சிறுவர் நாவல் வெளியிட்டு விழாவும் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியும்

2014ஆம் ஆண்டில் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற மர்ம சிறுவர் நாவலை எழுதி முடிக்கும்போதே இதே சிறார் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறுவர் மர்மத் தொடர் நாவல் என்று பத்து பாகங்கள் வெளியிடத் திட்டமிட்டேன். அதற்குரிய உந்துதலை எனக்குள் உண்டாக்கியவர் மேனாள் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனரும் இலக்கிய வாசகரும் நண்பருமான திரு.பி.எம் மூர்த்தி அவர்கள்தான். உரையாடலின் வழியாகவே எனக்குள் சிறுவர் இலக்கியம் குறித்த அக்கறையை ஏற்படுத்தினார். அதனால், சிறுவர் நாவலை எழுதவும் தொடங்கினேன். இந்நாட்டு சிறுவர்களுக்கான நாவல் உருவாக வேண்டும் என அவர் கண்ட ஆசையை முதலில் நிறைவேற்றிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததாகவே கருதுகிறேன்.

ஆகவேதான், இதனை மலேசியத் தமிழ் இலக்கியத்தில் சிறுவர்களுக்கான முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவல் என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் நான்காண்டுகளில் மலேசியக் கல்வியிலும் இலக்கியத்திலும் இப்பத்துத் தொடர் சிறுவர் நாவல் மலேசிய இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

நாம் யாருக்காக எழுதுகிறோம் என்கிற தெளிவுடனே இந்நாவல்களை எழுதத் துவங்கினேன். மொழியிலும், கதை அமைப்பிலும், பாத்திரப் படைப்பிலும் சிறார்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே மர்மம் என்கிற ஒன்றைத் தெரிவு செய்து கொண்டேன். அதே போன்று தலைப்புகளிலும் முகப்போவியங்களிலும் சிறுவர்களைக் கவரும் தன்மை இருக்க வேண்டும் என்றே முழு ஈடுபாட்டுடன் சிறார்களின் வயதிற்கும் மனநிலைக்கும் ஏற்ப என்னை உருவகித்துக் கொண்டேன்.

  1. மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்
  2. மோகினி மலையில் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்
  3. பதிமூன்றாவது மாடியும் இரகசியக் கதவுகளும்

 

ஆகிய மூன்று தலைப்புகளிலும் ஒரு மர்மமும் தூண்டலும் அடங்கியிருக்கும். இதுவே மாணவர்களை வாசிக்கத் தூண்டும் ஓர் உத்தியாகும். இம்மாணவர் சமூகத்தை வாசிப்பின் மீது ஓர் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இந்நாவல்களால் உருவாக்க முடிந்ததற்குத் தலைப்பும் ஒரு காரணியாகும். கடந்த நான்கு ஆண்டுகளின் மூன்று சிறுவர் தொடர் நாவல் பற்பல சவால்களுக்கு மத்தியிலேயே வெளியீடு கண்டுள்ளது. என்னை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் யாருமற்ற சூழலில்தான் இம்மூன்றாவது நாவலை எழுதி முடித்தேன்.

இச்சிறுவர் நாவல்களால் என்ன பயன் என்று ஒரு கேள்வி எல்லா மனங்களிலும் இடம்பெற்றிருக்கும். முதலாவது சிறுவர்களின் வாசிப்பை இதுபோன்ற மர்ம நாவல்களின் வழியாக ஊக்கப்படுத்த முடியும். இதற்கு என் நாவல்களே உதாரணமாகும். இதுவரை இந்நாவல்களை வாங்கி முயற்சித்தப் பள்ளிகளை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒரு மாணவனை அவனே ஆர்வத்துடன் புத்தகத்தை வாசிக்க வைத்துவிடலே மிகப் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்.

அடுத்து, எனது சிறார் நாவல்கள் முழுக்கவும் சிறார் கதாபாத்திரங்களை முதன்மை மாந்தர்களாக முன்னிறுத்துபவை ஆகும். சிறுவர்களே இந்நாவல்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாந்தர்களாக இடம் பெறுகிறார்கள். இது அவர்களின் வாசிப்பிற்கு உந்துபவையாகவும் இருக்கும் அதே சமயம் அவர்களின் மனநிலைக்கும் ஏற்றவாறு புதிய வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும். புத்திமதி சொல்லும் பாங்கிலிருந்து சிறார் உலகை ஆற்றலும் அனுபவமுமிக்க பகுதிக்கு நகர்த்தும். சிறுவர்கள் திறன்கள்மிக்கவர்கள் என்கிற நம்பிக்கையை உண்டாக்கும். மனத்தில் அடைத்துக் கொண்டிருக்கும் உணர்வலைகளுக்கு ஏற்ற வடிக்காலை அமைத்துக் கொடுக்கும். இது முழுக்க சிறார் மனநிலையிலிருந்து எழுதப்பட்டவை என்பதால் அவர்களின் மனங்களைத் தொட்டு பேரெழுச்சியை உண்டாக்கும்.

 

அத்தகையதொரு நாவல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நாவலை விமர்சித்தவரும் ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற நாவலின் தீவிர வாசகரான மாணவர் சிவசந்திரன் ஆகும். நாவல் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அதிகாரியான திரு.பெ.நகுலன் ஆவார். கற்பனைவளம் வாசிப்பவர்களின் இரசனையைத் தூண்டும் என்பதால் இதுபோன்ற கற்பனை நாவல்கள் மாணவர்களுக்கு அவசியம் என்று பேசினார். சிறுவர் இலக்கியத்தின் பயன்கள் என்கிற தலைப்பில் நாட்டின் மூத்த எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான் அவர்கள் இலக்கிய உரையை ஆற்றினார். தேடல்மிக்க சமூகமே அதற்குரிய ஞானத்தை அடையும் என்று காகம் கதையை முன்வைத்து இரசிக்கும்படி கூறினார்.

