சிறுகதை: சண்டை

“நாசமா போறவனே”

இதுதான் நான் அங்கு வந்து கேட்ட முதல் வார்த்தை. பகீரென்று ஆகிவிட்டது. கைலியை உதறிவிட்டு அதனைப் படார் எனத் தடுப்புச்சுவர் மீது அடித்துவிட்டு உள்ளே போனவர் ஒரு நடுத்தர வயதை ஒத்தவராகக் காட்சியளித்தார். பங்சார் அடுக்குமாடிக்கு நான் வீடு பார்க்க வந்த முதல் நாள் அது. உள்ளே போனவரின் முனங்கல் அடங்கவே சில நிமிடங்கள் ஆனது. மறுபடியும் வந்து ஏதாவது கேட்டுவிடுவார் எனப் பயந்து எனக்கு முன்னே அவசரமாக நடந்து கொண்டிருந்த வீட்டுக்காரரைப் பின் தொடர்ந்து நகர்ந்தேன்.

“அதுலாம் ஒன்னும் கண்டுகாதீங்க தம்பி. அந்த அம்மா உங்கள ஒன்னும் சொல்லல. அதுக்கும் அவங்க வீட்டுக்காரருக்கும் இப்படித்தான் சண்டெ தெறிக்கும்…பொன்மொழிகளா இருக்கும்…”

பெரும்பாலும் வீடுகளின் முன்கதவுகள் கறைப் படிந்து கிடப்பதே அங்கிருந்து பலர் போய்விட்டார்கள் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது. ஒரு சில வீடுகளில் சன்னல்களின் வழியாக அழகுச்செடிகள் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. நாங்கள் நடந்து கொண்டிருப்பது அநேகமாக ஒன்பதாவது மாடியாக இருக்கலாம். தடுப்புச் சுவர் இடுப்பளவே இருந்தது. எட்டிப் பார்த்தால் கீழ்த்தலம் சலனமே இல்லாமல் இருண்டு தெரிந்தது. எல்லாச் சுவர்களும் ஈரப்பசையுடன் மினுமினுத்துக் கொண்டிருந்தன.

“அப்புறம் தம்பி, கரண்டு காசு தண்ணீ காசு அட்வான்ஸ் கொடுத்துருங்க. இங்கத் தண்ணீ ஒழுகிட்டேத்தான் இருக்கும். போகும்போது வரும்போதும் பாத்துக்குங்க”

அவர் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ ஒரு சொட்டு நீர் நடுமண்டையை நனைத்தது. மேலே கவனித்தேன். அதற்குரிய எந்த அறிகுறியும் இல்லாமல் அடுத்த சொட்டு நெற்றியில் விழுந்து மூக்கின் வழியாக வழிந்தோடியது. அப்பொழுதுதான் மிகுந்த அசூசையை உணர்ந்தேன். முன்பிருந்த வீட்டில் மழை பெய்தால் ஒரு சில இடங்களில் தண்ணீர் ஒழுகும். இரவு முழுவதும் அந்தச் சத்தம் எனக்கு எரிச்சலை உண்டாக்கும். நீர் விரையம் எனக்கு ஒவ்வாத ஒன்று. எங்குக் குழாய் சரியாக மூடப்படாமல் இருந்தாலும் உடனே அதனைக் கூர்ந்து கேட்டு அடைத்துவிடுவேன். அப்படியில்லையென்றால் என்னால் நிம்மதியாக எதையும் செய்ய இயலாது.

அவர் எனக்காகப் பார்த்து வைத்திருந்த வீடு அம்மாடியின் கடைசியில் இருந்தது. தரையில் நீர் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது. ஒழுகி பல நாள் ஆகி காய்ந்து மீண்டும் அதன் மீது ஒழுகிக் கொண்டிருந்த நீரின் வாடை என்னமோ செய்தது.

“வீட்டுக்குள்ள தண்ணீ ஒழுகுமா சார்?”

