விமர்சன யுகத்தில் வாழ்கிறோம்- தொடர் 5 : படைப்பும் விமர்சனமும் வளர்வது வாசிப்பிலேயே)

 

பெரும்பான்மையானவர்களுக்கு எதற்கு வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி காலம் முழுவதும் நாவின் நுனியிலும் மனத்தின் ஆழத்திலும் தொக்கிக் கிடக்கிறது. விமர்சனம் என்பதன் அவசியத்தைப் பேசிக் கொண்டிருக்கும் நாம் வாசிப்பின் தேவையை முன்வைப்பதன் மூலம் விமர்சனத்தை மேலும் கூர்மையாக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதாகிறது. விமர்சிப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, படைப்பைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதும் மற்றொன்று வாசகர்களின் புரிதலுக்குள் புதிய சாத்தியபாடுகளைத் திறந்துவிடுவதற்கும் ஆகும். இவையிரண்டு நோக்கமும் இணையும் புள்ளியிலிருந்து ஓர் இலக்கிய உச்சம் தோன்றுகிறது. படைப்பும் விமர்சனமும் சேர்ந்து வளர்ந்தால் மட்டுமே அங்கு வாசிப்பின் தேவை முக்கியமானதாகின்றது.

ஏன் வாசிக்க வேண்டும்?

இக்கேள்வியை யார் கேட்டாலும் உடனே எனக்கு இன்னொரு கேள்வி மனத்தில் உதிக்கும். ஏன் சுவாசிக்க வேண்டும்? உயிர்வாழ்வதற்கான ஓர் அனுபவமே சுவாசிப்பு என ஓஷோ சொல்வதைப் போல இலக்கியம் என்பது வாழ்க்கையை அனுபவமாக ஆக்க முயலும் கலையாகும். வாசிப்பின் வழி வாழ்க்கையை அனுபவப்பூர்வமாக உணரும் ஒரு வாய்ப்பை வாசகன் பெற்றுக் கொண்டே இருக்கிறான். அதற்கான சாத்தியங்களை உள்ளடக்கிப் பெற்றிருப்பதுதான் நல்ல இலக்கியமும்கூட. விமர்சனமும் இதனை முன்வைத்தே தன் தேடுதல் வேட்டையைத் துவங்குகிறது.

பாரதி உலக இலக்கியங்களின் எல்லையற்ற வெளிகளுக்குள் இருந்து  எழுதி கொண்டிருந்தனாலேயே தமிழின் முதல் நவீன படைப்பாளன் என தன் படைப்புகளினூடே அறியப்படுகிறார். உலக இலக்கியம் என ஒன்று எப்பொழுது சாத்தியமானது? அத்தகைய புரிதல் பாரதிக்கு எப்பொழுது எழுந்தது? 18ஆம் நூற்றாண்டில் உலகத்தின் எல்லைகள் உடைந்து, எல்லை கோட்பாடற்ற உலகவெளி ஒன்று உருவான காலத்தில், மெல்ல மெல்ல காலணியாதிக்கம் பெருகத் துவங்கியது. அப்பொழுதுதான் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்கள் பரவின. அதன் வழியே உலக இலக்கியம் என்கிற சிந்தனை வளர்ந்தது. அமெரிக்கக் குடிமகனுக்கும் இந்தியக் குடிமகனுக்கும் வாழ்வில் நிகழும் அனுபவங்கள் இலக்கியங்களின் வழி அறிந்துகொள்ள வாய்ப்புகள் பெருகின.

அனுபவங்கள் என்பது ஒரு வட்டத்திலிருந்து சுழன்று பெரும்திரளாகி எல்லைகளைத் தாண்டி வர ஆரம்பித்தன. இவற்றால் இரண்டு நுட்பமான செயல்முறைகள் பலரால் கற்றுக்கொள்ளப்பட்டன. ஒன்று நம் சொந்த வாழ்க்கையை எப்படி இலக்கியத்தில் அனுபவப்பூர்வமான கலையாக்குவது என்பதையும் ஒரு பொதுவான வாழ்க்கை அனுபவம் எத்தகைய பாதிப்புகளைக் கொடுக்கும் எனும் கற்றலையும் உலக இலக்கியத்தின் வருகைக்குப் பிறகு எல்லோரின் பிரக்ஞைக்குள்ளும் படிந்தன. இந்தச் சிந்தனையோடு பாரதி பலவிதமான அடைப்புகளை உடைத்துக் கொண்டு எழுதியதால் மட்டுமே அவருடைய படைப்புகள் இன்றும் காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்பாகப் போற்றப்படுகின்றன.

இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் எத்தனை படைப்பாளிகள் ஒரு நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்களின் படைப்புகளே காட்டிக் கொடுக்கும். கூர்மையான விமர்சனத்தின் வழியே அவற்றை அறிய முடியும். உலக இலக்கிய வாசிப்பு நம் அனுபவத்தை விரிவாக்குகிறது. வாசிப்பினூடாக, வாழ்ந்து அறியும் வாழ்க்கை அனுபவத்தைவிட வாசித்தறிந்து கொள்ளும் வாழ்க்கை அனுபவம் பெருகுகிறது; மேலும் நம் கலைப்பார்வையை வடிவமைக்கிறது.

நமது விரிந்தப்பட்ட வாசிப்பு என்பது வாழ்க்கையின் மீது வைக்கப்படும் ஒரு பூதக்கண்ணாடியைப் போன்று நுட்பமான மன அலசலை உண்டாக்குகிறது. வாசிப்பு, இருட்டறைக்குள் சட்டென நம் கையில் அகப்படும் கைவிளக்காகிறது. நாமே அதனை இயக்கி நமக்கு வேண்டியதைத் தேடிக்கொள்ளும் அனுபவப்பூர்வமான கலையைக் கற்றுக் கொடுக்கிறது. ஆகவே, வாசிப்பின் தேவையை அறிந்துகொண்ட சமூகத்தில் படைக்கப்படும் படைப்புகளின் மீது வைக்கப்படும் விமர்சனமும் விமர்சகர்களும் நல்ல வாசகரகளாக இருக்க வேண்டியக் கட்டாயம் நேர்கிறது. குறிப்பாக, விமர்சகர்கள் உலக இலக்கிய வாசிப்பில் தன்னை ஈடுபடுத்தியவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கருத்தில் கொள்ள வேண்டும். வாசிப்பு, படைப்பையும் வளர்க்கும்; விமர்சன அறிவையும் கூர்மைப்படுத்தும்.

 

  • கே.பாலமுருகன்

Dangal – பெண்களின் மீதான அடக்குமுறைகளை வெல்லுதல்

அமீர் கான் அவர்கள் தயாரிக்கும் அனைத்து படங்களும் சமூக அக்கறையும் கலை எழுச்சியுமிக்க படைப்பாக இருக்கும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பற்றி வேறு என்ன சொல்வது? இந்திய சினிமாவையே பெருமைப்பட வைத்துள்ளது. இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கலை, நடிப்பு, திரைக்கதை என அனைத்திலும் ஆய்வுப்பூர்வமாகவும் தெளிவாகவும் படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

இந்தியக் கிராமங்களில், மூலை முடுக்குகளில், சமூகத்தின் அடியாழத்தில், திறமையான பெண்கள் நம்பிக்கையுடன் திரைக்குப் பின்னால் காத்திருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்கிற அகத்தூண்டலைப் படம் மசாலாத்தனங்கள், பிரச்சாரப் போக்குகள் இன்றி மிகவும் நேர்மையாக முன்வைத்துள்ளது. சபாஷ். ஓர் உண்மை கதையைப் படமாக்குவதில் இருக்கும் அனைத்து சிக்கல்களையும் இலாவகமாகத் தவிர்த்து இதனை ஒரு அசலான படைப்பாக வழங்கியிருக்கிறார்கள். நம்பிக்கை தூண்டல்களை முன்னெடுக்கும் படங்களில் வரும் வழக்கமான காட்சிகளைக்கூட அமீர் கான் நிராகரித்துவிட்டுப் படத்தைச் சுமக்கும் கதைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியுள்ளார்.

பெரும்பான்மையான ஆண்களை முன்னெடுக்கும் குடும்பங்களில் ஆணாதிக்க சமூகங்களில் அடுத்த தலைமுறையின் ஆழமனத்திலும் பெண்களுக்கு எதிரான சிந்தனைகளே மெல்ல விதைக்கப்படுகின்றன. வீட்டில் தம்பி எத்தனை சோம்பேறித்தனமாகவும் இருக்கலாம்; ஆனால், அதே வீட்டில் வாழும் தங்கையோ அக்காவோ  எல்லோருக்கும் முன் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். தவறினால் அத்தனை சாபங்களையும் பெறுவார்கள். இது குடும்ப நடைமுறை என அனைவரின் மனத்திலும் விதைக்கப்படுவதாலேயே அக்குடும்பத்தால் பயிற்சிப் பெற்று வளரும் ஓர் ஆண் தன் குடும்பத்தையும் ஆணாதிக்கம் சார்ந்து கட்டமைக்கிறான்.

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் அப்பாத்தான் அமீர் கான். தன்னுடைய குத்து சண்டை இலட்சியங்களை அடைய ஓர் ஆண் வாரிசுத்தான் வேண்டும் என விடாப்பிடியாக முயல்கிறார். ஆனால், தொடர்ச்சியாக நான்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன. தன்னுடைய கனவுகள் சிதைந்துவிட்டதை எண்ணி வருத்தத்துடன் குடும்பத் தலைவராக அமிழ்கிறார். சட்டென தன் பெண் குழந்தைகளுக்கு இயல்பாகவே குத்து சண்டைக்கான திறமையும் வலிமையும் இருப்பதை உணர்கிறார். அடுத்த நிமிடமே அவர்கள் இருவரையும் குத்து சண்டையையில் ஈடுப்படுத்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பெண்களுக்கான விதிமுறைகளையெல்லாம் மீறுகிறார். பெண் குழந்தைகளை அடக்கியாளும் வகையிலான நம்பிக்கைகளை உடைத்தெறிகிறார். பெண்களுக்கு நீண்ட கூந்தல் வேண்டும் எனும் பாரம்பரியமான தடைகளை எல்லாம் தாண்டுகிறார். இறுதியில், பெண்களை அடக்கும் மிகவும் மோசமான ஒரு சமூக/குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கும் அமீர் கான் அவற்றிலிருந்து விடுப்பட்டு இரு பெண் பிள்ளைகளையும் ஒரு தேசமே பெருமைப்படும் அளவிற்கு நிறுத்துகிறார்.