100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் நாவல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அ.கலைமலர் எழுத்தாளர் இயக்கம் சார்பாக வாழ்த்துரையை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ.ரவி அவர்களும் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். மேலும், சிறப்பு வருகையாக முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.முருகன், தலைமை ஆசிரியர் திரு.சந்திரசேகரன், திரு.ம.தனபாலன், வாரியப் பொருளாளர் அண்ணன் திரு.சுப்ரமணியம், திரு.வீரையா, ஆசிரியை மணிமாலா, பிரேமதி, ஹென்ரி, மேலும் பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு மும்முனை போட்டியாக ‘சிறுகதை எழுதும் போட்டியும்’ நடத்தப்பட்டது. மூன்று தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஆயினும், 12 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாவல் வெளியிட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இதுபோன்ற இலக்கியக் களங்களில் அங்கீகரிக்கப்படும் மாணவர்கள் நாளைய படைப்பாளர்களாக உருவெடுக்கப் பலவிதமான வாய்ப்புகள் உள்ளன.

 

அதே போல இச்சிறுகதை போட்டியின் வாயிலாகக் கடந்தாண்டு இரண்டு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை, ‘சிறந்த சிறுகதைக்கான விருது’ ‘சிறந்த எழுத்தாளருக்கான விருது’ ஆகும். இவ்வாண்டு அவ்விருதுகளுக்கு இரண்டு மாணவர்கள் தகுதி பெற்றார்கள். மாணவி ம.சுஜித்தா ‘சிறந்த எழுத்தாளருக்கான’ விருதையும், மாணவன் காளிஸ்வரன் ‘சிறந்த சிறுகதைக்கான’ விருதையும் பெற்றனர். அம்மாணவர்களின் இலக்கியத் தொடக்கத்திற்கு அவ்விருதுகள் ஓர் உற்சாகமாக அமைந்திருந்தது.

நாவல் பயணம் மேலும் தொடரும். இந்நாட்டில் இன்னும் பத்தாண்டுகளில் சிறுவர் நாவல்களின் தீவிர வாசக சிறுவர்கள்  நாடெங்கிலும் பரவியிருப்பார்கள். அவர்களின் வழியே நாட்டின் இலக்கியம் புத்தெழுச்சியைப் பெறும்.

நாவலைப் பெற விரும்புபவர்கள் அல்லது நாவலைப் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்புபவர்கள் முன்வந்து கைக்கொடுக்கவும். சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இந்நாவல் அவர்களைச் சென்றடைய முன்வருவோம்.

-கே.பாலமுருகன்

சிறுவர் நாவல் பயணம் – கேள்வி பதில்

2014ஆம் ஆண்டு, மலேசிய சிறுவர்களுக்காக அவர்களின் வாழ்வைக் கற்பனைவளத்துடன் சொல்லும் மர்மமும் விருவிருப்பான கதையோட்டமும் கொண்ட ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற தமிழில் முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவலை எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதி வெளியிட்டார்.  அவர் அதனைத் தொடர் நாவல் என்றும் அறிமுகப்படுத்தினார். அதுவே ஒரு முதல் முயற்சியாகவும் எல்லோரினாலும் கருதப்பட்டது.  அந்நாவல் பயணம் பத்தாம் பாகம் வரை செல்லும் என்று அவரே தன்னுடைய ஆஸ்ட்ரோ விழுதுகள் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அதே போல ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடைய சிறுவர்  தொடர் மர்ம நாவல் பாகம் 3 வெளியீடு கண்டுள்ளதையொட்டி அவரிடம் கலந்துரையாடல் நிகழ்த்தவுள்ளோம்.

கேள்வி: மர்மக் குகை, மோகினி மலை முடிந்து  இம்முறை மர்மமான அடுக்குமாடி போல?

கே.பாலமுருகன்: இம்முறை என் வாழ்நாளில் நான் அனுபவித்த ஓர் அடுக்குமாடியைக் கற்பனையில் வைத்துக் கொண்டுத்தான் இந்நாவலை எழுதினேன். இதில் வரும் 50% வாழ்க்கை முறை நான் நேரில் கண்டவையாகும்.  அடுக்குமாடியில் வசிக்கும் சிறுவர்களுக்கென்றே ஒரு மனோபாவத்தை நான் கண்டுள்ளேன். அவர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்களாக அதனை அதீதமாக நேசிப்பவர்களாக இருப்பார்கள். எப்பொழுது வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனத் தவிப்பார்கள். அடுக்குமாடி வாழ்க்கை  இருப்பைச் சுருக்கிவிட்டதைப் போல உணர்வதாலோ என்னவோ சிறுவர்கள் அத்தனையை மனநிலைக்கு ஆளாகுகிறார்கள். அதனை இந்நாவலின் உளவியல் அம்சங்களாக சேர்த்துள்ளேன்.  மேலும், அடுக்குமாடியில் எவ்வளவு ஆட்கள் இருந்தாலும்  ஒரு வெறுமை எப்பொழுதும் உலாவிக் கொண்டே இருக்கும். அதனையும் இந்நாவலின் ஓர் அம்சமாகச் சேர்த்திருக்கிறேன்.

