Toy’s Story – 4 – தனிமையும் புறக்கணிப்பும்

இப்படம் முதல் பாகம் வெளிவரும்போது நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். குறைந்தது நான்கு முறையாவது திரையரங்கில் பார்த்திருப்பேன். குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உலகில் வாழும் விளையாட்டுப் பொருள்களின் கதைத்தான் இப்படம். அவை யாவும் மனிதர்கள் பார்க்காதபோது உயிர் பெற்றுப் பேசும், ஓடும், அன்பு காட்டும், நேர்மையாக இருக்கும். குழந்தைகளுக்கு நாம் எல்லா காலங்களிலும் விசுவாசமாக இருந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே இவ்விளையாட்டுப் பொம்மைகளின் ஒரே இலட்சியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
 
‘வூடி’, ‘பஸ்’, ‘போ’ என்று முதல் பாகத்திலிருந்து இருக்கக்கூடிய அதே கதாபாத்திரங்கள்தான். இப்படம் குழந்தைகளுக்கானதாக இருப்பினும் பார்த்து முடிக்கும்போது ஒரு சொட்டுக் கண்ணீர் வரமாலில்லை. பிரிவு அத்தனை துயரமானது. இக்கூட்டத்திலிருந்து, இவ்விளையாட்டுப் பொம்மைகளுக்கு ஏதும் ஆபத்து என்றால் தன் உயிரைப் பனையம் வைத்துக் காப்பாற்றும் ‘Woody’ இறுதியில் இக்கூட்டத்திலிருந்து பிரிந்து தன் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வதாக கதை முடியும். ஒரு கனத்த துயரமும் மனத்தில் ஒட்டிக் கொள்ளும்.
 
ஒன்றரை மணி நேரம் போவதே தெரியாமல் உருவாக்கப்பட்டிருக்கும் கதைக்களம். பரப்பரப்பான திரைக்கதை. எங்கேயும் தொய்வில்லாத உணர்ச்சி சித்திரம் என்றே சொல்லலாம். குழந்தைகள் எப்பொழுதும் விளையாட்டுப் பொருள்களை நிரந்திரமாக அல்லது பாதுகாப்பாக வைத்திருப்பதில்லை. அவர்கள் செல்லும் இடங்களில் விட்டு வந்துவிடுவார்கள்; அல்லது வீட்டின் மூலையில் போட்டுவிட்டு மறந்துவிடுவார்கள்; அல்லது சிறிய பழுது ஏற்பட்டாலும் அதனை நேசிப்பதிலிருந்து விலகி கொள்வார்கள். குழந்தைகளையே உலகமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் குழந்தைகள் இல்லாத தனிமையில் உலகமெங்கும் சிதறிக் கிடக்கின்றன. அவ்விளையாட்டுப் பொருள்களின் தனிமை, புறக்கணிப்பு வாழ்வின் நிதர்சனங்களைக் காட்டுவது போலவே இருக்கும்.
 
போ என்கிற பெண் பொம்மை சொல்லும் ஒருசில வரிகள் சிந்திக்க வைத்தவை. நாம் எங்குமே நிரந்திரமாக இருக்க முடியாது; நம்மைப் பயன்படுத்தும் குழந்தைகள் மெல்ல வளர்ந்ததும் நம்மை வீசிவிடுவார்கள் அல்லது யாருக்காவது கொடுத்துவிடுவார்கள். இதுதான் நம்மைப் போன்ற பொம்மைகளின் நிரந்தரமற்ற வாழ்க்கை எனும்போது பிரிவு எத்தனை கொடியது என்று உணர முடியும். இதைக் குழந்தைகள் எத்தனை தூரம் சிந்தித்து உணர்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் இப்படம் பார்த்தால் தன் விளையாட்டுப் பொருள்களை, பொம்மைகளை எவ்வளவு தூரம், ஆழம் நேசிக்கத் துவங்குவார்கள் என்று மட்டும் சிலாகிக்க முடிகிறது.
 
ஒருமுறையேனும் உங்கள் வீட்டுக் குழந்தைகளை இப்படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளோடு நீங்களும் குழந்தையாகி நீங்கள் எப்பொழுதோ விளையாடி தொலைத்த ஒரு விளையாட்டுப் பொருளின் ஞாபகக் கனத்துடன் வெளியே வருகிறீர்கள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நம் வீட்டுக் கட்டிலுக்கடியில் கை இல்லாமல், கால் இல்லாமல், தலை இல்லாமல் வெகுகாலம் மறைந்துகிடக்கும் பொம்மைகளின் துயரத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். எனக்கு நான் வெகுநாள் வைத்திருந்து யாரோ ஓர் உறவினர் வீட்டில் தொலைத்துவிட்ட ‘கிங் கோங்’ பொம்மையின் ஞாபகம் வந்து நினைவுகளை முட்டின.
 
-கே.பாலமுருகன்

ராஜியின் சில கேள்விகளும் பதில்களும் – குறுநாவல் சர்ச்சை பாகம் 2

தொடர்ந்து பல திசைகளுக்குக் கிளையிட்டுக் கொண்டிருக்கும் குறுநாவல் தொடர்பான சர்ச்சைகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. என் கருத்துகள், எண்ணங்கள், விளக்கங்களை நான் தெளிவான ஒரு கட்டுரையாக எழுதிப் பதிவிட்டுவிட்டேன்.

https://balamurugan.org/2019/06/25/ஆப்பே-கடையில்-நடந்த-236ஆவது

 

எழுப்பப்படும் தவறான கேள்விகள் படைப்புச் சுரண்டல் தொடர்பாக இவ்விவாதத்தின் போக்கைக் கொண்டு போகாமல் தனிமனித தாக்குதலுக்குள் இட்டுச் சென்றுவிடும். இலக்கியம் சார்ந்த சர்ச்சைகள் உலகளவில்கூட ஓய்ந்தது இல்லைத்தான். ஆனால், உங்கள் கேள்விகளை நான் அப்படிப் பார்க்கவில்லை. உண்மையில் இவ்விவாதம் உங்களுக்கும் உங்கள் நிகழ்ச்சியைப் பற்றிய ‘இலக்கியம் கொச்சைப்பட்டுவிட்டதாக’ எழுதிய பாண்டியனுக்கும் இருக்க வேண்டுமே தவிர ஏன் மீண்டும் மீண்டும் நான் உள்ளே இழுக்கப்படுகிறேன் என்பதே எனக்குக் குழப்பமாக உள்ளது. நான் தூண்டி அவர் எழுதவில்லை என்பதை அவரே குறிப்பிட்டுவிட்டார் என்பதால் இவ்விவாதங்கள் உங்கள் இருவருக்குமிடையே தொடர்ந்திருக்க வேண்டும்.