தந்தை வழி சமூகத்தின்  அடக்குமுறைகள் தொடர்பான அனைத்து  கற்பிதங்களுக்கும் எதிராக ஒரு புதிய தந்தையாக, இந்தியப் பெரும்பான்மை பொதுபுத்திகளுக்கு மாற்றான தந்தையாக உருவாகி நிற்கிறார் அமீர் கான். படத்தில் தனக்கு வேண்டிய உரிய இடங்களில் மட்டும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியிருக்கிறார். இதனைத் தமிழ் சினிமா நடிகர்கள் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனிமையிலும் இடர்களை வெல்ல துணிய வேண்டும்; தன்னை இழிவாக மதிப்பிடும் சமூகத்தின் முன் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். பெண்கள் சமையலறைக்குரியவர்கள் எனும் பாரம்பரியமான ஒடுக்குமுறை பார்வைகளுக்கு எதிராக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதனை முதன்மையாகப் பதிவு செய்கிறது. படம் பிரச்சாரத்தனங்களுக்கு இடம் கொடுக்காமல் யதார்த்தமாகக் கதையைச் சுமந்து வெளிப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். கலை எழுச்சிக்கும் சமூக அக்கறைக்கும் மத்தியில் ஒரு புனைவை அதுவும் 2012ஆம் ஆண்டில் காமன்வேல்த் போட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை அசலான கதையாக ஒரு கலைப் படைப்பாக முன்வைத்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

2016ஆம் ஆண்டின் சிறந்த படம் எனக் கேட்டால், ‘விசாரணை’ படத்தையும் ‘டங்கல்’ படத்தையுமே முன்வைக்க முடியும்.

-கே.பாலமுருகன்

 

 

பைரவா: ஒரு திரைப்பார்வை

பரதன் இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் விமர்சனம் என்பதைவிட ஓர் எளிய திரைப்பார்வை என்றே சொல்லலாம். பெரும்பாலும் தமிழில் வெளிவரும் ‘மாஸ்’ கதாநாயகர்களின் படங்களில் இருக்கும் வழக்கமான ‘பார்மூலாக்கள்’ இப்படத்திலும் இருக்கின்றன. ஆனால், அவற்றுள் நம்மை இரசிக்க வைக்கும் பகுதிகளையும் மனத்தைக் கவலைக்குள்ளாக்கும் பகுதிகளையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

 

  1. விஜய்

சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே அவருக்கு வாய்ப்பிருந்தது. நடிப்பதற்கான, நடிப்பை வெளிப்படுத்துவதற்கான பகுதிகள் திரைக்கதையில் அத்தனை முக்கியம் பெறவில்லை. ஆனால், சண்டைக்காட்சிகளில் சலிக்காமல் இயந்து போயிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். விஜயின் உழைப்பு மொத்தத்திற்கும் அவருடைய படங்களில் அவர் நடிக்கும் சண்டைக்காட்சிகளே சாட்சி என நினைக்கிறேன். இத்தனை வருடங்களில் அவருடைய ‘stemina’ கொஞ்சமும் குறையவில்லை. துப்பாக்கி, கத்தி போன்ற மேலும் வலுவான கதைகளில் அவரை நடிக்க வைப்பதன் மூலம் மட்டுமே விஜயின் திறமைகளை மேலும் தமிழ் சூழலுக்குள் வணிகம் என்பதையும் தாண்டிக் கொண்டு போக முடியும் என நினைக்கிறேன். ஒரு திரைக்கதைக்குச் சண்டைக்காட்சிகள் மட்டுமே தரத்தைச் சேர்த்துவிடாது அல்லவா?

  1. இசை

‘சூது கௌவ்வும்’ ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’ படங்களின் வழியாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இசையின் வழி ஒரு சர்வதேச உணர்வை வழங்கக்கூடிய இசை கலைஞராக சந்தோஷ் நாராயணன் அறியப்படத் துவங்கினார். இந்தியக் கலாச்சாரத்தினூடாக இசைக்கத் துவங்கி சிதறுண்டுபோன தமிழ் நவீன சமூகத்தின் ஊடாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்க படைப்பாளி சந்தோஷ் நாராயணன். ‘கபாலி’ போன்ற மாஸ் ஜனரஞ்சகப் படத்தில் இசையை வியக்கத்தக்க வகையில் வழங்கிப் பெரும் பாராட்டையும் பெற்றார். ஆனால், அவையனைத்தையும் ஒரே படத்தில் கேள்விக்குறியாக்கிவிட்டார்.

சமீபத்தில் அனிருத் அவர்களின் ‘மார்க்கேட்’ கொஞ்சம் சரிந்து போனதும் சந்தோஷ் நாராயணன் தமிழில் கவனிக்கத்தக்க நிறைய படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக மாறத் துவங்கினார். கைவசம் நிறைய தமிழ்ப்படங்களுக்குத் தொடர்சியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் என்னவோ பைரவா படத்தின் இசையை அத்தனை அலட்சியமாக்கியுள்ளார். ‘கத்தி’ , ‘துப்பாக்கி’ போன்ற கடந்த விஜய் படங்களுக்குப் பலமாக இருந்ததே அதன் இசையும் பின்னணி இசையும்தான். ஆனால், பைரவா படத்தின் ‘வரலாம் வரலாம் வா பைரவா’ என்கிற பாடல் தவிர மற்ற அனைத்தும் நிற்கவில்லை. படம் முழுக்க வரும் ‘வரலாம் வரலாம் வா…’ என்ற பின்னணி இசை மட்டுமே உயிரூட்டுகிறது.

 

  1. கீர்த்தி சுரேஷ்

பெரும்பாலும், வணிக நோக்கமிக்க படங்கள் கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இடையில் உருவாகும் காதலின் வழி வெளிப்படும் ஒரு வகையான இராசாயணத்தை அதிகமாகக் கவனப்படுத்தியிருக்கும். இப்படத்தில் விஜய்க்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் அந்த ஜனரஞ்சகக் காதல் உணர்வுகளும் இராசாயண பொருத்தமும் ஒத்தே வரவில்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தமிழ் சினிமாவில் மிகுந்த கவனம் பெற்று வரும் கீர்த்தி சுரேஷ் போன்ற கதாநாயகியின் நடிப்பின் மீதும் அவருடைய பாத்திரம் கதாநாயகனுடன் கொள்ளும் இராசாயணத் தொடர்பு குறித்தும் மேலும் கவனித்திருக்கலாம் என்றே தோன்றியது. ‘ரெமோ’ படத்தில் சிவக்கார்த்திகேயனுக்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் இடையில் இருந்த இராசாயணப் பொருத்தம் தொடர்பான சிறு கவனம்கூட இப்படத்தில் நிற்கவில்லை.

 

  1. கதை

சமூக அக்கறைமிக்க படைப்புகளில் கலைத்தன்மை குறைந்திருந்தாலும், கலைத்தன்மைமிக்க படைப்புகளில் சமூக அக்கறை இல்லாமல் இருந்தாலும் அதுவொரு சிறந்த படைப்பென கருத வாய்ப்பில்லாமல் போய்விடும். ‘கத்தி’ படத்தை நான் விரும்பிப் பார்த்ததற்கான காரணம் அப்படத்தில் விஜய் ஏற்றுக் கொண்ட சமூகப் பொறுப்பு. பல்லாயிரக்கணக்கான தன் இரசிகர்களிடம் நல்ல கருத்தைக் கொண்டு செல்ல அவர் எடுத்த முடிவின் பின்னால் ஏற்பட்ட ஈர்ப்பு. ஆனால், பைரவா படத்தில் சமூக அக்கறைமிக்க கருத்துகளை ஏற்றிருந்தாலும் ஏனோ படத்தின் மற்ற அம்சங்கள் அதனை வலுவாகத் தாங்கிப் பிடிக்க முடியாமல் தடுமாறியே உள்ளது.

கல்வி நிறுவனங்கள் செய்யும் மோசடிகளைச் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்திய படைப்பை வழங்க முயன்றிருந்தாலும் ‘பைரவா’ படத்தின் இயக்குனர் பரதனின் இயக்கப் போதாமைகள் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதில் கொஞ்சம் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதை அனைத்து விஜய் இரசிகர்களும்கூட ஏற்றுக் கொண்டுத்தான் ஆக வேண்டும். மேலும், கீர்த்தி சுரேஷ், தம்பி இராமையா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எனப் பலரும் பைராவைத் தாங்கிப் பிடிக்கத் தவறியுள்ளார்கள் என்பதை மிகுந்த கவலையுடன் சொல்லிக் கொள்ள நேரிடுகிறது.

