குழந்தை வளர்ப்பில் நாம் இழந்தது என்ன?

‘உங்கள் துணையுடன் பிறந்ததால் குழந்தைகள் உங்களின் கைதிகள் அல்லர்’

John Bowlby, பிரிட்டிஷ் உளவியல் ஆய்வாளர்

 

பலரும் பல நூல்களில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதியும் பேசியும்விட்டார்கள். நாமும் பல கருத்தரங்குகளுக்குச் செல்லும்போது பெற்றோரியல் பற்றியும் ஒரு மிகச் சிறந்த பெற்றோராக இருப்பதைப் பற்றியும் கேட்டிருப்போம். ஆனாலும் இன்னமும் குழந்தை வளர்ப்பில் நம் இந்திய சமுதாயத்தில் தொய்வு இருப்பதாகவே சமூகத்தில் நடக்கும் சிறார் தற்கொலைகள், சிறார் குற்றவியல் செயல்கள் போன்ற பலதரப்பு ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. பெரும்பாலும் இது குறித்து யாருக்கும் எந்த ஆழமான அக்கறையும் இருப்பதுமில்லை. அதற்கு ஒரே காரணம் குழந்தை வளர்ப்பு என்பது அவரவர் அல்லது அந்தந்த பெற்றோரிகள் தொடர்புடையது என எல்லோரும் ஒதுங்கிவிடுகிறார்கள்.

 

 

குழந்தை வளர்ப்பு – இயல்பைக் கண்டறிதல் 

குழந்தைகள் நம் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் என்கிற சிந்தனையே அவர்களை முழுமையாக ஆக்கிரமித்து அவர்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் நம் விருப்பங்களைத் திணித்து, நாம் சாதிக்க முடியாதவையை, நாம் பெற முடியாமல் போனதை, நாம் அடைய முடியாமல் போனதை எல்லாம் மீட்டுக்கொள்ள அவர்களை ஒரு கருவியாகத் தயாரித்துக் களத்தில் எறிகிறோம். அவர்களும் நம் விருப்பப் பந்தய குதிரைகளைப் போல ஓடித் தோற்கிறார்கள். அது அவர்களுடைய தோல்வி அல்ல. நம்முடைய குழந்தை வளர்ப்பின் தோல்வியே. ஆக, நமக்கு வேண்டியது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தன்னியல்பும் தன்னாற்றலும் இருக்க வாய்ப்புண்டு என்கிற புரிதலே. பின்னர் அதனைத் தேடிய நம் அகபயணம்.  அதனை அவர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து அறிய முற்பட வேண்டும். அதுவே பெற்றோர்களின் முதல் வெற்றி.

உங்களால் ஒன்றை  வெற்றிப் பெற முடியாமல் போனதற்கு நீங்கள் மட்டுமே காரணம். உங்களின் குழந்தைகளின் மூலம் உங்களை ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்கும்போது ஒருவேளை நீங்கள் உங்களின் தாழ்வுமனப்பான்மையையும் தோல்வியையும் பிள்ளைகளின் வழி வென்றுவிட முடியும். ஆனால், உங்கள் விருப்பத்திற்கு உருவாகி தன்னுடைய இயல்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே ஒரு குழந்தை வளர்ந்து கரைகிறது. இப்படியாக வாழ்நாள் முழுவதும் பிறரின் மகிழ்ச்சிக்காக, பிறரின் ஆசைக்காக, பிறரின் தேவைக்காக என வாழ்ந்து மறைய வேண்டிய துர்வாழ்க்கை அக்குழந்தைக்கு வழங்கிவிடும் நிலை ஏற்படும்.