“அதெல்லாம் இல்லங்க. வீட்டுல அப்படில்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் பக்காவா இருக்கும். கவலைப்படாதீங்க”

சட்டென ஒரு நாய் அங்கிருந்து ஒரு வீட்டுக்குள்ளிருந்து வெளியே குரைத்துக் கொண்டே வந்தது. அதனைத் துரத்திக் கொண்டே ஒரு பாட்டியும் வந்தார். அவரால் ஓடமுடியாமல் மூச்சிரைத்தது.

“ஏய் சனியனே! எரும. எப்படி ஓடுது பாரு?”

நான் அந்த நாயைச் சந்தேகத்துடன் பார்த்தேன். அது நாய்தான். அது மூலையில் இருந்த படிக்கட்டிடம் சென்று சட்டென நின்றுவிட்டுத் திரும்பி எங்களைப் பார்த்தது. அந்தப் பரப்பரப்பிலும் நான் அந்நியன் என அதனால் உணர முடிந்த மறுகணமே என்னைப் பார்த்துக் குரைக்கத் துவங்கியது.

“ஏன் கெளவி இங்க நாய் வளக்கக்கூடாதுனு உனக்குத் தெரியாது?”

“இப்ப நான் என்ன உன் வீட்டுலயா வளத்தென்? ரொம்ப ஆடாதெ. நாங்க என்ன வெளியயா உடறோம்? இப்பத் தப்பிச்சி வந்துருச்சி கழுதெ…”

“ஆங்ங்ங்…நீ பேசுவ… இரு சொல்ல வேண்டியவங்களுக்கிட்ட சொன்னா தெரியும்”

“வந்தியா… உன் வேலய பாத்தீயானு இரு. புரியுதா? இங்க வந்து எங்க வீட்டுல நோண்டாதெ…”

நரைத்த முடி சுருள் சுருளாக பாட்டியின் தலையைப் பஞ்சுமிட்டாய் போல மூடியிருந்தது. எங்களைப் பார்த்து முறைத்துவிட்டு , “ஏய் எரும மாடே. ஓடாதெ இங்க வா,” என்றவாறு அதற்கு மேல் எங்கு ஓடுவது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த நாயை நோக்கிப் பாட்டி வீரநடை எடுத்தார்.

“அது அப்படித்தான் தம்பி. அந்த நாய் அந்தப் படிக்கட்டெ தாண்டி போகாது. அதுக்கு இறங்க தெரியாது. அப்படி இறங்கினாலும் இந்த வீட்டுல ஒருத்தன் இருக்கான்… அதெ ஈவிரக்கம் இல்லாம அடிப்பான். இந்தக் கெளவி இருக்கே… பேச்சுத்தான். அதுக்கும் படி இறங்கிப் போவத் தெரியாது. அப்படிப் போனாலும் அதுக்கும் அடி விழும். இப்படித்தான் அது பையனுக்கும் அதுக்கும் சண்டெ நடந்துகிட்டே இருக்கும்”

வாடகை வீட்டுக்காரர் எதுவும் நடக்காததைப் போல நாக்கை வெளியே நீட்டி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டே முன்னே நடந்தார். போகப் போக நடப்பதற்குரிய இடைவெளி குறைந்து கொண்டே இருந்தது. பலர் வீட்டுக்கு வெளிவரந்தாவில் பொருட்களைக் குவித்து வைத்திருந்தார்கள். சில இடங்களில் தடுப்புச் சுவருக்கு மேலே சப்பாத்துகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அதன் நாற்றம் காற்றில் கலந்து பின்னர் எங்கு மறையும் என்று வியப்பாக இருந்தது.

ஒரு வீட்டை நெருங்கியதும் அங்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அலமாரியிலிருந்து ஒரு தாத்தா தன் துணிகளை வெளியே எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அங்கே ஒரு நாற்காலியும் வழியைப் பாதி பிடுங்கி வைத்துக் கொண்டிருந்தது. சரியாகக் காயாமல் ஈரத்துடன் வைக்கப்பட்டத் துணிகளிலிருந்து ஒருவகையான வாடை வீசிக் கொண்டிருந்தது.

“மேலேந்து தூக்கி உன்னை வீசிருவேன்!”

