சிறுகதை: சண்டை

“நாசமா போறவனே”

இதுதான் நான் அங்கு வந்து கேட்ட முதல் வார்த்தை. பகீரென்று ஆகிவிட்டது. கைலியை உதறிவிட்டு அதனைப் படார் எனத் தடுப்புச்சுவர் மீது அடித்துவிட்டு உள்ளே போனவர் ஒரு நடுத்தர வயதை ஒத்தவராகக் காட்சியளித்தார். பங்சார் அடுக்குமாடிக்கு நான் வீடு பார்க்க வந்த முதல் நாள் அது. உள்ளே போனவரின் முனங்கல் அடங்கவே சில நிமிடங்கள் ஆனது. மறுபடியும் வந்து ஏதாவது கேட்டுவிடுவார் எனப் பயந்து எனக்கு முன்னே அவசரமாக நடந்து கொண்டிருந்த வீட்டுக்காரரைப் பின் தொடர்ந்து நகர்ந்தேன்.

“அதுலாம் ஒன்னும் கண்டுகாதீங்க தம்பி. அந்த அம்மா உங்கள ஒன்னும் சொல்லல. அதுக்கும் அவங்க வீட்டுக்காரருக்கும் இப்படித்தான் சண்டெ தெறிக்கும்…பொன்மொழிகளா இருக்கும்…”

பெரும்பாலும் வீடுகளின் முன்கதவுகள் கறைப் படிந்து கிடப்பதே அங்கிருந்து பலர் போய்விட்டார்கள் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது. ஒரு சில வீடுகளில் சன்னல்களின் வழியாக அழகுச்செடிகள் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. நாங்கள் நடந்து கொண்டிருப்பது அநேகமாக ஒன்பதாவது மாடியாக இருக்கலாம். தடுப்புச் சுவர் இடுப்பளவே இருந்தது. எட்டிப் பார்த்தால் கீழ்த்தலம் சலனமே இல்லாமல் இருண்டு தெரிந்தது. எல்லாச் சுவர்களும் ஈரப்பசையுடன் மினுமினுத்துக் கொண்டிருந்தன.

“அப்புறம் தம்பி, கரண்டு காசு தண்ணீ காசு அட்வான்ஸ் கொடுத்துருங்க. இங்கத் தண்ணீ ஒழுகிட்டேத்தான் இருக்கும். போகும்போது வரும்போதும் பாத்துக்குங்க”

அவர் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ ஒரு சொட்டு நீர் நடுமண்டையை நனைத்தது. மேலே கவனித்தேன். அதற்குரிய எந்த அறிகுறியும் இல்லாமல் அடுத்த சொட்டு நெற்றியில் விழுந்து மூக்கின் வழியாக வழிந்தோடியது. அப்பொழுதுதான் மிகுந்த அசூசையை உணர்ந்தேன். முன்பிருந்த வீட்டில் மழை பெய்தால் ஒரு சில இடங்களில் தண்ணீர் ஒழுகும். இரவு முழுவதும் அந்தச் சத்தம் எனக்கு எரிச்சலை உண்டாக்கும். நீர் விரையம் எனக்கு ஒவ்வாத ஒன்று. எங்குக் குழாய் சரியாக மூடப்படாமல் இருந்தாலும் உடனே அதனைக் கூர்ந்து கேட்டு அடைத்துவிடுவேன். அப்படியில்லையென்றால் என்னால் நிம்மதியாக எதையும் செய்ய இயலாது.

அவர் எனக்காகப் பார்த்து வைத்திருந்த வீடு அம்மாடியின் கடைசியில் இருந்தது. தரையில் நீர் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது. ஒழுகி பல நாள் ஆகி காய்ந்து மீண்டும் அதன் மீது ஒழுகிக் கொண்டிருந்த நீரின் வாடை என்னமோ செய்தது.

“வீட்டுக்குள்ள தண்ணீ ஒழுகுமா சார்?”

“அதெல்லாம் இல்லங்க. வீட்டுல அப்படில்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் பக்காவா இருக்கும். கவலைப்படாதீங்க”

சட்டென ஒரு நாய் அங்கிருந்து ஒரு வீட்டுக்குள்ளிருந்து வெளியே குரைத்துக் கொண்டே வந்தது. அதனைத் துரத்திக் கொண்டே ஒரு பாட்டியும் வந்தார். அவரால் ஓடமுடியாமல் மூச்சிரைத்தது.

“ஏய் சனியனே! எரும. எப்படி ஓடுது பாரு?”