 

கேள்வி: இரண்டாம் பாகம் வெளிவந்ததற்குப் பின் இரண்டாண்டுகள் கழித்துதான் மூன்றாம் பாகம் வெளியீடுகிறீர்களே?

கே.பாலமுருகன்: அந்த இரண்டு ஆண்டுகளும் இரண்டாம் பாகத்தை மாணவர்களிடையே கொண்டு போக நான் மேற்கொண்ட சோதனைகள் அவ்வாறான ஒரு தொய்வை ஏற்படுத்தியது என்றுத்தான் சொல்ல வேண்டும். முதல் நாவல் உருவாக்கிய தாக்கத்தை இன்றளவும் என்னால் மறக்கவியலாது. ஆசிரியர்கள் முன்வந்து மர்மக் குகை நாவலை மலேசியா முழுவதும் கொண்டு போக துணை நின்றார்கள். ஆகவே, ஒரு நூல் யாருக்கு எழுதப்பட்டுள்ளதோ அவர்களைச் சென்றடைய நமக்கு நடுவர்களின் பங்களிப்புத் தேவை. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அவர்களைச் சென்றடைய  ஆரோக்கியமான சூழல் இருக்குமாயின், பாலமுருகன் மட்டும் அல்ல இன்னும் நிறைய புதிய எழுத்தாளர்கள் தோன்றி இடைவெளியில்லாமல் பல நல்ல தமிழ் நூல்களை நமக்கு அளிப்பார்கள்.

 

கேள்வி: தமிழில் மட்டும்தானே நூல் விற்பனைக்கு ஓர் எழுத்தாளன் சிரமத்தை எதிர்க்கொள்ள நேரிடுகிறது?

கே.பாலமுருகன்: மக்கள் புத்தகங்களுக்கு வற்றாத ஆதரவைக் கொடுத்தால்தான் தமிழில் நூல் வெற்றிப்பெறும். ஒரு கடை முதலாளி வெற்றிப்பெற்றால் நாம் அமைதியாக இருக்கிறோம்; ஒரு செல்வந்தர் புதிதாக இன்னொரு நிறுவனம் திறந்தால் நாம் அமைதியாக இருப்போம்; ஆனால், ஓர் எழுத்தாளனின் புத்தகம் வெற்றிப் பெற்றாலோ அல்லது அதிகம் விற்கப்பட்டாலோ உடனே அவன் தமிழை வியாபாரமாக்குகிறான்; தமிழுக்குச் சேவைத்தானே செய்ய வேண்டும் ஏன் அதனை விற்க வேண்டும் என்கிற பலவிதமான பழிச்சொல்லுக்கு ஆளாக நேர்கிறது. இத்தனைக்கும் அவனுடைய நூல் பத்து வெள்ளி இருபது வெள்ளி மட்டுமே அதுவும் அவனுடைய கடுமையான உழைப்பிற்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் மட்டுமே. இத்தகைய மனநிலையிலிருந்து நம் சமூகம் விடுபட்டால்தான் தொய்வில்லாமல் ஆரோக்கியத்துடன் எழுத்தாளர்கள் பல அரிய நல்ல நூல்களை மலேசியத் தமிழ்ச் சூழலுக்கும் இலக்கியத்திற்கும் வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். இது வியாபாரம் அல்ல; எழுதிய படைப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஒரு வழிமுறையே. வேறு எப்படித்தான் நூல் விற்பனையை மேற்கொள்ள முடியும்?

கேள்வி: இப்புதிய நாவல் எத்தனை நாளில் எழுதினீர்கள்?

கே.பாலமுருகன்: எத்தனை நாள் எழுதினேன் என்பதைவிட நன்கு சிந்தித்துத் திட்டமிட்டு இக்கதையைச் செதுக்கினேன். கதையோட்டம் நீண்டுவிட்டால் வாசிக்கும் மாணவர்களுக்குச் சலிப்பு உண்டாக்கிவிடும் எனக் கவனமாக இருந்தேன். கடந்த நாவல்களைவிட இந்நாவல் சுருக்கமாகவும் அதே சமயம் சுவாரஷ்யமாகவும் இருக்கும் என்று நம்பலாம்.

கேள்வி: சிறுவர்கள் ஏன் இந்நாவலை வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: இந்நாவல் சிறுவர்களை முன்னிலைப்படுத்தி கற்பனைவளத்துடன் எழுதப்பட்டதாகும். சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்களால் கட்டமைக்கப்படும் சிறுவர்களின் வாழ்வினைப் போற்றிப் பேசக்கூடியதாகத்தான் கடந்த காலங்களில் இருந்துள்ளன. ஆனால், இந்நாவல் சிறுவர்கள் புத்திசாலிகள், சிறுவர்கள் திறமையானவர்கள் என்று சிறுவர்களின் உலகைக் கற்பனையால்  உருவாக்கி அவர்களைச் சுயத்தன்மை உடையவர்களாக மாற்றுகிறது. சிறுவர்களின் உளவியல் குறித்து நிறைய வாசித்தும் உரையாடியும் அதன்வழியாக உருவாக்கப்பட்டதுதான் இச்சிறுவர் நாவல் தொடர்பான  முயற்சிகள்.  ஆகவே, சிறுவர்களின் மனங்களில் அடைத்துக் கிடக்கும் உணர்வலைகளுக்கு ஒரு வடிக்கால் அமைத்துக் கொடுத்து அவர்கள் வாழ்வின் உன்னதமான தருணங்களைக் கதையாக்கும் ஒரு கதைக்களமே இச்சிறுவர் நாவல். இந்நாவலைப் படித்துமுடித்துவிட்டு வெளியாகும் சிறுவன் தன் வாழ்வை மிகப் பெரிய வரமாக நினைக்கும் மன ஆற்றலை அவன் பெற்றிருப்பான். அத்தகைய நிலையில் தன்னுடைய சிறார் பருவத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டாடவும் முன்னெடுக்கவும் பழகிக் கொள்வான். அதோடுமட்டுமல்லாமல் கதைகள் வாசிக்கும் ஒரு தீவிரமான தேடலும் அவனுக்குள் உருவாகியிருக்கும். நாம் நாளெல்லாம் சிறுவனை எப்படி நல்வழிப்படுத்துவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தீராத சிக்கலுக்கு இலக்கியத்தின் வழியாக ஒரு தீர்வை நான் இந்நாவலில் முன்வைக்கிறேன். ஆகையால், சிறுவர்கள் இம்மர்ம நாவலை வாசித்தலின் வழியாக  தன் வாழ்க்கைக்குள் ஒரு மனமாற்றத்தை அடைவார்கள்.