படம் முழுக்கச் சோர்வில்லாமல் அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி நடிக்கும் விஜய் போன்ற நடிகரின் திறமையை விரிவாக்க, தமிழில் இருக்கும் நல்ல இயக்குனர்கள் முன்வர வேண்டும் என்றே நினைக்கிறேன். விஜய் என்கிற நடிகரின் நடிப்பையும் உழைப்பையும் ஒரு வணிகத் துண்டாக மட்டுமே பாதி படங்களில் பயன்படுத்திய இயக்குனர் பேரரசுவிடமிருந்து கைப்பற்றி அதனைக் காப்பாற்றியது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான். மேலும், பல நல்ல இயக்குனர்களின் படங்களில் விஜய் நடித்தால் மட்டுமே அவருடைய அடுத்த கட்டம் சிறப்பானதாக இருக்கும். தலையில் ‘விக்’ போடாமல் நடிப்பில் ‘லைக்’ போட வைக்கும் ‘துப்பாக்கி’ விஜய்க்காக மீண்டும் காத்திருப்போம்.

  • கே.பாலமுருகன்

சிறுகதை: ரொட்டிப் பாய்

“அப்பு, இனிமேல நீ ரொட்டிப் பாயைத் துரத்தலாம்டா,”

அம்மா சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியவுடன் அப்படி உரக்கக் கூறியதும் அப்புவின் உலகம் விழித்துக் கொண்டது. அப்பொழுது அப்புவிற்கு ஏழு வயதாகி ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. இதற்காகத்தான் இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் அப்பு இரண்டு வருடங்கள் காத்திருந்தான். சிரித்த முகத்துடன் வீட்டின் முன் வந்து நின்று கொண்டான். ரொட்டிப் பாய் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுதெல்லாம் வாரம் இருமுறை ‘ரொட்டிப் பாய்’ கம்பத்திற்கு வருவதுண்டு. அவர் வரும்போதெல்லாம் ஒரு சிறுவர் கூட்டம் எப்படியும் ஒன்று சேர்ந்துவிடும். ரொட்டிப் பாய் எப்பொழுது பார்த்தாலும் ஒரே உடையைத்தான் அணிந்திருப்பார். இரண்டு பொத்தான்கள் திறந்துவிடப்பட்டு வெள்ளை சட்டையும் ஒரு பழுப்புநிற காற்சட்டையும்தான் அவருடைய சீருடை.

கம்பத்தின் முற்சந்தியை விட்டு அவர் பெரிய சாலைக்கு வெளியேறும்வரை அவரின் மோட்டாரைக் கம்பத்திலுள்ள சிறுவர்கள் துரத்திக் கொண்டு ஓடுவார்கள். வியர்த்துக் கொட்ட, வெயில் சுடும் வெளுத்த தார் சாலையில் வெறும் காலில் ஓடி முடித்து மூச்சிரைக்க மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் சிறுவர்களுக்கு ரொட்டிப் பாய் ஒரு துண்டு ரொட்டிக்கூட கொடுக்கப்போவதில்லை எனத் தெரியும். ரொட்டிகளும், கேக்குகளும், ‘ஊடாங்’ கெரோப்பக்களும் பூத்துக் குலுங்கும் மோட்டாருடன் ரொட்டிப் பாய் சற்று நேரத்தில் காணாமல் போய்விடுவார்.

ஏன் ரொட்டிப் பாயைத் துரத்துகிறீர்கள் என்று கேட்டால் எல்லோரின் வாயிலும் சிரிப்பு முளைத்துக் கொண்டு முட்டும். ரொட்டிப் பாயைப் போல ஓர் இசை கலைஞன் அக்காலங்களில் யாரும் மோட்டாரில் வரமாட்டார்கள் என எல்லா சிறுவர்களுக்கும் தெரியும். ‘போங் போங்’ என நிமிடத்திற்கு ஒருமுறை அவர் எழுப்பும் இசை கம்பத்துக்கே உயிரூட்டிவிடும்.

ரொட்டி பாயைத் துரத்தினால் உங்களுக்கு என்ன கிடைக்கும் எனக் கேட்டால், அதற்கும் சிரிப்பார்கள். கம்பத்தின் கடைசி வீடு ஆறு வயது நிரம்பிய அப்புவினுடையது. ரொட்டிப் பாய் கம்பத்தின் உள்ளே நுழைவதும் மீண்டும் வெளியேறுவதும் அப்புவின் வீட்டிற்கு அடுத்தப்படியாக உள்ள சாலையில்தான். அப்பாதை புதியதாகக் கட்டப்பட்டிருக்கும் நவீன வீடுகளுக்குப் போகும் பாதையுடன் இணையும் வசதி கொண்டது. ஆகவே, அப்புவிற்கு அந்த ரொட்டிப் பாயை நன்றாகத் தெரியும். அவனுடைய வீட்டின் முன் அவர் நிற்கும் போதெல்லாம் அப்பு அவரைக் கண் கொட்டாமல் பார்ப்பான். முன்பக்கம் இரண்டு பற்கள் இல்லாத அவருடைய வாயில் கொட்டும் மிகவும் கஞ்சத்தனமான சிரிப்பை அப்பு எப்பொழுதாவது மட்டுமே கவனிப்பான்.

“ம்மா! நானும் ரொட்டிப் பாயைத் துரத்தணும்,” என அப்பு வீட்டில் கேட்காத நாளில்லை. ரொட்டி பாய் வராத நாட்களில்கூட அப்பு அதைக் கேட்டு அடம் பிடிப்பான்.

அப்புவின் அம்மா உனக்கு வயது போதாது, இப்பொழுது துரத்தக்கூடாது எனச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்திவிடுவார்.

“நான் எத்தனை வயசுலே ரொட்டிப் பாயைத் துரத்த முடியும் மா?” என அப்பாவியாகக் கேட்டு நிற்பான் அப்பு. அப்படி அவன் கேட்கும்போது வாயில் எச்சில் ஒழுகும்.

“அடி விழும்டா உனக்கு. அதுக்குலாம் உனக்கு வயசு பத்தாதுடா. அவுங்க மாதிரிலாம் ரோட்டுல ஓடக்கூடாது. அடுத்த வருசம் அம்மா அனுப்பறென்,” எனச் சொல்லும் அம்மாவின் பதிலைக் கேட்டு சலித்து போன அப்பு மீண்டும் வாசல் கதவை ஏக்கத்துடன் பார்ப்பான்.

ஒருமுறை அவர் அப்புவின் வீட்டின் முன் வியாபாரம் செய்துவிட்டுப் போகும்போது ஒரு ரொட்டிப் பாக்கேட் அப்புவின் வீட்டு வேலியில் மாட்டி விழுந்துவிட்டது. அதை அப்பு அவர் மீண்டும் அவ்வழியே போகும்போது “ரொட்டிப் பாய்! ரொட்டிப் பாய்!” எனக் கத்தி நிறுத்திக் கொடுத்துவிட்டான். அதன் மூலம் எதிர்காலத்தில் அவரைத் துரத்துவதற்கான அனுமதியையும் விசுவாசத்தையும் பெற்றுவிட்டோம் என மகிழ்ந்தான்.

பிறகொருநாளில் சின்னக்கண்ணு பேரன் ரொட்டிப் பாயைத் துரத்திக் கொண்டு ஓடும்போது ஒரு ரொட்டி பாக்கேட்டைப் பிடித்து இழுத்துவிட்டான். அதனுடன் சேர்ந்து சில ரொட்டிகளும் பிய்த்துக் கொண்டு சாலையில் சிதறின. உடனே மோட்டாரை ஓரமாக நிறுத்திவிட்டு ரொட்டிப் பாய் அரை கிலோ மீட்டர்வரை தொப்பையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அச்சிறுவர்களைத் துரத்தினார். மூச்சிரைத்துக் களைத்தவுடன் மீண்டும் நடந்து போய்விட்டார். அதன் பிறகு ரொட்டிப் பாய் எப்பொழுது கம்பத்திற்குள் வந்தாலும் யாராவது துரத்துகிறார்களா என எச்சரிக்கையுடனே இருப்பார். வெறும் துரத்துதலாக இருந்த நடவடிக்கை, ரொட்டி பாய்க்குத் தெரியாமல் துரத்தும் தந்திர விளையாட்டாக மாறியது. ரொட்டிப் பாயிடமிருந்து நெருக்கம் குறைந்து ஒரு பத்து மீட்டர் தள்ளியே அவரைச் சிறுவர்கள் துரத்துவார்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு கம்பத்தில் நிறைய புரோட்டன் வகை மகிழுந்துகள் வர ஆரம்பித்தன. மகிழுந்துகளின் புழக்கம் அதிகரிக்கத் துவங்கின. கடனுக்கு வங்கிகள் கொடுத்த வசதியால் பலரின் வீட்டின் முன் புரோட்டன் கார்கள் ஜொலித்தன. மேட்டுக் கடை ஐயாவு குடும்பத்தில் மட்டும் இரண்டு மகிழுந்துகள் வாங்கப்பட்டதும் அவர்களின் ஆர்பாட்டத்தில் மாலை நேரத்தில் சிறுவர்களை வீட்டுக்கு வெளியே அனுமதி மறுக்கப்பட்டது. ரொட்டி பாயும் வாரம் ஒருமுறை மட்டுமே வந்து போனார். இரண்டு மூன்று சிறுவர்கள் மட்டும் அவரைத் துரத்துவார்கள். அப்பொழுதும் அப்பு அம்மாவிடம் கெஞ்சுவான். மதிய உணவைச் சாப்பிடாமல் உண்ணாவிரதமெல்லாம் எடுத்துப் பார்த்தான்.

“டேய்ய்ய் ரோட்டுல நெறைய காடிலாம் வருது. என்னா விளையாடறீயா நீ?: என அம்மாவிற்கு மிரட்டுவதற்கு ஒரு வலுவான காரணமும் கிடைத்துவிட்டது.

அப்பு அழுது ஆர்ப்பரித்து வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் இடைச்சட்டத்தை உலுக்கும் போதெல்லாம் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறுவார். அப்புவிற்கு ஏழு வயது வந்ததும் அதனைச் சொல்லியே மேலும் தொல்லை தரத் தொடங்கினான். வேறு வழியில்லாமல் அன்று அப்புவை விட முடிவெடுத்தார்.

