Toy’s Story – 4 – தனிமையும் புறக்கணிப்பும்

இப்படம் முதல் பாகம் வெளிவரும்போது நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். குறைந்தது நான்கு முறையாவது திரையரங்கில் பார்த்திருப்பேன். குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உலகில் வாழும் விளையாட்டுப் பொருள்களின் கதைத்தான் இப்படம். அவை யாவும் மனிதர்கள் பார்க்காதபோது உயிர் பெற்றுப் பேசும், ஓடும், அன்பு காட்டும், நேர்மையாக இருக்கும். குழந்தைகளுக்கு நாம் எல்லா காலங்களிலும் விசுவாசமாக இருந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே இவ்விளையாட்டுப் பொம்மைகளின் ஒரே இலட்சியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
 
‘வூடி’, ‘பஸ்’, ‘போ’ என்று முதல் பாகத்திலிருந்து இருக்கக்கூடிய அதே கதாபாத்திரங்கள்தான். இப்படம் குழந்தைகளுக்கானதாக இருப்பினும் பார்த்து முடிக்கும்போது ஒரு சொட்டுக் கண்ணீர் வரமாலில்லை. பிரிவு அத்தனை துயரமானது. இக்கூட்டத்திலிருந்து, இவ்விளையாட்டுப் பொம்மைகளுக்கு ஏதும் ஆபத்து என்றால் தன் உயிரைப் பனையம் வைத்துக் காப்பாற்றும் ‘Woody’ இறுதியில் இக்கூட்டத்திலிருந்து பிரிந்து தன் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வதாக கதை முடியும். ஒரு கனத்த துயரமும் மனத்தில் ஒட்டிக் கொள்ளும்.
 
ஒன்றரை மணி நேரம் போவதே தெரியாமல் உருவாக்கப்பட்டிருக்கும் கதைக்களம். பரப்பரப்பான திரைக்கதை. எங்கேயும் தொய்வில்லாத உணர்ச்சி சித்திரம் என்றே சொல்லலாம். குழந்தைகள் எப்பொழுதும் விளையாட்டுப் பொருள்களை நிரந்திரமாக அல்லது பாதுகாப்பாக வைத்திருப்பதில்லை. அவர்கள் செல்லும் இடங்களில் விட்டு வந்துவிடுவார்கள்; அல்லது வீட்டின் மூலையில் போட்டுவிட்டு மறந்துவிடுவார்கள்; அல்லது சிறிய பழுது ஏற்பட்டாலும் அதனை நேசிப்பதிலிருந்து விலகி கொள்வார்கள். குழந்தைகளையே உலகமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் குழந்தைகள் இல்லாத தனிமையில் உலகமெங்கும் சிதறிக் கிடக்கின்றன. அவ்விளையாட்டுப் பொருள்களின் தனிமை, புறக்கணிப்பு வாழ்வின் நிதர்சனங்களைக் காட்டுவது போலவே இருக்கும்.
 
போ என்கிற பெண் பொம்மை சொல்லும் ஒருசில வரிகள் சிந்திக்க வைத்தவை. நாம் எங்குமே நிரந்திரமாக இருக்க முடியாது; நம்மைப் பயன்படுத்தும் குழந்தைகள் மெல்ல வளர்ந்ததும் நம்மை வீசிவிடுவார்கள் அல்லது யாருக்காவது கொடுத்துவிடுவார்கள். இதுதான் நம்மைப் போன்ற பொம்மைகளின் நிரந்தரமற்ற வாழ்க்கை எனும்போது பிரிவு எத்தனை கொடியது என்று உணர முடியும். இதைக் குழந்தைகள் எத்தனை தூரம் சிந்தித்து உணர்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் இப்படம் பார்த்தால் தன் விளையாட்டுப் பொருள்களை, பொம்மைகளை எவ்வளவு தூரம், ஆழம் நேசிக்கத் துவங்குவார்கள் என்று மட்டும் சிலாகிக்க முடிகிறது.
 
ஒருமுறையேனும் உங்கள் வீட்டுக் குழந்தைகளை இப்படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளோடு நீங்களும் குழந்தையாகி நீங்கள் எப்பொழுதோ விளையாடி தொலைத்த ஒரு விளையாட்டுப் பொருளின் ஞாபகக் கனத்துடன் வெளியே வருகிறீர்கள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நம் வீட்டுக் கட்டிலுக்கடியில் கை இல்லாமல், கால் இல்லாமல், தலை இல்லாமல் வெகுகாலம் மறைந்துகிடக்கும் பொம்மைகளின் துயரத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். எனக்கு நான் வெகுநாள் வைத்திருந்து யாரோ ஓர் உறவினர் வீட்டில் தொலைத்துவிட்ட ‘கிங் கோங்’ பொம்மையின் ஞாபகம் வந்து நினைவுகளை முட்டின.
 
-கே.பாலமுருகன்