சிறுகதை: ரொட்டிப் பாய்

“அப்பு, இனிமேல நீ ரொட்டிப் பாயைத் துரத்தலாம்டா,”

அம்மா சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியவுடன் அப்படி உரக்கக் கூறியதும் அப்புவின் உலகம் விழித்துக் கொண்டது. அப்பொழுது அப்புவிற்கு ஏழு வயதாகி ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. இதற்காகத்தான் இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் அப்பு இரண்டு வருடங்கள் காத்திருந்தான். சிரித்த முகத்துடன் வீட்டின் முன் வந்து நின்று கொண்டான். ரொட்டிப் பாய் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுதெல்லாம் வாரம் இருமுறை ‘ரொட்டிப் பாய்’ கம்பத்திற்கு வருவதுண்டு. அவர் வரும்போதெல்லாம் ஒரு சிறுவர் கூட்டம் எப்படியும் ஒன்று சேர்ந்துவிடும். ரொட்டிப் பாய் எப்பொழுது பார்த்தாலும் ஒரே உடையைத்தான் அணிந்திருப்பார். இரண்டு பொத்தான்கள் திறந்துவிடப்பட்டு வெள்ளை சட்டையும் ஒரு பழுப்புநிற காற்சட்டையும்தான் அவருடைய சீருடை.

கம்பத்தின் முற்சந்தியை விட்டு அவர் பெரிய சாலைக்கு வெளியேறும்வரை அவரின் மோட்டாரைக் கம்பத்திலுள்ள சிறுவர்கள் துரத்திக் கொண்டு ஓடுவார்கள். வியர்த்துக் கொட்ட, வெயில் சுடும் வெளுத்த தார் சாலையில் வெறும் காலில் ஓடி முடித்து மூச்சிரைக்க மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் சிறுவர்களுக்கு ரொட்டிப் பாய் ஒரு துண்டு ரொட்டிக்கூட கொடுக்கப்போவதில்லை எனத் தெரியும். ரொட்டிகளும், கேக்குகளும், ‘ஊடாங்’ கெரோப்பக்களும் பூத்துக் குலுங்கும் மோட்டாருடன் ரொட்டிப் பாய் சற்று நேரத்தில் காணாமல் போய்விடுவார்.

ஏன் ரொட்டிப் பாயைத் துரத்துகிறீர்கள் என்று கேட்டால் எல்லோரின் வாயிலும் சிரிப்பு முளைத்துக் கொண்டு முட்டும். ரொட்டிப் பாயைப் போல ஓர் இசை கலைஞன் அக்காலங்களில் யாரும் மோட்டாரில் வரமாட்டார்கள் என எல்லா சிறுவர்களுக்கும் தெரியும். ‘போங் போங்’ என நிமிடத்திற்கு ஒருமுறை அவர் எழுப்பும் இசை கம்பத்துக்கே உயிரூட்டிவிடும்.

ரொட்டி பாயைத் துரத்தினால் உங்களுக்கு என்ன கிடைக்கும் எனக் கேட்டால், அதற்கும் சிரிப்பார்கள். கம்பத்தின் கடைசி வீடு ஆறு வயது நிரம்பிய அப்புவினுடையது. ரொட்டிப் பாய் கம்பத்தின் உள்ளே நுழைவதும் மீண்டும் வெளியேறுவதும் அப்புவின் வீட்டிற்கு அடுத்தப்படியாக உள்ள சாலையில்தான். அப்பாதை புதியதாகக் கட்டப்பட்டிருக்கும் நவீன வீடுகளுக்குப் போகும் பாதையுடன் இணையும் வசதி கொண்டது. ஆகவே, அப்புவிற்கு அந்த ரொட்டிப் பாயை நன்றாகத் தெரியும். அவனுடைய வீட்டின் முன் அவர் நிற்கும் போதெல்லாம் அப்பு அவரைக் கண் கொட்டாமல் பார்ப்பான். முன்பக்கம் இரண்டு பற்கள் இல்லாத அவருடைய வாயில் கொட்டும் மிகவும் கஞ்சத்தனமான சிரிப்பை அப்பு எப்பொழுதாவது மட்டுமே கவனிப்பான்.