“அப்பு! கீழத் தெரியுதே ராஜூ அங்கள் கடை வரைக்கும்தான் நீ ரொட்டிப் பாயைத் துரத்தணும். சரியா? அம்மா போய் அங்க நிண்டுக்கறென். நீ அது வரைக்கு ஓடி வந்துரு,”

அப்பு ரொட்டிப் பாய் நுழையும் இடத்தில் தயாராக நின்று கொண்டான். ஒரு மிகக் குறுகலான வளைவு அது. சோம்பேறி மின்சாரக் கம்பத்தை ஒட்டிய வெட்டு. சட்டென யார் வருகிறார் எந்த வாகனம் வருகிறது என யூகிக்க முடியாது.

இறக்கைகள் முளைத்ததைப் போல அப்புவின் கால்கள் துடித்தன. ஒரேயொருமுறை பலநாள் கேட்டு கேட்டு புளுத்துப்போன அந்த ‘போங் போங்’ ஒலிக்காக அவன் காத்திருந்தான். ஒரு மணி நேரம் இரக்கமே இல்லாமல் தாண்டியது. ரொட்டிப் பாய் வரவே இல்லை. அம்மா ராஜு கடையில் யாரிடமோ பேசிவிட்டு களைப்புடன் திரும்பி வந்தார்.

“டேய்! ரொட்டிப் பாய்லாம் இப்ப வர்றதே இல்லயாம். ரொட்டிலாம் ஏதோ கம்பெனிலேந்து நேரா கடைக்கே வந்துருதாம்”

அம்மா வழக்கமான சமாதானம் சொல்கிறார் என அப்பு நம்பினான். வீட்டின் உள்ளே வர மறுத்துவிட்டான். ரொட்டிப் பாய் வருவார் என அவனுக்குத் தெரியும். ஓடுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தான். ‘Gardenic’  என நீல நிறத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒரு வெள்ளை மூடுந்து அசைந்து குலுங்க ஹார்ண் அடித்துக் கொண்டே அச்சாலைக்குள் நுழைந்தது.

“டேய் அப்பு வீட்டுக்குள்ள வா. காடிலாம் நெறைய வருது,” என அப்புவின் அம்மா கூச்சலிட்டார்.

 

  • கே.பாலமுருகன்

மொழிச் சிக்கலும் பன்முகச் சூழலும்

 

‘மொழி என்பது ஒரு தொடர்புக் கருவி மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே ஓர் உளவியல் சமாதானத்தை வழங்கக்கூடியதும் ஆகும்’

ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் நம் இந்திய மாணவர்கள் எதிர்க்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் பன்முகச் சூழலுக்குள் பொருந்திப் போக முடியாமையே ஆகும். சீன, மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் உறவாடி, நட்பை ஏற்படுத்திக் கொள்ள நம் இந்திய மாணவர்களுக்குப் பெரும் தடையாக இருப்பது மொழிக் குறித்த சிக்கலே. மிகச் சிறிய வயதிலே அவர்கள் பன்முக சூழலுக்குள் மொழி ரீதியிலான சிக்கலை எதிர்க்கொண்டு விலகி தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். எந்தவொரு நட்பும் உறவும் மொழியைக் கொண்டு வெறும் தகவல்களையும் கட்டளைகளையும் மட்டும் பகிர்ந்துகொண்டு வளம் பெற முடியாது. ஒரு மொழியின் வழியாகத் தன் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தாலே பன்முகச் சூழலின் கவனத்தைப் பெற முடியும்.

மலாய்மொழியில் அல்லது ஆங்கில மொழியில் உரையாட முடியாத அல்லது உரையாடத் தயங்கும் நம் மாணவர்கள் முதலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் வழி தன் நட்பு வட்டத்தை இந்திய மாணவர்களுக்கே பாதுகாப்பாகக் கட்டமைத்துச் சுருக்கியும் கொள்கிறார்கள். பிறகு, இவ்விடைவேளி இனம் சார்ந்த அதீத உணர்வை வலுப்படுத்துகிறது. மொழிச் சிக்கலுள்ள மாணவர்கள் அவர்கள் யாருடன் உரையாடி உறவை உருவாக்கிக் கொள்ள முடியவில்லையோ அவர்களைத் தன் எதிரிகளாகக் கற்பித்துக் கொள்கிறார்கள். இதுவே, பின்னாளில் அவர்களுக்குள் இருக்கும் சிறு உளவியல் வேறுபாடுகளுக்கான வடிக்காலை உருவாக்க இயலாமல் வெடித்துச் சிதறுகிறது.

ஒரு மொழியின் வழி நம் உணர்வுகளையும் நியாயங்களையும் முன்வைத்துவிட முடியும் என்றாலே வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் ஓர் உளவியல் சார்ந்த புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும். அவ்வுளவியல் நிலைபாடுகளே அவர்களைத் தொடர்ந்து உரையாடுவதற்கான ஒரு சமாதானத்தையும் வாய்ப்பையும் வழங்கிவிடுகிறது. ஆகவே, இடைநிலைப்பள்ளிகளில் நம் மாணவர்கள் அங்கு அவர்கள் சந்திக்கும் முதன்முறையான பன்முகச் சூழலை எதிர்க்கொண்டு சமாளித்து அங்கிருந்து வெற்றிப் பெற்று வெளியேற வேண்டுமென்றால் அவர்களுக்கு மொழிச் சிக்கலே இருக்கக்கூடாது.

இப்பிரச்சனையைக் களைய ஆரம்பப்பள்ளிகள் தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மாணவர்கள் திறம்படப் பேசும் திறனை வளர்க்க முன்வர வேண்டும். தமிழ் அறவாரியம் ஆறாம் ஆண்டு முடிந்ததும் 21 நாட்கள் மொழி சார்ந்த பயிலறங்குகளை நடத்துவது ஒருவகையில் மிக முக்கியமான முயற்சியாகும். அப்பயிலரங்கில் அவர்கள் மலாய் மொழியில் பேசிப் பழகுகிறார்கள்; படைப்புகளை ஒப்புவிக்கிறார்கள். பாராட்டத்தக்க ஒரு பயிலரங்கம் என்றாலும் இதுபோன்ற பன்மொழிப் பயிற்சிகளை முதலாம் ஆண்டிலிருந்தே பள்ளிகள் துரிதப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

21ஆம் நூற்றாண்டின் மாணவன் ஒரு மொழிக்கு மேல் தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். அதனைப் பெற்றோர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தன் மகனுக்கு/மகளுக்குத் தாய்மொழியில் இருக்கும் தொடர்பாற்றல் ஏன் பிறமொழிகளில்/ பன்முக மொழிகளில் இல்லை என்பதை அவர்கள் கவனப்படுத்த வேண்டும். எனக்குத் தெரிந்து கம்பத்தில் வாழும் பல ஏழை மாணவர்கள் மலாய்மொழியில் அத்தனை சிறப்பாகவும் இயல்பாகவும் பேசுவதைக் கண்டிருக்கிறேன். அப்பயிற்சியை அவர்கள் பயிரலங்கத்திலோ அல்லது பிரத்தியேக வகுப்புகளிலோ பெறவில்லை; மாற்றாக தன் அன்றாட வாழ்விலிருந்து வாழும் சூழலிலிருந்து பெற்றிருக்கிறார்கள்.

வசதிமிக்க அல்லது கெட்டிக்கார மாணவர்கள் எத்தனையோ பேர் மலாய்மொழியில் பிறருடன் இயல்பாகத் தொடர்புக்கொள்ள தயங்குவதை நாம் கண்டிருக்கக்கூடும். இச்சிக்கலை நாம் ஆரம்பப்பள்ளியிலேயே கவனித்துக் களைய வேண்டும். இல்லையேல் நாம் உருவாக்கி அனுப்பும் கெட்டிக்கார மாணவர்கள்கூட மொழிச் சிக்கலால் இடைநிலைப்பள்ளிகளில் தொடர்புத்திறனற்று தனிமைப்பட்டு வாழ நேரிடும். இத்தனிமை மிகவும் ஆபத்தானது என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

ஆரம்பப்பள்ளிகளில் நாம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில திட்டங்களை மீண்டும் துரிதப்படுத்தி புதுப்பித்து அமல்படுத்தினாலே ஒரு பன்முகத் திறன் கொண்ட மாணவனை உருவாக்கிவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு குழந்தை சிந்திக்கத் துவங்குவது தன் தாய்மொழியில்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அக்குழந்தை வளர்ந்து வந்து நிற்கப் போகும் நிலம் பன்முகக் கலாச்சாரம் கொண்டவை என்பதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தாய்மொழி மீதான அன்பும் பற்றும் வளத்துடன் இருக்க, நாம் வாழும் நிலத்தின் இன்னபிற மொழிகளிலும் ஆற்றல் பெற்றிருப்பது அவசியமாகும்.

சில திட்டங்கள்:

  1. மொழி வாரங்கள் – அவ்வாரம் மலாய்மொழி வாரம் என்றால் அனைத்து மாணவர்களும் தன் நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் பள்ளி ஊழியர்களிடமும் மலாய் மொழியில்தான் உரையாட முடியும்; கருத்துகளை வெளிப்படுத்த முடியும்.
  2. மலாய்மொழிப் போதிக்கும் ஆசிரியர் தன்னிடம் மாணவர்கள் மலாய்மொழியிலேயே உரையாட வழிவகுக்க வேண்டும்.
  3. மலாய் நாவல்கள்/ மலாய் சிறுகதைகளை வாசித்து அதைப் பற்றி மலாய் மொழியிலேயே பேசத் தூண்டலாம். (இதற்குப் பரிசுகளையும் வழங்கினால் மாணவர்கள் ஆர்வத்துடன் இருப்பர்)
  4. தினம் ஒரு தகவல் – தினமும் ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் ஒரு தகவலைக் கூறி அதை மலாய்மொழியில் வகுப்பில் கூறப் பணித்தல். (ஒரு நெருக்கடி வரும்பொழுது எப்படியும் மாணவர்கள் பேச முயல்வார்கள்)

 

இப்படி இன்னும் பல திட்டங்களைப் பற்றி நாம் சிந்தித்து அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் வீட்டிலும் மெகாத் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு மலாய், தமிழ் ஆங்கிலச் செய்திகளைப் பார்க்க உங்கள் பிள்ளைகளைத் தூண்ட வேண்டும்.