குழந்தை வளர்ப்பு – நுட்பமான வழிகாட்டல் 

குழந்தை வளர்ப்பு என்பது உலக அனுபவங்களைத் திறந்து காட்டும் ஒரு நுட்பமான வழிகாட்டலாகும். உலக அனுபங்களிடமிருந்து குழந்தைகளை ஒளித்து நம் அகக்கூட்டிற்குள் அவர்களைப் பூட்டி வைத்தல் முதிர்ந்த சமூகம் செய்யக்கூடிய காரியமல்ல என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். நாளை உலகை எதிர்க்கொள்ளும்போது உளரீதியிலும் அனுபவ ரீதியிலும் அவர்களிடத்தில் இருக்கும் காலியான இடத்தால் ஏமாற்றப்படவும் பாதிப்பிற்குள்ளாகவும் வாய்ப்புண்டு. இதுதான் உலகம் இப்படித்தான் இருக்கும் என்கிற திறந்த மன உரையாடலைப் பெற்றோர்கள் குழந்தைகள்  வளரும் காலக்கட்டத்திலேயே தொடங்கிவிட வேண்டும். பெற்றோர்கள் திறப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர அடைப்பவர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் அடைத்தால் இவ்வுலகின் இருண்ட பகுதியைத் திறக்க ஆயிரம் கரங்கள் காத்திருக்கின்றன என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை வளர்ப்பு-  பன்முகத்தன்மை கொண்டது

குழந்தை வளர்ப்பில் நம் இடம் எது என்கிற கேள்விக்கு முதலில் உங்களிடம் தீர்க்கமான பதில் இருத்தல் வேண்டும். அப்படி இல்லையெனில் அதனை முதலில் கண்டடையுங்கள். ஒரு குழந்தைக்கு நாம் தாயாக இருக்கலாம்; தந்தையாக இருக்கலாம்; அது உறவுமுறை குறித்து உலகம் நமக்குள் கற்பிக்கும் விதிமுறை. ஆனால், நாம் அவர்களுக்கு என்னவாக இருக்கப் போகிறோம் என்பதில் சூசகமான ஒரு கண்டறிதல் இருக்க வேண்டும். ஒரு நல்ல நண்பனாக, ஒரு நல்ல ஆசானாக இப்படியாக அவர்களுடன் நாம் ஏற்படுத்திக் கொள்ளவிருக்கும்  உறவானது பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். ஒரு தந்தை தன் வாழ்நாள் முழுவதும் தன் பிள்ளைகளுக்குத் தந்தையாக மட்டுமே இருந்துவிட அவசியமில்லை.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்களின் வடிக்காலாக நாம் இருந்தாலே அவர்கள் அமைதி, சமாதானம் பெறும் இடமாக நாம் மாறிவிடலாம். அத்தகைய நம்பிக்கையையே அவர்களிடத்தில் நாம் உருவாக்க வேண்டும். மன வலிக்கு அவர்கள் தேடும் மருந்தாக நீங்கள் நிலைத்திருக்கும்படி உறவினை அமைத்துக் கொள்ளுங்கள். அதுவே குழந்தை வளர்ப்பில் நாம் கவனப்படுத்த வேண்டிய அதிமுக்கியக் கூறாகும்.

குழந்தைகளுக்கு ஏது உணர்வு, அவர்களுக்கு ஏது வலி என நாம் அவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. பலர் முன்னிலையில் அவர்களைத் தண்டிக்கிறோம்; அவர்களை அவமானப்படுத்துகிறோம்; நம் சொற்களால் அவர்களின் நம்பிக்கையை வேரறுக்கிறோம். இங்கிருந்து தாழ்வு மனப்பான்மையையும் உளத்தளர்ச்சியையும் நாம் அவர்களின் மனங்களில் உருவாக்கிவிடுகிறோம்.

ஆக, குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். கலை என்றாலே அதனை ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துவிட்டு நாம் ஒதுங்கிவிடுவோம். அதற்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததைப் போல நகர்ந்து விடுவோம். குழந்தை வளர்ப்பு என்பது அடிப்படை தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது எந்தக் குழந்தையாகவும் இருந்தாலும், இவ்வுலகம் குழந்தைகளாலும் நிரம்பியிருப்பதால் நாம் எல்லோரும் அதனைப் பற்றி அக்கறை கொள்வதில் எந்த நஷ்டமும் இல்லை என்பதே உண்மை.

-கே.பாலமுருகன்