கேள்வி: இந்நாவலின் வழியாக மாணவர்கள் வேறு என்ன கற்றுக் கொள்ள முடியும்?

கே.பாலமுருகன்: எழுதுதற்கான ஓர் அகத்தூண்டல் ஏற்படும் என்பதே மிகப் பெரிய கற்றல் ஆகும். சிறுகதை எழுத ஆர்வம் ஒருவனுக்குள் உருவானால் மட்டுமே அவனால் எழுத முடியும். ஆக, அந்த ஆர்வத்தைத் தரவல்லதாக இந்நாவலைக் கருதுகிறேன். அதோடுமட்டுமல்லாமல் மொழியில் வருணனை என்பது அக்கதையைக் கவரும்தன்மையுடன் நகர்த்த உதவக்கூடிய முக்கியமான கூறாகும். அதனை வாசிப்பதன் வழியே பெற முடியும். கதைக்கான மொழியைக் கட்டுரைகள் வாசிப்பதன் மூலம் பெற முடியாது. சிறுகதை எழுத சிறுகதைகள், நாவல்கள் வாசித்தே திறம்பட வருணனை மொழியைக் கற்றுக் கொள்ள இயலும்.  எல்லாவற்றையும்விட நீங்களும் நானும் பேசி உருவாக்க முடியாத ஓர் அகவெழுச்சியை இதுபோன்ற நாவல், இலக்கியம் வாசிப்பினூடாக உருவாக்கும்.

கேள்வி: நீங்கள் சிறுவர் நாவல் எழுத எது காரணமாக இருந்தது?

கே.பாலமுருகன்: நான் சிறுவர் இலக்கியம் தொடர்பாக சிந்திக்கத் துவங்கியது தேர்வு வாரியத்தின் மேனாள் துணை இயக்குனர் திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் தீராத துரத்தலால் மட்டுமே. சிறுவர் இலக்கியத்திற்கு நாம் உருவாக்கும் கவனம் மட்டுமே எதிர்காலத்தில் இந்நாட்டில் இலக்கியத்தை நிலைநிறுத்தும் என்று தன் நீண்ட உரையாடலின் வழியாக எனக்குள் நிறுவினார். அங்கிருந்தே சிறுவர் நாவல் எழுதும் எண்ணத்தைக்  கொண்டேன். ஆனால், அதனைத் தொடங்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். புதிய எழுத்து, புதிய உலகம், புதிய மொழி என்கிற தயக்கம் எழுதவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. ஆனால், திடீரென்று ஏற்பட்ட அப்பாவின் மரணம்தான் என்னைச் சிறுவர் நாவலை எழுதத் தூண்டியது எனலாம். மிகப் பெரிய மீளாத்துயரத்தில் சிக்கிக் கொண்ட என் மனத்தை இலக்கியத்தின் மீதான அதிரடியான கவனமும் ஈடுபாடும் மீட்டெடுத்தன என்று சொல்லலாம்.  எனது சிறுவர் நாவலில் குவிந்து கிடக்கும் தேடல், மகிழ்ச்சி, நகைச்சுவை, கற்பனைவளம், வருணனை என அனைத்துமே என் துயரத்தின் ஒரு தெறிப்பு. கலைஞன் தன்னை வருத்திக் கொண்டு பிறரை மகிழ்விப்பான் என்பதைப் போலத்தான் எனக்கும் இந்நாவலுக்குமான உறவின் இன்னொரு குரல்.

கேள்வி: இந்நாவலுக்கும் ஏன் ‘பதிமூன்றாவது மாடியும் இரகசியக் கதவுகளும்’ என்கிற பெயர் வைத்தீர்கள்?

கே.பாலமுருகன்: எப்பொழுதுமே கதைக்குள் மர்மத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் கருப்பொருளைக் கொண்டுத்தான் தலைப்பை முடிவு செய்வேன். இக்கதையில் பல இரகசியக் கதவுகள் வரும். ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல மர்ம முடிச்சுகளும் இருக்கும். ஆகவே, இத்தலைப்பு ஏற்புடையதாகவும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது.

கேள்வி: அடுத்த பாகம் எப்பொழுது வெளிவரும்?

கே.பாலமுருகன்: இம்முறை தாமதப்படுத்த மாட்டேன். சிறுவர் நாவல் பாகம் 4 இவ்வருடம் நவம்பர் மாதத்தில் வெளிவரும். அதற்கான ஆய்த்தங்களை முன்கூட்டியே தொடங்கிவிடுவேன்.

