ஓர் ஊருல ஓர் ஆமை இருந்துச்சாம்… அப்புறம் இன்னொரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்
இன்று சிறுவர்களிடம் கதைக் கேட்கச் சென்றிருந்தேன். வருடத் துவக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் எப்பொழுதும் அழுகையுடனும் பயத்துடனும் பள்ளிக்கூடத்தோடு ஒன்ற முடியாமலும் இருப்பார்கள். அவர்களின் பயத்தை உடைக்க நான் வழக்கமாகக் கையாளும் உத்தி, கதைச் சொல்லச் சொல்லிக் கேட்பது. அது அவர்களுக்கு மட்டும் ஒரு வடிக்கால் அல்ல. வருடத் தொடக்கத்தில் பணிச்சுமை கொஞ்சம் அழுத்தமாக இருக்கும் எனக்கும் ஒரு வடிக்கால்தான். அத்தனை நகைச்சுவையும் யதார்த்தமும் நிரம்பிய ஒரு கனநேர பொழுது அது.
முதலில் ஒரு மாணவி கதைச் சொல்ல வெளியே வந்தாள். பார்க்கக் கொஞ்சம் சுட்டியாகவும் இருந்தாள். அவளுடைய கதை நீளமாகவும் சுவாரிஷயமாகவும் இருந்தது.
“என்ன கதைமா?”
“ஆமையும் முயலும் சார்…”
“சரிமா ஏற்கனவே பலமுறை கேட்டக் கதைத்தான். சரி சொல்லு”
“இல்ல இது ஓட்டப்பந்தய கதை இல்ல சார், வேற…”
“ஓ அப்படியா? பரவாலையே… சொல்லு…”
“ஒரு ஊருல ஒரு ஆமை இருந்துச்சாம்… அதுக்கு ரொம்ப பசியாம்… அது சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம். எங்கயுமே சாப்பாடு இல்லயாம். அப்புறம் ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம், அதுக்கும் பசியாம். அதுவும் சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம். அப்புறமேல ஒரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்…”
“அதுக்கும் பசியா?”
“ஆமாம் சார். அதுவும் சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம்… அப்புறம்… இன்னொரு முயல் இருந்துச்சாம்”
அப்படியாக 5 நிமிடத்தில் மட்டும் மொத்தம் 6 ஆமைகளும் 6 முயல்களும் பசியோடு வந்து கொண்டே இருந்தன.
“சாப்ட்டுச்சா இல்லயா?”
“இல்ல சார்… பசிக்கும். அவ்ளத்தான்”
அவ்வளவுத்தான் என்று போய் அமர்ந்துவிட்டாள். எனக்குச் சட்டென பசி எடுத்துக் கொண்டது.
அடுத்து இன்னொரு மாணவி ஆர்வத்துடன் வந்தாள்.
“என்ன கதைமா?”
“ஆமையும் முயலும் சார்” என்றாள்.
எனக்குச் சற்று தயக்கமாக இருந்ததும், “அதே பசிக்கற கதையா?” என்றேன்.
“இல்ல சார் இது வேற கதை,” என்றாள் கண்கள் விரிய.
“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவரு இருந்த ஊர்ல ஒரு ஆமையும் இருந்துச்சாம்… அந்த ராஜா ஒரு நாளு கீரை கறி வெச்சாராம்… அவரு சமைச்சிட்டுக் காட்டுக்கு வேட்டையாட போனாராம்… அந்த நேரம் பார்த்து ஆமைக்குப் பசி எடுத்துருச்சாம்…”
ஏற்கனவே பசியில் இருந்த எனக்குப் பசி இன்னும் கூடி வயிற்றில் அமிலத்தைக் கரைத்தது.
“உடனே அந்த ஆமை, ராஜாவோட வீட்டுல நுழைஞ்சி அந்தக் கீரை கறிய சாப்பிட்டுருச்சாம்… அப்புறம் ராஜா வந்தாராம்… அவருக்குச் சாப்ட சாப்பாடே இல்லையாம்… அப்படியே பசிலே தூங்கிட்டாராம், அவ்ளத்தான் கதை,” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். கண்களில் பசி வெறியுடன் உட்கார்ந்திருந்தேன்.
அடுத்து இரண்டு பையன்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னே ஓடி வந்தனர். ஏன் என்று கேட்டேன். இரண்டு பேரும் ஒரே கதையின் தலைப்பைச் சொன்னார்கள். இருவரில் யார் முதலில் அக்கதையைச் சொல்ல வேண்டும் எனப் போட்டிப் போட்டுக் கொண்டார்கள். நான் ஒருவனை மட்டும் தேர்வு செய்து கதைச் சொல்லப் பணித்தேன்.
