தமிழ் விடிவெள்ளி பயிற்றி (ஆண்டு 1 – ஆண்டு 3 வரை)

 

📕ஓதுவதொழியேல்📘

வீட்டிலிருந்து கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வந்தபோதே பள்ளிக்குப் போக முடியாமல் வீட்டில் இருக்கும் மாணவர்களைப் பற்றிய சிந்தனைத்தான் முதலில் எழுந்தது. அச்சிந்தனையைச் செயல்வடிவமாக்கும் பொருட்டு நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் வெளியிடப்படும் இரண்டாவது பயிற்றி இது. ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரையிலான மாணவர்கள் தமிழ்மொழியில் பயன்பெற வேண்டும் பொருட்டு உருவாக்கப்பட்டுப் பகிரப்படுகிறது.

என்னுடன் இணைந்து இப்பயிற்றியை உருவாக்கிய ஆசிரியை திருமதி ப.பிரேமா அவர்களுக்கும் நன்றி.

🔊Share To All.🔊

இப்பயிற்றி முற்றிலும் இலவசமாகவே பகிரப்படுகிறது. அனைத்துப் பயிற்சிகளும் புதிதாகும். பகிர்ந்து அனைவரும் நன்மை பெறச் செய்வோம்.
நன்றி

ஆசிரியர்/எழுத்தாளர்
கே.பாலமுருகன்

To download the PDF file click below link.

http://www.mediafire.com/file/eto3ubsd86j4l65/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D_%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25BF_%25E0%25AE%25AA%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF_%25E0%25AE%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581_1_-3.pdf/file

மாணவர்களின் குறுங்கதைகள் பாகம் 1: கொரோனா குறுங்கதைகள்

உலகம் எதிர்நோக்கியிருக்கும் கடுமையான கொரோனா தாக்கங்கள் குறித்து நான் மூன்று குறுங்கதைகள் எழுதி வெளியிட்டிருந்தேன். அவை  பலரின் வாசகப் பார்வையைப் பெற்ற குறுங்கதைகள் அத்துடன் நின்றுவிடாமல் இந்நாட்டிலுள்ள மாணவர்களையும் பாதித்துள்ளன. அதன் விளைவாக இரண்டு மாணவர்கள் சுயமாக கொரோனா கிருமியின் பாதிப்பு தொடர்பாக குறுங்கதைகள் எழுதி அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள். அக்குறுங்கதைகளை இங்குத் திருத்தி வெளியீடுகிறேன்.

நன்றி

கே.பாலமுருகன்

 

 

குறுங்கதை 1: மனிதம் வெல்லும்

-க.தமிழ்ச்செல்வன் (SJKT St Theresa’s Convent தைப்பிங், பேரா)

“அப்பாடா! எப்படியோ இந்த பேஷண்ட காபாத்தியாச்சு! நல்ல வேளை!” என்று தம் மனத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது அவருக்கு. எப்படியோ இந்தக் கொரோனா நச்சுயிரியால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இருபத்து நான்கு வயது இளைஞரைக் காப்பாற்றிவிட்டோம் என்று தாள முடியாத மகிழ்ச்சி மருத்துவர் ரவிக்கு.

“சார் இந்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். தெய்வம் சார் நீங்க. நன்றி சார்,” என நன்றி மழை பொழிந்தார் அந்த இளைஞனின் தாய். கடந்த இரண்டு நாள்களாக தூக்கமே இல்லை அவருக்கு.

தம் மனைவி, பிள்ளைகளின் நிலையைப் பற்றி யோசித்துக் கொண்டே அமர்ந்த இடத்திலே மெல்ல கண் அயர்ந்தார்.

“சார் ஜெயிச்சிட்டீங்க! வெற்றிக்கரமா நூற்று ஐம்பது பேரோட உயிரைக் காப்பாத்திட்டீங்க! இந்தச் சாதனைக்கு இனிமேல இந்த சுங்கை புலோ ஹொஸ்பித்தலோட வைரஸ் அவசர சிகிச்சை பிரிவோட(ஐ.சி.யூ) தலைவர் நீங்கத்தான்!” என்று யாரோ ஒருவர் கூறியது அவர் காதில் ஒலிக்காமல் இல்லை.

“சார்!” என்று ஒரு தாதி அவரை நோக்கி ஓடி வரவும் திரு.ரவி நித்திரையைத் துறக்கவும் சரியாக இருந்தது.

“சில வினாடி நித்திரையில் கிடைத்த பேரின்பமா?” வெறும் கனவுதான் என்று உணர்வதற்குள் தாதியின் குரல் மீண்டும் ஒலித்தது.

“சார்! இன்னிக்கு மேலும் நூற்று ஐம்பத்து மூன்று கேஸும் நான்கு புதிய இறப்பும் பதிவாயிருக்கு! சீக்கிரம் வாங்க சார்!” என்று அந்தத் தாதி மிகவும் பரப்பரப்பாக அழைத்தார். கண்ணில் வழிந்த நீர்த்துளிகளை யாருக்கும் தெரியாமல் துடைத்துவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்தார் மருத்துவர் ரவி.

மனிதம் கொரோனாவை வெல்லும் என்ற கொள்கை அவரைப் பின்தொடர்ந்து சென்றது.