“ம்மா! நானும் ரொட்டிப் பாயைத் துரத்தணும்,” என அப்பு வீட்டில் கேட்காத நாளில்லை. ரொட்டி பாய் வராத நாட்களில்கூட அப்பு அதைக் கேட்டு அடம் பிடிப்பான்.

அப்புவின் அம்மா உனக்கு வயது போதாது, இப்பொழுது துரத்தக்கூடாது எனச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்திவிடுவார்.

“நான் எத்தனை வயசுலே ரொட்டிப் பாயைத் துரத்த முடியும் மா?” என அப்பாவியாகக் கேட்டு நிற்பான் அப்பு. அப்படி அவன் கேட்கும்போது வாயில் எச்சில் ஒழுகும்.

“அடி விழும்டா உனக்கு. அதுக்குலாம் உனக்கு வயசு பத்தாதுடா. அவுங்க மாதிரிலாம் ரோட்டுல ஓடக்கூடாது. அடுத்த வருசம் அம்மா அனுப்பறென்,” எனச் சொல்லும் அம்மாவின் பதிலைக் கேட்டு சலித்து போன அப்பு மீண்டும் வாசல் கதவை ஏக்கத்துடன் பார்ப்பான்.

ஒருமுறை அவர் அப்புவின் வீட்டின் முன் வியாபாரம் செய்துவிட்டுப் போகும்போது ஒரு ரொட்டிப் பாக்கேட் அப்புவின் வீட்டு வேலியில் மாட்டி விழுந்துவிட்டது. அதை அப்பு அவர் மீண்டும் அவ்வழியே போகும்போது “ரொட்டிப் பாய்! ரொட்டிப் பாய்!” எனக் கத்தி நிறுத்திக் கொடுத்துவிட்டான். அதன் மூலம் எதிர்காலத்தில் அவரைத் துரத்துவதற்கான அனுமதியையும் விசுவாசத்தையும் பெற்றுவிட்டோம் என மகிழ்ந்தான்.

பிறகொருநாளில் சின்னக்கண்ணு பேரன் ரொட்டிப் பாயைத் துரத்திக் கொண்டு ஓடும்போது ஒரு ரொட்டி பாக்கேட்டைப் பிடித்து இழுத்துவிட்டான். அதனுடன் சேர்ந்து சில ரொட்டிகளும் பிய்த்துக் கொண்டு சாலையில் சிதறின. உடனே மோட்டாரை ஓரமாக நிறுத்திவிட்டு ரொட்டிப் பாய் அரை கிலோ மீட்டர்வரை தொப்பையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அச்சிறுவர்களைத் துரத்தினார். மூச்சிரைத்துக் களைத்தவுடன் மீண்டும் நடந்து போய்விட்டார். அதன் பிறகு ரொட்டிப் பாய் எப்பொழுது கம்பத்திற்குள் வந்தாலும் யாராவது துரத்துகிறார்களா என எச்சரிக்கையுடனே இருப்பார். வெறும் துரத்துதலாக இருந்த நடவடிக்கை, ரொட்டி பாய்க்குத் தெரியாமல் துரத்தும் தந்திர விளையாட்டாக மாறியது. ரொட்டிப் பாயிடமிருந்து நெருக்கம் குறைந்து ஒரு பத்து மீட்டர் தள்ளியே அவரைச் சிறுவர்கள் துரத்துவார்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு கம்பத்தில் நிறைய புரோட்டன் வகை மகிழுந்துகள் வர ஆரம்பித்தன. மகிழுந்துகளின் புழக்கம் அதிகரிக்கத் துவங்கின. கடனுக்கு வங்கிகள் கொடுத்த வசதியால் பலரின் வீட்டின் முன் புரோட்டன் கார்கள் ஜொலித்தன. மேட்டுக் கடை ஐயாவு குடும்பத்தில் மட்டும் இரண்டு மகிழுந்துகள் வாங்கப்பட்டதும் அவர்களின் ஆர்பாட்டத்தில் மாலை நேரத்தில் சிறுவர்களை வீட்டுக்கு வெளியே அனுமதி மறுக்கப்பட்டது. ரொட்டி பாயும் வாரம் ஒருமுறை மட்டுமே வந்து போனார். இரண்டு மூன்று சிறுவர்கள் மட்டும் அவரைத் துரத்துவார்கள். அப்பொழுதும் அப்பு அம்மாவிடம் கெஞ்சுவான். மதிய உணவைச் சாப்பிடாமல் உண்ணாவிரதமெல்லாம் எடுத்துப் பார்த்தான்.