சட்டென வந்த குரல் உடலை அதிரச் செய்தது. யாரோ என் காதுக்கு அருகில் வந்து கத்துவதைப் போன்ற திடீர் பதற்றம்.

“இருக்கறது ஒழுங்கா இருந்துக்கோ, புரியுதா?”

“ஆமாம்டா…இருக்கேன்… பாத்துக்கோ… இங்க இருக்கன் பாரு…”

வேட்டியை வீட்டுக்கு வெளியிலேயே மாற்றிக் கொண்டிருந்த அந்தத் தாத்தாவைப் பார்த்து ஒரு வாலிபப் பையன் கத்திவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டான். அவர் கீழே விழுந்துவிட்ட தன் கைக்கடிகாரத்தை எடுத்து கையில் கட்டிக் கொண்டே உள்ளே பார்த்துக் கத்தினார்.

“பாவம் அந்த மனுசன். அவர் வாங்கன வீடுதான் இது…” வீட்டுக்காரர் ஏதோ முனங்கிவிட்டு முன்னே நடந்தார்.

நான் வாடகைக்கு இருக்கப் போகும் வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் வெளியே நிறைய பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலேயும் கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த பூப்பாசிகள் காற்றில் அலசிக் கொண்டிருந்தன. அவற்றுள் பெரும்பாலான செடிகள் செத்துச் சில நாட்கள் ஆகியிருக்கலாம் போல.

“இங்கக் கொஞ்சம் பூரான் தொல்லை இருக்கு தம்பி. அதை மட்டும் கொஞ்சம் பாத்துக்குங்க. வீட்டுக்கு வெளில வந்தீங்கனா சப்பாத்திய போடறதுக்கு முன்ன உதறிட்டுப் போடுங்க, சரியா?”

தலையைக் கொஞ்சம் தயக்கத்துடன் ஆட்டிவிட்டுக் கீழே பார்த்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூப்பாசிகளின் இடுக்குகள் பயமுறுத்தின. எல்லாம் அடைத்துக் கொண்டிருந்தன. வீட்டின் கதவுக்கு வெளியே ஓர் இரும்புக் கதவு. திருப்பிடித்து எப்பொழுது வேண்டுமென்றாலும் விழலாம் என்பதைப் போல காட்சியளித்தது. கொஞ்சம் முனங்கிக் கொண்டே திறந்தது.

“தம்பி, இந்தக் கேட் அப்படித்தான். மல்லுக்கு நிக்கும். திறக்கலைனா நீங்க தள்ளணும். கொஞ்சம் தம் கட்டி தள்ளுங்க. ஆனா பாத்து…காலைலெ வேலைக்குப் போற ஆள்னா பக்கத்து வீட்டுக்காரங்கள எழுப்பி விட்டுரும் இந்தக் கேட்… அப்புறம் அந்த அம்மா சண்டைக்கு வரும், கவனம்…”

சொல்லிக் கொண்டே அந்த இரும்புக் கதவை மேலும் உள்ளே நகர்த்தினார். அதன் கீச்சிடும் சத்தம் அங்கே நன்றாக உலாவிட்டுக் கீழ்நோக்கிப் பாய்ந்து எங்கோ போய் கரைந்தது. அப்படியொரு சத்தம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். பாசைகளின் வாடை எங்கும் வியாபித்திருந்தது. இரண்டே அறைகள். இரண்டு நாற்காலிகள் போட்டால் நிறைந்துவிடும் அளவிற்கான ஒரு சிறிய வரவேற்பறை. வலதுப்பக்கம் வாசலையொட்டிய சிறிய சமையலறை. அவ்வளவுத்தான். வீட்டுக்காரர் இரண்டு நிமிடத்தில் வீட்டைச் சுற்றிக் காட்டிவிட்டு, வேறு என்ன தெரிய வேண்டும் என என் முகத்தைப் பார்த்தார். என்னால் ஆச்சரியத்தில் இருந்து மீள முடியவில்லை.

