• அக்கரைப் பச்சை – 1 (சிங்கப்பூர் சிறுகதை விமர்சனம்) அழகுநிலாவின் விரல்

  அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற தலைப்பில் தொகுத்து வெளியீட்டுள்ளார். தற்சமயம் சிங்கையில் தீவிரமாக எழுதி வரும் நண்பர்களின் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பில் கண்டதும் ஆர்வம் மேலிட்டது. சமீபத்தில் சிங்கையில் வெளிவந்த இத்தொகுப்பின் வழியாக சிங்கப்பூர் நவீனத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஒரு விரிவான விமர்சனக் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ஒரு காலக்கட்டத்தில் ஒரு நாட்டில் வெளிவரும் இதுபோன்ற தொகுப்புகள் அக்காலக்கட்டத்தின் இலக்கியத் திறனாய்வுக்கும் விமர்சனங்களுக்கும் ஏற்புடையதாகும். குறிப்பாக, அந்நாட்டு இலக்கியப் படைப்புகளை அணுக நினைக்கும் விமர்சகர்களுக்குத் தொகுப்புகளே சிறந்த தடத்தைக் காட்டக்கூடியதாகும். ஆகவே, தொகுப்பாளன் என்பவர் இலக்கியத்தை மட்டும் தொகுக்கவில்லை, அந்நிலத்தின் இலக்கிய நகர்ச்சியையும் அடைவையும் சேர்த்தே தொகுக்கும் பணியை ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தொகுப்பது என்பது கவனத்தோடும் அக்கறையோடும் செய்ய வேண்டிய பணியாகும். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றையும் வாசகப் பார்வையுடன் அணுகி விமர்சிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதன் வழியாக ஒரு தொகுப்பின் அவசியத்தையும் கருத்துரைக்க வாய்ப்புக் கிட்டும்.

  ஒரு நிலத்தின் இலக்கியம் அதே நிலத்தில் எப்படிக் காலாவதியாகிறது? இச்சிந்தனை பலருக்கும் எழுவதில்லை. விமர்சகர்களும் ஒரு சிறுகதை வெளிவரும் காலக்கட்டத்தைப் பொருட்படுத்தத் தவறுவதால் அதுபோன்ற விமர்சனங்கள் தொடர்பாக அவநம்பிக்கைகளும் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, 1990ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு சிறுகதையை உருவி எடுத்து 2017ஆம் ஆண்டில் வைத்து இதெல்லாம் என்ன சிறுகதை? கொஞ்சம்கூட நவீனத்தன்மைகள் வெளிப்படவில்லை என நாம் எவ்வளவுத்தான் கதறினாலும், 1990ஆம் ஆண்டில் அந்நிலத்தில் நவீன இலக்கியம் குறித்தான பிரக்ஞை, வாசிப்பு போன்றவையின் தாக்கத்தையும் இருப்பையும் ஒரு விமர்சகன் கவனித்தில் கொள்ள வேண்டியப் பொறுப்புடையவனாகின்றான்.

  அடுத்து, 2017ஆம் ஆண்டில் நவீன இலக்கியம் தொடர்பான அத்தனை வெளிபாடுகளும், ஆழமான வாசிப்பும் அந்நிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அதே நிலத்தில் வாழும் ஓர் எழுத்தாளன் எந்தவித புறத்தாக்கங்களுக்கும் அகத்தாக்கங்களுக்கும் ஆளாமல் மூளையைக் கழற்றி ஒரு நூற்றாண்டுக்கு முன்புள்ள இலக்கியப் போக்கிலேயே தக்க வைத்துவிட்டு, எழுத பேனாவை எடுக்கும்போதே அவ்விலக்கியம் காலாவதியாகிவிடுகிறது என்பதனை விமர்சகர்கள் முதன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஓர் இலக்கியம் ஏன் பழமையாகின்றது என்கிற கேள்விக்கும் அதே பதில்தான். பக்கத்து வீட்டில் இருப்பவன் ஜெயமோகன், மாப்பாஸன் என வாசிக்கையில், அடுத்த வீட்டில் இருப்பவன் ‘அட்டா பொன்னியின் செல்வன் தான் நான் கடைசியாக வாசித்த மிகச் சிறந்த எழுத்தாளர்’ என்று சொல்லிவிட்டு அவர் ஒரு சிறுகதை எழுதினால் உங்களுக்கு என்ன தோன்றும்?

