எப்பொழுதும் வாழும் சிறுகதைகள் 4: சோற்றுக்கணக்கு: ஜெயமோகன்

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.

எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடையை நடத்துகிறார். அதே இடத்தில் அவரது உறவினர்கள் கடை நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே மீன்கறிக்கும் கோழிக்குழம்புக்கும் அதே சுவைதான். இப்போது முபாரக் ஓட்டல் என்று பெயர். இன்றும் கூட்டம்கூட்டமாக வந்து காத்துக்கிடந்து சாப்பிடுகிறார்கள். முபாரக் ஓட்டலில் சாப்பிட்டால்தான் திருவனந்தபுரம் வந்ததாகவே ஆகும் என நம்பும் அசைவப்பிரியர்கள் கேரளம் முழுக்க உண்டு. ஆனால் கெத்தேல் சாகிப் சோற்றுக்கடை வேறு ஒரு விஷயம், சொன்னால்தான் புரியும்.

இன்றுகூட முபாரக் ஓட்டல் ஒரு சந்துக்குள் தகரக்கூரை போட்ட கொட்டகையாகவே இருக்கிறது. அன்றெல்லாம் அது ஓலை வேய்ந்த பதினைந்தடிக்கு எட்டடி கொட்டகை. மூங்கிலை கட்டி செய்த பெஞ்சு. மூங்கிலால் ஆன மேஜை. கொட்டகை நான்குபக்கமும் திறந்து கிடக்கும். வெயில்காலத்துக்கு சிலுசிலுவென காற்றோட்டமாக இருந்தாலும் மழையில் நன்றாகவே சாரலடிக்கும். கேரளத்தில் மழைக்காலம்தானே அதிகம். இருந்தாலும் கெத்தேல் சாகிபின் ஓட்டலில் எந்நேரமும் கூட்டமிருக்கும்.

எந்நேரம் என்றா சொன்னேன்? அவர் எங்கே எந்நேரமும் கடை திறந்து வைத்திருக்கிறார்? மதியம் பன்னிரண்டு மணிக்கு திறப்பார். மூன்றுமணிக்கெல்லாம் மூடிவிடுவார். அதன்ப்பின்பு சாயங்காலம் ஏழுமணிக்கு திறந்து ராத்திரி பத்து மணிக்கு மூடிவிடுவார். காலை பதினோரு மணிக்கே கடையின் முன்னால் ஒட்டுத்திண்ணையிலும் எதிர்ப்பக்கம் ரஹ்மத்விலாஸ் என்ற தையல்கடையிலும் கரு.பழ.அருணாச்சலம் செட்டியார் அண்ட் சன்ஸ் மொத்தப்பலசரக்கு வணிகம் கடையின் குடோனின் வாசலிலும் ஆட்கள் காத்து நிற்பார்கள். பாதிப்பேர் மாத்ருபூமியோ கேரளகௌமுதியோ வாங்கிவந்து வாசிப்பார்கள். கெ.பாலகிருஷ்ணனின் சூடான அரசியல் கட்டுரைகளைப்பற்றி விவாதம் நடக்கும். சமயங்களும் வாக்கேற்றமும் உண்டு.

எல்லாம் சாகிப் கடையை திறப்பதற்கு அறிகுறியாக வாசலில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாக்குப்படுதாவை மேலே தூக்கி சுருட்டி வைப்பதுவரைதான். கூட்டம் கூட்டமாக உள்ளே போய் உட்கார்ந்துவிடுவார்கள். கெத்தேல் சாகிப் ராட்சதன் போல இருப்பார். ஏழடி உயரம். தூண்தூணாக கைகால்கள். அம்மைத்தழும்பு நிறைந்த பெரிய முகம். ஒரு கண் அம்மைபோட்டு கலங்கி சோழி போல இருக்கும். இன்னொரு கண் சிறிதாக சிவப்பாகத் தீக்கங்கு போல. தலையில் வெள்ளை வலைத்தொப்பி. மீசையில்லாத வட்டத்தாடிக்கு மருதாணி போட்டு சிவப்பாக்கியிருப்பார். இடுப்பில் கட்டம்போட்ட லுங்கி அதன்மேல் பட்டையான பச்சைபெல்ட். மலையாளியானாலும் கெத்தேல் சாகிப்புக்கு மலையாளம் பேசவராது. அரபிமலையாளம்தான். அவரது குரலையே அதிகம் கேட்க முடியாது. கேட்டாலும் ஓரிரு சொற்றொடர்கள் மட்டுமே. ‘பரீன்’ என்று அவர் கனத்த குரலில் சொல்லி உள்ளே சென்றால் ஆட்கள் பெஞ்சுகளில் நிறைந்துவிடுவார்கள்.

அழைக்கவே வேண்டியதில்லை. உள்ளே இருந்து கோழிக்குழம்பும், பொரித்த கோழியும், கொஞ்சுவறுவலும், கரிமீன் பொள்ளலும், மத்திக்கூட்டும் எல்லாம் கலந்து மணம் ஏற்கனவே அழைத்துக்கொண்டிருக்கும். நானும் இத்தனை நாள் சாப்பிடாத ஓட்டல் இல்லை. கெத்தேல் சாகிபின் சாப்பாட்டு மணம் எப்போதுமே வந்ததில்லை. வாசுதேவன் நாயர் ‘அதுக்கு ஒரு கணக்கு இருக்குடே. சரக்கு வாங்கிறது ஒருத்தன், வைக்கிறது இன்னொருத்தன்னா எப்பவுமே சாப்பாட்டிலே ருசியும் மணமும் அமையாது. கெத்தேல் சாகிப்பு மீனும் கோழியும் மட்டுமில்ல அரிசியும் மளிகையும் எல்லாம் அவரே போயி நிண்ணு பாத்துத்தான் வாங்குவார். குவாலிட்டியிலே ஒரு எள்ளிடை வித்தியாசம் இருந்தா வாங்க மாட்டார். கொஞ்சு அவருக்குன்னு சிறையின்கீழ் காயலிலே இருந்து வரும். பாப்பீன்னு ஒரு மாப்பிளை புடிச்சு வலையோட அதுகளை தண்ணிக்குள்ளேயே போட்டு இழுத்துக்கிட்டு தோணி துழைஞ்சு வருவான். அப்டியே தூக்கி அப்டியே சமைக்க கொண்டுபோவாரு சாகிப்பு.. மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ’

என்ன செய்வாரோ, அவர் கடையில் சாப்பிட்ட பதினைந்தாண்டுகளில் ஒருநாள்கூட ஒரு சாப்பாட்டுப்பொருள்கூட மிகச்சிறந்த ருசி என்ற நிலையில் இருந்து கீழே வந்ததே இல்லை. அதை எப்படிச் சொல்லி விளக்குவதென்றே தெரியவில்லை. நேர்மை மட்டுமல்ல. கணக்கும்கூடத்தான். சாகிப் கடையில் குழம்பும் பொரியலும் எப்போதும் நேராக அடுப்பில் இருந்து சூடாக கிளம்பி வரும். வரும் கூட்டத்தை முன்னரே கணித்து அதற்கேற்ப அடுப்பில் ஏற்றிக்கொண்டிருப்பார். அவரும் அவரது பீபியும் இரு பையன்களும் இரண்டு உதவியாளர்களும்தான் சமையல். அவர்கள் அனைவரும் சாகிப்புக்கு கட்டுப்பட்டவர்கள். அவர் மூக்காலேயே ருசி கண்டுபிடிப்பார். ஆனால் இதெல்லாம் சும்மா சொல்வதுதான். அங்கே ஒரு தேவதை குடிகொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.சரி, தேவதை இல்லை, ஜின். அரேபியாவில் இருந்து வந்த ஜின் அல்ல, மலபாரில் ஏதோ கிராமத்தில் பிறந்து கல்லாயிப்புழையின் தண்ணீர் குடித்த ஜின்.

கெத்தேல் சாகிப்பின் பூர்வீகம் மலபாரில். யூசஃபலி கேச்சேரி எழுதிய ‘கல்லாயி புழ ஒரு மணவாட்டி’ என்ற பாட்டு ஒலிக்கக் கேட்டபோது அவரது மகன் ‘ஞம்ம பாப்பான்றே பொழயல்லே’ என்றார். மற்றபடி அவரைப்பற்றி தெரியாது. அவர் பேசுவதேயில்லை. அவரை யாராவது மனவசியம் செய்து பேசவைத்தால்தான் உண்டு. பஞ்சம்பிழைக்க வந்த குடும்பம். சிறுவயதிலேயே சாகிப் தெருவுக்கு வந்துவிட்டார். இருபது வயதுவரை கையில் பெரிய கெட்டிலுடன் டீ சுமந்து விற்றுக்கொண்டிருந்தார். அந்தப்பெயர் அப்படி வந்ததுதான். அதன்பின் சாலையோரத்தில் மீன் பொரித்து விற்க ஆரம்பித்தார். மெல்ல சப்பாட்டுக்கடை. ’கெத்தேல் சாகிபின் கையால் குடிச்ச சாயாவுக்கு பிறகு இன்னைக்கு வரை நல்ல சாயா குடிச்சதில்லே’ என்று அனந்தன் நாயர் ஒருமுறை சொன்னார். சாட்சாத் கௌமுதி பாலகிருஷ்ணனே சாகிப் கையால் டீ குடிக்கக் கழக்கூட்டத்தில் இருந்து சாலை பஜாருக்கு வருவார் என்றார்கள்.

சாகிப்புக்கு ஒரு குறையும் இல்லை. அம்பலமுக்கில் பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். நகரில் ஏழெட்டுக் கடைகள். மூன்று பெண்களை கட்டிக்கொடுத்துவிட்டார். மூன்று ’புதியாப்ள’களுக்கும் ஆளுக்கொரு கடை வைத்து கொடுத்திருந்தார். எல்லாம் ஓட்டலில் சம்பாதித்தது என்று சொன்னால் ஆச்சரியப்படமாட்டீர்கள். ஆனால் அவரது வியாபாரமுறையைச் சொன்னால் ஆச்சரியப்படத்தான் செய்வீர்கள். சாகிப் சாப்பாட்டுக்குக் காசு வாங்குவதில்லை. டீ விற்ற காலம் முதலே உள்ள பழக்கம். கடையின் முன்னால் ஒரு மூலையில் சிறிய தட்டியால் மறைக்கப்பட்டு ஒரு தகர டப்பா உண்டியல் வைக்கப்பட்டிருக்கும். சாப்பிட்டு விட்டுப் போகிறவர்கள் அதில் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். யாரும் பார்க்கப்போவதில்லை. போடாமலும் போகலாம். எத்தனை நாள் போடாமல் போனாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் கெத்தேல் சாகிப் அதை கவனிக்கவே மாட்டார்.

தெருவில் சட்டைபோடாமல் காக்கி நிக்கரும் வட்டத்தொப்பியுமாக அலைந்த டீப்பையனாக இருக்கும்போதே கெத்தேல் சாகிப் அப்படித்தான். ஒரு சின்ன டப்பா அவர் அருகே இருக்கும், அதில் விரும்பினால் காசு போட்டால் போதும். விலைகேட்கக் கூடாது, சொல்லவும் மாட்டார். ஆரம்பத்தில் சில சண்டியர்களும் தெருப்பொறுக்கிகளும் வம்பு செய்திருக்கிறார்கள். அதில் காகிதங்களை மடித்து போட்டிருக்கிறார்கள். அந்த டப்பாவையே தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். மாதக்கணக்கில் வருடக்கணக்கில் சும்மா டீ குடித்திருக்கிறார்கள். கெத்தேல் சாகிப்புக்கு அவர்களின் முகம் கூட நினைவிருப்பது போல தெரியாது.

ஒரே ஒருமுறை கெத்தேல் சாகிப் ஒருவனை அறைந்தார். வெளியூர்க்காரி ஒருத்தி, சாலையில் மல்லி மிளகு சீரகம் புடைத்து கூலி வாங்கும் ஏழைப்பெண், எங்கோ தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்து பஞ்சம்பிழைக்க வந்தவள், டீ குடித்துக்கொண்டிருந்தாள். அன்று புகழ்பெற்ற சட்டம்பி கரமன கொச்சுகுட்டன்பிள்ளை ஒரு டீக்குச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை பார்த்தார். என்ன நினைத்தாரோ அந்தப் பெண்ணின் முலையைப் பிடித்துக் கசக்க ஆரம்பித்தார். அவள் அலற ஆரம்பித்ததும் உற்சாகவெறி ஏறி அவளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓரத்துச் சந்துக்குள் செல்லமுயன்றார். கெத்தேல் சாகிப் ஒன்றுமெ சொல்லாமல் எழுந்து கொச்சுகுட்டன்பிள்ளையை ஓங்கி ஓர் அறை விட்டார். சாலைமுழுக்க அந்தச் சத்தம் கேட்டிருக்கும். குட்டன்பிள்ளை காதும் மூக்கும் வாயும் ரத்தமாக ஒழுக அப்படியே விழுந்து பிணம் போல கிடந்தார். கெத்தேல் சாகிப் ஒன்றும் நடக்காதது போல மேற்கொண்டு டீ விற்க ஆரம்பித்தார்.

குட்டன்பிள்ளையை அவரது ஆட்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். பதினெட்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் கிடந்தவர் பின்னர் எழுந்து நடமாடவே இல்லை. காது கேட்காமலாகியது. தலை எந்நேரமும் நடுங்கிக் கொண்டிருக்கும். அடிக்கடி வலிப்பு வந்தது. ஏழு மாசம் கழித்து கரமனை ஆற்றில் குளிக்கையில் வலிப்பு வந்து ஆற்றுக்குள் போனவரை ஊதிப்போன சடலமாகத்தான் எடுக்க முடிந்தது. ஒரு மாப்பிள்ளை எப்படி குலநாயரை அடிக்கலாம் என்று கிளம்பி வந்த கும்பலை சாலை மகாதேவர் கோயில் டிரஸ்டி அனந்தன் நாயர் ‘போயி சோலி மயிரை பாருங்கடே. நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும், சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னபின்னர் சாலை பஜாரில் மறு பேச்சு இல்லை.

நான் முதன்முதலாக கெத்தேல் சாகிப் கடைக்குச் சாப்பிட வந்தது அறுபத்தியெட்டில். என் சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் ஒசரவிளை. அப்பாவுக்கு கோட்டாற்றில் ஒரு ரைஸ்மில்லில் கணக்குப்பிள்ளை வேலை. நான் நன்றாக படித்தேன். பதினொன்று ஜெயித்ததும் காலேஜில் சேர்க்க வேண்டும் என்றார்கள். அப்பாவின் சம்பாத்தியத்தில் அதை நினைத்துக்கூட பார்த்திருக்கக் கூடாது. ஆனால் சொந்தத்தில் ஒரு மாமா திருவனந்தபுரம் பேட்டையில் இருந்தார். ஒரு சுமாரான அச்சகம் வைத்திருந்தார். அவர் மனைவிக்குத் தாழக்குடி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். அப்பா என்னை கைபிடித்துக் கூட்டிக்கொண்டு பஸ் ஏறி தம்பானூரில் இறங்கி பேட்டை வரை நடத்திக் கொண்டுசென்றார். நான் பார்த்த முதல் நகரம். தலையில் வைத்த தேங்காயெண்ணை முகத்தில் வியர்வையுடன் சேர்ந்து வழிய கணுக்கால்மேலே ஏறிய ஒற்றைவேட்டியும் பானைக்குள் சுருக்கி வைத்த சட்டையும் செருப்பில்லாத கால்களுமாக பிரமை பிடித்து நடந்து போனேன்.

மாமாவுக்கு வேறு வழி இல்லை. அவரைச் சின்ன வயதில் அப்பா தூக்கி வளர்த்திருக்கிறார். யூனிவர்சிட்டி காலேஜில் ஆங்கில இலக்கியம் படிக்க சேர்ந்துகொண்டேன். அப்பா மனநிறைவுடன் கிளம்பிச் சென்றார். ஒரு ரூபாயை என் கையில் வைத்து ‘வச்சுக்கோ, செலவு செய்யாதே. எல்லாம் மாமன் பாத்து செய்வான்’ என்று சொன்னார். ’இந்தா சுப்பம்மா, உனக்கு இவன் இனிமே மருமோன் மட்டுமில்ல. மகனுமாக்கும்’ என்று கிளம்பினார். மாமனுக்கு மனம் இருந்ததா என்பது எனக்கு இன்றும் சந்தேகம்தான். மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச் சாயங்காலம் சாப்பிடும்போதே தெரிந்தது. எல்லாரும் அப்பளம் பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னை அழைக்கவில்லை. சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.

அவமானங்களும் பட்டினியும் எனக்குப் பழக்கம்தான். எல்லாவற்றையும் பொறுத்துப்போனேன். பொறுத்துப்போகப்போக அவை அதிகமாக ஆயின. வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டும். கிணற்றில் இருந்து குடம்குடமாக தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். வீட்டை தினமும் கூட்டிப்பெருக்கவேண்டும். அவளுடைய இரு பெண்களையும் பள்ளிக்கூடம் கொண்டுசென்று விடவேண்டும். மூத்தவள் ராமலட்சுமி எட்டாம் கிளாஸ். அவளுக்கு கணக்குச் சொல்லிக்கொடுத்து அவள் வீட்டுப்பாடத்தையும் செய்துகொடுக்கவேண்டும். இரவு சமையலறையை கழுவிவிட்டு படுக்கவேண்டும். இவ்வளவுக்கும் எனக்கு அவர்கள் கொடுத்தது திண்ணையில் ஓரு இடம். இரண்டுவேளை ஊறிய சோறும் ஊறுகாயும். எந்நேரமும் மாமி அதிருப்தியுடன் இருந்தாள். வீட்டுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் என்னைப்பற்றி புலம்பினாள். நான் உண்ணும் சோற்றால் அவர்கள் கடனாளி ஆகிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். நான் புத்தகத்தை விரிப்பதைப்பார்த்தாலே அவளுக்கு வெறி கிளம்பி கத்த ஆரம்பிப்பாள்.

நான் எதையும் அப்பாவுக்கு எழுதவில்லை. அங்கே வீட்டில் இன்னும் இரு தம்பிகளும் ஒரு தங்கையும் இருந்தார்கள். பாதிநாள் ரைஸ்மில்லில் அரிசி புடைப்பவர்கள் பாற்றிக் கழித்து போடும் கருப்பு கலந்த குருணைஅரிசியை கஞ்சியாகக் காய்ச்சித்தான் குடிப்போம். ஓடைக்கரையில் வளரும் கொடுப்பைக்கீரை குழம்பைத்தான் என் நினைவு தெரிந்த நாள்முதல் தினமும் சாப்பிட்டு வந்தேன். தேங்காய்கூட இல்லாமல் கீரையை வேகவைத்து பச்சைமிளகாய் புளி போட்டு கடைந்து வைத்த குழம்பு. பலசமயம் பசிவேகத்தில் அந்த மணமே வாயில் நீரூறச் செய்யும். என்றாவது ஒருநாள் அம்மா துணிந்து நாலணாவுக்கு மத்திச்சாளை வாங்கினால் அன்றெல்லாம் வீடெங்கும் மணமாக இருக்கும். அன்றுமட்டும் நல்ல அரிசியில் சோறும் சமைப்பாள். நாள் முழுக்க தியானம் போல மத்திக்குழம்பு நினைப்புதான் இருக்கும். எத்தனை முயன்றாலும் மனதை வேறெங்கும் செலுத்த முடியாது. அம்மா கடைசியில் சட்டியில் ஒட்டிய குழம்பில் கொஞ்சம் சோற்றைப் போட்டு துடைத்து பிசைந்து வாயில் போடப்போனால் அதிலும் பங்கு கேட்டு தம்பி போய் கையை நீட்டுவான்.

