மாநாடு: திரைப்பார்வை

Non Spoiler Review/ தைரியமாகப் படிக்கலாம்

வந்தான்; சுட்டான்; செத்தான்; Repeat-u

வந்தான்; சுட்டான்; செத்தான்; Repeat-u

Time Loop என்பது காலத்தோடு தொடர்புடைய ஓர் அறிவியல் ஊகம். இந்த ஊகத்தைப் பயன்படுத்தி முதலில் உருவான படம் ஜெர்மன் மொழியில் இயக்கப்பட்ட Run Lola Run எனும் திரைப்படமாகும். அதன் பின்னரே இந்தப் பாணியில் மற்ற மொழிகளிலும் படங்கள் வந்து கவனம் பெறத் துவங்கின. ஒருவன் தனது ஒரே நாளுக்குள் சிக்கிக் கொண்டு இறந்து மீண்டும் அதே நாளின் தொடக்கத்திற்கு வருவதுதான் Time Loop என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். அவனது மரணத்தைத் தடுத்தால் மட்டுமே அவனால் அடுத்த நாளுக்குள் செல்ல முடியும். ஆக, டைம் லூப் என்பதற்குள் சிக்கிக் கொண்டவன் இறக்காமல் இருக்க வேண்டும்; அவன் இறக்கக்கூடாது என்றால் அவனது அன்றைய நாளின் சம்பவங்களை அல்லது உபச்சிக்கல்களை மாற்ற வேண்டும் அல்லது அதன் நிரலில் ஒளிந்திருக்கும் அடுக்குகளைக் கலைக்க வேண்டும். ஒருவன் இறந்து இறந்து இவையனைத்தையும் புரிந்துகொண்டு மீண்டும் வந்து கலைந்தாக வேண்டும். (கேட்கும்போதே இலேசான தலை சுற்றல் வரக்கூடும் 🙂 )

இத்திரைப்படத்தின் முதல் கதாநாயகன் எடிட்டர் KL Praveen தான். கொஞ்சம் பிசகினாலும் திரைக்கதை பிடிபடாமல் போக வாய்ப்புள்ள ஒரு Time Loop Template-ஐ எளிய மக்களும் பார்த்துக் கொண்டாடி மகிழும் வகையில் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ளார். இதுபோன்ற Time loop கதைகள் மக்களுக்குச் சலிப்பூட்டவும் வாய்ப்புண்டு. நடந்த ஒரே மைய சம்பவமே மீண்டும் பலமுறை நிகழும்போது இயக்குனரின் எழுத்தை முழுமையாக உள்வாங்கி காட்சிகளை மக்களின் ஆர்வத்தை மிகுதியாக்கும் பாணியில் எடிட் செய்வது அவசியமாகும்.

இரண்டாவது கதாநாயகன் நிச்சயமாக இயக்குனர் வெங்கட் பிரபுதான். தமிழுக்கு அப்பால் Time Loop என்கிற அறிவியல் ஊகத்தைப் படமாக்கி வெற்றி பெற்ற Happy Death day 1 & 2, Russion Doll, Edge of tomorrow போன்ற படங்களின் தாக்கத்திலிருந்துதான் இக்கதை தமிழில் உருவாகியுள்ளது என்பதைக் கதைக்குள்ளே ஒப்புக்கொள்வதைப் போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. ஆனால், வெங்கட் பிரபு காலத்தைப் பற்றிய அறிவியல் ஊகத்தை புராதானமான ஒரு வரலாற்றுடன் இணைத்துப் படைத்திருப்பது வேறு மொழியில் யாரும் செய்யாத ஒரு முயற்சி.

மூன்றாவது கதாநாயகன் எஸ்.ஜே சூர்யா. அவர் ஒரு காட்சியில் வருகிறார் என்றால் உடன் இருக்கும் அனைத்து நடிகர்களையும் இயல்பாக வென்று நிற்கிறார். சிலசமயங்களில் ஓவர் எக்டிங் எனத் தோன்றினாலும் அதையே நகைச்சுவையின் பக்கமாகத் திருப்பி இரசிக்கவும் வைக்கிறார். எஸ்.ஜே சூர்யா அவருக்கான நடிப்பில் வைத்திருக்கும் மீட்டர் யாராலும் கணிக்க முடியாதவை. தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர/வில்லன் நடிகர் என்கிற ஓர் எல்லையை அவர் தொட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. கதாநாயகனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில்கூட குணச்சித்திர வேடத்திலோ அல்லது வில்லன் வேடத்திலோ தோன்றி அப்படத்தைத் தனதாக்கிக் கொள்கிறார்.

நான்காவது கதாநாயகன் இசையமைப்பாளர் யுவன். காட்சிகள் யாவும் ஒரு புதிரான எல்லைக்குள் பரப்பரப்புடன் நகர்வதற்குரிய அம்சங்கள் கொண்டவை. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பின்னணி இசையைக் கொண்டு சேர்க்க வேண்டும், காட்சியும் இசையும் சேர்ந்து உருவாக்கும் உச்சம்தான் இரசிகனின் மனத்திற்குள் இப்படத்தைக் கட்டியெழுப்பும் சாத்தியங்கள் கொண்டவை. காட்சிகளின் நாடி துடிப்பைப் பிடித்தறிந்து இசையின் வாயிலாகப் படத்திற்கு உயிரூட்டியவர் யுவன் தான். வெங்கட் பிரபுவின் படமென்றாலே யுவனின் இசை கூட்டு அடையாளமாகிவிட்டது. அதுவே பலமும்கூட.