  இன்னொரு வகையினரையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த புதிய படைப்புகள்வரை வாசித்து அதனை விமர்சிக்கக்கூடியவர்களாக இருப்பினும் அவர்களின் எழுத்தில் அதற்குரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் காண முடியாது. ஆகவே, இவ்விருவகையினரும் ஒரு நிலத்தின் இலக்கியத்தை இன்னமும் காலாவதியான புட்டியில் அடைத்துப் பாதுகாத்து வருபவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் ஆபத்தானவர்கள் அல்லர். இலக்கியத்தை நேசிப்பவர்களாகவும் இலக்கியத்தின் மீது பற்றுடையவர்களாகவும் திகழ்வார்கள். ஆனால், அடைப்பட்ட அப்புட்டியலைப் பார்த்துப் பழம்பெருமைகளில் குளிர்காய்ந்தே காலத்தை நகர்த்துவார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் இலக்கியத்தின் இருப்பிடம் மாறாது. அங்கேயே ஒரு கோட்டையைக் கட்டி மாலை மாட்டிவிட வேண்டியதுதான். பிற்காலத்தில் மணிமன்றம் ஆகிவிடும். நம் இலக்கிய நோக்கம் அதுவல்ல. நகர்ச்சியும் எழுச்சியும் கொண்டவையாக, நீரோட்டத்தைவிட ஆக்ரோஷம் கொண்ட காட்டாறைப் போல காலத்தை விரட்டிக் கொண்டு ஓட வேண்டும்.

  அழகுநிலா நல்ல சிறுகதை எழுத்தாளராக உருவாகிக் கொண்டு வரும் இக்காலக்கட்டத்தில் எல்லோரையும் போல அவரை வெறுமனே புழக வேண்டும் என்பதற்காக இவ்விமர்சனத்தை நான் முன்னெடுக்கவில்லை. நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் குச்சிகள், இலைகளைக் களைந்து ஆழத்தின் தெளிவைக் காட்ட வேண்டும் என்பதே நோக்கமாகும். இவ்விமர்சனம் அவரின் ஒட்டு மொத்த கதைகளின் மீதானது அல்ல என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். அக்கரைப் பச்சையை நோக்கி மட்டுமே இக்கொடி பச்சை ஊர்கிறது.

  அழகுநிலாவின் இச்சிறுகதை எனக்கு இருவகையான பார்வைகளை உண்டாக்குகிறது. ஒன்று, அவர் இச்சிறுகதையில் பேசும் கதைக்களமும் ஆனந்தி அக்காவைப் பற்றிய சித்திரங்களும் அவரைச் சுற்றி மேலெழும் வாழ்க்கையையும் பலமுறை பலகதைகளில் வாசித்தவையாக முதல் வாசிப்பிலேயே தோன்றியது. இலக்கிய வாசகனாகப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு மனச்சோர்வு உண்டாகிவிடுகிறது. ‘நொஸ்தோலோஜியா’ என்கிற பிரிவேக்க உணர்விலிருந்து தொடங்கும் இச்சிறுகதை ஆனந்தி அக்காவின் மீது முழுமையாகக் குவிகிறது. ஓர் எழுத்தாளனாக இருந்து இக்கதையை நான் சிந்திக்கவில்லை. அப்படிச் சிந்தித்தால் இக்கதையை என் பாணியில் எப்படி எழுதியிருக்கலாம் என்பதிலிருந்து விமர்சனம் தடம்புரண்டுவிடும். நான் முழுக்க முழுக்க வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு இலக்கியத்திற்குள் உலாவுபவன். ஆகையால், வாசகன் என்கிற நிலையிலிருந்தே இத்தொகுப்பிலுள்ள அழகுநிலாவின் விரல் சிறுகதையை அணுகியிருந்தேன்.

