மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 9

 

பாகம் 9

மெலாந்தி வீடு மிகவும் அபூர்வமான வடிவமைப்பைக் கொண்டது. பிரிட்டிஷ் காலத்தில் இங்குத் தங்கியிருந்த மேனஜருக்காக லேவின் எனும் கொத்தானாரின் தலைமையில் கட்டப்பட்டது.

மெலாந்தி பள்ளத்தாக்கைக் கவனிக்கும் வகையில் இலேசான மேட்டில் அமையப் பெற்றிருக்கும் அவ்வீட்டிற்குக் கொஞ்சம் மேலே ஏறி நடக்க வேண்டும். முன்வாசலின் கூரை கூம்பு வடிவில் மற்ற கூரைகளை விட உயர்ந்து மேலேறி குவிந்திருக்கும். சுற்றிலும் பலககையில் வடிவமைக்கப்பட்ட மரத்தூண்கள். கொஞ்சமும் பழுதாகாமல் அப்படியே நிலைத்திருந்தது ஆச்சரியம்தான்.

குச்சிமிட்டாய் தனசேகரின் ஆலோசனையின்படி இவ்வீட்டைச் சுத்தம் செய்யும்போதும் முழுவதும் கவனித்தான். ஆங்காங்கே பலநாள் பிடித்திருந்த ஒட்டடைகள், பழைய பொருள்களின் இருப்பு உருவாக்கிய வடுக்கள், மேலும் செத்த மிருகங்களில் கொடூரமான வீச்சம் தவிர பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட அவ்வீட்டில் வேறெந்த பழுதையும் பார்க்க இயலவில்லை.

“என்ன வீடுடா இது? தேக்கு!…”

குச்சிமிட்டாய் அவ்வீட்டைச் சுத்தம் செய்யும்போது பிதற்றிய ஒரே வார்த்தை வீடு முழுவதும் வியாபித்திருந்த ஆச்சரியமான கட்டமைப்பைப் பற்றியே.

“வாங்க உள்ள போலாம்…”

வந்திருந்த மூவரையும் அழைத்துக் கொண்டு குச்சிமிட்டாய் மேலே வீட்டிற்கு மெல்ல ஏறினான். இரவு பனி பாதையை ஈரப்படுத்தியிருந்தது. சிறுமி பாதங்களை மண்ணில் அழுந்த நடந்ததால் எழுந்த ஒருவித சத்தம் குச்சிமிட்டாய்க்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சட்டென அவளைத் திரும்பி பார்த்து முறைத்தான்.

“தம்பி! நாளைக்குக் காலைல எத்தன மணிக்கு வருவீங்க?”

“சீக்கிரம் வந்துருவன். காலைல மாணிக்கம் வந்தோன கூட்டிக்கிட்டு உங்களயும் வந்து ஏத்திக்கறன்…”

குச்சிமிட்டாய் பின்னால் தயக்கத்துடன் வந்த அப்பெண்மணியைக் கவனித்தான். இருளில் அவளுடைய கண்கள் தனித்துத் தெரிந்தன. எச்சரிக்கை மிகுந்த பார்வை. அக்கண்களில் குச்சிமிட்டாய் சுப்பம்மாவைத் தேட முயன்றான். அவனுக்குள் ஏதோ ஒரு அழுத்தம் தோன்றி மறைந்தது. மனத்தை மெலாந்தி காடு முழுவதும் அலையவிட்டான். மொத்த காடும் அவனுக்குள் இறங்கி அழுத்தியது.

குச்சிமிட்டாய் வைத்திருந்த சாவியைக் கொண்டு முன்கதவை மெல்ல திறந்தான். வீடு இருண்டிருந்தது. வலது மூலையிலுள்ள அறையில் மட்டும் சிறிய வெளிச்சம். மூர்த்தி தங்கியிருந்த அறை. அநேகமாக அவன் சந்தேகத்தில் கதவை திறந்த வர வாய்ப்புண்டு. குச்சிமிட்டாய் சத்தமில்லாமல் அவர்கள் மூவரையும் இன்னொரு அறைக்குள் அனுப்பினான்.

“கதவ பூட்டிராதீங்க. இங்க வெளிலேந்து கூப்டா வெளங்காது. எல்லாம் பெரிய தேக்கு. சத்தம் உள்ளயே அடங்கிக்கும்… அதனால கதவ பூட்டாம சும்மா சாத்தியே வை…”

குச்சிமிட்டாய் மீண்டும் அறைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்வையை அலையவிட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்தான். எப்படியும் இவரைவிட அவளுக்கு வயது பத்தாண்டுகள் குறைவாக இருக்கலாம் என்று கணித்தான்.

“உள்ள எல்லாம் வசதியா இருக்கா?”

குச்சிமிட்டாய் அவளிடம் முதல்முறையாகப் பேச்சுக் கொடுத்தான். அவள் தன் கணவனைப் பார்த்துக் கொண்டே அறை ஒவ்வாததைப் போல சிணுங்கினாள்.

“பல வருசம் வீடு… அந்தக் காலத்து தேக்கு… பயப்படாம தூங்கலாம்… யோ! கதவ பூட்டிராத… இரு தண்ணீ கொண்டு வந்து தரன்…”

குச்சிமிட்டாய் சமையலறை பக்கம் மெல்ல நடந்தான். அறையில் பதுக்கப்பட்டிருந்த மூர்த்தி அறைக்கதவைத் திறந்து குச்சிமிட்டாய் வருவதைப் பார்த்தான்.

“குச்சி! என்ன இது? யார கொண்டு வந்துருக்க?”

