மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 11
(குறிப்பு: கதை காலத்தால் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருக்கிறது.)
மெலாந்தி வீடு- நிகழ்காலம்
பாகம் 11
மெலாந்தி பள்ளத்தாக்கு
1700 ஆம் ஆண்டுகளிலிருந்து பற்பல கதைகளைக் கொண்ட இடமாகும். 1771ஆம் ஆண்டு மலேசியாவிற்குள் வந்த ப்ரண்சிஸ் லைட் மெலாந்தி மலை வழியாகத்தான் கெடா அரசைச் சந்திக்கச் சென்றதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அப்படி அவர்கள் நுழையும்போது மெலாந்தி பள்ளத்தாக்கின் ஆழத்தையும் வனப்பையும் கண்டு பிரமித்து அவ்விடத்தைப் பற்றி பிரிட்டிஷின் தென்னிந்திய நிறுவனத்தின் வரலாற்றுப் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள் என்கிற குறிப்பும் உண்டு.
அதே போல 1930ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாட்டிற்குள் வந்தபோது அவர்களை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்ட் குழுவில் இருந்து பின்னர் பிளவு ஏற்பட்டு தனியாக போராடத் துவங்கிய தமிழர்களைக் கொண்ட கறுப்பன் என்கிற குழு மெலாந்தி மலையில்தான் பதுங்கியிருந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் உள்ளன.
“இங்கத்தான் ஒரு மலையூர் கம்பம் இருந்துச்சாம். 18ஆம் நூற்றாண்டு கடைசில வந்த சில தமிழாளுங்க இங்கப் பள்ளத்தாக்குல வாழ்ந்தாங்கன்னு சொல்றாங்க, சார்…”
தெய்வீகன் மெலாந்தி பள்ளத்தாக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் வியாபித்திருந்த குளிர்காற்று அனைவரையும் வருடிக் கொண்டிருந்தது.
“துவான்! இது குச்சிமிட்டாய் தொடர்பான அறிக்கை… முழுசா இருக்கு. தனசேகர், இங்க வந்து பதுங்கியிருந்த அத்தன பேரோட எல்லாம் தகவலும் இதுல முறையா வச்சிருக்கோம்…”
தெய்வீகன் மௌனத்துடன் எவ்வளவு ஆழம் எனக் கணக்கிட முடியாத பெரும் ஆழிருளுக்குள் மூழ்கியிருக்கும் மெலாந்தி பள்ளத்தாக்கைப் பார்த்தார். கண்களில் ஒருவித நடுக்கம். அதனை அருகில் இருப்பவர்களிடம் வெளிப்படுத்த அவருக்குத் தோன்றவில்லை.
“ஓகே! நீங்க உங்க டீம், துவான் சப்ரி, துவான் ஜைனால்… எல்லாம் போகலாம்… போட்டோலாம் எடுத்துருங்க, போரன்சிக் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக்கிட்டு நாளைக்குப் பாக்கலாம்… நாளைக்குக் காலைல ஐ.பி.டி ஈப்போல 10 மணிக்குச் சந்திக்கலாம்…”
அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் மெலாந்தி வீடு அமைதியில் உறைந்திருந்தது. இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டும் தெய்வீகனின் மகிழுந்தின் அருகே நின்றிருந்தார்கள். வீட்டைப் பற்றிய அவர் மனத்தில் உருவகித்துக் கொண்டிருந்த உணர்வுகள் ஆழமாகச் சென்று கொண்டிருந்தன.
குச்சிமிட்டாய் சுடப்பட்டுக் கிடந்த இடத்தைத் தெய்வீகன் மீண்டும் கவனித்தார். அதனைச் சுற்றி வரையப்பட்டிருந்த வெள்ளை அடையாளக் கோடு சிறுத்திருந்தது. உருவத்தில் குச்சிமிட்டாய் மிகச் சிறியவன். குரலும் ஒரு சிறுவனுக்குரியது.
இவ்வீட்டைச் சுத்தம் செய்து தயார் செய்யும்போது குச்சிமிட்டாய் சற்றும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டான் இவ்விடத்தில் அவனுக்கான மரணமும் நிச்சியக்கப்படும் என்று.
வீட்டைச் சுற்றி முதலிலிருந்து உலாவிக் கொண்டிருந்த பூனையை அவர் விரட்டியடித்தார். திரும்பி நின்று அதன் கூர்மையான கோபப் பார்வையை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் ஓடி மறைந்தது.
“துவான்! கெளம்பலயா?”
வாகன ஓட்டுனர் வீட்டிற்குள் நுழைந்து மெதுவாகக் கேட்டார். எப்பொழுதும் கொலை நடந்த இடத்திற்குச் சென்று முதல்படி விசாரணை, புகைப்படம் என எல்லா வேலைகளும் முடிந்த பின்னரும் தெய்வீகன் அவ்விடத்தை விட்டுப் போகமாட்டார். அங்கு நடந்து முடிந்தது ஒரு கொலை மட்டுமல்ல; அதனைச் சுற்றி பல உணர்வுகளின் அலைகள் மிதந்துகொண்டே இருக்கும் என்று நம்புவார்.
