மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 10
(குறிப்பு: இந்நாவல் காலத்தால் முன்னும் பின்னும் மெலாந்தி மலை, மெலாந்தி அத்தாஸ் கம்பத்தையொட்டி நிகழ்கிறது)
பாகம் 10
மெலாந்தி வீடு- நிகழ்காலம்
சரவணன் கழிவறைக்குச் சென்றதும் குச்சிமிட்டாய் வீட்டைவிட்டு வெளியேறும்போது சிறுமி வெளியில் அமர்ந்திருப்பதைக் காண்கிறான்.
“அங்கள்! எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சிருக்கு… நீங்க ஏன் ஓடறீங்க அங்கள்?”
குச்சிமிட்டாய் அப்படியே வெளிவரந்தாவில் விழுந்தான். தலை சுற்றியவாறே மரத்தூண்களைப் பிடித்துத் தடுமாறி எழ முயன்றான். மதிய வெய்யிலைத் தாண்டி தலை அழுத்தம்கூடி உடல் வெப்பமேறியது.
“யாரும் இல்ல. யாரும் இல்ல. இங்க யாரும் இல்ல. எல்லாம் பொய்… பொய்…”
பிதற்றிக் கொண்டே சிறுமி இருந்த படிக்கட்டைப் பார்த்தான். ஒரேயொரு மழைக்குருவி தரையில் இடந்த ஏதோ ஒன்றைக் கொத்த முயன்று கொண்டிருந்தது. தலையைத் திருப்பி நாலாப் பக்கமும் பார்த்துவிட்டு மீண்டும் கொத்தியது.
பள்ளத்தாக்கிலிருந்து காகங்கள் கரையும் சத்தம் ஒன்று சேர்ந்து மேலெழுந்து வந்தது. அது பசிக் கொண்ட காகங்களின் கரைதல் என்று குச்சிமிட்டாய்க்குத் தெரியும். வீட்டிற்கு வெளியில் இருந்த நெல்லி மரம் அசைந்து நகர்ந்து வருவதைப் போன்ற ஒரு பிரமை ஏற்பட்டதும் குச்சிமிட்டாய் கண்களைப் பொத்திக் கொண்டு அப்படியே சுருண்டான். முன்கதவு திறக்கப்பட்டு சரவணன் வெளியில் வந்தான்.
“குச்சி! எதுமே தெரியாம ஏன் குச்சி இப்படிப் படுத்துத் தூங்கற… நீ இருக்கறது ஒரு கனவுக்குள்ளன்னு நினைக்கிறீயா? வா… கொஞ்ச நேரம் உள்ள போகலாம்…”
சரவணன் குச்சிமிட்டாயைத் தூக்கிக் கொண்டு மெலாந்தி வீட்டிற்குள் நுழைகிறான். பள்ளத்தாக்கிலிருந்து இப்பொழுது ஓர் இரம்மியமான ஓசை கேட்டது. காற்று பாறைகளில் மோதி சோகம் தாளாமல் பள்ளத்தில் சரிந்து கொண்டிருக்கும் ஓர் ஓசை. கேட்கும்போது மனம் இலேசாகின்றது.
சரவணன் குச்சிமிட்டாயை நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு அவன் முகத்தில் தண்ணீரைத் தெளிக்கின்றான். குச்சி அலறிக் கொண்டு எழுகிறான்.
“தனா! காப்பாத்து!”
“குச்சி! யாரு அது தனா? உனக்கு வேண்டியவனா குச்சி?”
“பாங்! என்ன பாங் நீங்க? ஒரு நேரத்துக்கு ஒரு மாதிரி பேசறீங்க? எனக்கு ஒன்னுமே புரியல பாங்…”
குச்சிமிட்டாயின் முகம் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தது. சிவந்த கண்கள் அலறிய நிலையிலேயே நிலைத்திருந்தன. அதைச் சரவணன் ஆழமாகக் கண்ணுற்றான்.
“குச்சி! பாவம் ஒரு சாத்தான் மாதிரி. செஞ்ச அத்தன பாவங்களயும் விட்டு எவ்ள தூரம் தப்பிச்சி போக முடியும்? கடவுள் என்ன முட்டாளா குச்சி?”
“பாங்… நான் அப்படி…”
“உன்ன சொல்லல குச்சி. நான் என்ன சொல்லிக்கிட்டன். இந்தப் பள்ளத்தாக்கு நமக்குக் கத்துக்கொடுக்க இன்னும் ஆயிரம் கதைகள வச்சிருக்கு… அத பாத்துக்கிட்டே இருந்து பாரேன், குச்சி. அப்படியே மனசு இலேசாகி… அப்படியே முட்டிக்காலு போட்டு நம்மயே ஒப்படைச்சிருலாம், குச்சி…”
இருவரும் மெலாந்தி பள்ளத்தாக்கைப் பார்த்தார்கள். புளிய மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒன்று கிளையில் ஏறி நின்று பள்ளத்தாக்கில் குதித்து எங்கோ தாவியோடி மறைந்தது.
“குச்சி! இப்படிலாம் ஓடி ஒளிஞ்சிர முடியுமா நம்மனால? கட்டி வித்துட்டு… இப்ப இங்க வந்து ஒளிஞ்சிகிட்டா இன்னும் நூறு வருசம் வாழ்ந்துரலாம்தானே? செம்ம… செம்ம… வாழ்க்கடா வாழ்க்க…”
குச்சிமிட்டாய் வார்த்தைகளை மென்று விழுங்கினான். மேற்கொண்டு ஏதும் பேச நினைத்தாலும் அவனுக்குள் தடுமாற்றம். முன்கதவு பூட்டப்பட்டிருந்தது.