கேள்வி: இதுபோன்ற நாவல்களை எழுத ஏதும் பிரத்தியேகமான தகுதிகள் உண்டா?

கே.பாலமுருகன்: எழுதுவதற்கு இலக்கியத்தின் மீது தீராத காதல் இருக்க வேண்டும். எழுத்தாளன் என்பவன் வார்த்தைகளின் காதலன். அவனுக்கு வார்த்தைகள் மீது ஈர்ப்பும் காதலும் இல்லையென்றால் அவனிடமிருந்து எந்தச் சொல்லும் பிறக்காது; அது இலக்கியமாகவும் மாறாது. ஆக, இலக்கிய வாசிப்பும் இலக்கிய நேசிப்பும்தான் ஒருவனை எழுத்தாளனாக்குகிறது. மற்றொரு சூழலில் ஒருவனுக்கு வாய்த்த வாழ்க்கையும் அதனுள் மண்டிக் கிடக்கும் வாழ்க்கை நெருக்கடிகளும் எழுதத் தூண்டும். தன் அகச்சிடுக்குகளிலிருந்து விடுப்படவே அவர்கள் எழுதவும் செய்வார்கள்.  ஆகவே, இது  தகுதி தொடர்பான கேள்வியாகப் பாவிக்க இயலாது.  எனக்குத் தெரிந்து என் சிறுவர் நாவல்களை வாசித்துவிட்டு அதனால் தாக்கப்பட்டு இப்பொழுது வெவ்வேறு சிறுவர் நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கும் மூன்று சிறுவர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்கள் இப்பொழுது இடைநிலைப்பள்ளியில் பயின்று கொண்டிருக்கிறார்கள். வயது, அனுபவம், ஆற்றல் என்பதைத் தாண்டி விருப்பம் என்கிற ஒன்றும் ஓர் எழுத்துக்கு உந்துசக்தியாக அமைகிறது. அத்தகையதொரு விருப்பத்தை உருவாக்கவே நான் இந்நாவலை எழுதியுள்ளேன்.

– நேர்காணல்: சு.அர்ஷினி

புதிய பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோள் கடிதம்

‘முதலாவதாக நம் நாட்டின் புதிய பிரதமருக்கு ‘அன்னையர் தின வாழ்த்துகள்’ -ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்கு நீங்கள் ஓர் அன்னையாக இருந்து எங்களை அரவணைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறோம்.’

 

புதிய ஆட்சியைத் தொடங்கியுள்ள, புதிய மலேசியா உருவாக்கத்திற்கு வித்திட்டு அரசியல் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நாட்டின் ஏழாவது பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோளாக இதனை முன்வைக்கிறேன். இது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கான குரலாகவும் எனக்குள் பலநாட்களாக சலனமுற்றுக் கொண்டே இருக்கின்றது. அதனை வெளிப்படையாக எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படுத்துவதற்கான ஓர் ஆரோக்கியமான அரசியல் சூழல் இப்பொழுதுதான் உருவாகியிருப்பதாக நம்புகிறேன்.

  1. கருத்து சுதந்திரம்

கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவில் கருத்து சுதந்திரம் என்பது பெயரளவில் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. நடைமுறையில் மக்களின் எவ்விதமான கருத்துகள் மீதும் அத்துமீறலான அரசியல் அதிகாரம் செயல்பட்டுக் கொண்டே வந்திருப்பதுதான் உண்மை. அப்படிக் கருத்து சுதந்திரத்தோடு எழுதிய பலர் கைதாகியிருப்பது அதற்கொரு எடுத்துக்காட்டாகும். அதோடுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான கருத்து சுதந்திரத் தடையை  ஆரோக்கியமற்றதாக கருதுகிறேன். எல்லா துறையையும் ஒட்டி சுதந்திரமாகப் பேசக்கூடிய குரல் ஆசிரியர்களுடையதாக இருந்தால்தான் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியை  நாங்கள் விரிவான தளத்தில் மேற்கொள்ள முடியும். எங்கள் குரல்வளையை இதுநாள் வரையில் மிதித்துக் கொண்டிருந்த அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசின் நடவடிக்கைகளை, திட்டங்களை ஆரோக்கியமான முறையில் ஒரு குடிமகன் என்கிற வகையில் விமர்சிக்கக்கூடிய சுதந்திரம் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அத்தகையதொரு சூழல் இருந்தால்தான் ஆசிரியர்களின் உரிமை குரல் இச்சமூகத்தை ஆரோக்கியமான திசையில் வழிநடத்தக்கூடியதாக இருக்கும். சமூகம் ஆசிரியர்களை நம்புகிறது; அரசு ஆசிரியர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே வேண்டுகோள்.

 

2. அரசியல் ஈடுபாடு

ஆசிரியர்கள் வெளிப்படையாக அரசியல் பேசக்கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படக்கூடாது என்கிற ஒரு மிரட்டல் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. ஆசிரியர்கள் நடுநிலையானவர்களாக இருத்தல் வேண்டும் என்கிற குரல் எழும்போதெல்லாம், அப்படியென்றால் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஒட்டி எவ்வித கருத்தையும் வெளிப்படையாக முன்வைக்கும் சுதந்திரம் எங்களுக்கு இல்லாமல் இருந்தது ஏன்? நடுநிலை என்றால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாராபட்சமில்லாமல் தங்களின் அரசியல் கருத்துகளை முன்வைக்கும் சுதந்திரத்தைத்தானே குறிக்கிறது? சிந்தனையாற்றல் உள்ள ஆசிரியர்களின் மனங்களை இதற்கு முந்தைய அரசு கட்டிப்போட்டு ஒரு பயத்திற்குள்ளே ஆழ்த்தியுள்ளது. ஆகவேதான், நடந்து முடிந்த தேர்தலில் தைரியமாக ஓட்டுப் போடும் தன் உரிமை குறித்து அவர்கள் ஓர் அச்சத்தோடும் தயக்கத்தோடும் இருந்தார்கள். நான் எதிர்க்கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று சொல்வதற்குக்கூட தயங்கினார்கள். இத்தடையை நீங்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கற்றல் கற்பித்தலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத, பணியை முன்னிலைப்படுத்தக்கூடிய வேளையில், அரசியல் குறித்தும் தங்களை ஈடுப்படுத்திக் கொள்ள ஒரு தளம் எங்களுக்கு வேண்டும். குறிப்பாக தேர்தலின்போது நாங்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்கிற  கட்டுப்பாடுகள் இனி இருக்கக்கூடாது என்பதுதான் முதன்மையான கோரிக்கையாகும்.

3. பணியிட சிக்கல்கள்

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பணியிட சிக்கல்கள் குறித்து விரிவான ஆய்வை அரசாங்கத் துறைகளில் மேற்கொள்ள வேண்டும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கின்றோம். இங்குப் பெற்றோர்கள் ஆசிரியர்களைப் பகையாக நினைத்தல், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உருவாகும் சிக்கல்கள், ஆசிரியருக்கும் தலைமைத்துவத்திற்கும் உருவாகும் பிரச்சனைகள் என்று பலவகைகளிலான உள்சிக்கல்கள் இத்துறையில்  இருப்பதாக பலத்தரப்பட்ட கருத்துகளும் புகார்களும் உள்ளன. அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இவ்விதமான சிக்கல்களால் ஏற்படும் மனத்தடைகள் மாணவர்களைப் பாதிக்கும் என்று யாரும் விளங்கிக் கொள்வதே இல்லை.  ஆகவே, அரசாங்கத் துறைகளில் நிலவும் பணியிடச் சிக்கல்கள் குறித்து மேலதிகாரிகளுக்கோ அல்லது குறிப்பிட்ட தலைமைத்துவங்களுக்கோ, அல்லது ஆசிரியர்களுக்கோ மத்தியில் ஒரு கலந்துரையாடல் அரங்குகளை ஏற்படுத்தினால் இப்பிரச்சனையை ஒருங்கிணைத்துக் களைய ஏதுவாக இருக்கும் என்பது ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ஆயிரம் புகார்களோடு திரியும் எங்கள் மனங்களை ஆற்றுப்படுத்தினால்தான் புதியதொரு தலைமுறை உருவாக்கத்தில் நாட்டின் கொள்கைக்கேற்ப சிறந்து செயல்பட முடியும். இதில் தனிப்பட்டு யாரையும் குறை சொல்வதற்கில்லை; நல்லாசிரியர்களும், நன் தலைமைத்துவங்களும் நிரம்பிய இவ்வாசிரியர் துறையில் நிலவும் கருத்தொருமையில்லாமை, பகைமை, எதிர்ப்புணர்வு போன்றவற்றை களைந்தால் இத்துறை மேலும் மிளிர்ந்து நிற்கும் என்பதே எங்கள் கருத்தாகும்.

 

4. வேலை மாற்றம்

சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல், கணவன், மனைவியைப் பிரிந்து, குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசியர்களை மீண்டும் அவர்களின் ஊர்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். பல வருடங்களாக மாறி வருவதற்காகப் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு, அவர்களைச் சந்தித்து, இவர்களிடம் கெஞ்சி  சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கான உரிமை மறு ஆய்வு செய்யப்பட்டு இன்றைய அரசு எல்லாருக்கும் நடுநிலையான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  வேலைக்குச் சென்று உடனே மாற்றம் கேட்பவர்களைவிட பல வருடங்களாகக் குடும்பங்களைச் சொந்தங்களைப் பிரிந்திருக்கும் ஆசிரியர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பலர் வீட்டிலிருந்து 100 கிலோ மீட்டர் வரையில் தினமும் பயணப்படுபவர்களும் நம்மிடையே உண்டு என்பதுதான் வருத்தமான செய்தியாகும். அவர்களால் எப்படி நிம்மதியாகப் போதிக்க முடியும் என்பது ஒரு கேள்வியாக முக்கியத்துப்படுத்த வேண்டும்.

 

