குறுங்கதை மீதான வாசகப் பார்வை –கவித்துவத்தின் உச்சமும் புனைவின் ஆழமும்

‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’

– அகஸ்டா மாண்டிரஸோ

மேற்கண்ட குறுங்கதை ஆறே சொற்களில் அமைந்து தனக்குள் பற்பல அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறது. வாசகன் ஒரு திறப்பிற்குள் போய்ச் சேராமல் இந்த ஆறு சொற்களின் கூட்டுக்குள் தனக்கான புரிதலை வெவ்வேறு கோணங்களில் கட்டியெழுப்பிக் கொள்ளும் வாசகநிலையை அடைய முடிகிறது. ஒரு ஹைக்கு போலவும் கவிதையின் முதல் கன்னியைப் போலவும் வடிவச் சுருக்கம் கொண்டிருந்தாலும் கடல்நீரை அள்ளி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு கடலைப் பிடித்துவிட்டதாகச் சொல்லும் குழந்தையின் ஒரு பரவசத்திற்குள் ஊடுபாய்ந்த மனநிலையை எட்டும் அனுபவத்தைத் தரவல்ல ஒரு குறுங்கதையைத்தான் அகஸ்டா மாண்டிரஸோ எழுதியுள்ளார்.

ஏன் குறுங்கதை என்கிற வடிவம் சிறுகதையைப் போல விரியாமலும் அல்லது கவிதையைப் போன்ற ஒரு கவித்துவ உச்சத்தை எட்டாத பாணியிலும் சுருக்கமாக அமைந்துவிடுகிறது என்கிற கேள்வியே ஆரம்பத்தில் வாசிக்கும்போது மனம் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், குறுங்கதை இவை இரண்டிற்குமிடையில் அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போன்றதே என்பதை அதை வாசித்துக் கடக்கையில் உணர முடியும். குறுங்கதை, கவிதையின் கவித்துவ உச்சத்திற்கும் சிறுகதையின் ஆழத்திற்கும் இடையே நின்று விரிந்து தனக்குள் இடமளிக்கும் இலக்கிய வடிவம் என்பதை என்னால் வாசிப்பின்போது உணர முடிந்திருக்கிறது. இவையிரண்டும் கிட்டாத குறுங்கதைகளைக் கடக்க முடியாமலும் போனதுண்டு. ஒரே வடிவத்திற்குள் கவிதைக்கும் சிறுகதைக்குமான ஒரு வாசக மனநிலையை அடையும் அனுபவத்தைக் குறுங்கதைகள் உருவாக்கித் தருகின்றன.

குறுங்கதைகளை வாசிப்பதிலும் இயற்றுவதிலும் விரிவற்ற ஒரு நிலைக்குக் குறுங்கதைகள் சார்ந்த பரவலான வாசகர் பரப்பு உருவாகாததும் காரணமாக இருக்கலாம். இம்மாதிரியான படைப்புகளை உரையாடுவதன் வாயிலாக அதன் மீது குவிந்துகிடக்கும் சிடுக்குகளை அவிழ்க்க முடியும்; இரசனையைக் கூட்ட முடியும் என்கிற சிந்தனையில் இன்று இளையோர்கள் மத்தியில் அகஸ்டா மாண்டிரஸோவின் மேற்கண்ட பிரபலமான குறுங்கதையைப் பகிர்ந்திருந்தேன். வழக்கமாக இலக்கியம் சார்ந்த இதுபோன்ற இரசனை உரையாடலில் நமக்குப் பல ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். வாசகப் பரப்பில் ஒரே படைப்பைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி தனக்குள் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதன் கோணங்களை அறியும்போது ஏற்படும் திறப்பு குதூகலமானது.

‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’

இக்குறுங்கதையை அதிகம் மெனக்கெடாமல் நேரடியாகப் புரிந்துகொள்ள முயலும்போது நாம் அடையும் இடம் டைனோஸர் காலக்கட்டமாகும். அப்படியென்றால் ஒரு நவீன மனிதன் காலப் பயணம் செய்து டைனோஸர் காலக்கட்டத்திற்குச் சென்றுவிட்டான் எனப் புரிந்து கொள்ள நேரிடும். அப்படிப் புரிந்து கொள்ளும்போது இதுவொரு அதிர்ச்சியூட்டும் ஓர் அறிவியல் குறுங்கதை என்று மட்டுமே நின்றுவிடக்கூடும். இக்குறுங்கதைக்குள் அடுத்துக் கவனிக்க வேண்டிய சொல் ‘இன்னும்’ ஆகும். ஆகவே, அவன் எழுவதற்கு முன்பும் டைனோஸர் அங்கேதான் இருந்திருக்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அவன் காலப்பயணம் செய்யவில்லையா என்கிற கேள்வியும் எழுகிறது. இக்குறுங்கதையின் வாயிலாக ஒருவன் அடையும் எளிய புரிதல் அடுத்த கணமே விந்தையென உடைந்து நிற்கும் சூட்சமத்தை எழுத்தாளர் ஆறே சொற்களில் உருவாக்க முடிந்ததற்குக் காரணம் இக்குறுங்கதையில் நிலவும் கவிதைக்கேயுரிய கவித்துவ எல்லைகளாகும்.

வாசகன் ஒரு புரிதலுக்குள் சிக்காமல் மீண்டும் குறுங்கதைக்குள் பயணித்துச் செல்ல இக்குறுங்கதை தன்னை விரிவாக்கி இடமளிக்கிறது. அடுத்து ஒரு வாசகன் என்ன மாதிரியான அனுபவங்களை அடைய முடியும் என்பதை இன்று இக்குறுங்கதையை வாசித்துத் தம் இரசனை பார்வையைப் பகிர்ந்து கொண்ட வாசகர்களின் புரிதலையும் சற்றுப் பார்ப்போம்.

அனிதா, அமெரிக்கா.

Inception படத்தைப் போல அவன் கனவுக்குள் இன்னொரு கனவில் சிக்கிக் கொண்டுள்ள ஒரு மனநிலையில் உள்ளான். இரண்டாவது கனவடுக்கில் அவன் டைனோஸரிடமிருந்து போராடி தப்பித்து வந்திருக்கக்கூடும். சட்டென இரண்டாவது கனவடுக்கிலிருந்து எழுந்து முதல் கனவடுக்கில் அந்த டைனோஸர் அங்கேயே இருப்பதைக் காண்கிறான் என்பதே இக்குறுங்கதை எனச் சொல்கிறார். இக்குறுங்கதையை ஓர் அறிவியல் படைப்பாகவே உள்வாங்கிக் கொண்டு அது உருவாக்கும் சாத்தியங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் பார்வை.

இன்னொரு கோணத்தில் இதே குறுங்கதையை வாசகர் அனிதா ஒரு குழந்தையின் மனோபாவத்திற்கு மாற்றிப் பார்க்கிறார். நான் கனவில் எனது டைனோஸர் பொம்மையைத் தொலைத்துவிட்டேன். கனவிலிருந்து எழுந்ததும் பார்க்கிறேன், எனது டைனோஸர் பொம்மை இன்னும் அங்கேயே இருந்தது என்பதாகவும் இருக்கலாம் எனச் சொல்கிறார். தொடக்கத்தில் இந்தக் குறுங்கதையின் மீதிருந்த அறிவியல் புனைவுக்கான சிடுக்குகளையும் புரிதல் சிக்கலையும் மிகவும் இலாவகமாகக் களைந்தெடுத்துச் செல்கிறார் அனிதா.

ராஜேஸ் கன்னி, பகாங்

அவருடைய கணிப்பில் இக்கதையில் ‘டைனோஸர்’ என்பது கதைமாந்தரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதோ ஒரு நீங்காத துயரத்தையோ அல்லது ஏதோ ஒரு சிக்கலையோ குறிக்கிறது.

