சினிமா விமர்சனம்

ஜகாட் திரைப்படமும் நானும் 1

17-12-2

நானும் 1990களில் சிறுவனாக வளர்ந்தவன் என்பதால் எனக்கும் இப்படத்தில் வரும் பல காட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஜகாட் என் வாழ்க்கையின் சில பகுதிகளை மீட்டுத் தருகிறது. எந்தக் கலப்படமும் இல்லாமல் ஷங்கரும் நானும் பல இடங்களில் ஒத்துப்போகிறோம். 1995-96களில் நான் வாழ்ந்த கம்பத்தை அப்படியே பெயர்த்தெடுத்துக் காட்சிப்பூர்வமாக்கிக் காட்டுகிறார் இயக்குனர் சஞ்சய். அவர் தேர்ந்தெடுத்த கதைக்கான களங்களும் கதாபாத்திரங்களும் காலக்கட்டத்திற்கு ஏற்ப பொருந்தி நின்று நிஜமாகத் தெரிகின்றன.

இலக்கியத்தில் கதைச்சொல்பவனுக்கும் திரையில் கதைச்சொல்பவனுக்கும் எப்பொழுதுமே தீவிரமான பங்களிப்புண்டு. எழுத்தாளன் தன் மொழியின் வழியே சொல்லிச் செல்வதை இயக்குனர் காட்சிகளின் வழி காட்டிச் செல்கிறான். சினிமாவைப் பொறுத்தவரை காட்சிகளே அதன் முதல் மொழி. அதனை மேலும் செதுக்கிக் கொடுக்க உரையாடல் துணைக்கு வருகிறது. இன்றும் உலகத் திரைப்படங்களில் வசனங்களுக்குச் சொற்பமான நேரத்தைக் கொடுத்துக் காட்சிக்கு அதிக இடம் கொடுக்கும் நல்ல சினிமாக்கள் தொடர்ந்து சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டுத்தான் இருக்கின்றன. அதனை நன்கறிந்தவர் சஞ்சய் என்பதால் ஜகாட் திரைப்படத்தில் பல அர்த்தப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

காட்சிகளின் மொழி சினிமா

முதல் கட்டமாக ஜகாட் திரைப்படத்தின் காட்சிகளைப் பற்றி உரையாடலாம் என நினைக்கிறேன். சினிமா காட்சிகளின் நகர்ச்சி என்று சத்ய ஜித்ரே ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். காட்சிகளுக்குக் காட்சி ஓர் இடைவேளிவிட்டு செல்லப்படும்போது அதற்குள் ஒரு பார்வையாளன் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். அவ்வகையில் ஜகாட் காட்சிகளின் வழியாக இச்சமூகத்துடன் உரையாடுகிறது. எல்லாவற்றையும் வசனங்களின் வழி விளக்கிவிட நினைப்பது சினிமாவுக்குரிய கச்சிதம் கிடையாது. வாழ்க்கையின் சில தருணங்களைச் சொற்களின் வழி சொல்லிவிட முயல்வது அதன் தீவிரத்தைக் குறைத்துவிடும்.

வானொலியில் முன்னாள் பிரதமர் துன் மஹாதீர் மலேசியப் பொருளாதாரத்தில் சமூகங்களுக்கிடையே பேதமில்லாத ஒரு நிலை இருப்பதைப் போன்று ஒரு செய்தி ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கும். அப்பொழுது மலேசியாவின் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்து இந்தியர்களையும் முழுமையான ஏழ்மை நிலையிலிருந்து முன்னேற்றிக்கொண்டிருப்பதாக முன்னாள் ம.இ.கா தலைவர் ச.சாமிவேலு கூறியதாகச் செய்தி சொல்லப்படும். அந்தவேளையில் ஷங்கரின் அப்பா தனது காற்சட்டைக்கு நெகிழிக் கயிற்றை எடுத்துக் கட்டிக் கொண்டிருப்பார். மலேசிய அரசியலை இத்தனை கூர்மையான ஒரு காட்சியின் வழி விமர்சிக்கும் ஆற்றலையே சினிமா வழங்குகிறது. இதற்கு எந்த வசனமும் விளக்கமும் தேவையிருக்காது. ஒரு காட்சியை வெறும் காட்சியாக மட்டுமே தாண்டிவிட முடியாது என்பதற்கான ஓர் அனுபவத்தை இக்காட்சி வழங்குகிறது. சஞ்சயின் இந்தத் துணிச்சல்தான் ஒரு படைப்பாளிக்குத் தேவையானதாக நினைக்கிறேன்.

பக்தர்கள் சிலர் பால் குடம் ஏந்திக் கொண்டும் காவடி ஏந்திக் கொண்டும் ஷங்கரின் வீட்டைக் கடக்கும்போது கேமரா கையாளப்பட்ட விதமும் சினிமாவுக்குரிய அழகியலைச் சேர்க்கிறது. ஒரு வாழ்வின் மீதான நம் தரிசனத்தையும் அதற்குரிய இடத்தையும் சினிமாவைப் பொறுத்தவரை கேமராத்தான் தீர்மானிக்கிறது. அதனை ஒளிப்பதிவாளர் செந்தில் குமரன் முனியாண்டி சிறப்பாகச் செய்திருக்கிறார். தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்கிற விதிமுறை 1990களில் எல்லாம் வீடுகளிலும் இருந்திருக்கலாம் போல. என் வீட்டிலும் அப்படியொரு விதி இருந்தது. இரவில் எல்லோரும் வீட்டின் வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் எனது அறையில் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருப்பேன். அப்பொழுது பலகை வீட்டில் இருந்ததால் தொலைக்காட்சியின் சத்தம் கூர்மையாகக் கேட்கும். கதவின் இடுக்கில் தெரியும் இலேசான சந்தில் திருட்டுத்தனமாகத் தொலைக்காட்சி பார்த்து மகிழ்ந்த தருணங்களை சஞ்சய் தன் ஜகாட் படத்தில் வைத்த காட்சியின் மூலம் 1990களை மீண்டும் நினைவூட்டுகிறார்.

குறிப்பாக, அப்பா வீட்டுக்கு வந்ததும் ஷங்கர் தான் பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சியை அடைத்தாலும் அதனைத் தொட்டுப் பார்த்து அதில் இருக்கும் சூட்டின் வழி உண்மையை அறிகிறார். அக்காட்சிகள் வாழ்க்கைப்பூர்வமானதாக இருக்கின்றது. முழுக்க நம் வாழ்க்கையை எதிரே காட்டும் யதார்த்தம் அதில் இருக்கின்றன.

காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளியும் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கச்சிதமாகக் கையாளப்பட்டுள்ளது. இருப்பினும் ஒளியின் மீது மேலும் கூடுதலான கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சில காட்சிகளில் வரும் அதிக வெளிச்சம் சட்டென கதையை 2000களுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது. ஷங்கரின் வீட்டினுள்ளே பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளி அப்படியே என் வீட்டின் 1990ஆம் ஆண்டுகளை ஞாபகப்படுத்துகின்றது.

– கே.பாலமுருகன்

Share Button

2 Responses so far.

  1. Leelatharan says:

    I like this story. This is my favourite movie. Thank you so much balamurugan sir.🤗🤗.

  2. BEST STORY SIR I LIKE THIS STORY.I LEARN MORE KNOWLEDGE IN THIS STORY SIR THANK YOU SO MUCH SIR.

Leave a Reply