“தம்பி, கடைசியா ஒன்னு சொல்லிக்கறன். துணிங்கள முடிஞ்சா ரெண்டு ரூம்புல ஏதாச்சம் ஒன்னுல ஒரு கயிறைக் கட்டிக் காயப்போட்டுக்குங்க. ஜன்னலுக்கு வெளில தொங்கவிட்டுறாதீங்க,”

ஜன்னல் வழியாக வெளியில் எட்டிப் பார்த்தேன். வீடுகளின் பின்புறம் தெரிந்தது. எல்லா ஜன்னல்களையும் ஏதோ ஒரு துணி மறைத்துக் கொண்டிருந்தது. பாதி காய்ந்து காயாமலும் நீர் ஒழுகிக் கொண்டும் எங்கும் துணிகள்.

“சரி தம்பி. இந்தா சாவியெ வச்சுக்குங்க. பூட்டை மாத்தறதுனா மாத்திக்குங்க. இதோட நீங்க எப்ப வேணும்னாலும் குடி வந்துக்கலாம். அது உங்க விருப்பம். மாசம் முடியும்போது வந்து காசை வாங்கிக்குவேன். இதுக்கு முன்ன ஒரு புருஷன் பொண்டாட்டி இங்க இருந்தாங்க. சேவா காசை ஒழுங்காவே கொடுக்க மாட்டாங்க. நீங்க வாத்தியாரு. உங்களுக்குச் சொல்லத் தேவையில்லனு நினைக்கறன்,”

கையில் சாவியை வாங்கிக் கொண்டு அவருடன் வெளியில் வந்தேன்.

“க்கா உங்க வீட்டுக்காரருக்கும் அந்த நாலாவது மாடி துறை அங்களுக்கும் சண்டெ!” என்று ஒரு பையன் வந்து பக்கத்து வீட்டு ஆளிடம் கத்தி விட்டு ஓடினான்.

“இந்த மனுசனுக்கு வேற வேலையே இல்லையா? மாரியாத்தா…”

ஒரு நடுத்தர வயதை ஒத்திருந்த பெண்மணி கூந்தலை வாரிப் பின்மண்டையில் கட்டிவிட்டுக் காலில் சப்பாத்திக்கூட அணியாமல் கத்திக் கொண்டே ஓடினார்.

“இப்படித்தான் தம்பி… வாங்க கீழ போலாம்”

அந்த வாடகை வீட்டுக்காரர் ஒரு ஞானியைப் போல அந்த ஒரே வார்த்தையைத்தான் மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தார். படிகளில் இறங்கி வரும்போது அதே சிறுநீர் வாடை. அதற்கும் அவரிடம் ஏதாவது பதில் அல்லது விளக்கம் இருக்கும் என்று தெரியும். அதனால் நான் ஏதும் கேட்காமல் அமைதியாக இறங்கிக் கொண்டிருந்தேன்.

“தம்பி, இங்கக் கொஞ்சம் மூத்திர வாடை அடிக்கும். இந்தப் பையனுங்க அவசரத்துக்குப் பொறந்த வாலுங்க… தோ…. அங்க மேலேந்து ஒன்னுக்கு அடிச்சி வெளையாடுங்க…” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

அந்த நேரம் பார்த்து எங்கிருந்தோ மீண்டும் ஒரு சொட்டு நீர்த்துளி என் தோள்பட்டையில் விழுந்தது. எடுத்து முகர்ந்து பார்த்தேன். மழைத்தண்ணீரைப் போலத்தான் இருந்தது. இருப்பினும் சந்தேகத்தால் மேலே பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.

கீழ்த்தளத்தை நெருங்க நெருங்க சண்டையின் உக்கிரம் கேட்கத் துவங்கியது. கொஞ்சம் பயமும் தயக்கமும் மனத்தில் கலந்திருந்தன.

“ஆமாம்டா கட்டையல போறவனே… நீதானே எனக்குச் சம்பாரிச்சிப் போடறெ? பேசுவடா”

“ஒன் மண்டய நான் பொளக்கறன் பாக்கறீயா? சொல்லு!”