கபாலி படம் தொடர்பான ஐயங்களை முதலில் எனக்குக் கூறியது எழுத்தாளர் அ.ராமசாமி அவர்கள்தான். அதன் பின்னரே அப்படத்தைப் பார்த்துக் குறிப்பிட்ட சிலவற்றில் என் நாவலின் தழுவல் இருப்பதாக உணர்ந்தேன். குறிப்பாக கபாலி படத்தில் கடைசி காட்சியும், ‘கட்டி’ அதாவது கஞ்சா விற்கும் பெண்மணியும் அவருடைய மகனை கபாலி இடத்தில் சேர்க்க நினைக்கும் இடமும்கூட என் குறுநாவலில் வரும் சரசுடன் பொருந்தியது. இது முதலில் தற்செயலாக நடந்தவையா அல்லது ரஞ்சித் அப்போதைக்கு இந்தியக் குண்டர் கும்பல் தொடர்பாக மலேசியாவில் எழுதப்பட்டிருந்த ஒரே குறுநாவல் என்பதால் வாசித்து அங்கிருந்து சிந்தித்திருப்பாரா என்பதே எனது கேள்வியாகும். அதனையும் ஒரு கேள்வியாகவே முன்வைத்திருந்தேன். மேலும், கபாலி படம் தொடர்பான அரசியல் சிக்கல்கள் பற்றியும் தவறான அரசியல் பார்வையைப் பற்றியும் ஒரு விமர்சனமாகவும் முன்வைத்திருந்தேன். ஆக, நான் கபாலி படத்தோடு உடன்படாத ஒன்றை தனி விமர்சனங்களாக எழுத்து வடிவில் முன்வைத்தாயிற்று. அதற்கு மேல் எனக்கு எந்த வழிகாட்டுதலும் யார் மூலமாகவும் வழங்கப்படவில்லை. எப்படி யாரைக் கொண்டு இதனை முன்னிறுத்துவது அல்லது நிரூபிப்பது என்றும் அப்போதைக்கு என்னால் வகுத்துக் கொள்ளவும் முடியவில்லை. சொன்னார்களே தவிர யாரும் அதைப் பற்றி பதிவிடவும் இல்லை.

ஒரு பட நிருவனத்தை அதுவும் காட்சி ரீதியில் அதனை மறுப்புனைவு செய்து கொண்டதை (பெயர் தோற்றம் போன்றவற்றில் மாற்றங்கள்) எப்படி நிரூபிப்பது என்று அதன் உள்ளார்ந்த வழிமுறைகள் இன்றுவரை சிக்கலான விடயமே. ஆனால், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியம் தொடர்பான சர்ச்சையில் அவர் தன் நாவலில் அப்பட்டமாக என் குறுநாவலில் உள்ள இடம், இடத்தின் பெயர், கதாப்பாத்திர வடிவமைப்பு, காட்சிகள் என்று கையாண்டதை வெகு எளினையாகச் சுட்டிக்காட்டி நிரூபிக்கவும் முடிந்தது.

அடுத்து, பாண்டியன் அவர்களுடைய கட்டுரையில் இடம்பெற்ற வரிகளையொட்டி என்னிடம் உங்கள் நிகழ்ச்சி தொடர்பான நிலைபாடு என்ன ஏதும் சர்ச்சை உண்டு செய்யதி திட்டமிட்டீர்களா என்று கேட்டுள்ளீர்கள். அதனை நானே நான்கு கேள்விகளாக முன்வைக்கிறேன். அது உங்களுக்கான கேள்வி அல்ல; உங்களுக்கான பதிலைக் கண்டறிவதற்கானது.

 

கேள்வி 1: நீங்கள் அல்லது தோழி ஒருவர் எடுத்து நடத்தும் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி இது என்று தெரிந்திருந்த மறுகணமே இதனை நீங்கள் செய்யக்கூடாது, இதுதான் உங்கள் தார்மீகமா, நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவிலோ நான் பதிவிட்டுள்ளேனா? உங்களுக்கு நான் அனுப்பிய புலனம் கூட நிகழ்ச்சி முடிந்ததும் வாய்ப்பிருந்தால் கேளுங்கள் என்கிற தொனியில் இருந்ததே தவிர அது சர்ச்சையை உண்டு பண்ணும் தொனியாக இருக்கவில்லையே.

கேள்வி 2:ஒருவேளை நான் சர்ச்சையாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் மலேசியாவிற்கு வந்தவுடனே சர்ச்சையான பதிவுகள் போட்டு எல்லோரையும் அவதூறுகளுக்குள்ளாக்கியிருப்பேன் அல்லவா? எனது மௌனம் இந்நிகழ்ச்சியில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் அல்ல என்பதற்கானதே.

கேள்வி 3: இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்க ஒன்றாகவே நான் அனைவரிடத்திலும் சொல்லியிருந்தேன். ஒரு  காலக்கட்டத் தொகுப்பின் வழியாக இலக்கிய நகர்ச்சியை நாம் ஆவணப்படுத்த முடியும். அதனால்தான்  இலக்கியம் சார்ந்து நான் அதனை மேற்கொண்டு வருகிறேன். நான் அதற்குக் குறுக்கே இருக்க வேண்டும் என்று நினைத்ததும் இல்லை. நினைத்திருந்தால் என் சர்ச்சை உங்கள் நிகழ்ச்சியை நோக்கியதாக இருந்திருக்கும் அல்லவா? ஆனால் என் சர்ச்சை நியாயமான முறையில் சம்பந்தப்பட எழுத்தாளரை நோக்கியே இருந்ததால்தான் அதனை நான் முறையாகக் கையாள வேண்டிக் காத்திருந்தேன். யோகி, நீங்கள், இன்னொரு தோழி ஆகியோரிடம் நான் முன்வைத்த கோரிக்கை அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து நிகழ்ச்சி முடிந்து கேட்க வேண்டும் என்பதாகவே இருந்தது. நாம் அனைவரும் நட்பில் இருக்கும்போது நான் ஏன் இதைப் பொதுவில் போட்டுப் புதிய சர்ச்சையை உண்டாக்கியிருக்க வேண்டும்?