நான் அந்த நாயைச் சந்தேகத்துடன் பார்த்தேன். அது நாய்தான். அது மூலையில் இருந்த படிக்கட்டிடம் சென்று சட்டென நின்றுவிட்டுத் திரும்பி எங்களைப் பார்த்தது. அந்தப் பரப்பரப்பிலும் நான் அந்நியன் என அதனால் உணர முடிந்த மறுகணமே என்னைப் பார்த்துக் குரைக்கத் துவங்கியது.

“ஏன் கெளவி இங்க நாய் வளக்கக்கூடாதுனு உனக்குத் தெரியாது?”

“இப்ப நான் என்ன உன் வீட்டுலயா வளத்தென்? ரொம்ப ஆடாதெ. நாங்க என்ன வெளியயா உடறோம்? இப்பத் தப்பிச்சி வந்துருச்சி கழுதெ…”

“ஆங்ங்ங்…நீ பேசுவ… இரு சொல்ல வேண்டியவங்களுக்கிட்ட சொன்னா தெரியும்”

“வந்தியா… உன் வேலய பாத்தீயானு இரு. புரியுதா? இங்க வந்து எங்க வீட்டுல நோண்டாதெ…”

நரைத்த முடி சுருள் சுருளாக பாட்டியின் தலையைப் பஞ்சுமிட்டாய் போல மூடியிருந்தது. எங்களைப் பார்த்து முறைத்துவிட்டு , “ஏய் எரும மாடே. ஓடாதெ இங்க வா,” என்றவாறு அதற்கு மேல் எங்கு ஓடுவது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த நாயை நோக்கிப் பாட்டி வீரநடை எடுத்தார்.

“அது அப்படித்தான் தம்பி. அந்த நாய் அந்தப் படிக்கட்டெ தாண்டி போகாது. அதுக்கு இறங்க தெரியாது. அப்படி இறங்கினாலும் இந்த வீட்டுல ஒருத்தன் இருக்கான்… அதெ ஈவிரக்கம் இல்லாம அடிப்பான். இந்தக் கெளவி இருக்கே… பேச்சுத்தான். அதுக்கும் படி இறங்கிப் போவத் தெரியாது. அப்படிப் போனாலும் அதுக்கும் அடி விழும். இப்படித்தான் அது பையனுக்கும் அதுக்கும் சண்டெ நடந்துகிட்டே இருக்கும்”

வாடகை வீட்டுக்காரர் எதுவும் நடக்காததைப் போல நாக்கை வெளியே நீட்டி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டே முன்னே நடந்தார். போகப் போக நடப்பதற்குரிய இடைவெளி குறைந்து கொண்டே இருந்தது. பலர் வீட்டுக்கு வெளிவரந்தாவில் பொருட்களைக் குவித்து வைத்திருந்தார்கள். சில இடங்களில் தடுப்புச் சுவருக்கு மேலே சப்பாத்துகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அதன் நாற்றம் காற்றில் கலந்து பின்னர் எங்கு மறையும் என்று வியப்பாக இருந்தது.

ஒரு வீட்டை நெருங்கியதும் அங்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அலமாரியிலிருந்து ஒரு தாத்தா தன் துணிகளை வெளியே எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அங்கே ஒரு நாற்காலியும் வழியைப் பாதி பிடுங்கி வைத்துக் கொண்டிருந்தது. சரியாகக் காயாமல் ஈரத்துடன் வைக்கப்பட்டத் துணிகளிலிருந்து ஒருவகையான வாடை வீசிக் கொண்டிருந்தது.

“மேலேந்து தூக்கி உன்னை வீசிருவேன்!”

சட்டென வந்த குரல் உடலை அதிரச் செய்தது. யாரோ என் காதுக்கு அருகில் வந்து கத்துவதைப் போன்ற திடீர் பதற்றம்.

“இருக்கறது ஒழுங்கா இருந்துக்கோ, புரியுதா?”

“ஆமாம்டா…இருக்கேன்… பாத்துக்கோ… இங்க இருக்கன் பாரு…”

வேட்டியை வீட்டுக்கு வெளியிலேயே மாற்றிக் கொண்டிருந்த அந்தத் தாத்தாவைப் பார்த்து ஒரு வாலிபப் பையன் கத்திவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டான். அவர் கீழே விழுந்துவிட்ட தன் கைக்கடிகாரத்தை எடுத்து கையில் கட்டிக் கொண்டே உள்ளே பார்த்துக் கத்தினார்.

