மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 4
பாகம் 4
குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்.
மெலாந்தி வீடு
இறக்கைகள் பழுப்பு நிறத்திலுள்ள கழுகொன்று மெலாந்தி பள்ளத்தாக்கைக் கடந்து கொண்டிருந்தது. பாறைகளில் பட்டுடைந்து கொண்டிருந்த அதன் நிழல் ஒரு நர்த்தணம் போல தோன்றி மறைந்தது.
கீழே மயங்கி கிடந்த குச்சிமிட்டாய் கண்விழிக்கும்வரை சரவணன் காத்துக் கொண்டிருந்தான். அதுவரை பள்ளத்தாக்கை நோட்டமிடுவது சரவணனின் மனத்தைச் சிறிது அமைதிப்படுத்தியது. மண்ணைப் பிளந்து கொண்டிருந்த பலநூறு வேர்கள் சுற்றி வளைத்திருந்த புளியமரம் அதன் பாதி கிளைகளைப் பள்ளத்தாக்கிற்குப் பறிக்கொடுத்துவிட்டு மீதமுள்ள கிளைகளுடன் நின்றசைந்து கொண்டிருந்தது.
குச்சிமிட்டாய் முனகிக் கொண்டே மெல்ல கண் விழித்தான். அவன் கால்கள் பலமிழந்து காணப்பட்டன. உடலில் ஒருவிதமான உதறலுடன் எழ முயன்று மீண்டும் படுத்துக் கொண்டான்.
“பாங்! என்ன ஆச்சு பாங்? ஏன் சட்டுனு அடிச்சிட்டிங்க?”
வார்த்தைகள் தடுமாறின. குச்சிமிட்டாய் தலையை மட்டும் மெல்ல தூக்கி சரவணனைப் பார்த்தான்.
“குச்சி! நீ இல்லைன்னா எனக்கு இங்க ஒன்னுமே இல்ல. எத்தன நாளு குச்சி? ஒரு மாசம்னு சொன்னாங்களா? செத்துருவன் குச்சி. இன்னிக்கு என் கதை முடிஞ்சிரும். அதுக்கப்பறம் உனக்கு விடுதலை…”
சரவணன் சற்று முன்பு கடந்துபோன கழுகு மீண்டும் நாரை ஒன்றை காலில் கௌவ்விக் கொண்டு மெலாந்தி காட்டை நோக்கி பறந்து போவதைப் பார்த்தான். சரவணனின் உதட்டினோரம் மிளிர்ந்த புன்னகையைக் குச்சிமிட்டாய் கவனித்தான். அவன் நிதானம் பெற்று இப்பொழுது எழுந்து உட்கார்ந்தான். கைகளில் இருந்த வலி தோள்பட்டைவரை பரவியிருந்தது.
“பாங்! அதுக்கு ஏன் என்ன அடிச்சிங்க? நான் போய்த்தான் உங்களுக்குச் சாப்பாடுலாம் ரெடி பண்ணனும். அதுக்குத்தானே போகணும்னு சொன்னன்?”
“அட என்ன குச்சி சும்மா சும்மா சாப்பாடு! சாப்பாடுன்னு புலம்பிக்கிட்டு இருக்க? எத்தன பேரோட கழுத்தறுக்க நீ சாப்பாடு கொண்டு வந்துருக்க குச்சி? அத நெனைச்சி பார்த்தியா?”
சரவணனுக்குச் சட்டென்று கோபம் ஏறி தலைக்குள் உட்கார்ந்துகொண்டது. கண்கள் சிவக்கக் கீழே அமர்ந்திருக்கும் குச்சிமிட்டாயைப் பார்த்தான்.
“பாங்! திரும்பியும் எதையாவது தூக்கி அடிச்சிறாதீங்க. நான் எங்கயும் போகல. இங்கயே இருக்கன். நீங்க எப்ப சொல்றீங்களோ அப்போ போறன்…”
“வேற வழி இல்ல குச்சி உனக்கு. நான் சாகற வரைக்கும் நீ இங்கத்தான் இருந்தாகணும்…”
புளியமரத்தில் அமர்ந்திருந்த ஊதாநிற தேன்சிட்டு வெகுநேரம் பள்ளத்தாக்கைப் பார்த்து சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தது. வெயில் பட்டு மின்னிக் கொண்டிருந்த அதன் உடலில் கருமையும் ஊதாவும் சட்டென உறுதி செய்துகொள்ள முடியாத அளவில் ஒரு மாய விளையாட்டைக் காட்டிக் கொண்டிருந்தது. பள்ளத்தாக்கிலுள்ள ஏதோவொரு பூக்கள் நிரம்பிய இடத்தை நோக்கி பறக்கத் தயாராக இருந்திருக்கலாம் போல. சரவணன் அதன் ஒலியைக் கேட்டு அமைதியுடன் நின்றிருந்தான்.