“சார், ஒரு ஊருல ஒரு ஆமை இருந்துச்சாம்…”
“ஷபாஆஆஆஆ… இந்த ஆமைக்கு ஒரு விடிவு காலமே இல்லையாப்பா?”
“இருங்க சார், சொல்றத கேளுங்க,” என என்னை அதட்டினான். அவன் கவனம் முழுவதும் கதையைத் தன் நண்பனுக்கு முன்பே சொல்லிவிட வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.
“அந்த ஆமை இருந்துச்சுல… அது வந்து… சார் அங்கப் பாருங்க அவன் பழிச்சிக் காட்டறான்,” என்றதும் அவனுக்கு எதிரில் இருந்த இன்னொரு பையனைப் பார்த்து முறைத்தேன்.
“அப்புறம் சார், அந்த ஆமை இருந்துச்சுல… அது வந்து… சார் வினிஷா பாருங்க, மேசைய முன்னுக்குத் தள்ளுது,” என்று சொல்லிக் கதையை நிறுத்தினான்.
“அந்த ஆமை அந்த ஊருல… சார்! கவினேஷ் பாருங்க… குத்து காட்டறான்,”
இப்படியாக அவன் கடைசி வரை அந்த ஆமை கதையைச் சொல்லவே இல்லை. ஏன் என்று கேட்டால் அவனுக்கு அவ்வளவுத்தான் தெரியும் என்று சொல்லிவிட்டு எல்லாரின் மீதும் புகார் சொன்ன திருப்தியுடன் போய் அமர்ந்துவிட்டான்.
அவனுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த இன்னொரு பையனைக் கதைச் சொல்ல அழைத்தேன்.
“என்னப்பா ஆமை கதையா?”
“இல்ல சார் இது முயல் கதை,” என்று அவன் கூறியதும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.
“ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம். அந்த முயலுக்கு ஒரே பசியாம்… அது சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம்… அது ஒரு ராஜாவோட வீட்டுல நுழைஞ்சி சாப்பாடு இருக்கானு பாத்துச்சாம். அவரு ஆமை கறி சமைச்சி வச்சிருந்தாராம்…”
“தம்பி!!! திரும்பியும் ஆமையா?”
“இல்ல சார் இதுல அந்த ஆமை செத்துருச்சி…”
“எப்படி அந்த ஆமை…?”
“அதுதான் மொத ஜெசிக்கா சொன்னுச்சு… அந்தக் கதையல ராஜாவோட கீரை கறிய சாப்டுச்சே அந்த ஆமை, அதை ராஜா கறி வச்சிட்டாரு சார்,”
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் கைவசம் வைத்திருந்த கதையை நண்பன் சொல்லிவிட்டதால் அவனிடம் சொல்லக் கதை இல்லை என்றாலும் ஏற்கனவே சொன்ன ஒரு கதையை அப்படியே தொடர்ந்து கொண்டான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.
சில காலங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் சிறுவர்களின் உலகில் ஆமை இத்தனை வலிமை பெற்று வியாபித்திருப்பதைப் பார்க்கிறேன்.
“சரி, அந்த ஓட்டப்பந்தயம் திரும்பியும் வைச்சிருந்தால் ஆமை மீண்டும் ஜெயிச்சிருக்குமா?” என்று ஒரு கேள்விக் கேட்டேன்.
எல்லோரும் கையை உயர்த்தினார்கள். எல்லோரிடமும் பதில் இருந்தது.
பதில் 1: ஆமை எப்பவும் ஜெயிக்கும் சார்.
பதில் 2: இந்த முறை முயல் தூங்காது சார்.
பதில் 3: ஆமையும் முயலும் சேர்ந்து தூங்கிருக்கும் (சிரித்துக் கொண்டே).
பதில் 4: ம்ம்ம் தெரில சார், ஏன் போட்டி வைக்கணும்?
பதில் 5: நான் தான் சார் ஜெயிப்பேன்… நான் இவ்ள வேகமா ஓடுவேன் ( வகுப்பில் ஓடிக் காட்டுகிறான்)
எனது பதில்: முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும், முயலாமை என்றுமே வெல்லாது.
“அது என்ன சார் முயலாமை? புது மிருகமா?”
– கே.பாலமுருகன்