கேள்வி 4: ஒருவேளை நான் மறைமுகமாக நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் சர்ச்சையை உண்டு செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன் இருந்திருந்தால் நான் ஏன் உங்களுக்குப் புலனத்தின் வழியாகத் தகவல் அனுப்பியிருக்க வேண்டும்? நீங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆயிற்றே. சர்ச்சையை மறைமுகமாக எழுப்ப வேண்டுமென்றால் அந்நியர் அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டிலிருந்து புறத்தே உள்ள ஒருவரை அல்லவா நான் தயார் செய்து ஏவிவிட்டிருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள் தோழி. என் நோக்க அதுவல்ல. இப்பொழுதும் இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் தேவை என்றே கூறுகிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உங்கள் இலக்கிய நிகழ்ச்சி தொடர்பான எதிர்வாதத்தை முன்வைத்தவருடனே உங்கள் ஆரோக்கியமான விவாதம் தொடர வேண்டும்.

பாண்டியன் அவர்களின் கட்டுரையில் நான் நிகழ்ச்சியில் வினாவை எழுப்ப சந்தர்ப்பதை உருவாக்கி வருவதாக எழுதியுள்ள பதிவு ஒருவேளை அவருடைய புரிதலால் உண்டாகியிருக்கலாம். அன்றைய நாளில் நான் தெரிந்தும் ஏன் மௌனமாக இருக்கிறேன் , நான் ஏதும் சமரசம் செய்து கொண்டுவிட்டேனா என்கிற கேள்வியை முன்வைத்தார். எனக்கு உண்மையில் அக்கேள்வி வருத்தத்தை ஏற்படுத்தியது. இச்சர்ச்சையெல்லாம் நடக்கும் முன் உருவான திட்டத்தில் என்னால் எந்த இடையூரும் வேண்டாம் என்றே அமைதி காத்திருந்தேன். ஆனால், என் எதிர்வினை நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியையொட்டியதாக இல்லை. ஆகவே, சுப்ரபாரதி மணியத்தின் நிகழ்ச்சியில் இருக்கும் என் தோழிகளிடம் கேள்விகள் கேட்கச் சொல்லியிருக்கிறேன். சுப்ரபாரதிமணியம் தொடர்பான படைப்புச்சுரண்டல் பற்றி அவர்களிடம் கூறியுள்ளேன் என்பதாகவே இருந்தது. நான் பிரச்சனையை உண்டு செய்து நிகழ்ச்சியைச் சிதைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இல்லை என்பதை அவர் புரிந்திருக்க வேண்டும். யோகியிடம் நான் கேட்ட உரிமைத்தொனிக்கூட அந்நிகழ்ச்சியைக் களைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அல்ல; மாற்றாக சுப்ரபாரதிமணியத்தைச் சந்தித்து இதைக் கேளுங்கள் என்பதாகவே இருந்தது. பின்னர் ஏன் அப்படியொரு வார்த்தை கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது என்பது குழப்பமாகவே உள்ளது. அதை அவர் நீக்குவார் அல்லது திருத்துவார் என்று நம்புகிறேன். இதையும் ராஜி ஒரு கேள்வியாகப் பொதுவில் முன்வைத்ததால் நான் அதற்குரிய பதிலை இங்குப் பதிவிடுகிறேன்.

கிண்டல் பதிவு ஏதும் போடாமல் மிக நேர்மையாக தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் உங்கள் நேர்மையை இன்னமும் நான் மதிக்கிறேன். அது எல்லா திசைகளிலும் எல்லார்க்கும் பொதுவானதான இருக்க வேண்டும் என்றும் நம்புகிறேன்.

ஆனால், உங்கள் எழுதும் தொனியை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த நண்பனின் வேண்டுகோள். மேலும், இச்சர்ச்சை சென்று கொண்டிருக்கும் திசை, அதில் பதில் அளித்துக் கொண்டிருப்பவர்களின் தார்மீகம், வாதத்தை முன்வைக்கும் விதம் என அனைத்தையும் அனைவரும் கண்கானித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இந்த இலக்கிய விவாதமாவது தனிமனித தாக்குதல்களாக இல்லாமல்; நியாயத்தை நோக்கிய குரலாக இருக்கட்டும்.

எனது அடுத்த பதிவு, ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் உருவான கதை பகிரப்படும். இக்குறுநாவல் உருவாக்கத்தில் ஆரம்பத்திலிருந்தே உடன் இருந்தவர் எழுத்தாளர் பாண்டியன். அக்குறுநாவலை மறுவாசிப்பு செய்து, திருத்தங்களுக்கு உதவி, அதனை நூல் வெளியீட்டில் விமர்சனம் செய்த மலேசிய இலக்கிய விமர்சகர் பாண்டியன் அவர்களே. ஆக, ஒரு சிறுகதையாக எழுதப்பட்டு, பின்னர் விரிவாக்கம் அடைந்து ஒரு குறுநாவலாக மாற்றி, அதற்குரிய நேர்காணல்கள், நேராகச் சிலரைச் சந்தித்தல், மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு குண்டர் கும்பல்  ஆய்வேட்டின் துணையோடு தரவுகள் கொண்டு எழுதப்பட்ட அக்குறுநாவல் தொடர்பான பதிவு விரைவில்.

நன்றி, கே.பாலமுருகன்

 

எழுத்தாளர் அ.ராமசாமி எழுதிய ஆப்பே குறுநாவல் தொடர்பான விமர்சனம்: http://ramasamywritings.blogspot.com/2015/05/blog-post_20.html

ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் குறுநாவல் சர்ச்சை ஒரு விளக்கம்

குறிப்பு 1: ஒரு சில காரணங்களுக்காக சிலரின் பெயர்களை நான் இக்கட்டுரையில் குறிப்பிடவில்லை. நன்றி.

