சிறுவர் நாவல் வெளியிட்டு விழாவும் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியும்

2014ஆம் ஆண்டில் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற மர்ம சிறுவர் நாவலை எழுதி முடிக்கும்போதே இதே சிறார் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறுவர் மர்மத் தொடர் நாவல் என்று பத்து பாகங்கள் வெளியிடத் திட்டமிட்டேன். அதற்குரிய உந்துதலை எனக்குள் உண்டாக்கியவர் மேனாள் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனரும் இலக்கிய வாசகரும் நண்பருமான திரு.பி.எம் மூர்த்தி அவர்கள்தான். உரையாடலின் வழியாகவே எனக்குள் சிறுவர் இலக்கியம் குறித்த அக்கறையை ஏற்படுத்தினார். அதனால், சிறுவர் நாவலை எழுதவும் தொடங்கினேன். இந்நாட்டு சிறுவர்களுக்கான நாவல் உருவாக வேண்டும் என அவர் கண்ட ஆசையை முதலில் நிறைவேற்றிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததாகவே கருதுகிறேன்.

ஆகவேதான், இதனை மலேசியத் தமிழ் இலக்கியத்தில் சிறுவர்களுக்கான முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவல் என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் நான்காண்டுகளில் மலேசியக் கல்வியிலும் இலக்கியத்திலும் இப்பத்துத் தொடர் சிறுவர் நாவல் மலேசிய இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

நாம் யாருக்காக எழுதுகிறோம் என்கிற தெளிவுடனே இந்நாவல்களை எழுதத் துவங்கினேன். மொழியிலும், கதை அமைப்பிலும், பாத்திரப் படைப்பிலும் சிறார்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே மர்மம் என்கிற ஒன்றைத் தெரிவு செய்து கொண்டேன். அதே போன்று தலைப்புகளிலும் முகப்போவியங்களிலும் சிறுவர்களைக் கவரும் தன்மை இருக்க வேண்டும் என்றே முழு ஈடுபாட்டுடன் சிறார்களின் வயதிற்கும் மனநிலைக்கும் ஏற்ப என்னை உருவகித்துக் கொண்டேன்.

  1. மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்
  2. மோகினி மலையில் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்
  3. பதிமூன்றாவது மாடியும் இரகசியக் கதவுகளும்

 

ஆகிய மூன்று தலைப்புகளிலும் ஒரு மர்மமும் தூண்டலும் அடங்கியிருக்கும். இதுவே மாணவர்களை வாசிக்கத் தூண்டும் ஓர் உத்தியாகும். இம்மாணவர் சமூகத்தை வாசிப்பின் மீது ஓர் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இந்நாவல்களால் உருவாக்க முடிந்ததற்குத் தலைப்பும் ஒரு காரணியாகும். கடந்த நான்கு ஆண்டுகளின் மூன்று சிறுவர் தொடர் நாவல் பற்பல சவால்களுக்கு மத்தியிலேயே வெளியீடு கண்டுள்ளது. என்னை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் யாருமற்ற சூழலில்தான் இம்மூன்றாவது நாவலை எழுதி முடித்தேன்.

இச்சிறுவர் நாவல்களால் என்ன பயன் என்று ஒரு கேள்வி எல்லா மனங்களிலும் இடம்பெற்றிருக்கும். முதலாவது சிறுவர்களின் வாசிப்பை இதுபோன்ற மர்ம நாவல்களின் வழியாக ஊக்கப்படுத்த முடியும். இதற்கு என் நாவல்களே உதாரணமாகும். இதுவரை இந்நாவல்களை வாங்கி முயற்சித்தப் பள்ளிகளை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒரு மாணவனை அவனே ஆர்வத்துடன் புத்தகத்தை வாசிக்க வைத்துவிடலே மிகப் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்.

