நானும் என் எழுத்துப் பயணமும்- பாகம் 2

பாரதியும் வாலியும்

எல்லோரின் இளம் பருவத்திலும் அவர்களின் இரகசிய நண்பன் கண்டிப்பாக ஒரு டைரியாகத்தான் இருக்க முடியும். எனது நான்காம் படிவத்தில் (16 வயது) கிறுக்கல்களுக்காக ஒரு நூலைத் தயார்செய்து கொண்டேன். இயற்கை, பிரிவு, அன்பு, நட்பு, காதல் கவிதைகளுக்கென்று அப்பொழுது ஒரு தனித்த இடமிருந்தது. நானும் என் வகுப்பு நண்பன் விஜயனும் இத்தகைய ஒரு புத்தகத்தில் குட்டிக்கதைகள், கவிதைகள் எனப் போட்டிக் போட்டுக் கொண்டு எழுதி கொண்டிருந்த காலமது. Chemistry பாடத்திற்குச் சென்றால் அங்கு வேறு கெமட்ஸ்ரி தன் வேலையைத் துவங்கிவிட்டதும் உடனே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிடுவேன்.

அப்பொழுது நண்பன் விஜயன் தொடர்ந்து தொடர்க்கதைகளைத் தனது அறிவியல் நீளப் புத்தகத்தில் எழுதி என்னிடம் கொடுப்பான். நானும் ஆவலுடன் அத்தொடர்களை வாசிக்கத் துவங்கிவிடுவேன். அவனது கதைகளுக்கு என்னைத்தான் மானசீக வாசகனாக அவனே நியமனம் செய்து கதைகளை என்னைத் துரத்தித் துரத்திக் கொண்டு வந்து வாசிக்கச் சொல்வான். கதை உலகத்தில் அவன் காட்டும் ஆர்வம் ஆச்சரியமாக இருக்கும். ஒருவேளை அவன் தொடர்ந்து எழுதி கொண்டிருந்தால் இந்நேரம் நாட்டில் ஒரு நல்ல எழுத்தாளனாக மிளிர்ந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

அவன் அளவிற்கு நான் என் காதல் கவிதைகளையும் இன்னும் சில கவிதைகளையும் யாரிடமும் காட்டியதில்லை. கவிதைகளுக்கு வாசகர்கள் தேவையில்லை என்று தோன்றும். அவை என் மனத்துடன் நான் முணுமுணுத்துக் கொள்ளும் வார்த்தைகள் என்றே நினைப்பேன். நான் நினைப்பவைகளை என் உணர்வுகளைக் கொட்டி தீர்க்கும் ஓர் இடமாகவே அப்போதைய என் கவிதைகள் இருந்தன. இப்பொழுது அந்தக் குறிப்புப் புத்தகத்திலுள்ள கவிதைகளைப் படித்தால் நகைச்சுவையாகவும் சிறுப்பிள்ளைத்தனமாகவும் இருக்கும். ஆனால், அப்போதைய வயதில் அவைதான் எனது பெருந்திறப்பு. எனக்கு அப்பொழுதும் அதிக நண்பர்கள் கிடையாது. வகுப்பு நண்பர்களிடம் மட்டும் அளவோடு பேசுவேன்.

எஸ்.பி.எம் முடிந்து ஆறாம் படிவத்துக்காக இப்ராஹிம் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றேன். அங்குத் தனிமை மேலும் அடர்ந்து நின்றது. இந்திய மாணவர்களும் ஒருவருக்கொருவர் மலாயில் ஆங்கிலத்திலும்தான் பெரும்பாலும் பேசிக் கொள்வார்கள். எனது தயக்கத்தைப் போக்கிக்கொள்ள மாணவர்த் தலைவர் பிரிவில் சேர்ந்து நண்பர்களைத் தேடிக் கொண்டேன். நான் அறிவியல் பிரிவு மாணவன் என்பதால் தமிழைக் கூடுதல் பாடமாக எடுக்க முடிவெடுத்தேன். ஆயினும், 15க்கும் கூடுதலான மாணவர்கள் தமிழை எடுத்தால் மட்டுமே ஓர் ஆசிரியர் கிடைக்கக்கூடும் எனச் சொல்லிவிட்டார்கள். நானும் கலைப்பிரிவில் உள்ள சிலரைச் சேர்த்துக் கொண்டு ஒவ்வொரு வகுப்பாகச் சென்று தமிழைப் பாடமாக எடுக்கும்படி பலரிடம் கேட்டு இறுதியில் ஐந்து பேர் மட்டுமே மீதமாக இருந்தோம் என்பதால் எங்களுக்குத் தனி ஆசிரியர் கிடைக்கவில்லை. ஆயினும், ஆறாம் படிவத்தில் தமிழ் இலக்கியத்தை எடுத்தாக வேண்டும் எனப் பிடிவாதமாகப் பதிந்து கொண்டேன். நண்பர்களிடம் நூல்களை இரவல் வாங்கிப் படிக்கத் துவங்கினேன்.