கல்லூரிக்கு ஃபீஸ் கொடுக்க வேண்டியிருந்தது. பலமுறை சுற்றி வளைத்து மாமாவிடம் சொன்னேன். கடைசியில் நேரடியாகவே கேட்டேன். ‘உங்கப்பாவுக்கு எழுதிக்கேளு…இங்க தங்கி சாப்பிடத்தான் நான் சொல்லியிருக்கேன்…’ என்றார். அப்பாவுக்கு எழுதுவதில் அர்த்தமே இல்லை என்று தெரியும். ஒருவாரம் கழித்து என்னை காலேஜில் இருந்து நின்றுவிடச் சொல்லிவிட்டார்கள். ஃபீஸ் கட்டியபிறகு வந்தால் போதும் என்றார்கள். நான் பித்துப்பிடித்தவன் போல அலைந்தேன். தம்பானூர் ரயில் நிலையத்திற்குச் சென்று நாளெல்லாம் இரும்புச்சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். விதவிதமாக ஆயிரம் முறை தண்டவாளத்தில் விழுந்து செத்தேன். அப்போதுதான் என்னுடன் படித்த குமாரபிள்ளை என்ற மாணவன் ஒரு வழி சொன்னான். என்னை அவனே கூட்டிக்கொண்டு சென்று சாலையில் கெ.நாகராஜப் பணிக்கர் அரிசி மண்டியில் மூட்டைக்கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்த்து விட்டான். சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்தால்போதும். இரவு பன்னிரண்டு மணிவரை கணக்கு எழுதவேண்டும். ஒருநாளுக்கு ஒரு ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய் அட்வான்ஸ்காகக் கொடுத்தார். அதைக்கொண்டு சென்று ஃபீஸ் கட்டினேன்.

தினமும் வீடு சென்று சேர ஒருமணி இரண்டுமணி ஆகும். காலையில் ஏழுமணிக்குத்தான் எழுந்திருப்பேன். காலேஜ் இடைவெளிகளில் வாசித்தால்தான் உண்டு. ஆனாலும் நான் நல்ல மாணவனாக இருந்தேன். வகுப்புகளில் கூர்ந்து கவனிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. நேரம்தான் போதவில்லை. யூனிவர்சிட்டி காலேஜில் இருந்து செகரட்டரியேட் வழியாக குறுக்காகப் பாய்ந்து, கரமனை வழியாக சாலை பஜாருக்கு போக முக்கால்மணி நேரமாகிவிடும். சண்முகம்பிள்ளை கடைசி கிளாஸ் எடுத்தாரென்றால் நாலரை மணிவரை கொண்டு போவார். நான் போவதற்கு தாமதமானால் பரமசிவம் கணக்கு பார்க்க வந்து அமர்ந்துவிடுவான். அதன்பின் போனாலும் பிரயோசனமில்லை. வாரத்தில் நான்குநாட்கள்தான் சரக்கு வரும். அதில் ஒருநாள் போனால் வாரத்தில் கால்பங்கு வருமானம் இல்லாமலானதுபோல.

முதல் மாசம் எனக்கு பணமே தரப்படவில்லை. வரவேண்டிய பதினைந்து ரூபாயையும் பணிக்கர் முன்பணத்தில் வரவு வைத்துவிட்டார். நான் காலை எழுந்ததும் மாமி என் முன்னால் ஒரு நோட்டுப்புத்தகத்தை கொண்டு வைத்துவிட்டு போனாள். புரட்டிப்பார்த்தேன். பழைய நோட்டு. நான் வந்த நாள்முதல் சாப்பிட்ட ஒவ்வொருவேளைக்கும் கணக்கு எழுதப்பட்டிருந்தது. ஒருவேளைக்கு இரண்டணா கணக்குப் போட்டு மொத்தம் நாற்பத்தெட்டு ரூபாய் என் பற்றில் இருந்தது. எனக்கு தலை சுற்றியது. மெதுவாக சமையலறைக்குப் போய் ‘என்ன மாமி இது?’ என்றேன். ‘ஆ, சோறு சும்மா போடுவாளா? நீ இப்ப சம்பாரிக்கிறேல்ல? குடுத்தாத்தான் உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ என்றாள். ‘கணக்கு தப்பா இருந்தா சொல்லு, பாப்பம். நான் அப்பமே இருந்து ஒரு நாள் விடாம எழுதிட்டுதான் வாறேன்’

நான் கண்கலங்கி தொண்டை அடைத்து பேசாமல் நின்றேன். பின்பு ‘நான் இப்டீன்னு நினைக்கலை மாமி…எனக்கு அவ்ளவொண்ணும் கெடைக்காது. ஃபீஸ் கட்டணும். புக்கு வாங்கணும்…’ என்றேன். ‘இந்த பாரு, நான் உனக்கு என்னத்துக்கு சும்மா சோறு போடணும்? எனக்கு ரெண்டு பெண்மக்கள் இருக்கு. நாளைக்கு அதுகளை ஒருத்தன்கிட்ட அனுப்பணுமானா பணமும் நகையுமா எண்ணி வைக்கணும் பாத்துக்கோ. கணக்கு கணக்கா இருந்தா உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ நான் மெல்லிய குரலில் ‘இப்ப எங்கிட்ட பணமில்லை மாமி. நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடறேன்’ என்றேன். ‘குடுப்பேன்னு எப்டி நம்பறது?’ என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அன்று மாலையே நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நேராக பணிக்கரின் குடோனிலேயே வந்து தங்கிவிட்டேன். பணிக்கருக்கும் இலவசமாக வாட்ச்மேன் கிடைத்த சந்தோஷம். மாமி என் முக்கியமான புத்தகங்களை பணத்துக்கு அடகாக பிடித்து வைத்துக்கொண்டாள்.

சாலையில் நான் சந்தோஷமாகவே இருந்தேன். கரமனை ஆற்றில் குளியல். அங்கேயே எலிசாம்மா இட்லிக்கடையில் நான்கு இட்லி. நேராக காலேஜ். மதியம் சாப்பிடுவதில்லை. சாயங்காலம் வேலைமுடிந்தபின்னர் ஒரு பொறை அல்லது டீ குடித்துவிட்டு படுத்துவிடுவேன். கணக்கில் ஒருவேளை உணவுதான். எந்நேரமும் பசி இருந்துகொண்டே இருக்கும். எதை யோசித்தாலும் சாப்பாட்டு நினைவில் வந்து முடியும். குண்டான ஒருவரை பார்த்தால் கண்ணை எடுக்கவே முடியாது. எவ்ளவு சாப்பிடுவார் என்ற நினைப்புதான். சாலைமகாதேவர்கோயில் வழியாகச் செல்லும்போது பாயச வாசனை வந்தால் நுழைந்துவிடுவேன். இலைக்கீற்றில் வைத்து தரப்படும் பாயசமும் பழமும் ஒருநாள் இட்லி செலவை மிச்சப்படுத்திவிடும். சாஸ்தாவுக்கு சுண்டல், இசக்கியம்மைக்கு மஞ்சள்சோறு என அடிக்கடி ஏதாவது கிடைக்காமலிருக்காது. ஆனாலும் எனக்கு பணம் போதவில்லை. முன்பணத்தை அடைத்து முடிப்பதற்குள் அடுத்த காலேஜ் ஃபீஸுக்கு கேட்டுவிட்டார்கள். இதைத்தவிர மாதம் ஐந்துரூபாய் வீதம் சேர்த்து கொண்டுபோய் மாமிக்கு கொடுத்தேன். பரீட்சைக்கு முன்னாலேயே புத்தகங்களை மீட்டாகவேண்டும்.

நான் மெலிந்து கண்கள் குழிந்து நடமாட முடியாதவனாக ஆனேன். கணக்கு போட்டுக்கொண்டிருக்கும்போது சட்டென்று கிர்ர் என்று எங்கோ சுற்றிச்சுழன்று ஆழத்துக்குப் போய் மீண்டு வருவேன். வாயில் எந்நேரமும் ஒரு கசப்பு. கைகால்களில் ஒரு நடுக்கம். பேட்டை வரை காலேஜுக்கு நடப்பதற்கு ஒருமணிநேரம் ஆகியது. என் கனவெல்லாம் சோறு. ஒருநாள் சாலையில் ஒரு நாய் அடிபட்டு செத்துக்கிடந்தது. அந்த நாயின் கறியை எடுத்துக்கொண்டுபோய் குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி சுட்டு தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எச்சில் ஊறி சட்டையில் வழிந்து விட்டது அன்று.

அப்போதுதான் கூலி நாராயணன் சொன்னான், கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றி. பணம் கொடுக்கவேண்டாம் என்பது எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. பலரிடம் கேட்டேன், உண்மைதான் என்றார்கள். இருந்தால் கொடுத்தால்போதுமாம். எனக்கு தைரியம் வரவில்லை. ஆனால் கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றிய நினைப்பு எந்நேரமும் மனதில் ஓடியது. நாலைந்துமுறை ஓட்டலுக்கு வெளியே சென்று நின்று பார்த்துவிட்டு பேசாமல் வந்தேன். அந்த நறுமணம் என்னை கிறுக்காக்கியது. நான் பொரித்த மீனை வாழ்க்கையிலேயே இருமுறைதான் சாப்பிட்டிருக்கிறேன். இருமுறையும் சொந்தத்தில் ஒரு பண்ணையார் வீட்டில்தான். ஒருவாரம் கழித்து மூன்று ரூபாய் திரண்ட பின் அந்தப் பணத்துடன் கெத்தேல் சாகிப் ஓட்டலுக்குச் சென்றேன்.

சாகிப் ஓட்டலை திறப்பது வரை எனக்கு உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவனைப்போல உணர்ந்தேன். கும்பலோடு உள்ளே போய் ஓரமாக யாருமே கவனிக்காதது போல அமர்ந்துகொண்டேன். ஒரே சத்தம். சாகிப் புயல்வேகத்தில் சோறு பரிமாறிக்கொண்டிருந்தார். கவிழ்க்கப்பட்ட தாமரை இலையில்தான் சாப்பாடு. ஆவி பறக்கும் சிவப்புச் சம்பாச் சோற்றை பெரிய சிப்பலால் அள்ளி கொட்டி அதன்மேல் சிவந்த மீன் கறியை ஊற்றினார். சிலருக்கு கோழிக்குழம்பு. சிலருக்கு வறுத்தகோழிக்குழம்பு. அவர் எவரையுமே கவனிக்கவில்லை என்றுதான் பட்டது. அதன் பிறகு கவனித்தேன், அவருக்கு எல்லாரையுமே தெரியும். பலரிடம் அவர் எதையுமே கேட்பதில்லை. அவரே மீனையும் கறியையும் வைத்தார். ஆனால் யாரிடமும் உபச்சாரமாக ஏதும் சொல்லவில்லை. அவரே பரிமாறினார். இரண்டாம்முறை குழம்பு பரிமாற மட்டும் ஒரு பையன் இருந்தான்.

என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன். சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு? தின்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி ! கடவுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்து விட்டேனே. என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்தது.

ஒரு சின்ன கிண்டியில் உருகிய நெய்போன்ற ஒன்றுடன் கெத்தேல் சாகிப் என்னருகே வந்தார். என் சோற்றில் அதைக்கொட்டி இன்னும் கொஞ்சம் குழம்பு விட்டு ‘கொழச்சு திந்நோ ஹம்க்கே…மீன்கொழுப்பாணு’ என்றார். ஆற்றுமீனின் கொழுப்பு அது. அதன் செவிள்பகுதியில் இருந்து மஞ்சளாக வெட்டி வெளியே எடுப்பார்கள். கறிக்கு அது தனி ருசியைக் கொடுத்தது. அதிகமாகச் சாப்பிட்டு பழக்கமில்லாததனால் ஒரு கட்டத்தில் என் வயிறு அடைத்துக்கொண்டது. சட்டென்று இன்னும் இரு சிப்பல் சோற்றை என் இலையில் கொட்டினார் சாகிப். ‘அய்யோ வேண்டாம்’ என்று தடுக்கப்போன என் கையில் அந்த தட்டாலேயே கணீர் என்று அறைந்து ‘சோறு வச்சா தடுக்குந்நோ? எரப்பாளி..தின்னுடா இபிலீஸே ’ என்றார். உண்மையிலேயே கையில் வலி தெறித்தது. எழுந்திருந்தால் சாகிப் அடித்துவிடுவார் என்று அவரது ரத்தக் கண்களைக் கண்டபோது தோன்றியது. சோற்றை மிச்சம் வைப்பது சாகிப்புக்குப் பிடிக்காது என்று தெரியும். உண்டு முடித்தபோது என்னால் எழ முடியவில்லை. பெஞ்சை பற்றிக்கொண்டு நடந்து இலையை போட்டு கை கழுவினேன்.

அந்த பெட்டியை நெருங்கியபோது என் கால்கள் நடுங்கின. எங்கோ ஏதோ கோணத்தில் கெத்தேல் சாகிப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார் என்று தோன்றியது. ஆனால் அவர் வேறு ஆட்களை கவனித்துக்கொண்டிருந்தார். பலர் பணம் போடாமல் போனார்கள் என்பதை கவனித்தேன். சிலர் போட்டபோதும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். நான் கை நடுங்க மூன்று ரூபாயை எடுத்து உள்ளே போட்டேன். ஏதோ ஒரு குரல் கேட்கும் என முதுகெல்லாம் காதாக , கண்ணாக இருந்தேன். மெல்ல வெளியே வந்தபோது என் உடலே கனமிழக்க ஆரம்பித்தது. சாலை எங்கும் குளிர்ந்த காற்று வீசுவதுபோல் இருந்தது. என் உடம்பு புல்லரித்துக்கொண்டே இருக்க எவரையும் எதையும் உணராமல் பிரமையில் நடந்துகொண்டிருந்தேன்.

நாலைந்து நாள் நான் அப்பகுதிக்கே செல்லவில்லை. மீண்டும் இரண்டு ரூபாய் சேர்ந்தபோது துணிவு பெற்று கெத்தேல் சாகிபு கடைக்குச் சென்றேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பது அதேபோல கொழுப்பைக் கொண்டுவந்து ஊற்றியபோதுதான் தெரிந்தது. அதே அதட்டல், அதே வசை. அதேபோல உடல்வெடிக்கும் அளவுக்கு சாப்பாடு. இம்முறை பணத்தை நிதானமாகவே போட்டேன். மீண்டும் மூன்றுநாட்கள் கழித்து சென்றபோது என் கையில் ஏழு ரூபாய் இருந்தது. அன்றுமாலை நான் அதை மாமிக்குக் கொண்டு கொடுக்கவேண்டும். அதில் இரண்டு ரூபாய்க்குச் சாப்பிடலாம் என நினைத்தேன். இரண்டணாவுக்கு மேல் சாப்பிடுவதென்பது என்னைப்பொறுத்தவரை ஊதாரித்தனத்தின் உச்சம். ஆனால் ருசி என்னை விடவில்லை. அந்நாட்களில் என் கனவுகளில்கூட கெத்தேல் சாகிப் ஓட்டலின் மீன்குழம்பும் கோழிப்பொரியலும்தான் வந்துகொண்டிருந்தன. ஏன் , நோட்டுப்புத்தகத்தின் பின்பக்கம் ஒரு கவிதைகூட எழுதி வைத்திருந்தேன். உட்கார்ந்து சாப்பிட்டு எழுந்து சென்றபோது பணம் போடாவிட்டால் என்ன என்ற எண்ணம் வந்தது

அந்த நினைப்பே வயிற்றை அதிரச்செய்தது. மேற்கொண்டு சாப்பிடவே முடியவில்லை. பந்தை தண்ணீரில் முக்குவதுபோல சோற்றை தொண்டையில் அழுத்தவேண்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எழுந்து கைகழுவி விட்டு கனத்த குளிர்ந்த கால்களை தூக்கி வைத்து நடந்தேன். சிறுநீர் முட்டுகிறதா, தலை சுழல்கிறதா, மார்பு அடைக்கிறதா ஒன்றும் புரியவில்லை. பேசாமல் பணத்தை போட்டுவிடலாம் என்று தோன்றியது. மெல்ல நடந்து உண்டியல் அருகே வந்தேன். அதை தாண்டிச்செல்ல முடியவில்லை. காதுகளில் ஒரு இரைச்சல். சட்டென்று ஏழு ரூபாயையும் அப்படியே தூக்கி உள்ளே போட்டு விட்டு வெளியே வந்தேன். வெளிக்காற்று பட்டதும்தான் என்ன செய்திருக்கிறேன் என்று புரிந்தது. அரைமாத சம்பாத்தியம் அப்படியே போய்விட்டது. எத்தனை பாக்கிகள். கல்லூரி ஃபீஸ் கட்ட எட்டு நாட்கள்தான் இருந்தன. என்ன செய்துவிட்டேன். முட்டாள்தனத்தின் உச்சம்.

மனம் உருகி கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. ,மிக நெருங்கிய ஒரு மரணம் போல. மிகப்பெரிய ஏமாற்றம் போல. கடைக்குச் சென்று அமர்ந்தேன். இரவுவரை உடம்பையும் மனத்தையும் முழுக்க பிடுங்கிக்கொள்ளும் வேலை இருந்ததனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அந்த வெறியில் ஏதாவது தண்டவாளத்தில்கூட தலைவைத்திருப்பேன். அன்றிரவு தோன்றியது, ஏன் அழவேண்டும்? அந்த பணம் தீர்வது வரை கெத்தேல் சாகிப் ஓட்டலில் சாப்பிட்டால் போயிற்று. அந்நினைப்பு அளித்த ஆறுதலுடன் தூங்கிவிட்டேன்.

மறுநாள் மதியம் வரைத்தான் காலேஜ். நேராக வந்து கெத்தேல் சாகிப் ஓட்டலில் அமர்ந்து நிதானமாக ருசித்து சாப்பிட்டேன். அவர் கொண்டு வந்து வைத்துக்கோண்டே இருந்தார். கொஞ்சம் இடைவெளி விட்டால்கூட எழப்போகிறேன் என நினைத்து ‘டேய், வாரித்தின்னுடா, ஹிமாறே’ என்றார். சாப்பிட்டுவிட்டு கைகழுவி பேசாமல் நடந்தபோது உள்ளே கெத்தேல் சாகிப் கேட்டால் சொல்லவேண்டிய காரணங்களை சொற்களாக்கி வைத்துக்கொண்டிருந்தேன். அவர் கவனிக்கவே இல்லை. வெளியே வந்தபோது ஏமாற்றமாக இருந்தது. சட்டென்று அவர் மேல் எரிச்சல் வந்தது. பெரிய புடுங்கி என்று நினைப்பு. தர்மத்துக்கு கட்டுப்பட்டு எல்லாரும் பணம் போடுவதனால் இவன் பெரிய தர்மவானாக தோற்றமளிக்கிறான். ரம்சானுக்கு சக்காத்து கொடுப்பவர்கள் பணத்தைக் கொண்டுவந்து உண்டியலிலே போடுவதனால் பிழைக்கிறான். சும்மாவா கொடுக்கிறான்? இப்படி கிடைத்த பணம்தானே வீடும் சொத்துமாக ஆகியிருக்கிறது? போடாவிட்டால் எதுவரை பொறுப்பான். பார்ப்போமே. அந்த எரிச்சல் எதனால் என்று தெரியவில்லை. ஆனால் உடம்பு முழுகக் ஒரு தினவுபோல அது இருந்துகொண்டே இருந்தது.

அந்த எரிச்சலுடன்தான் மறுநாள் சென்று அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் கேட்கமாட்டார் என நான் அறிவேன். ஆனால் அவர் பார்வையில் நடத்தையில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தால்கூட அன்றுடன் அங்கே செல்வதை நிறுத்திவிடவேண்டும் என நினைத்துக்கொண்டேன். கொஞ்சம் அதிகமாக உபசரித்தால்கூட அவருக்கு கணக்கு இருக்கிறது, கவனிக்கிறார் என்றுதானே அர்த்தம். ஆனால் கெத்தேல் சாகிப் அவரது வழக்கமான அதே வேகத்துடன் பரிமாறிக்கொண்டிருந்தா. கொழுப்பு ஊற்றினார். ‘கோழி தின்னு பிள்ளேச்சா’ என்று ஒரு அரைக்கோழியை வைத்தார். பின்னர் மீன் வைத்தார். அவர் இந்த உலகில்தான் இருக்கிறாரா? உண்மையிலேயே இது ஒரு மாப்பிளைதானா இல்லை ஏதாவது ஜின்னா? பயமாகக்கூட இருந்தது. கடைசியாகச் சோறு போட்டு சாப்பிடப்போனபோது கெத்தேல் சாகிப் கறி பொரித்த மிளகாய்க்காரத்தின் தூளையும் கொஞ்சம் கருகிய கோழிக்காலையும் கொண்டு வைத்தார். நான் அதை விரும்பிச் சாப்பிடுவதை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது என எப்போதும் முயல்வேன். ஆனால் அவருக்கு தெரிந்திருந்தது ஆச்சரியமளிக்கவில்லை.