“பாங்! கோச்சிக்காதீங்க. லோரி கெட்டுப்போச்சு அவுங்களுக்கு. உதவிக்கும் யாரும் இல்ல. அதான் இன்னிக்கு ஒரு ராத்திரித்தான்…”

“யோ! இந்த வீடுக்கு உன்ன தவிர யாரும் வரமாட்டாங்கன்னு சொன்ன? எல்லா வெளயாடுறீயா?”

மூர்த்தி சற்றுப் பதறினான். இரண்டு மாதங்களுக்கு முன்பு காவல்துறையால் சுற்றப்பட்டு தப்பித்தோம் என்று பலநாள் இரவுகள் கனவுந்தில் மறைக்கப்பட்டு மலேசியா முழுவதும் சுற்றியலைந்து இங்கு வந்திருக்கிறான். ஆக, மரணப் பயம் அவனைச் சுற்றி ஒரு வலையைப் பின்னியிருந்தது.

“பாங்! இந்த இடம் என் கொண்ட்ரோல்ல இருக்கு. ஒரு ஈ காக்கா இங்க வராது. இவுங்களே நெனைச்சாலும் இந்தப் பக்கம்லாம் காட்டுக்குள்ள வர மாட்டாங்க. நீங்க ஏன் பயப்படுறீங்க. நான் பாத்துக்கறன்…”

மூர்த்தி மீண்டும் கதவை அடைத்துக் கொண்டான்.

“இவன் ஒரு தொடை நடுங்கி…” என்று சலித்தவாறே குச்சிமிட்டாய் சமையலறையில் இருந்த ஒரு நீர்ப்புட்டியில் தண்ணீரை நிரப்பினான். மெலாந்தி பள்ளத்தாக்கை அங்கிருந்து நன்றாகப் பார்க்க முடியும். பனி மூடிய பெருங்காடு அவனுக்கு முன்னே விரிந்திருந்தது. சிறிது நேரம் அவ்விருட்டை ஊடுருவி கவனித்தான்.  மெலாந்தி பள்ளத்தாக்கு மௌனத்துடன் அவ்விருளில் ஒளிந்திருந்தது. எங்கிருந்தோ ஆந்தைகள் அலரும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

“என்னா ராத்திரில ஆந்த அலருது. நல்லதுக்கு இல்லைய… ஆமாம்… நம்மள தாண்டி ஆந்தயோ புலியோ… என்னா கிழிச்சிரும்…”

குச்சி முனகிக் கொண்டே அவர்கள் இருக்கும் அறைக்குச் சென்றான். வெளியில் பனி வீட்டைச் சுற்றி காவலாளியைப் போல சுற்றிக் கொண்டிருந்தது. இரப்பர் காட்டைச் சுற்றி ஆந்தைகளின் அலறல் விநோதமாக ஒலித்து மீண்டும் அடங்கின.

அறைக்கதவை அவள்தான் திறந்தாள். கண்களில் உறக்கத் தவிப்பு. விட்டால் அடுத்த நிமிடம் கனவிற்குள் மூழ்கிவிடக் காத்திருக்கும் ஏக்கமிகு கண்கள்.

“ஏதும் வேணும்னா கூப்டுங்க. சொந்த வீடு மாதிரி நினைச்சிக்குங்க…”

தண்ணீரை வாங்கிக் கொண்டு அவள் மீண்டும் கதவை அடைக்கும்போது சிறுமி அவருடைய மார்பில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. மீண்டும் ஆந்தைகளில் அலறல் காட்டை அசைத்துக் கொண்டிருந்தது. அக்கொடிய சத்தம் வீட்டைச் சுற்றி கேட்டுவிட்டு எதிரொலியைப் போல மெலாந்தி பள்ளத்தாக்கில் விழுந்து கொண்டிருந்தது.

குச்சிமிட்டாய் வெளிக்கதவைத் திறந்து வெண்சுருட்டைப் பற்ற வைத்தான். பெரியசாமியின் மகிழுந்து தூரத்தில் இருளில் இலேசாக மின்னியது. மீண்டும் கம்பத்திற்குப் போக மனமில்லாமல் அங்கேயே நின்றிருந்தான். அவனுக்குள் மெலாந்தி காட்டின் இருள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்படியே வெளிவரந்தாவில் அமர்ந்து வீசிக் கொண்டிருந்த குளிர்க்காற்றை உள்ளிழுத்துக் கொண்டிருந்தான் குச்சிமிட்டாய்.

அறைக்கதவு திறக்கும் சத்தம் தூரத்தில் கேட்டது. பின்னர் காலடி சத்தம் வெளிவரந்தாவை நெருங்கிக் கொண்டிருந்தது. குச்சிமிட்டாய் அசையவில்லை. யார் வந்தாலும் பேசிக்கொள்ளலாம் என்று அமர்ந்திருந்தான். மீண்டும் கதவு திறக்கும் சத்தமே கேட்டது.

“யாரு கதவ தொறந்து தொறந்து சாத்துறது…?”

மீண்டும் குச்சிமிட்டாய் முனகினான். ஆனால் எழுந்து செல்லவில்லை. ஆந்தை இப்பொழுது பலம் கொண்டு அலறியிருக்கலாம். சத்தம் எல்லாத் திசைகளுக்குள்ளும் எதிரொலித்து இரப்பர் காட்டை நெருங்கி மீண்டும் கரைந்தது.

  • தொடரும்

ஆக்கம்: கே.பாலமுருகன் 

(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)

பாகம் 1-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/

பாகம் 2-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/

பாகம் 3-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/

பாகம் 4-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/

பாகம் 5-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/

பாகம் 6-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/10/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-6/

பாகம் 7-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/11/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-7/

பாகம் 8-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/12/மெலாந்தி-பள்ளத்தாக்கு-8/