Mercury – மொழியைத் தாண்டி

 

முதன்முறையாக வசனங்களே இல்லாமல், ஒளி, ஒலி, இசை, நடிப்பு ஆகியவற்றால் சிறிதும் பிசகாமல் குழப்பாமல் படத்தைச் சொல்லி முடித்திருக்கிறார் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். மெர்குரி கார்ப்பரேட் நிறுவனங்களால் அழித்தொழிக்கப்பட்ட சாதாரண மக்களின் தூசுப்படிந்த வரலாற்று மண்ணிலிருந்து இக்கதை நிகழ்கிறது.

 

கைவிடப்பட்ட பழைய மெர்குரி தொழிற்சாலையும், ஆள் அரவமற்று கிடக்கும் மலைக்கிராமமும், நீடித்த இரவும், பேச்சுக்களற்ற இரைச்சல்மிக்க மௌனமும் என ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டுகின்றன. பத்து பக்கத்திற்கு வசனம் பேசியும் புரியாமல்போன கதைகளுக்கு மத்தியில் வசனமே இல்லாமல் உணர்வுகளால் மட்டுமே நகரும் இப்படம் அந்நியத்தனம் இல்லாமல் மொழியைத் தாண்டி மனத்தில் பயணிக்கிறது.

 

‘Dont Breathe’ என்கிற ஆங்கிலப்படத்தை இப்படம் ஞாபகப்படுத்தினாலும் இதனைக் கார்த்திக் சுப்பராஜ் மொழிக்கு அப்பாற்பட்டு மனித மனங்களில் மிச்சமாய் தேங்கிக் கிடக்கும் ஒரு துளி ஈரத்தை நோக்கியே கதையைச் சொல்லிச் செல்கிறார். கடைசி காட்சியில் பிரபுதேவாவின் அழுகையும் கதையை சைகையால் சொல்லும் இடமும் ஆச்சர்யமான நடிப்பாற்றல்.

 

சினிமாவை மகிழ்ச்சிக்காக மட்டுமே அணுகும் பலரை இப்படம் கவராமல் போகவும் வாய்ப்புண்டு. இருப்பினும், கதையில் வரும் மர்மமிக்கக் காட்சிகள், அடுத்த நொடியில் நடக்கவிருக்கும் எதிர்ப்பார்ப்புகள், திகிலூட்டும் இசை, ஒளிப்பதிவு போன்றவற்றில் இயக்குனர் அதிக கவனம் செலுத்தியதால் படத்தைப் பார்க்கும் அனைவரையும் வசனங்கள் இல்லாவிட்டாலும் படத்தோடு பயணிக்க வைக்கிறது.

 

 

இப்படத்தில் இயக்குனருக்கு அடுத்துக் கடுமையாக உழைக்க வேண்டிய நிலைக்கு ஆளானவர் நிச்சயம் இசயமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். வசனங்கள் கேட்டுக் கேட்டுப் பழகிபோன, கதாநாயகன் வசனம் பேசினாலே கைத்தட்டும், வீரப்பாண்டியக் கட்டப்பொம்மனை அவர் பேசும் வசனங்களுக்காகவே தீவிரமாக இரசிக்கும் பின்னணியுள்ள தமிழ்த்திரைப்பட  இரசிகர் கூட்டத்தை ‘மெர்குரி’ படத்தில் இணைக்க, படத்த்த்தின் ஓட்டத்திலிருந்து அவர்கள் விலகிப் போய்விடாமல் நிற்க, சந்தோஷ் நாராயணனின் இசை கைக் கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மௌனங்கள் நிரம்பிய அனைத்துக் காட்சிகளிலும் இசை பேசுகிறது. இசை விவரிக்கிறது. சம்பவங்களின் உச்சத்தை இசை வெளிப்படுத்துகிறது. அத்தனை நுட்பமான இசையமைத்தலின் மூலம் படத்தைத் தாங்கி நிற்கிறார் சந்தோஷ் நாராயணன்.

 

இப்படத்தின்  அடுத்த கதாநாயகன் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஆவார். ’24’ திரைப்படத்திற்காக “சிறந்த ஒளிப்பதிக்கான’ தேசிய விருதைக் கடந்தாண்டு பெற்ற திரு, இளம் பச்சை, கருமை, மஞ்சள் என ஓளிப்பதிவின் மூலம் படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். திரையங்கம் சென்று கண்டு இரசிக்க வேண்டிய; அதிர வேண்டிய; நாற்காலியின் நுனிக்கு வந்து தவிக்க வேண்டிய சில அனுபவங்கள் நிறைந்த இப்படத்தைத் தவறவிடாதீர்கள்.

வாழ்த்துகள் அனைவருக்கும்.

-கே.பாலமுருகன்