அந்த காரத்தை சோற்றில் போட்டுப்பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்கு பரிந்து சோறிட்டதில்லை. ஆழாக்கு அரிசியைக் கஞ்சி வைக்கும் அம்மாவுக்கு அந்த கடுகடுப்பும் வசைகளும் சாபங்களும் இல்லாவிட்டால் எல்லாருக்கும் பங்கு வைக்கவே முடியாது. நான் நிறைந்து சாப்பிடவேண்டும் என எண்ணும் முதல் மனிதர். எனக்கு கணக்கு பார்க்காமல் சாப்பாடு போடும் முதல் கை. அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை? அதன்பின் நான் கெத்தேல் சாகிப்புக்கு பணமே கொடுத்ததில்லை. செலவென நினைத்து கொடுக்காமலிருக்கவில்லை என்று என் நெஞ்சை தொட்டுச் சொல்ல முடியும். அது என் அம்மாவின் சோறு என்பதனால்தான் கொடுக்கவில்லை. ஒன்றிரண்டல்ல முழுசாக ஐந்து வருடம் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை.

தினமும் ஒருவேளை அங்கே சாப்பிடுவேன். மாலை அல்லது மதியம். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. மேற்கொண்டு ஒரு நான்கு இட்லி போதும். என் கைகால்கள் உரம் வைத்தன. கன்னம் பளபளத்தது. மீசை தடித்தது. குரல் கனத்தது. நடையில் மிடுக்கும் பேச்சில் கண்டிப்பும் சிரிப்பில் தன்னம்பிக்கையும் வந்தன. கடையில் என் இடம் கிட்டத்தட்ட மானேஜருக்கு நிகரானதாக ஆகியது. சரக்குகளை வரவு வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்து கொடுப்பது முழுக்க என்பொறுப்புதான். படிப்புச்செலவுபோக ஊருக்கும் மாதம் தோறும் பணம் அனுப்பினேன். நான் பீஏ யை முதல்வகுப்பில் முதலிடத்தில் வென்றபின் யூனிவர்சிட்டி கல்லூரியிலேயே எம்ஏ படிக்கச் சேர்ந்தேன். சாலையில் அருணாச்சலம்நாடார் கடைமேல் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். ஒரு நல்ல சைக்கிள் வாங்கிக்கொண்டேன்.

ஒவ்வொரு நாளும் கெத்தேல் சாகிப்பின் கையால் சாப்பிட்டேன். மெதுவாக பேச்சு குறைந்து அவர் என்னை பார்க்கிறாரா என்ற சந்தேகம்கூட வர ஆரம்பித்தது. ஆனால் என் இலைமேல் அவரது கனத்த கைகள் உணவுடன் நீளும்போது தெரியும் அது அன்பே உருவான அம்மாவின் கை என்று. நான் அவர் மடியில் பிறந்து அவரிடம் முலையுண்டவன் என்று. தம்பி சந்திரன் பதினொன்று முடித்துவிட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்தபோது வீட்டுக் கஷ்டம் குறைந்தது. நான் அவ்வப்போது வீட்டுக்குப் போவேன். அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும். பலவீனமாக ’சாப்பிடுடா’ என்பாள் அம்மா. தலையசைத்து முகம் கழுவிக்கொள்வேன்.

எம்.ஏ யில் பல்கலைக்கழகத்தில் இரண்டாமிடத்தில் வந்தேன். உடனே அதே யூனிவர்சிட்டி கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. ஆணை கைக்கு வந்த அன்று மதியம் நேராக கெத்தேல் சாகிப் கடைக்குத்தான் போனேன். கடை திறக்கவில்லை. நான் பின்பக்கம் சென்றேன். சாக்குப்படுதாவை விலக்கிப் பார்த்தேன். பெரிய உருளியில் கெத்தேல்சாகிப் மீன்குழம்பை கிண்டிக்கொண்டிருந்தார். முகமும் கைகளும் சிந்தனையும் எல்லாம் குழம்பில் இருந்தன. அது ஒரு தொழுகை போல. அவரை கூப்பிடுவது சரியல்ல என்று தோன்றியது. திரும்பி விட்டேன். மதியம் கெத்தேல் சாகிப் என் இலைக்கு சோறு போடும்போது நிமிர்ந்து அவர் முகத்தைப்பார்த்தேன். அதில் எனக்கான எந்த பார்வையும் இல்லை. சொல்லவேண்டாம் என்று தோன்றியது. அந்தச் செய்திக்கு அவரிடம் எந்த அர்த்தமும் இல்லை.

சாயங்காலம் ஊருக்குச் சென்றேன். அம்மா மகிழ்ச்சி அடைந்தாளா என்றே தெரியவில்லை. எதையும் கவலையாகவே காட்டும் முக அமைப்பு அவளுக்கு. அப்பா மட்டும் ‘என்னடா குடுப்பான்?’ என்றார். ‘அது கெடைக்கும்…’ என்றேன் சாதாரணமாக. ‘ என்ன, எரநூறு குடுப்பானா?’ என்றார் . நான் அந்த கேள்வியில் இருந்த அற்பத்தனம் மிக்க குமாஸ்தாவைக் கண்டுகொண்டு சீண்டப்பட்டேன்.’ அலவன்ஸோட சேத்து எழுநூறு ரூபா…’ என்றேன். அப்பாவின் கண்களில் ஒரு கணம் மின்னி மறைந்த வன்மத்தை இறுதிக்கணம் வரை மறக்கமுடியாது. மாதம் இருபது ரூபாய்க்குமேல் சம்பளமே வாங்காமல் ஓய்வுபெற்றவர் அவர். தம்பிதான் உண்மையான உற்சாகத்துடன் துள்ளினான். ‘நீ இங்கிலீஷிலேதானே கிளாஸ் எடுக்கணும்…உனக்கு அப்டீன்னா நல்லா இங்கிலீஷ் பேசத்தெரியும் இல்ல? துரை மாதிரி பேசுவே இல்ல?’ என்று ததும்பிக்கொண்டே இருந்தான். அம்மா கோபத்துடன் ‘துள்ளுறது சரி, உள்ள பணத்தை சேத்து கீழ உள்ள கொமருகளை கரையேத்துற வழியப்பாருங்க’ என்றாள்.

தார்மிகமான ஒரு காரணத்தை கண்டுகொண்டபின் அவளுடைய ஆங்காரம் அவ்வழியாக வெளிவர ஆரம்பித்தது. ‘துள்ளினவள்லாம் எங்க கெடக்கான்னு கண்டேல்ல? தாழக்குடிக்காரிய அன்னைக்கு சம்முவம் கல்யாணத்திலே பாத்தேன். பூஞ்சம்புடிச்ச கருவாடு கணக்காட்டுல்லா இருந்தா…என்னா ஆட்டம் ஆடினா பாவி…சாமி நிண்ணு குடுக்கும்லா?’ என்றாள். ’ஏட்டி, நீ என்ன பேசுகே? இந்நா நிக்கானே உனக்க மவன், அவ போட்ட சோத்திலேல்லா படிச்சு ஆளானான்? நண்ணி வேணும் பாத்துக்க. நண்ணி வேணும்…’ என்றார் அப்பா. ‘என்ன நண்ணி? இம்பிடு சோறும் கொளம்பும் போட்டா. அதுக்கு உள்ளத கணக்கு போட்டு அவ மூஞ்சியிலே விட்டெறிஞ்சா போருமே…இல்லேண்ணா நாளைக்குப்பின்ன வேற கணக்கோட வந்து நிப்பா வாசலிலே, எளவெடுத்த சிறுக்கி’ அம்ம சொன்னாள் . அப்பா ‘சீ ஊத்த வாய மூடுடீ’ என்று சீறி எழ சண்டை எழுந்தது

மறுநாள் தாழக்குடிக்குப் போனேன். மாமா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டிருந்தது. திடீரென்று ஒரு காய்ச்சல். நான்தான் ஆஸ்பத்திரியில் கூடவே இருந்தேன். ஈறில் ஏற்பட்ட காயம் வழி இதயம் வரை பாக்டீரியா சென்று விட்டது. மூன்றாம்நாள் இரவில் போய்விட்டார். காடாத்து முடிந்து அச்சகக் கணக்குகளைப்பார்த்தோம். இரண்டாயிரம் ரூபாய் வரை கடன் இருந்தது. கட்டிட உரிமையாளர் அச்சகத்தை காலிசெய்யவேண்டும் என்று சொன்னார். இயந்திரங்களை விற்று கடனை அடைத்தபின் மாமி எஞ்சிய மூவாயிரம் ரூபாய் பணத்துடன் தாழக்குடிக்கே வந்துவிட்டாள். அவள் வீட்டு பங்குக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்துக் கொண்டாள். ராமலட்சுமி பதினொன்றுக்கு மேல் படிக்கவில்லை. சின்னவள் எட்டாம் வகுப்பு. மாமி ஆடிப்போய்விட்டாள். நாள்செல்ல நாள்செல்ல பணம் கரைந்து அந்த பீதி முகத்தில் படிந்து அவள் மெலிந்து வறண்டு நிழல்போல ஆவதைக் கண்டேன். ஊருக்கு வரும்போது சென்று பார்த்து மரியாதைக்காக கொஞ்சம் பேசிவிட்டு மேஜையில் ஒரு பத்து ரூபாய் வைத்துவிட்டு வருவேன்.

வீட்டில் மாமி இல்லை. ராமலட்சுமி மட்டும்தான் இருந்தாள். அவளும் கொஞ்சம் புகைபடிந்ததுபோலத்தான் இருந்தாள். ஒரு அங்கணமும் திண்ணையும் சமையல்சாய்ப்பும் மட்டும்தான் வீடு. சுருட்டப்பட்ட பாய்கள் கொடியில் தொங்கின. தரை சாணிமெழுகப்பட்டிருந்தது. சிறிய மேஜை மேல் ராணிமுத்து நாவல். ராமலட்சுமி கொல்லைப்பக்கம் வழியாக வெளியே போய் பக்கத்துவீட்டில் இருந்து சீனியோ டீத்தூளோ வாங்கி வந்து எனக்கு கறுப்புடீ போட்டுக்கொடுத்தாள். மேஜை மேல் டம்ளரை வைத்துவிட்டு கதவருகே சென்று பாதி உடல் மறைய நின்றுகொண்டாள். நான் அவள் வகிடை மட்டும்தான் பார்த்தேன். அவள் சூட்டிகையான பெண். ஆனால் கணக்கு மட்டும் வரவே வராது. திருவனந்தபுரத்தில் அவளுக்கு கூட்டு வட்டியை மட்டும் நான் இருபதுநாளுக்குமேல் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவள் வேறு யாரோ ஆக இருந்தாள்.

பத்து நிமிடம் கழித்து எழுந்துகொண்டேன். ‘வாறேன்’ என்றேன். ‘அம்மை வந்திருவா’ என்றாள் மெல்லிய குரலில். ‘இல்ல வாறேன்…’ என்றபின் மேஜையில் ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஊடுவழியில் நடக்கும்போது எதிரே மாமி வருவதைக் கண்டேன். அழுக்கு சேலையை சும்மாடாக சுற்றி வைத்து அதில் ஒரு நார்ப்பெட்டியை வைத்திருந்தாள். என்னை சாதாரணமாக பார்த்து அரைக்கணம் கழித்தே புரிந்துகொண்டாள். ‘அய்யோ மக்கா’ என்றாள். பெட்டியை நான் பிடித்து இறக்கி வைத்தேன். அதில் தவிடு இருந்தது. எங்கோ கூலிக்கு நெல்குற்ற போகிறாள். தவிடுதான் கூலி. அதை விற்கக் கொண்டுபோகிறாள் போல.‘வீட்டுக்கு வா மக்கா’ என்று கையை பிடித்தாள். ‘இல்ல. நான் போகணும். இண்ணைக்கே திருவனந்தபுரம் போறேன்…’ என்றபின் ‘வேல கெடைச்சிருக்கு…காலேஜிலே’ என்றேன். அவளுக்கு அது சரியாக புரியவில்லை. வறுமை மூளையை உரசி உரசி மழுங்கடித்துவிடுகிறது.

சட்டென்று புரிந்துகொண்டு ‘அய்யோ…என் மக்கா.. நல்லா இரு…நல்லா இருடே’ என்று என் கையை மீண்டும் பற்றிக்கொண்டாள். ‘உனக்கொரு வேலை கிடைச்சபிறவு கேக்கலாம்னு இருந்தேன். கேக்க எனக்கு நாதியில்லே மக்கா. இந்நான்னு தர என் கையிலே கால்சக்கரம் இல்லை. பாத்தியா, கண்டவனுக்கு நெல்லுக்குத்தி குடுத்து கஞ்சிகுடிக்கிறோம்… தவிடு விக்கலேன்னா அந்திப்பசிக்கு பச்சத்தவிடையாக்கும் திங்கிறது மக்கா…ஆனா நல்ல காலத்திலே நான் உனக்கு சோறு போட்டிருக்கேன். என் கையாலே கஞ்சியும் பற்றும் குடிச்சுத்தான் நீ ஆளானே. எட்டுமாசம் தினம் ரெண்டு வேளைன்னாக்கூட அஞ்ஞூறு வேளை நான் உனக்கு சோறும் கறியும் வெளம்பியிருக்கேன் பாத்துக்கோ. அதெல்லாம் உனக்க அம்மைக்கு இப்ப தெரியாது. அந்த நண்ணி அவளுக்கில்லேண்ணாலும் உனக்கிருக்கும்… மக்கா ராமலெச்சுமிக்கு உன்னை விட்டா ஆருமில்லே. சவத்துக்கு ராத்திரியும் பகலும் உனக்க நினைப்பாக்கும்…அவளுக்கு ஒரு சீவிதம் குடு ராசா…திண்ண சோத்துக்கு நண்ணி காட்டேல்லேண்ணா அதுக்குண்டான கணக்க நீ சென்மசென்மாந்தரமா தீக்கணும் பாத்துக்கோ’

அவளிடம் விடைபெற்று பஸ்ஸில் ஏறியபோது வேப்பங்காய் உதட்டில் பட்டது போலக் கசந்தது. வாயே கசப்பது போல பஸ்ஸில் இருந்து துப்பிக்கொண்டே வந்தேன். நேராகத் திருவனந்தபுரம் வந்தேன். வேலைக்குச் சேர்ந்து அந்த புதிய பொறுப்பின் பரபரப்பிலும் மிதப்பிலும் மூழ்காமல் இருந்திருந்தால் அந்தக்கசப்பை உடம்பெங்கும் நிறைத்து வைத்திருப்பேன். முதல்மாதச் சம்பளம் வாங்கியதும் அம்மாவுக்குப் பணம் அனுப்பியிருந்தேன். அம்மா பதில் கடிதத்தில் ’சுப்பம்மா வந்து உன் அப்பாகிட்டே பேசியிருக்காள். உங்க அப்பாவுக்கும் அரை மனசுதான். அது நமக்கு வேண்டாம் கேட்டியா? அவங்க செய்ததுக்கு நூறோ ஆயிரமோ அந்தக்குட்டி கல்யாணத்துக்கு குடுத்திருவோம். நாம யாருக்கும் சோத்துக்கடன் வச்சமாதிரி வேண்டாம். இப்பம் நல்ல எடங்களிலே கேக்கிறாங்க. நல்லாச் செய்வாங்க. பூதப்பாண்டியிலே இருந்து ஒரு தரம் வந்திருக்கு. பாக்கட்டுமா’ என்று கேட்டிருந்தாள். இரவெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். சலித்துப்போய் தூங்கிவிட்டேன். காலையில் மனம் தெளிவாக இருந்தது. அம்மாவுக்கு ‘பாரு. பொண்ணு கொஞ்சம் படிச்சவளா இருக்கணும்’ என்று எழுதிப் போட்டேன்.

முதல் மாதமே கேண்டீன் சாமிநாத அய்யர் நடத்திய இருபதாயிரம் ரூபாய் சீட்டு ஒன்றில் சேர்ந்திருந்தேன். மாதம் ஐநூறு ரூபாய் தவணை வரும். அதை நாலாயிரம் ரூபாய் தள்ளி ஏலத்தில் எடுத்தேன். பதினாறாயிரம் ரூபாய் மொத்தமாக மாத்ருபூமி நாளிதழ்தாளில் சுருட்டி கையில் கொடுத்துவிட்டார். எல்லாமே நூறு ரூபாய்க்கட்டுகள். அத்தனை பணத்தை நான் என் கையால் தொட்டதில்லை. ஒருவிதமான திகில் கைகளைக் கூச வைத்தது. அறையில் கொண்டு வந்து வைத்து அந்த நோட்டுக்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை பணத்தை என் கையால் நான் சம்பாதிப்பேன் என எப்போதும் எண்ணியதில்லை. அதைவைத்து திருவனந்தபுரத்தில் புறநகரில் ஒரு சிறிய வீட்டைக்கூட வாங்கிவிடமுடியும். கொஞ்ச நேரத்தில் அந்தப்பணம் என் கைக்கும் மனதுக்கும் பழகிப்போன விந்தையை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டேன்.

மதிய நேரம் கெத்தேல் சாகிப் கடைக்குப்போனேன். கடை திறந்ததும் உள்ளே சென்று உண்டியலில் பணத்தை போட ஆரம்பித்தேன். பெட்டி நிறைந்ததும் கெத்தேல் சாகிபிடம் வேறு பெட்டி கேட்டேன் .’டா அமீதே பெட்டி மாற்றெடா’ என்றார். பையன் பெட்டியை மாற்றிவைத்ததும் மீண்டும் போட்டேன். மொத்தப்பணத்தையும் போட்டபின் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் இலைபோட்டு எனக்குபிரியமான கொஞ்சு பொரியலை வைத்தார். சோறு போட்டு குழம்பு ஊற்றினார். அவரிடம் எந்த மாறுதலும் இருக்காதென்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. ஒரு சொல் இல்லை. அப்பால் இரு பையன்கள் ஒண்டியது போல அமர்ந்திருந்தார்கள். வெளிறிய நாயர் பையன்கள். சத்தற்ற பூசணம்பூத்த சருமம். வெளுத்த கண்கள். கெத்தேல் சாகிப் அள்ளி வைத்த கறியை முட்டி முட்டி தின்றுகொண்டிருந்தார்கள். கெத்தேல் சாகிப் இன்னொரு துண்டு கறியை ஒருவனுக்கு வைக்க அவன் ‘அய்யோ வேண்டா’ என்று எழுந்தே விட்டான். கெத்தேல் சாகிப் ‘தின்னுடா எரப்பாளிடே மோனே’ என்று அவன் மண்டையில் ஓர் அடி போட்டார். பலமான அடி அவன் பயந்து அப்படியே அமர்ந்துவிட்டான். கண்ணில் காரத்தூள் விழுந்ததோ என்னவோ, அழுதுகொண்டே சாப்பிட்டான்.

கெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப் பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.

அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.