ஏறக்குறைய ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் எழுதும் ஓர் எதிர்வினை கட்டுரை என்றே சொல்லலாம். இதுவும்கூட ஒரு விளக்கக் கட்டுரை என்றுகூட அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.. முடிந்தவரை இலக்கிய விவாதங்களிலிருந்து விலகியே இருந்தேன்; இருக்கின்றேன். பெரும்பாலான இலக்கிய விவாதங்களில், இலக்கிய சர்ச்சைகளில் இலக்கியம் கருப்பொருளாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அவ்விவாதங்களின் இறுதியில் உடைந்துவிடுகிறன என்பதனாலேயே இத்தனை காலம் இப்படியொரு முடிவு.

மேலும், இப்பொழுது தோன்றியுள்ள என் குறுநாவலை முன்வைத்த விவாதங்களை ஒரு சர்ச்சையாக முன்வைக்கும் நோக்கம் எனக்கில்லை என்பதனாலேயே இதைப் பற்றி எந்தக் களேபரமும் முகநூலிலோ புலனத்திலோ நான் ஏற்படுத்தவில்லை. எதையும் நிதானமாக எதிர்க்கொள்ள வேண்டும் என எனக்கு நானே அளித்துக் கொண்ட பயிற்சியின் விளைவு. இருப்பினும், இச்சர்ச்சை என் குறுநாவல் தொடர்பாக எழுந்துள்ளதால் நானே இதனைப் பற்றி தன்னிலை விளக்கமாக எழுதுவதுதான் சரி என்று தோன்றியது.

குறுநாவல் பற்றிய சர்ச்சை

நான் 2014ஆம் ஆண்டில் எழுதி, 2015ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டு குறுநாவல்கள் அடங்கிய புத்தகம்தான் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ ஆகும். இக்குறுநாவல் தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய இந்திய குண்டர் கும்பலைப் பற்றிய குறுநாவலான ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ நேரிடையாக கள ஆய்வின் மூலமும், சில நேர்காணல்கள், சில தரவுகள் சேகரிப்பு, மலேசியாவில் குண்டர் கும்பல் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வையும் அடிப்படையாகக் கொண்டு கடுமையான உழைப்பு தேவைப்பட்டு எழுதப்பட்ட நாவலாகும். அதற்குரிய சான்றுகள், மேற்கோள்கள் அக்குறுநாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மலேசியாவில் (கெடா, கோலாலம்பூர்) ஆகிய இரண்டு இடங்களில் இக்குறுநாவல் தொகுப்பு வெளியீடு கண்டு வாசகர்களைச் சென்றடைந்தது. ஏற்கனவே இக்குறுநாவல் தொடர்பாக தமிழக எழுத்தாளர் அ.ராமசாமி, சிங்கை அழகுநிலா, பாண்டியன் ஆகியோர் விமர்சனம் எழுதியிருந்தனர்.

2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து கெடாவிற்கு வருகையளித்திருந்த *அத்தமிழக எழுத்தாளரைக் கெடா, கூலிம் போன்ற இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு வரவழைத்து உபசரித்தும் இருந்தேன். அப்பொழுது அவரிடம் இக்குறுநாவலையும் மேலும் என்னுடைய சில நூல்களையும் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தேன். அதன் பின்னர், கடந்த வருடம் எழுத்தாளர் பாண்டியன் அந்த எழுத்தாளர் எழுதிய ‘கடவுச் சீட்டு’ என்கிற நாவலில் சில பக்கங்களைப் படம் பிடித்து என் புலனத்திற்கு அனுப்பி இவைகளை நீங்கள் எங்கும் படித்ததுண்டா எனக் கேட்டார். அப்பொழுதுதான் எனக்கான முதல் அதிர்ச்சி காத்திருந்தது. அந்நாவலில் அவர் கையாண்டிருக்கும் சில வரிகள், வர்ணனைகள், தகவல்கள் அப்படியே என் நாவலிலிருந்து முழுவதுமாக எடுத்துக் கையாளப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சியாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஒன்றை முன்வைக்கலாம்:

எனது குறுநாவலில் வரும் சில உண்மையான இடங்களின் பெயர்களை புனைவுக்காக  நான் மாற்றியிருப்பேன். பீடோங் எனும் ஊரை ‘பெடோங்’ என்றும், ‘ரூசா தோட்டத்தை’‘மூசா தோட்டம்’ என்றும் மறுபெயரிட்டிருப்பேன். அப்படியொரு இடங்கள் மலேசியாவில் இல்லை. ஆனால், என் குறுநாவலை வாசித்து அதிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்ட அவர் இதுபோன்ற இடங்கள் இருப்பதைப் போல அப்படியே பயன்படுத்தியிருக்கும் இடங்களில் கடுமையான நெருடலை உண்டாக்கியது. மேலும், காப்பி கடை அமைப்பு, திருவிழா சண்டை, அதன் காட்சியமைப்பு என்று இன்னும் பலவற்றை இம்மி பிசகாமல் எடுத்துக் கையாண்டுள்ளார். இதனைச் சட்ட ரீதியிலும் என்னால் கொண்டு செல்ல முடியும். இந்நாவலை முறையே நான் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளேன்.

இதைப் பற்றி எழுத்தாளர் பாண்டியன் வல்லினம் என்கிற மலேசிய இலக்கிய இணைய இதழில் இவ்வருடம் ஜனவரியில் எதிர்வினைக் கட்டுரையாக எழுதியிருந்தார். அவர் இதனைப் பொதுவில் எழுத முடிவெடுத்தார்; நான் மறுநாள் ஜனவரி சம்பந்தப்பட்ட அத்தமிழக எழுத்தாளரிடம் நேரிடையாகவே முகநூல் வழியாகக் கேட்டேன். அவருக்கும் எனக்கும் அப்பொழுது பேச்சு இருந்ததால் நேரிடையாகக் கேட்பதே சரி என்று தோன்றியது. அவருக்கும் எனக்கும்  ஜனவரி 2 நடந்த உரையாடலுக்கான ஆதாரம் முகநூல் இன்பாக்சில் இருக்கிறது. (தோழி யோகியிடமும் இதனைக் காட்டியிருந்தேன்) யாரையும் அவமானப்படுத்தும் நோக்கு எனக்கில்லை அதற்குரிய சுபாவத்தில் நான் தற்போது இல்லை என்பதால் அப்பதிவுகளை நான் வெளியிடவில்லை. (ஆதாரம் வேண்டும் என்பவர்களும் நான் சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்று நினைப்பவர்களும் தனிப்பட்ட முறையில் ஆதாரத்தைக் கேட்டுப் பெறலாம்.)

நான் கேட்ட விடயங்களில் உள்ள சில நியாயங்களை மறுக்காமல் ‘பின்னர் விரிவாய் எழுதுவேன்’ என்று கூறிய ஒரு மூத்தப் படைப்பாளியைத் தொடர்ந்து இம்சிக்க முடியுமா? ஆகவேத்தான் அவருடைய விரிவான பதில் கட்டுரைக்காகக் காத்திருந்தேன். ஆனால், ஐந்து மாதங்கள் கடந்தும் பதில் இல்லை என்பதால் அவர் மீது வருத்தம் இருக்கவே செய்தது. அவர் வல்லினத்தில் வெளிவந்த பாண்டியனின் கட்டுரைக்கு ஆற்றிய எதிர்வினை, பாதிக்கப்பட்ட எனக்கான பதில் அல்ல என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, அவரிடமிருந்து வரக்கூடிய ஒரு முழுமையான விளக்கக் கட்டுரைக்கு நான் இடமளித்து, இச்சர்ச்சையைப் பொதுவில் எழுதாமல் இருந்தேன். ஒருவேளை சர்ச்சையையும் களேபரத்தையும் உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவ்வெழுத்தாளர் மலேசியா வருகிறார் என்று தெரிந்த அடுத்த கணத்திலிருந்து முகநூல் எதிர்வினைகள், மறுப்புகள் போன்றவற்றை எழுதி இப்பிரச்சனையைப் பெரிதாக்கியிருப்பேன். அவர் விரிவான ஒரு பொது பதிவிடுவார் என்று கொடுத்த அவகாசத்தைச் சமரசம் என்று அவர் திரித்துக் கொண்டது உண்மையில் கண்டனத்திற்குரியதாகும். அவ்வார்த்தையைப் பயன்படுத்தியே அவர் எல்லோரையும் சமாதானமும்படுத்தியுள்ளார். நடந்தது தவறென்று அவர் யோகியிடம் ஒப்புக்கொண்டு வருந்துகிறேன் என்று சொன்னதை ஒரு பொது மன்னிப்பாகக் கேட்டிருக்கலாமே? இத்தனை சிக்கலும் எழுந்திருக்காது அல்லவா? 

ஆனால், இப்பிரச்சனை எழுவதற்கு முன்பே என் தோழி ஒருவரால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித்தான்   ‘பெண்மை’ சிறுகதை தொகுப்பு அறிமுக விழாவும் அதன் சார்ந்தும் நடவடிக்கைகளும் ஆகும். ஆக, அவர்கள் கூட்டான முயற்சியில் முன்னெடுத்திருக்கும் ஓர் இலக்கிய செயல்பாட்டை நான் எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது; அவர்களின் விருந்தாளியாக வருபவரை நாம் அவமானப்படுத்தக்கூடாது என்கிற எண்ணமே நான் இப்பிரச்சனையை இத்தருணத்தில் ***பொதுவில் சர்ச்சையாக்காததற்கு முக்கியமான காரணமாகும்.

ஆனால், வாய்ப்பிருந்தால் அவ்வெழுத்தாளரிடம் இக்குறுநாவல் சர்ச்சை பற்றி கேளுங்கள் என்று நான் என் நட்பில் உள்ள மூன்று நண்பர்களிடம் கேட்டிருந்தேன் (நெருக்கடி தரவில்லை). ***வாய்ப்பிருந்தால் நிகழ்ச்சி முடிந்து கேளுங்கள் என்பதே என் தொனியாக இருந்தது. அதுவும் அவர் வாக்களித்த விரிவான விளக்கம் தொடர்பான நினைவுறுத்தலாக இருக்கும் என்பதாலும் என்னால் அங்கு நேரில் வர இயலவில்லை என்பதாலும் நான் கேட்ட மூவரும் என் நண்பர்கள் என்பதாலும் மட்டுமே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

மேலும், நான் முதலிலேயே சொன்னதைப் போல இந்நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் இம்முயற்சியிலும் எனக்கு எந்தப் பகைமை உணர்வும் இல்லை. ஒருவேளை ‘பெண்மை’ சிறுகதைகளை வாசித்தால், அச்சிறுகதைகள் தொடர்பான இலக்கிய விமர்சனத்தை முன்வைப்பேனே தவிர என் தோழி இருவரின் முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி தொடர்பாக எனக்குத் தனிப்பட்ட விரோதம் இல்லை. அப்படி ஏதும் மாற்றுக் கருத்து இருந்திருந்தால் நான் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுத்திருக்கக்கூடும் அல்லவா? நிகழ்ச்சி அன்று நான் நட்பு ரீதியில் முடிந்தால் அவரிடம் இது தொடர்பாகக் கேட்டுப் பாருங்கள்; நான் கேட்டு அவர் பதில் கொடுத்தும் பின்னர் அவரிடமிருந்து நான் எதிர்ப்பார்த்த விரிவான பதில் வராததால்தான் நண்பர்களின் மூலம் கேட்டாலாவது அதன் அழுத்தம் புரிந்து அவர் உடனே செயல்படுவார் என்று நினைத்தேன். (உண்மையில் அதன்படியே இப்பொழுது முகநூலில் ஒரு சுருக்கமான பதிவும் இட்டுள்ளார்)

மேலும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த என் தோழி, நீங்கள் நேரில் வாருங்கள், சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் நிகழ்ச்சி முடிந்து நேரில் கலந்துரையாட ஒரு வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுப்பதாகச் சொன்னார். ஆனால், என்னால் வர இயலாததால்(ஜொகூர் பயணத்தில் இருந்தேன்), இத்தனை உரிமையுடன் எனக்கு வாய்ப்பளித்த நண்பரிடம் வாய்ப்பிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள் என்றதில் அப்படியொரு தவறு இருந்துவிடுமா? இத்தனைக்கும் நான் யாரையும் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவில்லை என்பதையும் சம்பந்தப்பட்டத் தோழிகள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நான் கேட்பதற்குரிய எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் பிறரை விட்டுக் கேட்கச் சொல்லியிருந்தால் அது விமர்சனத்திற்குரியவையே. ஆனால், நான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்டுவிட்டேன்; அவரும் விரிவாய் எழுதுவதாகச் சொல்லியும் விட்டார். இது சமரசம் அல்ல. எதிர்வினையாகவும், நேரிடையாகவும் நாம் கேட்டாயிற்று. அவர் தரப்பில் பதில் இருந்தால்தான் நான் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வர முடியும் அல்லவா?

அடுத்து, எழுத்தாளர் பாண்டியன் நேற்றைய முன்தினம் முகநூலில் பதிவிட்டது நான் தூண்டி அவர் எழுதியவை என்கிற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்படுகிறது. பாண்டியன் இப்பிரச்சனையை வல்லினத்தில் எழுத வேண்டும் என்று எடுத்த முடிவே எனதல்ல. அது அவருடைய சுதந்திரம் தொடர்பான விடயம். படைப்பாளிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதில் எப்பொழுதுமே தெளிவாக இருக்கவே முயற்சிக்கிறேன். அவர் நேற்றைய முன்தினம் முகநூலில் பதிவிட்டதும் அவருடைய சுய முடிவாகும்; நான் தூண்டிவிட்டு அவர் எழுதவில்லை என்பதை அவரே பதிவிடுவார் என்று நான் நம்புகிறேன். என் தரப்பில் நான் எனக்கான பதிலுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கையில் இலக்கியம் சார்ந்து அவருக்கிருக்கும் உரிமை தொடர்பாக அவர் எழுதிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் பாலமுருகன் அல்ல; அவ்விடத்தில் வேறு யார் இருந்தாலும் நான் எழுதுவேன் என்று அவரே என்னிடம் கூறியும் இருக்கும்போது நான் எப்படி அவரைத் தூண்டியிருக்க முடியும்?

மேலும், எனது நாவல் பகுதி எடுக்கப்பட்டிருப்பதை பாண்டியன் அறிவித்தோடு அதனை ஓர் எதிர்வினை கட்டுரையாக எழுதியிருந்தார். பாண்டியன் எழுதிய எதிர்வினைக்குப் பதில் கொடுக்கும்போது பாண்டியனையும் அவர் சார்ந்திருக்கும் இணைய இதழையும் அத்தமிழக எழுத்தாளர் சாடினாரே தவிர அவருடைய பதிவில் எனக்கு எந்தப் பதிலும் இல்லை என்பதே என் ஆதங்கம். இருப்பினும் இன்றுவரை அம்மூத்த எழுத்தாளர் மீது நான் மரியாதையைப் பாதிக்கும் வகையில் உரையாடவில்லை; அல்லது வார்த்தைகளைப் பிரயோகிக்கவில்லை. அவரே நண்பர்களிடம் கவனக்குறைவை ஒப்புக் கொண்டபோது மேலும் அவரை நாம் அழுத்த முடியுமா?

 

சிறார் இலக்கியக் கட்டுரை- விளக்கம்

அடுத்து, அத்தமிழக எழுத்தாளர், தான் திண்டுக்கல் குழந்தை மாநாட்டில் என்னுடைய சிறுவர் நாவல்கள் பற்றி கட்டுரை படைத்ததாகவும் அதனால் பாலமுருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்றும் இங்குள்ள சிலரிடம் (தோழி ராஜி உட்பட) சொல்லி என் மீதான மறைமுக சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் மின்னஞ்சல் அனுப்பியதும் உண்மைத்தான். அம்மின்னஞ்சலில் மாநாடு தொடர்பான புகைப்படங்கள் அனுப்பியதும் உண்மைத்தான்.

//மலேசியா பாலமுருகனின் 3 சிறார் நூல்கள் பற்றிய மலேசியா குணநாதனின் சிறப்பான ஆய்வு திண்டுக்கல் மாநாட்டில்..இப்படி. மலேசியா ஆளுமைகள் எப்போதும் பாராட்டைப் பெறுபவர்கள்//

அதாவது திண்டுக்கல் மாநாட்டில் உண்மையில் எனது சிறுவர் நாவல்கள் பற்றிய கட்டுரை படைத்தது மலேசிய இடைநிலைப்பள்ளி ஆசிரியர் இனிய நண்பர் திரு.ஆ.குணநாதன் ஆவார். இது எனக்கு முன்னமே தெரியும். மாநாட்டிற்குச் செல்லும் அன்றைய இரவு வரை எனக்கும் குணநாதன் அவர்களுக்கும் பேச்சு இருந்தது. ஆக, அங்குள்ள புகைப்படங்களை அனுப்பி வைக்கும் உதவி மட்டுமே அத்தமிழக எழுத்தாளர் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றியும் சொல்லியிருந்தேன். உண்மையில் நான் பாராட்டி நன்றி தெரிவிக்க வேண்டியர் திரு.ஆ.குணநாதன் அவர்களே. இதனை **அத்தமிழக எழுத்தாளர் இங்கு மலேசியாவில் தவறாகப் பரப்பியதில் எனக்கு மிகுந்த வருத்தம்.

இனி…

நான் நேற்று மீண்டும் அந்த எழுத்தாளரிடம் என் கோரிக்கையைக் கேள்வியை முன்வைத்துள்ளேன். உங்களின் விரிவான ஒரு பொது பதிவு மட்டுமே இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் தேவையற்ற முரண்களைப் போக்கும் என்றும் கூறியிருக்கிறேன். சுற்றுலாவில் இருப்பதால் விரைவில் நிச்சயம் பதிவிடுவதாக அவர் பதிலளித்துள்ளார். (அவர் சுற்றுலா மனநிலையில் இருப்பார் நாம் எல்லாம் அடித்துத் திட்டிக் கொண்டு மன உளைச்சலில் இருப்போம்?) மேலும் இன்று, அத்தமிழக எழுத்தாளர் ஒரு பொதுவான முகநூல் பதிவிட்டுள்ளார், பின்வருமாறு:

//ஈப்போ. என் சில நாவல்கள் அனுபவங்கள் பற்றிப் பேசினேன். பின்னர் தோழி யோகி கடவுச்சீட்டு பற்றிக் கேட்டார். அதில் சிறு சாப்பாட்டு க்கடை பகுதி என்னை பாதித்த பாலமுருகன் நாவலிலும் பிற கதைகளிலும் திரைப்படங்களில் ௨ள்ளதும் அவரின் நாவலின் மலேசிய வார்த்தைகளை என் சேகரிப்புக் குறிப்புகளிலிருந்து எடுத்துப் பயன்படுத்தியதையும். அடுத்து வரும் பதிப்பில் அவற்றைக் குறிப்பிடுவேன் என்பதையும் சொன்னேன்.//

இதுதான் விரிவான பதில் என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. தமிழ்நாடு சென்றதும் முறையாக தட்டச்சு செய்து அனுப்புவதாகவும் நாவலின் அடுத்த பதிப்பில் என் நாவலில் சேகரிக்கப்பட்ட தகவல் பற்றி குறிப்பிடுவதாகவும் இன்று (25/06/2019 – மாலை 2.36) மீண்டும் எனக்கு இன்பாக்ஸ் செய்திருந்தார். இதுதான் எங்களுக்கிடையில் நடந்து கொண்டிருக்கும் நாவல் தொடர்பான சர்ச்சையின் விவரங்கள் ஆகும். அவருக்கு நான் கொடுத்திருந்த அவகாசமும் வாய்ப்பும்தான் இதுவரை இதனைப் பதிவிடாத காரணமும்கூட.

ஆக, இப்பிரச்சனையை இனி நானே சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் மூலம் நிவர்த்திக்க முயற்சிக்கிறேன். அவருடைய விளக்கங்கள் அடங்கிய ஒரு பொதுப்பதிவு விரைவில் அவரிடம் இருந்து வரும் என்றும் எதிர்ப்பார்க்கிறேன். இதனை முன்வைத்து இனி சர்ச்சைகள் வேண்டாம் என்பதே எனது வேண்டுக்கோள்.

எனக்கு யார் மீதும் தனிப்பட்ட பகைமை இல்லை. என் பெயர் குறிபிடப்பட்ட ஒரு முகநூல் பதிவிற்காகவே இக்கட்டுரை எழுதினேன். இல்லையென்றால் இதுவும்கூட தவிர்க்கப்பட்டிருக்கும். இங்கு நாம் வளர்க்க நினைப்பது இலக்கியமே தவிர பகைமையும் வேறுபாடுகளும் அல்ல. இனி சம்பந்தப்பட்ட அந்த எழுத்தாளரிடமிருந்து பதில் (அவரே பொது பதிவு இடுவதாக வாக்குக் கொடுத்துள்ளார்) வரும்வரை காத்திருப்போம். படைப்புச் சுரண்டல் தெரிந்தோ தெரியாமலோ நடந்திருந்தாலும் அதனைக் கேள்விக் கேட்கக்கூடிய கடப்பாடு நாம் அனைவருக்கும் உண்டு. ஆனால், அது கேட்கப்படும் முறை, அதற்குரிய பதிலில் இருக்கும் தார்மீகம் ஆகியவையும் முக்கியமானவையாகும்.

பின்குறிப்பு: எனது புலனத்தகவலைப் படிக்கும் முன்பே எழுத்தாளர் தோழி யோகி அவரை நிகழ்ச்சிற்குப் பின் சந்தித்து இதைப் பற்றிக் கேட்டுள்ளார். நான் சொல்லும் முன்பே எழுத்தாளர் ஒருவர் பயணத்தில் வரும்போது அவரிடம் இதைக் கேட்டுள்ளார். நான் சொல்லும் முன்பே எழுத்தாளர் நண்பர் ஒருவர் என்னையும் அவரையும் சந்திக்க வைக்க முற்பட்டுள்ளார். நிகழ்ச்சி முடிந்து தவறாமல் தோழி ராஜி அவரிடம் இதைக் கேட்டுள்ளார். கேட்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் தோன்றிய அந்தக் குரல்தான் படைப்பாளியினுடையது. அந்தக் குரலின் மீது எனக்கிருக்கும் நம்பிக்கை மாறாது. உங்களில் யாருக்கேனும் இனி இதுபோன்று நடந்தாலும் நான் மௌனம் காக்கப் போவதில்லை என்பதும் உறுதியே. அன்பும் நன்றியும்.

கே,பாலமுருகன்

 

***தமிழக எழுத்தாளர்: திரு.சுப்ரபாரதிமணியம்

ஆப்பே நாவல் பற்றிய என் விரிவான நேர்காணல்: https://selliyal.com/archives/88939

 

சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி? – பாகம் 1

சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி?

வளர நினைக்கும் அனைவருக்கும் இக்கேள்வி முதன்மையாக மனத்தில் தோன்றும். சமூகத்திற்குள் ஓர் அங்கமான குடும்பத்தில் வளர்க்கப்படும் எல்லோருக்கும் தோன்றும் முக்கியமான கேள்வியும்கூட. வீட்டில் அப்பாவிலிருந்து அம்மாவரை அனைவரும் சொல்லும் வார்த்தையும் இதுவாகவே இருக்கும். நாளைக்குச் சமூகம் உன்னை மதிக்கும்படி வாழ் என்கிற கட்டளையைக் கேட்டுக் கேட்டுப் பழகியிருப்போம்.