 

  • கே.பாலமுருகன்

புதிய திட்டங்களும் பழைய நினைவுகளும் – 2016-லிருந்து 2017-க்கு

எப்பொழுதும் கடந்துபோன வருடத்தின் நினைவுகளையும் எதிர்க்கொள்ளப் போகும் வருடத்தின் திட்டங்களையும் எழுதுவது வழக்கமாகும். இன்றோடு (03.01.2017) நான் ஆசிரியர் பணிக்குள் நுழைந்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. 2016ஆம் ஆண்டு எனக்கொரு கத்திமேல் பயணம் மட்டுமே. விருதும் பதவியும் குவிந்தாலும் அதையும் மீறி புகழுக்குள் ஆழ்ந்துபோகாமல் தீமைகளால் மீட்டெடுக்கப்பட்டு நிதானமாக்கப்பட்டேன். எல்லோரும் வயதிற்குரிய வளர்ச்சி கிடையாது; எதுவுமே மெதுவாக நடக்க வேண்டும் ஆனால் உன் வாழ்க்கையில் நீ அடைந்திருப்பது வெகுசீக்கிரமான அடைவுகள் எனச் சொன்னார்கள்; அறிவுரைத்தார்கள். திரும்பிப் பார்க்கிறேன், அப்படியேதும் பெரிய சாதனைகள் எல்லாம் கிடையாது. என்னைப் பொறுத்தமட்டில் இவையாவும் எளிய முயற்சிகள் எளிய அடைவுகள் மட்டுமே.

கடந்த வருடத்தைக் காட்டிலும் வாழ்க்கையின் வேறு எந்த வருடமும் எனக்கு வாழ்க்கைக் குறித்த பக்குவத்தையும் தாங்கும் வலிமையையும் அளித்திருக்காது என்றே சொல்லலாம். என்னை வெறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து காட்ட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டேன். அவ்விஷப் பரீட்சையை எதிர்க்கொண்டும் வருகிறேன். பொய்யான சிரிப்பும் பொய்யான பாராட்டும் பொய்யான ஆறுதலும் நிரம்பிய முகங்களைத் தாண்டி தாண்டி ஒரு பெரும்சிரிப்பினுள் ஆழ்ந்து கிடக்கிறேன். 2016 என்கிற எனது மிகச் சிறந்த ஆசானின் மூலமாக வாழ்க்கை அத்தனை எளிமையானதன்று என்பதை உள்ளூர உணர்ந்திருக்கின்றேன்.

வேறு என்ன சொல்வது? குடத்தில் அலம்பும் நீரைப் போன்ற மனத்துடன் விளக்கவியலாத/ சத்தமிடாத ஒரு பெரும் பாரத்தினைச் சுமந்து கொண்டு 2017ஆம் ஆண்டின் வாசலில் நிற்கிறேன். இவ்வருடம் பெரிதாகத் திட்டங்கள் இல்லையென்றாலும் ஒருசிலவற்றை தொகுத்துக் கொள்வதில் வசதியுறுகிறேன்.

நூல்கள்

இவ்வருடம் சிறுவர்களுக்கான நாவலின் மூன்றாவது பாகத்தை வெளியிட்டாக வேண்டும். இல்லையென்றால் எனது வாசக சிறுவர்கள் என்னைத் தொலைத்துவிடுவார்கள். அடுத்து, தோழி பதிப்பகத்தின் வெளியீடாக என்னுடைய ஒரு சிறுகதை தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கின்றன. இதுவரை நான் எழுதிய அனைத்து சினிமா விமர்சனங்களையும் ஒரு நூலாகத் தொகுக்கு திட்டமுண்டு. இந்தாண்டின் நூல் திட்டம் இவ்வளவுத்தான். மேலும், இவ்வாண்டு மாணவர்களுக்காக 160 பக்கத்தில் கட்டுரை தொகுப்பு நூல் ஒன்றை டிசம்பரிலேயே சுடர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. கடுமையான உழைப்பில் 88 மாதிரிக் கட்டுரைகளும், 10 சிறுவர் சிறுகதைகளும், சிறுகதை எழுதும் வழிமுறைகளும் கொண்ட இவ்வாண்டிற்கான ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் தமிழ்மொழிப் பயிற்சி நூல் ஒன்றினையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.

பயணம்

இவ்வாண்டு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இந்திய மலைப்பிரதேசங்களுக்குச் செல்லத் திட்டமுண்டு. மேலும், வருட இறுதியில் ஐரோப்பா நாடுகளுக்குச் செல்லும் திட்டமும் உண்டு. ஆனால், இவையாவும் கைக்கூடி வரப் பலவகைகளில் வாழ்க்கை ஒத்துழைக்க வேண்டும் அல்லவா? வழக்கம்போல யூ.பி.எஸ்.ஆர் வழிகாட்டிப் பட்டறைகள் செய்யவும் திட்டமுண்டு. ஆனால், கடந்த காலங்களைப் போல் அல்லாமல் குறைத்துக் கொள்ளவும் எண்ணியுள்ளேன். இவ்வருடம் நிச்சயம் சிங்கை சென்று ஒருசில நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு.

 

நட்பு வட்டம்

தற்சமயம் நவீன சிந்தனை இலக்கியக் கள நண்பர்களுடன் மட்டுமே இலக்கிய ரீதியிலான நட்பு வட்டம் உண்டு. சுவாமி பிரம்மாநந்தா சரஸ்வதி அவர்களின் வாசிப்பின் வழியாக உருவாகியிருக்கும் நண்பர்கள் மாதம் ஒருமுறை சந்தித்து இலக்கியம் சார்ந்து உரையாடி வருகிறோம். கெடா மாநில எழுத்தாளர் நண்பர்களுடன் அவ்வப்போது சந்தித்து வருகிறேன். அதனைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சுடர் பதிப்பகம், தோழி பதிப்பகம் அவர்களுடன் நூல்கள் திட்டங்களின் வழி உருவான நட்பும் தொடர்கிறது.

பல நட்புகள் மௌனத்துடன் விலகிக் கொண்டன. சில புதிய நட்புகள் வலுவான முறையில் இணைந்து கொண்டன. கடைசிவரை உடன் இருந்த நல்ல நண்பர்களை அன்போடு நினைத்துப் பார்க்கிறேன். எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் பழகும் அவர்களின் நட்பு மட்டுமே நிலைத்திருக்கின்றன.

பிரிவுகள்

கடந்தாண்டு தங்கை புனிதாவின் பிரிவு மறக்க முடியாதது. மிகவும் நெருக்கமாக இருந்தவர். வாழ்க்கை எனக்குத் தத்துக் கொடுத்த உறவு. எதிர்ப்பாராத தருணத்தில் சட்டென பிரிந்தார். அத்துயரம் இன்றுவரை மனத்தை விட்டு நீங்கவில்லை. அதே போல நண்பரின் தந்தை, எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு, நண்பர் யோகேஸ்வரனின் தாயார் என இவர்களின் பிரிவுகள் மனத்தைத் துயரத்தில் ஆழ்த்தியது.

படைப்புகள்

தொடர்ந்து சிறுகதைகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். உலக சிறுகதைகள் வாசித்து அதனைப் பற்றி எழுதவும் எண்ணமுண்டு. வாய்ப்பிருந்தால் வருட இறுதியில் இன்னொரு சிறுகதை தொகுப்பும் அல்லது ஒரு நாவலும் கொண்டு வரும் திட்டமுண்டு.

இப்படி அனைத்துமே திட்டங்களாக விரிகின்றன. வாழ்க்கை அதற்கேற்றாற்போல நெளிந்து வளைந்து வழிவிட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். வாழ்க்கை வேறு என்ன திருப்பங்களைக் கொண்டிருக்கிறது என்பதனைக் காலம்தான் காட்டும். அதை எதிர்ப்பார்த்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன்.

ஆசிரியர் பணிகள்

ஒரு நல்லாசிரியராக மாணவர்களுக்கான என் பணியை இவ்வருடமும் துரிதப்படுத்த வேண்டும். வழக்கம்போல சில இலவச வகுப்புகள் செய்ய எண்ணமுண்டு. கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் போன்றவற்றையும் கவனம் செலுத்தவுள்ளேன். உட்புற பள்ளிகளுக்கான இலவச யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப் பட்டறைகள் திட்டமும் என் பட்டியலில் உண்டு.

ஒரு சிறிய வெற்றிக்காகக்கூட நான் எதிர்நீச்சல்தான் போட வேண்டும் என்பது முடிவாகிவிட்டது. வாழ்க்கை ஒரு குரங்கு வித்தையைப் போல. எவ்வளவு வலியாக இருந்தாலும் சிரிக்க வேண்டும்; சிரிப்புக் காட்ட வேண்டும். ஜோக்கர் வேடம் அணிந்து கொண்டிருப்பவன் மட்டுமே சகித்துக்கொள்ளப்படுவான்; ஏற்றுக் கொள்ளப்படுவான். ஒரு ஜோக்கருக்குள் இருக்கும் வேதனைமிக்க குரல்; உலகை நோக்கி கூவப்படும் ஒரு நம்பிக்கைமிக்க குரல் இருப்பதைப் பற்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

‘ஆடி அடங்கும் பூமியிலே

நம்ம வாடி வதங்க தேவையில்ல

ஒருவாட்டி வரும் வாழ்க்கை

துணிவோமே அதை ஏற்க’

 

வழக்கம்போல இவ்வருடமும் துணிந்து நிற்கிறேன் இவ்வாழ்க்கையை ஏற்க; வாழ.