ஆக்கம்: ஜெயமோகன்

நன்றி: ஜெயமோகன் அகப்பக்கம்

எப்பொழுதும் வாழும் சிறுகதைகள் 3: பிராயணம்: அசோகமித்ரன்

மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின் கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன்.
“இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த மலை விளிம்பு அந்த இடத்தில் செங்குத்தாகப் பல நூறு அடிகள் இறங்கி, அடியில் ஒரு ஓடையைத் தொட்டது. தண்ணீர் தேங்கும் குட்டைபோல அந்த இடத்தில் ஓடை இருந்தாலும் சற்றே தள்ளி, அதுவே ஆவேசத்துடன் பாறைகள் மீது மோதிப் பள்ளத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கத்தில் மலை உயர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் வந்த விளிம்பு ஓரமாக இன்னும் பத்துப் பன்னிரண்டு மைல் போனால் ஒரு கணவாய் வரும். அதற்குப்பிறகு சிறு புதர்களால் நிறைந்த ஒரு சமவெளிப் பிரதேசம்.
அது ஒரு காட்டை எட்டிக் கரைந்து விடும். அந்தக் காட்டைத் தாண்டியவுடன் ஒரு சிற்றாறு. அதன் அக்கரையில்தான் முதன்

முதலாக மனித வாடை வீசும் ஒரு கிராமம் -ஹரிராம்புகூர். ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரிராம்புகூரைத் தாண்டி நானும்
குருதேவரும் நடைப் பயணமாக எங்கள் ஆசிரமத்திற்கு வந்து சேர இரண்டு பகல் பொழுதுகள் தான் தேவைப்பட்டன. இப்போது மலையிலிருந்து பாதி இறங்குவதற்குள் ஒரு பகல் போய்விட்டது. அரை மணி நேரத்தில் இருட்டிவிடும்.

நான் என் சாக்கைப் பிரித்துப் பெரியதாக ஒரு துப்பட்டியையும், முரட்டுக் கம்பளியினால் தைக்கப்பட்ட நீளப் பையொன்றையும் எடுத்தேன். என் குருதேவரைப் போர்த்தியிருந்த கம்பளத்தையும், துணிகளையும் அகற்றிய பிறகு துப்பட்டியால் அவரைச் சுற்றிவிட்டு அவர் மெதுவாக அந்தக் கம்பளப் பையில் நுழைந்துகொள்வதற்கு
உதவினேன். பை அவரது தலையையும் மூடிக்கொள்ள வசதியிருந்தாலும் முகத்தை மட்டும் திறந்து வைத்தேன். கம்பளி மஃப்ளர் ஒன்று இருந்தது; அதை அவர் காது முழுவதும்
மூடியிருக்குமாறு தலையைச் சுற்றிக் கட்டிவைத்தேன். ‘சிறிது கஞ்சி தரட்டுமா?” என்று கேட்டேன். அவர் கண்களால் “கொடு”  என்றார். சாக்கிலிருந்து மூடியிடப்பட்ட சிறு தகரப் பெட்டி, இரண்டாம் உலக யுத்தத்தில் சிப்பாய்களுக்குக் கொடுத்த வட்டமான ஒரு தகரப் பாத்திரம், ஒரு ராணுவத் தண்ணீர் ‘பாட்டில்’ இவை மூன்றையும்
எடுத்தேன். வட்டப் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொண்டு தகரப் பெட்டியின் மூடியைத் திறந்தேன். அதில் பாதியளவு உறையவைத்த மண்ணெண்ணெய் இருந்தது. நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து அதன் அருகே கொண்டு போனேன்.
மண்ணெண்ணெய் குப்பென்று பிடித்துக்கொண்டு ஒரே சீராக எரிந்தது. பாத்திரத்தின் மடக்குப் பிடியை நீட்டிக்கொண்டு ஜூவாலையில் தண்ணீரைச் சுட வைத்தேன். ஒரு கொதி
வந்ததும் என் முதுகுப் பையில் சிறு மூட்டையாகக் கட்டிப் போட்டிருந்த கிழங்கு மாவில் ஒரு பிடி எடுத்துப் போட்டேன். ஒரு குச்சி கொண்டு கிளறிக்கொண்டே மாவுத்தண்ணீரைக் காய்ச்சினேன். அது கூழாகிவிடக் கூடாதென்று இன்னும் சிறிது
தண்ணீர் சேர்த்தேன். கஞ்சி தயாராயிற்று. எரிந்துகொண்டிருந்த தகரப் பெட்டியை அதன் மூடி கொண்டு மூடினேன். நெருப்பு அணைந்து சிறிது மட்டும் வந்தது. கஞ்சியைப் பாத்திரத்தில் கலக்கியே ஆற வைத்தேன். பொறுத்துக்கொள்ளக்கூடிய சூடு என்று
தோன்றியபோது என் குருதேவரின் தலையை மெதுவாக என் மடிமேல் ஏற்றி வைத்துக்கொண்டு, கஞ்சியை அவருக்குப் புகட்டலானேன். இரண்டு வாய் குடித்ததும் அவர் ‘போதும்’
என்றார். அவருக்குச் சிறிது தெம்பு வந்திருந்த மாதிரி இருந்தது. மிச்சமிருந்த கஞ்சியை நான் குடித்தேன். பாத்திரத்தைக் கழுவாமல் ஒரு துணி கொண்டு துடைத்து வைத்தேன். தண்ணீர் ‘பாட்டி’லில் சிறிதுதான் தண்ணீர் இருந்தது. நான் கீழே இறங்கி
ஓடையில் தண்ணீர் பிடித்துவர அடுத்த நாள் காலையில்தான் முடியும்.

என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல் இருக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். ஐம்பது, அறுபது வருட காலம் முதிர்ந்து யோகியாகவே வாழ்க்கை நடத்திய என் குருதேவர், அந்நேரத்தில் வாயைத் திறந்து
வைத்துக் கொண்டும்கூட மூச்சு விடுவதற்குப் பெரும் உபாதைப்பட்டுக் கொண்டிருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு ”அம்மா” என்று அவர் கீழே விழும்வரையில், அவர் சுவாசம் விடுவதே
மிகவும் கூர்ந்து கவனித்தாலன்றித் தெரியாது. அப்படிப் புலனானால், ஒரு மூச்சுக்கு இன்னொன்று மிக நீண்ட சீரான இடைவெளிவிட்டு வருவதை உணர முடியும்.
இப்போது அவர் வாயால் மூச்சு விடுவதற்குத் திணறிக் கொண்டிருந்தார்.

சூரியன் மலைகளின் பின்னால் விழுந்து, மலைகளே மலைகள் மீது பூதாகரமான நிழல்களைப் படர விட்டுக் கொண்டிருந்தன. இரவும் அந்த நிழல்களும் ஒன்றறக் கலக்கச் சில நிமிடங்களே இருந்தன. அதற்குள் அங்கே குச்சி குச்சியாக வளர்ந்த பரந்து கிடந்த செடிகளில் உலர்ந்துபோன சிலவற்றைச் சேகரிக்க நான் முனைந்தேன். எனக்குக் குளிரவில்லை. மேலங்கியே போட்டறியாத என் குருதேவர் இரு வாரங்களாகக் கம்பளத்தைச்
சுற்றிக்கொண்டு கம்பளப் பையிலும் நுழைந்து கிடக்க வேண்டியிருந்தது. அவருக்குக் கணப்பு வேண்டும். அர்த்த ராத்திரி அளவில் பனி இறங்க ஆரம்பித்து விடும். ஆவி போலல்லாமல் பஞ்சுப் பொதிகளாகவும் இறங்கும். என் குருதேவருக்குக் கணப்பு
வேண்டும். இன்னொரு காரணத்திற்காகவும் கணப்பு வேண்டும். பகலில் சில அடிச்சுவடுகள்தான் காணப்படும். இரவு வேளையில் அந்த அடிச்சுவடுக்குரியவை வந்துவிடும்.

உலர்ந்த செடிகளை நான் வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்தேன். என் கைகளால் மார்போடு அணைத்துக்கொண்டு வரக்கூடிய அளவு இருமுறை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் எல்லாவற்றையும் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்க்க வேண்டியிருந்தது. என்
குருதேவரைப் படுக்கவைத்து நான் இழுத்து வந்த பலகையுடன் ஒரு விறகுக் கட்டும் கட்டிவைத்திருந்தேன். அந்த விறகுத் துண்டுகள் இலகுவில் பற்றிக் கொண்டுவிடாது. பற்றி கொண்டாலும் ஓர் இரவு நேரத்திற்கு மேல் வராது. எங்கள் ஆசிரமத்திலிருந்து வருடத்திற்கு இரண்டு மூன்று முறை அத்யாவசியத் தேவைகளுக்காக ஹரிராம்புகூருக்கு நாங்கள் வந்து போகும் போதெல்லாம் பிரயாணத்திற்கு அந்த அளவு கட்டைக்குமேல் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இம்முறை அது போதவே போதாது என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

நான் பிடுங்கி வந்த குச்சிகளில் ஒரு கைப்பிடியில் அடங்குபவையை எடுத்து ஒரு சிறு கூடாரம் மாதிரித் தரையில் பொருத்தி வைத்தேன். என் குருதேவரின் கால் பக்கமாகத்தான் வைத்தேன். அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும்
லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பல நூறு அடிகள் கீழே, குறைந்தது அரை மைலுக்கப்பால் பிரவாகமாக மாறும் ஓடை, தொடர்ந்து
இரைச்சல் எழுப்பிக்கொண்டிருந்தது. இந்தச் சப்தங்களும், என் குருதேவரின் மூச்சுத் திணறலும் தவிர வேறு எதுவும் என் காது கேட்க அங்கிருக்கவில்லை.

பட்டாசுத் திரி போல் உலர்ந்த குச்சிகள் பற்றிக்கொண்டு எரிந்தன. அந்த ஜூவாலையில் நுனி மட்டும் படும்படியாக ஐந்தாறு விறகுத் துண்டுகளை ஒரு சக்கரத்தின் ஆரைக்கம்புகள் போல் வைத்தேன். நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டன.

ஒரு விறகு பற்றிக்கொண்டு எரிந்தது. நான் பாய்ந்து சென்று அதைக் கையில் எடுத்து மூன்று, நான்கு வீச்சுகளில் ஜூவாலை விட்டு எரிவதை அணைத்து அது வெறும் தணலாக எரியும்படி செய்தேன். ஒரு விறகு மட்டும் அதிகமாகப் புகைந்து கொண்டிருந்தது. அதைத் தரையில் ஒருமுறை தட்டிவிட்டுப் புரட்டி வைத்தேன். புகை
சிறிது கரைந்தது. நான் என் குருதேவரின் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டேன். பின்னர் எழுந்து எங்களிடமிருந்த நீண்ட மூங்கில் கழியை என் பக்கத்தில் எடுத்து
வைத்துக்கொண்டு அமர்ந்தேன். எல்லாப் பக்கத்திலும் உறைந்துபோன பேரலைகள்போல் மலைச் சிகரங்கள் அந்த இருளிலும் கரும் நிழல்களாகக் கண்ணுக்குத் தெரிந்தன.
பொழுது விடிய இருக்கும் இன்னும் பல மணி நேரத்துக்கு அவற்றைத்தான் நான் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். அமைதியாக உட்கார்ந்துகொண்டே இருந்ததில் நான்
எனக்குள்ளே விரிந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆசிரமக் குடிசைக்குள் என் குருதேவர் எந்த வித உடல் இடர்ப்பாடும் இல்லாமல் படுத்திருக்கும் வேளைகளில் நான் ஒவ்வொரு நாளும் வெட்ட வெளியில் உட்கார்ந்து, இந்த விசால உணர்வைக் காத்திருந்து வரவழைத்துக்கொள்வேன். இப்போது என்னிச்சையின்றி அந்த விசால உணர்வு வர ஆரம்பித்ததும் அதை அகற்றிவிட வேண்டுமே என்ற கவலை வந்தது. அந்நேரம் தூரத்தில் இரு மலைச் சிகரங்கள் அசைந்து என் திசையில் குவிந்து வருவதுபோல் இருந்தது. என் அடிவயிற்றில் திடீரென்று பயம் எழுந்தது. உடனே மன லயம் கலைந்துபோயிற்று. மலைச் சிகரங்களைப் பார்ப்பதை விட்டு ஆகாயத்தைப் பார்த்தேன். தாறுமாறாகச் சிதறிக் கிடப்பதுப்போல் இருந்த
நட்சத்திரங்கள் சீக்கிரத்தில் தனித்தனிக் கூட்டங்களாக் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தன. முதலில் அந்த உருவங்களுக்கு என் மனம் கற்பிக்கும்படியான தோற்றம் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது மாறி ஒவ்வொரு நட்சத்திரக் குவியலும் வெவ்வேறு
விதமான கை கால்களை நீட்டிக் கொண்டு வெறியுடன் பறந்து செல்லும் உருவங்களாகக் காண ஆரம்பித்தன. கண்களை மூடிக்கொண்டு மூச்சு விடுவதுகூட ஒரு தாள லயத்துடன்தான்
வந்து கொண்டிருந்தது. அதன் மீது மனத்தைச் செலுத்தியபோதும் என் நினைவுப் பிரக்ஞை அமிழ்ந்து என்னை உறக்கத்துக்குக் கொண்டு செல்வதை உணர்ந்தேன். அதைத் தடுத்துக்
கண்களைத் திறந்துகொண்டு நட்சத்திரங்களைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் வெவ்வேறு கூட்டமாகப் பிரிந்து உருவங்களாக மாறும் தருணத்தில் மலைச் சிகரங்களை நோக்கினேன்.
என்னை அறியாமல் என் கவனம் என் குருதேவரின் சுவாச ஒலியில் மீண்டும் லயிக்க ஆரம்பித்த போது எழுந்திருந்து உட்கார்ந்தேன். நான் எக்காரணம் கொண்டும் அன்றிரவு என் நினைவை இழக்கக் கூடாது. மலையைத் தாண்டி, சமவெளியைத் தாண்டி, வனத்தைத்
தாண்டி, ஆற்றைத் தாண்டி, ஹரிராம்புகூரை அடைந்தே தீரவேண்டும். என் குருதேவருக்கு
வைத்திய உதவி கிட்டும்படி செய்ய வேண்டும். பனி இறங்க ஆரம்பித்தது. நான் எங்களிடம் மிகுதியிருந்த ஒரே பழந்துண்டைத் தலையோடு போர்த்திக் கொண்டு ஒரு தொடையை இன்னொரு தொடை மீது இறக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.

மலைச் சிகரங்களிடையே புகுந்து வீசிக்கொண்டு செல்லும் காற்றின் ஒலி எனக்குள்ளேயே கேட்டது. ஓடைச் சப்தமும் கேட்டது. நான் விரிந்து கொண்டிருந்தேன். எல்லாத் திசைகளிலுமாக விரிந்து கொண்டிருந்தேன். கணத்துக்குக் கணம் நான் இலேசாகிக்கொண்டே வந்து எனக்கு எடை, உருவமே இல்லை என்கிற அளவுக்கு விரிந்து, இன்னமும் விரிந்து கொண்டிருந்தேன். எல்லா ஒலிகளையும் கேட்க முடிந்த எனக்கு அவையெல்லாம் எங்கோ ஓர் அடித்தளத்தில் மட்டும் இயங்கிக்கொண்டிருந்ததாகத்தான் தோன்றியது. அப்போது தனியாக ஒரு ஒலி, அவையெல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று,
கேட்டது. அந்த நிலையில், அந்தத் தருணத்தில் அது பொருந்திப் போகவில்லை. மறுபடியும் அந்த சீறல் வந்தது. நான் நொடிப் பொழுதில் என்னைக் குறுக்கிக்கொண்டேன். ஒரு வருடப் பயிற்சியில் மன லயத்தில் நான் அடைந்திருந்த
தேர்ச்சி எனக்கு அப்போது வேண்டாததாக இருந்தது. அந்தச் சீறல் மீண்டும் கேட்டது. என் பக்கத்தில் இருந்த தடியைப் பற்றிய வண்ணம் சீறல் வந்த திசையில் பார்த்தேன். இரண்டு மின்மினிப் பூச்சிகள் பளிச்சிட்டன. என் கழியை வீசினேன். முதல் வீச்சில்
அந்த இரட்டை ஒளிப்பொறிகள் சிறிது அசைந்து மட்டும் கொடுத்தன. நான் என் கையை எட்டி மீண்டும் கழியை வீசினேன். அது எதன் மீதோ தாக்கிற்று. மயிர் குத்திடக்கூடிய ஊளையொலி கேட்டது. மறுகணம் அந்த ஓநாய் பின் வாங்கி ஓடிச் சென்றுவிட்டது.

என் குருதேவரின் பக்கம் பார்த்தேன். நான் வைத்திருந்த விறகுகள் அநேகமாக எல்லாம் எரிந்து அணையும் தறுவாயில் இருந்தன. நடு ராத்திரியைக் கடந்திருக்கக்கூடும். நான் தூங்கிப்போயிருந்திருக்கிறேன். தணலாக இருந்த
விறகுகள் கூட முக்காலுக்கு மேல் சாம்பலாகிப்போயிருந்தன. அதன் பிறகுதான் ஒரு ஓநாய் வந்திருக்கிறது. ஒரு சாண் அளவுக்கு மிஞ்சியிருந்த ஒரு கட்டைத் துண்டை ஊதி ஊதி ஜூவாலை எழச் செய்தேன். அதைக் கொண்டு என் குருதேவரைத் தலையிலிருந்து கால்வரை பார்த்தேன். அவர் படுத்திருந்த பையில் கால் பக்கத்தில் சிறிது கிழிந்திருந்தது. நான் ஓரிரு நிமிஷங்கள் தாமதித்திருந்தால்கூட அந்த ஓநாய் கம்பளப் பையை இன்னமும்
கிழித்து என் குருதேவரின் காலைக் கவ்வியிருக்கும்.

அந்தக் கட்டை அணைந்து புகைய மட்டும் செய்தது. நான் உறைந்த மண்ணெண்ணெயை ஒரு விரலில் எடுத்துத் தணல் மீது வைத்தேன். கட்டை பற்றிக்கொண்டு எரிந்தது. அதை என் குருதேவர் முகத்தருகே கொண்டுசென்று, ”ஐயா” என்று கூப்பிட்டேன். அவர் காதில் அது விழவில்லை. முன்பு வாயைத் திறந்து படுத்துக்கொண்டிருந்தவர் இப்போது வாயை
மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். நான் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அவருக்குத் தாகம் எடுத்திருக்கக் கூடும்; பசித்திருக்கக்கூடும். நான் “ஐயா”
என்று சொல்லி அவரைச் சிறிது அசைத்து எழுப்பினேன். அவர் அப்படியே இருந்தார். அவர் மூக்கருகே என் புறங்கையை வைத்துப் பார்த்தே. அடுத்தபடி என் காதை அப்படியே
அவர் மார்பு மீது அழுத்திக்கொண்டு கேட்டேன். அங்கு காது கேட்பதற்கு ஒன்றுமில்லை.

குருதேவரின் சாவு அதிர்ச்சியைத் தரவில்லை. அப்பழுக்கில்லாத தேக நிலை உடைய அவர் எப்போது நீர் விலகிக் கொண்டிருக்கும்போது கூடத் தன்னை நகர்த்திக்கொள்ள
இயலாத அசக்தி அடைந்திருந்தாரோ அப்போதே நான் எதற்கும் என் மனத்தைத் தயார் செய்துகொண்டிருந்தேன். என் யோக சாதனை விடுபட்டுவிடும். அவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மூன்றாண்டு காலத்திற்கும்
மேலாயிற்று. இனி இன்னொரு தகுதி வாய்ந்த குருவை அடைய எவ்வளவு ஆண்டுகள் பிடிக்குமோ தெரியாது. வேறு குரு கிடைப்பாரா என்பதே சந்தேகம். எனக்கு நிர்ணயம்
செய்யப்பட்டதற்கிணங்கத்தான் எனக்கு வாய்க்கும். ஹரிராம்புகூரை அடைவதற்குள் என்
குருதேவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே அப்போது என் பிரார்த்தனை. கடைசிச் சுவாசம் என்று தோன்றும்போது சிறிது பசும்பாலை வாயில் ஊற்ற வேண்டும் – இதை வெகு நாட்கள் முன்பே என் குருதேவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அன்று
அந்தப் பேச்சே பொருத்தமில்லாததாக இருந்தது. ‘என் போன்றவர்களை ஆறடி குழி
தோண்டிப் புதைக்க வேண்டும்’ என்று அவர் சொன்னதும் அபத்தமாகப்பட்டது. அன்று நான் பசும்பால் விடத் தவறிவிட்டேன். ஆறடி குழி தோண்டியாவது புதைக்க வேண்டும். அதற்கு
எப்படியும் இந்த மலைப்பாறையிடத்திலிருந்து சமவெளியருகில் இறங்கியாக வேண்டும். ஆறடி தோண்டி, வெறும் மண்ணை மட்டும் போட்டு மூடினால் போதாது. பெரிய பெரிய கற்களையும் போட வேண்டும். ஒரு ஓநாய் அவரை முகர்ந்துவிட்டது. அடுத்து, ஒரு
ஓநாய்ப்படை வருவதற்கு அதிக நேரம் பிடிக்காது.