“மதி! இந்த வீடு அவ்ள சாதரண வீடு இல்ல. இத பத்தி இங்க உள்ளவங்களுக்கு உள்ள நம்பிக்கைகள விட இன்னும் ஆழமான ஏதோ ஒரு விசயம் இந்த வீட்டுக்கு இருக்கு…”
“இது அந்தக் கேங்ஸ்டர்ஸ் எல்லா தங்கியிருந்த வீடுதான துவான்… இதுல என்ன இருக்கு?”
“உன் கண்ணுக்குப் பாவங்கள் மட்டும்தான் தெரியுது… ஆனா… எனக்கு ஓலங்கள் கேக்குது மதி. சாவுக்கு முன்ன உள்ள ஓலங்கள்… மனசனோட மனசு கொட்டும் ஓலங்கள்…”
தெய்வீகனின் வாகன ஓட்டுநர் வீட்டைச் சுற்றிலும் பார்த்தான். பலகை சுவர் பழுப்பேறி ஆங்காங்கே கொஞ்சம் இரத்தக் கறைகள் என அச்சுறுத்தலாக இருந்தது.
“துவான்! அபாங் ஜைனால் சொன்னாரு. போன வருசம் காணம போன அந்த மூனு பேரு… அவுங்க கேஸ்க்கும் இந்த வீட்டுக்கும் லின்க் இருக்கா?”
“அது அவ்ள உறுதியா தெரியல, மதி. கடைசியா பெரியசாமியோட வாக்குமூலம்படி குச்சி யாரோ லோரி கெட்டுப் போய் உதவி கேக்கறாங்க, அவுங்கள மேல கொண்டு விட்டரணும்னுத்தான் காடி வாங்கிட்டுப் போய்ருக்கான்… அநேகமாக லோரியயும் இவன் எதாச்சாம் பண்ணிருக்கலாம். பள்ளத்தாக்குல தள்ளி விட்டுருக்கலாம்… ஆனா, நம்மகிட்ட அவுங்கள பத்தி எந்த எவிடன்சும் இல்ல. மூனு பேரும் மிச்சிங்…”
தெய்வீகன் மீண்டும் பாதி இருளுக்குள் முடங்கிக் கொண்டிருந்த மெலாந்தி வீட்டைப் பார்த்தார். பள்ளத்தாக்கின் மௌனம் அதனையும் தாண்டி ஓலமிடும் காற்றுக்கும் மட்டுமே தெரிந்த கதையாக பலரின் குரல்கள் அதனுள் அடங்கிக் கொண்டிருக்கின்றன.
“இந்தப் பள்ளத்தாக்குல இறங்கி ஏதும்…?”
தெய்வீகன் புன்னகைத்தார். மீண்டும் அந்த ஆழிருள் பள்ளத்தாக்கைக் கவனித்தார்.
“இதுல அவ்ள சீக்கிரம் போயிர முடியாது… இதுக்குத் தனிக்குழு அமைக்கணும். அனுமதி வாங்கணும். போறவங்க உயிர் ரிஸ்க் மதி. பெரிய பள்ளத்தாக்கு இது. ஆபத்தானது…பாக்கலாம்… எப்படின்னு…”
இருவரும் வெளியில் வந்து நின்றார்கள். வரந்தாவைச் சுற்றியிருந்த மரத்தூண்கள் கம்பீரத்துடன் காட்சியளித்தன. தெய்வீகன் முன்கதவை இழுத்துப் பூட்டினார்.
“போலாமா துவான்?”
“இந்த வீட்டோட கேஸ் இன்னியோட முடிஞ்சிருச்சி. ஆனா, இதுல இன்னும் முடியாத கதைகள் பல இருக்கு, மதி…”
தெய்வீகன் மகிழுந்தில் அமர்ந்ததும் வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. மழைக்குருவிகள் இரண்டு சட்டென பறந்து வந்து மெலாந்தி வீட்டின் படிக்கட்டுகளில் அமர்ந்து ஒன்றுமில்லாத தரையில் எதையோ கொத்திக் கொண்டிருந்தன.
- தொடரும்
ஆக்கம்: கே.பாலமுருகன்
(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)
பாகம் 1-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/
பாகம் 2-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/
பாகம் 3-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/
பாகம் 4-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/
பாகம் 5-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/
பாகம் 6-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/10/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-6/
பாகம் 7-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/11/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-7/
பாகம் 8-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/12/மெலாந்தி-பள்ளத்தாக்கு-8/
பாகம் 9-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/13/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-9/
பாகம் 10-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/15/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-10/