கவிதை: இனியவளின் வாக்கியம் அமைத்தல்

இனியவள்
வாக்கியம் அமைக்கத்
துவங்குகிறாள்.

மாமா மிதிவண்டியைக்
கழுவுகிறார்.

அம்மா கறி
சமைக்கிறார்.

அண்ணன் பந்து
விளையாடுகிறான்.

தங்கை
தொட்டிலில் உறங்குகிறாள்.

அப்பா
இறந்து விட்டார்.

இனியவளின் ஐந்தாவது வாக்கியத்திற்குப்
பிழை கிடைக்கிறது.

வாக்கியம்
நிகழ்காலத்தில்
இருத்தல் வேண்டும்
என்பதே விதிமுறை.

இனியவளுக்கு
சில சந்தேகங்கள்
எழுகின்றன.

இறப்பது என்பது
வினைச்சொல்லா?

இந்த வினை
எப்பொழுது நிகழும்?

இச்செயலின்
செயப்படுபொருள்
யாது?

அப்பாவின்
வேலையில்லாத
நாள்களா?

அல்லது

அப்பாவின்
சூதாட்டத் தோல்வியா?

அல்லது

அப்பா சந்தித்த
துரோகங்களா?

அம்மா
சொல்வதை எல்லாம்
அசைப்போட்டும்
இனியவளால்
ஐந்தாவது வாக்கியத்தை
நிறைவு செய்யவே
இயலவில்லை.

-கே.பாலமுருகன்