாவுக்குக் கோபம் திமிறிக் கொண்டு வந்தது. கண்களில் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அம்மா முதன்முறையாகப் பெரியப்பாவைப் பார்த்து முறைத்தார். சுருட்டுப் புகைக்கத் துவங்கிய பெரியப்பாவிற்கு அநேகமாகக் கதிகலங்கியிருக்கலாம். அண்ணனைத் தூக்கி அணைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் போய்விட்டார். அண்ணன் ரொம்பவே பயந்து போய்விட்டான்.

  “ஏன்யா! உனக்குப் பிள்ளக்குட்டி இருந்திருந்தாதானே அருமை தெரியும்? மலட்டு நாய்த்தானே நீ,” எனப் பெரியம்மா கத்தினார்.

  பெரியப்பா ஒரு கனம் அதிர்ந்துவிட்டார். பெரியம்மா கதறி அழுது கொண்டே அம்மாவின் பின்னே சென்றார். அவர் அன்று இரவுவரை வீட்டுப் பக்கம் வரவே இல்லை. பெரியம்மா துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு அழுகையும் முகமுமாக அம்மா ஏதும் சொல்லும்வரை அப்படியே அமர்ந்திருந்தார்.

  “ஏய் பிள்ள! இந்தா இதுல பத்து வெள்ளி இருக்கு. போய் நான் சொல்ற ஜாமான வாங்கிட்டு அப்படியெ அந்த மனுசனுக்குச் சுருட்டு வாங்கியா… இருந்தா கூட அழைச்சிட்டு வா. மணி என்ன ஆவுது”

  பெரியம்மா உடனே எழுந்து புறப்பட்டார்.

   

  கே.பாலமுருகன்

  Thanks: July Seranggon Times Magazine

  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *