தமிழ்நாடு 11ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘பேபி குட்டி’ சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில்  புதிய பாடத்திட்டத்திற்கான  மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத் தமிழ்’ அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய ‘பேபி குட்டி’ சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் பாடநூல் உருவாக்கக் குழுவில் இடம்பெற்ற மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.சீ.பன்னீர்செல்வம் தெரியப்படுத்தினார். இதுபோன்ற அரசு பாடநூலில் சேர்க்கப்படும் அயலக இலக்கியப் பிரிவில் இதுவே மலேசியவிற்கான முதல் சிறுகதை என்றும் அறியப்படுகின்றது.

 

இந்திய மொழிக்கதைகள், அயலகக் கதைகள் ஆகியவற்றை வாசித்து அறிந்து கொள்ளும் திறனை மாணாக்கர் மத்தியில் வளர்க்கவும் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பை உருவாக்கவும் சிறப்புத் தமிழ் பாடநூல் திட்டத்தில் இலக்கியப் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 2014ஆம் ஆண்டில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய ‘பேபி குட்டி’ சிறுகதை மிகுந்த கவனத்தைப் பெற்ற சிறுகதையாகும்.

சிறுகதையின் சுட்டி: https://balamurugan.org/2016/09/25/சிறுகதை-பேபி-குட்டி/

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பாலமுருகனின் ‘பேபிக் குட்டி’ சிறுகதையைத் தமிழில் தான் வாசித்தக் கதைகளில் முக்கியமான கதை என்று தன் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தாகும். அதே சிறுகதை 2018ஆம் ஆண்டு பாடநூல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அச்சிறுகதையின் மீது வாசகக் கவனத்தைக் குவிக்கின்றன.

ஜெயமோகன் அகப்பக்கத்தில்: https://www.jeyamohan.in/48659#.WyozyVUzaM8

 

மலேசிய இடைநிலைப்பள்ளிப் பாடநூலில் தமிழகத்தின் சிறுகதைகள் இடம்பெற்றிருப்பதைப் போன்று, தமிழகத்தின் அரசுப் பாடநூலில் முதன்முதலாக ஒரு மலேசிய சிறுகதை இடம்பெற்றிருப்பது அதுவும் மலேசிய நவீனப் படைப்பாளி கே.பாலமுருகனின் சிறுகதை சேர்க்கப்பட்டிருப்பது, அயலகத் தமிழின் மீது சமீபத்தில் குவிந்திருக்கும் வாசகக் கவனத்தின் விரிவாக்கத்தைக் காட்டுகிறது.

ஒரு குழந்தையின் மரணம் நிகழ்ந்திருக்கும் வீட்டில் வாழும் 92 வயது நிரம்பிய பேபி குட்டியின் ஒரு நாள் வாழ்க்கையைக் கே.பாலமுருகன் யதார்த்த நடையில் சித்தரித்திருக்கிறார். நம் சமூகத்தின் முதியவர்கள் மீதான புரிதலையும், குழந்தைமை என்பதன் மீது நமக்கிருக்கும் எண்ணங்களையும் களைத்துப் போடுவதாக இச்சிறுகதையைப் பற்றி பலர் கருத்துரைக்கிறார்கள்.

செய்தி: சு.அர்ஷினி

 

இச்செய்தி தொடர்பான உலகத் தமிழர்களின் கருத்துகள்:

 

கணேஷ் பாபு, சிங்கை எழுத்தாளர்

 

மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனின் எழுத்துகள் எனக்கு எப்போதுமே மிக விருப்பமானவை. நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகளை அவரது கதைகளை வாசிக்கும் ஒருவர் எளிதாக அறிந்து கொள்ளலாம். பிரம்மாண்டமான இந்த வாழ்வின் நுட்பமான தருணங்களை கலை உசாவுகிறது. கலையின் நுட்பமான தருணங்களை இவரது எழுத்து பிரதிபலிக்கிறது. வாழ்வும் கலையும் முயங்கியும் பிரிந்தும் செல்லும் பல்வேறு புள்ளிகளை அடையாளப்படுத்துவதை இவரது கதைகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இவரது “பேபி குட்டி” என்ற கதையை ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் தளத்தில் அளிக்கப்பட்டிருந்த சுட்டியின் மூலம் முதன்முதலில் வாசித்தேன். அப்போதே அந்தக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது. அதன்பின் பல தருணங்களில் அவரது கதைகள் என்னை ஈர்த்திருக்கின்றன. கதைக்குள் எழுத்தாளன் பிரவேசிக்காமல், ஆர்ப்பரிக்காமல், அடங்கிய குரலில் கதை சொல்லும் இவர், கதையின் முடிவுக்குப் பின் வாசகன் மனதில் சன்னதம் கொண்டெழும் இயல்புள்ளவர். பேபி குட்டி கதையும் இதை நிரூபிப்பது போலவேதான் இருக்கிறது. 