அப்படித்தான் பாரதியின் பக்கம் கவனம் திரும்பியது. சிறுவயதில் பாடநூல்களில் பார்த்துப் படித்ததோடு சரி. இடைநிலைப்பள்ளிக்கு வந்த பின்னர்தான் பாரதியை ஆழமாக வாசிக்கத் துவங்கினேன். அப்பொழுது ஆறாம் படிவப் பாடத்திட்டத்தில் காணி நிலம் வேண்டும் எனும் கவிதை பாடமாக இருந்தது. அங்கிருந்து அக்கவிதையைத் தாண்டி பாரதியின் மற்ற கவிதைகளையும் தேடி வாசிக்கத் துவங்கினேன். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் எனப் பாரதியாரின் எல்லையில் பிரவேசிக்கத் துவங்கினேன். நண்பன் சுந்தரேஷ்வரனும் பாரதியின் சில தன்னிகரற்ற கவிதைகளை வாசித்துக் காட்டுவான். மு.வ, நா.பா போன்ற அப்பொழுது வாசிப்பிலும் கல்வியிலும் பிரபலமாக இருந்த எழுத்தாளர்களைப் படிக்கும் முன்பே நான் பாரதியைத்தான் முதலில் வாசித்துப் பாரதிக்குள் நெருக்கமாகியிருந்தேன்.

அடுத்து, கவிஞர் வாலியின் பொய்க்கால் குதிரைகள் எனும் கவிதை ஆறாம் படிவத்தில் இன்னொரு பாடமாக இருந்தது. வாலியின் சொற்களில் மிரண்டு திளைத்தேன். ஒவ்வொரு படிமமும் எனக்குள் புதிய தேடலுக்கான அலைகளை உருவாக்கி விட்டது. மரங்களின் மீது அவர் பொய்க்கால் குதிரையில் உருவாக்கிய வார்த்தை விளையாட்டைக் கண்டு அக்கவிதையை பலமுறை புத்தகத்தில் எழுதி இரசித்தேன். அதனாலேயே தமிழ் இலக்கியத்தை ஆர்வத்துடன் படித்தேன். இரசாயணம், இயற்பியல், கூடுதல் கணிதம் போன்ற அறிவியல் பிரிவுப் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் இலக்கியத்திலும் இரசனையை வளர்த்துக் கொள்ளத் துவங்கினேன்.

அந்தக் காலக்கட்டத்தில் நெருங்கிய நட்பு வட்டமாக உருவானவர்கள்தான் ‘மகாரிஷி’ நண்பர்கள் கூட்டம். மொத்த ஏழு பேர் கொண்ட குழு. இளங்கோதை, தினா, சுபாஷினி, புஷ்பராஜா, சண்முகம், ராதிகா என இவர்கள்தான் என் உலகம் என ஆனது. ஒன்றாய்ப் படிப்போம்; ஒன்றாய் திரிவோம். அவர்களைப் பற்றி நான் சில பதிவுகள் எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு நண்பர்களைப் பற்றியும் அனைவரும் அந்நூலில் எழுதி கொள்வோம். சொல்ல முடியாத உணர்வுகளை அப்புதக்கத்தில் எழுத்துக்களாக எழுதிப் பார்த்துக் கொண்டோம். அப்புத்தகம் கைமாறி ஒவ்வொருவரிடமும் போகும்போது அதைத் திறந்து நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளார்கள் எனப் படிக்கும்போது பேரானந்தமாக இருக்கும். நான் அதன் பிறகு அப்புத்தகத்தில் நண்பர்களுடனான அனுபவங்களைத் தொடர்க்கட்டுரை பதிவு போல எழுதினேன்.

இப்பொழுது ஏடுகள் குறைந்து மெலிந்த என் புத்தக அலமாரியிலிருந்து இவ்விரு புத்தகங்களையும் எடுத்துப் பார்த்தேன். சிரிப்பும் ஆர்பாட்டமும் தனிமையும் இரசனையும் நிரம்பிய ஓர் அலை மனத்தில் எழுத்துக்களாக எழுகின்றன. கிறுக்கல் புத்தகத்தில் கிடக்கும் எண்ணற்ற கவிதைகளும் மகாரிஷி புத்தகத்தில் கிடக்கும் பதிவுகளும்கூட என் எழுத்திற்கு ஒரு தொடக்கப்புள்ளிகளாகின்றன. அப்பொழுது மனத்தில் அறிவில் பாரதியும் வாலியும் நிறைந்திருந்தார்கள்.

படிவம் ஆறு படித்துக் கொண்டிருக்கும்போது கிறுக்கல் நூலில் விளையாட்டாய் எழுதிய ஒரு கவிதை:

முற்றுப்புள்ளி என்கிற

அர்த்தம் தெரியாமல் நீண்ட நடைபோட

ஆயுள் கைதிகளாக

என் கவிதைகள்

என்னிடம்.

தொடரும்

-கே.பாலமுருகன்

(இத்தொடரில் வரும் எனது நண்பர்கள்தான் எனது நினைவுகளின் சாட்சிகளாகவும் எழுத்துப் பயணத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றார்கள்)