அப்போது அரைகுறைச் சந்திரன் வந்துவிட்டான். நான் என் குருதேவரைப் போர்த்திருயிருந்த துணிகள், கம்பளப்பை முதலியவற்றை மெதுவாக உருவி எடுத்தேன்.
என் குருதேவரின் முகம் அற்புதமான அமைதியுடன் காணப்பட்டது. சுவாசத்திற்கும், இதயத் துடிப்பிற்கும் நான் தேடியிராவிட்டால் அவர் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார் என்று நினைக்கும்படியான தோற்றம். ஒரு பழந்துணியைக் கிழித்து அவருடைய கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டினேன். அதே போல் கைகள்
இரண்டையும் பிணைத்தேன். ஒற்றை வேஷ்டி கொண்டே அவரைத் தலை முதல் கால்வரை சுற்றி, கம்பளப் பைக்குள் நுழைத்து, பையின் வாயை இழுத்துக் கட்டினேன். மெதுவாகத் தணல்
எரியும்படி செய்துகொண்டு பொழுது விடிவதற்காகக் காத்திருந்தேன். முழங்கால்களுக்கிடையில் தலையைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். கிழக்கு வானத்தில் வெளிர்ச்சாயம் தோன்றுவதற்குள் என்னைச் சுற்றி இரண்டங்குல
உயரத்திற்குப் பனி உதிர்ந்திருந்தது. அந்த அரை வெளிச்சத்தில் நான் மீண்டும் என் குருதேவர் கிடந்த பலகையை இழுத்து நடக்க ஆரம்பித்தபோது பின்னால் ஒரு முறை பார்த்ததில் தூரத்தில் ஒரு உருவம் அசைவதை உணர முடிந்தது. நான் இரண்டாம் முறை
திரும்பிப் பார்த்தபோதும் அது அதே தூரத்தில் வந்துகொண்டிருந்தது. இம்முறை அந்த ஓநாய் முனகிற்று.

இறந்தவர்கள் எப்படி எடை கூடக்கூடும் என்று தெரியவில்லை. என் குருதேவரை, அவர் சுவாசம் இயங்கிக்கொண்டிருந்தபோதைவிட இப்போது இழுத்துப் போவது கடினமாகிக் கொண்டிருந்தது. காலையில் சற்று நேரத்திற்குத் தலையில் பனியிருந்தபோது பலகை என் பின்னால் வழுக்கிக்கொண்டு வந்தது. ஆனால், உச்சி வேலை நெருங்குவதற்குள் அங்கு பனியும் பெய்திருக்குமா என்று தோன்றுமளவுக்கு எல்லாம் உலர்ந்துவிட்டது. இப்போது
நான் இறங்குமுகமாக இருந்தேன். பல சமயங்களில் பலகையை இழுத்து வருவதற்குப் பதில் பின்னாலிருந்து தள்ளி நகர்த்தி வந்தேன். கனம் அதிகரித்துக்கொண்டே வந்த அந்தச் சுமை பள்ளத்தில் சரிந்து விழுந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டு போவது மிகவும்
சிரமமாக இருந்தது. முன்னிரவு என் குருதேவர் குடித்து மிஞ்சியிருந்த கஞ்சியைச் சாப்பிட்ட பிறகு நான் எதுவும் உண்ணாமலிருந்தபோதும் எனக்கு பசி எழவில்லை.
இடுப்பும், தோளும் மட்டுமே வலித்தன. நான் எங்கும் நிற்கவில்லை. மறுபடியும் இரவு வருவதற்குள் மலைப் பிரதேசத்தைக் கடந்து சமவெளியை அடைந்துவிட வேண்டும் என்ற ஒரே
நோக்கமாக இருந்தேன். என் மனத்திடத்திற்கு உடல்திடம் முடிந்தவரையில் ஈடுகொடுத்தது. ஆனால் அது போதவில்லை. நான் அடிமேல் அடி எடுத்து வைத்துத்தான் செல்ல முடிந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மலை நிழல் நீண்டுகொண்டு
போவதை உணர முடிந்தது. இன்னும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வெளிச்சம் இருந்தால் எனக்குப் போதும் ஆனால், எனக்கு அது கிடைக்கத் தவறவிட்டு மீண்டும் கள்ளிகளுக்காக அலைந்து திரட்டி வைப்பதும் அறிவற்றது. சற்றும் எதிர்பார்க்க முடியா வண்ணம் பல இடங்களில் பாறை வெடித்துப் பல நூறு அடிகளுக்குச் செங்குத்தாக
இறங்கியது. அந்தப் பிளவுகளின் அடியிலும் செடி கொடிகள் வளர்ந்து படர்ந்திருந்தன. அந்த ஒரு பகல் நேரப் பிரயாணத்திலேயே நான் அந்தப் பள்ளங்களில் தவறிப்போய் விழுந்த பல மிருகங்களின் சின்னங்கள் – அழுகி, உலர்ந்து, பூச்சி அரித்து, காற்றில் சிதறிப்போன சடலங்கள் – கிடப்பதைக் கண்டேன்.

அதிகரித்துவரும் உடல் சோர்வைக் குறைந்துவரும் வெளிச்சம் சரிக்கட்டி வந்தது. வெளிச்சம் இம்மியளவு குறைவதையும் என் உடல் முழுதாலும் என்னால் உணர முடிந்தது. என் உடல் யத்தனம் அதிகரித்தபோதிலும் என் பிரயாணத்தின் வேகம் வெகுவாக
அதிகரிக்கவில்லை. நடப்பதென்றில்லாமல் நகர்வதற்கே மிகுந்த பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் கண் முன்னால் ஆயிரக்கணக்கான பூச்சிகள் பறப்பதுபோலத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னமும் இரண்டு மணி நேரப் பிரயாணம்
இருந்தது. நிமிஷங்கள் செல்லச் செல்ல வெளிச்சம் மறைவதற்குள் நான் மலைப் பிரதேசத்தைக் கடந்துவிடுவேன் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னொரு இரவு பனி விழும் மலைகளுக்கிடையில் நான் தங்க வேண்டும். பகலில் என் கண்களுக்கு ஒன்றும் படவில்லை. ஆனால் அந்த உணர்வு என்னுடன் இருந்துகொண்டேயிருந்தது. அந்த ஓநாய் என்னுடைய ஒவ்வொரு அசைவையும் அறியும். அது வரும்போது தனியாக வராது.

கண்ணுக்கெட்டும் தூரத்தில் சமவெளி தெரிந்தது. ஆனால் அதை நம்பி நான் பிரயாணத்தைத் தொடர முடியாது. என் குருதேவரின் சடலம் கிடந்த பலகையை அப்படியே தழைத்துக் கீழே வைத்துவிட்டு மீண்டும் கள்ளிகலுக்காக அலைந்தேன். நேற்று கிடைத்த அளவு கிடைகக்வில்லை. நேற்றைவிட இன்று நான் ஒரு நாள் வயது கூடுதலானவன்; உடல் களைப்பும் பலஹீனமும் அதிகரித்தவன். கிடைத்ததை வைத்து நெருப்புப் பற்றவைத்தேன்.
நான்கே விறகுக் கட்டைகள் பாக்கியிருந்தன. ஒவ்வொன்றாகப் பற்ற வைத்துக்கொண்டு, தணலாக எரியும் விறகுடன் என் குருதேவரின் சடலத்தைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். இன்றும் நான் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே செங்குத்தாகப் பள்ளம் இறங்கியது. அங்கு ஓடையில்லை – அது எங்கோ வேறு திசையில்
சென்றுவிட்டது. இந்தப் பள்ளத்தின் அடியில் புதர்தான் மண்டியிருந்தது. நேற்றுப் பிரயாணத்தை நிறுத்தியபோது எனக்குப் பீதி எழவில்லை. என் குருதேவர் நேற்றும் உடலால் எனக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாதவர். அந்த விதத்தில் நேற்றும் நான்
தனியன்தான். ஆனால் நேற்று இல்லாத பீதி இன்று என் அறிவைச்
சுருக்கிக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையின் சாதனைகள், லட்சியங்கள், சிந்தனை அடிப்படைகள், ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஆவியாகப் பறந்துபோய், என் குருதேவரின் சடலத்தை முழுமையாகச் சமவெளியில் அடக்கம் செய்துவிட வேண்டும்
என்பதைத் தவிர வேறு இலக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தேன். இன்னொரு இரவுப் பனி உயிரற்ற சடலத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் என் பற்களிலும், எலும்புகளிலும்கூட இழையோடும் பீதியுடன் இருந்தேன். என் உடலெல்லாம் காதாகக்
கேட்டுக்கொண்டிருந்தேன். நன்றாக இருட்டிய பின் காற்றோசையோடு வேறொன்றும் கேட்க நான் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை. மெல்லிய சீறலுடன் பல ஜதை மின்மினிப்
பூச்சிகள் என்னை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.

நான் ஒரு கையில் கொள்ளிக்கட்டையையும், இன்னொன்றில் மூங்கில் கழியும் எடுத்துக் காத்திருந்தேன். அந்த இருட்டிலும் என் கண்கள் ஓரளவு பார்க்கத் தொடங்கிவிட்டன. ஓநாய்கள் கூட்டமாக வந்தாலும் பதினைந்து இருபது அடி தூரமிருக்கையில் பிரிந்து எங்களைச் சுற்றிவர ஆரம்பித்தன. ஒவ்வொன்றும் உறும
ஆரம்பித்து, சிறிது நடந்து, பின்வாங்கி, ஒருமுறை சீறி, முன்னேறி, பின்வாங்கி, எங்களைச் சுற்றியவண்ணம் இருந்தது. நிமிஷங்கள் யுகமாக நகர்ந்தன. ஓநாய்கள் எங்களைச் சுற்றும் வட்டத்தின் விட்டம் அங்குல அங்குலமாகக் குறைய ஆரம்பித்தது.
ஐந்தாறு ஓநாய்கள் முழு வளர்ச்சி பெற்றவை. அவையெல்லாம் வாலைப் பின்னங்கால்களுக்கிடையில் பொருத்தி வைத்துக்கொண்டு எங்களைச் சுற்றின. நான் என்
குருதேவரின் தலைப் பக்கமாக நின்று கொண்டு, நாற்புறமும் மாறி மாறி என் கொள்ளிக்கட்டையை ஆட்டியவண்ணம் இருந்தேன். பகலெல்லாம் ஓநாய்களைக் கண்ணெதிரே பாராமல், ஆனால் அவை எங்களைத் தாக்க எங்கோ தூரத்தில் பின்தொடர்ந்து வருகின்றன என்ற உணர்வே என்னைப் பெரும் பீதியில் விறைப்பாக இருக்கச் செய்தது. இப்போது அவற்றை நேரே கண்டவுடன் என் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. அந்நேரத்தில் எனக்குச்
சிந்தனைகளே அவ்வப்போது எழாமல் போவதையும் உணர்ந்தேன்.

நான் மிகவும் நிதானமாக என் கைகளை அசைத்துக்கொண்டிருந்தேன். ஓநாய்கள் எங்களை
இன்னமும் சுற்றிச் சுற்றி வந்தவண்ணமிருந்தன. நான் முதலில் தாக்க வேண்டும் என்று அவை காத்திருந்ததுபோலத் தோன்றிற்று. எனக்கும் அந்த ஓநாய்க் கூட்டத்துக்குமிடையே
எழுந்திருக்க ஒரு இக்கட்டு நிலையை இருவரும் தீவிரப்படுத்தாமல் இருந்தால் இரவின் எஞ்சிய நேரம் அப்படியே கழிந்துவிடும் என்றுகூடத் தோன்றிற்று. பகல் என்று ஏற்பட்டவுடன் ஓநாய்கள் பின்வாங்கிவிடக்கூடும்.

நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது. தாமாகவே
தங்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு நியதிக்கு அவை தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு அதிலிருந்து இம்மியளவு  பிறழத் தயாராக இல்லாதிருப்பதுபோல எங்களை வலம் வந்துகொண்டிருந்தன. எனக்கு அந்த ஓநாய்கள் மீது
பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று. அப்போது என் கையிலிருந்த கொள்ளிக் கட்டை சட்டென்று
அணைந்துவிட்டது. ஜூவாலை எழுப்ப அதை நான் வேகமாக வீசினேன். அப்போது, அந்த மலைப் பிரதேசமே மூச்சு விடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு ஸ்தம்பித்துக் கிடப்பதுபோலத் தோன்றிற்று. என் கைக்கட்டை முழுவதும் அணைந்துவிட்டது. அதைப் போட்டு விட்டுக் கீழே தணல் நுனிகளுடன் கிடந்த கட்டைகளில் ஒன்றைப் பொறுக்கி எடுக்க நான் தீயின் பக்கம் குனிந்தேன். ஒரு அரைக் கணம் ஓநாய்கள் உறுமுவதுகூட
நின்றுவிட்டது. அடுத்துப் பேரிரைச்சலுடன் பெரிய ஓநாயாக ஒன்று என் மேல் பாய்ந்தது. என் முகத்திற்கு நேரே பயங்கரமாக விரிந்துவந்த ஓநாயின் வாயில் என் கை விறகுக் கட்டையைத் திணித்தேன். அது ஊளையிட்டுக் கொண்டு பின் வாங்கிற்று. அந்த
நேரம் வேறு சில ஓநாய்கள் என் குருதேவரின் உடலைப் போர்த்தியிருந்த கம்பளப் பையைக் கடித்துக் கிழிக்க ஆரம்பித்தன.

அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில் சிதறுண்டுபோயின. என்னை ஒவ்வொரு ஓநாயாகத்தான் தாக்கின. ஆனால் உயிரற்றுக் கிடந்த
என் குருதேவரின் சடலத்தின் மீதே கூட்டமாகப் பாய்ந்தன. நான் என் மூங்கில் கழியைச் சக்கரமாகச் சுற்றினேன். ஒவ்வொரு முறை என் கழி எதையாவது தாக்கும்போது என் தோள் பட்டை விண்டுவிடுவது போல நான் எதிரடி உணர முடிந்தது.

இப்போது ஓநாய்கள் என் மீதும் இரண்டு மூன்றாகத் தாக்கின. அந்த நேரத்தில் எங்களுக்குள் இருளே நிலவாதது போல் இருந்தது. என் ரத்தமும் ஓநாய்களின் ரத்தமும் தீப்பற்றி வெடித்த வாணம் போல் எங்கள் மேலேயே சிதறி, சுற்றுப்புறமெல்லாம் சிதறி விழுந்தன.

ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கி, மீண்டும் பாய்ந்த வண்ணமிருந்தன. அப்போது இன்னொன்றையும் உணர்ந்தேன். என்
சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒலிகளை, உரத்த ஒலிகளை, நான் எழுப்பிக்கொண்டிருந்தேன். அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக
மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்.

ஆனால் அது நீடிக்க முடியவில்லை. ஓநாய்ப் படையின் பெரும்பகுதி அடிபட்டு, ஊனமுற்று ஓடிப்போய்விட்டது. மூன்றுதான் எஞ்சியிருந்தன. என் மேலங்கி பல இடங்களில் கிழிந்து ரத்தக் கறையோடு தொங்கிக் கொண்டிருந்தது. என் குருதேவரின்
சடலம் வைக்கப்பட்ட கம்பளப் பை எப்போதோ துண்டு துண்டுகளாக்கப்பட்டு விலகிக் கிடந்தது.

ஒரு ஓநாய் என் கழியின் வீச்சில் படாமல் என்னைப் பல திசைகளிலிருந்து தாக்கிக்கொண்டிருந்தது. நான் தழைய வீசினால் அது எகிறிக் குதித்தது. நான் மேலாக வீசினால் அது தலையைத் தரைமட்டத்துக்குத் தாழ்த்திக் கொண்டது. அதை ஒழித்துவிட
என் வெறியெல்லாம் சேமித்து நான் போரிட்டுக்கொண்டிருந்தேன். அது என்னுடைய ஒவ்வொரு அசைவையும் உணர்ந்ததாக இருந்தது. ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும் அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன். நான் இருந்த இடம், என் குருதேவரின் சடலம், மற்ற ஓநாய்கள் ஆகிய எல்லாவற்றையும் மறந்து அந்த ஒரு ஓநாயைத் துரத்தி ஓடினேன். அது பெரியதாக ஊளையிட்டுக்கொண்டே இருட்டில் ஓடி மறைந்தது. அது
ஊளையிடுவதாகக் கேட்கவில்லை. ஏதோ வெற்றி முரசு முழக்குவதுபோலச் சீறிவிட்டுத்தான் சென்றிருந்தது. மற்ற இரு ஓநாய்கள் என் குருதேவரின் சடலத்தைக் கவ்வி
இழுத்துக்கொண்டிருந்தன. “ஐயோ” என்று நான் அலறிக்கொண்டு அவைமீது பாய்ந்தேன். அதற்குள் என் குருதேவரின் சடலத்துடன் அவை பள்ளத்தில் விழுந்துவிட்டன. அதுவரை என் கண்ணுக்கு எல்லாமே வெட்ட வெளியாகத் தெரிந்தது தடைப்பட்டுவிட்டது. “ஐயோ, ஐயையோ!” என்று அலறிக்கொண்டு நான் பாய்ந்தேன். காலில் ஏதோ தடுக்கிற்று – என் குருதேவரை நான் கிடத்தி இழுத்து வந்த பலகையாகத் தான் இருக்க வேண்டும். நான் விழுந்தேன். நான் தரையை அணுகுவதற்குள் என் நினைவு நீங்கிவிட்டது.

நான் மீண்டும் விழித்துக்கொண்டபோது என் மீது லேசான பனிப்போர்வை இருந்தது. காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக என் கண்களைத் தாக்கின. அப்படியே படுத்திருந்தவன் ஒரு குலுக்கலுடன் எழுந்தேன். பஞ்சுபோலப் பனி சிதறிற்று. நான்
கிடந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த பள்ளத்தில் எட்டிப் பார்த்தேன். விளிம்பு ஓரமாக இறங்கி, ஓட்டமும் நடையுமாகப் பள்ளத்தின் அடியை அடைந்தேன். ஓநாய்கள் என் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. தலையையே
காணோம். உடலெல்லாம் இரத்தம் வெளிப்பட்டு உறைந்திருந்ததுபோல இருந்தது. கைக் கட்டை விரல்களைக் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது.

(1969)

ஆக்கம்: அசோகமித்ரன்

எப்பொழுதும் வாழும் சிறுகதைகள் 2: எஸ்தர்: வண்ணநிலவன்

முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா?

வீட்டில் பல நாட்களாக இதுதான் பேச்சு. எல்லாரும் தனித்தனியே திண்ணையில், குதிருக்குப் பக்கத்தில், மேல ஜன்னலுக்கு அருகே அந்த பழைய ஸ்டூலைப் போட்டுக் கொண்டு, பின்புறத்தில்,    புறவாசல் நடையில் என்று இருந்துகொண்டு ‘அவரவர்’ யோசித்ததையெல்லாம் சாப்பாட்டு வேளைகளில் கூடுகிறபோது பேசினார்கள். முன்னெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் எவ்வளவோ ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை கம்பும், கேப்பையும் கொண்டுதான் வீட்டுப் பெண்கள் சமையல் செய்கின்றனர். நெல்லோடு ஆனந்த வாழ்வும் போயிற்றா?