அங்குச் சூழ்ந்திருந்த சிலர் மட்டும் அடிக்கக் கையோங்கிய அவரைப் பிடித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

“டெய்ய் இதாண்டா கடைசி. இனிமேல இப்படி நடந்துச்சி உனக்கு என் கையிலத்தான் சாவு”

இருவரும் அப்படியொன்றும் முரட்டு உருவமோ அல்லது பயங்கரமான தோற்றமோ கொண்டிருக்கவில்லை. சற்று நிதானமாகக் கவனித்தால் இருவரும் உடலளவில் மெலிந்து வயதிற்குரிய தோற்றம் இல்லாமல் கொஞ்சம் முதுமையும் ஏறியிருந்தது.

“எதுக்காக சார் இவ்ள பெரிய சண்டெ?”

வாடகை வீட்டுக்காரர் ஏதும் பேசாமல் யாரிடமோ நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த அடுக்குமாடியின் பாதுகாவலர் யாரிடமோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகள் சிலர் படியில் ஏறித் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பையன் ஐந்து வயது இருக்கும் என்று நினைக்கிறேன், கையில் ஓர் அரைக்கால் சிலுவாரை ஒரு குச்சியில் மாட்டியப்படி ஓடி வந்தான்.

“தம்பி அங்க ஏன் சண்ட?” என்று கேட்டு வைத்தேன்.

அவன் தன் கையில் பிடித்திருந்த அந்த அரைக்கால் சிலுவாரைக் காட்டினான்.

“இது என் தம்பியோட சார். அம்மா காயப்போட்டுருந்தாங்க மேல… அது அந்த அங்களோட காடில விழுந்துருச்சி… அதான்” என்று மீண்டும் குச்சியைக் கவனமாகப் பிடித்துக் கொண்டு படியில் ஏறி மறைந்து கொண்டிருந்தான்.

-கே.பாலமுருகன்

தமிழ்நாடு 11ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘பேபி குட்டி’ சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில்  புதிய பாடத்திட்டத்திற்கான  மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத் தமிழ்’ அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய ‘பேபி குட்டி’ சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் பாடநூல் உருவாக்கக் குழுவில் இடம்பெற்ற மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.சீ.பன்னீர்செல்வம் தெரியப்படுத்தினார். இதுபோன்ற அரசு பாடநூலில் சேர்க்கப்படும் அயலக இலக்கியப் பிரிவில் இதுவே மலேசியவிற்கான முதல் சிறுகதை என்றும் அறியப்படுகின்றது.

 

இந்திய மொழிக்கதைகள், அயலகக் கதைகள் ஆகியவற்றை வாசித்து அறிந்து கொள்ளும் திறனை மாணாக்கர் மத்தியில் வளர்க்கவும் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பை உருவாக்கவும் சிறப்புத் தமிழ் பாடநூல் திட்டத்தில் இலக்கியப் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 2014ஆம் ஆண்டில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய ‘பேபி குட்டி’ சிறுகதை மிகுந்த கவனத்தைப் பெற்ற சிறுகதையாகும்.

சிறுகதையின் சுட்டி: https://balamurugan.org/2016/09/25/சிறுகதை-பேபி-குட்டி/

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பாலமுருகனின் ‘பேபிக் குட்டி’ சிறுகதையைத் தமிழில் தான் வாசித்தக் கதைகளில் முக்கியமான கதை என்று தன் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தாகும். அதே சிறுகதை 2018ஆம் ஆண்டு பாடநூல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அச்சிறுகதையின் மீது வாசகக் கவனத்தைக் குவிக்கின்றன.

ஜெயமோகன் அகப்பக்கத்தில்: https://www.jeyamohan.in/48659#.WyozyVUzaM8

 

மலேசிய இடைநிலைப்பள்ளிப் பாடநூலில் தமிழகத்தின் சிறுகதைகள் இடம்பெற்றிருப்பதைப் போன்று, தமிழகத்தின் அரசுப் பாடநூலில் முதன்முதலாக ஒரு மலேசிய சிறுகதை இடம்பெற்றிருப்பது அதுவும் மலேசிய நவீனப் படைப்பாளி கே.பாலமுருகனின் சிறுகதை சேர்க்கப்பட்டிருப்பது, அயலகத் தமிழின் மீது சமீபத்தில் குவிந்திருக்கும் வாசகக் கவனத்தின் விரிவாக்கத்தைக் காட்டுகிறது.