  ‘அது சிரிக்கறப்ப எங்க குலசாமி புள்ளபூச்சி அம்மன் செல மாதிரியே இருக்கும்’ என்ற வரியைப் படிக்கும்போதே மனம் நெருடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவ்வரியில் இருக்கும் அத்தனை சொற்களும் பழமையானவை. சினிமாக்களில்கூட இதுபோன்ற சொற்களை நாம் கேட்டிருக்கக்கூடும். ஒரு நவீன எழுத்தாளர் முதலில் தவிர்க்க வேண்டியவையாக இதுபோன்ற ‘கிளிஷேவான’ உவமைகள்தான் என்று நினைக்கிறேன். இதே அழகுநிலாவின் களம் இதழில் வெளிவந்த ‘விலக்கு’ சிறுகதை முற்றிலுமாக நவீன சமூகத்தின் குரல்களைப் பதிவு செய்வதாக அமைந்திருந்தன. அழகுநிலாவின் சிறுகதைகள் இதுபோன்று அல்லது இதைவிடவும் இன்னும் முன்னகர்ந்து சமூகத்தின் ஆழ்மனத்தின் நுண்ணிய குரல்களைப் பதிவு செய்வதாக அமைதல் வேண்டும் என்றே வாசிக்கும்போது தோன்றியது. சிங்கையின் பலத்தரப்பட்ட மனிதக் குரல்களில் சிக்கிக் கிடக்கும் ஈரங்களைப் பதிவு செய்யக்கூடிய ஆற்றல்மிக்க எழுத்துநடையும் கூர்மையும் கணிவும் நிலாவிடமுண்டு.

  இதே சிறுகதையில் மேலத்தெரு ஆளுங்க, கீழத்தெரு ஆளுங்க, தராதாரம் என இன்னும் சில குறியீட்டு சொற்களின் வழியாக சாதி வேறுபாட்டுணர்வு மனித மனங்களில் மாறாமல் புதைந்திருப்பதையும் அழகுநிலா காட்டுகிறார். கதையில் சட்டென திறக்கும் இவ்விடம் கதைக்குப் புத்துயிர் வழங்குகிறது. கதை எதை நோக்கி நகர்கிறது என்கிற போக்கிடம் தெரியத் துவங்கியது. கீழ்த்தெரு, மேல்த்தெரு என்கிற பிரிவினை மலேசியத் தோட்டப்புறங்களிலும் இருந்திருப்பதை சீ.முத்துசாமியின் ‘மண் புழுக்கள்’ நாவலை வாசிக்கும்போது உறுதிப்படுத்த முடியும். இதையே மலேசியாவில் கீழ் லயம், மேல் லயம் என்று சொல்வார்கள். மேல் லயத்தில் உள்ளவர்கள் இச்சாதி பிரிவினர் என்றும் கீழ் லயத்தில் வாழ்பவர்கள் சாதியில் குறைந்தவர்கள் என்றும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்போதே ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த சாதி உணர்வுகள் தக்க வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இதனால் ஏற்படும் சிக்கல், பிரிவினைகள், பிரிவினை தொடர்பான மாற்றங்கள், சாதியால் உண்டாகும் கலவரங்கள் என பற்பல சிறுகதைகள், நாவல்களில் சில பகுதிகள் என பேசப்பட்டுள்ளன.

