கவிதை: நகரங்களின் நாக்குகள்

எல்லா இரைச்சல்களையும் மெதுமெதுவாகச் சேமித்து
சூடாறாமல் தகித்துக் கொண்டிருக்கும்
ஓர் இரவின் மௌனத்திற்குள்
அடைத்துவிட்டுப்
போய்க் கொண்டிருக்கிறான்
தள்ளு வண்டிக்காரன்.

அத்தனை நேரம்
அங்கிருந்த பரப்பரப்பு
எல்லையில்லா ஓர் ஓய்வுக்குள்
சுவடில்லாமல் மறைய
ஓர் எளிய சத்தம் மட்டும்
தலைத் தூக்கிப்
பார்த்துக் கொண்டிருந்தது.

அமிழ்ந்துவிட்ட விளக்குகளிலிருந்து
கண்சிமிட்டும் சிறிய அசைவில்
ஒரு வெளிச்சப்பூச்சி
பறந்து செல்கிறது.

யாரையோ கடிந்துகொண்டு
யாருமற்ற வெளியில்
உறங்குவதற்கு முன்
தன் கிழிந்த சட்டையை
யாரை நோக்கியோ
உதறுகிறான்
யாரென்று தெரியாத
ஒரு கிழவன்.

கடைசியாக
பேச்சற்ற ஒரு நடுநிசி
இலாவகமாக இறக்கிவிட்டுச் செல்கிறது
தன் கூரிய நிழலை.

-கே.பாலமுருகன்