கவிதை: இனியவளின் வாக்கியம் அமைத்தல்

இனியவள்
வாக்கியம் அமைக்கத்
துவங்குகிறாள்.

மாமா மிதிவண்டியைக்
கழுவுகிறார்.

அம்மா கறி
சமைக்கிறார்.

அண்ணன் பந்து
விளையாடுகிறான்.

தங்கை
தொட்டிலில் உறங்குகிறாள்.

அப்பா
இறந்து விட்டார்.

இனியவளின் ஐந்தாவது வாக்கியத்திற்குப்
பிழை கிடைக்கிறது.

வாக்கியம்
நிகழ்காலத்தில்
இருத்தல் வேண்டும்
என்பதே விதிமுறை.

இனியவளுக்கு
சில சந்தேகங்கள்
எழுகின்றன.

இறப்பது என்பது
வினைச்சொல்லா?

இந்த வினை
எப்பொழுது நிகழும்?

இச்செயலின்
செயப்படுபொருள்
யாது?

அப்பாவின்
வேலையில்லாத
நாள்களா?

அல்லது

அப்பாவின்
சூதாட்டத் தோல்வியா?

அல்லது

அப்பா சந்தித்த
துரோகங்களா?

அம்மா
சொல்வதை எல்லாம்
அசைப்போட்டும்
இனியவளால்
ஐந்தாவது வாக்கியத்தை
நிறைவு செய்யவே
இயலவில்லை.

-கே.பாலமுருகன்

குறுங்கதை 4: கொரோனாவும் தேசத்தின் எல்லைகளும்

 

இன்றோடு பதிநான்காவது நாள். எவ்வித வித்தியாசமும் இல்லாத அதே இரவு. குழலியிடமிருந்து காலையிலிருந்து அழைப்பு இல்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நாளிலிருந்து ஒரு நாளில் பலமுறை பேசிவிடும் அவளுடைய அழைப்பில்லாத ஓர் ஒற்றையிரவு துன்பகரமானதாக நீண்டு கொண்டிருந்தது.

சிங்கை எல்லையைக் காண்கிறேன். வெறிச்சோடி தெரிகிறது. எப்பொழுதும் பரப்பரப்பிற்குப் பேர்போன சிங்கை மலேசிய எல்லையில் நிலவும் அதீத மௌனமும் விட்டுவிட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகளும் மனத்தை என்னவோ செய்து கொண்டிருந்தன.

வழங்கப்பட்டிருக்கும் நான்காவது மாடியிலுள்ள ஒரு சிற்றறையில் உட்கார்ந்திருக்கிறேன். இனி மலேசியாவிற்குள் நுழைய எத்தனை நாள்கள் ஆகும் என்றும் தெரியவில்லை. இரு நாட்டைப் பிரிக்கும் சிறிய எல்லை; தாண்டினால் ஜொகூர்பாருவில் வீடு. வீட்டில் குழலி தனது அழகான சிரிப்புடன் அப்பா வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் காத்திருந்து உறைந்து பழகியிருப்பாள்.

இரவு அனைத்துவிதமான கூச்சல்களையும் நெருக்கடிகளையும் தாண்டி மலேசியா சென்று சேரும்போது எனக்காக் காத்திருந்து வரவேற்பறையிலேயே வாயில் எச்சில் வடிய தூங்கிவிட்டிருக்கும் குழலியைத் தூக்கும்போது மனத்தில் உடலில் தேங்கிக் கிடக்கும் அத்தனை கணங்களும் சட்டென இலகுவாகி எங்கோ பறந்து கொண்டிருக்கும். அவளைத் தொட்டுத் தூக்காத கைகளில் வெறும் வெறுமை மட்டுமே படர்ந்திருந்தது.

“ப்பா! எப்பப்பா வருவீங்க? அம்மா சொல்றாங்க நீங்க வர மாசக் கணக்கா ஆகுமாம். ஏன்பா வர மாட்டுறீங்க?”

“ப்பா! எனக்குப் புதுசா வந்திருக்கும் பொம்மை, லெகோ, சட்டைலாம் வாங்கி தரேன்னு சொன்னீங்க. எப்பப்பா போலாம்?”

அவளுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் என்னிடம் இல்லை என்பதை எப்படி அவளிடம் சொல்லி விளக்குவேன். எல்லையைத் தாண்டி இருபது கிலோ மீட்டர் மட்டுமே இருக்கும் அவளுக்கும் எனக்குமான இந்தத் தூரத்தை எப்படிக் கடப்பது?

“ம்மா! செல்லக்குட்டி. குழலிம்மா… இங்க சிங்கப்பூர், மலேசியா எல்லா நாட்டுலயும் இப்போ ஒரு கிருமி பரவிக்கிட்டு இருக்குமா. அப்பாவ இங்கேந்து அனுப்ப மாட்டாங்க. அப்பா அங்க வந்தனா உங்களுக்கெல்லாம் ஆபத்துமா… புரியுதாடா?”

நேற்று பேசி முடித்த வார்த்தைக்கு அவளிடமிருந்து எதிர்பார்த்த பதில் வருவதற்குள் மஞ்சுவின் அழைப்பேசி துண்டித்துக் கொண்டது. அநேகமாக அவளுடைய மாதக் கட்டணத்தை இணையத்தின் வழியாகச் செலுத்துவதாகச் சொல்லியிருந்தாள்; மறந்திருப்பாள் என்று நினைக்கிறேன். இன்று முழுவதும் அழைப்பும் வரவில்லை. நானும் பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை.

கொஞ்சம் பதற்றம். மாமாவிடம் சொல்லி முயற்சித்துப் பார்த்தும் அவரும் அதையே சொன்னார். குழலிக்கு என்ன ஆயிற்று? மஞ்சு ஒருநாள் முழுவதும் அழைக்காமல் இருக்க மாட்டாள். எல்லையை விட்டுப் பாய்ந்தோடி குழலியையும் மஞ்சுவையும் பார்க்க மனம் துடித்தது. வீட்டிற்கு அருகே இருக்கும் நண்பர் கணேஷ்க்கு முயற்சித்தேன். அவரும் எனது அழைப்பை எடுக்கவே இல்லை.

இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குவாந்தானில் இருக்கும் மஞ்சுவின் அப்பா தொடர்பு கொண்டார். மஞ்சுவின் அழைப்பேசிக்கு எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை என்றே பதிலளித்தார். மனத்தைக் கிருமியைவிட ஆபத்தான வெறுமையும் பதற்றமும் கௌவிக்கொண்டன.