“பாவம் அந்த மனுசன். அவர் வாங்கன வீடுதான் இது…” வீட்டுக்காரர் ஏதோ முனங்கிவிட்டு முன்னே நடந்தார்.

நான் வாடகைக்கு இருக்கப் போகும் வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் வெளியே நிறைய பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலேயும் கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த பூப்பாசிகள் காற்றில் அலசிக் கொண்டிருந்தன. அவற்றுள் பெரும்பாலான செடிகள் செத்துச் சில நாட்கள் ஆகியிருக்கலாம் போல.

“இங்கக் கொஞ்சம் பூரான் தொல்லை இருக்கு தம்பி. அதை மட்டும் கொஞ்சம் பாத்துக்குங்க. வீட்டுக்கு வெளில வந்தீங்கனா சப்பாத்திய போடறதுக்கு முன்ன உதறிட்டுப் போடுங்க, சரியா?”

தலையைக் கொஞ்சம் தயக்கத்துடன் ஆட்டிவிட்டுக் கீழே பார்த்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூப்பாசிகளின் இடுக்குகள் பயமுறுத்தின. எல்லாம் அடைத்துக் கொண்டிருந்தன. வீட்டின் கதவுக்கு வெளியே ஓர் இரும்புக் கதவு. திருப்பிடித்து எப்பொழுது வேண்டுமென்றாலும் விழலாம் என்பதைப் போல காட்சியளித்தது. கொஞ்சம் முனங்கிக் கொண்டே திறந்தது.

“தம்பி, இந்தக் கேட் அப்படித்தான். மல்லுக்கு நிக்கும். திறக்கலைனா நீங்க தள்ளணும். கொஞ்சம் தம் கட்டி தள்ளுங்க. ஆனா பாத்து…காலைலெ வேலைக்குப் போற ஆள்னா பக்கத்து வீட்டுக்காரங்கள எழுப்பி விட்டுரும் இந்தக் கேட்… அப்புறம் அந்த அம்மா சண்டைக்கு வரும், கவனம்…”

சொல்லிக் கொண்டே அந்த இரும்புக் கதவை மேலும் உள்ளே நகர்த்தினார். அதன் கீச்சிடும் சத்தம் அங்கே நன்றாக உலாவிட்டுக் கீழ்நோக்கிப் பாய்ந்து எங்கோ போய் கரைந்தது. அப்படியொரு சத்தம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். பாசைகளின் வாடை எங்கும் வியாபித்திருந்தது. இரண்டே அறைகள். இரண்டு நாற்காலிகள் போட்டால் நிறைந்துவிடும் அளவிற்கான ஒரு சிறிய வரவேற்பறை. வலதுப்பக்கம் வாசலையொட்டிய சிறிய சமையலறை. அவ்வளவுத்தான். வீட்டுக்காரர் இரண்டு நிமிடத்தில் வீட்டைச் சுற்றிக் காட்டிவிட்டு, வேறு என்ன தெரிய வேண்டும் என என் முகத்தைப் பார்த்தார். என்னால் ஆச்சரியத்தில் இருந்து மீள முடியவில்லை.

“தம்பி, கடைசியா ஒன்னு சொல்லிக்கறன். துணிங்கள முடிஞ்சா ரெண்டு ரூம்புல ஏதாச்சம் ஒன்னுல ஒரு கயிறைக் கட்டிக் காயப்போட்டுக்குங்க. ஜன்னலுக்கு வெளில தொங்கவிட்டுறாதீங்க,”

ஜன்னல் வழியாக வெளியில் எட்டிப் பார்த்தேன். வீடுகளின் பின்புறம் தெரிந்தது. எல்லா ஜன்னல்களையும் ஏதோ ஒரு துணி மறைத்துக் கொண்டிருந்தது. பாதி காய்ந்து காயாமலும் நீர் ஒழுகிக் கொண்டும் எங்கும் துணிகள்.

“சரி தம்பி. இந்தா சாவியெ வச்சுக்குங்க. பூட்டை மாத்தறதுனா மாத்திக்குங்க. இதோட நீங்க எப்ப வேணும்னாலும் குடி வந்துக்கலாம். அது உங்க விருப்பம். மாசம் முடியும்போது வந்து காசை வாங்கிக்குவேன். இதுக்கு முன்ன ஒரு புருஷன் பொண்டாட்டி இங்க இருந்தாங்க. சேவா காசை ஒழுங்காவே கொடுக்க மாட்டாங்க. நீங்க வாத்தியாரு. உங்களுக்குச் சொல்லத் தேவையில்லனு நினைக்கறன்,”

கையில் சாவியை வாங்கிக் கொண்டு அவருடன் வெளியில் வந்தேன்.