5. வேலைப்பழு

இன்றைய ஆசிரியர்கள் எதிர்நோக்கும் தலையாய சிக்கல் வேலைப்பழுவே. ஒரே ஆசிரியர் வகுப்பாசிரியராகவும் இருப்பார்; முதன்மைப் பாடங்களைப் போதிப்பவராகவும் இருப்பார்; அவரே மற்ற முக்கியமான கடமைகளுக்கும் தலைமை வகிப்பார்; ஒருவரே 20க்கும் மேற்பட்ட கோப்புகளை நிர்வகிப்பவராகவும் இருப்பார்; இத்தனைக்கும் மத்தியிலும் ஆண்டிறுதியில் அனைத்து மாணவர்களையும் சிறந்த தேர்ச்சிப் பெற வைக்க வேண்டும் என்கிற அழுத்தமும் கூடி நிற்கும். அப்படி தேர்ச்சியில் சிக்கல் ஏற்பட்டால் மேலதிகாரிகள் தொடங்கி, பெற்றோர்கள்வரை பலருக்கும் அதே ஆசிரியர்தான் பதில் சொல்லவும் வேண்டும். இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுத்த இறைவனின் மீதுதான் கோபம் ஏற்படும். இத்தகைய நிலையில் ‘போதிப்பதுதான்’ எங்களுடைய முதல் வேலை என்கிற வகையில் மற்ற வேலைகளின் மூலம் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் ஓர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் நிறைய புது திட்டங்கள், ‘ஆன்லைன் வேலைகள்’ என்று கணக்கில்லாமல் குவிந்து கொண்டே இருந்தன. ஒரு திட்டத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்கு முன்பாகவே இன்னொரு திட்டம் வந்து காத்திருக்கும் சூழல் பல நெருக்கடிகளை உண்டாக்கின. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்ட ஐந்து கோரிக்கைகளும் இத்தனை ஆண்டுகளில் பலரின் மனத்திற்குள் ஒரு புலம்பலாக ஒரு புகாராக வெளிப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தவை ஆகும். உங்கள் ஆட்சியில் கருத்து சுதந்திரமும் நாட்டு மக்களின் நலனும் முதன்மை பெறும் என்கிற தீர்க்கமான நம்பிக்கையில் இக்கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். இதனை இந்நாட்டின் குடிமகன் என்கிற உரிமையில் எழுதி முடிக்கின்றேன். நன்றி.

-கே.பாலமுருகன், ஆசிரியர்.

குறிப்பு:

இதனை மலாய்மொழியில்/ஆங்கில மொழியில் மொழிப்பெயர்க்க ஆர்வமுள்ள தன்னார்வ ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் என்னை நாடலாம். ஒரு கைத்தட்டினால் ஓசை வராது. நான் முன்வைத்திருக்கும் இக்கோரிக்கைகளுடன் உங்களுக்கும் உடன்பாடு இருந்தால் இது ஆசிரியர் வர்க்கத்தின் குரலாக மாற்ற முன்னெடுங்கள். மறுமலர்ச்சி நம் மனங்களில் உருவாக வேண்டும்.

 

நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?

 

சிலரிடம் ‘நீங்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?’ என்று கேட்டவுடனே ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நழுவி விடுகிறார்கள்.  அல்லது ‘எனக்கு அரசியல் பிடிக்காது’ என்று அலட்சியமான பதிலைக் கொண்டிருக்கிறார்கள்.

இளையோர்களிடம் அரசியல் பேச்சுகளைத் தொடக்கினால் எங்களுக்கு இன்னும் வயதில்லை என்று பயப்படுகிறார்கள்; நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களிடம் அரசியல் உரிமையைப் பற்றி பேச்செடுத்தால் இப்பொழுதிருக்கும் வாழ்க்கையைக் கட்டமைக்கவே எங்களுக்கு நேரம்  போதவில்லை என்கிற புகாரை முன் வைக்கிறார்கள். முதியவர்களிடம் அரசியல் பற்றி கேட்டால் எங்கள் காலம் முடிந்துவிட்டது என்று ஓரம் தள்ளிப் போகிறார்கள். படித்தவர்களிடம் அரசியல் பற்றி பேச முயன்றால் ‘ஐயோ நாங்கள் அரசியல் பேசவேக்கூடாது’ என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறார்கள். பணக்காரர்களிடம் அரசியல் என்று சொன்னதும் ‘எங்களுக்கு அதில் உடன்பாடில்லை, நாங்கள் யாரையும் நம்பியில்லை’ என்று ஒதுங்கிவிடுகிறார்கள். ஆகக் கடைசியாக எளிய மக்களிடம் அரசியல் பேசச் சென்றால், ‘எங்களுக்கு என்ன தருவீர்கள்?” என்று பரிதபாத்துடன் நிற்பார்கள். இங்கு அரசியலைப் புரிந்து கொள்ளவும்; அரசியல் சார்ந்த அறிவார்ந்த உரையாடலை மேற்கொள்ளவும் யாருக்கும் பொறுமையும் இல்லை; தருணமும் இல்லை; அவர்களின் வாழ்க்கையில் அதற்குரிய இடமுமில்லை. ஆனால், அவர்கள், அவர்களுடைய பிள்ளைகள், அடுத்த சந்ததியினர் என அனைவரையுமே நிர்வகிப்பது, காப்பது, வழிநடத்துவது என எல்லாமும் அரசியல் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

1.நேரடி அரசியல்

அரசியல் என்பதை மூன்று வகையில் பிரித்தறியலாம். முதலாவதாக,  ஒரு கட்சி சார்ந்து அரசியலில் நேரடியாக ஈடுபட்டு மக்களுக்குப் பணி செய்வது. மக்களுக்கே அரசு என்கிற கொள்கையின்படி அரசியலை அவ்வாறு புரிந்து கொள்ளலாம். முதலாவது இரகத்தில் எல்லோருக்கும் ஈடுபாடு இருந்ததில்லை. மக்களில் ஒரு சிலர் மட்டுமே அரசியலில் நுழைந்து தன்னைத் தலைவனாக்கிக் கொள்கிறார்கள்.

‘எனக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட ஆர்வமில்லை’ என்கிற இரகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட அரசியல் வகைக்குள் வரமாட்டார்கள்.