சமூகத்தில் நீ மதிக்கப்பட வேண்டுமென்றால் நீ மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்கிற முதல் கட்டளை குடும்பத்தில் பிறப்பிக்கப்படும். பின்னர், அதே கட்டளையை ஊராரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆக, மீண்டும் மீண்டும் சொல்லப்படும் அக்கட்டளை/விதிமுறை நம் மனத்தில் ஆழப் பதிந்து விடுகிறது. சமூகம் எதிர்ப்பார்ப்பதைப் போல ஆக வேண்டும் அதன் நன்மதிப்பைப் பெற்றுவிட வேண்டும் என்று போராடி கடைசியில் அப்படி ஆக முடியாமல் போகும் ஒவ்வொரு இளைஞனும் ஒரு தோல்வி மனப்பான்மைக்குள்ளாகுவதும் இந்தக் கட்டளைகளால்தான். கட்டளைகளை உற்பத்தி செய்தவர்கள்கூட மறைந்து போயிருப்பார்கள். ஆனால், அக்கட்டளைகளைக் காலம் முழுவதும் சுமந்து திரிந்த இளையோர் அதனால் பாதிப்பிற்குள்ளாகி சமூக மதிப்பை இழந்துவிட்டோம் என்கிற புரிதலுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

மருத்துவராக முடியாமல் மருத்துவ உதவியாளராகவும், வழக்கறிஞர் ஆக முடியாமல் வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை செய்பவராககவும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலர் சமூகத்தின் முன் குருகி நின்றுவிடுகிறார்கள். தாம் வெற்றிப்பெற வில்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். சமூகம் என்றால் என்ன? வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் மட்டும் வாழும் மாளிகையா? முதலில் அதுபோன்ற மாயையிலிருந்து நம் இளம் தலைமுறையை விடுவிக்க வேண்டும்.

சமூகம் என்றால் என்ன? மனிதர்கள் விதிக்கப்பட்ட சில வரையறைகளைப் பின்பற்றி அவரவர் குடும்பத்திற்குள் வாழ்வது ஆகும். சமூக அமைப்பிற்கென்ற பல விதிமுறைகள் இருக்கலாம். ஆனால், அச்சமூகம் எந்தத் தனிமனிதனின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த இயலாது. விதிமுறைகளை உருவாக்கி அதன்படி பின்பற்றுவோர் தான் இந்தச் சமூகம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் மட்டுமே சமூகத்தின் வழி நாம் பெறக்கூடிய வாய்ப்புகள் ஆகும். மற்றப்படி ஒவ்வொரு தனிமனிதனும் அவனுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றவன் என்பதை இளம் தலைமுறையினர் உணரும்படி செய்தல் வேண்டும். சமூகத்தை மீற வேண்டும்; சமூகத்தை அவமதிப்பு செய்ய வேண்டும் என்பதல்ல இவ்விவாதம்; சமூகத்தை மதி; சமூகத்திற்கு வாழ்; ஆனால், உன் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் சமூகத்திடமும் சமூக மதிப்பீடுகளிடமும் கொடுத்து விடாதே என்பதையே இங்கே வலியுறுத்துகிறேன்.

சமூகம் 1960களில் சொன்ன ஒரு விதி இப்பொழுது நடைமுறையில் உண்டா? உதாரணத்திற்குப் பெண்கள் இரவில் வெளியில் செல்லக்கூடாது என்கிற விதி ஆரம்பகாலங்களில் சமூகத்தின் வழியாகக் குடும்பங்களில் தரவிறக்கம் செய்யப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வந்து கொண்டிருந்தது. ஆனால், அவ்விதி 1980களில் பெண்கள் தொழிற்சாலை வேலைக்குச் செல்லத் துவங்கியதும் உடைந்து போனதை எல்லோரும் அறிவோம். குடும்ப சவால்களை எதிர்க்கொள்ள பெண்கள் கூட்டம் கூட்டமாக தொழிற்சாலை வேலைக்கு இரவு பகல் என்று ‘shift’ அமைப்பில் செல்லத் துவங்கினார்கள். ஆக, சமூகம் விதிக்கும் விதிகளைச் சமூகமே மீறி மறுவடிவமைப்பு செய்து கொள்ளும்போது நம் வாழ்க்கையைத் திட்டமிட, வடிவமைத்திட ஏன் சமூக விதிகளைப் பிரதானமாக மேற்கொள் கொள்ள வேண்டும்? மேலும், அச்சமூகம் விதித்த விதிகளுக்கு முன் ஏன் தோல்வி அடைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்?

இன்று மருத்துவர் இல்லாவிட்டாலும் தொழிலில் உயர்ந்து விளங்குபவர்களையும் சமூகம் மதிக்கத் தொடங்கியுள்ளதைக் காணலாம். ஆக, சமூக மதிப்பீடு என்பது மாறிகொண்டே இருக்கக்கூடிய ஒன்றாகும். அத்தகைய சமூக மதிப்பீடுகளை மாற்றியமைக்கும் வல்லமை நம்மிடம்தான் உண்டு. எத்தனையோ தனிமனிதர்கள் தங்களின் சாதனையால் சமூக மதிப்பீடுகளை மாற்றியுள்ளார்கள். சமூகம் நம்மை மதிக்காமல் போய்விடும் என்று பயப்படுவதைத் தவிர்த்துவிட்டு, சமூகத்தின் மதிப்பீடுகளைச் சீரமைப்பு செய்யும் வகையில் நாம் வாழ்ந்து காட்ட முயல வேண்டும்.

அதற்காக சோம்பேறியாக இருந்துவிட்டு சமூகம் என்னை மதிக்கவில்லை என புலம்புவதும் அபத்தம் என்பதை ஞாகபத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று ஒரு திறமை இருக்கும்; ஓர் ஈடுபாடு இருக்கும். அவற்றில் சிறந்து விளங்கினால் இதற்கு முன் சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கும் மதிப்பீடுகள் உடையும்.

அப்பேற்பட்ட பாரதியையே அவர் வாழ்ந்த காலத்தில் சமூகம் மதிக்கவில்லையே. ஆனால், இன்று இலக்கியம், மொழி, சமூகவியல், கல்வி என்று பாரதி பேசப்படாத இடங்களே அல்ல என்பதைக் கருத்தில் கொள்வோம்.

ஆகவே, சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி?

சமூகம் என்ன சொல்லும், சமூகம் என்ன நினைக்கும் சமூகம் மதிக்குமா என்கிற பயம் இல்லாமல் வாழ்ந்து உங்களின் தனித்துவ வழியில் வெற்றிப் பெற்றுக் காட்டுவதே சிறந்த வழியாகும்.

 

-கே.பாலமுருகன்