சட்டென்று, கணேஷ் அழைத்தார். உயிர் மீண்டும் புத்துயிர் பெற்று வந்ததைப் போல இருந்தது. நடந்ததையெல்லாம் பதற்றத்துடன் கூறிமுடித்தேன். முகக்கவசத்தை அணிந்துகொண்டு கணேஷ் வீட்டிற்குச் சென்று மீண்டும் அழைப்பதாகக் கூறினார்.

“ஒன்றும் ஆகிடாது குழலிம்மா. உனக்கும் அம்மாவிற்கும் ஒன்றும் ஆகிவிடாது. உங்கள பிரிஞ்சி வேற நாட்டின் எல்லைக்குள்ள தவிச்சிக்கிட்டு இருக்கேன்மா…”

கணேஷிடமிருந்து அழைப்பு வருகிறது. அவர் சொல்லப் போகும் தகவல் என்னவாக இருக்கும்? மனம் பதறுகிறது. கைகள் நடுங்க அழைப்பை எடுத்தேன்.

“ப்பா! நான் குழலி பேசறன்பா… எப்படி இருக்கீங்க? அம்மாவோட போன் வேலை செய்யலப்பா… எப்பப்பா வருவீங்க?”

உடைந்து அழுதேன்.

-ஆக்கம்: கே.பாலமுருகன்

(இன்னமும் தன் குடும்பத்துடன் சேராமல் நாட்டிற்கு வெளியில் காத்திருப்பவர்களுக்கு)

 

எனது மூன்று குறுங்கதைகளின் இணைப்பு:

  1. https://balamurugan.org/2020/03/18/குறுங்கதை-கொரோனாவும்-மா/
  2. https://balamurugan.org/2020/03/19/குறுங்கதை-2-கொரோனாவும்-தா/
  3. https://balamurugan.org/2020/03/20/குறுங்கதை-3-கொரோனாவும்-ம/

 

கொரோனாவும் எறும்புண்ணியும்: ஓர் இயற்கையின் சீற்றம்



‘சார்ஸ் தொற்றுக்கிருமி சம்பவத்திற்குப் பிறகும் ஒவ்வொருநாளும் குறைந்தது 1400 பன்றிகள் கொல்லப்பட்டு ஹங்கோங் எல்லையைக் கடந்து வுஹானுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன’

நான் எறும்புண்ணி. உலகில் அழிந்து வரும் மிருகங்களின் கூட்டத்தைச் சேர்ந்தவன். 2003ஆம் ஆண்டு என்னை வேட்டையாடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வூஹானின் 20,000 கள்ளத்தனமான பண்ணைகளிலிருந்து பல்லாயிரம் மிருகங்கள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டு வூஹானின் பிரபலமான Wet Market-க்குக் கொண்டு வரப்படுகின்றன என்கிற உண்மை கொரோனா பரவிய பிறகுத்தான் உங்களுக்கெல்லாம் தெரிய வந்தது அல்லவா? ஆமாம், நாங்கள் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன?

நான் எறும்புகளையும் பூச்சிகளையும் மட்டும் தின்று அதன் மூலம் உயிர் வாழக்கூடிய ஓர் எளிய மிருகம். ஆனால் வூஹான் மார்க்கெட்டிற்குச் சென்றுள்ளீர்களா? பாம்பு, முதலை, வௌவால் இன்னும் என்னென்ன மிருகங்கள் உள்ளன என்பதை நாள் முழுவதும் நீங்கள் கணக்கிடலாம்.

சரி, ஏன் சீனாவில் இவ்வளவு மிருகங்கள் வேட்டையாடப்பட்டு உணவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதற்கொரு வரலாறும் சொல்லப்படுகிறது. 1959-1961 வரை சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தால் 3 கோடி மக்கள் இறந்துபோனார்கள் என்று சொல்லப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட கொடூர பஞ்சத்தால் கிடைக்கும் மிருகங்களைக் கொன்று சாப்பிடத் துவங்கிய ஒரு பழக்கம்தான் இன்றுவரை நவீன சமூகத்தால் போற்றப்பட்டும் வருகிறது. ஆனால், இது இப்பொழுது சீனாவின் சிக்கல் மட்டுமல்ல. உலகின் சிக்கலாகவும் மாறிவிட்டன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இறைச்சிகள் சாப்பிடப்படுகின்றன. இம்மண்ணில் உணவு தொடர்பான ஒரு புரட்சி வரும்வரை மனிதர்கள் வெறித்தனத்துடன் மிருகங்களை வேட்டையாடி தின்று கொண்டிருப்பதும் அதனால் இன்னும் பல இயற்கை எதிர்வினைகள் வருவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

‘கட்டுப்படுத்த முடியாத மனித நாக்குகளே கிருமிகளை உற்பத்தியும் செய்கின்றன’
என்ன செய்வது? இன்று உலகம் முழுவதும் துரித உணவுக்கும் கே.எப்.சி கோழிக்கும் நாக்குகள் அடிமையாகிவிட்டன அல்லவா?

தவளை, வாத்து, உடும்பு என்று எந்த மிருகத்தையும் விட்டு வைப்பதில்லை. உணவிற்கும் குணத்திற்குமான தொடர்பை இப்பொழுதாவது விளக்க நேரிடும் போல. அப்படியாக சட்டவிரோதமாகத்தான் டிசம்பர் மாதம் என்னை வூஹான் சந்தைக்குக் கொண்டு வந்தார்கள். இது என் தவறா? மிருகங்களான எங்களின் வாழ்விடங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி மாசுப்படுத்தி அழித்துக் கொண்டிருக்கும் மனித வர்க்கத்திற்குத் தெரியாமலில்லை; இயற்கையைச் சீண்டும்போது அதற்கான எதிர்வினையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் அல்லவா? கிருமிகள் இப்படியாகத்தான் தோன்றுகின்றன.

‘மிக அழகிய உயிரினமான மயில்களின் இரைச்சிகள் ஆயிரம் கணக்கில் இன்று இறைச்சி சந்தையில் பிரசித்திப் பெற்றுள்ளன’

என் உடலிலிருந்துதான் கொரோனா பரவியது என்று இன்னும் உலகத்தால் நிரூபிக்க முடியாத சூழலில் கிருமி எப்படி உருவாகியிருக்கும் என்று சிந்திக்க வாய்ப்புண்டா?