  இருப்பினும் இச்சிறுகதை எடுத்துக் கையாண்டிருக்கும் சாதி தொடர்பான அவதானிப்புகளிலும் ‘சொல்லியதை மீண்டும் சொல்லல்’ போன்ற உணர்வே மேலிடுகிறது. சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடி, பின்னர் ஏமாற்றப்பட்டு அப்பெண் ஊரின் எல்லையில் தனிமையில் வாழ்ந்து சிரமப்படுவது என மீண்டும் மீண்டும் கேட்ட, பார்த்த, படித்த ஒன்றாகவே இருக்கின்றன. இப்படிக் கதைநெடுக இதுபோன்ற எண்ணங்கள் வந்து குவிகின்றன. அழகுநிலா இதனை ஒரு சவாலாகக் கொண்டு களைய வேண்டும். இமையம் எழுதிய ‘பெத்தவன்’ சிறுகதையும் இதுபோன்ற சாதி தொடர்பான சிக்கலை மையமாகப் பேசியது. ஆனால், அக்கதை கூறுமுறையிலும், வடிவத்திலும், மொழியிலும் மாறுப்பட்டிருந்தது.

  இச்சிறுகதையின் கடைசி காட்சி மிக முக்கியமானவை. அக்கடைசி காட்சியினாலேயே இச்சிறுகதை நிற்கிறது என்று சொல்லலாம். அதற்கு முந்தைய வாசிப்புவரை ஏதோ பழைய சிறுகதையை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றும் உணர்வைத் தடுக்க முடியாமல் தடுமாறும்போது அக்கடைசி காட்சியும் முடிவும் கொஞ்சம் தெம்பை அளிக்கிறது. ஒரு சிறுகதை முடியும் புள்ளியில் தன்னை மீளுருவாக்கம் செய்து கொள்ளும் வித்தையை அழகுநிலா நன்கு அறிந்துள்ளார். பலரின் சிறுகதைகள் முடிவினாலேயே புறந்தள்ளப்பட்டுள்ளன. அழகுநிலாவின் விரல் சிறுகதை அதன் முடிவினாலேயே மனத்தில் ஒரு சிறு அசைவை உண்டாக்கிச் செல்கிறது. ஓர் ஆக்கத்தின் அழகு இதுவாகக்கூட இருக்கலாம்.

  விரல் என்பதே இங்குச் சிறுமையில் மின்னும் ஒரு துளி வெளிச்சம் என்று அக்கடைசி காட்சியினூடாக உருவகித்துக் கொள்ளலாம். அதே முடிவைக் கொண்டு கீழ்த்தெரு மக்கள் ஒன்றும் பயனற்ற எலும்பற்ற வெறும் சதை பிண்டமாக ஆறாம் விரலாக வாழ்கிறார்கள் என்றும் ஒரு வாசகன் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்படிப் பல திறப்புகளின் முன்னிறுத்தும் சாத்தியம் கொண்ட சிறுகதையின் முடிவுக்காக விரல் சிறுகதை குறிப்பிடத்தக்க எளிய சிறுகதையாக வாசிப்பிற்கு முன்னிறுத்தலாம். ஆனாலும், மொழி, கதைக்களம், அதனை முன்னெடுக்கும் விதம், சொற்கள் என இன்னும் பல வகைகளில் அழகுநிலா இச்சிறுகதையைச் செம்மைப்படுத்த வேண்டியக் கடப்பாட்டையும் கொண்டுள்ளார்.

  அழகுநிலாவின் விரல் அத்தனை எளிதில் சமரசமாகக்கூடியதல்ல. உமது விரல்கள் இன்னும் பல ஆழமான, காலத்தால் அழியவே முடியாத பல ஆக்கங்களைத் தரவல்லன. அழகுநிலாவின் இதற்கு முந்தைய பல சிறுகதைகள் தரமானவையும் உள்ளன என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இவ்விமர்சனம் ‘விரல்’ சிறுகதையை முன்வைத்து மட்டுமே.

  இப்பொழுது ஒரு சிறுகதையை எழுத பேனாவை எடுக்கும் யாராகிலும் நமக்கு முன்னே பல்லாயிரம் கோடி கதைகள் உலகப் பரப்பில் குவிந்து கிடக்கின்றன என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

  கே.பாலமுருகன்

   

  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *