2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

ஒரு வருடத்தில் வெளிவந்த 100க்கும் மேற்பட்ட படங்களைலிருந்து நல்ல சினிமாக்களைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சிக்காகத்தான் சினிமாவைத் தரவரிசைப்படுத்தியுள்ளேன். பற்பல திரைவிமர்சகர்களின் விமர்சனங்களை உட்படுத்தி, என் இரசனைக்குள்ளிருந்து இப்படங்களை முன்மொழிந்துள்ளேன். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதோடு மட்டும் நின்றுவிட முடியாது. கலைக்கு ஒரு பொறுப்புண்டு என்பதையும் நான் நம்புகிறேன். கலைக்கு ஒரு வெளிப்பாட்டுத்தன்மையும் உண்டு. 2016ஆம் ஆண்டில் வெளிவந்த 191 தமிழ்ப்படங்களில் மிகச் சிறந்த 20 படங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன். வணிக ரீதியில் அதிகம் சம்பாரித்த படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றிருக்கலாமே தவிர அவை சிறந்த படம் என அடையாளப்படுத்துதில் சிக்கல் உண்டு.

 

20th place: தேவி

2016ஆம் ஆண்டின் 191 தமிழ்ப்படங்களில் 20ஆவது இடத்தைப் பெறும் படம் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘தேவி’ படம் ஆகும். இவ்வாண்டில் வெளிவந்த திகில் படங்களில் தொழில்நுட்ப ரீதியிலும் திரைக்கதை ரீதியிலும் ஒரு வித்தியாசமான முயற்சியைக் கையாண்ட படம். வழக்கமான பேய் படங்களிலிருந்து பலவகைகளில் மாறுப்பட்டிருந்தது. பிரபுதேவா தன் இயல்பான நடிப்பில் படம் முழுவதும் வியாபித்திருந்தார்.

 

19th place: ஒரு மெல்லிய கோடு

ரமேஸ் இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் நடித்த ‘ஒரு மெல்லிய கோடு இவ்வாண்டின் 19ஆவது இடத்தைப் பெறுகிறது. கொலை தொடர்பான விசாரணை படமாக இருந்தாலும், ஒளிப்பதிவு, திரைக்கதை, போன்ற விடயங்களில் அழுத்தமான ஒரு பதிவாக இப்படம் திகழ்ந்தது. ஒரு நாள் இரவில் பிணவறையில் ஒரு பிணம் காணாமல் போய்விடுகிறது என்பதிலிருந்து கதை தொடங்கும். 1980களில் ஹாலிவூட் திரைப்படங்கள் இதுபோன்ற ஓர் எளிய முயற்சியிலிருந்தே உலக சந்தையை எட்டிப் பிடித்தது என்றே சொல்லலாம்.

 

18th place: மெட்ரோ

என் வரிசைப்படி 18ஆம் இடத்தைப் பெற்ற படம் மெட்ரோ. சமூகப் பிரச்சனையைப் பிரச்சார நெடி இல்லாமல் கதையாக்கியப் படம். இப்படம் கையிலெடுத்துக் கொண்ட சமூக சிக்கல் அல்லது குற்றம் நமக்கு மிகவும் அருகாமையில் நடந்த கொண்டிருப்பதும் பெருநகர் வாழ்வின் பெரும் கூச்சல்மிக்க புகார்களும் ஆகும். உணர்ச்சி சித்திரமாய் இப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

 

17th place: அழகு குட்டி செல்லம்

சார்லஸ் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் வெளியான ‘அழகு குட்டி செல்லம்’ படம் என்னுடைய வரிசையில் இவ்வாண்டின் 17ஆம் நிலையைப் பெறுகிறது. குழந்தை;குழந்தைமையைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட சமூகம் சார்ந்த கதையாகும். சிறுவர்கள், பெண்கள், குடும்பம் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு கதையைக் கொண்டிருந்த படம் எனப் பலவிதமான பாராட்டைப் பெற்ற படம். சிறுவர்களின் நடிப்பு கதைக்குப் பெரும் பலமாக அமைந்திருந்தது. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியினர்; ஆண் குழந்தை கிடைக்காமல் தவிக்கும் அடித்தட்டுக் குடும்பத்தினர்; கருவிலேயே குழந்தையைக் களைக்கத் தூண்டப்படும் பெண் என ஒட்டுமொத்த படமே குழந்தையைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தது.

 

16th Place: 24

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான படம் ’24’ ஆகும். இவ்வருடம் காலம் பற்றி திரைக்கதை உருவாக்கி வெளியான ஒரே படம். தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலுமே சிறந்த முயற்சியாக தமிழில் வெளியான நல்ல அறிவியல் சினிமா என்றே சொல்லலாம். சில விசயங்கள் ஜனரஞ்சகமாக இருந்தாலும் இப்படம் கொடுத்த பாதிப்பு கவனிக்கத்தக்கதாகும்.

 

15th place: மனிதன் (2016 countdown)

அமீட் அவர்களின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் 15ஆம் நிலையைப் பெறும் படம் ‘மனிதன்’ ஆகும். பின்னணி இசையும், படம் முன்னெடுத்த சமூக உணர்வும் மட்டுமே படத்தின் பலம் என்பதால் கவனிக்கத்தக்க ஜனரஞ்சகத்தன்மைமிக்கப் படமாகக் கருதுகிறேன். பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் என இன்னும் படம் நெடுக வரும் சிறிய கதைபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தார்கள். ‘முன் செல்லடா’ ஒரு பாடல் வரி நம்மை நிமிர்த்தி வைக்க உற்சாகம் அளிக்கிறது. சபாஷ் சந்தோஷ் நாராயணன்.

 

14th place: அச்சம் என்பது மடமையடா

a musical traveling போன்ற படங்கள் தமிழில் வெளிவருவது மிகக் குறைவுதான். பயணம் கொடுக்கும் திருப்பங்கள் ஆச்சர்யமிக்கவை என்பதை உணர்த்திய படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகும். சிம்புவின் தனித்த வழக்கத்திலிருந்து மாறுப்பட்ட நடிப்பும் இசையும் பயணமும் இப்படத்திற்குப் பலமாகும். ‘தள்ளிப் போகாதே’ பாடல் ஒன்றே படத்தைத் தூக்கி நிறுத்தியது என்றும் சொல்லலாம்.

 

13th place: சேதுபதி

அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதியின் ‘சேதுபதி’ படம் 13ஆம் நிலையைப் பெறுகிறது. ஒரு திமிரான காவல்துறை அதிகாரியின் கதையை நல்ல ஜனரஞ்சக யதார்த்ததுடன் இயக்குனர் படமாக்கியிருந்தார். படத்தின் திரைக்கதை இப்படத்திற்குக் கூடுதல் கவனத்தை வழங்கியது. ஒளிப்பதிவு, பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. சலிப்புத்தட்டாத அதே சமயம் பல மசாலாத்தனங்களைத் தவிர்த்து உருவாக்கப்பட்ட படம்.

 

12th place: காதலும் கடந்து போகும்

நவீன சினிமா இயக்கத்தில் தனி முத்திரை பதித்து வரும் இளம் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் ‘காதலும் கடந்து போகும்’ மிகச் சிறந்த முயற்சியாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டில் காதலில் ஊறிக் கிடந்த தமிழ் சினிமாவின் ஆன்மாவைப் புதுப்பித்துக் காட்டிய படமாக அடையாளப்படுத்துகிறேன். மடோனா செபஸ்தியன் அவர்களின் வரவும், விஜய் சேதுபதியின் யதார்த்த நடிப்பும், பின்னணி இசையும் படத்தின் பலமாகும்.

 

11th place: பிச்சைக்காரன்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டணி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தை இவ்வாண்டின் சிறந்த 20 படங்களில் பரிந்துரைக்கின்றேன். பிச்சைக்காரர்களின் உலகின் உள்ளே கொண்டு சென்று சிரிக்க வைக்கிறது; சிந்திக்க வைக்கிறது. வழக்கம்போல சினிமாக்குரிய விசயங்கள் இருந்தாலும் திரைக்கதையில் இழையோடும் தாய் அன்பும் கருணையும் நம் மனத்தை நெகிழச் செய்கிறது. பிச்சைக்காரர்களின் மீது பரிதாபத்தை மட்டும் வரவைக்க முயலாமல் அவர்களோடு சேர்ந்து படம் பயணிக்கிறது.

 

10th place: அப்பா & அம்மா கணக்கு

இவ்வருடத்தில் வெளிவந்த இவ்விரண்டு படங்களும் அப்பாவையும் அம்மாவையும் மையப்பொருளாகக் கொண்டு உரையாடியது. ஒரு மகனின்/மகளின் வாழ்வில் அப்பாவின்/அம்மாவின் பங்களிப்பு எப்படியிருக்க வேண்டும் என ஒட்டுமொத்த சமூகமே விழித்தெழுந்து உணர்வதைப் போல படம் சமூக அக்கறைமிக்கதாக அமைந்திருந்தது. சமூக அக்கறைமிக்க ஒரு படைப்பு இயல்பாகவே சமூகத்தின் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்துவிடுகிறது.

 

9th place: ஆண்டவன் கட்டளை

காக்கா முட்டை பட இயக்குனர் எம்.மணிகண்டனின் இவ்வாண்டின் வெற்றி படைப்பு ‘ஆண்டவன் கட்டளை’ நிச்சயமாக மிக முக்கியமான படமாகத் திகழ்கின்றது. வெளிநாட்டு வேலைக்குப் பிழைப்புத் தேடிப் போக நினைக்கும் தமிழ் இளைஞர்களின் பெருநகர் வாழ்வின் சிடுக்குகளை மிகவும் யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார். ஒளிப்பதிவும் கலையும் சென்னையின் பொந்துகளில் எலிகளைப் போல வாழும் இளைஞர்களின் தவிப்புகளைப் பரப்பரப்பில்லாமல் காட்சிப்படுத்துகிறது. மணிகண்டனுக்குச் சபாஷ். யோகி பாபு, நாசர், சேதுபதி, ரித்திகா அனைவருக்கும் பாராட்டு.

 

8th Place: மாவீரன் கிட்டு & உரியடி
(சூழ்ச்சிகளினால் மட்டுமே இங்கு எல்லாம் போராளிகளும் தோற்றிருக்கிறார்கள்)

இவ்விரண்டு படங்களையும் திரையரங்கில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சாதி சிக்கலை முன்வைத்துச் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படங்கள். தலித் சமூகத்திலும் ஆதிக்க சமூகத்திலும் நிகழும் சாதி சார்ந்த சிக்கல்களை மிகவும் நடுநிலையுடன் நின்று பேசிய படம் என்பதற்காகவே இப்படத்தினை மிகச் சிறந்த படங்களின் பட்டியலில் சேர்க்கிறேன். இதுபோன்ற கதைக்கருக்களை மிகவும் அக்கறையுடன் சுசீந்திரனால் மட்டுமே முன்னெடுக்க முடியும். திரைக்கதையில் இரண்டாம் பாதியில் தொய்வு இருப்பினும் இப்படம் பேசும் அசாதாரண முயற்சி பாராட்டத்தக்கது. 1980களின் இறுதிகளில் கிராமங்களின் உயிரைப் பிடித்து அழுத்திக் கொண்டிருந்த சாதிய வேறுபாடுகளினால் உருவாகும் சமூக சிக்கல்களைப் படம் உரையாட முனைந்துள்ளது. பார்த்திபன், விஷ்ணு, சூரியின் நடிப்பு கதைக்கு ஆழம் சேர்த்தது. அதே போல உரியடி படமும் சாதிய வன்மங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

 

7th place: அம்மணி

லட்சுமி இராமகிருஷ்ணனின் இயக்கத்தில் இவ்வருடம் வெளியான ‘அம்மணி’ என்கிற யதார்த்த படம் உணர்வு ரீதியில் பயணிக்கும் மிகச் சிறந்த படம் என்றே சொல்லலாம். நடுத்தர வர்க்கத்தின் மனங்களில் படிந்து கிடக்கும் பணத்தின் மீதான வெறியைக் கட்டவிழ்த்துக் காட்டும் படமாகும். பணத்தை நோக்கி ஓடும் இந்த நூற்றாண்டின் கால்களில் நசுங்கிக் கிடக்கும் மனிதநேயத்தையும் அன்பையும் அதற்குப் பதிலாகப் பரவிக் கிடக்கும் போலி முகங்களையும் படம் அழுத்தமாகக் காட்டிச் செல்கிறது. சாலம்மா கதாபாத்திரத்தை விட்டு நம்மால் வெளிவரவே இயலாது. ஒவ்வொருமுறையும் ஒரு முதியவர் குடும்பத்தால் கைவிடப்படும் நிஜங்களை எதிர்க்கொள்ள முடியாமல் காலம் நகர்ந்து போய்கொண்டிருக்கும் உண்மை தனி அறையில் வாழும், குப்பைகளைப் பொறுக்கி வாழும் அம்மணி கதாபாத்திரத்தின் வழி இயக்குனர் ஆழமாக நிறுவுகிறார்.

 

6th place: துருவங்கள் பதினாறு

 

21 வயதே நிரம்பிய இளம் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களின் நுட்பமான திரைக்கதை அமைப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘துருவங்கள் பதினாறு’ தமிழ் சினிமா சூழலுக்குள் மகத்தான வரவாகும். இத்தகைய தெளிவான திரைக்கதை அமைப்புடன் எடுக்கப்பட்ட வாழ்வியலைத் தத்துவார்த்தமாகக் காட்சிப்படுத்தும் சினிமாவை இயக்க முதிர்ச்சியான இயக்கப் பயிற்சி அவசியம். ஆனால், கார்த்திக் நரேன் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமா இரசிகர்களை அசத்தியுள்ளார். குறிப்பாக, ரகுமான் அவர்களின் நடிப்பும் மிகவும் நிதானத்துடனும் அனுபவப்பூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது. திரையரங்கில் காணத் தவறாதீர்கள். 2016ஆம் ஆண்டை நிறைவாக முடித்து வைத்துள்ள படமாகத் திகழும்.

 

5th place: இறுதிச் சுற்று

 

பெண் இயக்குனரான சுதாவின் இயக்கத்தில் பெண்கள் குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2016ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அகத்தூண்டல் படம் ‘இறுதிச் சுற்று’ ஆகும். ரித்திகாவின் வருகை தமிழ் சினிமாவிற்குப் புதிய திறப்பாகும். அடித்தட்டு சமூகத்தில் வீட்டோடு ஒடுங்கிக் கிடக்கும் அனைத்துப் பெண்களின் ஆளுமைகளையும் நம் சமூகத்திற்கு நினைவூட்டிய படம். சுதாவின் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாகும். விளையாட்டுத் தொடர்பாக மிகையான மசாலாத்தனமற்ற ஓர் அசலான சினிமா இது.

 

4th Place: இறைவி

இவ்வாண்டின் தீவிர சினிமா என்கிற அளவில் தமிழில் போற்றக்கூடிய படம் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ‘இறைவி’ படமாகும். நவீன சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தின் வேர்களுக்குள் சென்று ஊடுருவி பெண் விடுதலை பற்றி பேசும் துணிச்சலான படமாகும். கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த பெரும் ஆளுமை என்றே சொல்லலாம். ஆண்களின் உலகம் எத்தனை வன்மத்திலும் குரூரத்திலும் அகப்போராட்டத்திலும் பகைமைக்குள்ளும் சிக்கிக் கிடக்கின்றது என்பதனையும் ஆழமாக எடுத்துக் காட்டிய நல்ல முயற்சியாகும். குற்றங்களும் கோபங்களுக்கும் இடையே பெண் விடுதலையை மூன்று நிலைகளில் மூன்று பெண்களின் வாழ்க்கையினூடாகக் கடந்து சென்று படம் பெண்களுக்கான ஒரு விடுதலை நிலப்பரப்பை வெளிப்படுத்துகிறது. வெகுஜன மக்களை அதிகம் கவராவிட்டாலும் ‘இறைவி’ மிகத் திவீரமான சினிமா என்பதில் சந்தேகமில்லை.