கிருமிகள் நம்மால் நம் அலட்சியத்தால்தான் உருவாகின்றன. ஒரு ரொட்டியைப் பாதி சாப்பிட்டுவிட்டு அதை அப்புரப்படுத்தாமல் அப்படியே வைத்துப் பாருங்கள். ஓரு சில நாட்களில் அந்த ரொட்டியில் கிருமி தொற்ற ஆரம்பிக்கும். ஆக, கிருமிகள் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். அதற்குரிய ஓர் இடமாக பூமி மாறிக் கொண்டிருக்கிறது. கொரோனா மட்டுமல்ல இதைவிட கொடிய கிருமிகள் மேற்கொண்டும் வரலாம். கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகையான கிருமி மட்டுமே இப்பொழுது பரவி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மேற்கொண்டு அக்குடும்பத்தைச் சேர்ந்த கிருமிகளும் பரவத் துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியிருப்பினும் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதையே ‘கிருமி சுனாமி’ என்றும் அழைக்கலாம். மிக நுண்ணிய உயிர் என்றாலும் அவை மனித உடலுக்குள் உருவாக்கும் விளைவுகள் கணிக்க முடியாதவை ஆகும். அனைத்து மிருகங்களையும் வேட்டையாடி சாப்பிடுவது இயற்கைக்குப் புறம்பாகும் என மனிதர்கள் முதலில் உணர வேண்டும். கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்திலாவது சைவ உணவைக் கடைப்பிடிக்கவும். என்னைக் குறைச் சொல்வதை நிறுத்திவிட்டு உங்களைப் பாதுகாக்க இயற்கையை அழிக்காதீர்.

உலக முன்னேற்றத்திற்காக காடுகளை அழிக்கும் மலைகளைச் சுரண்டும் பன்னாட்டு நிருவனங்களின் அத்துமீறல்களை நோக்கி கேள்வி எழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்பதை உணருங்கள்.
சிதைவுண்டு கிடக்கும் பூமியில் நச்சு உணவுகளையே தின்று கொளுத்துக் கிடக்கும் எங்களை நீங்கள் சாப்பிட்டால், நீங்கள் உருவாக்கிய விஷத்தை நீங்களே மீண்டும் உட்கொள்வதற்குச் சமம் என்பதை இந்தக் கொரோனா தாக்குதலுக்குப் பிறகாவது உணருங்கள். இதை ஒவ்வொரு அரசும் கருத்தில் கொண்டு உணவு புரட்சியிலும் இயற்கை பசுமை திட்டங்களிலும் துரிதமாக ஈடுபட வேண்டும்.

இப்படிக்கு,
எறும்புண்ணி.

ஆக்கம்: கே.பாலமுருகன்

‘இந்தப் பூமியில் உயிர்வாழ உரிமையுள்ள எத்தனையோ கோடி மிருகங்களை மனிதர்கள் திண்பதற்கும் தன் விருப்பத்திற்குக் கொல்லவும் செய்கிறார்கள்’

-Deborah Cao, a professor at Griffith University in Australia

தமிழ் விடிவெள்ளி பயிற்றி (ஆண்டு 1 – ஆண்டு 3 வரை)

 

📕ஓதுவதொழியேல்📘

வீட்டிலிருந்து கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வந்தபோதே பள்ளிக்குப் போக முடியாமல் வீட்டில் இருக்கும் மாணவர்களைப் பற்றிய சிந்தனைத்தான் முதலில் எழுந்தது. அச்சிந்தனையைச் செயல்வடிவமாக்கும் பொருட்டு நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் வெளியிடப்படும் இரண்டாவது பயிற்றி இது. ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரையிலான மாணவர்கள் தமிழ்மொழியில் பயன்பெற வேண்டும் பொருட்டு உருவாக்கப்பட்டுப் பகிரப்படுகிறது.

என்னுடன் இணைந்து இப்பயிற்றியை உருவாக்கிய ஆசிரியை திருமதி ப.பிரேமா அவர்களுக்கும் நன்றி.

🔊Share To All.🔊

இப்பயிற்றி முற்றிலும் இலவசமாகவே பகிரப்படுகிறது. அனைத்துப் பயிற்சிகளும் புதிதாகும். பகிர்ந்து அனைவரும் நன்மை பெறச் செய்வோம்.
நன்றி

ஆசிரியர்/எழுத்தாளர்
கே.பாலமுருகன்

To download the PDF file click below link.

http://www.mediafire.com/file/eto3ubsd86j4l65/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D_%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25BF_%25E0%25AE%25AA%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF_%25E0%25AE%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581_1_-3.pdf/file

மாணவர்களின் குறுங்கதைகள் பாகம் 1: கொரோனா குறுங்கதைகள்

உலகம் எதிர்நோக்கியிருக்கும் கடுமையான கொரோனா தாக்கங்கள் குறித்து நான் மூன்று குறுங்கதைகள் எழுதி வெளியிட்டிருந்தேன். அவை  பலரின் வாசகப் பார்வையைப் பெற்ற குறுங்கதைகள் அத்துடன் நின்றுவிடாமல் இந்நாட்டிலுள்ள மாணவர்களையும் பாதித்துள்ளன. அதன் விளைவாக இரண்டு மாணவர்கள் சுயமாக கொரோனா கிருமியின் பாதிப்பு தொடர்பாக குறுங்கதைகள் எழுதி அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள். அக்குறுங்கதைகளை இங்குத் திருத்தி வெளியீடுகிறேன்.

நன்றி

கே.பாலமுருகன்

 

 

குறுங்கதை 1: மனிதம் வெல்லும்

-க.தமிழ்ச்செல்வன் (SJKT St Theresa’s Convent தைப்பிங், பேரா)

“அப்பாடா! எப்படியோ இந்த பேஷண்ட காபாத்தியாச்சு! நல்ல வேளை!” என்று தம் மனத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது அவருக்கு. எப்படியோ இந்தக் கொரோனா நச்சுயிரியால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இருபத்து நான்கு வயது இளைஞரைக் காப்பாற்றிவிட்டோம் என்று தாள முடியாத மகிழ்ச்சி மருத்துவர் ரவிக்கு.

“சார் இந்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். தெய்வம் சார் நீங்க. நன்றி சார்,” என நன்றி மழை பொழிந்தார் அந்த இளைஞனின் தாய். கடந்த இரண்டு நாள்களாக தூக்கமே இல்லை அவருக்கு.

தம் மனைவி, பிள்ளைகளின் நிலையைப் பற்றி யோசித்துக் கொண்டே அமர்ந்த இடத்திலே மெல்ல கண் அயர்ந்தார்.

“சார் ஜெயிச்சிட்டீங்க! வெற்றிக்கரமா நூற்று ஐம்பது பேரோட உயிரைக் காப்பாத்திட்டீங்க! இந்தச் சாதனைக்கு இனிமேல இந்த சுங்கை புலோ ஹொஸ்பித்தலோட வைரஸ் அவசர சிகிச்சை பிரிவோட(ஐ.சி.யூ) தலைவர் நீங்கத்தான்!” என்று யாரோ ஒருவர் கூறியது அவர் காதில் ஒலிக்காமல் இல்லை.

“சார்!” என்று ஒரு தாதி அவரை நோக்கி ஓடி வரவும் திரு.ரவி நித்திரையைத் துறக்கவும் சரியாக இருந்தது.

“சில வினாடி நித்திரையில் கிடைத்த பேரின்பமா?” வெறும் கனவுதான் என்று உணர்வதற்குள் தாதியின் குரல் மீண்டும் ஒலித்தது.

“சார்! இன்னிக்கு மேலும் நூற்று ஐம்பத்து மூன்று கேஸும் நான்கு புதிய இறப்பும் பதிவாயிருக்கு! சீக்கிரம் வாங்க சார்!” என்று அந்தத் தாதி மிகவும் பரப்பரப்பாக அழைத்தார். கண்ணில் வழிந்த நீர்த்துளிகளை யாருக்கும் தெரியாமல் துடைத்துவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்தார் மருத்துவர் ரவி.

மனிதம் கொரோனாவை வெல்லும் என்ற கொள்கை அவரைப் பின்தொடர்ந்து சென்றது.

 

குறுங்கதை 2: கொரோனாவும் இராணுவமும்

-ரேஷ்மன் மதிவாணன் (பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி)

 

இது கொரோனாவால் கொடுக்கப்பட்ட விடுமுறை. கொரோனாவுக்கு விடுமுறை கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம். ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்ததால் ஊரே வெறிச்சோடி காணப்பட்டது. ஆரியனோ நீண்ட நேரம் உறங்கிக் கொண்டிருந்தான். காலையிலேயே ஆரியனின் அம்மாவிற்கும் அவன் அண்ணனுக்கும் நடந்து கொண்டிருந்த வாதத்தால் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தம் கேட்டு எழுந்து வந்தான் அவன்.

“நான் என் நண்பர்களுடன் வெளியே போகணும். வீட்டிலேயே உட்கார்ந்து எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு!” என்று வெறுப்புடன் கூறினார் ஆரியனின் அண்ணன்.

“இருக்கும்… இருக்கும் உனக்கு எல்லாம் இருக்கும். அப்புறம் கொரோனா வந்துருச்சு சீக்கு வந்துருச்சின்னு என்னக் கூப்பிடாத. ஊரே பேசாம கப்சுப்புனு இருக்கு. உனக்கு என்ன வந்துச்சு?” என்று அம்மா பதிலடி கொடுத்தார். அண்ணன் எரிச்சலுடன் நாற்காலியில் சென்று அமர்ந்தார்.
ஆரியனால் இந்த வாதத்தைக் கேட்க முடியவில்லை. ஆரியனின் கால்களோ வாசலில் நின்று கொண்டிருந்த தன் மிதிவண்டியை நோக்கி நகர்ந்தன. வெளியில் சென்று தன் மிதிவண்டியை ஓட்ட முடியவில்லையே என்று ஏக்கத்தோடு அவன் மிதிவண்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது. வெளியில் ஏதோ சத்தம் கேட்டது.

‘என்னடா இது ஊரடங்குச் சட்டம் அமலுக்குக் கொண்டு வந்திருக்காங்க என்று அப்பா சொன்னாரு. யாரும் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதே. அப்படி இருந்தும் யாரு இவங்க எல்லாம்? வெளியே நடமாடிக் கொண்டு இருக்காங்க?’ என்ற கேள்வி அலைகள் அவன் மனதுக்குள் எழுந்தது. சற்று குழப்பத்துடனே,  “அப்பா… அப்பா” என்று கத்திக் கொண்டு வீட்டினுள் ஓடினான்.

“அப்பா சீக்கிரம் கொஞ்சம் வெளிய வந்து பாருங்களேன்!” என்று அப்பாவின் கையை அழுத்தமாகப் பிடித்து இழுத்தான் ஆரியன்.

“என்னய்யா… நில்லு வரேன்” என்று கூறிக்கொண்டே அப்பாவும் அவனுடன் சென்றார்.
“அப்பா நீங்க சொன்னீங்க தானே நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவு போட்டிருக்காங்க யாரும் அநாவசியமா வெளியே போகக் கூடாதுன்னு. அதனாலதானே அண்ணன்கூட அம்மா வெளியே போக அனுமதிக்கல. ஆனா அங்க பாருங்க இரண்டு ஆடவர்கள் சாலையின் முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறார்கள்!” என்றான்.
அப்பா பார்க்கும் பொழுது அந்த இரு ஆடவர்களும் கம்பீரத் தோற்றத்துடன். எல்லா பாதுகாப்பு கவசங்களும் அணிந்த வண்ணம் காணப்பட்டனர்.
“ஓ… இவங்களா? இவங்கெல்லாம் வருவாங்கன்னு நேற்றே செய்தியிலச சொன்னாங்க,” என்று அப்பா கூறியதும், “யாரப்பா அது” என்று ஆரியன் கேட்டான்.

“அவங்க தான்யா நம்ம நாட்டு இராணுவ வீரர்கள். தன் குடும்பத்தைப் பிரிந்து எதிரிகள் நம்மை தாக்கக் கூடாதுனு நாட்டு எல்லையில் இருந்து காவல் காத்தவர்கள், இப்போ வேறு நாட்டிலிருந்து வந்த நோய் நம்மை தாக்கக் கூடாது என்று நாட்டு உள்ளே வந்து காவல் காக்கப் போறாங்க. மக்கள் உயிரைக் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் இவங்களின் தியாகத்த என்னான்னு சொல்றது…” என்று அப்பா கூறிக்கொண்டே பெருமூச்சு விட்டார். அப்பா கூறியதைக் கேட்ட ஆரியனின் எண்ண அலைகள் எங்கேயோ எதையோ நோக்கி பறந்தன. அந்த இராணுவ வீரர்களை ஒரு கடவுளை போல் பார்த்தான் ஆரியன்.
முற்றும்.

எனது மூன்று குறுங்கதைகளின் இணைப்பு:

  1. https://balamurugan.org/2020/03/18/குறுங்கதை-கொரோனாவும்-மா/
  2. https://balamurugan.org/2020/03/19/குறுங்கதை-2-கொரோனாவும்-தா/
  3. https://balamurugan.org/2020/03/20/குறுங்கதை-3-கொரோனாவும்-ம/

 

 

குறுங்கதை – 3 : கொரோனாவும் மணிகண்டனும்

 

“மச்சான்! வீட்டுல இருக்க கடுப்பா இருக்கு. வெளில பாக்கலாமா?”

“அதான் வீட்டை விட்டு வெளில வரக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்காங்களே… இப்ப எப்படிடா?”

“மச்சி! சட்டம் போடறவங்க போடுவாங்க. நம்ம வேலைய நம்ம பார்க்க வேண்டியதுதான். வெளில வா நம்ம அப்போய் கடைக்குப் பின்னால. நம்ம ராஜன்கிட்டயும் அப்புக்கிட்டயும் சொல்லிரு. ரவுண்டு போடறம் இன்னிக்கு…”

மணிகண்டகன் வீட்டைவிட்டு வெளியே வரும்போது ஓர் ஒற்றைக் காகம் மட்டும் கரைந்து கொண்டே மின்சாரக் கம்பத்திலிருந்து பறந்து சென்றது. ஆள் அரவமற்ற சாலை. மோட்டாரை முடுக்கிய பின் சுற்றிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டே அப்போய் கடையின் பின்பக்கம் வந்து சேர்ந்தான்.

அம்மாவிடமிருந்து அழைப்பு இருமுறை வந்து ஓய்ந்திருந்தது. மணிகண்டன் மீண்டும் அழைத்தான்.

“டேய்! உன்னை யாருடா இந்த நேரத்துல வீட்டுலேந்து வெளில போக சொன்னது? அடக்கமா வீட்டுல இருக்க முடிலத்தானே?” அம்மாவின் கோபக்குரல் அழைப்பேசிக்கும் வெளியே சத்தமுடன் ஒலித்தது.

“அப்புறம் உன் மூஞ்சயும் அப்பா மூஞ்சயும் எத்தன தடவ வீட்டுல உட்கார்ந்து பார்த்துக்கிட்டு இருக்கறது?” மணிகண்டன் பதிலுக்கு எரிந்து விழுந்தான்.

“பேசுவடா நீ… அந்தச் சீக்கு வந்தா அப்புறம் தெரியும்டா… நம்மத்தானே கவனமா இருக்கணும்?”

“ம்மா… நீ எந்தக் காலத்துல இருக்க? தமிழனுக்குக் கொரோனா வராதாம். வாட்சாப் பார்க்கலயா? போதிதர்மரோட இரத்தம் நம்ம உடம்புல ஓடுதாம்…” ஒருவித பெருமித குரலுடன் மணிகண்டன் சிரித்தான்.

“டேய்! உன் உடம்புல ஓடறது உங்க அப்பா இரத்தம்டா. கண்டதைப் படிச்சிட்டு உளறிக்கிட்டு இருக்காத. நாட்டுல என்ன சொல்றாங்களோ அதை மதிச்சி நடக்கறதுதான் நல்ல குடிமகனுக்கு அழகு. அப்புறம் பட்டாதான் தெரியும்!”

கடைகள் அடைத்துக் கிடந்ததால் இருள் மட்டும் ஒரு கருப்புப் பூனையைப் போல சுற்றியலைந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் ராஜன் தன் மோட்டாரில் பரப்பரப்புடன் வந்து சேர்ந்தான்.

“டேய் மச்சான் வீட்டுக்கு ஓடிரு! சீக்கிரம் கெளம்புடா!” ராஜனின் வார்த்தைகள் தடுமாறின.

“என்னடா ஆச்சு?”

“போலிஸ் இந்த இடத்தைச் சுத்திருச்சிடா. நீ மோட்டர ரேம் செஞ்சிக்கிட்ட வந்தீயா? சீக்கிரம் ஓடு…”

மணிகண்டன் கொஞ்சம் தடுமாற்றத்துடன் மோட்டாரை எடுத்துக் கொண்டு வெளியேறவும் கடைத்தெருவின் ஓரக்கல்லில் மோதவும் மோட்டாருடன் சாலையில் தேய்த்துக் கொண்டு விழும்போது காவல்துறை வாகனம் அவனைச் சுற்றி வளைக்கவும் மிகச் சரியாக அனைத்துமே நிகழ்ந்தன.

************************

“ஹலோ மா! போலிஸ் பிடிச்சிருச்சிமா… அப்பா எங்க?” நடுக்கத்துடன் மணிகண்டன்.

“போதி தர்மரை வரச் சொல்லட்டாடா?” என்றது அம்மாவின் குரல்.

-கே.பாலமுருகன்

(வீட்டில் இருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு)

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான விடுமுறைக் காலத் தமிழ்மொழிப் பயிற்சித் தொகுப்பு 2020

TO DOWNLOAD PDF OF WORKSHEET CLICK BELOW LINK.

http://www.mediafire.com/file/qn3ud6qxb7ka3mj/Tamil_Module_2020_upsr.pdf/file

 

Modul UPSR Bahasa Tamil ini khasnya ditulis untuk murid-murid di rumah akibat Virus Korona. Modul ini dihasilkan oleh Guru Cemerlang Bahasa Tamil, Penulis En.K.Balamurugan secara percuma kepada semua anak murid Sekolah Tamil Malaysia.

அனைத்து மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வணக்கம்.
நாடு கொரோனா கிருமியின் பாதிப்பால் தவித்துக் கொண்டிருக்கையில் மாணவர்களுக்கான கல்வி விடுப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும் இப்பயிற்சித் தொகுப்பைக் கொண்டு மாணவர்கள் பயன்பெற வேண்டுகிறேன். ஏதேனும் பிழைகள்/கேள்விகள் இருப்பின் தயவுக்கூர்ந்து என்னிடம் தனிப்பட்ட முறையிலும் விளக்கம் கேட்டுத் தெளிவுப் பெறலாம்.

இப்பயிற்றி முற்றிலும் இலவசமாகப் பகிரப்படுகிறது. செய் நன்மை வையகத்துக்கே.

Those need in pdf format can email me. tq

நன்றி,
அன்புடன்

ஆசிரியர், எழுத்தாளர்
கே.பாலமுருகன்
bkbala82@gmail.com
balamurugan.org

TO DOWNLOAD PDF OF WORKSHEET CLICK BELOW LINK.

http://www.mediafire.com/file/qn3ud6qxb7ka3mj/Tamil_Module_2020_upsr.pdf/file

குறுங்கதை 2 : கொரோனாவும் தாதியர் அம்பிகாவும்

நான் தாதியர் அம்பிகா. இப்பொழுது அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு விநோதமான கனவு என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. என் ஐந்து வயது மகன் ‘ஐயாவு’ எனது அறையில் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

“அம்முளு! அம்முளு!” அப்படித்தான் அவன் என்னைச் செல்லமாக அழைப்பான். தேடி அசந்து வரவேற்பறை நாற்காலியிலேயே உறங்கிவிட்டான்.

“ஐயாவு! அம்மா செல்லம்! அம்மா இன்னும் பத்து நாளுல வந்துருவன்யா… அப்பா சொல்றதைக் கேட்டுக்கிட்டு பத்திரமா இருக்கணும். சரியா?”