 

குறுங்கதை 2: கொரோனாவும் இராணுவமும்

-ரேஷ்மன் மதிவாணன் (பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி)

 

இது கொரோனாவால் கொடுக்கப்பட்ட விடுமுறை. கொரோனாவுக்கு விடுமுறை கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம். ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்ததால் ஊரே வெறிச்சோடி காணப்பட்டது. ஆரியனோ நீண்ட நேரம் உறங்கிக் கொண்டிருந்தான். காலையிலேயே ஆரியனின் அம்மாவிற்கும் அவன் அண்ணனுக்கும் நடந்து கொண்டிருந்த வாதத்தால் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தம் கேட்டு எழுந்து வந்தான் அவன்.

“நான் என் நண்பர்களுடன் வெளியே போகணும். வீட்டிலேயே உட்கார்ந்து எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு!” என்று வெறுப்புடன் கூறினார் ஆரியனின் அண்ணன்.

“இருக்கும்… இருக்கும் உனக்கு எல்லாம் இருக்கும். அப்புறம் கொரோனா வந்துருச்சு சீக்கு வந்துருச்சின்னு என்னக் கூப்பிடாத. ஊரே பேசாம கப்சுப்புனு இருக்கு. உனக்கு என்ன வந்துச்சு?” என்று அம்மா பதிலடி கொடுத்தார். அண்ணன் எரிச்சலுடன் நாற்காலியில் சென்று அமர்ந்தார்.
ஆரியனால் இந்த வாதத்தைக் கேட்க முடியவில்லை. ஆரியனின் கால்களோ வாசலில் நின்று கொண்டிருந்த தன் மிதிவண்டியை நோக்கி நகர்ந்தன. வெளியில் சென்று தன் மிதிவண்டியை ஓட்ட முடியவில்லையே என்று ஏக்கத்தோடு அவன் மிதிவண்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது. வெளியில் ஏதோ சத்தம் கேட்டது.

‘என்னடா இது ஊரடங்குச் சட்டம் அமலுக்குக் கொண்டு வந்திருக்காங்க என்று அப்பா சொன்னாரு. யாரும் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதே. அப்படி இருந்தும் யாரு இவங்க எல்லாம்? வெளியே நடமாடிக் கொண்டு இருக்காங்க?’ என்ற கேள்வி அலைகள் அவன் மனதுக்குள் எழுந்தது. சற்று குழப்பத்துடனே,  “அப்பா… அப்பா” என்று கத்திக் கொண்டு வீட்டினுள் ஓடினான்.

“அப்பா சீக்கிரம் கொஞ்சம் வெளிய வந்து பாருங்களேன்!” என்று அப்பாவின் கையை அழுத்தமாகப் பிடித்து இழுத்தான் ஆரியன்.

“என்னய்யா… நில்லு வரேன்” என்று கூறிக்கொண்டே அப்பாவும் அவனுடன் சென்றார்.
“அப்பா நீங்க சொன்னீங்க தானே நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவு போட்டிருக்காங்க யாரும் அநாவசியமா வெளியே போகக் கூடாதுன்னு. அதனாலதானே அண்ணன்கூட அம்மா வெளியே போக அனுமதிக்கல. ஆனா அங்க பாருங்க இரண்டு ஆடவர்கள் சாலையின் முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறார்கள்!” என்றான்.
அப்பா பார்க்கும் பொழுது அந்த இரு ஆடவர்களும் கம்பீரத் தோற்றத்துடன். எல்லா பாதுகாப்பு கவசங்களும் அணிந்த வண்ணம் காணப்பட்டனர்.
“ஓ… இவங்களா? இவங்கெல்லாம் வருவாங்கன்னு நேற்றே செய்தியிலச சொன்னாங்க,” என்று அப்பா கூறியதும், “யாரப்பா அது” என்று ஆரியன் கேட்டான்.

“அவங்க தான்யா நம்ம நாட்டு இராணுவ வீரர்கள். தன் குடும்பத்தைப் பிரிந்து எதிரிகள் நம்மை தாக்கக் கூடாதுனு நாட்டு எல்லையில் இருந்து காவல் காத்தவர்கள், இப்போ வேறு நாட்டிலிருந்து வந்த நோய் நம்மை தாக்கக் கூடாது என்று நாட்டு உள்ளே வந்து காவல் காக்கப் போறாங்க. மக்கள் உயிரைக் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் இவங்களின் தியாகத்த என்னான்னு சொல்றது…” என்று அப்பா கூறிக்கொண்டே பெருமூச்சு விட்டார். அப்பா கூறியதைக் கேட்ட ஆரியனின் எண்ண அலைகள் எங்கேயோ எதையோ நோக்கி பறந்தன. அந்த இராணுவ வீரர்களை ஒரு கடவுளை போல் பார்த்தான் ஆரியன்.
முற்றும்.

எனது மூன்று குறுங்கதைகளின் இணைப்பு:

  1. https://balamurugan.org/2020/03/18/குறுங்கதை-கொரோனாவும்-மா/
  2. https://balamurugan.org/2020/03/19/குறுங்கதை-2-கொரோனாவும்-தா/
  3. https://balamurugan.org/2020/03/20/குறுங்கதை-3-கொரோனாவும்-ம/