தூங்கி எழுந்ததும் துயரம் நீங்கி விடும் என மனித மனம் எதிர்நோக்க இன்னும் அந்தத் துயரம்  அப்படியே இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது. முழுவதுமாக ராஜேஸ் கன்னியின் வாசக மனம் டைனோஸர் என்பதைக் குறியீடாக மாற்றிக் கொள்வதன் வாயிலாக எழும் புரிதல் இது. குறுங்கதைக்குள் இருக்கும் சில விந்தையான தருணங்களை வாழ்வியலாக மாற்றி ஏற்றுக் கொள்கிறார். இது முழுக்க வாசகனின் தேர்வாகும். அகஸ்டாவின் ஆகாயத்தை இவர் எளிமையாக்கி வாழ்வெனும் பெருவெளிக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.

காந்தி முருகன், கெடா

அகஸ்டோ மண்டிராசோவின் எட்டு சொற்களில் அடங்கிய குறுங்கதையில் இடம்பெறும் ‘டைனாசோர்’ என்கிற சொல் குறீயீடாகத்தான் தோன்றுகிறது. டைனோசர் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கொடுர மிருகங்கள். மனிதன் தனக்குள்ளேயே உருவாக்கிவிட்டிருக்கும் அரக்கக் குணங்கள், விட்டொழிக்க வேண்டிய எண்ணங்கள் யாவும் இன்னமும் அவர்களிடத்தில் ஓர் இராட்சத டைனோஸர் போல குடிக்கொண்டுதான் உள்ளன. மனித மனம் எத்தனை முறை ஆழ்நிலைக்குச் சென்றாலும் மீண்டும் மீண்டும் அதே தீய எண்ணங்களால் சூழ்ந்து கிடக்கிறன என்பதுதான் மீண்டும் விழிக்கையிலும் டைனோஸர் இன்னும் அங்கே இருந்தது என்பதற்கான படிமமாக மாறுகிறது.

நான் (நாம் ) எழுந்தபோது (தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும்) டைனோசர் (மனிதநேயமற்ற எண்ணங்கள் ) அங்கேயே (இன்னும் நமக்குள்) இருந்தது (விதைத்துக் கொண்டே உள்ளன).

எழுத்தாளர் காந்தி முருகனும் டைனோஸர் என்பதை எல்லையற்று விரியும் மனித மனத்தின் வன்மங்களின் குறியீடாக உருவகப்படுத்தி இக்குறுங்கதையை அணுகுகிறார்.

சுமித்ரா அபிமன்னன், சிலாங்கூர்

எட்டு சொற்களில் குறுங்கதை என்பதே வாசகனைச் சிந்திக்க தூண்டுவதற்காக எழுதப்பட்டதாகவே உணர்கிறேன். இக்குறுங்கதையைப் படித்து முடித்ததும் நமக்குள் தேடல் துவங்கி விடுகிறது. பலவாறான கோணங்கில் சிந்திக்கத் தூண்டுகிறது. பல போராட்டங்கள் நடத்தி விட்டு வென்று விட்ட களைப்பிலும் களிப்பிலும் ஓய்வெடுத்து நிகழ்காலத்திற்கு வரும் பொழுது அந்த வெற்றி நிஜமல்ல ஓய்வில் வந்த கனவே என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. நமக்குள் அந்த டினோசோர் (குறியீடு) எப்படியெல்லாம் சமாளித்திருப்பார்/ போராடியிருப்பார் என்ற சிந்தனை கற்பனையாக வளர்ந்து கொண்டே போகிறது. இப்படியாகதான் இருக்க வேண்டும் என்ற ஒருநிலை வரவில்லை. அவருக்கும் டினோசோரும் நடந்த (flashback) போராட்டத்தைப் பற்றிய கற்பனை நம்மைப் போராட்டத்தில் தள்ளுகிறது. வார்த்தைகள் குறைய குறைய வாசகனின் கற்பனை விரிவடைகிறது.