 

  • கே.பாலமுருகன்

சிறுகதை: பூட்டு

சிறியதாக இன்னும் ஒரு பூட்டு போதும் என முடிவாகிவிட்டதும் உடனே ‘ஆ மேங்’ கடைக்கு இறங்கினேன். மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி எதிர்ப்புறம் இருக்கும் பெரிய சாலையைக் கடந்துபோனால் இருக்கும் ஓரே ஒட்டுக் கடை அதுதான்.

அப்பாவிற்குப் பூட்டென்றால் மிகவும் பிடிக்கும். சதா காலமும் அவருடைய மோட்டார் வண்டியிலும் சிறிய வைப்புப் பெட்டியிலும் பூட்டுகள் இருக்கும். எதையாவது பூட்டியப்படியேதான் இருப்பார். அம்மாவின் அலமாரி, அவருடைய அலமாரி, ஒரு கதவு உடைந்து பாதி சாய்ந்து கிடக்கும் தாத்தாவின் அலமாரி என ஒரு சமயத்தில் அலமாரிக்கெல்லாம் பூட்டுப் போடுவார். அவசரத்திற்கு எதையுமே அவர் அனுமதியில்லாமல் எடுக்க முடியாது. சாவி தொலைந்த சமயத்தில் அவர்தான் அதனை உடைக்கவும் செய்வார். இழுத்துக் கட்டி ஒட்ட வைத்து மீண்டும் பூட்டுவார்.

மற்ற சில சமயங்களில் சாமி மேடையிலுள்ள இழுவையைப் பூட்டி வைப்பார். அதில் ஊதுபத்திகளும் சூடங்களும் மட்டுமே இருக்கும். கேட்டால் அவர் உழைத்து வாங்கியது எனக் கத்துவார்.

“ஏன்பா எப்பவும் பூட்டிக்கிட்டே இருக்கீங்க?” என ஒருமுறை கேட்டேவிட்டேன்.

அக்கேள்வியைக் கேட்டதற்கு என் வாய்க்கேற்ற ஒரு பூட்டு அவர் கற்பனையில் ஓடிக் கொண்டிருக்கும் என என்னால் அப்பொழுது யூகிக்க முடிந்தது. ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை. சிறுவயதில் சீனனின் பூட்டுக் கடையில் தான் வேலை செய்ததாகச் சொல்லி சமாளித்தார். சிலநாள் அம்மாவையும் அறைக்குள் வைத்துப் பூட்டிவிடுவார். நாங்கள் கேட்டால் அம்மா தியானத்தில் இருக்கிறார் எனச் சொல்வார். ஒருநாள் கடந்து மறுநாள் இரவுவரை அம்மா அறைக்குள்தான் இருப்பார்.

வீட்டு வாசலுக்கு மட்டும் இரண்டு பூட்டுகள். ஆனால், வீட்டில் அப்படியொன்றும் இல்லை. ஆனாலும், அப்பா இரண்டு பூட்டுகளையும் பூட்டிவிட்டு நான்குமுறையாவது இழுத்துப் பார்ப்பார். அம்மா கேட்கும்போதெல்லாம் ‘ரெடிமெட்டாக’ ஒரு அறையும் காத்திருக்கும். சிலவேளைகளில் கீழே இறங்கி மோட்டார்வரை வந்துவிட்டு, கதவைப் பூட்டிவிட்டோமா எனப் பார்ப்பதற்காக மீண்டும் மேலே ஓடுவார். உலகிலேயே மிகப் பெரிய பூட்டொன்று அப்பொழுது மட்டும் மலேசியாவில் இருந்திருந்தால்  அப்பா அதனைக் கொண்டு ஒட்டு மொத்த வீட்டையே மொத்தமாகப் பூட்டியிருப்பார்.

அம்மா இறந்தவுடன் அப்பா அளவுக்கதிகமாகத் தொல்லையாகியிருந்தார். வீட்டுக்கு வெளியே வந்து தேவையில்லாமல் பக்கத்து வீட்டு ஆட்களையும் எதிரில் வருபவர்களையும் பார்த்துக் கெட்ட வார்த்தையில் கத்துவார். பலமுறை யார் அடித்தது எனத் தெரியாமல் முகத்தில் காயத்துடன் வீட்டுக்கு வெளியில் உள்ள வரந்தாவில் விழுந்து கிடப்பார். வேலை முடிந்து இருண்டு கிடக்கும் வீட்டை நோக்கி வரும் எனக்கு அது அழுத்தத்தையும் வருத்தத்தையும் கலந்து கொடுத்தது.

கடைக்குள் இருந்த ஆ மேங்கின் மகனுக்கு என்னை நன்றாகத் தெரியும். கடைக்குள் நுழைந்ததும் கொஞ்சம் தரமான பூட்டே நல்லது என மனத்தில் தோன்றியது.

“வாவ் செக்காராங் அவாக் சுடா மூலாக்கா இனி மச்சாம்?” என அவன் வேடிக்கையாகக் கேட்டான்.

அப்பாத்தான் ஆ மேங் காலத்திலிருந்தே பூட்டு வாடிக்கையாளர். அவர் வந்தாலே பெரும்பாலான சமயங்களில் வாங்கவில்லை என்றாலும் பூட்டுகளை வெறுமனே தடவிப் பார்த்துவிட்டுப் போவார் என அவர்களுக்குத் தெரியும்.

தரமான கொஞ்சம் சிறியதான ஒரு பூட்டை வாங்கிக் கொண்டு வெளியேறினேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பா அவருடைய அறையிலுள்ள கிழட்டு கட்டிலில் சுருங்கிக் கிடந்ததைப் பார்த்தேன். எப்பொழுதாவது திடீரென எதையாவது போட்டு உடைப்பார் அல்லது கத்திக் கொண்டே முன்கதவைப் பிடித்து உலுக்குவார். வயதாகிவிட்டால் அப்படித்தான் என அக்கம் பக்கத்தில் சொல்லும்போதெல்லாம் அம்மாவை நினைத்துக் கொள்வேன்.

சில மாதங்களுக்கு முன்புவரை அறையின் மூலையில் கிடந்த தடித்த சங்கிலி இப்பொழுது அங்கே இல்லை. ஆனால், எப்பொழுது அவ்வறைக்குள் நுழைந்தாலும் அது அங்குத்தான் இருப்பதைப் போல தோன்றும். அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அதை அம்மாவின் அலமாரிக்குக் கீழ் ஒரு திருப்பிடித்த பழைய பூட்டுடன் சேர்த்துக் கண்டெடுத்த போது என் மனம் நடுங்கியது. உடைந்து அன்றையநாள் முழுவதும் அழுதேன்.

‘ஸ்ப்ரீங்’ தொங்கிப் போய் கிடந்த அக்கட்டிலில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்தேன். அப்பாவிற்கு அப்பொழுது அதிகமாக மூச்சிரைத்தது. வெளியே வைத்திருந்த கஞ்சி தட்டை அவரின் கட்டிலுக்கு அருகில் வைக்கும்போது தொலைப்பேசி மீண்டும் அலறியது. சிங்கப்பூர் நண்பனின் அழைப்பு. ஜொகூரில் தங்கியிருக்கிறான். இன்று முழுவதும் ஐந்துமுறை அழைத்துவிட்டான். அவருடைய இரும்புக் கட்டிலை முடிந்தவரை தள்ளி சுவரினோரம் இருத்தினேன். அப்பொழுதுதான் அது விலகாது. அவர் அறைக்குள் மட்டும் மஞ்சள் நிற சிறிய விளக்கை எரியவிட்டேன். மற்ற இடங்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அடைத்துவிட்டேன்.

கடைசியாகச் சன்னலின் வழியாகக் கையைவிட்டு முன்கதவை உள்நோக்கிப் பூட்டினேன். புதியதாக வாங்கி வந்த பூட்டு சட்டென பிடித்துக் கொண்டது. நாற்றம் அடிக்கத் துவங்கும் சமயத்தில் உடைத்தால் உடனே உடைந்து கொள்ளும் அளவிற்காகவாவது அது சிறிய பூட்டாக இருக்க வேண்டும் எனக் கவனமாக இருந்தேன்.

எனக்கு ஒன்பது வயதிருக்கும்போது நான் பார்த்திருக்கிறேன். அது அத்தனை காலங்களுக்குப் பின் ஒருநாள் சட்டென ஞாபகக் கதவைத் தட்டும் என நினைக்கவே இல்லை. அம்மாவின் அறையில் கண்டெடுத்த அந்தக் கறைப்படிந்த சங்கிலியும் திருப்பிடித்தப் பூட்டும் மனத்தில் அப்படியே கிடந்தன. தோளில் தொங்கிக் கொண்டிருந்த துணிப்பை மட்டுமே கணக்க, கீழே இறங்கிக் கொண்டிருந்தேன்.

  • கே.பாலமுருகன்

2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

ஒரு வருடத்தில் வெளிவந்த 100க்கும் மேற்பட்ட படங்களைலிருந்து நல்ல சினிமாக்களைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சிக்காகத்தான் சினிமாவைத் தரவரிசைப்படுத்தியுள்ளேன். பற்பல திரைவிமர்சகர்களின் விமர்சனங்களை உட்படுத்தி, என் இரசனைக்குள்ளிருந்து இப்படங்களை முன்மொழிந்துள்ளேன். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதோடு மட்டும் நின்றுவிட முடியாது. கலைக்கு ஒரு பொறுப்புண்டு என்பதையும் நான் நம்புகிறேன். கலைக்கு ஒரு வெளிப்பாட்டுத்தன்மையும் உண்டு. 2016ஆம் ஆண்டில் வெளிவந்த 191 தமிழ்ப்படங்களில் மிகச் சிறந்த 20 படங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன். வணிக ரீதியில் அதிகம் சம்பாரித்த படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றிருக்கலாமே தவிர அவை சிறந்த படம் என அடையாளப்படுத்துதில் சிக்கல் உண்டு.