ஒரு குழந்தையின் மரணம் நிகழ்ந்திருக்கும் வீட்டில் வாழும் 92 வயது நிரம்பிய பேபி குட்டியின் ஒரு நாள் வாழ்க்கையைக் கே.பாலமுருகன் யதார்த்த நடையில் சித்தரித்திருக்கிறார். நம் சமூகத்தின் முதியவர்கள் மீதான புரிதலையும், குழந்தைமை என்பதன் மீது நமக்கிருக்கும் எண்ணங்களையும் களைத்துப் போடுவதாக இச்சிறுகதையைப் பற்றி பலர் கருத்துரைக்கிறார்கள்.

செய்தி: சு.அர்ஷினி

 

இச்செய்தி தொடர்பான உலகத் தமிழர்களின் கருத்துகள்:

 

கணேஷ் பாபு, சிங்கை எழுத்தாளர்

 

மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனின் எழுத்துகள் எனக்கு எப்போதுமே மிக விருப்பமானவை. நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகளை அவரது கதைகளை வாசிக்கும் ஒருவர் எளிதாக அறிந்து கொள்ளலாம். பிரம்மாண்டமான இந்த வாழ்வின் நுட்பமான தருணங்களை கலை உசாவுகிறது. கலையின் நுட்பமான தருணங்களை இவரது எழுத்து பிரதிபலிக்கிறது. வாழ்வும் கலையும் முயங்கியும் பிரிந்தும் செல்லும் பல்வேறு புள்ளிகளை அடையாளப்படுத்துவதை இவரது கதைகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இவரது “பேபி குட்டி” என்ற கதையை ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் தளத்தில் அளிக்கப்பட்டிருந்த சுட்டியின் மூலம் முதன்முதலில் வாசித்தேன். அப்போதே அந்தக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது. அதன்பின் பல தருணங்களில் அவரது கதைகள் என்னை ஈர்த்திருக்கின்றன. கதைக்குள் எழுத்தாளன் பிரவேசிக்காமல், ஆர்ப்பரிக்காமல், அடங்கிய குரலில் கதை சொல்லும் இவர், கதையின் முடிவுக்குப் பின் வாசகன் மனதில் சன்னதம் கொண்டெழும் இயல்புள்ளவர். பேபி குட்டி கதையும் இதை நிரூபிப்பது போலவேதான் இருக்கிறது. 


சிறுகதை வடிவத்தின் அனைத்து சாத்தியங்களையும் இக்கதையில் நன்கு பயன்படுத்தியிருக்கிறார் பாலமுருகன். எந்த விதமான அலங்காரமும் இன்றி சட்டெனத் துவங்கிவிடுகிறது கதை. இரண்டு வயதுக் குழந்தையை சாகக் கொடுத்த வீட்டின் காட்சி விவரணை, மழித்தலும் நீட்டலும் இன்றி சரியான சொற்றொடர்களால், துல்லியமாகச் சொல்லப்பட்டுள்ளது. சாதாரணமான சொற்களிலேயே வாசிப்பவன் மனதில் துக்கத்தின் அடர்த்தியை ஏற்றிவிடுகிறார். 


“இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர், அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார்”,


“பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெளியில் சட்டென முடிந்து விட்ட வாழ்க்கை”


“ஒரு குழந்தையின் மரணத்திற்கு முன் அனைத்து மனங்களும் குழந்தையாகிவிடுகின்றன.”


மேற்கண்ட வரிகள் புதைமணலைப் போல வாசிப்பவனின் அகத்தை உள்ளிழுத்துக் கொள்கின்றன. எளிய வடிவத்தையும், சொற்களையும் கையாளும் கதை, வாசகன் முன் வலுவான கேள்விகளை முன்வைக்கின்றன. மரணம் என்பது என்ன? குழந்தை என்பது என்ன? உருவத்தாலும் வயதாலும்தான் குழந்தையை கற்பிதம் செய்துகொள்கிறோமா? அகத்திலுறையும் குழந்தையை சமூகம் எப்போதுதான் கண்டுகொள்ளும்? கைவிடப்பட்ட முதுமை என்பதன் பெறுமதிதான் என்ன? போன்ற கேள்விகள் கதையின் வீச்சை பன்மடங்கு பெருக்குகின்றன.