2. அரசியல் விமர்சகர்கள் 

அடுத்த ஒரு வகையினர் அரசியலை விமர்சிப்பவர்கள். காலம் முழுவதும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்கானிக்க ஆர்வம் கொண்டவர்கள். ஆனால், இவர்களுக்கும் அரசியலில் நேரடியாக ஈடுபட ஆர்வம் இருக்க வாய்பில்லை. ஆனாலும், அரசியலில் விமர்சிப்பதன் மூலம் எப்பொழுதும் தன்னை அரசியலோடு இணைத்துக் கொள்ளக்கூடியவர்கள். இவர்களின் நுனிவிரலில் அரசியல் தகவல்கள், கோட்பாடுகள், இன்றைய நிலவரம் என அனைத்தையும் வைத்திருப்பார்கள். இவர்களிடம் கேட்டாலும் ‘அரசியலில் ஆர்வமில்லை’ என்பார்கள். ஆனால், அவர்கள் குறிப்பிடும் ஆர்வமில்லை என்பது ஒரு அரசியல் கட்சிக்குள் இருந்து கொண்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில் ஆர்வமில்லை என்பதைக் குறிக்கிறது.

3.மக்கள்

மூன்றாவது இரகத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள். மக்கள் என்றால் யார்? நாம் அனைவரும் ‘மக்கள்’ என்கிற குழுமத்திற்குள் இடம்பெறுவோம். சரி, மக்கள் எனும் வகைக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி எழும். நம் நாட்டு அரசியல் ஜனநாயகத்தன்மை கொண்டது என்று எல்லோரும் படித்திருப்போம். ஜனநாயகத்தன்மைக் கொண்ட அரசியல் ‘மக்களாட்சி’ முறையைப் பின்பற்றவல்லது ஆகும். அதாவது, அரசை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் அரசியல் கோட்பாடுகளில் ‘மக்களாட்சி’ கொள்கையைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பதே ஒரு குடிமகனின் தலையாயக் கடமை. அதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் இந்நாட்டின் அரசு உருவாக்கத்தில் மக்களுள் ஒருவனான தனக்கும் சீரிய பங்குண்டு என்பதை உணர முடியும். அதனையே நாம் இவ்விடத்தில் ‘அரசியல்’ என்கிறோம். அதன் அடிப்படையிலேயே அரசியல் பேச்சுக்களைத் துவங்குகிறோம்.

 

இப்பொழுது சொல்லுங்கள், ‘நீங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?’ என்கிற கேள்விக்குப் பின்னால் எந்தத் தனிப்பட்ட அரசியல் விமர்சனமும், அரசியல் தாக்குதல்களும் இல்லை. அது மக்களாட்சியைத் தன் தேசியக் கொள்கைகளில் ஒன்றாகப் பின்பற்றும் மக்கள் உரிமை பற்றியது என்று விளங்கும். ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்கிற உங்கள் புறக்கணிப்பு உங்களுக்கு அரசியலில் நேரடியாகவும், அரசியலை விமர்சிப்பதிலும் ஈடுபாடு இல்லை என்று சொல்லலாம். ஆனால், மக்கள் என்கிற முறையில் ஓட்டுரிமையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கவே வேண்டும். அதுவும் அரசியலே.

ஆக, நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்? இது ஜனநாயக நாடு என்கிற வகையில் அரசைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் நம்மிடம் உள்ளது; ஆகவே, ஓட்டளிப்பதன் மூலம் ஜனநாயக சலுகையை நாம் பாவித்து நம் கடமையை நிறைவேற்றுவோம் என்கிற தன்னுணர்வு அனைத்துக் குடிமக்களுக்கும் எழ வேண்டும். அரசியலில் ஈடுபாடு கொள்வது ஓட்டுரிமையை உணர்ந்து நமக்கான தலைவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் பணியாகும் என்று உணர்வோம்.

வருகின்ற மே 9ஆம் திகதி

தூரம் கருதாமல்

நேரம் கருதாமல்

ஓட்டளிக்கச் செல்லுங்கள்.

உங்களிடைய ஓட்டு செலுத்தும் தகவல்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட முகவரிக்குச் செல்லவும்:

http://www.spr.gov.my/

கீழ்க்காணும் குறும்படத்தைப் பார்க்கவும். வயதான ஒரு பாட்டியால் தன் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாமல் ஓட்டளிக்கச் செல்ல முடிகிறதென்றால் நாம் மட்டும் ஏன் நம் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்?

வருகின்ற மே 9ஆம் திகதி காலை மணி 8.00 தொடக்கம் மாலை 5.00 வரையில் நீங்கள் ஓட்டளிக்கச் செல்லலாம். நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. ஓட்டளிக்கும் இடத்தினை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவும். (அகப்பக்கம், குறுந்தகவல் மூலம் அறிய முடியும்)

2. முறையான உடையை அணிந்து செல்லவும். பெரும்பாலான ஓட்டளிக்கும் இடம் பள்ளிக்கூடம் என்பதால் உடை நேர்த்தியைப் பின்பற்றவும்.

3. வாக்களிக்கும் முன் மையிடப்பட்டிருக்கும் கையில் ஓட்டுப் பாரத்தைப் பிடிக்க வேண்டாம். மை பட்டுவிட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.

4. வாக்களிக்கும் இடத்தில் ‘அரசியல் பிரச்சாரத்தை’ மேற்கொள்ள வேண்டாம்.

நன்றி.

தேர்தல் நம் களம்

ஓட்டு நம் உரிமை.

வாழ்த்துகள்.

மக்களாட்சி முறைப்படி வெற்றி பெற்று நல்லரசை உருவாக்க அனைத்துத் தலைவர்களுக்கும் வாழ்த்துகள்.

-கே.பாலமுருகன்