கடந்த பத்து நாட்களுக்கு முன் எனது சுங்கை சிப்புட் ஊரிலிருந்து தாதியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக கோலாலம்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளேன். ஒவ்வொருநாளும் குறைந்தது பத்து மணி நேரம் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். கிடைக்கும் சிறிய இடைவெளியில் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அசதி, எப்பொழுதுதாவது பழைய நினைவுகள் என்று நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

அவசர சிகிச்சை அறையில் இப்பொழுது கண்கானிப்பில் என்னிடம் விடப்பட்டுள்ள ஓர் சீனப்பெண்மணி எப்பொழுதும் அவருடைய பிள்ளைகளின் நினைவுகளையே பிதற்றிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருமுறையும் அவருக்கு ஆறுதல் சொல்வதாக என் மனத்தைப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கும் என் பையனின் நினைவுகளுக்கும் சமாதானம் வழங்கிக் கொள்கிறேன்.

மகன் சட்டென விழித்து எழுகிறான். இதுவொரு கனவுத்தானே? அல்லது மயக்கமா? அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன். நடுநிசியைத் தாண்டிய பொழுது. கொரோனாவால் சிக்குண்டு உயிர் வாழவேண்டி போராடிக் கொண்டிருக்கும் அச்சீனப்பெண்மனி ஏதோ முணுமுணுக்கிறார். அவரும் ஒரு கனவுக்குள் தன் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும். நேற்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு பேச முடியாமல் தவித்தபோது அவருடைய கண்களில் நிறைந்திருந்த அன்பு தாய்மைக்குரியவை.

“ஐயாவு! செல்லக்குட்டி. அம்மாவ தேடறீங்களா? அம்மா இங்க நெறைய பேருக்கு உதவி செய்றன்யா. அழக்கூடாது சரியா? வீட்டுக்கு வெளில வந்துறாதீங்கயா… வெளில ஒரு பெரிய பூதம் காத்துக்கிட்டு இருக்கு. நம்மள எல்லாம் சாப்டறதுக்கு ரெடியா இருக்கு. அது ரொம்ப கெட்ட பூதம்யா. அல்ட்ராமேன் கார்ட்டூன்ல வருமே அந்தப் பெரிய பூதம் மாதிரி… சரியா செல்லமே? அம்மா சொல்றத கேட்டா ஐயாவுக்குக் கோலாலம்பூர்லேந்து உனக்குப் பிடிச்ச நிறைய விளையாட்டு ஜாமான்லாம் அம்மா வாங்கிட்டு வருவேனாம்… சரியா?”

உறக்கம் ஒரு பெரும் இருள் வெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்னையும் என் மகனையும் சுற்றி இருள். நான் கைகளை அவனை நோக்கி நீட்டுகிறேன். அது ஒரு பரப்பரப்பான நகரத்தின் நடுவே நீண்டு செல்கிறது. மகன் அந்நகரைக் காண்கிறான். அவனுடைய ஒரு பொம்மை தவறி அந்நகரத்தின் நடுவே விழுந்துவிடுகிறது.

“ஐயா! அம்மா செல்லம். அங்கயே இருங்கய்யா. ஓடி வந்துறாதீங்க. இங்க எவ்ள சொன்னாலும் இந்த மனுசனுங்க கேட்க மாட்டாங்கய்யா. வீட்டுல இருன்னு யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்கய்யா. நீ இங்க வந்துறாத. அம்மா பொம்மையை எடுத்துத் தரேன்யா… இங்க இன்னும் யாருக்குமே பரவுர சாத்தான் பற்றி கவலையே இல்லையா. அது அவங்களை நெருங்கி வந்து சாவு பயத்தைக் காட்டற வரைக்கும் யாருக்குமே மனசுல கொஞ்சம்கூட பயம் இல்லையா…”

“அம்முளு! அம்முளு!” மகன் அவனுடைய சின்னஞ்சிறு கைகளை நீட்டி என்னைத் தொட முயல்கிறான்.

“ஐயா! அம்மாவ தொடாதீங்கய்யா. அம்மா இங்க நோயாளிகள சுற்றித்தான் வேலை செய்றன். என் உடம்புக்கு வெளில கொரோனா கிருமி கூட்டம் எப்ப என்னைத் தாக்கும்னு தெரியாம காத்திருக்குய்யா. அம்மாவ தொட வேணாம்யா. இங்க எல்லோரும் உயிர் வாழணும். அவுங்க எல்லாம் காப்பாற்றப்பட்டு அவுங்க வீட்டுக்குப் போற வரைக்கும் அம்மா இங்கத்தான் இருக்கணும்யா. அம்மா இங்க இருக்கன், அம்மாவுக்காக மத்தவங்க எல்லாத்தையும் வீட்டுல இருக்க சொல்லுயா… சொல்லுவியா?”

“Ambiga! Tolong buang urine patient!”

மருத்துவர் வந்து கூறிவிட்டச் சென்றதும் சட்டென விழிப்பு. சுற்றிலும் மகா வெளிச்சத்துடன் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இன்னமும் கண்களில் ஐயாவு ஒரு பொம்மையுடன் நின்று கொண்டிருக்கிறான்.

-ஆக்கம்: கே.பாலமுருகன்

(கண்களுக்குத் தெரியாது எங்கேயோ நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை தாதியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இக்கதையைச் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் உணர்வுகளுக்கு ஒரு சித்திரம்)

குறுங்கதை : கொரோனாவும் மாரிமுத்துவும்

 

 

நான் கோரோனா கிருமி பேசுகிறேன். இப்பொழுது மாரிமுத்துவின் தொண்டைக்குள் இருக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டன. மாரிமுத்துவின் உடலில் வெற்றிக்கரமாக நுழைந்த கடைசி கிருமி நான். நான் உள்ளுக்குள் வந்த கதையைச் சொல்லிவிட நினைக்கிறேன்.

இன்று சரியாக மதியம் 12.35க்கு ஜாலான் பெலக்காங் உணவகத்தில் மாரிமுத்து ‘ரொட்டி சானாய்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்று இரவு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிரப்பிக்கப்படலாம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் சற்றுப் பரப்பரப்பானார். வீட்டில் அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே சமையல் பொருள்கள் இருப்பதை அரற்றிக் கொண்டிருந்த மனைவியின் முகம் ஞாபகத்திற்கு வரக் கடைசித் துண்டைப் பிய்த்து வாயில் அதக்கிக் கொண்டே எழுந்தார்.