சு.லோகேந்தினி, இளையோர்

ஒருவேளை அது பொம்மையாக இருக்கலாம்.மனம் கற்பனைக் காட்சியில் இலயித்திருந்த கணம் ஏதோ ஒருவழியில் தடை ஏற்பட்டு நிகழ்காலத்திற்கு அம்மனிதர் திரும்பியிருக்கலாம்.

விக்கினேஸ்வரன் பார்த்திபன், இளையோர்

எட்டே சொற்களில் அமைந்துள்ள இக்குறுங்கதை பல்வேறு கோணங்களில் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. மனித வாழ்வில் போராட்டங்கள், சவால்கள், துன்பங்கள் ஏற்படுவதென்பது இயல்பு. இவற்றை தீர்க்கவும் மறக்கவும் மனிதன் முயலாமல் அதையே சிந்தித்துக் கொண்டிருந்தால் அதிகப்படியான சிக்கல்களே வந்து குவியும். ‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’ என்ற வரியில் குறியீடாக விளங்கும் டைனோஸர், பிரச்சனையாகவோ, மறக்க இயலாத கொடூர சம்பவமாகவோ எண்ணுகிறேன். அதனைத் தனி மனிதன் மறப்பதற்கு எவ்வளவு முயன்றும் ஆழ்மனத்தில் அது நீங்காமல் தேங்கி நிற்கிறது. உலகில் டைனோஸர் இனம் அழிந்துவிட்ட போதிலும் மனிதனின் துயரங்கள் எளிதில் அழிவதில்லை.

சிறுவர்கள் சிலரும் இக்குறுங்கதையைப் படித்துத் தனது புரிதலைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ரஷ்மித்தா, அமெரிக்கா

கதாநாயகன் காலப்பயணம் மேற்கொண்டுவிட்டான். ஏதோ ஒரு கனவில் இருப்பதாக நினைத்துக் கொண்டு கண்களைத் திறக்கிறான். மில்லியன் ஆண்டுகள் கடந்து அவன் டைனோஸர் வாழ்ந்த காலத்திற்கு வந்துவிட்டான்.

ரஜித்தா, அமெரிக்கா

அவன் ஒரு டைனோஸருடன் போராடி மயக்கம் அடைந்துவிட்டான். பிறகு விழித்துப் பார்க்கும்போது அந்த டைனோஸர் அங்கேதான் இருந்தது.

பாவணன், மலேசியா

சட்டென டைனோஸர் ஒன்று கடலிலிருந்து எழுந்து வந்துவிட்டது. மனிதர்கள் ஆயுதங்களோடு அதனுடன் போர் செய்கிறார்கள். ஆனால், அந்த டைனோஸர் அனைவரையும் அழித்துவிடுகிறது. அவற்றிடமிருந்து தப்பித்த கடைசி மனிதன் மட்டும் மயக்கம் தெளிந்து எழுந்தான். அந்தக் கொடூர டைனோஸர் அங்கேயே இருந்தது.

பெரியவர்கள் ஒரு சிடுக்கிலிருந்து இன்னொரு சிடுக்கிற்குக் கதையைத் தமது வாசக மனத்தால் நகர்த்திச் செல்கிறார்கள் என்றால் சிறுவர்கள் அதனை எளிமையுடன் தன் உலகத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். இத்தகைய குறியீட்டு நிகழ்வுகளையும் படிம மாறுதல்களையும் சாத்தியப்படுத்திக் காட்டக்கூடிய ஓர் இலக்கிய படைப்பே குறுங்கதைகள் என்கிற ஓர் இரசனை எல்லையை நம்மால் அடைய முடிகிறது. மேற்குறிபிட்ட புரிதல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தையும் வேறு சில வாசகர்கள் கொண்டிருக்க வாய்ப்புண்டு. உரையாடுவதன் வாயிலாகவும் இரசனையைக் கூர்த்தீட்டுவதன் வாயிலாகவும் இலக்கிய புரிதல் உருவாக்கும் அதிசயங்களின் முன்னே பிரமித்துக் கொள்ள நேரிடும்.

-கே.பாலமுருகன்