அப்படிச் சொல்லவுங்கூடாது. இன்னமும் சமையலின் பிரதான பங்கு எஸ்தர் சித்தியிடமே இருக்கிறது. சக்கை போன்ற இந்தக் கம்பையும் கேப்பையையும்தான் சித்தி எஸ்தர் என்னமாய் பரிமளிக்கப் பண்ணுகிறாள்? ஒரு விதத்தில் இத்தனை மோசமான நிலையிலும் சித்தி எஸ்தர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்னவாயிருக்கும்? யோசித்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. மூன்று பெண்களுக்கும் ஒரு பையனுக்கும் தந்தையான அகஸ்டின் கூட மாட்டுத் தொழுவத்தில் பனங்கட்டை உத்திரத்தில் இடுப்பு வேட்டியை அவிழ்த்து முடிச்சுப் போட்டு நாண்டு கொண்டு நின்று செத்துப் போயிருப்பான்.

மூன்று பேருக்குமே கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளுடன்தான் இருக்கிறார்கள். அகஸ்டின் தான் மூத்தவன், எதிலும் இவனை நம்பி எதுவும் செய்ய முடியாது. அமைதியானவன் போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூர அப்படியல்ல அவன். சதா சஞ்சலப்பட்டவன். இரண்டாவது தான் டேவிட். இவன் மனைவி பெயரும் அகஸ்டினுடைய மனைவி பெயரும் ஒரே பெயரை வாய்த்து விட்டது. பெரியவன் மனைவியை பெரிய அமலம் என்றும், சின்னவன் மனைவியை சின்ன அமலம் என்றும் கூப்பிட்டு வந்தார்கள். சின்னவனுக்கு இரண்டு பேருமே ஆண்பிள்ளைகள். இது தவிர இவர்களின் தகப்பனார் மரியதாஸுடைய ஒன்று விட்ட தங்கச்சி தான் எஸ்தர். மரியதாஸ் சாகிறதுக்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பே எஸ்தர் சித்தி இந்த வீட்டுக்கு வந்து விட்டாள். புருஷனுடன் வாழப் பிடிக்காமல் தான் வந்தாள் என்று எஸ்தரை கொஞ்ச காலம் ஊரெல்லாம் நைச்சியமாகப் பேசியது, இப்போது பழைய கதையாகி விட்டது. எஸ்தர் சித்தி எல்லாருக்கும் என்ன தந்தாள் என்று சொல்ல முடியாது. அகஸ்டினுக்கும், டேவிட்டுக்கும் அழகிய மனைவியர்கள் இருந்தும் கூட எஸ்தர் சித்தியிடம் காட்டின பாசத்தை அந்த பேதைப் பெண்களிடம் காட்டினார்களா என்பது சந்தேகமே.

எஸ்தர் சித்தி குட்டையானவள். நீண்ட காலமாகப் புருஷ சுகத்தைத் தேடாமல் இருந்ததாலோ என்னவோ உடம்பெல்லாம் பார்க்கிறவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிற விதமாய் இறுகி கெட்டித்துப் போயிருந்தது. இதற்கு அவள் செய்கிற காட்டு வேலைகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நல்லா கருப்பானதும், இடையிடையே இப்போது தான் நரைக்க ஆரம்பித்திருந்த நரை முடிகள் சிலவுமாக சுருட்டை முடிகள். உள்பாடி அணிகிற வழக்கமில்லை. அதுவே மார்பகத்தை இன்னும் அழகானதாகப் பண்ணியது.

சித்திக்கு எப்போதும் ஓயாத வேலை. சேலை முந்தானை கரண்டைக் கால்களுக்கு மேல் பூனை முடிகள் தெரிய எப்போதும் ஏற்றிச் செருகப்பட்டே இருக்கும். சித்திக்குத் தந்திர உபாயங்களோ நிர்வாகத்துக்குத் தேவையான முரட்டு குணங்களோ கொஞ்சங்கூடக் தெரியாது. இருப்பினும் சித்தி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. அவ்வளவு பெரிய குடும்பத்தை மரியதாசுக்குப்பின் நிர்வகித்து வருகிறதென்றால் எத்தனை பெரிய காரியம். இத்தனை ஏக்கர் நிலத்துக்கு இவ்வளவு தானியம் விதைக்க வேண்டும் என்கிற கணக்கெல்லாம் பிள்ளைகளே போடுகிற கணக்கு. ஆனால் வீட்டு வேலைகளானாலும், காட்டு வேலைகளானாலும் சுணக்கமில்லாமல் செய்ய வேண்டுமே. வேலை பார்க்கிறவர்களை உருட்டி மிரட்டி வேலை வாங்கிக் காரியம் செய்வதெப்படி? சித்தி உருட்டல் மிரட்டல் எல்லாம் என்னவென்றே அறியாத பெண்.

விதைக்கின்ற சமையமாகட்டும் தண்ணீர் பாய்ச்சுகின்ற நேரமாகட்டும் காலையிலோ, மதியமோ அல்லது சாயந்திரமோ ஒரே ஒரு பொழுது வீட்டுக் காரியங்கள் போக ஒழிந்த நேரத்தில் காட்டுக்குப் போய் வருவாள். அதுவும் ஒரு பேருக்குப் போய்விட்டு வருகிறது போலத்தான் இருக்கும். ஆனால் வேலைகள் எல்லாம் தானே மந்திரத்தால் கட்டுண்டது போல் நடைபெற்று விடும். சாயங்காலம் காட்டுக்குப் போனாள் என்றால் இவள் வருகிறதுக்காக பயபக்தியுடன் எல்லாவற்றையும் குற்றம் சொல்ல முடியாதபடி செய்து வைப்பார்கள். வீடே சித்திக்காக இயங்கியது. வேலைக்காரர்களும், அந்த ஊருமே சித்திக்குக் கட்டுப்பட்டு இயங்கினது.

அந்த இரண்டு பெண்களுமே அபூர்வமான பிறவிகள். மூத்தவள் ஒரு பெரிய குடும்பத்தில் முதல் பெண்ணாகப் பிறந்தவள். அவள் தான் பள்ளிநாட்களிலும் சரி, ஐந்தாவது வகுப்பை தான் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் முடிக்கும் முன்பே ருதுவாகி வீட்டில் இருந்த ஆறேழு வருஷமும் சரி, இப்போது இந்த வீட்டின் மூத்த அகஸ்டினுக்கு வந்து மனைவியாக வாய்த்து அவனுக்கு மூன்று பெண்களும், ஒரு ஆண் மாகவும் பெற்றுக் கொடுத்த பின்பும் கூட அவள் பேசின வார்த்தைகளை கூடவே இருந்து கணக்கிட்டிருந்தால் சொல்லிவிடலாம். ஒரு சில நூறு வார்த்தைகளாவது தன்னுடைய இருபத்தியெட்டு பிராயத்துக்குள் பேசியிருப்பாளா என்பது சந்தேகம். மிகவும் அப்பிராணி பெரிய அமலம். சித்தி அவளுக்கொரு விதத்தில் அத்தை முறையும், இன்னொரு சுற்று உறவின் வழியில் அக்கா முறையும் கூட வேண்டும். எஸ்தர் சொன்ன சிறு சிறு வேலைகளை மனங்கோணமல் செய்வதும், கணவன், குழந்தைகளுடைய துணிமணிகளை வாய்க்காலுக்கு எடுத்துச் சென்று சோப்புப் போட்டும் வெயிலில் காயப் போட்டு உலர்த்தியும் எடுத்து, நான்கு மடித்து வைப்பதுமே இவள் வாழ்க்கையின் முக்கியமான அலுவல்கள் எனலாம். தனக்கென எதையும் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையும் யாரிடமாவது கேட்டு வாங்கிப் பெற வேண்டுமென்ற நியாயத்தையும் அறவே அறியாதவள்.

சின்ன அமலம் எதிரிடையான குணமுடைய ஸ்த்ரீ. உள் பாவாடைக்கு லேஸ் பின்னலும், பாடீஸ்களை விதவிதமான எம்ப்ராய்டரி பின்னல்களாலும் அலங்கரித்துக் கொள்ள ஆசைப்பட்ட பெண். பெரியவளைவிட வசதிக் குறைவான இடத்திலிருந்தே வந்திருந்தாள் எனினும் இங்கே வந்தபின் தன் தேவைகளையும் புற அலங்காரங்களையும் அதிகம் பெருக்கிக் கொண்டவள், எல்லோரும் கீழேயே படுப்பார்கள். மச்சு இருக்கிறது. ஓலைப்பரை வீட்டுக்கு ஏற்ற தாழ்வான மச்சு அது வெறும் மண் தரை தான் என்றாலும் குழந்தைகளையெல்லாம் கீழே படுத்து உறங்கப் பண்ணிவிட்டு மூங்கில் மரத்தாலான ஏணிப்படிகள் கீச்சிட ஏறிப்போய் புருஷனோடு மச்சில் படுத்து உறங்கவே ஆசைப்படுவாள், பாட்டிக்கு சரியான கண் பார்வையும் நடமாட்டமும் இருந்த போது சின்னவளை வேசி என்று திட்டுவாள், தன் புருஷன் தவிர அந்நிய புருஷனிடம் சம்பாஷிப்பதி ல் கொஞ்சம் விருப்பமுடைய பெண்தான், ஆனால் எவ்விதத்திலும் நடத்தை தவறாதவள்.

இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது? சாத்தாங்கோயில் விளையிலும், திட்டிவிளையிலும் மாட்டைவிட்டு அழித்த பிற்பாடும் இங்கே என்ன இருக்கிறது?

பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள். மேலத் தெருவில் ஆளே கிடையாது என்று நேற்று ஈசாக்கு வந்து அவர்களுக்குச் சொன்னான். ஊர் சிறிய ஊர் தானென்றாலும் இரண்டு கடைகள் இருந்தன. வியாபாரமே அற்றுப்போய்க் கடைகள் இரண்டையும் மூடியாகிவிட்டது. வீட்டில் இருக்கிற நெருப்புப் பெட்டி ஒன்றே ஒன்றுதான். கேப்பை கொஞ்சம் இருக்கிறது. சில நாட்களுக்கு வரும். கம்பும் கூட இருக்கிறது. ஆனால் நெருப்பு பெட்டி ஒன்றே ஒன்று இருந்தால் எத்தனை நாளைக்குக் காப்பாற்ற முடியும்.

அநியாயமாகப் பீடி குடிக்கிறதுக்காகவென்று எஸ்தர் சித்திக்குத் தெரியாமல் டேவிட் நேற்று ஒரு குச்சியைக் கிழிக்கிற சத்தத்தை எப்படி ஒளிக்க முடியும். இத்தனைக்கும் அவன் சத்தம் கேட்கக் கூடாதென்று மெதுவாகத்தான் பெட்டியில் குச்சியை உரசினான். எஸ்தர் சித்தி மாட்டுத் தொழுவத்தில் நின்றிருந்தாள். வழக்கத்தைவிட அதிக முன் ஜாக்கிரதையாக நெருப்புக் குச்சியை உரசியதால் சத்தமும் குறைவாகவே கேட்டது. இருந்தும் எஸ்தர் சித்தியின் காதில் விழுந்து விட்டது. மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தவள் அப்படியே ஓடி வந்து விட்டாள். பதற்றத்துடன் வந்தாள். அடுப்படியில் நெருப்பு ஜ்வாலை முகமெங்கும் விழுந்து கொண்டிருக்க பீடியை பற்ற வைத்துக் கொண்டிருந்தான் டெவிட்.

சித்தி அவனைக் கேட்டிருந்தால், ஏதாகிலும் பேசியிருந்தால் மனசுக்குச் சமாதானமாகப் போயிருக்கும். இவனுக்கும் ஒன்றும் பேசத் தோணவில்லை. வெறுமனே ஒருவர் முகத்தை ஒருவர் ஒரு சிறிது பார்த்துக் கொண்டிருந்ததோடு சரி. வெறுமனே ஒன்றும் பேசாமல் தான் பார்த்துக் கொண்டார்கள். அது பேச்சை விடக் கொடுமையானதாக இருந்தது. முக்கியமாக டேவிட்டை மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கிற்று. எஸ்தர் சித்தியிடம் இருந்த தயையும், அன்பும் அப்போது எங்கே போயின? இத்தனை காலமும் சித்தியின் நன்மதிப்பிற்கும் அன்பிற்கும் பாத்திரமான அவன் இந்த ஒரு காரியத்தின் காரணமாக எவ்வளவு தாழ்ந்து இறங்கிப் போய்விட்டான். அந்த பீடியை முழுவதுமாகக் குடிக்க முடியவில்லை அவனால். ஜன்னலுக்கு வெளியே தூர எறிந்து விட்டான்.

அன்றைக்கு ராத்திரி கூழ் தான் தயாராகிக் இருந்தது. அந்தக் கூழுக்கும் மேலும் வீட்டுச் செலவுகளுக்கும் வர வரத் தண்ணீர் கிடைத்து வருவது அருகி விட்டது. ரயில் போகிற நேரம் பார்த்து எந்த வேலை இருந்தாலும் சித்தியும் ஈசாக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக வேண்டி வந்தது. அந்த என்ஜின் டிரைவரிடம் தான் தண்ணீருக்காக எவ்வளவு கெஞ்ச வேண்டியிருக்கிறது? எஸ்தர் சித்தியிடம் பேசுகிற சாக்கில் டிரைவர்கள் கொஞ்ச நேரம் வாயாடிவிட்டுக் கடைசியில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். ஊரில் ஜனங்கள் இருந்தபோது இதற்கு போட்டியெ இருந்தது.ஊரை விட்டு எல்லோரும் போனதில் இதுவொரு லாபம். நான்கைந்து பேரைத் தவிர வேறு போட்டிக்கு ஆள் கிடையாது..

அன்று இரவு எல்லோரும் அரைகுறையாகச் சாப்பிட்டுப் படுத்து விட்டார்கள். சின்ன அமலம் எப்போதோ மச்சில் போய் படுத்துக் கொண்டாள். டேவிட் வெகுநேரம் வரை திண்ணையில் இருந்து கொண்டிருந்தான். எஸ்தர் சித்தி அவனை எவ்வளவோ தடவை சாப்பிடக் கூப்பிட்டாள். எல்லோரையும் சாப்பாடு பண்ணி அனுப்பிவிட்டு அவனிடத்தில் வந்து முடிகளடர்ந்த அவன் கையைப் பிடித்துத் தூக்கி அவனை எழுந்திருக்க வைத்தாள். அவனை, பின்னால் அடுப்படிக்குக் கூட்டிக் கொண்டு போய் தட்டுக்கு முன்னால் உட்கார வைத்தாள். தலையக் குனிந்தவாறே சாப்பிட மனமில்லாதவனாயிருந்தான், சித்தி டேவிட்டுடைய நாடியைத் தொட்டு தூக்கி நிறுத்தி, “ஏய் சாப்பிடுடே. ஒங் கோவமெல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். அப்படியே டேவிட், சித்தியின் ஸ்தனங்கள் அழுந்த அவளுடைய பரந்த தோளில் சாய்ந்து முகத்தைப் புதைத்துக் கொண்டான். சித்தி அவன் முதுகைச் சுற்றியணத்து அவனைத் தேற்றினாள். டேவிட் லேசாக அழுதான். சித்தியும் அவனைத் பார்த்து விசும்பினாள். இருவருமே அந்த நிலையையும், அழுகையையும் விரும்பினார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு இதுவரை இல்லாத அபூர்வமான கருணையும், பிரேமையும் சுரந்தது. டேவிட் அழுத்தில் நியாயமிருந்தது, ஆனால் சித்தியும் அழுதாளே! அவள், தான் டேவிட்டிடம் தான் கடுமையாக நடந்து கொண்டதுக்காக வருத்தப்பட்டுதான் இவ்விதம் அழுகிறாளா? ஆனால் விஷயத்தைச் சொல்ல வேண்டும். எஸ்தருக்கு அவள் புருஷன் லாரன்ஸுடைய ஞாபகம் வந்தது. லாரன்ஸும், அவனைப் பற்றிய ஞாபகங்களும் இப்போது எல்லோருக்கும் மிகப் பழைய விஷயம். யாருக்கும் இப்போது லாரன்ஸின் முகம் கூட நினைவில் இல்லை. அவ்வளவாய் அவன் காரியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. இரண்டு பேருக்குமே அப்போது அதை விடவும் உயர்வான காரியம் ஒன்றுமில்லை அந்நேரத்தில்.

அன்று இரவு டேவிட் மச்சில் படுத்து நன்றாக நிம்மதியுடன் உறங்கினான். ஆனால் எஸ்தர் சித்தி உறங்கவில்லை. டேவிட் சாப்பிட்ட வெண்கலத் தாலத்தைக் கூட கழுவியெடுத்து வைக்கவில்லை. வெகுநேரம்வரை தனியே உட்கார்ந்து பல பழைய நாட்களைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தாள். பின்னர் எப்போதோ படுத்துறங்கினாள்.

ரயில் தண்டவாளத்தில் என்ன இருக்கிறது? அவள் இந்த வீட்டின் மூத்த மருமகளாய் வலம் வந்த காலம் முதல் அவளுக்குக் கிடைக்கிற ஓய்வான நேரங்களிலெல்லாம் புறவாசலில் இருந்து கொண்டு இந்தத் தண்டவாளத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் தண்டவாளம் போடப்பட்டிருந்த இடத்திலேயே அப்படியேதானிருக்கிறது. அந்த தண்டவாளம் அவளுக்குப் புதுசாக எந்தவிதமான செய்தியையும் அறிவித்துவிடவில்லை. சில சமயங்களில் அந்த தண்டவாளத்தின் மீதேறி ஆடுகள் மந்தையாகக் கடந்து போகும். அதிலும் குள்ளமான செம்மறியாடுகள் தண்டவாளத்தைக் கடக்கிறதைவிட வெள்ளாடுகள் போகிறதையே அவளுக்குப் பிடித்திருக்கிறது. இரண்டுமே ஆட்டினம் தான். அவளுடைய வீட்டில் வெள்ளாட்டு மந்தை ஒன்று இருந்தது. இதற்காகத்தான் அவள் வெள்ளாடுகளை விரும்பினவளாக இருக்கும். இப்போது அது போல் ஒரு வெள்ளாட்டு மந்தை அந்தத் தண்டவாளத்தைக் கடந்து மறுபுறம் போகாதா என்று இருந்தது. இப்போது ஊரில் மந்தை தான் ஏது? மந்தை இருந்த வீடுகள் எல்லாமே காலியாகக் கிடக்கின்றன.

சும்மா கிடக்கிற தண்டவாள்த்தைப் பார்க்கப் பார்க்கத் தாங்க முடியாத கஷ்டத்தில் மனது தவித்தது, இப்படிக் கஷ்டப்படுவதைவிட அவள் உள்ளே போய் இருக்கலாம். பள்ளிக்கூடத்தை மூடி விட்டபடியால் குழந்தைகள் எல்லாம் திண்ணையில் பாட்டியின் பக்கத்தில் கூடியிருந்து விளையாடிக்கொண்டிருக்கின்றன. அங்கு போய் கொஞ்ச நேரம் இருக்கலாம். ஆனால் அதில் அவளுக்கு இஷ்டமில்லை. ஒரு விததில் இவ்விதமான அளவற்ற கஷ்டத்தை அனுபவிப்பதை அவள் உள்ளூர விரும்பினாள் என்றே சொல்ல வேண்டும். இவ்விதம் மன்சைக் கஷ்டப்பட வைப்பது ஏதொவொரு வினோதமான சந்தோஷத்தை தந்தது.

முன்னாலுள்ள மாட்டுத்தொழுவத்தில் மாடுகள் இல்லை. இவ்வளவு கஷ்டதிலும் மாடுகளைக் காப்பாற்ற வேண்டிய துரதிருஷ்டம். இத்தனை நாளும் உழைத்த அந்த வாயில்லா ஜீவன்களையும் எங்கேயென்று விரட்டி விட முடியும்? ஈசாக்குதான் தண்ணீர் கூடக் கிடையாத சாத்தாங் கோயில் விளைக்கு காய்ந்து போன புல்லையும் பயிர்களையும் மேய்கிறதுக்குக் கொண்டு போயிருக்கிறான். ஈசாக்கு மட்டும் இல்லையென்றால் மாடுகள் என்ன கதியை அடைந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அத்தையையும் ஈசாக்கையும் ஊரில் விட்டுவிட்டுப் போக வேண்டுமாமே? இது எப்படி?