ஐந்தாவது கதாநாயகன் இத்தனை கதாநாயகர்களின் பிரதிநிதியாக பன்ச் வசனங்கள் ஏதும் இல்லாமல், கட்டம் கட்டி ஆடும் நடனங்கள் அதிகமில்லாத, வழக்கமான சிம்பு படத்திற்கான வணிக அம்சங்கள் ஏதுமற்ற ஒரு வேடத்தை, கதைக்குள் அதன் அர்த்தம் உணர்ந்து ஏற்று நடித்திருக்கும் சிலம்பரசன் தான். இதுபோன்ற கதைகளைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து இரசிகர்களின் இரசனையும் நகர்த்திட முனையும்போது கதாநாயகக் கொண்டாட்ட சூழலிலிருந்து இதுபோன்ற நடிகர்கள் தனித்துவம் பெறுவார்கள். படத்தின் ஒரு காட்சியில், நாற்காலியோடு கட்டப்பட்ட நிலையில் பேசும் இடத்தில் சிம்புவின் நடிப்பைப் பாராட்டாமல் இருக்க இயலாது.

படத்தில் குறைகள் இல்லையென்று சொல்லிவிட இயலாது. Time Loop போன்ற கதையமைப்பில் பார்வையாளர்கள் சலிப்படைய வாய்ப்புண்டு. ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட முடிந்த சிறிய கதையை மீண்டும் மீண்டும் நிகழ்த்தி அதற்குள் இருக்கும் முடிச்சுகளை அவிழ்த்துத் தீர்க்க வேண்டும். ஆக, கதை விரியாமல் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பது போன்ற ஓர் அயர்ச்சி பார்வையாளனுக்கு எளிதாக வர வாய்ப்புண்டு. ஆனால், அதைச் சீராக்க வேண்டுமென்ற போக்கில் மசாலாத்தனங்களையெல்லாம் கதைக்குள் புகுத்தாமல் கதையை அசலாகவே வழங்கிய வெங்கட் பிரபுவைப் பாராட்ட வேண்டும்.

படத்திற்கு ஐந்து பாடல்கள், 10 பன்ச் வசனங்கள் போன்ற தேய்வழக்குகள் எதையும் கொண்டு கதை ஏற்படுத்தும் அயர்ச்சியைப் போக்க நினைக்கவில்லை. அடுத்து தான் ஒரே நாளில் மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்ளும்போது அடையும் அதீதமான குழப்பத்தையும் பதற்றத்தையும் முதன்மை நாகயனால் தத்துவார்த்தமாகக் கொண்டு வர இயலவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட அளவு ஒருவேளை குறைவானதாக இருந்திருக்கலாம். இதே போன்ற Time loop படமான Happy Death Day படத்தில் Jessica Rothe நடிப்பால் அசத்தியிருப்பார். குழப்பத்தின் எல்லையில் நின்றுகொண்டு மீண்டும் மீண்டும் செத்துப் பிழைத்து மீண்டும் சாவதில் அடையும் எரிச்சலின் இன்னொரு எல்லையை நடிப்பால் தொட்டிருப்பார். அந்த நடிப்பைச் சிம்பு இன்னும் முயன்றிருக்கலாம் அல்லது அவர் முயல்வதற்கான portions இன்னும் அதிகப்படுத்திருக்கலாம். ஆயினும் தமிழில் இது நன்முயற்சி என்பதால் பாராட்டலாம்.

அடுத்து, கதை முன்னெடுக்க நினைத்திருக்கும் எளிய மக்கள் மீதான அரசியல் அடக்குமுறையின் தீவிரத்தைக் காட்டுவதற்கான அல்லது தாக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு படத்திற்குள் விரியவில்லை. அது Time Loop என்கிற உக்திக்குச் சேர்க்கப்பட்ட ஊறுகாய் போலத்தான் இருந்தது. இன்னும் அதற்குரிய அழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம் என நினைக்கத் தோன்றியது.

சுருக்கமாகச் சொன்னால், வடிவேலுவின் ஒரு நகைச்சுவை காட்சியில் வருவதைப் போல் “வா நம்ம ரெண்டு பேரும் செத்து செத்து வெளையாடலாம்” என்பதே Time Loop என வைத்துக்கொள்ளலாம். 🙂ஒரு புதுமுயற்சியைப் பாராட்டலாம். மாநாடு நடக்கக்கூடாது என்பதுதான் மாநாடு திரைப்படத்தின் அரைக்கூவல். அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய படமே. தமிழில் அறிவியல் சார்ந்த நல்ல திரைப்படங்களின் வரிசையில் மாநாடு படத்தையும் சேர்க்கலாம்.

-கே.பாலமுருகன்