ஒரு குழந்தையின் மரணத்திற்கு துக்கப்படும் மனிதர்கள், இன்னொரு குழந்தையை கைவிடுகிறார்கள். ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுக்குமே இவர்கள் ஒரு பொருட்டேயல்ல. ஒரு குழந்தை இறந்துவிட்டது. இன்னொரு குழந்தையோ அகத்தளவில் இவர்கள் வாழும் உலகின் தாழ்வாரத்திற்கு வெகு தொலைவில் உள்ளது. மனிதர்கள் குழந்தைகளையும் புரிந்து கொள்வதில்லை, முதியவர்களையும் புரிந்து கொள்வதில்லை. புறக்கணிப்பும், அன்பின்மையும்தான் நம் காலத்தில் முதியவர்கள் சந்திக்கும் ஆகப்பெரிய இடர். அந்த இடரை வலுவாகக் காட்சிப்படுத்தியிருப்பதால்தான் பாலமுருகனின் இக்கதை தனித்துவமாக ஒளிர்கிறது. இனிய இசை சோகமுடைத்து என்பார் ஷெல்லி. இனிய கதையும் அப்படித்தானிருக்கிறது.


இக்கதையை தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை, மேல்நிலை முதலாம் வகுப்பு(11 ஆம் வகுப்பு) சிறப்புத் தமிழ் பாட நூலில் சேர்த்துள்ளது மிகவும் மகிழ்சியளிக்கிறது. இதுபோன்ற அரசு பாடநூலில் இடம்பெறும் முதல் மலேசிய சிறுகதை என்ற பெருமையையும் இக்கதை அடைந்திருக்கிறது. பாலமுருகனுக்கு வாழ்த்துகள்.

 

குமார் ஐயா, திருவாரூர்

அயலகத் தமிழ் எழுத்துக்களை,படைப்புகளைத் தாயகத்து தமிழர்கள் படித்தல் வேண்டும் என பத்து ஆண்டுகளாய் போராடினேன்.வாய்ப்பு கிடைத்தது .11ம் வகுப்பு பாடத்திட்ட வாய்ப்பு ,இன்று தமிழக மாணவர்கள் அயலகத் தமிழ் படைப்புகளைப் படிக்கின்றனர் .மகிழ்ச்சியாக உள்ளது .வகுப்பறையில் நானே நடத்தும் போது…புலம் பெயர்வின் வலியுடன் எனது மாணவர்கள்…
11ம் வகுப்பு பொதுத்தமிழில் ஈழம் ஈன்று எடுத்த சு.வில்வரத்தினத்தின் யுகத்தின் பாடல் மொழிவாழ்த்தாய்… அடுத்து எங்கள் அ.முத்துலிங்கம் அவர்களின் ”ஆறாம்திணை ” உரைநடையில் வைத்துள்ளோம்.


சிறப்பு தமிழ் பாடப்பிரிவில் மலேசிய எழுத்தாளர் என் நண்பர் கே .பாலமுருகனின்
“பேபிகுட்டி” சிறுகதையும்,

ஈழ எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “பசி” சிறுகதையும் பாடதிட்டத்தில் இடம் பெற்று 9ம் வகுப்பு தமிழ் பாடத்தில் காசி ஆனந்தனின் பாடலையம் சேர்த்து ..இன்று பல லட்சம் தமிழக மாணவர்கள் கற்கின்றனர் …மனது மகிழ்ச்சியாக உள்ளது. அயலத் தமிழர் வாழ்க..