சிறுகதை வடிவத்தின் அனைத்து சாத்தியங்களையும் இக்கதையில் நன்கு பயன்படுத்தியிருக்கிறார் பாலமுருகன். எந்த விதமான அலங்காரமும் இன்றி சட்டெனத் துவங்கிவிடுகிறது கதை. இரண்டு வயதுக் குழந்தையை சாகக் கொடுத்த வீட்டின் காட்சி விவரணை, மழித்தலும் நீட்டலும் இன்றி சரியான சொற்றொடர்களால், துல்லியமாகச் சொல்லப்பட்டுள்ளது. சாதாரணமான சொற்களிலேயே வாசிப்பவன் மனதில் துக்கத்தின் அடர்த்தியை ஏற்றிவிடுகிறார். 


“இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர், அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார்”,


“பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெளியில் சட்டென முடிந்து விட்ட வாழ்க்கை”


“ஒரு குழந்தையின் மரணத்திற்கு முன் அனைத்து மனங்களும் குழந்தையாகிவிடுகின்றன.”


மேற்கண்ட வரிகள் புதைமணலைப் போல வாசிப்பவனின் அகத்தை உள்ளிழுத்துக் கொள்கின்றன. எளிய வடிவத்தையும், சொற்களையும் கையாளும் கதை, வாசகன் முன் வலுவான கேள்விகளை முன்வைக்கின்றன. மரணம் என்பது என்ன? குழந்தை என்பது என்ன? உருவத்தாலும் வயதாலும்தான் குழந்தையை கற்பிதம் செய்துகொள்கிறோமா? அகத்திலுறையும் குழந்தையை சமூகம் எப்போதுதான் கண்டுகொள்ளும்? கைவிடப்பட்ட முதுமை என்பதன் பெறுமதிதான் என்ன? போன்ற கேள்விகள் கதையின் வீச்சை பன்மடங்கு பெருக்குகின்றன.


ஒரு குழந்தையின் மரணத்திற்கு துக்கப்படும் மனிதர்கள், இன்னொரு குழந்தையை கைவிடுகிறார்கள். ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுக்குமே இவர்கள் ஒரு பொருட்டேயல்ல. ஒரு குழந்தை இறந்துவிட்டது. இன்னொரு குழந்தையோ அகத்தளவில் இவர்கள் வாழும் உலகின் தாழ்வாரத்திற்கு வெகு தொலைவில் உள்ளது. மனிதர்கள் குழந்தைகளையும் புரிந்து கொள்வதில்லை, முதியவர்களையும் புரிந்து கொள்வதில்லை. புறக்கணிப்பும், அன்பின்மையும்தான் நம் காலத்தில் முதியவர்கள் சந்திக்கும் ஆகப்பெரிய இடர். அந்த இடரை வலுவாகக் காட்சிப்படுத்தியிருப்பதால்தான் பாலமுருகனின் இக்கதை தனித்துவமாக ஒளிர்கிறது. இனிய இசை சோகமுடைத்து என்பார் ஷெல்லி. இனிய கதையும் அப்படித்தானிருக்கிறது.


இக்கதையை தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை, மேல்நிலை முதலாம் வகுப்பு(11 ஆம் வகுப்பு) சிறப்புத் தமிழ் பாட நூலில் சேர்த்துள்ளது மிகவும் மகிழ்சியளிக்கிறது. இதுபோன்ற அரசு பாடநூலில் இடம்பெறும் முதல் மலேசிய சிறுகதை என்ற பெருமையையும் இக்கதை அடைந்திருக்கிறது. பாலமுருகனுக்கு வாழ்த்துகள்.

 

குமார் ஐயா, திருவாரூர்

அயலகத் தமிழ் எழுத்துக்களை,படைப்புகளைத் தாயகத்து தமிழர்கள் படித்தல் வேண்டும் என பத்து ஆண்டுகளாய் போராடினேன்.வாய்ப்பு கிடைத்தது .11ம் வகுப்பு பாடத்திட்ட வாய்ப்பு ,இன்று தமிழக மாணவர்கள் அயலகத் தமிழ் படைப்புகளைப் படிக்கின்றனர் .மகிழ்ச்சியாக உள்ளது .வகுப்பறையில் நானே நடத்தும் போது…புலம் பெயர்வின் வலியுடன் எனது மாணவர்கள்…
11ம் வகுப்பு பொதுத்தமிழில் ஈழம் ஈன்று எடுத்த சு.வில்வரத்தினத்தின் யுகத்தின் பாடல் மொழிவாழ்த்தாய்… அடுத்து எங்கள் அ.முத்துலிங்கம் அவர்களின் ”ஆறாம்திணை ” உரைநடையில் வைத்துள்ளோம்.


சிறப்பு தமிழ் பாடப்பிரிவில் மலேசிய எழுத்தாளர் என் நண்பர் கே .பாலமுருகனின்
“பேபிகுட்டி” சிறுகதையும்,

ஈழ எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “பசி” சிறுகதையும் பாடதிட்டத்தில் இடம் பெற்று 9ம் வகுப்பு தமிழ் பாடத்தில் காசி ஆனந்தனின் பாடலையம் சேர்த்து ..இன்று பல லட்சம் தமிழக மாணவர்கள் கற்கின்றனர் …மனது மகிழ்ச்சியாக உள்ளது. அயலத் தமிழர் வாழ்க..