அப்பொழுதுதான் எனது சில சகோதரர்கள் அவரின் உள்ளங்கைகளில் தாவிக் கொண்டனர். பின்னர், சந்தைக்கு விரைந்த அவரிடம் நான் ஒரு வெளிநாட்டவரின் கைகளிருந்து இருவரும் கைக்குலுக்கும் கணத்தில் அவர் விரல் இடுக்கில் புகுந்து கொண்டேன். என்னுடன் சேர்த்து அவருடைய வலது கையில் மொத்தம் 15 கொரோனாக்கள் இருந்தோம். நான் சற்று சாமர்த்தியமானவன். மெல்ல நகர்ந்து அவருடைய விரல் நுனியில் காத்திருந்தேன். எந்நேரத்திலும் அவர் கண்களையோ அல்லது மூக்கையோ தொடுவார் அடுத்த கணமே அவர் சுவாச நுழைவாயில் நுழைந்து உள்ளே சென்றுவிடத் தயாராக இருந்தேன்.

பொருள்களையெல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டைச் சென்றடைந்தார். நாங்கள் அனைவரும் அவர் வலது கையில் பத்திரமாக இருந்தோம். என் சகோதரர்களுக்கு ஒரே குதுகலம். வீட்டில் நிறைய பேர் இருப்பார்கள் என அவர்களுக்குக் கொண்டாட்டம் தாள முடியவில்லை. மாரிமுத்து வீட்டின் உள்ளே நுழைவதற்குள் அவருடைய அப்பா வெளியில் வந்து எதையோ சுட்டிக் காட்டினார். ஞாபகம் வந்த மாரிமுத்து வீட்டின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு நீல வாளியிலிருந்து ‘மஞ்சள் கலந்த நீரில்’ கால்களையும் கைகளையும் கழுவினார். அந்த மஞ்சள் நீர் பட்டதும் சகோதரர்கள் அனைவரும் எரிச்சல் தாங்க முடியாமல் கதறினர். நான் மட்டும் விரலில் ஏறி நகத்தில் ஒளிந்து கொண்டதால் தப்பித்து விட்டேன்.

தப்பித்தோம் பிழைத்தோம் என நானும் எனது இன்னும் இரண்டு சகோதரர்களும் மட்டுமே மாரிமுத்துவின் கையில் எஞ்சியிருந்தோம்.

“கைய நல்ல கழுவுனீங்களா? சும்மா தண்ணிய அள்ளி தெளிச்சா போதுமா? போய் சவர்க்காரத்துல கழுவுங்க…” என்றது மாரிமுத்துவின் மனைவியின் குரல். எனக்கும் என் சகோதரர்களுக்கும் அவரின் மனைவியின் மீது கடும்கோபம் எழுந்தது. இப்பொழுது என்ன செய்வது? மாரிமுத்து கைகளைக் கழுவ குழாயிடம் சென்று கொண்டிருந்தார். இனி நமக்கு வாய்ப்பில்லை என்று சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தபோது சட்டென்று மாரிமுத்து தன் வலது கையை எடுத்து நெற்றியைத் துடைத்தார். கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் அடுத்த நொடி நெற்றியின் மீது பாய்ந்து வழிந்து சறுக்கிக் கொண்டே அவர் மூக்கின் மீது சரிந்து சந்தில் நுழைந்தேன். அவர் மூச்சின் பிறப்பிடம் தேடி அடுத்து நகர வேண்டும். அவருடைய நுரையீரலை அடைய எனக்கு எப்படியும் நான்கு நாட்கள் எடுக்கும். வசதியாக தொண்டைக்குள் சரிந்து மாரிமுத்துவின் சதையில் படுத்துக் கொண்டேன். சுகமான சூழல் என்னைச் சூழ்ந்தது.

மாரிமுத்து கைகளைக் கழுவும்போது எனது இன்னபிற சகோதரர்கள் மாண்டார்கள். எப்படியும் நான் மட்டும் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டதை நினைத்துப் பெருமிதம் கொண்டேன். வெளியில் இருந்த வெப்பத்தால் வாடிக் கொண்டிருந்த எனக்கு இப்பொழுது மாரிமுத்துவின் உடலில் இருந்த குளிர்ந்த தன்மை இதமாக இருந்தது.

ஆம். இப்படித்தான் நான் மாரிமுத்துவின் உள்ளே நுழைந்தேன். எனது பிறப்பின் யதார்த்தமே மனிதர்களின் நுரையீரலை அடைந்து பூர்த்தி பெறுவது மட்டுமே. நானும் 14 நாட்களில் இறந்துவிடப்போகும் ஓர் அற்ப கிருமி மட்டுமே. ஆனால், இறப்பதற்கு முன் மனித உயிர்களைப் பலி வாங்கிய பின்னரே மறைவோம்.

“ப்பா… அம்மா இந்த உப்புத் தண்ணியில வாயைக் கொப்பளிக்கச் சொன்னாங்க!” என்றது மாரிமுத்துவின் மகனின் குரல். எழுந்து அக்குவளையில் இருந்த நீரைப் பருகி தொண்டைக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

என்னைச் சூழ்ந்துகொண்ட அவ்வுப்பு நீர் சதையோடு ஒட்டிக் கொண்டிருந்த என்னை அடித்து நகர்த்துகிறது. அத்தனை பலம் கொண்ட அந்நீரில் நான் மெல்ல மூழ்குகிறேன். எனது மூச்சுத் திணறுகிறது. உலகத்தின் மிக நுண்ணிய உயிரான நான் சரியாக மாலை 2.40க்கு மாரிமுத்துவின் தொண்டைக்குள்ளேயே இறக்கப் போகிறேன்; இறந்து கொண்டிருக்கிறேன்.

-கே.பாலமுருகன்
Stay safe From Covid-19.

Coronavirus – குடும்பத்தையும் சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்போம்

Coronavirus தாக்கம்

 

இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும், உலகநாடுகளின் எல்லைகளைப் பரப்பரப்பாக்கிக் கொண்டிருக்கும் 100,000 பேருக்கும் மேலாக பரவிவிட்ட இந்தக் கிருமியின் தோற்றம் சீனாவிலுள்ள வூகான் நகரம் என்பதை எல்லோரும் கடந்த டிசம்பர் மாதம் அறிந்தோம். ஆனால், இன்று பல தேசங்களைத் தாண்டி எல்லைகளைக் கடந்து  பல உயிர்களைக் கொன்று  இதே கிருமி நம் நகருக்குள் நுழைந்துவிட்டது.

ஆனால், இன்றளவும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பற்ற நிலையில் நம்மவர்கள் நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்குப் பாதுகாப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதை நோக்கி இப்பதிவு சுருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தலாம்.

who.int

 

 

 யாரை இந்தக் கிருமி எளிதாகத் தாக்கும்?