இவள் அத்தை இவளிடம் அதிகம் பேசினதே கிடையாது. இதற்கு, இவள் பெரிய அமலமும் ஒரு காரணமாக இருக்ககும். யாரிடம்தான் அதிகம் பேசினாள்? அத்தையிடம் ஆழமான பணிவு உண்டு. இதைக் கற்றுத்தந்தது அம்மா என்றுதான் சொல்ல வேண்டும். அம்மா, அப்பாவுடைய அம்மாவும் இவளுக்கு ஆச்சியுமான ஆலிஸ் ஆச்சியிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டதை சிறுவயது முதலே பார்த்திருக்கிறாள். எவ்வளவோ விஷயங்கள். ஆச்சிக்கும் அம்மாவுக்கும் இடையெ நடந்த எதிர்ப்போ, சிணுங்கலோ இல்லாத அமைதியும், அன்பும் நிரம்பிய சந்தோஷமான பேச்சுக்களை இவள் நேரில் அறிவாள். எல்லாம் நேற்றோ முன்தினமோ நடந்தது போல் மனசில் இருக்கிறது.

ஆச்சிக்கு வியாதி என்று வந்து படுத்துவிட்டால் அம்மாவின் குடும்ப ஜெபத்தின் பெரும் பகுதியும் ஆச்சிக்கு வியாதி சொஸ்தப்படவேண்டும் என்றே வேண்டுதல்கள் இருக்கும், அம்மா படிக்காத பெண். அம்மாவின் ஜெபம் நினைக்க நினைக்க எல்லோருக்கும் அமைதியைத் தருவது. அந்த ஜெபத்தை அம்மாவுக்கு யார் சொல்லித் தந்தார்கள் என்று தெரியவில்லை. அம்மாவே யோசித்து கற்றுக்கொண்டது அந்த ஜெபம். சின்னஞ்சிறிய வார்த்தைகள். பெரும்பாலும் வீட்டில் அன்றாடம் புழங்குகிற வார்த்தைகள். தினந்தோறும் அம்மா ஜெபம் செய்யமாட்டாள். ஜெபம் செய்கிற நேரம் எப்போது வரும் என்று இருக்கும். படிக்காத பெண்ணின் ஜெபம் அதனால் தான் பொய்யாகப் பண்ணத் தெரியவில்லை என்று மாமா அடிக்கடி சொல்லுவார்.

அம்மா தன் அத்தையை கனம் பண்ணினாள். பெரிய அமலதிற்கும் இது அம்மாவின் வழியாகக் கிடைத்தது. அம்மாவைப் போலவே குடும்பத்தில் எல்லோரிடமும் பிரியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ளூரப் பேராசை வைத்திருந்த பெண் அமலம்.

அமலம் என்று நேசிக்கிற ஒரே ஓர் உயரமான ஆள் அவளூரில் இருக்கிறான். அவளூருக்கு கீழ்மேலாய் ஓடுகிற வாய்க்கால் உண்டு. வாய்க்காலிலிருந்து தான் ஊர் ஆரம்பமாகிறது, வாய்க்காலுக்கு அப்பாலும் கார் போகிற ரோடு வரை வெறும் தரையாக முட்செடிகள் அடர்ந்து கிடக்கிறது. வாய்க்காலுக்கு அப்பால் ஏன் ஊர் வளரக் கூடாது என்று தெரியவில்லை. வாய்க்காலுக்கு அப்பால் ரோடு வரை ஊர் வளர யாருக்கும் விருப்பமில்லை. வாய்க்காலிலிருந்தே ஒவ்வொரு தெருக்களும் ஆரம்பமாகி முடிகின்றன. அமலத்துடைய வீடு இருக்கின்ற தெருவுக்குப் பெயர் கோயில் தெருவு. வெறும் சொரி மணல் உள்ள தெருவு அது. அமலத்து வீட்டுக்கு வடக்கு வீடு நீலமான வீடு. இளநீல வர்ணத்தில் வீட்டின் சுவர்கள் இருக்கும். இந்த வீட்டில் தான் அமலமும் நேசித்து, பேசிச் சிரிக்கிறவன் இருந்தான். அவனை அமலமும் விரும்பினது வெறும் பேச்சிக்காக மட்டும் இல்லை. அவன் இங்கேயும் எப்போதாவது வருவான். ஏன் வந்தான் என்று சொல்ல முடியாது. வந்தவன் ஒரு தடவை கூட உட்காரக் கூட இல்லை. ஏன் வந்துவிட்டு ஓடுகிறானென்று யாரும் காரணம் சொல்ல முடியாது. அமலமாவது அறிவாளா? இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறவன் உட்காரக் கூட விருப்பமின்றி திரும்பிப் போகிறானே? இதெல்லாம் யார் அறியக் கூடும்? அமலத்துக்குத் தெரியாமல் இருக்குமா?

இவ்வளவு மிருதுவான பெண்ணுக்கு எல்லாம் இருக்கிற வீட்டில் என்ன கஷ்டம் வந்தது? வீட்டில் யாரோடும் இணையாமல் தனியே இருந்து என்ன தேடுகிறாள்? யாரிடமும் சொல்லாத அவள் விருப்பமும், அவள் துக்கமும் தான் எவ்வளவு வினோதமானது? அமலத்தின் மனசை அவள் புருஷனும் இவளுக்குக் கொழுந்தனுமான டேவிட்டும் கூட அறியவில்லை.

ஈசாக் காட்டிலிருந்து திரும்புகிற நேரமாகி விட்டது ஈசாக்குக்கு இப்போது காட்டில் எந்த வேலையும் இல்லை. அவனுடைய உலகம் காடு என்பதை எஸ்தர் சித்தி மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்து வெயிலும், வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பி வந்தாள். காட்டைப் பார்க்காமல் இருந்தால் ஈசாக் செத்தே போவான் போல அவன் காட்டைப் பற்றிப் பேசாத நேரமே இல்லை, காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும், இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சலங்கைச் சத்தமும் கண் முன்னாலேயெ கொஞ்ச காலமாய் மறைந்து விட்டன.

ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்த காட்டுக்குள் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக்கு சொல்கிறான். வெயிலின் நிறங்களை ஈசாக்கு நன்றாக அறிவான். “மஞ்சள் வெயில் அடித்தால் நாளை மழை வரும்” என்று அவன் சொன்னால் மழை வரும். கோடை காலத்து வெயிலின் நிறமும், மழைகாலத்து வெயிலின் நிறமும் பற்றி ஈசாக்குத் தெரியாத விஷயமில்லை. ஈசாக்க்கு விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும், ஆடுமாடுகளுக்காகவும் மட்டுமே உலகத்தில் வாழ்ந்து வந்தான். ஆனாலும் ஈசாக்குப் பிரியமான விளைகள் எல்லாம் மறைந்து கொண்டிருந்தன. கடைசியாக திட்டி விளையில் மாட்டைவிட்டு அழிக்கப்போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போனான். எவ்வளவு அழுதான் அன்றைக்கு? இத்தனைக்கும் அவன் பேரில் தப்பு ஒன்றுமில்லை. தண்ணீரே இல்லாமல் தானே வெயிலில் காய்ந்து போன பயிர்களை அழிக்கத்தானே அவனைப் போகச்சொன்னாள் எஸ்தர் சித்தி. காய்ந்து போன பயிர்களை அழிக்கிறதென்றால் அவனுக்கு என்ன நஷ்டம்? ஆனாலும் கூட ஈசாக்கு எவ்வளவாய் அழுதான். அவன் நிலம் கூட இல்லை தான் அது.

இவ்வளவு அக்கினியை மேலேயிருந்து கொட்டுகிறது யார்? தண்ணீரும் இல்லாமல், சாப்பிடத் தேவையான உணவு பொருட்களும் கூட இல்லாத நாட்களில் பகல் நேரத்தை இரவு ஏழு மணி வரை அதிகப்படுத்தினது யார்? காற்று கூட ஒளிந்து கொள்ள இடம் தேடிக் கொண்டது. பகலில் அளவில்லாத வெளிச்சமும் இரவில் பார்த்தாலோ மூச்சைத் திணற வைக்கிற இருட்டும் கூடியிருந்தது.

எஸ்தர் சித்தி ஒருநாள் இரவு, ஹரிக்கேன் லைட்டின் முன்னால் எல்லோரும் உட்கார்ந்திருந்த போது சொன்னாள் “இந்த மாதிரி மையிருட்டு இருக்கவே கூடாது, இது ஏன் இம்புட்டு இருட்டாப் போகுதுன்னே தெரியல இது கெடுதிக்குத்தான்”. நல்லவேளையாக இந்த விஷயத்தை சித்தி சொன்ன போது குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாகப் படுத்து உறங்கியிருந்தனர். சின்ன அமலத்துடைய கைக்குழந்தை மட்டும் பால் குடிக்கிறதுக்காக விழித்திருந்தது. சித்தி கூறிய விஷயத்தை உணர முடியாத அந்தக் குழந்தைகள் அதிருஷ்டசாலிகள். இது நடந்து கூட பல மாதங்கள் ஆகி விட்டது.

இப்போது இந்த இராவிருட்டு மேலும் பெருகி விட்டது. நிலாக்காலத்தில் கூட இந்த மோசமான இருட்டு அழியவில்லை. ஊரில் ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் போய்விட்டது, இருட்டை மேலும் அதிகமாக்கிவிட்டது. வீடுகளில் ஆட்கள் இருந்தால், வீடுகள் அடைத்துக் கிடந்தாலும் திற்ந்து கிடந்தாலும் வெளிச்சம் தெருவில் வந்து கசிந்து கிடக்காமல் போகாது. எவ்வளவு அமாவாசை இருட்டாக இருந்தாலும் வீடுகளிலிருந்து கேட்கிற பேச்சு சத்தங்களும், நடமாட்டமும் இருட்டை அழித்து விடும். இருட்டை அழிப்பது இது போல ஒரு சிறிய விஷயமே. இருட்டை போக்கினது பஞ்சாயத்து போர்டில் நிறுத்தியிருந்த விளக்குத் தூண்களோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை வீசுகிற நிலா வெளிச்சமோ இல்லை. இருட்டை அழித்தது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சுக்குரல்களும் நடமாட்டங்களுமே. எல்லா வீடுகளிலிலும் வெளிச்சமே இல்லாமல், விளக்குகளை எல்லாம் பறித்துக் கொண்டிருத்தாலும் கூட வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிற சிறு விஷயமே இருட்டை விரட்டப் போதுமானதாக இருந்தது. இருட்டு எப்போதும் எஸ்தர் குடும்பத்துக்கு துயரம் தருவதாகவே இருந்தது இல்லை. இப்போது இருட்டு தருகிற துக்கத்தை வெயிலின் கொடுமையைப் போல் தாங்க முடியவில்லை.

வெயில், புழுக்கமும் எரிச்சலும் அளித்தது. வெயில் பகலின் துயரங்களை அதிகப்படுத்தியது. இருட்டோ வெயிலைப் போல எரிச்சலைத் தராமல் போனாலும் இன்னொரு காரியத்தைச் செய்தது. அதுதான் பயம். வெறும் இருட்டைக் கண்டு குழந்தைகள் பயப்படுகிறது போலப் பயமில்லை. யாரும் ஊரில் இல்லை என்பதை, உறங்கக் கூட விடாமல் நடைவாசலுக்கு வெளியே நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தது இருட்டு.

இருட்டு கரிய பொருள், உயிரில்லாதது போல் தான் இத்தனை வருஷமும் இருந்தது. இந்தத் தடவை உயிர் பெற்றுவிட்டது வினோதம் தான். எஸ்தர் சித்தி வீட்டுக்கு வெளியே நின்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அது என்ன சொல்லுகிறது? இவ்வளவு கருப்பாக, முகமே இல்லாதது எவ்விதம் பயமுறுத்துகிறது? ஆனால் உண்மையாகவே இவ்விதமே இருட்டு நடந்து கொண்டது. தெளிவாகப் பேசமுடியாமல் இருக்கலாம். ஆனால் முணுமுணுக்கிறது என்னவென்று வீட்டிலுள்ள பெரியவர்களுக்குக் கேட்கிறது. முக்கியமாக விவேகமும், அதிகாரமும் நிரம்பிய எஸ்தர் சித்திக்கு அது முணுமுணுப்பது கேட்கிறது. இருட்டு சொன்னதைக் கேட்டு தைரியம் நிரம்பிய எஸ்தர் சித்தியே பயந்தாள். இனி மீள முடியாதென்பது உறுதியாகிவிட்டது. இருட்டின் வாசகங்கள் என்ன? மேலே ஓலைகளினால் கூரை வேயப்பட்டிருந்த வீடுதான் அது என்றாலும் பக்கத்துச் சுவர்கள் சுட்ட செங்கற்களினால் கட்டப்பட்டவை. சுவர்களுக்குச் சுண்ணாம்பினால் பூசியிருந்தார்கள். நல்ல உறுதியான சுவர்கள் தான். இருட்டு பிளக்க முடியாத சுவர்கள். நம்பிக்கைக்குறிய இந்தச் சுவர்களை கூடப் பிளந்து விடுமா? எஸ்தர் சித்தி பயந்தாள். இருட்டு சொன்னது கொடுமையானது.

நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறு வழியென்ன? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா? இதுதான் எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது. அது தினந்தோறும் இடைவிடாமல் முணுமுணுத்தது. பிடிவாதமும் உறுதியும் கூடிய முணுமுணுப்பு.

கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லோரும் தூங்கியான பிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக் கொண்டு வந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில் அவள் கண்களின் ஈரத்திற்குப் பின்னே அழிக்க முடியாத நம்பிக்கை இருக்கும். எவ்வளவோ வருஷங்களாகப் பார்த்துக்கொண்டே இருக்கிற கண்களுக்குள் இந்த நம்பிக்கை இருப்பது ஆச்சரியமே. கண்களுக்கு முதுமையே வராதா? இவ்வளவு தீவிரமாக நம்பிக்கை கொண்டு உறக்கமின்றி கூரையைப் பார்த்துக் கொண்டு கிடக்கிறவளை விட்டுவிட்டுப் போவது தவிர வழியென்ன? ஈசாக்கு துணையாக இருப்பானா? அவனுக்குத் தருவதற்க்குக் கூட ஒன்றும் கிடையாது. எதையும் எதிர்பாராமல் உழைத்தான் என்றாலும் வீட்டை நிர்வகித்து வருபவர்களுக்கு இதுவும் ஒரு கௌரவப் பிரச்சனைதான்.

கூரையில் பார்க்க என்னதான் இருக்கிறது? பயிர்களின் வளர்ச்சியைக் கூடவே இருந்து ஈசாக்கு அறிகிறது போல, கூரை ஓலைகளை வெயிலும், மழையும், காற்றும் முதுமையடையச் செய்து, இற்றுக் கொண்டிருப்பதை பாட்டி அறியாமலா இருப்பாள்? கூரையின் எந்தெந்த இடத்தில் ஓலைகள் எப்போது வெளுக்க ஆரம்பித்தன என்பது பாட்டிக்குத் தெரியும்.

அன்றைக்கு ராத்திரி மறுபடியும் எல்லோரும் கூடினார்கள். இருந்தது கொஞ்சம் போல கேப்பை மாவு மட்டிலுமே. காய்ந்து போன சில கறிவேப்பிலை இலைகளும் கொஞ்சம் எண்ணெயும் கூட வீட்டில் இருந்தது பெரும் ஆச்சரியமான விஷயம். கேப்பை மாவிலிருந்து எஸ்தர் களி போலவொரு பண்டம் கிளறியிருந்தாள்.

நெருப்புக்காக கஷ்டப்பட வேண்டியது வரவில்லை. காய்ந்த சுள்ளிகளை இதற்காகவே ஈசாக்கு தயார் செய்து கொண்டுவந்து போட்டிருந்தான். கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைத்த நாள் முதலாய் நெருப்பை அணையாமல் காத்து வருகிறார்கள். ஈசாக்கு மட்டும் காட்டிலிருந்து லேசான சுள்ளி விறகுகளைக் கொண்டு வந்து போடாமல் போயிருந்தால் இதுபோல நெருப்பைப் பாதுகாத்து வைத்திருக்க முடியாது. நெருப்பு இல்லாவிட்டால் என்ன காரியம் நடக்கும்?

இவ்வளவு விசுவாசமான ஊழியனை எவ்விதம் விட்டுவிட்டுப் போகமுடியும்? பயிர்களைப் பாதுகாத்து வந்தான். கால்நடைகளைப் போஷித்தான்.மழையிலும், புழுக்கத்திலும் புறவாசல் கயிற்றுக்கட்டிலே பொதுமென்று இருந்தான். பாட்டிக்காக ஈசாக்கை சாக விட முடியுமா? இவளே சோறு போட்டு வளர்த்து விட்டாள், இவளே மார்பில் முடிகள் படருகிறதையும், மீசை முடிகள் முளைக்கிறதையும் பார்த்து வளர்த்தாள். இரவில் எத்தனை நாள் கயிற்றுக் கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து ஓசைப்படாமல் நின்று கொண்டு, ஈசாக்கு கிடந்து உறங்குகிறதைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள்? ஈசாக்கிடம் என்ன இருக்கிறது? காட்டு வெயிலில் அலைந்து கறுத்த முரட்டுத் தோலினால் மூடப்பட்ட உடம்பு தவிர வேறே என்ன வைத்திருக்கிறான் ஈசாக்கு? புறவாசலில் மாட்டுத்தொழுவில் நின்று தன்னுடைய மோசமான வியர்வை நாற்றமடிக்கிற காக்கி டிரவுசரை மாற்றுகிறபோது எத்தனையோ தடவை சிறுவயது முதல் இன்றுவரையிலும் முழு அம்மணமாய் ஈசாக்கைப் பார்த்திருக்கிறாள்? இது தவிர அந்த முரடனிடம் ஈரப்பசையே இல்லாத கண்களில் ஒரு வேடிக்கையான பாவனை ஒளிந்து கொண்டிருக்கிறது. அது ஆடுகளையும், மாடுகளையும் பார்க்கிறபோது தெரிகிற பாவனையில்லை, நன்றாக முற்றி வளர்ந்த பயிர்களினூடே நடந்து போகிறபோது கண்களில் மினுமினுக்கிற ஒளியும் இல்லை. எல்லா விதங்களிலும் வேறென ஒரு ஒளியை எஸ்தரைப் பார்க்கிறபோது அவனுடைய கண்கள் வெளியிடுகின்றன.

யாருக்கும் பற்றாத சாப்பாட்டை தட்டுக்களில் பறிமாறினாள் எஸ்தர் சித்தி. சிறு குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு. சின்ன அமலம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். அது அவள் இயல்புதான்.

”நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போயி இரிங்க. புள்ளயளயுங் கூட்டிக்கிட்டுப் போங்க”, என்று பெரிய அமலத்தையும், சின்ன அமலத்தையும் பார்த்துக் கேட்டாள். இரண்டு பேரும் அதற்குப் பதிலே சொல்லக் கூடாது என்கிறது போல எஸ்தர் சித்தியின் குரல் இருந்தது. அவர்களும் பதிலே பேசவில்லை.

“நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க, மதுரையில போய் கொத்த வேல பாப்போம், மழை பெய்யந்தன்னியும் எங்ஙனயாவது காலத்தே ஓட்ட வேண்டியது தானே? ஈசாக்கும் வரட்டும்”

இதற்கும் அகஸ்டினும், டேவிட்டும் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து டேவிட் மட்டும் பேசினான். கைவிரல்களில் கேப்பைக்களி பிசுபிசுத்திருந்ததை ஒவ்வொரு விரலாக வாய்க்குள் விட்டுச் சப்பினபடியே பேசினான்,

“பாட்டி இருக்காளா?”