 

3rd Place: குற்றமே தண்டனை

 

பல உலகத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கவனிக்கப்பட்ட எம்.மணிகண்டனின் மற்றுமொரு மனத்தை நெகிழ்த்திய படைப்பு ‘குற்றமே தண்டனை’ ஆகும். இவ்வாண்டின் மிகச் சிறந்த படங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுகின்றது. இப்படத்தைப் பார்த்து முடிக்கும் ஒவ்வொருவரின் மனத்தையும் குற்றவுணர்ச்சிக்கும் மௌனத்திற்கும் ஆளாக்கியது. கண் பார்வை குறையுடைய ( Tunnel vision), சென்னை அடுக்குமாடியில் வாழும் ஓர் இளைஞரின் வாழ்க்கையை மணிகண்டன் ஓர் உளவியல்பூர்வமான மர்மக் கதையாக வழங்கியிருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடு படத்தின் இறுதி காட்சியில் துளிர்க்கிறது. அதன் பிறகு ஒரு மௌனத்துடன் அழுத்தப்பட்ட மனத்துடன் வெளிவருகிறோம். பார்க்கத் தவறியவர்கள்; அல்லது இப்படத்தின் ஆழ்மனத்தைக் கண்டடைய தவறியவர்கள் மீண்டுமொருமுறை பார்க்கத் தவறாதீர்கள். வித்தார்த் அவர்களின் நடிப்பு தமிழின் சூப்பர் ஹீரோக்களிடம்கூட பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.

 

2nd Place: ஜோக்கர்

 

ராஜு முருகனின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படம் 2016ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப்படங்களில் தெளிவான மக்கள் அரசியலைப் பேசிய படமாகும். இப்படம் சமூகத்தின் ஜனநாயக மனத்தை அலசுகிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு வறுமை என்ற சொல்லே நகைப்புரியதாகிவிட்டது என்பதையும் மக்களைப் பற்றி பேசுவதுதான் அரசியல்; தேர்தல் பற்றி பேசுவது அரசியல் கிடையாது என்பதையும் அழுத்தமாக நவீன சமூகத்திற்கு எடுத்துரைத்த படம். மன்னர் மன்னன் என்கிற மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரத்தில் சோமசுந்தரம் தமிழ் சினிமாவின் நடிகர்களுக்கே சவால்விட்டார் என்றே சொல்ல வேண்டும். தன்னை ஒரு ஜனாதிபதியாகக் கற்பித்துக் கொண்டு சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். வணிக அம்சங்களை நிராகரித்துவிட்டு நேரடியாக மக்கள் பக்கம் நின்ற அக்கறைமிக்க சினிமா என்கிற முறையில் இப்படத்தை எனது பட்டியலில் இரண்டாம் நிலையில் வைக்கிறேன்.

 

1st Place: விசாரணை

 

 

2016ஆம் ஆண்டின் இந்தியாவின் தேசிய விருதைப் பெற்ற வெற்றி மாறனின் ‘விசாரணை’ படம் இவ்வாண்டின் மிகச் சிறந்த படமாக முன்வைக்கிறேன். பிழைப்பு தேடி நாடு விட்டு நாடு போய் எளீய வேலைகளைச் செய்து வாழும் தமிழர்களின் மீது எல்லாம் அமைப்புகளும், அதிகாரங்களும் அரசும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவே முற்படுகின்றன. தமிழன் என்றால் குற்றவாளியாக மட்டுமே இருக்கத் தகுதியுடையவனைப் போல அடித்தட்டு மனிதர்களைப் பொம்மைப் போல கையாளும் காவல்துறையின் அடாவடித்தனத்தை இப்படம் மிகவும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளது. மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம் எளிய மனிதர்களை உடல்/உள ரீதியில் வதை செய்யும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் மாபெரும் கதைச்சொல்லி என்பதில் சந்தேகம் இல்லை. திரையரங்கைவிட்டு ஒரு பெரிய கூட்டமே சத்தமில்லாமல் கனத்த மனத்துடன் வெளியே வந்ததை என் வாழ்நாளில் அன்று மட்டுமே அனுபவித்தேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

 

  • கே.பாலமுருகன்