“டேய்ய்ய் ரோட்டுல நெறைய காடிலாம் வருது. என்னா விளையாடறீயா நீ?: என அம்மாவிற்கு மிரட்டுவதற்கு ஒரு வலுவான காரணமும் கிடைத்துவிட்டது.

அப்பு அழுது ஆர்ப்பரித்து வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் இடைச்சட்டத்தை உலுக்கும் போதெல்லாம் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறுவார். அப்புவிற்கு ஏழு வயது வந்ததும் அதனைச் சொல்லியே மேலும் தொல்லை தரத் தொடங்கினான். வேறு வழியில்லாமல் அன்று அப்புவை விட முடிவெடுத்தார்.

“அப்பு! கீழத் தெரியுதே ராஜூ அங்கள் கடை வரைக்கும்தான் நீ ரொட்டிப் பாயைத் துரத்தணும். சரியா? அம்மா போய் அங்க நிண்டுக்கறென். நீ அது வரைக்கு ஓடி வந்துரு,”

அப்பு ரொட்டிப் பாய் நுழையும் இடத்தில் தயாராக நின்று கொண்டான். ஒரு மிகக் குறுகலான வளைவு அது. சோம்பேறி மின்சாரக் கம்பத்தை ஒட்டிய வெட்டு. சட்டென யார் வருகிறார் எந்த வாகனம் வருகிறது என யூகிக்க முடியாது.

இறக்கைகள் முளைத்ததைப் போல அப்புவின் கால்கள் துடித்தன. ஒரேயொருமுறை பலநாள் கேட்டு கேட்டு புளுத்துப்போன அந்த ‘போங் போங்’ ஒலிக்காக அவன் காத்திருந்தான். ஒரு மணி நேரம் இரக்கமே இல்லாமல் தாண்டியது. ரொட்டிப் பாய் வரவே இல்லை. அம்மா ராஜு கடையில் யாரிடமோ பேசிவிட்டு களைப்புடன் திரும்பி வந்தார்.

“டேய்! ரொட்டிப் பாய்லாம் இப்ப வர்றதே இல்லயாம். ரொட்டிலாம் ஏதோ கம்பெனிலேந்து நேரா கடைக்கே வந்துருதாம்”

அம்மா வழக்கமான சமாதானம் சொல்கிறார் என அப்பு நம்பினான். வீட்டின் உள்ளே வர மறுத்துவிட்டான். ரொட்டிப் பாய் வருவார் என அவனுக்குத் தெரியும். ஓடுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தான். ‘Gardenic’  என நீல நிறத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒரு வெள்ளை மூடுந்து அசைந்து குலுங்க ஹார்ண் அடித்துக் கொண்டே அச்சாலைக்குள் நுழைந்தது.

“டேய் அப்பு வீட்டுக்குள்ள வா. காடிலாம் நெறைய வருது,” என அப்புவின் அம்மா கூச்சலிட்டார்.

 

  • கே.பாலமுருகன்