அடுத்து, எனது சிறார் நாவல்கள் முழுக்கவும் சிறார் கதாபாத்திரங்களை முதன்மை மாந்தர்களாக முன்னிறுத்துபவை ஆகும். சிறுவர்களே இந்நாவல்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாந்தர்களாக இடம் பெறுகிறார்கள். இது அவர்களின் வாசிப்பிற்கு உந்துபவையாகவும் இருக்கும் அதே சமயம் அவர்களின் மனநிலைக்கும் ஏற்றவாறு புதிய வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும். புத்திமதி சொல்லும் பாங்கிலிருந்து சிறார் உலகை ஆற்றலும் அனுபவமுமிக்க பகுதிக்கு நகர்த்தும். சிறுவர்கள் திறன்கள்மிக்கவர்கள் என்கிற நம்பிக்கையை உண்டாக்கும். மனத்தில் அடைத்துக் கொண்டிருக்கும் உணர்வலைகளுக்கு ஏற்ற வடிக்காலை அமைத்துக் கொடுக்கும். இது முழுக்க சிறார் மனநிலையிலிருந்து எழுதப்பட்டவை என்பதால் அவர்களின் மனங்களைத் தொட்டு பேரெழுச்சியை உண்டாக்கும்.

 

அத்தகையதொரு நாவல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நாவலை விமர்சித்தவரும் ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற நாவலின் தீவிர வாசகரான மாணவர் சிவசந்திரன் ஆகும். நாவல் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அதிகாரியான திரு.பெ.நகுலன் ஆவார். கற்பனைவளம் வாசிப்பவர்களின் இரசனையைத் தூண்டும் என்பதால் இதுபோன்ற கற்பனை நாவல்கள் மாணவர்களுக்கு அவசியம் என்று பேசினார். சிறுவர் இலக்கியத்தின் பயன்கள் என்கிற தலைப்பில் நாட்டின் மூத்த எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான் அவர்கள் இலக்கிய உரையை ஆற்றினார். தேடல்மிக்க சமூகமே அதற்குரிய ஞானத்தை அடையும் என்று காகம் கதையை முன்வைத்து இரசிக்கும்படி கூறினார்.

100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் நாவல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அ.கலைமலர் எழுத்தாளர் இயக்கம் சார்பாக வாழ்த்துரையை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ.ரவி அவர்களும் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். மேலும், சிறப்பு வருகையாக முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.முருகன், தலைமை ஆசிரியர் திரு.சந்திரசேகரன், திரு.ம.தனபாலன், வாரியப் பொருளாளர் அண்ணன் திரு.சுப்ரமணியம், திரு.வீரையா, ஆசிரியை மணிமாலா, பிரேமதி, ஹென்ரி, மேலும் பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு மும்முனை போட்டியாக ‘சிறுகதை எழுதும் போட்டியும்’ நடத்தப்பட்டது. மூன்று தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஆயினும், 12 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாவல் வெளியிட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இதுபோன்ற இலக்கியக் களங்களில் அங்கீகரிக்கப்படும் மாணவர்கள் நாளைய படைப்பாளர்களாக உருவெடுக்கப் பலவிதமான வாய்ப்புகள் உள்ளன.

 

அதே போல இச்சிறுகதை போட்டியின் வாயிலாகக் கடந்தாண்டு இரண்டு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை, ‘சிறந்த சிறுகதைக்கான விருது’ ‘சிறந்த எழுத்தாளருக்கான விருது’ ஆகும். இவ்வாண்டு அவ்விருதுகளுக்கு இரண்டு மாணவர்கள் தகுதி பெற்றார்கள். மாணவி ம.சுஜித்தா ‘சிறந்த எழுத்தாளருக்கான’ விருதையும், மாணவன் காளிஸ்வரன் ‘சிறந்த சிறுகதைக்கான’ விருதையும் பெற்றனர். அம்மாணவர்களின் இலக்கியத் தொடக்கத்திற்கு அவ்விருதுகள் ஓர் உற்சாகமாக அமைந்திருந்தது.

நாவல் பயணம் மேலும் தொடரும். இந்நாட்டில் இன்னும் பத்தாண்டுகளில் சிறுவர் நாவல்களின் தீவிர வாசக சிறுவர்கள்  நாடெங்கிலும் பரவியிருப்பார்கள். அவர்களின் வழியே நாட்டின் இலக்கியம் புத்தெழுச்சியைப் பெறும்.

நாவலைப் பெற விரும்புபவர்கள் அல்லது நாவலைப் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்புபவர்கள் முன்வந்து கைக்கொடுக்கவும். சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இந்நாவல் அவர்களைச் சென்றடைய முன்வருவோம்.

-கே.பாலமுருகன்