  1. வயதானவர்கள்
  2. குழந்தைகள்

இவ்விரு பாலருக்கும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துதான் இருக்கும் என்பதால் சட்டென பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  1. நீரிழிவு நோய் உள்ளவர்கள்
  2. சுவாசம்/இருதயம் தொடர்பான மருத்துவ சிக்கல் உள்ளவர்கள்

இந்த நான்கு வகையினரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. குறிப்பாக குழந்தைகள் எளியவர்கள்; அவர்களை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஆபத்தான நிலையில் மனிதர்களை நோக்கி படையெடுத்துப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிடமிருந்து தற்காத்துக் கொள்ள மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியவைகள்:

  1. அதிகமானோர் கூடும் இடங்களை முடிந்தவரை தவிர்க்கவும். (குறிப்பாக குழந்தைகள்-வயதானவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம். அதிகமானோர் என்பது ‘Mass Gathering’ என்பதைக் கருத்தில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக: Water Theme Parks, Shopping Malls, Teaters, Night Market, கலை நிகழ்ச்சிகள், போட்டி விளையாட்டுகள் போன்றவை ஆகும்.

 

  1. Sanitizer-ஐ உடன் வைத்துக் கொண்டு பொது இடங்களுக்குச் சென்று வந்தால் வீட்டில் நுழையும் முன் அல்லது நுழைந்தவுடன் உடனடியாகக் கைகளைக் கழுவிவிடவும். தாமதிக்க வேண்டாம். எடுத்துக்காட்டாக நீங்கள் வங்கிக்குச் சென்று வந்திருப்பீர்கள். வங்கியின் கதவு பிடியில் கையை வைத்திருப்பீர்கள். அதே கதவில் அன்று பலர் கைகளை வைத்திருப்பார்கள். ஆக, இதன் வழியாகவும் கிருமி தொற்றுவதற்கு வாய்ப்புண்டு. ஆகவே, Sanitizer-ஐஉபயோகிப்பது நிவாரணத்திற்கு வழிவகுக்கும்.

 

  1. காய்ச்சல், சளி இத்துடன் மூச்சுத் திணறல் இருந்தால் சற்றும் தாமதிக்காமல் அருகாமையிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்குச் சென்று விடவும்.

 

  1. வெளிநாட்டவர்கள் வேலை செய்யும் அல்லது பயணிக்கும் பொதுபோக்குவரத்துகளை/இடங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

 

  1. வீட்டின் முன் மஞ்சள் கலந்த நீரை எப்பொழுதும் வைத்திருக்கவும். வெளியில் சென்றுவிட்டு உள்ளே வருபவர்கள் கட்டாயமாக அந்நீரில் கால்கள் கைகளைக் கழுவிவிட்டு வருவதும் மிக முக்கியமானதாகும்.

 

  1. இக்காலக்கட்டத்தில் முடிந்தவரை அசைவ உணவைக் குறைப்பதும் மார்க்கேட்டில் நீங்கள் வாங்கும் இறைச்சிகளைக் குறைப்பதும் நல்லது. சைவ உணவை அதிகப்படுத்தவும்; காய்க்கறிகளை நன்றாகக் கழுவிவிட்டு வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும்.

 

  1. வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைப்பது நலம். நீங்கள் செல்லும் சுற்றுலாத்தளம் பாதுகாப்பானதாக இருப்பினும் அது சுற்றுலாத்தளம் என்பதால் வெளிநாட்டவர்கள் அங்கு வருவதை நாம் தவிர்த்தல் இயலாது. இதனால், கிருமி நம்மை எந்நேரத்திலும் தாக்கும். நாமே பணம் கொடுத்து வெளிநாடு சென்று விணையைத் தேடிக்கொள்ளலாமா? இயன்றால் தவிர்க்கவும்.

 

  1. அடுத்து முக்கியமானது வெளியில் யாரைப் பார்த்தாலும் கைக்குலுக்குவதைத் தவிர்த்து விடவும். கிருமிகள் கைகளின் வழியாகவே மிக விரைவாகப் பரவுகின்றது. நம் கைகளில் நூற்றுக்கணக்கான கிருமிகள் எப்பொழுதும் இருக்கும் என்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. கைக்கூப்பி வணக்கம் சொல்வதை இப்போதைக்குப் பழக்கமாக்கிக் கொள்ளவும்.

 

  1. குழந்தைகளை உணவகங்களுக்குக் கொண்டு செல்வதையும் வெளியுணவையும் இக்காலக்கட்டத்தில் தவிர்ப்பது நன்று.

 

  1. பள்ளிக்கூடம் அல்லது பள்ளிக்கூடத் தொடர்பான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கட்டாயமாக mask அணிவிக்கவும். இதைப் பெற்றோர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். நம்மைவிட சிறியவர்களுக்கு மிக எளிதில் நோய் தொற்றிக் கொள்ளும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

 

  1. ஒருவேளை ஆள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் சென்றால் எல்லோரிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளியே நடக்கவும்; நிற்கவும்; பேசவும்.

 

 

 

இந்நோயின் அறிகுறி?

முதலில் சுவாச பிரச்சனை ஏற்படுபவர்கள் மருத்துவமனை சென்றுவிட வேண்டும். இக்கிருமி முதலில் தாக்குவது நுரையீரலை என்பதால் இக்கிருமி கண்டவர்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவார்கள். சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி என்பதெல்லாம் அடுத்த நிலைகள்.

 

எப்படி அறிவது?

 

மூச்சை இழுத்து 10 விநாடிகள் அடக்கி மீண்டும் விடும்போது எந்தத் தடுமாற்றமும் மூச்சிரைப்பும் இருமலும் இல்லையென்றால் உங்கள் நுரையீரலுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்பதை இதன்வழியும் அறியலாம். இதுவொரு எளிமையான எடுத்துக்காட்டுத்தான். இருப்பினும் மருத்துவரைச் சென்று பரிசோதித்து மட்டுமே அதிகாரப்பூர்வத் தகவலைத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

அதிக வெப்பத்தில் கிருமி இறந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கொரொனா கிருமி தாக்கம் ஏற்பட்டால் தொண்டையில் சிலநாள்கள் தங்கியிருக்கும் என்கிறார்கள். ஆகவே, மஞ்சளில் வாய்க் கொப்பளிப்பதையும் வழக்கமாக்குங்கள்.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி நம்மைத் தொட்டு நம்மை அணுகி நமக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் குறிப்பாக அனைத்து தாதியினருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த அன்பு.

 

நாமும் கடைப்பிடிப்போம்; பிறருக்கும் உரைப்போம்.

நன்றி

கே.பாலமுருகன்

Sumber:

KKM

WHO