எஸ்தர் சித்தி அவனைத் தீர்மானமாக பார்த்தாள். பிறகு பார்வையை புறவாசல் பக்கமாய் திருப்பிக் கொண்டாள். டேவிட் கேட்டதற்கு எஸ்தர் அப்புறம் பதிலே சொல்லவில்லை. படுக்கப் போகும்போது கூட பதிலே சொல்லவில்லை. ஆனால் அன்றைக்கு ராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேலே வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுவீட்டில் குழந்தைகளின் பக்கத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய் பாட்டியின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

அதிகாலையிலும் அந்த வறட்சியான காற்று வீசிக் கொண்டிருந்தது. அது குளிர்ந்தால் மழை வரும். அது குளிராது. குளிர்ந்து போக அக்காற்றுக்கு விருப்பம் இல்லை. மெலிந்து போயிருந்த இரண்டு காளை மாடுகளும் அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தன.

அதை அரைகுறையான தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்தவர்கள் எல்லோரும் நன்றாகக் கேட்டிருக்க முடியும். அந்த மாடுகளின் பெருமூச்சை அதிக நேரம் கேட்க முடியாது. தாங்க முடியாத சோகத்தை எப்படியோ அந்தப் பெருமூச்சில் கலந்து அந்த மாடுகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. அந்தக் காற்றாவது கொஞ்சம் மெதுவாக வீசியிருக்கலாம். புழுக்கத்தை வீசுகிற காற்றுக்கு இவ்வளவு வேகம் வேண்டாம். காய்ந்து கிடக்கிற மேல்காட்டிலிருந்து அந்தக் காற்று புறப்பட்டிருக்க வேண்டும். காற்றில் காட்டில் விழுந்து கிடக்கிற காய்ந்த மாட்டுச் சாணம், ஆட்டுப் பிழுக்கை இவைகளின் மணம் கலந்திருந்தது. மேல் காட்டில்தான் கடைசியாக இந்த வருஷம் அதிகம் மந்தை சேர்ந்திருந்தது.

பாட்டியை கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதுக்கு பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக்கொண்டு வந்தான். அதற்குள் சாயந்திரமாகி விட்டிருந்தது. பாதிரியார் ஊரில் இல்லையென்று கோயில் குட்டியார் தான் பாளையஞ்செட்டி குளத்திலிருந்து வந்திருந்தார். ஊரை விட்டு கிளம்புகிறதுக்காகவென்று எஸ்தர் சேமித்து வைத்திருந்த பணத்தில் பாட்டியின் சாவுச் செலவிற்கும் கொஞ்சம் போய்விட்டது.

யாரும் அழவேயில்லை மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின. கல்லறைத் தோட்டம் ஒன்றும் தொலைவில் இல்லை. பக்கத்தில் தான் இருந்தது. கோவில் தெருவிலும், நாடாக்கமார் தெருவிலும் இருந்த இரண்டே வீட்டுக்காரர்கள் கொஞ்ச நேரம் வந்து இருந்து விட்டுப் போய்விட்டர்கள். துக்க வீட்டுக்குப் போய் துக்கம் விசாரிக்கிற பொறுப்பை அவ்வளவு லேசாகத் தட்டிக் கழித்து விட முடியும் தானா?

எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலை குத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. வெகு காலம் வரை அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள்.

ஆக்கம்: வண்ணநிலவன்

எப்பொழுதும் வாழும் சிறுகதைகள் 1: கதவு: கி.ராஜநாராயணன்

கதவு ஆட்டம் ஆரம்பமாகியது.

பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள்.

‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று சத்தம் போட்டார்கள்.

“எந்த ஊருக்கு வேணும்? ஏய் இந்த மாதிரி இடிச்சி தள்ளினா என்ன அர்த்தம்? அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன்”

“இல்லை, இல்லை, இடிச்சி தள்ளலே”

“சரி, எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்?”

குழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் “திருநெல்வேலிக்கு” என்று சொன்னான். “திருநெல்வேலிக்கு, திருநெல்வேலிக்கு”
என்று கூப்பாடு போட்டுச் சொன்னார்கள் எல்லோரும்.

லட்சுமி ஒரு துணியால் கதவைத் துடைத்துக் கொண்டிருந்தாள். சீனிவாசன் வெறுங்கையால் டிக்கெட் கிழித்துக் கொடுத்து முடிந்ததும், கதவில் பிடித்துத் தொத்திக் கொண்டார்கள். சிலர் கதவை முன்னும் பின்னும் ஆட்டினார்கள். தன் மீது
ஏறி நிற்கும் அக்குழந்தைகளை அந்த பாரமான பெரிய கதவு பொங்கிப் பூரித்துப் போய் இருக்கும் அக்குழந்தைகளை வேகமாக ஆடி மகிழ்வித்தது. “திருநெல்வேலி வந்தாச்சி” என்றான் சீனிவாசன். எல்லோரும் இறங்கினார்கள். கதவைத் தள்ளியவர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டார்கள். ஏறினவர்கள் தள்ளினார்கள். மீண்டும் கதவாட்டம் தொடங்கியது.

அது பழைய காலத்துக் காரை வீடு. பெரிய ஒரே கதவாகப் போட்டிருந்தது. அதில் வசித்து வந்தவர்கள் முன்பு வசதி உள்ளவர்களாக வாழ்ந்தவர்கள். இப்பொழுது ரொம்பவும் நொடித்துப் போய் விட்டார்கள். அந்த வீட்டிலுள்ள பெண் குழந்தைகளில் மூத்ததிற்கு எட்டு வயது இருக்கும். இன்னொன்று கைக்குழந்தை.

அம்மா காட்டுக்கு வேலை செய்யப் போய் விடுவாள். அப்பா மணி முத்தாறில் கூலி வேலை செய்யப் போய்விட்டார். லட்சுமியும் சீனிவாசனும் கைக்குழந்தையை அம்மா
காட்டிலிருந்து வரும் வரை வைத்துக் கொண்டு கதவோடு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில் ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பி தன் பாவாடையால் துடைத்தாள். இதனால் சில இடங்களில் இருந்த அழுக்கு படம் பூராவும் பரவிற்று. ஆனால் லட்சுமிக்கு மிகவும் திருப்தி, படம் சுத்தமாகிவிட்டதென்று. படத்தை முகத்துக்கு நேராகப் பிடித்து தலையைக் கொஞ்சம் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். அப்புறம் இந்தப் பக்கமாகச் சாய்த்துக் கொண்டு பார்த்தாள்.
சிரித்துக் கொண்டாள். காண்பிக்க பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் இல்லை. வீட்டை நோக்கி வேகமாக நொண்டி அடித்துக் கொண்டே போனாள், சந்தோஷம் தாங்க முடியாமல்.

லட்சுமி வீட்டுக்கு வந்தபோது சீனிவாசன் நாடியைத் தாங்கிக் கொண்டு வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டதும் லட்சுமி படத்தைப் பின்புறமாக மறைத்துக் கொண்டு, “டேய் நா என்ன கொண்டு வந்திருக்கேன் சொல்லு பாப்போம்” என்றாள்

“என்ன கொண்டு வந்திருக்கியோ? எனக்குத் தெரியாது”

“சொல்லேன் பாப்போம்”

“எனக்குத் தெரியாது”

லட்சுமி தூரத்தில் இருந்தவாறே படத்தைக் காண்பித்தாள்.

“அக்கா, அக்கா, எனக்குத் தரமாட்டியா?” என்று கேட்டுக் கொண்டே இறங்கி வந்தான் சீனிவாசன். ‘முடியாது’ என்ற பாவனையில் தலையை அசைத்து படத்தை மேலே தூக்கிப் பிடித்தாள். சீனிவாசன் சுற்றிச் சுற்றி வந்தான். “ம்ஹும், முடியாது. மாட்டேன்… நான் எவ்ளோ கஷ்டப்பட்டு தேடி எடுத்துக் கொண்டு வந்திருக்கேன்
தெரியுமா?” என்றாள்.

“ஒரே தடவை பாத்துட்டுக் கொடுத்துர்றேன் அக்கா, அக்கா” என்று கெஞ்சினான்.

“பார்த்துட்டுக் கொடுத்துறனும்”

“சரி”

“கிழிக்கப்படாது”

“சரி சரி”

சீனிவாசன் படத்தை வாங்கிப் பார்த்தான். சந்தோஷத்தினால் அவன் முகம் மலர்ந்தது.

“டேய், உள்ளப் போய் கொஞ்சம் கம்மஞ்சோறு கொண்டா, இந்தப் படத்தை நம்ம கதவிலே ஒட்டணும்” என்றாள்.

“ரொம்பச் சரி” என்று உள்ளே ஓடினான் சீனிவாசன்.

ரெண்டு பேருமாகச் சேர்ந்து கதவில் ஒட்டினார்கள். படத்தைப் பார்த்து சந்தோஷத்தினால் கை தட்டிக் கொண்டு குதித்தார்கள். இதைக் கேட்டு பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஓடி வந்தன. மீண்டும் கதவு ஆட்டம் தொடங்கியது.

2


அந்தக் கதவைக் கொஞ்சம் கவனமாகப் பார்க்கிறவர்களுக்கு இந்தக் குழந்தைகள் ஒட்டிய படத்துக்குச் சற்று மேலே இதே மாதிரி வேறு ஒரு ப்டம் ஒட்டி இருப்பது தெரிய வரும். அந்தப் படம் ஒட்டி எத்தனையோ நாட்கள் ஆகி விட்டதால் அழுக்கும் புகையும் பட்டு மங்கிப் போயிருந்தது. ஒருவேளை அது லட்சுமியின் தகப்பனார் குழந்தையாக இருக்கும்போது ஒட்டியதாக இருக்கலாம்.

குழந்தைகள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது கிராமத்துத் தலையாரி அங்கே வந்தான்.

“லட்சுமி உங்க ஐயா எங்கே?”

“ஊருக்குப் போயிருக்காக”

“உங்க அம்மா?”

“காட்டுக்கு போயிருக்காக”

“வந்தா தீர்வைய கொண்டு வந்து போடச் சொல்லு, தலையாரித் தேவரு வந்து தேடீட்டு போனாருன்னு சொல்லு”

சரி என்ற பாவனையில் லட்சுமி தலையை ஆட்டினாள்.

மறுநாள் தலையாரி லட்சுமியின் அம்மா இருக்கும் போதே வந்து தீர்வை பாக்கியைக் கேட்டான்.

“ஐயா, அவரு ஊரிலே இல்லை. மணி முத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி. ஒரு தகவலையும் காணோம். மூணு வருஷமா மழை தண்ணி இல்லயே. நாங்க என்னத்தை வெச்சு உங்களுக்கு தீர்வை பாக்கியைக் கொடுப்போம்? ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்தக் கொளந்தைங்கள காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாததா?”  என்றாள்.

இந்த வார்த்தைகள் தலையாரியின் மனசைத் தொடவில்லை. இந்த மாதிரியான வசனங்களைப் பலர் சொல்லிக் கேட்டவன் அவன்.

“நாங்கள் என்ன செய்ய முடியும்மா இதுக்கு? இந்த வருஷம் எப்படியாவது கண்டிப்பா தீர்வை போட்டுறனும். அப்புறம் எங்க மேல சடைச்சிப் புண்ணியம் இல்லை.” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

3


ஒருநாள் காலை வீட்டின் முன்னுள்ள மைதானத்தில் குழந்தைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தலையாரி நான்கு பேர் சகிதம் வீட்டை நோக்கி வந்தான். வந்தவர்கள் அந்த வீட்டுப்பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள். அவர்களுக்கு இது ஒரு
மாதிரி வேடிக்கையாக இருந்தது. தலையாரியும் சேர்ந்து பிடித்து ஒரு மாதிரி கழற்றி நான்கு பேரும் கதவைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அந்தக்
குழந்தைகளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒருவன் நாதஸ்வரம் வாசிப்பவனைப் போல் கைகளை வைத்துக் கொண்டு “பீப்பீ..பீ…பீ” என்று சத்தம் காட்டி விரல்களை நீட்டிக் கொண்டு உடலைப் பின் வளைத்துத் துடைகளின் மேல் ஓங்கி அடிப்பதாக பாவனை செய்து “திடும்.. திடும்.. ததிக்குணம்..ததிக்குண” என்று தவில் வாசிப்பவனைப் போல முழங்கினான். சீனிவாசனும் இதில் பங்கெடுத்துக் கொண்டான். இப்படி உற்சாகமாக குழந்தைகள் கதவைத் தூக்கிக் கொண்டு செல்கிறவர்களின் பின்னே ஊர்வலம் புறப்பட்டார்கள்.

தலையாரியால் இதைச் சகிக்க முடியவில்லை. “இப்போ போகிறீர்களா இல்லையா கழுதைகளே” என்று கத்தினான். குழந்தைகள் ஓட்டம் பிடித்தன. அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வரும் போது லட்சுமி வாசல்படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். எல்லோரும் அரவம் செய்யாமல் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. சீனிவாசனும் முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டான். இப்படி வெகுநேரம் அவர்களால் இருக்க முடியவில்லை. தற்செயலாக ஒரு பெண், “நான் வீட்டுக்குப் போறேன்” என்று எழுந்தாள். உடனே எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்கள். லட்சுமியும் சீனிவாசனும் மாத்திரம் அங்கிருந்தார்கள். வெகுநேரம் அவர்களும் ஒருவருக்கொருவர் பேசவில்லை.

கைக்குழந்தை அழும் குரல் கேட்கவே லட்சுமி உள்ளே திரும்பினாள். இதற்குள் சீனிவாசன் அக்குழந்தையை எடுத்துக் கொள்ளப் போனான். குழந்தையைத் தொட்டதும் கையைப் பின்னுக்கு இழுத்தான். அக்காவைப் பார்த்தான். லட்சுமியும் பார்த்தாள்.

“பாப்பாவை தொட்டுப் பாரு அக்கா; உடம்பு சுடுது” என்றான். லட்சுமி தொட்டுப் பார்த்தாள்; அனலாகத் தகித்தது.

சாயந்திரம் வெகுநேரம் கழித்து அம்மா தலையில் விறகுச் சுள்ளிகளுடன் வந்தாள்.
சுள்ளிகள் சேகரிக்கும் போது கையில் தேள் கொட்டி இருந்ததால் முகத்தில் வலி தோன்ற அமைதியாக வந்து குழந்தைகளின் பக்கம் அமர்ந்து கைக்குழந்தையை வாங்கிக் கொண்டாள். ‘உடம்பு சுடுகிறதே?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். இதற்குள் குழந்தைகள் காலையில் நடந்த சேதியை அம்மாவிடம் சொன்னார்கள்.

செய்தியைக் கேட்டதும் ரங்கம்மாவுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது.
உடம்பெல்லாம் கண்ணுத் தெரியாத ஒரு நடுக்கம். வயிற்றில் தாங்க முடியாத ஒரு வலி தோன்றியது போல் குழந்தையை இறுகப் பிடித்துக் கொண்டாள். குழந்தைகளுக்கு முன் அழக் கூடாது என்று எவ்வளவு தான் அடக்கினாலும் முடியவில்லை. “என்னைப் பெத்த தாயே” என்று அலறி விட்டாள். பயத்தினால் குழந்தைகள் அவள் பக்கத்தில்இருந்து விலகிக் கொண்டார்கள். இனம் புரியாத பயத்தின் காரணமாக அவர்களும் அழ ஆரம்பித்தனர்.

4.
மணிமுத்தாறிலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. நாட்கள் சென்று கொண்டேயிருந்தன. இரவு வந்து விட்டால் குளிர் தாங்க முடியாமல் குழந்தைகள் நடுங்குவார்கள். கதவு இல்லாததால் வீடு இருந்தும் பிரயோஜனமில்லாமல் இருந்தது. கார்த்திகை மாசத்து வாடை, விஷக் காற்றைப் போல் வீட்டினுள் வந்து அலைமோதிக் கொண்டே இருந்தது. கைக்குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுக் கொண்டே வந்தது. ஒரு நாள் இரவு வாடை தாங்காமல் அது அந்த வீட்டை விட்டு அவர்களையும் விட்டு பிரிந்து சென்று விட்டது. ரங்கம்மாளின் துயரத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. லட்சுமிக்காகவும் சீனிவாசனுக்காகவுமே அவள் உயிர் தரித்திருந்தாள்.

சீனிவாசன் இப்பொழுது பள்ளிக்கூடம் போகிறான். ஒருநாள் அவன் மத்தியானம் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் போது ஒரு தீப்பெட்டிப் படம் கிடைத்தது. கொண்டுவந்து தன் அக்காவிடம் காண்பித்தான். லட்சுமி அதில் ஆர்வம் கொள்ளவில்லை.

“அக்கா எனக்கு சீக்கிரம் கஞ்சி ஊத்து, பசிக்கி; சாப்பிட்டு இந்த படத்தை ஒட்டனும்”

“தம்பீ, கஞ்சி இல்லை”  இதை அவள் மிகவும் பதட்டத்தோடு சொன்னாள்.

“ஏன்? நீ காலையில் காய்ச்சும் போது நான் பாத்தேனே?”

‘ஆம்’ என்ற முறையில் தலையசைத்து விட்டு, “நான் வெளிக்குப் போயிருந்தேன். ஏதோ நாய் வந்து எல்லாக் கஞ்சியையும் குடித்து விட்டுப் போய்விட்டது தம்பி… கதவு
இல்லையே” என்றாள் துக்கமும் ஏக்கமும் தொனிக்க. தன்னுடைய தாய் பசியோடு காட்டிலிருந்து வருவாளே என்று நினைத்து உருகினாள் லட்சுமி.

சீனிவாசன் அங்கே சிதறிக் கிடந்த கம்மம் பருக்கைகளை எடுத்துப் படத்தின் பின்புறம் தேய்த்து ஒட்டுவதற்கு வந்தான். கதவு இல்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுவரில் ஒட்டினான். படம் கீழே விழுந்து விட்டது. அடுத்த இடத்தில்,
அடுத்த சுவரில் எல்லாம் ஒட்டிப் பார்த்தான்; ஒன்றும் பிரயோசனம் இல்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் அவன் அழ ஆரம்பித்தான்.

சாயந்திரம் லட்சுமி சட்டி பானைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள்.

சீனிவாசன் முகத்தில் ஆவல் துடிக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தான்.
“அக்கா அக்கா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்திலே சாவ்டி இருக்கு பாரு.. அதுக்கு பின்புறம் நம்ம வீட்டு கதவு இருக்கக்கா! கண்ணாலே நான் பார்த்தேன்” என்றான்.

“அப்படியா! நிஜமாகவா? எங்கே வா பாப்போம்” என்று சீனிவாசனின் கையைப் பிடித்தாள்.
இருவரும் கிராமச்சாவடி நோக்கி ஓடினார்கள்.
உண்மை தான். அதே கதவு சாத்தப்பட்டு இருந்தது. தூரத்திலிருந்தே தங்கள் நண்பனை இனம் கண்டு கொண்டார்கள் அச்சிறுவர்கள். பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை.

அவர்களுக்கு உண்டான ஆனந்தத்தைச் சொல்ல முடியாது.

அங்கே முளைத்திருந்த சாரணத்தியும் தைவாழைச் செடிகளும் அவர்கள் காலடியில் மிதிபட்டு நொறுங்கின. அதிவேகமாய் அந்தக் கதவின் பக்கம் பாய்ந்தார்கள். அருகில் போய் அதைத் தொட்டார்கள். தடவினார்கள். அதில் பற்றி இருந்த கரையான் மண்ணை லட்சுமி தன் பாவாடையால் தட்டித் துடைத்தாள்.
கதவோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டாள். அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

சீனிவாசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். முத்தமிட்டாள். சிரித்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சீனிவாசனும் லட்சுமியைப் பார்த்து சிரித்தான். அவர்கள் இருவரின் கைகளும் கதவைப் பலமாகப் பற்றி இருந்தன.

ஆக்கம்: கி.இராஜநாராயணன்

*********

நன்றி: தாமரை (ஜனவரி 1959)