 

20th place: தேவி

2016ஆம் ஆண்டின் 191 தமிழ்ப்படங்களில் 20ஆவது இடத்தைப் பெறும் படம் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘தேவி’ படம் ஆகும். இவ்வாண்டில் வெளிவந்த திகில் படங்களில் தொழில்நுட்ப ரீதியிலும் திரைக்கதை ரீதியிலும் ஒரு வித்தியாசமான முயற்சியைக் கையாண்ட படம். வழக்கமான பேய் படங்களிலிருந்து பலவகைகளில் மாறுப்பட்டிருந்தது. பிரபுதேவா தன் இயல்பான நடிப்பில் படம் முழுவதும் வியாபித்திருந்தார்.

 

19th place: ஒரு மெல்லிய கோடு

ரமேஸ் இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் நடித்த ‘ஒரு மெல்லிய கோடு இவ்வாண்டின் 19ஆவது இடத்தைப் பெறுகிறது. கொலை தொடர்பான விசாரணை படமாக இருந்தாலும், ஒளிப்பதிவு, திரைக்கதை, போன்ற விடயங்களில் அழுத்தமான ஒரு பதிவாக இப்படம் திகழ்ந்தது. ஒரு நாள் இரவில் பிணவறையில் ஒரு பிணம் காணாமல் போய்விடுகிறது என்பதிலிருந்து கதை தொடங்கும். 1980களில் ஹாலிவூட் திரைப்படங்கள் இதுபோன்ற ஓர் எளிய முயற்சியிலிருந்தே உலக சந்தையை எட்டிப் பிடித்தது என்றே சொல்லலாம்.

 

18th place: மெட்ரோ

என் வரிசைப்படி 18ஆம் இடத்தைப் பெற்ற படம் மெட்ரோ. சமூகப் பிரச்சனையைப் பிரச்சார நெடி இல்லாமல் கதையாக்கியப் படம். இப்படம் கையிலெடுத்துக் கொண்ட சமூக சிக்கல் அல்லது குற்றம் நமக்கு மிகவும் அருகாமையில் நடந்த கொண்டிருப்பதும் பெருநகர் வாழ்வின் பெரும் கூச்சல்மிக்க புகார்களும் ஆகும். உணர்ச்சி சித்திரமாய் இப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

 

17th place: அழகு குட்டி செல்லம்

சார்லஸ் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் வெளியான ‘அழகு குட்டி செல்லம்’ படம் என்னுடைய வரிசையில் இவ்வாண்டின் 17ஆம் நிலையைப் பெறுகிறது. குழந்தை;குழந்தைமையைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட சமூகம் சார்ந்த கதையாகும். சிறுவர்கள், பெண்கள், குடும்பம் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு கதையைக் கொண்டிருந்த படம் எனப் பலவிதமான பாராட்டைப் பெற்ற படம். சிறுவர்களின் நடிப்பு கதைக்குப் பெரும் பலமாக அமைந்திருந்தது. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியினர்; ஆண் குழந்தை கிடைக்காமல் தவிக்கும் அடித்தட்டுக் குடும்பத்தினர்; கருவிலேயே குழந்தையைக் களைக்கத் தூண்டப்படும் பெண் என ஒட்டுமொத்த படமே குழந்தையைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தது.

 

16th Place: 24

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான படம் ’24’ ஆகும். இவ்வருடம் காலம் பற்றி திரைக்கதை உருவாக்கி வெளியான ஒரே படம். தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலுமே சிறந்த முயற்சியாக தமிழில் வெளியான நல்ல அறிவியல் சினிமா என்றே சொல்லலாம். சில விசயங்கள் ஜனரஞ்சகமாக இருந்தாலும் இப்படம் கொடுத்த பாதிப்பு கவனிக்கத்தக்கதாகும்.

 

15th place: மனிதன் (2016 countdown)

அமீட் அவர்களின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் 15ஆம் நிலையைப் பெறும் படம் ‘மனிதன்’ ஆகும். பின்னணி இசையும், படம் முன்னெடுத்த சமூக உணர்வும் மட்டுமே படத்தின் பலம் என்பதால் கவனிக்கத்தக்க ஜனரஞ்சகத்தன்மைமிக்கப் படமாகக் கருதுகிறேன். பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் என இன்னும் படம் நெடுக வரும் சிறிய கதைபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தார்கள். ‘முன் செல்லடா’ ஒரு பாடல் வரி நம்மை நிமிர்த்தி வைக்க உற்சாகம் அளிக்கிறது. சபாஷ் சந்தோஷ் நாராயணன்.

 

14th place: அச்சம் என்பது மடமையடா

a musical traveling போன்ற படங்கள் தமிழில் வெளிவருவது மிகக் குறைவுதான். பயணம் கொடுக்கும் திருப்பங்கள் ஆச்சர்யமிக்கவை என்பதை உணர்த்திய படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகும். சிம்புவின் தனித்த வழக்கத்திலிருந்து மாறுப்பட்ட நடிப்பும் இசையும் பயணமும் இப்படத்திற்குப் பலமாகும். ‘தள்ளிப் போகாதே’ பாடல் ஒன்றே படத்தைத் தூக்கி நிறுத்தியது என்றும் சொல்லலாம்.

 

13th place: சேதுபதி

அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதியின் ‘சேதுபதி’ படம் 13ஆம் நிலையைப் பெறுகிறது. ஒரு திமிரான காவல்துறை அதிகாரியின் கதையை நல்ல ஜனரஞ்சக யதார்த்ததுடன் இயக்குனர் படமாக்கியிருந்தார். படத்தின் திரைக்கதை இப்படத்திற்குக் கூடுதல் கவனத்தை வழங்கியது. ஒளிப்பதிவு, பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. சலிப்புத்தட்டாத அதே சமயம் பல மசாலாத்தனங்களைத் தவிர்த்து உருவாக்கப்பட்ட படம்.

 

12th place: காதலும் கடந்து போகும்

நவீன சினிமா இயக்கத்தில் தனி முத்திரை பதித்து வரும் இளம் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் ‘காதலும் கடந்து போகும்’ மிகச் சிறந்த முயற்சியாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டில் காதலில் ஊறிக் கிடந்த தமிழ் சினிமாவின் ஆன்மாவைப் புதுப்பித்துக் காட்டிய படமாக அடையாளப்படுத்துகிறேன். மடோனா செபஸ்தியன் அவர்களின் வரவும், விஜய் சேதுபதியின் யதார்த்த நடிப்பும், பின்னணி இசையும் படத்தின் பலமாகும்.

 

11th place: பிச்சைக்காரன்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டணி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தை இவ்வாண்டின் சிறந்த 20 படங்களில் பரிந்துரைக்கின்றேன். பிச்சைக்காரர்களின் உலகின் உள்ளே கொண்டு சென்று சிரிக்க வைக்கிறது; சிந்திக்க வைக்கிறது. வழக்கம்போல சினிமாக்குரிய விசயங்கள் இருந்தாலும் திரைக்கதையில் இழையோடும் தாய் அன்பும் கருணையும் நம் மனத்தை நெகிழச் செய்கிறது. பிச்சைக்காரர்களின் மீது பரிதாபத்தை மட்டும் வரவைக்க முயலாமல் அவர்களோடு சேர்ந்து படம் பயணிக்கிறது.

 

10th place: அப்பா & அம்மா கணக்கு

இவ்வருடத்தில் வெளிவந்த இவ்விரண்டு படங்களும் அப்பாவையும் அம்மாவையும் மையப்பொருளாகக் கொண்டு உரையாடியது. ஒரு மகனின்/மகளின் வாழ்வில் அப்பாவின்/அம்மாவின் பங்களிப்பு எப்படியிருக்க வேண்டும் என ஒட்டுமொத்த சமூகமே விழித்தெழுந்து உணர்வதைப் போல படம் சமூக அக்கறைமிக்கதாக அமைந்திருந்தது. சமூக அக்கறைமிக்க ஒரு படைப்பு இயல்பாகவே சமூகத்தின் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்துவிடுகிறது.

 

9th place: ஆண்டவன் கட்டளை

காக்கா முட்டை பட இயக்குனர் எம்.மணிகண்டனின் இவ்வாண்டின் வெற்றி படைப்பு ‘ஆண்டவன் கட்டளை’ நிச்சயமாக மிக முக்கியமான படமாகத் திகழ்கின்றது. வெளிநாட்டு வேலைக்குப் பிழைப்புத் தேடிப் போக நினைக்கும் தமிழ் இளைஞர்களின் பெருநகர் வாழ்வின் சிடுக்குகளை மிகவும் யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார். ஒளிப்பதிவும் கலையும் சென்னையின் பொந்துகளில் எலிகளைப் போல வாழும் இளைஞர்களின் தவிப்புகளைப் பரப்பரப்பில்லாமல் காட்சிப்படுத்துகிறது. மணிகண்டனுக்குச் சபாஷ். யோகி பாபு, நாசர், சேதுபதி, ரித்திகா அனைவருக்கும் பாராட்டு.