“க்கா உங்க வீட்டுக்காரருக்கும் அந்த நாலாவது மாடி துறை அங்களுக்கும் சண்டெ!” என்று ஒரு பையன் வந்து பக்கத்து வீட்டு ஆளிடம் கத்தி விட்டு ஓடினான்.

“இந்த மனுசனுக்கு வேற வேலையே இல்லையா? மாரியாத்தா…”

ஒரு நடுத்தர வயதை ஒத்திருந்த பெண்மணி கூந்தலை வாரிப் பின்மண்டையில் கட்டிவிட்டுக் காலில் சப்பாத்திக்கூட அணியாமல் கத்திக் கொண்டே ஓடினார்.

“இப்படித்தான் தம்பி… வாங்க கீழ போலாம்”

அந்த வாடகை வீட்டுக்காரர் ஒரு ஞானியைப் போல அந்த ஒரே வார்த்தையைத்தான் மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தார். படிகளில் இறங்கி வரும்போது அதே சிறுநீர் வாடை. அதற்கும் அவரிடம் ஏதாவது பதில் அல்லது விளக்கம் இருக்கும் என்று தெரியும். அதனால் நான் ஏதும் கேட்காமல் அமைதியாக இறங்கிக் கொண்டிருந்தேன்.

“தம்பி, இங்கக் கொஞ்சம் மூத்திர வாடை அடிக்கும். இந்தப் பையனுங்க அவசரத்துக்குப் பொறந்த வாலுங்க… தோ…. அங்க மேலேந்து ஒன்னுக்கு அடிச்சி வெளையாடுங்க…” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

அந்த நேரம் பார்த்து எங்கிருந்தோ மீண்டும் ஒரு சொட்டு நீர்த்துளி என் தோள்பட்டையில் விழுந்தது. எடுத்து முகர்ந்து பார்த்தேன். மழைத்தண்ணீரைப் போலத்தான் இருந்தது. இருப்பினும் சந்தேகத்தால் மேலே பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.

கீழ்த்தளத்தை நெருங்க நெருங்க சண்டையின் உக்கிரம் கேட்கத் துவங்கியது. கொஞ்சம் பயமும் தயக்கமும் மனத்தில் கலந்திருந்தன.

“ஆமாம்டா கட்டையல போறவனே… நீதானே எனக்குச் சம்பாரிச்சிப் போடறெ? பேசுவடா”

“ஒன் மண்டய நான் பொளக்கறன் பாக்கறீயா? சொல்லு!”

அங்குச் சூழ்ந்திருந்த சிலர் மட்டும் அடிக்கக் கையோங்கிய அவரைப் பிடித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

“டெய்ய் இதாண்டா கடைசி. இனிமேல இப்படி நடந்துச்சி உனக்கு என் கையிலத்தான் சாவு”

இருவரும் அப்படியொன்றும் முரட்டு உருவமோ அல்லது பயங்கரமான தோற்றமோ கொண்டிருக்கவில்லை. சற்று நிதானமாகக் கவனித்தால் இருவரும் உடலளவில் மெலிந்து வயதிற்குரிய தோற்றம் இல்லாமல் கொஞ்சம் முதுமையும் ஏறியிருந்தது.

“எதுக்காக சார் இவ்ள பெரிய சண்டெ?”

வாடகை வீட்டுக்காரர் ஏதும் பேசாமல் யாரிடமோ நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த அடுக்குமாடியின் பாதுகாவலர் யாரிடமோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகள் சிலர் படியில் ஏறித் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பையன் ஐந்து வயது இருக்கும் என்று நினைக்கிறேன், கையில் ஓர் அரைக்கால் சிலுவாரை ஒரு குச்சியில் மாட்டியப்படி ஓடி வந்தான்.

“தம்பி அங்க ஏன் சண்ட?” என்று கேட்டு வைத்தேன்.

அவன் தன் கையில் பிடித்திருந்த அந்த அரைக்கால் சிலுவாரைக் காட்டினான்.

“இது என் தம்பியோட சார். அம்மா காயப்போட்டுருந்தாங்க மேல… அது அந்த அங்களோட காடில விழுந்துருச்சி… அதான்” என்று மீண்டும் குச்சியைக் கவனமாகப் பிடித்துக் கொண்டு படியில் ஏறி மறைந்து கொண்டிருந்தான்.

-கே.பாலமுருகன்