மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 14 (இறுதி பாகம்)

ஓராண்டுக்கு முன்பு

மெலாந்தி வீட்டில் குச்சிமிட்டாய் சிறுமியை வெளிவரந்தாவில் நிற்க வைத்திருக்கிறான்.

பாகம் 14

 

குச்சிமிட்டாய் உள்ளே சென்று ஒரு நீல வாளியில் தண்ணீரைக் கொண்டு வந்து தரையில் ஊற்றியடித்தான். இரத்தமும் நீரும் கலந்து விளிம்பிற்குச் சென்றோடி கீழே வழிந்து கொண்டிருந்தது.

“அங்கள் என்ன இது எல்லாம்?”

“இதா? பாவக்கற… அழுக்கு… மனுசனுங்களோட ஆச… எல்லாம்…”

சிறுமி பயத்துடன் தரையில் சிதறிக்கிடந்தவற்றை கவனித்தாள். குச்சிமிட்டாய் அவளைத் தூக்கிக் கொண்டு அவ்வீட்டைவிட்டு வெளியில் வந்து நின்றான். இருள் பல பூச்சிகளின் கூடு. அத்தனை சத்தங்களும் இரைச்சல்களும் ஓர் பூர்வீகமான இசையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தன.

“உனக்கு நீர் வீழ்ச்சின்னா பிடிக்குமா?”

“அங்கள்! எங்க தாத்தா எங்க?”

சிறுமி வீட்டை நோக்கி பார்த்தாள். அவள் கண்களில் தேடலும் பயமும் கலந்திருந்தன. பயத்தால் மிரண்டிருந்த சிறுமியின் கண்களைக் குச்சிமிட்டாய் உற்று நோக்கினான்.

“என்ன பயப்படுறீயா? இந்தக் காடு இருக்குல… இது அம்மா மாதிரி… சின்ன பிள்ளைல என் அம்மா இந்தக் காட்டுக்குள்ளத்தான் காணாம போச்சு. எலும்பா இருக்கும். துறுதுறுன்னு… நல்ல மனுசி. என்ன அப்படியே அள்ளி கொஞ்சும் தெரியுமா?”

“உங்க அம்மாக்கு என்னாச்சு, அங்கள்?”

சிறுமி குச்சிமிட்டாயின் கண்களில் ததும்பும் ஏக்கத்தை ஆர்வத்துடன் பார்த்தாள். குழந்தைகளுக்கு ஏக்கம் என்றால் ஒரு வரம் போல. வாழ்நாள் முழுவதும் எதையாவது நினைத்து ஏங்கி ஏங்கித்தான் குழந்தைகள் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிறார்கள்.

“இந்த இருட்டு இருக்கே… ஒம்ப மோசமானது. எங்கம்மா அப்ப நாசி லெமாக் விக்கும் கம்பத்துல. ராத்திரி மிச்சம் இருந்துச்சின்னா எல்லாத்துக்கும் கொடுத்துட்டு வீட்டுக்குக் கொஞ்சம் எடுத்து வரும். அப்பா லோரி ஓட்டிட்டு ராத்திரி வந்தாருனா அவருக்கு ஊட்டிவிடும். அவ்ள அன்பான மனுசி…”

இருவரும் இரப்பர் காட்டிற்குள் நடக்கத் துவங்கினார்கள். இருள் உடைந்து குச்சிமிட்டாயின் கண்களின் ஆழத்தில் அவருடைய அம்மாவைக் கண்டு சிறுமி சிரித்துக் கொண்டே உடன் நடந்தாள்.

“அது… நல்ல மனுசி. ஆனா சொந்தமா பெணாத்தும். என்னானெ தெரில அப்ப எங்களுக்கு. பைத்தியம்னு சொன்னாங்க கம்பத்துல. பேசிக்கிட்டே நடக்கும் சொந்தமா… அப்பாக்கூட பைத்தியக்காரின்னு சொல்லி அடிச்சி எடுத்தாரு… பாவம் அது அப்படியே ரோட்டுல சுருண்டுகிட்டு அழும்…”

சிறுமி இலேசாகக் கண் கலங்கினாள். சட்டென குச்சியின் இடது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

“எங்க அப்பன் என்னையும் போட்டு அடிப்பாரு. மண்டைலாம் காஞ்சு போயிரும். புத்திலாம் மழுங்கிருச்சி… நான் ரொம்ப கெட்டவன் தெரியுமா…”

“உங்க அம்மாக்கு என்னாச்சுன்னு சொல்லவே இல்ல…?”

“ஒரு நாளு காணாம போய்ருச்சி… காட்டுக்குத்தான் போனுச்சின்னு எல்லா சொல்லிக்கிட்டாங்க. அப்ப எனக்கு உன் வயசுத்தான்…ம்ம்ம்… அம்மா அம்மான்னு ராத்திரிலாம் அழுந்தன்…”

இருவரும் மெலாந்தி பள்ளத்தாக்கின் அருகில் வந்து கொண்டிருந்தார்கள். காடு பெரும் அமைதியுடன் சுவாசித்துக் கொண்டிருந்தது.

“உனக்கு இந்தப் பள்ளம், காடு, வீடு, மலை எல்லாம் பிடிச்சிருக்கா?”

சிறுமி வெகுநேரம் இருளை உராய்ந்து கொண்டிருந்த பனி கூட்டத்தைப் பார்த்தாள். அப்படியொரு அடர்ந்த பனிகூட்டம் காடு மரங்களை நிதானமாகக் கடந்துபோவதை அவள் பார்த்ததே இல்லை.

“அங்கள்… பாட்டி எங்க…?”

“அவுங்களாம் இல்ல… யாரும் இல்ல… எனக்கு ஏதோ பெணாத்தது மனசுல. எங்க அம்மா மாதிரி ஆய்டுவேன் போல… இந்த மூர்த்தி நாயி இருக்கான்ல… இந்த வீட்டுலத்தான் இருந்தான். பெரிய தலயாம்… நாயி அவன். பொம்பள ஆளுங்கள கஞ்சா விக்க சொல்லி அப்புறம் அதுங்கள தாய்லாந்துல வித்துருவானாம்… சுப்பாம்மா இருக்கால…? சுப்பம்மா…”

சிறுமி குச்சிமிட்டாய் சொன்னது புரியாமல் கடைசியில் அவன் உதிர்த்த சுப்பம்மா என்கிற பெயரை மட்டும் பிடித்துக் கொண்டாள்.

“யாரு சுப்பம்மா அங்கள்? உங்க அம்மாவா?”

குச்சிமிட்டாய் மீண்டும் அழுதான். ஓவென்று கத்தி அழுதான். அவன் குரல் பள்ளத்தாக்கில் விழுந்து கரைந்து கொண்டிருந்தது.

“அவ என் உயிரு மாதிரி இருந்தா… நான்தான் ஒரு நாயி… அடிச்சி… எங்க அப்பா மாதிரியே… வெவஸ்த்த இல்லாதவன்… இப்ப பாரு… ஐயோ… அவன் வெறி பிடிச்சவன்… அந்த மூர்த்தி… உங்க பாட்டிய கொன்னுட்டான்… உங்க தாத்தாவ கொன்னுட்டான்… இந்த மூர்த்தி நாயி இருக்கான்ல கடைசியா அவன… நான் விடுவனா…? அவ்ளத்தான்… அவன்… சுப்பாம்மாவ புக்கிட் பிந்தாங்ல பார்த்துருக்கான். அவ அங்கயே இருந்தாவது ஏதாச்சம் ஒரு பொழப்புல இருந்துருப்பா… இவன் இருக்கான… பொட்டலம் கட்டி கொடுத்துருக்கான்… உறிஞ்சிட்டான்.. இரத்தத்த உறிஞ்சிட்டுக் கொண்டு போய் தாய்லாந்துல வித்துட்டான் நாயி…”

சிறுமி இருளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

“ஏய்! சொந்தமா பேசாத… எனக்குப் பிடிக்காது…கடுப்பாயிருவேன்…”

சிறுமி அதிர்ந்து மீண்டும் அவன் நின்ற இடத்திற்குப் போய் அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

“அங்கள்! உங்க அம்மாக்கு என்னாச்சு?”

குச்சிமிட்டாய் காட்டிருளுக்குள் மூழ்கி கொண்டிருக்கும் பள்ளத்தாக்கைப் பார்த்தான்.

“இந்தக் காடு… இந்தப் பள்ளம் இருக்குலே… இதுக்கிட்டத்தான் கேக்கணும்…”

இருவரும் அங்கிருந்த ஒரு பாறையின் மீதேறி அமர்ந்து கொண்டனர். குச்சிமிட்டாய் சிறுமியின் களைந்திருந்த தலைமுடியை நேர்ப்படுத்திவிட்டான்.

“அங்கள் எனக்குப் பசிக்குது…”

குச்சிமிட்டாய் பாறையிலிருந்து எகிறி குதித்து சத்தமாகக் கத்திக் கொண்டே ஆடினான். கால்கள் ஓயும்வரை ஆடினான். கரைந்த அம்மாவை, காணாமல்போன சுப்பம்மாவை, அப்பாவை, மூர்த்தியை எல்லோரையும் நினைத்தாடினான். இருளுக்குள் அவன் ஆணவம், அன்பு, பயம், கருணை எல்லாவற்றையும் கரைத்தாடினான்.

சிறுமி அவன் ஆட்டத்தைக் கண்டு கைத்தட்டத் துவங்கினாள். கீழே விழுந்து மீண்டும் எழுந்தாடினான். குதித்து குதித்து ஆடினான். பாவங்கள் அனைத்தும் உதறிக் கொட்டியதாக நினைத்தாடினான். ஆட்டம் நிற்காமல் போய்க் கொண்டிருந்தது; சிறுமி தொடர்ந்து கைத்தட்டிக் கொண்டிருந்தாள்.

-முற்றும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்

 

(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)

பாகம் 1-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/

பாகம் 2-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/

பாகம் 3-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/

பாகம் 4-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/

பாகம் 5-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/

பாகம் 6-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/10/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-6/

பாகம் 7-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/11/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-7/

பாகம் 8-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/12/மெலாந்தி-பள்ளத்தாக்கு-8/

பாகம் 9-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/13/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-9/

பாகம் 10-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/15/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-10/

பாகம் 11-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/16/மெலாந்தி-பள்ளத்தாக்கு-11/

பாகம் 12-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/17/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-12/

பாகம் 13-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/18/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-13/