“இந்தப் பள்ளத்தாக்கு மட்டும் இல்லைன்னா நான் உன்ன எப்பவோ கொன்னுருப்பேன் குச்சி. நீ உண்மையில அதிர்ஷ்டசாலி. இந்தப் பள்ளத்தாக்குத்தான் உனக்குக் கடவுள்…”
“என்ன பாங் ஏதேதோ பேசறீங்க? எனக்குப் பயமா இருக்கு பாங்…”
சரவணன் மேசையிலிருந்த வெண்சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அமைதியும் ஆத்திரமும் அவனுக்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. அவனுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் எதையோ அடக்கியாள சரவணன் போராடிக் கொண்டிருந்தான்.
“பாங்! ஏதோ ஒரு பிள்ள வந்த மாதிரி இருந்துச்சே? இந்த வீட்டுல…”
“குச்சி! உனக்குச் சித்தம் கலங்கிருச்சி. அதான் ஏதேதோ கண்ணுக்குத் தெரியுது…”
குச்சிமிட்டாய் வீட்டைச் சுற்றிலும் பார்த்தான். சுவரில் இருந்த அகோரி ஓவியத்தைத் தவிர வேறெதுவும் அற்று வெறுமையோடு காட்சியளித்தது. அந்த அகோரி ஓவியத்தில் இருந்தவர் ஆக்ரோஷமாக வலது கையைத் தலைக்கு மேல் உயர்த்தியும் இடது காலைத் தூக்கியபடியும் கண்களை உருட்டியவாறு பார்த்துக் கொண்டிருந்தார்.
“குச்சி அந்த ஓவியத்தைப் பார்க்குறீயா? ஏதோ ஒன்னு ஞாபகத்துக்கு வருதுதானே?”
சரவணன் பயத்தின் உச்சத்தில் இருந்த குச்சிமிட்டாயைப் பார்த்தான்.
“பாங்! உங்களுக்கு எப்படி… அது… பாங்! நீங்க யாரு?”
குச்சிமிட்டாய்க்கு உடலும் மனமும் பதறின. முட்டியில் எப்பொழுதோ ஏற்பட்ட காயம் சீண்டப்பட்டு இலேசாக குருதி வடிந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். கால் முட்டிகளை இறுக பிடித்துக் கொண்டு முதுகிற்கு முட்டுக் கொடுக்கச் சுவரை நோக்கி தரையிலேயே மெல்ல நகர்ந்தான்.
“எதையும் விட்டு ஓட முடியாது குச்சி! கழுகு காலில் இரை… நல்லாருக்குலே வரி? கவிதை பிடிக்குமா குச்சி? உனக்குத்தான் இரசனை ரொம்ப…”
குச்சி சுவரோடு சாய்ந்து கொண்டதும் முட்டியில் வடிந்த குருதியைக் கைகளால் துடைத்துப் பார்த்தான். காயம் பெரிதாகியிருந்தது. விழுந்ததில் பழைய காயம் சீண்டப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.
“குச்சி! அந்தப் பிள்ள யாருன்னு கேட்டியே? அது அந்த ரூம்புலத்தான் இருக்கு. விளையாடிகிட்டு இருக்கு. விதின்னு ஒரு நண்பன். அவனோட விளையாடிக்கிட்டு இருக்கு குச்சி?”
சரவணன் மெல்ல சிரித்துவிட்டுக் கையில் வைத்திருந்த வெண்சுருட்டைச் சன்னலுக்கு வெளியே தூக்கி வீசினான். மெலாந்தி பள்ளத்தாக்கின் இரம்மியான காற்றில் குயில் கூவும் சத்தம் சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
“பாங்!…”
சரவணன் கழுகு பார்வையுடன் குச்சிமிட்டாயை நோக்கி கவனித்துக் கொண்டிருந்தான்.
-தொடரும்
ஆக்கம்: கே.பாலமுருகன்
பாகம் 1-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/
பாகம் 2-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/
பாகம் 3-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/