 

 

FIFA World Cup 2018 – ஒர் இடைக்காலப் பார்வை: ஏமாற்றமும் அதிர்ச்சியும்

 

நான் எப்பொழுதுமான காற்பந்து இரசிகன் அல்ல; உலகக் கிண்ணப் போட்டியின் மீது மட்டும் மிகுந்த ஆர்வம் உண்டு. கடந்த 1994 முதல் உலகக் கிண்ணத்தைத் தீவிரமாக இரசித்து வருகிறேன். உலகத்தை ஓர் உருண்டையாக்கி அவரவர் திறமைக்கேற்ப கையாள்வதைப் போன்ற குதூகலத்தை உண்டாக்கும்.

இம்முறை நம்பிக்கையை உருவாக்கியிருக்கும் பிரபமில்லாத அணிகளில்,காற்பந்து ஜாம்பவன் என்று உலக மக்கள் கொண்டாடும் பிரேசிலுக்கே சவாலைக் கொடுத்த Switzerland முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் பாதியில் முழுவதுமாக விளையாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அசத்திவிட்டார்கள்.

அடுத்து, கவனத்தை ஈர்த்தக் காற்பந்து குழு Iceland ஆகும். அர்ஜெண்டினா குழுவிற்குச் சவால் கொடுத்துக் கதிக்கலங்க வைத்தது என்று சொல்லலாம். அடுத்ததாக இரண்டுமுறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸிக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்த ‘ஆஸ்ட்ரோலியா’ ஆகும். அவ்விளையாட்டில் ஆஸ்ட்ரோலியா 2-1 என்று தோல்வியடைந்தாலும் மிகச் சிறப்பான போட்டியை உண்டாக்கியது என்றே சொல்லலாம்.

அடுத்து, போர்த்துகல், ஸ்பேய்ன் அணி மோதிய விளையாட்டுக் கவனித்தக்கது ஆகும். இரண்டுமே பலம் வாய்ந்த அணி. ஆனாலும், ஸ்பேய்ன் சிறப்பாக விளையாடியது என்றே சொல்ல வேண்டும். ரொனால்டோ ஒருவர் இல்லையென்றால் போர்த்துகல் 3 கோல்கள் அடித்திருக்குமா என்கிற கேள்வியும் நம்மிடையே உள்ளது.

அடுத்து, நம் எதிர்ப்பார்ப்புகளை உடைத்த அணிகள் வரிசையில் முதல் நிலையில் ஜெர்மனி ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. வாய்ப்பை நழுவவிடுதல் என்பது ஒரு பக்கம் இருக்க, ஜெர்மனி வாய்ப்பை உருவாக்கவே இல்லை என்பது பல இரசிகர்களின் மனக்குமுறல்.

அடுத்து, ஏமாற்றத்தை ஏற்படுத்திய அணி அர்ஜெண்டினா ஆகும். குறிப்பாக கிடைத்த அருமையான வாய்ப்பை ‘மெஸ்ஸி’ நழுவவிட்டது இரசிகர்களின் அதிருப்தியைக் கிளப்பி விட்டது. ‘ஐஸ்லேண்ட்’ போன்ற மிகச் சிறிய நாடு உலக அரங்கத்தில் இத்தனை வீரியத்துடன் எழுந்து நின்றது இதற்கு முன் உலக அளவில் ஜாம்பவான் என்று இடத்தைத் தக்கவைத்திருந்த அணிகளுக்குப் படிப்பினை என்றே சொல்லலாம்.

நடுவில் இருந்து கொண்டு ஆச்சர்யத்தை உண்டாக்கிய அணி, பிரேசில் ஆகும். திறமையாக ஆடினாலும் வாய்ப்புக் கிட்டவில்லை. குறிப்பாக ‘நெய்மார்’ காலில் பந்து வந்ததும் உடனே நான்கு எதிரணி ஆட்டக்காரர்கள் அவரைச் சூழ்ந்து நின்று தாக்குகிறார்கள். வாய்ப்பிருப்பின் பிரேசில் முன்னேறும்.

ஆயினும், பந்து என்பது அனுமாணிக்க இயலாத ஓர் அதிசயம். யாரையும் எங்கும் நிறுத்தும். பொறுத்திருந்த பார்ப்போம். என்னளவில் இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை ‘ஸ்பேய்ன்’ வெல்ல வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.

-கே.பாலமுருகன்