 

8th Place: மாவீரன் கிட்டு & உரியடி
(சூழ்ச்சிகளினால் மட்டுமே இங்கு எல்லாம் போராளிகளும் தோற்றிருக்கிறார்கள்)

இவ்விரண்டு படங்களையும் திரையரங்கில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சாதி சிக்கலை முன்வைத்துச் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படங்கள். தலித் சமூகத்திலும் ஆதிக்க சமூகத்திலும் நிகழும் சாதி சார்ந்த சிக்கல்களை மிகவும் நடுநிலையுடன் நின்று பேசிய படம் என்பதற்காகவே இப்படத்தினை மிகச் சிறந்த படங்களின் பட்டியலில் சேர்க்கிறேன். இதுபோன்ற கதைக்கருக்களை மிகவும் அக்கறையுடன் சுசீந்திரனால் மட்டுமே முன்னெடுக்க முடியும். திரைக்கதையில் இரண்டாம் பாதியில் தொய்வு இருப்பினும் இப்படம் பேசும் அசாதாரண முயற்சி பாராட்டத்தக்கது. 1980களின் இறுதிகளில் கிராமங்களின் உயிரைப் பிடித்து அழுத்திக் கொண்டிருந்த சாதிய வேறுபாடுகளினால் உருவாகும் சமூக சிக்கல்களைப் படம் உரையாட முனைந்துள்ளது. பார்த்திபன், விஷ்ணு, சூரியின் நடிப்பு கதைக்கு ஆழம் சேர்த்தது. அதே போல உரியடி படமும் சாதிய வன்மங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

 

7th place: அம்மணி

லட்சுமி இராமகிருஷ்ணனின் இயக்கத்தில் இவ்வருடம் வெளியான ‘அம்மணி’ என்கிற யதார்த்த படம் உணர்வு ரீதியில் பயணிக்கும் மிகச் சிறந்த படம் என்றே சொல்லலாம். நடுத்தர வர்க்கத்தின் மனங்களில் படிந்து கிடக்கும் பணத்தின் மீதான வெறியைக் கட்டவிழ்த்துக் காட்டும் படமாகும். பணத்தை நோக்கி ஓடும் இந்த நூற்றாண்டின் கால்களில் நசுங்கிக் கிடக்கும் மனிதநேயத்தையும் அன்பையும் அதற்குப் பதிலாகப் பரவிக் கிடக்கும் போலி முகங்களையும் படம் அழுத்தமாகக் காட்டிச் செல்கிறது. சாலம்மா கதாபாத்திரத்தை விட்டு நம்மால் வெளிவரவே இயலாது. ஒவ்வொருமுறையும் ஒரு முதியவர் குடும்பத்தால் கைவிடப்படும் நிஜங்களை எதிர்க்கொள்ள முடியாமல் காலம் நகர்ந்து போய்கொண்டிருக்கும் உண்மை தனி அறையில் வாழும், குப்பைகளைப் பொறுக்கி வாழும் அம்மணி கதாபாத்திரத்தின் வழி இயக்குனர் ஆழமாக நிறுவுகிறார்.

 

6th place: துருவங்கள் பதினாறு

 

21 வயதே நிரம்பிய இளம் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களின் நுட்பமான திரைக்கதை அமைப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘துருவங்கள் பதினாறு’ தமிழ் சினிமா சூழலுக்குள் மகத்தான வரவாகும். இத்தகைய தெளிவான திரைக்கதை அமைப்புடன் எடுக்கப்பட்ட வாழ்வியலைத் தத்துவார்த்தமாகக் காட்சிப்படுத்தும் சினிமாவை இயக்க முதிர்ச்சியான இயக்கப் பயிற்சி அவசியம். ஆனால், கார்த்திக் நரேன் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமா இரசிகர்களை அசத்தியுள்ளார். குறிப்பாக, ரகுமான் அவர்களின் நடிப்பும் மிகவும் நிதானத்துடனும் அனுபவப்பூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது. திரையரங்கில் காணத் தவறாதீர்கள். 2016ஆம் ஆண்டை நிறைவாக முடித்து வைத்துள்ள படமாகத் திகழும்.

 

5th place: இறுதிச் சுற்று

 

பெண் இயக்குனரான சுதாவின் இயக்கத்தில் பெண்கள் குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2016ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அகத்தூண்டல் படம் ‘இறுதிச் சுற்று’ ஆகும். ரித்திகாவின் வருகை தமிழ் சினிமாவிற்குப் புதிய திறப்பாகும். அடித்தட்டு சமூகத்தில் வீட்டோடு ஒடுங்கிக் கிடக்கும் அனைத்துப் பெண்களின் ஆளுமைகளையும் நம் சமூகத்திற்கு நினைவூட்டிய படம். சுதாவின் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாகும். விளையாட்டுத் தொடர்பாக மிகையான மசாலாத்தனமற்ற ஓர் அசலான சினிமா இது.

 

4th Place: இறைவி

இவ்வாண்டின் தீவிர சினிமா என்கிற அளவில் தமிழில் போற்றக்கூடிய படம் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ‘இறைவி’ படமாகும். நவீன சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தின் வேர்களுக்குள் சென்று ஊடுருவி பெண் விடுதலை பற்றி பேசும் துணிச்சலான படமாகும். கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த பெரும் ஆளுமை என்றே சொல்லலாம். ஆண்களின் உலகம் எத்தனை வன்மத்திலும் குரூரத்திலும் அகப்போராட்டத்திலும் பகைமைக்குள்ளும் சிக்கிக் கிடக்கின்றது என்பதனையும் ஆழமாக எடுத்துக் காட்டிய நல்ல முயற்சியாகும். குற்றங்களும் கோபங்களுக்கும் இடையே பெண் விடுதலையை மூன்று நிலைகளில் மூன்று பெண்களின் வாழ்க்கையினூடாகக் கடந்து சென்று படம் பெண்களுக்கான ஒரு விடுதலை நிலப்பரப்பை வெளிப்படுத்துகிறது. வெகுஜன மக்களை அதிகம் கவராவிட்டாலும் ‘இறைவி’ மிகத் திவீரமான சினிமா என்பதில் சந்தேகமில்லை.

 

3rd Place: குற்றமே தண்டனை

 

பல உலகத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கவனிக்கப்பட்ட எம்.மணிகண்டனின் மற்றுமொரு மனத்தை நெகிழ்த்திய படைப்பு ‘குற்றமே தண்டனை’ ஆகும். இவ்வாண்டின் மிகச் சிறந்த படங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுகின்றது. இப்படத்தைப் பார்த்து முடிக்கும் ஒவ்வொருவரின் மனத்தையும் குற்றவுணர்ச்சிக்கும் மௌனத்திற்கும் ஆளாக்கியது. கண் பார்வை குறையுடைய ( Tunnel vision), சென்னை அடுக்குமாடியில் வாழும் ஓர் இளைஞரின் வாழ்க்கையை மணிகண்டன் ஓர் உளவியல்பூர்வமான மர்மக் கதையாக வழங்கியிருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடு படத்தின் இறுதி காட்சியில் துளிர்க்கிறது. அதன் பிறகு ஒரு மௌனத்துடன் அழுத்தப்பட்ட மனத்துடன் வெளிவருகிறோம். பார்க்கத் தவறியவர்கள்; அல்லது இப்படத்தின் ஆழ்மனத்தைக் கண்டடைய தவறியவர்கள் மீண்டுமொருமுறை பார்க்கத் தவறாதீர்கள். வித்தார்த் அவர்களின் நடிப்பு தமிழின் சூப்பர் ஹீரோக்களிடம்கூட பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.

 

2nd Place: ஜோக்கர்

 

ராஜு முருகனின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படம் 2016ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப்படங்களில் தெளிவான மக்கள் அரசியலைப் பேசிய படமாகும். இப்படம் சமூகத்தின் ஜனநாயக மனத்தை அலசுகிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு வறுமை என்ற சொல்லே நகைப்புரியதாகிவிட்டது என்பதையும் மக்களைப் பற்றி பேசுவதுதான் அரசியல்; தேர்தல் பற்றி பேசுவது அரசியல் கிடையாது என்பதையும் அழுத்தமாக நவீன சமூகத்திற்கு எடுத்துரைத்த படம். மன்னர் மன்னன் என்கிற மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரத்தில் சோமசுந்தரம் தமிழ் சினிமாவின் நடிகர்களுக்கே சவால்விட்டார் என்றே சொல்ல வேண்டும். தன்னை ஒரு ஜனாதிபதியாகக் கற்பித்துக் கொண்டு சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். வணிக அம்சங்களை நிராகரித்துவிட்டு நேரடியாக மக்கள் பக்கம் நின்ற அக்கறைமிக்க சினிமா என்கிற முறையில் இப்படத்தை எனது பட்டியலில் இரண்டாம் நிலையில் வைக்கிறேன்.

 

1st Place: விசாரணை

 

 

2016ஆம் ஆண்டின் இந்தியாவின் தேசிய விருதைப் பெற்ற வெற்றி மாறனின் ‘விசாரணை’ படம் இவ்வாண்டின் மிகச் சிறந்த படமாக முன்வைக்கிறேன். பிழைப்பு தேடி நாடு விட்டு நாடு போய் எளீய வேலைகளைச் செய்து வாழும் தமிழர்களின் மீது எல்லாம் அமைப்புகளும், அதிகாரங்களும் அரசும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவே முற்படுகின்றன. தமிழன் என்றால் குற்றவாளியாக மட்டுமே இருக்கத் தகுதியுடையவனைப் போல அடித்தட்டு மனிதர்களைப் பொம்மைப் போல கையாளும் காவல்துறையின் அடாவடித்தனத்தை இப்படம் மிகவும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளது. மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம் எளிய மனிதர்களை உடல்/உள ரீதியில் வதை செய்யும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் மாபெரும் கதைச்சொல்லி என்பதில் சந்தேகம் இல்லை. திரையரங்கைவிட்டு ஒரு பெரிய கூட்டமே சத்தமில்லாமல் கனத்த மனத்துடன் வெளியே வந்ததை என் வாழ்நாளில் அன்று மட்டுமே அனுபவித்தேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

 

  • கே.பாலமுருகன்