“பாங்! நான் இப்ப கனவுல இருக்கன். நீங்க சரவணன் இல்ல… எனக்கு ஏதோ ஆச்சு பாங். இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல நான் தூக்கத்துலயோ மயக்கத்துலயோ… விட்டு எழுஞ்சிருப்பன் பாருங்களன்… சும்மா இதெல்லாம் கனவு… கிறுக்கு…”
குச்சி தலையில் ஓங்கி அடித்துக் கொண்டான். சரவணன் மூச்சை ஆழமாக இழுத்து வெளியில் விட்டவாறே மேசையில் ஒரு கத்தியை எடுத்து வைத்தான். அதன் கூர்மை பளப்பளத்தது.
“குச்சி! இந்தக் கத்தி இருக்குல… இதுக்கு கஞ்சா வித்தவன்… கஞ்சா வாங்கனவன்… தானத் தர்மம் செஞ்சவன், கனவுல இருக்கறவன், கனவுக்கு வெளில இருக்கறவன்… இப்படி எவனா இருந்தாலும்… இதுக்குத் தெரியாது. எந்த வீணப்போனவன் இத பிடிக்கறானோ அவனுக்கு வாலாட்டும்…”
குச்சி அக்கத்தியைப் பயத்துடன் கவனித்தான். சுவரில் இருந்த அந்த அகோரி போன்ற தோற்றமளிக்கும் படத்தையும் பார்த்தான். அப்படத்திலும் அகோரியின் கையில் ஒரு கத்தி.
“குச்சி. இந்தப் படம் இருக்குலே… உனக்கு எதாச்சம் ஞாபகம் வருதான்னு கேட்டன்… நீ ஒன்னுமே சொல்லல?”
“பாங்! இந்த வீட்ட சுத்தம் பண்ணும்போதே இந்தப் படம் சுவர்லத்தான் இருந்துச்சி. நான் எடுத்துத் துடைச்சி திரும்பியும் வச்சிட்டன்…”
இரண்டு அறைகளுக்கும் செல்லும் நடுப்பாதையில் அப்படம் தொடங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் பழுப்பேறிய பலகை சுவருக்கு ஏற்ற வர்ணத்தில் படம் பழமையடைந்து தெரிந்தது.
“குச்சி! இது 1882ல இங்க தங்கியிருந்த பிரிட்டிஷ்காரனோட. அவனோட அப்பாவுக்கு இது இந்தியாவுல அதுக்கும் முன்ன கிடைச்சது… இப்படி இந்தப் படத்துக்குப் பல நூறு வருசம் கத இருக்கு குச்சி. ஆனா இந்தப் படத்துக்கும் உனக்கும்கூட ஒரு லின்க் இருக்கு குச்சி… நல்லா யோசிச்சி அப்புறம் நான் சாவறத்துக்குள்ள சொல்லு…”
குச்சி மீண்டும் அப்படத்தை உற்று நோக்கினான். அப்படத்திலுள்ள அகோரி சட்டென தனசேகராகவும் சுப்பாம்மாவாகவும் மாறி மாறித் தெரிந்தது. குச்சிமிட்டாய்க்கு ஒன்றுமே புரியவில்லை.
“குச்சி! இங்க கீழ பள்ளத்தாக்குல மாமுண்டி கோயில் இருக்காம்… போய்ருக்கியா? நீதான் கம்பத்துல இருக்கறவன். பெரிய தவுக்கே வேற… உனக்குத் தெரியாததா?”
“கேள்விப்பட்டுருக்கன் பாங். முன்ன இருந்தவங்க சொன்னாங்க. பள்ளத்தாக்கு பெரிய காடு. அதுல போய் யாரும் பாத்ததில்ல… எங்க அப்பா சொல்லிருக்காரு. அவரு அப்பா அங்கப் போய் சூடம் கொளுத்திட்டு வருவாருன்னு…”
சரவணன் எழுந்து பள்ளத்தாக்கிலிருந்து வரும் காற்றைச் சுவாசித்தான். வெண்சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.
“இந்தக் காத்துல… பாவம்… அழுக்கு, ரத்தம்… சாமி… எல்லாம் இருக்கு குச்சி… இந்தக் காத்துல உன் காத்து என் காத்து உங்க அப்பா காத்து… எல்லாம் இருக்கு குச்சி…நல்லா மூச்ச இழு… எப்ப இந்த மூச்சு போவும்னு தெரியாது…”
குச்சிமிட்டாய் காற்றை உள்ளிழுத்துப் பெருமூச்சை விட்டான். சரவணனுக்குப் பின்னால் வந்து நின்ற மூர்த்தியின் உருவத்தைக் கண்டு குச்சிமிட்டாய் மிரண்டு மீண்டும் தரையில் சரிந்தான்.
- தொடரும்
ஆக்கம்: கே.பாலமுருகன்
(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)
பாகம் 1-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/
பாகம் 2-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/
பாகம் 3-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/
பாகம் 4-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/
பாகம் 5-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/
பாகம் 6-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/10/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-6/
பாகம் 7-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/11/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-7/
பாகம் 8-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/12/மெலாந்தி-பள்ளத்தாக்கு-8/
பாகம் 9-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/13/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-9/